அக்கறையும் அக்கரையும்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அக்கரை – அக்கறை

நாம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அக்கறையாக இருப்பது சகஜம்தானே
அப்படியிருக்கும்போது எனது கும்பகோணம் பாட்டி ஒருமுறை இந்த பரமாத்மா – ஜீவாத்மா அக்கறை குறித்து ஒரு சம்பவம் கூறினார்.

யமுனை நதிக்கு இக்கரையில் கிருஷ்ணரும் ராதையும் அமர்ந்துள்ளார்கள்.
சுகமான காற்றுடன் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அவ்வப்போது கிருஷ்ணர் அக்கரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதை கவனித்த ராதை, என் மீது அக்கறை இல்லாமல் ஏன் அக்கரையை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றாள்.

எனக்கு பசிக்கிறது என்றார் கிருஷ்ணர்.

இதோ உணவு எடுத்து வருகிறேன் என்றாள் ராதை.

அக்கரையிலும் ஒருவருக்கு பசிக்கிறது என்றார் கிருஷ்ணர்.

அவ்வளவுதானே அவருக்கும் உணவு தருகிறேன்.. சரி யார் அவர்? என்றாள் ராதை.

அங்கு பார்த்தாயா.. துர்வாச முனிவர். அவருக்குத்தான் பசிக்கிறது என்றார் கிருஷ்ணர்.

ஆமாம். தெரியும். கோபக்காரர். அனைவருக்கும் சாபம் கொடுப்பார்… - ராதை

என் மனதில் நீ இருக்கிறாய். அவர் மனதில் நான் இருக்கிறேன். அவர் என் பக்தர்… பக்தர் மீது எனக்கு அக்கறை இருப்பது ஒன்றும் தவறில்லையே… - கிருஷ்ணர்.

ஒரு தட்டில் உணவு எடுத்துக் கொண்டு அக்கரைக்குச் சென்றாள் ராதை.
அப்போது யமுனை நதியில் கணுக்கால் அளவு நீர் இருந்தது.

உணவைக் கொண்டு துர்வாசரிடம் கொடுத்தாள் ராதை.
வந்தது யார் என்பதை உணர்ந்தார் முனிவர்.

உங்களுக்குப் பசிக்கிறது என்று அவர் சொன்னார் – ராதை.

எனக்கு மட்டும்தான் பசிக்கிறதா தாயே…… கிருஷ்ணருக்கும் தானே பசிக்கிறது… அதைப் பற்றி அவர் சொல்லவில்லையா…. – முனிவர்.

தாய் என்று கூறி விட்டீர்கள்… பசிக்கும் குழந்தைக்கு உணவு தருவது ஒரு தாயின் கடமை அல்லவா? – ராதை.

பசியின் மயக்கத்தில் வேக வேகமாக உண்டார் முனிவர்.
கிளம்புகிறேன் என்று ராதை, தயார் ஆன போது யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாயே… எப்படி செல்வீர்கள் என்ற முனிவர்… யமுனையை நோக்கி…. “ நான் இந்த நேரம் வரை உபவாசம் இருந்தது உண்மையானால், நீ இந்த தாய் அக்கரை செல்ல வழி விட வேண்டும்” என்றார்.

அதன்படி யமுனை, ராதை அக்கரை செல்ல வழிவிட்டது.
ராதையும் கிருஷ்ணர் இருக்கும் இக்கரை வந்தாள்.

முனிவர் உபவாசம் இருந்தார் என்பதை உண்மை என்று நம்பி யமுனை எனக்கு வழிவிட்டது.
முனிவர், உணவு உண்ட பிறகு, எதற்காக உபவாசம் இருந்ததாக பொய் சொல்ல வேண்டும்? என்று கிருஷ்ணரிடம் கேட்டாள் ராதை.

அது அப்படியல்ல. முனிவர் மனதில் நான் இருக்கிறேன் என்பதால் அவர் எனக்கு நைவேத்யம் செய்வதான பாவனையுடன் உணவு முழுவதையும் உண்டார்.
அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது.
என் பக்தர்களின் பக்தியால்தான் எப்போதும் என் பலம் கூடுகிறது.
இனி நீ வற்புறுத்தினாலும் என்னால் சாப்பிட முடியாது.
இதை யமுனை உணர்ந்துவிட்டாள்.
அதனால்தான் அவள் உனக்கு வழி விட்டாள் என்றார் கிருஷ்ணர்.

மேலும், “யார் ஒருவர் தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் தன் உள்ளே இருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என்று நினைத்து செய்கிறானோ, அவரை எந்த துன்பமும் பாதிப்பதில்லை.
அவர்களுடைய துன்பத்தையெல்லாம், அவர்கள் மனதில் உள்ள இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்” என்றார்.

ராதை கிருஷ்ணர் கூறுவதைக் கேட்டு மகிழ்ந்தாள்.

கிருஷ்ணர் கூறுகிறார்… ராதை… நீ என் உள்ளத்தில் இருப்பதால், நான் சூடான எந்தப் பொருள் எதையும் உண்பதில்லை….
உனக்கு சூடு பொறுக்காது…

ராதையின் சிரிப்பைக் கேட்டு அக்கரையில் துர்வாசர் மகிழ்ச்சி அடைந்தார்…

படித்ததில் பிடித்தது
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top