உனக்காகவே நான் - 28

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் – 28

Heroin.jpg
மித்ராவின் கலங்கிய முகத்தைப் பார்த்த ரிஷி,”மது நான் சொல்வதை முழுதும் அமைதியாகக் கேள்” என அவளது தலையை ஆதரவாக தன் தோள் மீது சாய்த்துக் கொண்டான்.


அவளும் எதுவும் சொல்லாமல் அமைதியாக,அவள் மனம் தந்த தைரியத்தில் “ ம்ம்” என்று அவன் தோள் மீது சாய்ந்துகொண்டாள்.


“அதன் பிறகு குன்னூரில் உன்னை அந்த மாடிப்படிகளில் கண்ட போது உன் நீண்ட கூந்தலைக் கண்டு சொக்கிவிட்டேன்.ஆமாம் என்ன போட்டு இதை வளர்த்தாய்.அடர்த்தியாக இருக்கு.”என அவள் முன் எடுத்துப் போட்டிருந்த முடியை வருடிய வண்ணம் சொன்னான் ரிஷி.


பெருமிதத்துடன்,”அது அம்மாவோட கை வைத்தியம்.ஏதேதோ போட்டு சின்ன வயதிலிருந்து பார்த்து பராமரித்துக் கொண்டதால் அப்படியே இருக்கு” என்று சொன்னாள் மித்ரா.


“ம்ம்..அப்போ என் அத்தைக்குத்தான் அந்த பாராட்டு” என்று புன்னகைத்தான் ரிஷி.


“அப்பறம் நீ மயங்கி விழுந்தாய் பார்.அப்போது என் உயிர் என் கையில் இல்லை.ஒருவேளை நான் அங்கு இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்” என உண்மையான கவலையுடன் கேட்டான் ரிஷி.


“எதுவும் ஆகியிருக்காது.காலில் கட்டுப் போலத் தலையில் ஒரு கட்டுப் போட்டிருப்பேன்” என வேடிக்கையாகச் சொன்னாள் மித்ரா.


“உனக்கு எல்லாம் வேடிக்கையா மித்ரா” என சிறிது குரலில் கடுமை தெரியப் பேசிவிட்டு,”அப்போதும் அப்படி எனக்குத் தோன்றியதற்கு ஒரு மனிதாபிமானம்தான் காரணம் என என்னையே நியாயப் படுத்திக் கொண்டேன்.ஆனால் இப்போதல்லவா தெரிகிறது..!!!அது உன் மீதான உள்ளார்ந்த அன்பு என்று” எனச் சொல்லிச் சிரித்தான்.


“எனக்கும் அன்று ஒன்றுமே புரியவில்லை ரிஷி.மயக்கம் தெளிந்து பார்த்தால் உங்கள் மடியில்.எனக்குத் திக்கென்றிருந்தது.இருந்தும் உடனே விலக முடியவில்லை.என்ன நினைப்பீர்களோ என்ற கவலை.அதனோடு எப்படி உங்கள் மடியில் நான் என்ற குழப்பமும் கூட.”என அவன் முகத்தை பாராமலும் அவன் தோளில் சாய்ந்த வண்ணமும் சொன்னாள் மித்ரா.


கேலி புன்னகையுடன் அவளைப் பார்த்திருந்த ரிஷி “அப்படியா.நான் என்ன நினைக்க அப்போது.எதுவும் நினைத்திருந்தாலும் என்ன செய்திருக்க முடியும்” என பொய் கவலையாக பெருமூச்சுவிட்டான்.


“போங்க ரிஷி...எப்போதும் உங்களுக்குக் குறும்புதான்” என மீண்டும் தோளில் தன் கையால் இடித்துவிட்டு மீண்டும் அந்த தோள் மீதே சாய்ந்து கொண்டாள்.


அவளது இந்த செய்கையால் சத்தமிட்டுச் சிரித்தான் ரிஷி. “பின் உன் நினைவோடுதான் நான் வெளியில் செல்ல வேண்டியிருந்தது.மீண்டும் வீடு வந்ததும் உன்னையே கண்கள் தேடியது.பார்த்தால் அம்மையார் பூவிடம் கதை பேசிக்கொண்டு நிற்கிறீர்கள்.அதன் பிறகு உனக்கு திடீரென்று என்ன ஆனது என்றே எனக்குப் புரியவில்லை.மிகவும் சோர்ந்து தெரிந்தாய்.ஏன் சுரேகாவும் வேணுவும் வீட்டில் இருக்கும் வரை கூட உன்னால் அங்கு இருக்க முடியவில்லை.உன் அறை சென்றுவிட்டாய்.வந்தவர்களை அவசரமாக அனுப்பிவிட்டு வந்து பார்த்தால் இளவரசி எந்த வித இடையூறுமில்லாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.ஆனால் அதன் பின்னரும் சரியாகிவிடுவாய் என்று நினைத்தேன்.ஆனால் சாப்பிடும் போதும் உன் முகம் தெளியவில்லை.அதனால்தான் நான் எப்போதும் ரசிக்கும் அந்த பௌர்ணமியைக் காட்டினேன்.எதிர்பார்த்தது போல் நீயும் மாறியதாகத் தான் தோன்றியது.ஆனால் திடீரென்று என்ன நினைத்தாய் என்று புரியவில்லை.முகம் சோர்ந்து எல்லாவற்றையும் ஒதுக்கித் தூங்க வேண்டும் என்று சொன்னாய்.அன்று என்ன நடந்தது மது.ஏன் திடீரென்று சோர்ந்தாய்?”என அவள் தலையை வருடுவதை நிறுத்தாமல் கேட்டான்.


“அ..அது..அது” என தயங்கிய மித்ராவை, “எ..எது” என அவள் வார்த்தைகளிலே ஊக்கினான் ரிஷி.


“அது...நீங்க சுரேகாவிடம் ஒட்டுதலாகப் பேசிக் கொண்டிருந்தீர்களா.!!அதனால் வந்தது.அந்த பௌர்ணமியைப் பார்க்கும் போது நீங்க என் கன்னத்தைத் தட்டினீர்கள்.அது சுரேகா உங்க கன்னத்தைத் தட்டியதை நினைவு படுத்தியது.அதனால்தான் எனக்கு ஒரு மாதிரி இருந்தது.ஆனால் அன்று எனக்கு அதற்கான பொருள் புரியவில்லை ரிஷி” என சின்னப்பிள்ளையாய் சொன்னாள் மித்ரா.


“ஆகத் தேவிக்கு அன்றே பொறாமை உண்டாகியிருக்கிறது.எனக்குமுன்பாகவே உன் காதலைக் கண்டு கொண்டாயோ” என அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.


மித்ரா உடனே”காதல் என்று தெரியவில்லை.ஆனால் அதே சமயம் உங்களால் நான் பாதிக்கப் பட்டது புரிந்தது “ என முகம் சிவந்தாள்.


“ம்ம்...நான் என்ன செய்ய மது..சுரேகாவிற்கு சின்ன வயதிலிருந்தே என் மீது ஒரு ஈர்ப்பு,அதனால் அப்படி.மற்றபடி தவறாக எதுவும் இல்லை.நம் காதலைச் சொன்னாள் புரிந்து கொள்வாள்.அதனோடு அவளுக்குப் போன வாரம்தான் அமெரிக்க மாப்பிள்ளை பார்த்தாகிவிட்டது.இனி அவளால் நம் வாழ்வில் பிரச்சனையில்லை” என சுரேகாவின் நிலைக்கு விளக்கம் தந்தான் ரிஷி.


“ஓ..”என்றாள் மித்ரா.”ஆமா...இப்போது சொல்லு ஓ என்று.அன்று நான் எவ்வளவு தவியாய் தவித்தேன் தெரியுமா.?உனக்கு என்ன பிரச்சனையோ. ? ஏன் திடீரென்று சோர்ந்து போகிறாய் என்று.பின் அப்பாவிற்கு ஃபோன் போட்டுக் கேட்டால் வீட்டு ஞாபகம் வந்திருக்கும் என்றும்,முடிந்தால் யாவரும் கேளிருக்கு அழைத்துச் செல் என்றும் சொன்னார்.அதன் பிறகே, ‘ஓ வீட்டு ஞாபகமா?!’என எனக்கு இயல்பாக மூச்சுவிட முடிந்தது” என தன் பரிதவிப்பைச் சொன்னான் ரிஷி.


“சரியென்று அடுத்த நாள் உன்னை அழைத்துச் செல்ல எண்ணினேன்.அதற்குள் நான் அவசரமாக Blood donate பண்ணச் செல்ல வேண்டியிருந்ததால் எதைப் பற்றியும் யோசிக்காமல் செல்ல வேண்டியதாய் போய்விட்டது.அதனோடு இங்குதான் உன்னைப் பார்த்துக் கொள்ளப் பாட்டி மரகதம்மா எல்லாம் இருக்கிறார்களே!!என்று ஆருதலும் இருந்தது ”.என்றான்.


“ஓ..அதனால்தான் அதற்கு அடுத்த வாரமே மேட்டுப்பாளையம் அழைத்தீர்களா” என்றாள் மித்ரா.


“ஆமாம்.ஆனால் அதைப் பற்றிப் பேச அதற்குத்தான் இடம் தராமல் நீதான் தோட்டத்து வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டாயே.பின் உன்னிடம் பேசக்கூடிய தருணங்களையெல்லாம் விலக்கி ஓடிக்கொண்டிருந்தாய்.என்ன ஏது என்றும் புரியவில்லை.அதனால்தான் பாட்டியிடமே முதலில் சொல்லி காரியத்தைச் சாதித்துக் கொண்டேன்” என மித்ராவை நோக்கி கேலி புன்னகை செய்தான்.


“அப்போ..மேட்டுப் பாளை அழைத்துவந்தது,திட்டமிட்ட சதி...அப்படிதானே” என்று அவனை நிமிர்ந்த பார்த்துக் கேட்டாள் மித்ரா.




“அதிலென்ன சந்தேகம்!!”என கண்ணடித்தான் ரிஷி. “மீண்டும் அடிக்கப் போகிறாயா...ம்ம் அடித்துக் கொள் என்று இலகுவாக தன் தோள்பட்டையை அவள் புரம் திருப்பினான் ரிஷி.


ஓரகண்ணால் முறைத்த மித்ரா,அவனது வார்த்தைகளால் உடனே சிரித்துவிட்டாள்.அவனது கையை பற்றி அமர்ந்து கொண்டாள்.


பின் “ஆனால் ரிஷி,நான் அப்படி உங்களைக் கண்டால் ஓடியதற்குக் காரணம்,எனக்கே என்ன வென்று சரியாகத் தெரியவில்லை.என்னுள்ளே ஏற்பட்ட மாறுதல்,கலக்கம் உங்களால் என்று மட்டும்தான் எனக்கு அப்போது தெரிந்தது.அதனால்தான் உங்களை விட்டு தூரம் செல்ல நினைத்தேன்.அதனாலே உங்களுடன் செல்ல பாட்டி கேட்ட போதும் மறுத்தேன்.ஆனால் பாட்டி வேறு காரணம் சொல்லி என்னை உங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.அவர்கள் எதிர்பார்த்தபடி என்னாலும் அந்த வேலையைச் செய்ய முடிந்தது” என தன்னுடைய அன்றைய நிலைக்கான விளக்கம் தந்தாள் மித்ரா.


“ஓ...அது என்ன காரணம்..?”என புரியாதவனாய் நெற்றி சுருக்கி ரிஷி கேட்டான்.


“அது..வள்ளி,மாணிக்கம் அங்கிளைச் சேர்த்து வைப்பது பற்றி.வயதொத்த பெண் என்பதால் வள்ளியும் என் வார்த்தைகளைக் கேட்க.,எல்லாம் சுமுகமாக முடிந்தது.”என பெருமையாகச் சொன்னாள் மித்ரா.


“ம்ம்..அது சரி...அப்போதும் என்னுடன் வரத் தயக்கம்தான் இல்லையா?”என பொய் கோபம் கொண்டு கேட்டான் ரிஷி.
“ஆ..ஆமாம் ரிஷி.உண்மை அதுதான்.உங்களைக் காணும் போது தயக்கமும்,ஒருவித இனம் புரியாத பயமும் உண்டாகிவிடுக்கிறது.ஆனால் உங்கள் அருகிலிருந்தால் பேசவில்லை என்றாலும் சந்தோஷமாகத் தோன்றுகிறது.நீங்க மேட்டுப்பாளையம் அழைத்து வரும் போது அந்த காரில் உங்கள் இறுகிய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.ஏதாவது பேசலாம் என்றால் வருத்தமாகவும்,பயமாகவும் இருந்தது.அன்று நீங்களாகச் சிரித்தபின்னே என் உள்ளம் மகிழ்ந்தது.”எனச் சொன்னாள் மித்ரா.
“அப்படியா?..நீ வர மறுத்ததும் நான் என்னமோ என் முகத்தில்தான் ஏதோ குறை என்று எண்ணிவிட்டேன்.மனித முகம்தானே தெரிகிறது.ஏன் என்னைக் கண்டு பயப்படுகிறாய்.சிங்கமா?இல்லை புலியா?எதைக் கண்டுவிட்டாய் என் முகத்தில்?என நான்கைந்து முறை முகத்தைக் கண்ணாடியில் நன்றாகப் பார்க்க அல்லவா செய்தேன்” என மிகவும் முக்கியம் போலச் சொன்னான் ரிஷி.


மித்ராவும் அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் விழித்த சில வினாடிகள், அவனது சிங்கமா ,புலியா என்ற வார்த்தையில்,”ரிஷி...இப்போதும் சிங்கமா?புலியா தானா?”என சிணுங்கினாள்.


அவளது சிணுங்கலில் நமுட்டு சிரிப்பு சிரித்த ரிஷி , “சரி...சரி...இனி அப்படி சொல்வதில்லை...சரியா..”என அவளுக்குப் பணிந்து சொன்னாலும் அவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.


அவன் சிரித்துக் கொண்ட இருக்கக் கண்டு அவனை விடுத்துத் தள்ளி அமர்ந்து கொண்டு,”ஆமாம் நீங்க சிங்கம் போல பயமுறுத்துகிறீர்கள்.நான் உங்கள் அருகில் அமர மாட்டேன் பயமாக இருக்கும்” என முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டாள்.


“மது...நீ கோபமாக இருக்கும் போதும் அழகாக இருக்கிறாய்.”என அவள் முகவாயைத் திருப்பி அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.


அவனது பணிந்த கண்களைப் பார்த்த மித்ரா,வார்த்தை வராமல் அவன் விழிகளையே பார்த்தாள்.அவன் கண்கள் என்ன என்னமோ கதைகள் சொல்ல ஆரம்பிக்க மித்ரா அவன் கையை விலக்கி,வெட்கத்தினால் மீண்டும் ரிஷியின் தோளிலே வந்து சாய்ந்து கொண்டாள்.


வெற்றி சிரிப்பாக ரிஷி சிரித்த போதும்,மித்ராவால் ரிஷியின் மீது மீண்டும் கோபம் கொள்ள முடியவில்லை.சாய்ந்தவள், “அப்பறம்..”என ரிஷியைக் கேட்டாள்.
“அப்பறமென்ன.?மேட்டுப்பாளையத்தில் உன்னை ஆசிரமம் அழைத்துச் செல்ல,அன்று காலை அந்த பச்சை நிற சல்வார் அணிந்து கொண்டு ,தலையை விரித்து மயில் போல நடந்து வந்தாய் பார்.ஆள் அம்பேல்” என தன் கைகளைத் தலைக்கு மேல் தூக்கிச் சொன்னான்.


“ஏன் அப்படி .. ?” என புரியாதவளாய் எழுந்து அவன் முகம் பார்த்துக் கேட்டாள் மித்ரா.


“ஏனா?நீ நானாக இருந்தால் மட்டுமே என் உணர்வு புரியக் கூடியது.உன் குணம் நீ வந்திருந்த அந்த இரு வாரத்திலே எனக்குத் தெரிந்தது.உன் மீது ஓர் ஈர்ப்பு என்று மட்டும்தான் அன்றுவரை எண்ணி இருந்தேன்.நீ என்னுடன் வர குன்னூரில் மறுத்த போது எனக்கு உரிமையான கோபம் உன் மீது வந்தது.அந்த காரில் உன் முகம் கண்டவுடன் என் கோபம் சரிந்து வீழ்ந்தது.நான் அவ்வளவு சீக்கிரம் யார் மீதுள்ள கோபத்தை மறக்கிறவன் இல்லை.ஆனால் உன் மீது என்னால் அன்று கோபத்தை வெளிப் படுத்த முடியவில்லை.அன்றே எனக்குள்ளான உன் மீதான தாக்கம் புரிந்தது.”என நிறுத்தினான்.


“ம்ம்...”’என்றாள் மித்ரா.


“பின்,உன்னை அந்த பச்சை நிற சல்வாரில் பார்த்த போது,நான் என் அம்மாவின் விழிகளில் உன்னை அளவெடுத்தேன்.அன்றுதான் என் அம்மா எதிர் பார்த்த அந்த மருமகளை நான் நேரில் பார்த்தேன்.அதுதான் நீ.அவர்கள் எதிர் பார்த்தது போன்ற குணமும்....அன்றே முடிவு செய்துவிட்டேன்.நீ தான் என் மனைவியென்று.உன்னையல்லாமல் வேறொருத்தியால் என் மனதை நெருங்க முடியாது என்றும்” என குதுகலத்துடன் சொன்னான்.


“அன்றே வா?ஆனால் நீங்கள் அதைப் பற்றி எதுவும் என்னிடம் சொல்ல வில்லையே” என கவலையாகக் கேட்டவளின் தலையை வாஞ்சையாக வருடினான் ரிஷி.
“ம்க்கும்..இப்போது கேள்.அன்று நான் வாயைத் திறந்தாலே ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றாய்.தேவையான கேள்விகளுக்கே உன்னிடமிருந்து பதில் வரவில்லை.இந்த அழகில் என் காதலைச் சொல்லியிருந்தால் அவ்வளவுதான்.ஓடியே போயிருப்பாய்” என குரலில் நளினம் தோன்றச் சொன்னான் ரிஷி.


“ஆமாம் நீங்க சொன்னதும் சரிதான்.அன்றைய நாளில் நான் அப்படிதான் இருந்தேன்” என அவன் சொல்லை ஒற்றுக்கொண்டாள்.


புன்னகைத்த ரிஷி, “அதன்பின்.என் அம்மா உனக்காக ,அதாவது அவர்களது மறு மகளுக்காக என்று எடுத்து வைத்த புடவையைத்தான் அன்று உன்னிடம் எடுத்துக் கொடுத்தேன்.அந்த புடவையில் நீ தேவதையாகவே எனக்குத் தோன்றினாய்.என் அம்மாவின் மருமகளாகவும் என்னுடைய அன்பு மனைவியாகவும் ஒருசேர அன்று உன்னைக் கண்டேன்.என் வசம் இழக்க இருந்த அந்த நொடியில்,நல்ல வேளை செல் ஃபோன் மணி அடித்து சுய நினைவு தந்தது.இல்லையென்றால்!!”எனச் சொல்லி அசடு வலிந்தான் ரிஷி.


அவன் அசடு வலிவது ,அவன் குரலிலே தெரிய மித்ராவே உதவிக்கு வந்தாள். “ரிஷி..அன்று நானும்தான் உங்களை அந்த குருத்தா ஜீன்ஸில் பார்த்து மயங்கிவிட்டேன்.அதே போல் உங்கள் ஃபோன்தான் என்னையும் சுய நினைவைக் கொணர்ந்தது” என சிவந்த கன்னங்களுடன் அவன் மார்பில் புதைந்தாள்.


“எனக்கும் தோன்றியது.”என அவள் சிவந்து முகத்தை உயர்த்தி பார்த்துச் சொன்ன ரிஷி, ”இருந்தும்,அதை உறுதிப் படுத்திக் கொள்ள உன்னிடமிருந்து உன் மனதை நீ அறியாமல் தெரிந்து கொள்ளச் சிறு திட்டம் போட்டேன்.


அதுதான் ஆசிரமத்தில் நடந்தவை.ஆசிரமத்தில் உள்ள அனைவரிடமும் நீதான் என் வருங்கால மனைவி என்று சொல்லிவிட்டேன்.அதையே அனைவரும் வெளிப்படுத்தினர்.அப்போது உன் முக அசைவுகள் ஒவ்வொன்றையும் அளவெடுத்து ரசித்தேன்.அங்குள்ள பெரியோர்களின் வார்த்தைகளை நீ முழுவதும் மறுக்க முடியாமல் தவித்த போதே எனக்கு உன்னை முழுதும் காட்டிவிட்டாய். “ என்றான்.


“ஓ அப்போது என்னை எனக்கு முன்பே,நீங்கள் அறிந்துவிடீர்கள்.அப்படிதானே?”என்றாள் மித்ரா.
“ஆமாம் மது.அன்று அந்த நகைக் கடையிலிருந்து “ என்று சொல்லிக் கொண்டிருந்தவன், “ ஒரு நிமிடம் இங்கே இரு வந்து விடுக்கிறேன்” என அவன் அறையை நோக்கிச் சென்றான்.அவன் வரும் வரை ரிஷியின் மனதை அறிந்த மகிழ்வில் மித்ரா புன்னகையுடன் இருந்தாள்.


“மது..”என விழித்த வண்ணம் வந்தவனின் கையில் நகைப் பெட்டி, “இதை உனக்காக உனக்குத் தெரியாமல் வாங்கினேன்.உன்னிடம் என் காதலைச் சொல்லும் போது கொடுக்க எண்ணி வாங்கியது.”என்றவன் அந்த பெட்டியைப் பிரித்து அவளிடம் காட்டினான்.அவன் விளித்ததும் எழுந்து நின்றாள் மித்ரா.


சிறிதும் எதிர்பாராத அந்த அன்பளிப்பில் மித்ராவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.அணிகலங்கள் மீது மித்ராவிற்கு அதிக ஈடுபாடு என்றுமே இருந்தது இல்லை.ஆனால் அந்த அணிகலனை தனகானவனின் கைகளிலிருந்து கிடைக்கும்போது அவளால் அந்த மகிழ்வை வெளிப்படுத்த முடியாமல் கலங்கினாள்.


லேசான பால் ரோஜா வண்ண நிறத்தில் கழுத்தாரம் மற்றும் காதணி.நிறமூட்டபட்ட தங்கம் என்பது பார்க்கும் போதே தெரிந்தது.அதனை வாங்கி வருடிய வண்ணம், “மிகவும் அழகாக இருக்கிறது ரிஷி” என சந்தோஷம் முகத்தில் தெரியச் சொன்னாள்.


“எப்படி ஐயா தேர்வு.அருமையில்லை?”என கேள்வியாய் கேட்டு தன் சட்டை காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான்.வார்த்தைகள் எதுவும் வரவில்லை என்றாலும் மித்ராவின் பாராட்டுகள் அவள் கண்களில் தெரிந்தது.


“இங்குக் கொடு.நீ திரும்பி நில்.”என்று அந்த நகைப் பெட்டியிலிருந்த அந்த கழுத்தா ரத்தை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தான்.அவன் அணிவித்ததும் அவனிடமே திரும்பி ‘எப்படி?’என்று கண்ணாலே கேட்டாள் மித்ரா.


‘அருமை’ என்று தன் சுட்டுவிரலால் கட்டைவிரலை மடக்கி மூன்று விரல் நீட்டிச் சொன்னான் ரிஷி.


புன்னகைத்த மித்ரா எதுவும் பேசாமல் அந்த காதணியையும் உடனே மாற்றி அணிந்து அவனிடம் காட்டினாள்.


“உனக்கு எடுப்பாக இருக்கிறது மித்ரா.உன்னை நகை செய்பவரிடம் காட்டி உன் நிறத்திற்கு ஏற்ற நிறமாகச் செய்யச் சொல்லவே அன்று அந்த நகைக் கடைக்கு உன்னை அழைத்துச் சென்றேன்.அதற்கு போனஸாகதான் குருவின் மோதிரம்.ஆனால் உண்மையில் குருவிற்கு,நான் ஏற்கனவே வேறு பரிசு வாங்கி வைத்திருந்தேன்.”என அவள் அருகில் வந்து கண்ணடித்துவிட்டு,பொத்தென்று மீண்டும் ஷோஃபாவில் அமர்ந்து கொண்டு அவளை தன் அருகில் இழுத்து அமரவைத்தான் ரிஷி.


அவன் இழுப்பில் அவனருகில் அமர்ந்தவள்,”ம்ம் ஆக எல்லாவற்றிலும் ஒரு திட்டத்துடன்தான் செயலாற்றி இருக்கிறீர்கள் அப்படிதானே” என்றாள் மித்ரா.
“ஆமாம்...நான் என்ன செய்வது.?எப்போதும் அம்மையார்தான் என்னிடம் பேச வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருந்தீர்களே.இயல்பான வார்த்தைகளே உன்னிடம் இருந்து வர ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.அப்படி இருக்க உன் மனதின் வார்த்தைகளை நான் கேட்டாள் சொல்ல வா போகிறாய்?அதனால்தான் உன்னை அறியாமல் இப்படி திட்டம் கொண்டேன்.”என சோகமாகத் தொடங்கி,கேலி புன்னகையில் முடித்தான் ரிஷி.


கேலியைப் புரிந்து கொண்ட போதும் “ம்ம்..ஆமாம் என் மனம் எனக்கே அன்று தெரியாதுதான்.நீங்க கேட்டிருந்தாலும்.,உங்கள் காதலைச் சொல்லியிருந்தாலும் நான் குழம்பித்தான் போயிருப்பேன்.”என சோகமாக ஒற்றுக் கொண்டாள்.


“ம்ம்...அதுதான் தெரிந்ததே!என் ராணி மக்கு.அந்த விஷயத்தில் பூஜ்ஜியம் என்று!”என்று அவள் மூக்கை மீண்டும் பிடித்து ஆட்டினான் ரிஷி.


“ம்ம்...ம்ம் போங்க ரிஷி..”என மீண்டும் சிணுங்கினாள் மித்ரா.அவன் கையை தட்டிவிட்டு மீண்டும் தோளிலே சாய்ந்து கொண்டாள்.


அவளது இந்த செய்கையால் சத்தமிட்டு சிரித்த ரிஷி ,மீண்டும் தொடர்ந்தான். “அப்பறம் சுபலாவை அந்த நகைக்கடைக்கு வெளியில் நீ பார்த்த போது அவள் மீதான உன் பொறாமை அப்பட்டமாக உன் முகத்தில் தெரிந்தது.அதைப் பார்த்ததும் எனக்குள் ஒரே குதுகல கொண்டாட்டம்தான்” என சிரித்தான் ரிஷி.


“என்ன கொண்டாட்டமா?அப்போ அப்போ..சுபலாவை வர வைத்ததும் உங்கள் திட்டங்களில் ஒன்றுதானா?”என விருட்டென எழுந்து நின்று அவனை நோக்கிக் கேட்டாள் மித்ரா.


“ஆஹா...இது என்ன மது...ஆனா...ஊனா...சண்டை கோழியாய் மாறிவிடுக்கிறாய்...அவளை நான் ஒன்றும் வரச் சொல்லவில்லை.அவளாக வந்து ஒட்டிக் கொண்டாள்.அது தானாக உன் மனதை நான் அறிய உதவியது.அவ்வளவே” என்று அவளை மீண்டும் இழுத்து அணைத்துக் கொண்டான்.


“ஓ...”என்றவள், “ சுபலாவை எப்படி உங்களுக்குத் தெரியும்?”என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் அவன் முகம் நோக்கிக் கேட்டாள் மித்ரா.


“அவள் நம்ம கோவை Branch – ல் வேலை செய்பவள்.சென்னைதான் அவளுக்கும் பூர்வீகம்.ஆண் பெண் பேதமின்றி பழகுவாள்.அவ்வளவே!மற்றபடி வேறு ஒன்றுமில்லை.ஆனால் அவளுக்கு உன் அழகைக் கண்டு சிறிது பொறாமை தோன்றிற்று போல இருக்கு.அடுத்த நாள் என்னிடமே சொன்னாள்.திடீரென்று அவளுக்கு என்ன தோன்றியதோ உன்னை ஒதுக்கினார் போல முந்திய நாள் வந்ததுக்கு வருத்தமும் தெரிவித்தாள்.அதன் பிறகு நான் உன்னை என் வருங்கால மனைவி என்றதும், ‘ஓ..வாழ்த்துக்கள் ரிஷி..அருமையான தேர்வு’ என பாராட்டவே செய்தாள்.”என விளக்கம் தந்தான் ரிஷி.




“ம்ம்..”என்றாள் மித்ரா.

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top