அவன் காதல் வெற்றிபெறுமா?

Advertisement

பகுதி -12

எல்லாவற்றையும் தெளிவுப்படுத்துவதற்காக ஹர்ஷிதா மருத்துவமனைக்குச் செல்கிறாள். மருத்துவமனையை அடைந்த பிறகு யஷ்வந்தின் தாயார் இறந்துவிட்டார் என்பதை அறிகிறாள். அவர்களது உறவினர்கள் யாஷிகாவுடன் இருக்கிறார்கள். ஆனால் அவளால் யஷ்வந்தை கண்டறிய முடியவில்லை. அவனுடைய தாய் உயிருடன் இல்லை என்று அவளால் நம்ப முடியவில்லை, அவளால் அந்த துக்கத்தை தாங்க முடியவில்லை, அதனால் அவள் தன் வீட்டிற்குத் திரும்புகிறாள். அவளுடைய தாய் ஜெயஸ்ரீ அவளிடம் “என்ன நடந்தது, ஏன் சோகமாகவும் கவலையாகவும் இருக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் ஓடிச் சென்று தாயைக் கட்டிப்பிடித்து அழுகிறாள். ஜெயஸ்ரீ பதற்றத்துடன் கேட்கிறார் “என்ன நடந்தது என் அன்பே?”. யஷ்வந்தைப் பற்றியும், அவனது தாயின் மரணத்தை பற்றியும் அவள் தன் தாயுடன் பகிர்ந்து கொள்கிறாள். அவள் தாயின் மடியில் படுத்துக் கொண்டு, “நேற்று, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதன்முதலில் பார்த்தோம், ஆனால் நாங்கள் முன்பே தெரிந்ததைப் போலவே பேசினோம், ஆனால் இன்று அவர் இறந்துவிட்டார், அந்த உண்மையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் தாய் அத்தகைய கனிவான இதயமுள்ளவர் அடுத்தவர் மீது மிகவும் அக்கறையுள்ள நபர். நல்ல மனிதர்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் இறந்து விடுகிறார்கள்” என்று தன் மனதில் உள்ளதை கூறி அழுகிறாள். ஜெயஸ்ரீ அவளை சமாதானப்படுத்தி, இந்த நேரத்தில் யஷ்வந்த் மற்றும் யாஷிகாவுடன் இருக்கும்படி கேட்கிறார். ஆனால் யஷ்வந்தை எதிர்கொள்ள ஹர்ஷிதா தயாராக இல்லை. அவனை எப்போதும் சிறிய புன்னகையுடனே பார்த்துவிட்டு இப்போது அவன் அழுவதை அவளால் பார்க்க முடியாது என்று நினைக்கிறாள். ஜெயஸ்ரீ அவளை யஷ்வந்த் வீட்டிற்குச் செல்லச் சொல்கிறார், ஆனால் தாயின் வார்த்தைகளை மறுத்துவிட்டு அவள் அழுதுகொண்டே தன் அறைக்குச் செல்கிறாள்.

அவள் தாயின் ஆலோசனையை மறுத்தாலும், அவள் மனமும் அவளுடைய வீட்டில் இல்லை. அவள் யஷ்வந்தைப் பற்றியும் அவன் தன் தாயின் இழப்பை எவ்வாறு தாங்கிக்கொள்வான் என்பதை பற்றியும் நினைக்கிறாள். அதே சமயம் அவனை எப்படி எதிர்கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. கடைசியாக இரவில், அவள் நாளை சென்று அவர்களைப் பார்க்க முடிவு செய்கிறாள். அடுத்த நாள், அவள் யஷ்வந்தின் வீட்டிற்கு செல்கிறாள். அங்கு யாரும் அவர்களுடன் இல்லை என்பதை அவள் காண்கிறாள். அவள் மெதுவாக அவர்களின் வீட்டிற்குள் நுழைகிறாள். யஷ்வந்த் அவளைப் பார்க்கிறான். திடீரென்று அவன் ஹர்ஷிதாவிடம் வந்து அவளைக் கட்டிப்பிடித்து ஒரு குழந்தையைப் போல அழுகிறான். அவளுக்கு என்ன செய்வது, எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. அவள் அவனை ஆறுதல்படுத்தி அவன் கண்ணீரைத் துடைக்கிறாள். யாஷிகாவும் அவளைக் கட்டிப்பிடித்து அழுகிறாள். பின்னர் அவள் யஷ்வந்திடம் “நீ ஏன் தனியாக இருக்கிறாய்? உன் உறவினர்கள் எங்கே?” என்று கேட்கிறாள். அவன் அவளிடம், “அவர்கள் அனைவரும் எங்கள் சொத்துக்களைப் பெறுவதற்காகவே வந்தார்கள், அவர்களின் விருப்பப்படி, என்னிடமிருந்து ஒரு கையெழுத்தைப் பெற்று எங்கள் சொத்துக்களைப் பெற்றுக் கொண்டார்கள். இப்போது எங்களிடம் அந்த ஒரு ஹோட்டல் மட்டுமே உள்ளது. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் பெற்றோர் எனக்காக நிறைய செய்தார்கள், ஆனால் என் உறவினர்கள் அதை என்னிடமிருந்து பறித்தனர். என் பெற்றோர் எங்களை ஏன் தனியாக விட்டுச்சென்றார்கள். என்னிடம் அதிக பணம் மற்றும் அதிக சொத்துக்கள் இருந்தன, ஆனால் நான் அதில் மகிழ்ச்சியடையவில்லை. என்னால் என் அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. உண்மையான அன்பு ஒருபோதும் எங்களுடன் கடைசிவரை இருந்ததில்லை. யாஷிகாவும் நானும் மிகவும் துரதிர்ஷ்டவசமானவர்கள். எங்கள் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை நாங்கள் ஒருபோதும் பெற்றதில்லை ” என்று தன் கஷ்டங்களை அவளிடம் பகிர்ந்துகொள்கிறான்.

இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்டபின், ஹர்ஷிதா தன்னால் முடிந்தவரை அவனுக்கு உதவ முடிவு செய்கிறாள், சிறிது நேரம் அவர்களுடன் இருக்கிறாள். பின்னர் அவள் அவர்களை ஆறுதல்படுத்தி தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறாள். ஜெயஸ்ரீ மற்றும் அசோக் அவர்களை கவனித்துக்கொள்கிறார்கள், அந்த நாள் அவளுடைய வீட்டில் செலவிடுகிறார்கள்.

நாட்கள் கடந்தன..

தங்கள் ஹோட்டலை எவ்வாறு மேன்படுத்துவது, அடுத்து என்ன செய்வது என்பது குறித்த யோசனைகளை வழங்குவதன் மூலம் ஹர்ஷிதா அவர்களுக்கு நிறைய உதவுகிறாள். நாட்கள் செல்ல செல்ல ஹர்ஷிதாவும் யஷ்வந்தும் மிகவும் நெருங்கமாகிறார்கள். யஷ்வந்த் ஹர்ஷிதாவுடன் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பாகவும் கொஞ்சம் அன்பாகவும் உணர்கிறான். ஹர்ஷிதாவுக்கு யஷ்வந்த் மீது மிகுந்த மரியாதை உண்டு, யஷ்வந்த்திற்கும் ஹர்ஷிதா மீது மிகுந்த மரியாதை உண்டு. புதிய ஹோட்டல் திறக்க ஹர்ஷிதா ஒரு திட்டத்தை கூறுகிறாள். ஹர்ஷிதாவின் குடும்பமும் அவனுக்கு ஒரு பெரிய ஆதரவாக இருக்கிறார்கள். அவன் ஒரு புதிய ஹோட்டலைத் தொடங்குகிறான், அது வெற்றிகரமாக இயங்குகிறது. ஹர்ஷிதாவின் இறுதித் தேர்வுகள் தொடங்குகின்றன. அவள் தேர்வுக்குத் தன்னை தயார் செய்துக்கொள்கிறாள். அதே நேரத்தில் யஷ்வந்திற்கும் உதவுகிறாள்.
அவளுடன் இருப்பதன் மூலம் தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று யஷ்வந்த் நம்புகிறான். யஷ்வந்தும் யாஷிகாவும் அடிக்கடி ஹர்ஷிதாவின் வீட்டிற்கு வருகிறார்கள். ஹர்ஷிதாவின் குடும்பத்தினர்கள் தங்கள் சொந்த குடும்பத்தினர்ப் போல இருப்பது அவர்களுக்கு ஆறுதலளிக்கிறது. ஹர்ஷிதாவின் சகோதரனை தன் சசோதரன் போல் உணர்கிறான். நாளுக்கு நாள் ஹர்ஷிதாவிற்கும் யஷ்வந்திற்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமாகி விடுகிறது, ஏனெனில் அவன் எல்லாவற்றையும் அவளுடன் பகிர்ந்து கொள்கிறான், அவளும் அவனுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறாள்.
ஹர்ஷிதாவின் கடைசி தேர்வு நாள் வந்தது மற்றும் இது அவளது கல்லூரியின் கடைசி நாள். ஹர்ஷிதாவும் அவளது நண்பர்களும் தங்கள் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறார்கள். அருணும் பிரியாவும் கல்லூரியில் தங்கள் காதல் எவ்வாறு தொடங்கியது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். மாலையில், ஹர்ஷிதா தனது நண்பர்களை விட்டு வெளியேற வருத்தப்படுவாள் என்று யஷ்வந்த் நினைக்கிறான். எனவே அவன் கல்லூரியில் இருந்து அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறான். யஷ்வந்த் கல்லூரிக்கு வருகிறான். யஷ்வந்தின் வருகையைப் பற்றி அனைவரும் ஹர்ஷிதாவுக்கு தெரிவிக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று அவளால் நம்ப முடியவில்லை. அவள் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறாள் “யஷ்வந்திற்கு என்ன ஆனது? அவன் பெண்களுடன் பேசவே வெட்கப்படுவான், ஆனால் இப்போது தன்னை கூட்டிச்செல்ல வந்திருக்கிறான். இது யஷ்வந்தா?” என்று. அவள் புன்னகையின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். யஷ்வந்த் அவளிடம் வந்து “நீ இதை என்னிடம் எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கேட்டான். அவள் “ஆம்! ஏன் இந்த திடீர் மாற்றம்? ” என்று கேட்டாள். "இது உனக்காக மட்டுமே" என்று அவன் பதிலளித்தான். பின்னர் அவன், "நீ எனக்காக நிறைய செய்திருக்கிறாய். என் கடினமான காலங்களில் நீ என்னுடன் இருந்திருக்கிறாய். எனவே எனது குணத்தை மாற்றுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன் " எனக் கூறினான்.
கல்லூரியில் எல்லோரும் தங்கள் சந்தோஷங்களையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள், கடைசியாக தங்கள் கல்லூரி வாழ்க்கையின் முடிவில் அனைவரும் மகிழ்ச்சியாக விடைபெறுகிறார்கள். ஹர்ஷிதாவை கூட்டிச்செல்ல யஷ்வந்த் தனது பைக்கை எடுக்கிறான். ஹர்ஷிதா மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். இது அவர்களின் முதல் பயணம். யஷ்வந்த் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான், இந்த மகிழ்ச்சி தனது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். ஹர்ஷிதாவும் அவனது மகிழ்ச்சியை அவனது முகத்தில் காண்கிறாள், மேலும் அவனது வாழ்நாள் முழுவதும் அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புகிறாள்.

நாட்கள் செல்லச் செல்ல..அவர்கள் இருவரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி ஒருவருக்கொருவர் நிறைய ஆதரவளிக்கிறார்கள்.

பின்னர் யாஷிகாவும் ஐடி பார்க் நிறுவனத்தில் இடம் பெறுகிறாள், மேலும் அவளது இன்டர்ன்ஷிப் காலம் தொடங்கியது. ஹர்ஷிதா யாஷிகாவை வழிநடத்துகிறாள். யஷிகாவும் ஹர்ஷிதாவும் ஒன்றாக தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள். ஒன்றாக வேலை செய்வதன் மூலம் அவர்கள் சகோதரிகளை விட நண்பர்களாகிறார்கள். ஒரு நாள் யாஷிகா, "நாளை என் சகோதரனின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் என் அம்மாவுடன் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் இந்த ஆண்டு அவர் தனது பிறந்தநாளை கூட நினைவில் கொள்ளவில்லை" எனக் கூறினாள். ஹர்ஷிதா அவனது பிறந்தநாளில் அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்க திட்டமிடுகிறாள்.
அடுத்த நாள் வந்தது. இது யஷ்வந்தின் பிறந்த நாள். ஒவ்வொரு ஆண்டும் அவனது தாயார் அவனுக்கு முதலில் வாழ்த்துவார், அவனை நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். அவர் இல்லாததால் அவன் பிறந்த நாளைக் கூட மறந்துவிடுகிறான். எனவே ஹர்ஷிதா காலையில் அவனுக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்துகிறாள். பின்னர் அவள் அவன் வீட்டிற்குச் சென்று அவளுடன் வரும்படி கட்டாயப்படுத்துகிறாள். அவள் அவனை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று அவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டிக்கொள்கிறாள். யஷ்வந்த் ஹர்ஷிதா மீது ஒரு வித்தியாசமான உணர்வை உணர்கிறான். அவளுடைய அக்கறை அவனுடைய தாயை நினைவூட்டுகிறது. அவன் அழுகிறான், அவள் அவனுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ இனி உன் வாழ்நாள் முழுவதும் நீ மகிழ்ச்சியாக இருப்பாய், உன் அம்மா மற்றும் அப்பாவின் ஆசீர்வாதம் எப்போதும் உன்னுடன் இருக்கும். இனி கவலைப்பட வேண்டாம் ” எனக் கூறினாள். அவன் தனது பிறந்தநாளை அவளுடன் கழிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறான். அவள் அவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறாள். அவனது வாழ்நாளில் ஒரு சிறந்த நாளாக அவனது பிறந்தநாள் இருந்தது.

அன்று இரவு, யஷ்வந்த் ஹர்ஷிதாவை தொலைப்பேசியில் அழைத்து அந்த நாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, இது வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்று அவளிடம் சொல்கிறான். அவளும் “ஆம், நான் உன்னுடன் கடைசிவரை இருப்பேன்” என்று உறுதியளிக்கிறாள். ஹர்ஷிதா தான் அவனது வாழ்க்கை என்றும் அவளை இழந்தால் அவன் இப்போது வரை சம்பாதித்த அனைத்தையும் இழப்பான் என்றும் அவன் நம்புகிறான். அவள் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்றும் இந்த உணர்வுதான் காதல் என்றும் நினைக்கிறான். எனவே அவன் தன் காதலை அவளிடம் சொல்ல முடிவு செய்கிறான். அந்த நேரத்தில் ஹர்ஷிதாவின் தந்தை அவளை அழைக்கிறார், அதனால் அவள் தொலைபேசியை படுக்கையில் வைத்துவிட்டு அறைக்கு வெளியே செல்கிறாள். அவள் அம்மா ஜெயஸ்ரீ தொலைபேசியில் யஷ்வந்த் காத்திருப்பைக் காண்கிறாள். எனவே ஜெயஸ்ரீ தொலைபேசியை எடுத்து அவளது தந்தை அழைத்தபடியே ஹர்ஷிதா வெளியே சென்றால் என அவனிடம் தெரிவிக்க தொலைபேசியை எடுத்து அவள் காதுகளில் வைத்திருக்கிறாள், ஆனால் அவள் பேசுவதற்கு முன் அவன் உரையாடலைத் தொடங்குகிறான்.

அவள் வெளியே சென்றதும், அவள் அம்மாவிடம் தொலைபேசி இருப்பதும் யஷ்வந்திற்குத் தெரியாது. அது தெரியாமல், அவன் “நான் எந்த பெண்களிடமும் பேசியதில்லை என்பது உனக்குத் தெரியும். நான் பேசிய முதல் பெண் நீ. என் ஏற்றத் தாழ்வுகளில் நீ என்னுடன் இருந்திருக்கிறாய். நீ என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க பெறும்பாடு படுகிறாய். நீ யாஷிகாவையும் நன்றாக கவனித்துக் கொள்கிறாய். அன்று என் அம்மா நீ என் காதலி என்று தெரியாமல் சொன்னார் ஆனால் அது இன்று நிறைவேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் கடைசி மூச்சு வரை நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். நீ என்னை திருமணம் செய்துகொள்வாயா? ” என முன்மொழிந்தான். அவளுடைய அம்மா இதையெல்லாம் கேட்டு, தன் மகளிடம் இந்த எண்ணத்துடன் பேச வேண்டாம் என்று கூறுகிறார். பின்னர் ஜெயஸ்ரீ அவனைத் திட்டி அழைப்பைத் துண்டித்துவிடுகிறாள். பின்னர் ஹர்ஷிதா வந்து தன் தொலைபேசியை எடுத்தாள்.

யஷ்வந்திடமிருந்து வந்த அழைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறாள், அவன் தொலைபேசியைத் துண்டித்துவிட்டான் என்று நினைக்கிறாள், பின்பு அவள் தன் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறாள்.

வழக்கம் போல, மறுநாள் அவள் அவனுடைய ஹோட்டலுக்குச் செல்கிறாள், ஆனால் யஷ்வந்த் அங்கு இல்லை. யஷ்வந்த் அவளைப் பார்க்க குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறான். அவள் தனது வாழ்க்கைத் துணையாக இருப்பதை அவளது பெற்றோர் விரும்பாததால் அவளிடமிருந்து விலக முடிவு செய்கிறான். மேலும் அவன் “எனக்கு பெற்றோர் இல்லை, அதனால் நான் அவளுடைய பெற்றோரைப் பற்றி யோசிக்காமல் காதலை வெளிப்படுத்திவிட்டேன். அவளுக்கு அவளுடைய குடும்பம் தேவை. பெற்றோர் இல்லாமல் வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்று எனக்குத் தெரியும். எனவே அவளும் அவ்வாறு கஷ்டப்பட நான் விரும்பவில்லை. அவளது பெற்றோரின் கருத்தை நான் மதிக்க வேண்டும் ” என்று நினைக்கிறான். எனவே அவன் அவளைத் தவிர்க்க முயற்ச்சிக்கிறான், ஆனால் அவனால் அதை செய்ய முடியாது என உணர்கிறான். அவன் தினமும் சோகமாகவே இருக்கிறான். அவன் தினமும் ஹர்ஷிதாவைத் தவிர்க்கிறான். ஆனால் ஹர்ஷிதாவிற்கு அவன் அவளைத் தவிர்ப்பதற்கான காரணம் தெரியவில்லை. அதனால் அவள் யஷ்வந்தைப் பற்றி யாஷிகாவிடம் கேட்கிறாள். அவள் "ஆம், நானே அவரைப் பற்றி உங்களிடம் கேட்க நினைத்தேன் அக்கா. அவர் சில நாட்களாகவே சோகமாக இருக்கிறார், ஆனால் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. இதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியுமா அக்கா?" என்று கேட்கிறாள். அதற்கு ஹர்ஷிதா "இல்லை, எனக்கு எதுவும் தெரியவில்லை" என்று பதிலளித்தாள். அவள் மிகவும் குழப்பமான நிலையில் இருக்கிறாள்.

அவள் அவனைப் பார்க்க தினமும் ஹோட்டலுக்குச் செல்கிறாள், ஆனால் அவன் அங்கே இருப்பதில்லை. அவள் அவனை தொலைப்பேசியில் அழைக்கிறாள், ஆனால் அவன் அழைப்புகளை எடுக்கவில்லை. இரண்டு வாரங்கள் ஆகின யஷ்வந்திடம் பேசாமல் அவளால் இருக்கமுடியவில்லை, அதனால் அவள் அவனுடைய வீட்டிற்குச் சென்று அவனிடம் நேரடியாகக் காரணத்தைக் கேட்க முடிவு செய்கிறாள். அவன் வீட்டிற்குச் சென்று “யஷ்வந்த், நீ ஏன் என்னைத் தவிர்க்கிறாய்? காரணத்தையாவது கூறு, நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு. அதற்காக பேசாமல் இருக்காதே தயவுசெய்து என்னிடம் பேசு ” எனக் காரணத்தைக் கூறும்படிக் கேட்கிறாள். யஷ்வந்த் தனக்குத்தானே “நான் உனக்கு சரியானவன் அல்ல ஹர்ஷிதா. நீ சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் உன்னுடன் இருந்தால் உன்னால் சந்தோஷமாக இருக்க முடியாது” என மனதிற்குள் கூறினான். அவன் ஹர்ஷிதாவிடம் தன் வீட்டை விட்டு வெளியே செல்லும்படிக் கத்துகிறான். அவன் சொல்வதை அவளால் நம்ப முடியவில்லை. இதைக்கேட்ட யாஷிகா "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் அண்ணா? தயவுசெய்து யோசித்துப் பேசுங்கள் " எனக் கூறினாள். ஆனால் யஷ்வந்த் அதை சிறிதுகூட கேட்காமல் ஹர்ஷிதாவைக் கூச்சலிட்டு அவன் அறைக்குச் சென்று கதவைச் சாத்தினான். ஹர்ஷிதா தன் வீட்டிற்கு வந்து அழுகிறாள். அதே நேரத்தில் யாஷிகா, ஹர்ஷிதாவைக் காயப்படுத்தியதால் யஷ்வந்திடம் பேச வேண்டாம் என்று முடிவு செய்கிறாள். நாட்கள் கடந்தன அவனால் ஹர்ஷிதாவுடன் பேசாமல் சாதாரணமாக இருக்கமுடியவில்லை, யாஷிகா அவனைத் தவிர்ப்பதையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவன் தவிர்த்ததற்கான காரணமும், யஷ்வந்த் அவளிடம் வைத்திருக்கும் காதலும் ஹர்ஷிதாவிற்ககுத் தெரியவருமா? யஷ்வந்திடம் உள்ள உறவு குறித்து ஹர்ஷிதாவின் எண்ணங்கள் என்ன?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top