மண்ணின் காரிகையவளோ 4

Advertisement

அத்தியாயம் 4

"கொழுப்புப்பிடிச்சவ நம்மகிட்ட ஒரு வார்த்தையாவது சொல்றாளாப் பாரு.... இங்கன ஒருத்தன் நின்னுட்டு இருக்கேன் கொஞ்சமாவது கண்டுக்கிறாளா... அவளா வந்துப் பேசுற வரைக்கும் நம்ம பேசவே கூடாது.... " என்று மனதில் உறுதி எடுத்தவன் அங்கிருந்து நகர்ந்து வெளியே சென்று விட இவை எதையும் அறியாமல் தனது அத்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் சாம்பவி....

சற்று நேரத்தில் கவலைத்தோய்ந்த முகத்துடன் எழிலரசும் முத்தரசும் உள்ளே வந்தனர்.... தன் மகன்களின் முகத்தை கூர்ந்துப் பார்த்த சுந்தரபாண்டியனுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற மகன்களுக்கு கண்ஜாடை காட்டிவிட்டு தனதறைக்கு செல்ல இருவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்....

அறைக்குள் நுழைந்ததும் "முத்து கதவ சாத்துப்பா... " அவர் கூறியதும் முத்தரசு கதவை சாற்றினார்....

"இப்போ சொல்லுங்கப்பா என்ன
பிரச்சனை.... ஏன் இரண்டு பேரு முகமும் வாடிப் போய் கிடக்கு.... " என்று சுந்தரபாண்டியன் வினவ தந்தையின் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்தாலும் இருவரும் முகத்தில் எதையும் காட்டாமல்
ஒன்றும் அறியாதது போல் அவரை ஏறிட்டனர்....

"என்னங்கய்யா சொல்றீங்க.... நாங்க நல்லாதான் இருக்கோமுங்கய்யா...." என்று சமாளித்த தன் மகன்களைப் பார்த்து சிரித்தார் சுந்தரபாண்டியன்...

"எப்பா எழிலு முத்து நானு உங்கள என் மார்லயும் தோளுலயும் போட்டு வளத்தவன்.... பெத்தவனுக்கு தெரியாதா புள்ளங்க மனசப்பத்தி... இரண்டு பேரும் மத்தவங்களுக்காக சிரிச்சாலும் இரண்டு நாளா யோசனையாவே இருக்கீங்க... என்ன விசயமுன்னு சொல்லுங்க.... இல்ல இவருக்கு வயசாயிப் போச்சு இந்தக் கிழவங்கிட்ட ஏன் சொல்லனும்னும் இருக்கீங்களா... " என்ற தந்தையின் வார்த்தைகளில் பதறிய இருவருக்கும் இதற்கு மேல் மறைத்துப் பயனில்லை என்று தோன்ற தம்பியைப் பார்த்து தலையாட்டினார் எழிலரசு....

"அய்யா இந்த வருஷம் விளைச்சல் ரொம்ப ரொம்ப கம்மியா வந்துருக்குதுங்கய்யா... அதுலயும் பாதி பூச்சிப் பிடிச்சு வீணாப்போச்சுங்கய்யா.... அதுவுமில்லாம நம்ம கோவிலுக்கு கிழக்கால ஏதோ பேக்டரி கட்டப்போறாங்களாம்... அதனால அந்த இடம் அந்த கம்பனிகாரங்களுக்கு சொந்தமாம் இனிமே நம்ம அங்க விவசாயம் பண்ணக்கூடாதுனு நோட்டீஸ் அனுப்பிருக்காங்க அய்யா... " கவலை தோய்ந்த முகத்துடன் முத்தரசு கூற அதிர்ச்சியில் பேச இயலாது சிந்தனையில் ஆழ்ந்தார் சுந்தரபாண்டியன்...

"என்னலே சொல்ற... கோவிலுக்கு கிழக்கால தான் பூமி நல்ல விளைச்சலத் தருது... நல்ல விளையற நிலத்துல கம்பேனி கட்டிப் போட்டா அப்போ விவசாயத்துக்கு என்ன பண்ணுறது.... ஏற்கனவே மண்ணுல உயிர்ப்பில்லாம தான் பாதிக்கு பாதி விளைச்சலு... இதுல நல்ல நிலமும் போச்சுனா நம்ம எங்கனப் போய் விவசாயம் பண்ணுறது.... "

"அதாங்கய்யா எங்களுக்கும் புரில... " முத்தரசு வருத்தத்துடன் கூற

"அய்யா ஆனா அந்த நிலம் மட்டும் கைமீறிப் போச்சுனா நம்ம ஊரோட பூமியே வீணாப்போயிருங்கய்யா.... கண்ட கழிவுகளக் கொட்டி மண்ணைப் பாழாக்கிருவாங்க.... " என்று நிதர்சனத்தை எழிலரசு உரைக்க மற்ற இருவரும் செய்வதறியாமல் திகைத்தனர்...

*************

மாலை ஒரு முறை ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு தனதறைக்கு சென்றுக் கொண்டிருந்த ஸ்ரீதரனைக் கண்ட ஒருவர் " ஸ்ரீதரா... எய்யா ஸ்ரீதரு... " என்று உரக்க கத்தி அழைக்க அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தான் ஸ்ரீதரன்...

அவரின் அருகில் சென்றவன் "சொல்லுங்க... " என்று கூறியதும் அவனின் கைகளைப் பிடித்துக் கொண்ட அந்த பெரியவர்

"யய்யா நல்லாயிருக்கியாய்யா.... பத்மாம்மா நல்லாருகாங்களா... அப்படியே உங்கப்பாவ உரிச்சுச் வெச்சாப்ல இருக்கய்யா.... " என்று அவனின் தலையை தடவியவர்

"என்னய்யா என்ன அடையாளம் தெரிலயாக்கும்... நானும் அக்கரைசெங்கப்பள்ளிக்காரன் தான்... என்ற மகள இந்த ஊர்லதேன் கட்டிக் கொடுத்தோம்... பிரசவத்துக்கு இங்கனதான் சேர்த்திருக்கோம்.... " என்று அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க அக்கரைசெங்கப்பள்ளி என்ற வார்த்தையைக் கேட்டதும் திகைத்து நோக்கினான் ஸ்ரீதரன்...

பழைய நினைவுகள் வந்து தாக்க கண்களை இறுக்க மூடி மனதை ஒருநிலைப்படுத்தி சமன் செய்தவன் "என் பேரு ஸ்ரீதரன் தான் ஆனா நீங்க நினைக்குற ஸ்ரீதரன் நான் கிடையாது... அக்கரைசெங்கப்பள்ளிங்கற ஊரப்பத்தி நான் இதுவரைக்கும் கேள்விப் பட்டது கூட இல்ல.... " என்று கூறியவன் அதற்கு மேல் அங்கு நில்லாமல் விறுவிறுவென்று சென்றுவிட எதுவும் புரியாமல் முழித்தார் அந்த பெரியவர்....

தன் அறைக்கு வந்தவனின் மனமோ ஒரு நிலையில்லாமல் தவிக்கப் பழைய நினைவுகள் கண்முன்னே நிழலாடியது ... கண்களில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தவனுக்கு இதே மனநிலையில் தன்னால் யாருக்கும் மருத்துவம் பார்க்க முடியாது என்று தோன்றிட வீட்டிற்கு கிளம்பினான்....

வீட்டிற்குள் நுழைந்த மகனை ஆச்சரியமாக நோக்கிய பத்மா " என்ன கண்ணா அதிசயமா இருக்கு.... இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.... " என்று வினவ

"கொஞ்சம் டயர்ட்மா அதான் வந்துட்டேன்..." என்று சோர்வுடன் கூறிவிட்டு தனதறைக்கு சென்றுவிட்டான் ஸ்ரீதரன்.... மகனின் முகத்தைக் கண்ட பத்மாவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற மேலே செல்லும் மகனை குழப்பத்துடன் நோக்கினார்....

"என்னய்யா என்ன அடையாளம் தெரிலயாக்கும்... அக்கரைசெங்கப்பள்ளிக்காரன் தான்..." பால்கனியில் நின்றவனின் காதில் அப்பெரியவரின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிக்க அவ்வூரின் பேரைக் கேட்டதும் தன்னால் வரும் கோவத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது அங்கிருந்த கைப்பிடியில் ஆத்திரம் தீரும் வரை குத்தினான் ஸ்ரீதரன்....

கைகளில் ரத்தம் வழிந்தோடியப் போதும் அதனைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் அக்கரைசெங்கப்பள்ளி என்று கூறிக் கொண்டே மீண்டும் குத்திக் கொண்டிருக்க மகனுக்காக இஞ்சி தட்டி டீ போட்டுக் கொண்டு மேலே வந்த பத்மா அவனின் செயலில் அதிர்ந்து நின்றார்...

"ஸ்ரீ.... என்ன காரியம் பண்ணுற... " ஓடி சென்று மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டே பத்மா கோபமாக வினவ

"ம்மா என்ன விடுங்க.... "

"ஷ் அமைதியா இரு.... " என்று அதட்டியவர் தன் புடவையின் முந்தானையைக் கிழித்து அவனின் கையில் நிற்காமல் வழிந்தோடும் ரத்தத்தை நிறுத்துவதற்காக அழுத்திக் கட்டிவிட்டு மகனை அழுத்தமாக நோக்க அவரின் பார்வை வீச்சு தாங்க முடியாமல் தலைகுனிந்தான் ஸ்ரீதரன்...

"ம்மா என்னால முடிலம்மா... அந்த ஊர் பேரக் கேட்டாலே நமக்கு நடந்த அநியாயம் தான் நியாபகம் வருது.... " மகனின் சோர்ந்த முகத்தை கையிலேந்திய பத்மா

"கண்ணா அந்த ஊருக்கும் நமக்குமான பந்தம் இருபது வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சுருச்சு.... பழச நினைச்சு இப்படி உன்ன நீயே கஷ்டப்படுத்திக்காதப்பா... இப்போ அம்மாவுக்கு நீ மட்டும் தான் இருக்க.... " என்று கண்ணீர் மல்க கூறிய அன்னையைக் கட்டிக் கொண்டான் ஸ்ரீதரன்....

"ம்மா ஆனா என்னால முடிலம்மா... அந்த ஊர் பேரக் கேட்டாலே நம்ம கண்ணு முன்னாடி அப்பா செத்தது தான் நியாபகம் வருது... " என்றவனின் தலையைத் தடவிய பத்மாவினாலும் ஒருகட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் போக வெடித்து அழுக ஆரம்பித்தார் பத்மா...

அன்னையின் அழுகையில் சுதாரித்த ஸ்ரீதரன் " ம்மா சாரி மா தெரியாம பழச நியாபகம் பண்ணிட்டேன்... பிளீஸ்மா அழாதீங்கம்மா... " என்று அன்னையின் கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஸ்ரீதரன் கெஞ்ச மகனுக்காக தன்னை கட்டுப்படுத்தினார் பத்மா...

"மா போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..." என்றவன் அன்னையை அழைத்துக் கொண்டு அவரின் அறையில் படுக்கவைத்து விட்டு வந்தான்...

தனதறைக்கு வந்தவன் இனி எக்காரணம் கொண்டும் அவ்வூவரையும் அவ்வூரின் நினைவுகளையும் நினைக்கக் கூடாது என்று உறுதி எடுத்தவன் பால்கனியில் சென்று சற்று காற்றோட்டமாக நிற்க மனம் சற்று லேசாகியது....

********************

ஆதவன் தன் செங்கதிர்களைப் பூமியெங்கும் படரச் செய்ய காரிருள் விலகி காலைப்பொழுது அழகாகப் புலர்ந்தது...

காலையில் சீக்கிரமே கல்லூரிக்கு வரச் சொல்லி இருந்ததால் அதிகாலையிலேயே அனைவருக்கும் முன் எழுந்த சாம்பவி பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருக்க

"அடியே சின்னக்கழுதை என்ன இம்புட்டு சீக்கிரமா எந்திரிச்சுட்ட... " கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்கும் தன் ஆத்தாவை பார்த்த சாம்பவி

"காலங்காத்தாலயே என்ன வம்பிழுக்க வந்தாச்சா ஆத்தா... போங்கப் போய் குளிச்சு உங்க பூஜை வேலையப் பாருங்க.... " என்றுவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தாள்...

"இக்கும் பொல்லாத ஊருக்குப் போனாலும் போற ரொம்பத்தான் பண்ணிகிட்டு திரியுற... அடியே சின்னக்கழுதை இந்தா இருக்குற சென்னைக்கு இம்புட்டு பந்தா ஆகாதுடி..." தாடையில் இடித்துக் கொண்டு கூறிக் கொண்டே நாச்சியார் அங்கிருந்து செல்ல

"ஆத்தா வரவர உங்களுக்கு வாய் ஜாஸ்தியாயிருச்சு வந்து வைச்சுக்கிறேன் ... " என்றுவிட்டு தன் வேலைகளை கவனித்தாள் சாம்பவி...

அவள் கிளம்பி கீழே வந்ததும் அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதற்காக நாச்சியார் அன்புச்செழியனை பாதி தூக்கத்தில் எழுப்பியிருக்க கடுப்புடன் எழுந்து வந்தான் அன்புச்செழியன்...

அனைவரும் பத்து தடவைக்கு மேல் அவளுக்கு பத்திரம் சொல்லிக் கொண்டிருக்க கடுப்பான சாம்பவி "அடயப்பா சாமி நான் என்ன தனியாவா போகப் போறேன்... காலேஜ் பஸ்ல ப்ரண்ட்ஸ்கூடயும் மிஸ்சுங்க கூடயும் போயிட்டு வரப் போறேன்... இதுக்கு ஏன் இவ்வளவு நேரம் அட்வைஸ் பண்ணுறீங்க... " என்று சிணுங்க

"உனக்கு என்னடி தெரியும்... இந்த காலத்தில பொம்பளப் புள்ளங்க வெளில போனாலே பெத்தவங்க வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்குறோம்... இதுல நீ வெளியூர் போகப் போற... எங்களுக்கு பயமா இருக்காதா ...." என்று தாயாய் தங்களின் நிலையை மீனாட்சி விளக்க அதைக் கேட்ட அன்புசெழியன் விழுந்து விழுந்து சிரித்தான்...

"அம்மா அந்த பயமெல்லாம் புள்ளைங்களுக்கு மா... நீங்க பெத்தது புள்ள இல்ல சரியான தொல்லை... இவலாம் எட்டு ஊரயே விலைப் பேசி வித்துட்டு வந்துருவா.. நீங்க இவளுக்கு போய் இவ்வளவு பயந்துட்டு இருக்கீங்க... சிரிப்புக் காட்டாம கம்முனு போங்க... " என்று செழியன் கூறியதும் அதை ஆமோதித்து அனைவரும் சிரிக்க கடுப்பானாள் சாம்பவி....

"அப்பாரு பாருங்க அண்ணனை... " என்று சிணுங்கிய பேத்தியின் தலையை தடவியவர்

"என்ற பேத்திய ஏதாவது சொல்லனா உனக்கும் உங்க அப்பத்தாவுக்கும் பொழுதுப் போகாதே... " என்றவர்

"அவங்க கிடக்குறாங்க விடு கண்ணு... நீ பாத்துப் பாத்திரமா போயிட்டு வா சாமி... " என்றவர் தனது சட்டையிலிருந்து பேத்திக்கு காசை எடுத்து நீட்ட

"அப்பாரு ஏற்கனவே அப்பா பெரிப்பா எல்லாரும் நிறைய பணம் கொடுத்துட்டாங்க... "

"பரவாயில்லை கண்ணு இதயும் வைச்சுக்கோ திடீர்னு தேவைப்பட்டா என்ன பண்ணுறது... " என்றவர் பேத்தியின் கைகளில் பணத்தை வைத்துவிட்டு செழியனுக்கு கண்காட்ட வெளியே சென்று வண்டியை எடுத்தான் செழியன்...

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வண்டியில் அமர்ந்த சாம்பவி " அண்ணா அத்த வீட்டுக்கு போ... அத்தகிட்ட சொல்லனும்... " என்று கூற செழியன் வண்டியை அத்தையின் வீட்டை நோக்கி விட்டான்...

மருமகளுக்காக வாசலிலேயே காத்திருந்த அன்புச்செல்வியை முறைத்துக் கொண்டே நின்றான் விஷ்வேஷ்வரன்...

"அம்மா அவளுக்கு இங்கன வர வழி தெரியாதா... எதுக்கு இப்படி வாசல்லயே நின்னுகிட்டு இருக்கீங்க.... உள்ள வாங்க முதல்ல... " என்று கூறிய விஷ்வேஷ்வரனை சிறிதும் கண்டுகொள்ளாமல் அன்புச்செல்வி வாசலையே பார்த்துக் கொண்டிருக்க தலையிலடித்துக் கொண்டு உள்ளே சென்றான் விஷ்வா....

வீடு வந்ததும் செழியன் வண்டியை நிறுத்த குடுகுடுவென்று இறங்கி தனது அத்தையிடம் ஓடினாள் சாம்பவி...

"வா கண்ணு... நான் உனக்காக தான் காத்திட்டு இருந்தேன்.... செழியா வாடா.." என்றவர் சாம்பவியை உள்ளே அழைத்துச் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்தாள் செழியன்....

வாசலில் சாம்பவி வந்த சத்தம் கேட்டதுமே சட்டென்று கொல்லைப் புறம் சென்று விட்டான் விஷ்வேஷ்வரன் ...

அவர்களை அமர வைத்துக் காலை உணவை ஆசைப்பொங்க அன்புச்செல்வி பரிமாற இருவரும் அத்தையின் கைமணத்தில் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிட்டனர்.....

இருவரும் சாப்பிட்டு முடித்து கைகழுவி விட்டு வர அப்போது தான் வருவது போன்று கொல்லைப்புறத்தில் இருந்து வந்தான் விஷ்வேஷ்வரன்...

" என்னங்க மாமா ஆளையே காணல... வீட்டுப் பக்கமும் நீங்க வரதில்ல.. " என்று அன்புச்செழியன் வினவ என்ன சொல்வதென்று திருதிருவென்று விழித்த விஷ்வா

"அதுவாலே பக்கத்து ஊருக்கு ஒரு வேலயா போயிருந்தேன்... அதுதான் அங்கன வர முடியல... " என்று பதிலளித்தவனின் விழிகள் அவ்வவ்போது சாம்பவியிடம் சென்று கொண்டிருக்க அதைக் கவனித்த செழியனும் அன்புச்செல்வியும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்...

"அத்தமா எனக்கு லேட் ஆகிருச்சு... " என்று சவி நினைவுருத்த

"வா சவிம்மா சாமி கும்பிட்டு விளக்கேத்திட்டு நீ கிளம்பு... " என்றவர் பூஜையறை நோக்கிச் செல்ல மற்ற மூவரும் அவரைப் பின்தொடர்ந்தனர்....

சவி விளக்கேற்றியதும் அன்புச்செல்வி சாமிக்கு தீபாராதனை காட்ட மூவரும் கண்மூடி கடவுளை வணங்கினர்...

"கடவுளே இத்தன நாளு உன்கிட்ட பெருசா எதுக்கும் வந்து நின்னது இல்ல... ஆனா இப்போ என்னோட சாம்பவிக்காக வந்து நிக்குறேன்... சாம்பவிக்கும் எனக்கும் நல்லப்படியா கல்யாணம் ஆகோனும்..." என்று மனதார பிராத்தித்தவனின் மனம் ஏனோ நிம்மதியில்லாமல் தவித்தது...

"எந்தங்கச்சி மேல எங்க மாமா உயிரே வைச்சுருக்காரு... அவங்களுக்கு சீக்கிரம் ஊர்மெச்ச கல்யாணம் நடக்கனும் கடவுளே... எல்லாரும் நல்லா இருக்கோனும்..."

"ஈஸ்வரா எல்லா துன்பத்துலயும் இன்பத்துலயும் துணைநிக்குற எம்பெருமானே... என்ற வீட்டுல கூடிய சீக்கிரம் நல்ல விசேஷம் நடக்கனும்... அதுக்கு உங்க ஆசி வேணும்... " என்று மனமுருக வேண்டிய அன்புச்செல்வி தீபாராதனையை எடுத்துக் காட்ட மூவரும் கண்களில் ஒற்றிக் கொண்டனர்...

"சரி வா சவி நேரமாச்சு கிளம்பலாம்.... " என்று செழியன் கூற சவிக்காகச் செய்து வைத்திருந்த திண்பண்டங்களை அவளின் பையில் வைப்பதற்காக செழியனுடன் அன்புச்செல்வி வெளியே செல்ல விஷ்வாவும் சவியும் தனித்திருந்தனர்...

சிறிது தயக்கத்துடன் விஷ்வாவை ஏறிட்டவள் " போயிட்டு வரேன் மாமா... " என்று திணறிக் கூறிவிட அவளையே வைத்த விழி வாங்காமல் நோக்கினான் விஷ்வேஷ்வரன்...

அவன் எதுவும் கூறாமல் அப்படியே நின்று கொண்டிருக்க செழியன் அழைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்து நகர்ந்தாள்....

சரியாக அவள் வாசலைக் கடக்கும் போது "பாத்து போயிட்டு வா புள்ள..." என்று விஷ்வா கூற சட்டென்று திரும்பி அவனை நோக்கினாள் சாம்பவி... அவன் கண்கள் வெகு நேரமாக எதையோ உணர்த்த முயற்சித்துக் கொண்டிருக்க அது என்னவென்று அறியாமல் குழம்பித் தவித்தவள்

"என்கிட்ட ஏதாவது சொல்லோனுமா மாமா... " என்று சவி வினவியதில் கடுகு போட்டால் பொறிந்துவிடும் என்பது போல் இருந்தவனின் முகம் புன்னகையைத் தத்தெடுத்தது...

ஆமாம் என்று தலையாட்டியவன் "ஆனா இப்போ சொல்ல மாட்டேன்.... நீ ஊருக்கு போயிட்டு வந்ததும் சொல்றேன்... நீ பத்திரமா போயிட்டு வா புள்ள...." என்று விஷ்வா கூற சரியென்று தலையாட்டிவிட்டு கிளம்பினாள் சாம்பவி....

அவளை வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்த அன்புச்செல்வி மகனின் முகத்தில் குடிக்கொண்டிருக்கும் வருத்தத்தைக் கண்டு மெல்ல தனக்குள் சிரித்தவர் " கண்ணா இன்னும் கொஞ்ச நாள் தான்.. அப்பறம் என்ற மருமக உரிமையா நம்ம வீட்டுக்கு வந்துருவா... " என்று கூற முகத்தில் தோன்றிய வெக்கத்தை அன்னையிடமிருந்து மறைக்கும் வழிதெரியாமல் அங்கிருந்து ஓடிவிட்டான் விஷ்வேஷ்வரன்...

மகனின் வெக்கத்தைக் கண்டு கொண்ட அன்புச்செல்வி சிரித்துக் கொண்டே தனது வேலையைப் பார்க்க செல்ல விஷ்வாவிற்கோ இன்னும் கொஞ்ச நாட்களில் சாம்பவி தன் மனைவியாகி விடுவாள் என்பதே வானில் பறப்பது போலிருக்க சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தான்...

சவியைக் கல்லூரியில் இறக்கி விட்ட செழியன் சட்டையிலிருந்துப் பணத்தை எடுத்து நீட்ட "டேய் அண்ணா அதான் வீட்டுல எல்லாரும் கொடுத்தாச்சே... நீயுமாடா... இந்தா இருக்குற சென்னைக்கு போறதுக்கு எதுக்கு இவ்வளவு பணம்... இந்த பணத்தெல்லாம் பார்த்து என்ன யாரும் கடத்திட்டு போகாம இருந்தா சரி... " என்ற தங்கையின் தலையில் கொட்டியவன்

"உன்னலாம் கடத்திட்டு போனா கடத்திட்டு போறவன் தான்டி பாவம்... பேசி பேசியே அவன கொன்றுவ... " என்று கிண்டல் செய்த தன் அண்ணனை தீயாய் முறைத்தாள் சாம்பவி...

தங்கையின் முறைப்பில் சிரித்தவன் "ப்ரண்ஸோட போற... போற இடத்துல நீ ஏதாவது பிடிச்சப் பொருள் பார்க்கும் போது காசு ஒரு குறையா இருக்கக்கூடாது... அதான் எல்லாரும் கொடுத்துவிடுறோம்... " என்று பக்குவமாய் கூறிய அண்ணனைக் கட்டிக் கொண்ட சாம்பவி

"வரேன் அண்ணா... " என்று சிரித்துக் கொண்டே கூற

"பத்திரமா போயிட்டு வா... எங்கயும் தனியா போகாத... எப்பவும் போனை கைலயே வைச்சுக்கோ சவி... ஏதாவதுனா உடனே எனக்கு கூப்பிடு சரியா..." என்று பொறுப்பான அண்ணனாய் கூறியவனிடம் தலையாட்டிவிட்டு உள்ளே ஓடினாள் சாம்பவி...

தங்கை உள்ளே செல்லும் வரை நின்றுப் பார்த்த செழியன் அவள் உள்ளே சென்றதும் பைக்கை முறுக்கிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்....

*************

எழும் போதே தலை விண்ணென்று வலிக்க தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான் ஸ்ரீதரன்... சட்டென்று காபி வாசம் மூக்கை துளைக்க நிமிர்ந்து பார்த்தவனின் முன்னால் கையில் காபிக்கோப்பையுடன் புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்தார் பத்மா...

"குட்மார்னிங் ஸ்ரீ கண்ணா... காபி குடிச்சுட்டு ரெடியாகி வாப்பா.. அம்மா டிபன் ரெடி பண்ணுறேன்... " என்று சிரித்த முகமாக கூறிக் கொண்டு செல்லும் அன்னையை ஆழ்ந்து நோக்கியவனுக்கு அவர் பழையதை மறக்க முயலுகிறார் என்று புரிய தானும் இனி அந்நினைவுகளைக் கனவில் கூட நினைத்துப் பார்க்கக் கூடாது என்று உறுதியெடுத்தவன் காபியைப் பருக தலைவலிக்கு இதமாக இருந்தது...

காபி குடித்து முடித்து குளித்துக் கிளம்பி கீழே வந்த மகனிற்கு சுடசுட இடியாப்பமும் குருமாவும் பரிமாறினார் பத்மா... வழக்கத்தை விட அதிகம் சாப்பிட்ட ஸ்ரீதரன் அன்னையிடம் சொல்லிக் கொண்டு மருத்துவமனைக்கு காரைக் கிளப்பினான்...

காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தவனுக்கு அனைவரும் காலை வணக்கம் சொல்ல தலையாட்டிவிட்டு தனதறைக்கு சென்றவன் தனது பேக்கை வைத்துவிட்டு நிமிர செவிலியர் அவசரமாக ஓடி வந்தார்...

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த செவிலியர் " டாக்டர் எமர்ஜென்சி கேஸ்.... பஸ் ஆக்சிடண்ட் ... ஒரு பொண்ணுக்கு மட்டும் தலைல சிவியர் இன்ஜூரி டாக்டர்..." என்று படபடப்பாக அவர் கூற பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அவருடன் விரைந்தான்...

மாஸ்க் அணிந்துக் கொண்டே எமர்ஜென்சி வார்ட் கதவை திறந்து உள்ளே செல்ல ரத்தம் வழிந்த முகத்துடன் வாடிய மலராய் படுத்துக் கொண்டிருப்பவளைக் கண்டவனின் மனமோ அதிர்ந்து துடிக்க விழிகள் இரண்டும் தன்னால் கண்ணீர் சுரக்க சிலையாய் திகைத்து நின்றான் ஸ்ரீதரன்...

தொடரும்

ஹாய் கண்மணிகளே❤... படிச்சுட்டு மறக்காம கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ்❤❣...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top