இருளில் ஒரு ஒளியாய் -3

Advertisement

Chandrika krishnan

Writers Team
Tamil Novel Writer
இருளில் ஒரு ஒளியாய் -3

அன்று ஞாயிறு என்பதால், நானும் வீட்டிலேயே இருக்க, நானும் அகிலனும் பழைய கதை பேச தொடங்கினோம்.

அகிலன் என் அப்பாவின் அக்கா மகன்.

அப்பா தவறிய காலத்தில் அத்தையும் மாமாவும் தான் என்னையும் அம்மாவையும் அரவணைத்தது.

நான்கு வருடங்களுக்கு முன் நான் பத்தாம் வகுப்பு படிக்கையில், மாமா நடசேனுக்கு எங்கள் சொந்த ஊரான தூத்துக்குடிக்கே மாற்றலாகி விட, அத்தை சசியையும் அகியையும் அழைத்து கொண்டு அங்கேயே குடிசென்றுவிட்டார்.

அதற்குள் என் அம்மாவும் ஆசிரியையாக ஒரு தனியார் பள்ளியில் கால் ஊன்றிவிட, பிரச்னையில்லாமல் போனது.

அகிலன் என்னைவிட நான்கு வயது மூத்தவன். படிப்பு காரணமாக நாங்கள் இருவரும் சந்தித்தே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.

அகிலன் படிப்பை முடித்து வேலைக்காக சென்னை வந்துள்ளதால், எங்களை பார்க்க இன்று வந்துள்ளான் என்று தெரிந்தது.

அவனும் பேச்சுவாக்கில், "என்ன லது, பக்கத்துவீட்டு பாப்பா காலைல லதா மங்கள்யா வீடு எதுன்னு கேட்டா? மங்கேஷ்கர் அக்கா வீடானு காத்திட்டு ஓடுது? ஏன் டி அப்படி? என்ன சேட்டை பண்ணி வெச்ச? " என கேட்க, எனக்கு பிபி எகிறியது.

"அந்த குட்டி சாத்தான் அப்படியா சொல்லுச்சு? நான் அழகா பாடறேனு பொறாமை அகி அதுகளுக்கு.. அதான் என் பேர லதா மங்கேஷ்கர்னு மாத்திருக்குங்க.. நீயே சொல்லு என் வாய்ஸ்க்கு என்னடா கொறச்சல்? பாடி காட்டறேன் கேளு " என்று சொல்லி, என் கான குரலில் கீதம் பாட தொடங்கினேன்.

"பாடறியேன் படிப்பறியேன்..
பள்ளிக்கூடம் நான் அறியேன்..
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுது தமிழ் நான் அறியேன்... "

"அய்ய்ய்யோ... ராமா.. நிறுத்து லது.. " நான் முடிப்பதற்குள் அவசரமாக இடைப்புகுந்தான் அகி.

"ஏன்டா? அடுத்து ஸ்வரம் புடிக்கலாம்னு இருந்தேன்.. " என்று நான் எறிந்துவிழ,

"நல்ல வேல அபஸ்வரம் ஆகியிருக்கும் டி.. ஆனாலும் பாவம் டி மங்கேஷ்கர் " என்றான் நக்கலாக.

அவன் கலாய்ப்பதுப் புரிந்தும், புரியாததுபோல் எழுந்து உள்ளே சென்றுவிட்டேன்.

அன்று முழுவதுமே நாள் கலகலப்பாக தான் சென்றுக்கொண்டிருந்தது.

அம்மா மாலையில் அந்த குண்டை என் தலையில் போடும்வரை.

பலகாரம் கொறித்துக்கொண்டே, சோபாவில் குத்துக்காலிட்டு அமர்ந்து, நான் சன் மியூசிக் கேட்டுக்கொண்டிருக்க,

"ஐயோ.. கடவுளே.. பொண்ணா டி நீ ..? ஆம்பள இருக்கற வீட்ல இப்படித்தான் ஒக்காருவியா? நாளைக்கு போற எடத்துல உன் அத்தை என்னையல பொண்ண ஒழுங்கா வளர்க்கலைனு சொல்லுவாங்க? " என்று ஆரம்பிக்க,

"போதும் மம்மி.. அதுக்கு தான் நான் அத்தை வீட்டுக்கே போறதில்ல " என்றேன் சாவதானமாக.

"அடியே... உன்ன " சொல்லிக்கொண்டே, முதுகில் பொட்டென ஒரு அடிப்போட்டார் அம்மா.

"அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..... " தொண்டை கிழியும் படி நான் கத்தி கூப்பாடு போட, பதறி போய் ஓடிவந்தான் அகி.

அதற்காகவே காத்திருந்தது போல "நீயே பாரு அகிலா.. என் உயிர எடுக்கறா? உன் பாட நெனச்சா தான் கவலையா இருக்குப்பா " என்று அவனிடம் என் அம்மா அங்களாய்க்க,

"நீங்க கவலைப்படாதேங்க அத்தை? என் பொண்டாட்டி ஆனதும் ஒரு வழி பண்ணிடறேன் இவள " என்றானே பார்க்கலாம், எனக்குத் தூக்கிவாரி போட்டது.

அகி, நல்லவன் தான்.

ஆனால் சரியான அசமஞ்சம்.

ஒரு கேலியைக்கூட விளக்கி தான் அவனுக்கு புரியவைக்க வேண்டும்.

அதுபோக ஒரு பூம் பூம் மாடு. யாராவது இரண்டுதடவை அழுத்தி ஒரு பொய்யைச் சொன்னால் உண்மை என்று நம்பிவிடும் மந்தை ஆட்டுப் புத்தி.

இவனோடு அவள் குடித்தனம் நடத்தினால், இரண்டே நாளில் குடுமிப்பிடி சண்டை தான்.

அதிர்ந்தபோதும், அப்பொழுதிற்கு எதையும் நான் வெளிகாட்டிக்கொள்ளவில்லை.

எப்படியும் என் படிப்பு முடிய, இன்னும் ஒருவருடம் இருக்கிறது.

அதற்குக்குள் எனக்கு ஏற்ற ஒரு லொடலொட டப்பாவை பிடித்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று மட்டும் மூளைக்கு அஞ்சல் அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாள் காலை, வழக்கம் போல் சிக்னலில் காத்து நிற்கையில், தீனாவின் நினைவு வந்தது.

நினைவோடு இதழில் சிரிப்பு மலர, நான் நிற்கையில், பக்கவாட்டில் "ஹலோ மங்கேஷ்கர் " என்றது ஒரு துள்ளல் குரல்.

மனம் எல்லாம் மத்தாப்பு பூக்க, "ஹலோ தீனா சார் " என்று வலப்புறம் திரும்பி பார்த்தால்,

பிளாக் ஜாகுவாரில் ஜம்மென அமர்ந்திருந்தான் தீனா.

கண்களின் கூலர்ஸ்ஸும் கழுத்தின் வெள்ளி சங்கிலியும் அவனை அந்நியமாக எனக்குக் காட்டின.

சற்றே என் முகம் வாடியது.

"என்னமா வாழக்கா? ஏன் சோகம்? " என்றவன் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, பச்சை விழ, நான் வண்டியை கிளப்பிக்கொண்டுப் பறந்துவிட்டேன்.

நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று புரியவே இல்லை.

பாவம், அவனுக்கு முகத்தில் அடித்தார் போல் இருந்திருக்கும்.

சாவதானமாக நான் ஸ்கூட்டியை காலேஜ் பார்க்கிங்கில் நிறுத்தும்போதே என் செல் கூவியது.

அகிலன் தான்.

அதற்குள் என்ன?

நேற்றைய அவனது பேச்சிற்கு பின், நான் அவனோடு சரியாக பேசவே இல்லை.

ஒருவேளை அதனால் கூப்பிடுகிறானோ?

நான் யோசித்த நேரத்திற்குள் செல் கூவியே முடித்திருந்தது.

சரியாக ஜோவும் வர, செல்லை சைலண்டில் போட்டுவிட்டு, வகுப்பிற்கு நடையை கட்டினேன்.

முதல் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு நடந்துக்கொண்டிருந்போது, காலேஜ் கிளெர்க் வந்து ஆசிரியர் காதில் ஏதோ முணுமுணுக்க,
நான் அவசரமாக பிரின்சி அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.

எனக்குள் ஆயிரம் பயங்கள். இதுவரை இதுபோல் என்னை யாரும் வகுப்பு நடுவில் அழைத்தது இல்லை.

என்னதான் விளையாட்டு தனமாக இருந்தாலும், படிப்பில் கொஞ்சம் பொறுப்புடையவள் தான் நான்.

ஏன்னென்றால் அம்மா என் பொறுப்பு அல்லவா?

ப்ரினிஸி அறைக்குள் நுழைந்ததும் எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது.

ஏனெனில், அங்கே அகிலன் அலங்கோலமாய் நின்றுக்கொண்டிருந்தான்.

"அகி? " என்று அதிர்ந்த குரலில் நான் வினவ,

பளாரென என்னை அறைந்தே விட்டான் அகில்.

"போன் எங்கடி? எத்தனை தடவ கூப்பிடறது? சீக்கிரம் வா, அத்தைக்கு திடிர்னு முடியாம ஹாஸ்பத்திரில சேத்திருக்கேன்.. சீக்கிரம் வா.. "

பரபரப்பாக சொல்லிக்கொண்டே, அவன் என் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, ஒரு தலை அசைப்புடன் அவனோடு நானும் வேகமாக நகர்ந்தேன்.

"என்னடா அகி? காலைல கூட அம்மா நல்லா இருந்தார்கள? இப்போ என்ன திடிர்னு? " போகும் வழியில் நான் அழுதுகொண்டே பரிதவிப்பாக கேட்க,

"சட் அப் லதா.. கொஞ்ச நேரம் அமைதியா வா.. உன்ன மாறி தான் எனக்கும் பதட்டமா இருக்கு " என்று எரிந்து விழுந்தான் அகி.

எனக்கு செய்கை அறியாத கண்ணீர் வந்தது.

அப்பாவிற்கு பிறகு, தந்தையாய் என்னைத் தாங்கி, தாயாய் அரவணைத்து, தோழியாய்க் கேலி கொட்டி, தங்கையாய் சண்டையிட்டு எல்லாமாய் இருப்பது அம்மா மட்டும் தான்.

அவ்வப்போது அம்மாவிற்கு ஆஸ்துமா வருவது உண்டு. அதற்காக தினமும் மாத்திரை எடுத்துக்கொள்வார்கள்.

அவ்வப்போது கிண்டலாக "பாரேன் லது.. கடைசில அம்மா ஆஸ்த்மா ஸ்டார் ஆகிட்டேன் " என்பதும் உண்டு.

சிலநேரம் ரொம்பவும் தளர்வாக இருக்கும்போது என்னுடைய சுடுதண்ணீர் ரசத்தையும் கஞ்சியையும் குடித்து விட்டு அம்மா அடிக்கும் லூடிக்கு அளவே இருக்காது.

"மயக்கமா கலக்கமா? " என்று ரசம் பாத்திரத்தை தலையில் வைத்துக்கொண்டு போதையில் ஆடுவது போல் ஆடி பாடுவார்கள்.

இன்னும் சில நேரம் அப்பா நினைவு வந்தால் , தேவர் மகன் சிவாஜி டோனில் "பாட்ரீ..." என்றம்மா சொல்ல..

நானும், அப்பாவிற்கு பிடித்த

"சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வ களஞ்சியமே "
என்று பாரதியின் வரிகளைப் பாடுவது உண்டு.

ஆனால் இதெல்லாம் அப்போதைய மனசோர்வுக்கு தான்.

இப்படி அடுத்தவர் வந்து அழைத்துச் செல்லும் விதமாக எதுவும் நடந்தது இல்லை.

கார் குளோபல் மருத்துவமனையை அடைய, விழுந்தடித்து கொண்டு வரவேற்பிற்கு ஓடினேன்.

அங்கே ஒரே பத்திரிகைக்காரர்கள் கூட்டமாக இருந்தது.

அதை எல்லாம் கவனிக்காமல் நான் அம்மா பற்றி கேட்பதற்குள்,

"ஹலோ மங்கேஷ்கர் " என்றது காலையில் கேட்ட குரல், ஆனால் சற்றே சுதி இறங்கி.

திரும்பி பார்த்தேன்.

தீனா தான்.

கூலர்ஸ் இல்லாமல் கேசுவளாக நின்றிருந்தான்.

நான் பரிதவிப்பாக வாய் திறக்கும் முன், அகி என் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றுவிட்டான்.

இரண்டாம் முறையாக தீனாவை அவமதித்துவிட்ட உணர்வு.

ஏதோ நிறைய பிளாஷ் லைட் அடித்தது. தீனாவை ஒருமுறை திரும்பிப்பார்த்தேன்.

அதற்குள் அம்மா நினைவு மற்றவற்றை பின் தள்ளிவிட, விரைவாக அகியுடன் நடந்தேன்.

அம்மாவை ஐ. சி. யூவில் வைத்திருந்தார்கள். முதல் அட்டாக் என்றார் மருத்துவர்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அகி தான் அனைத்தையும் கவனித்துக்கொண்டான்.

தீடிரென பணம் பற்றிய நினைவு வர, அவசரமாக கையில் காதில் கழுத்தில் இருந்த மென்னகைகளை கழற்றி அகியிடம் தந்தேன்.

பதிலுக்கு இரண்டாம் முறையாக கன்னத்தில் அரை விழுந்தது.

அரைப்பட்ட கன்னத்தை கையில் தாங்கியபடி நான் வந்து அமர, பக்கத்தில் சிலர் பேசுவது கேட்டது.

"அந்த தேஜு ஷூட்டிங் அப்போ விழுந்துட்டாளாம் பா.. சின்ன கீறல்.. அதுக்கு இப்படி கூட்டம் போடறானுக.. "

"எல்லாம் பரபரப்பு நியூஸ் போட்டு டி ஆர். பி ஏத்த தான்.. இதுல பத்தாக்குறைக்கு அந்த பொறுக்கி தீனாவும் அக்மார்க் காதலனா ஒடனே வந்துட்டான்ல.. "

"ஆமா பா.. நானும் பாத்தேன்.. ஆனா அவன்கூட வரவேற்புல இன்னொரு பொண்ணு நின்னுச்சுல.. அதுதான் அவன் இப்போதைக்கு கூட கூட்டிட்டு சுத்தற பொண்ணாம்.. இதோ இதோ இங்க ஒக்காந்துருக்கு பாருயா.. இந்த புள்ள தான் "

அவர்கள் என்னை உத்துப்பார்த்து பேசிக்கொண்டே செல்ல, அந்த நிலையிலும் எனக்கு பகீரென இருந்தது.

"இது என்னடா புது புரளி?? " என்று என் மனம் அரற்ற, யாரோ என்னை நோட்டம் இடுவது போல் இருந்தது.

சட்டென திரும்பி பக்கவாட்டில் பார்த்தேன்.

தீனா தான்.

பாண்ட் பாக்கெட்டில் கைவிட்ட படி யோசனையோடு என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

எனக்குள் ஒரு நடுக்கம் பரவியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top