“மறைந்த பின்னணி பாடகி கிருஷ்ணாவின் மகளை பைரவி?!” என்று மீடியாக்களில் பலவாறாய் செய்திகள் வந்தபடி இருக்க, பைரவியை பேட்டி காணவும், அவளது அம்மாவின் இசை பயணமும் வாழ்வும் பற்றி பேசவும் என்று பல வலைதள சேனல்களும், பத்திரிக்கைகளும் அணுக, அனைவருக்குமே பைரவி பொறுமையாகவே பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
மிக பிரபலாமான வலைதள சேனல் ஒன்று, பைரவியின் பிரத்யேக பேட்டியை வெளியிட, அதில் அவள் அறிந்த அவள் அம்மாவின் வாழ்வை பற்றியும், அவரின் கடைசி நேர வார்த்தைகள் பற்றியும், அதனால் தான் இங்கே குடி வந்தது பற்றியும் அவள் எந்தவொரு மேற்பூச்சுகளும் இல்லாமல் பேச, அவள் கொடுத்த அந்த பெட்டி மிகவும் வைரல் ஆனது.
இசை துறையில், கிருஷ்ணாவோடு நல்ல பழக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது பைரவிக்கு அழைத்து பேச, ஒரே நாளில் பைரவி மிகவும் பிரபலமாகி போனாள்.
அதிலும் அவள், தனது அம்மாவின் பெயரில் ட்ரெஸ்ட் ஆரம்பிக்கும் விசயத்தையும் சொல்ல, ஏகத்துக்கும் வந்து பாராட்டுக்கள் குவிய, இவ்வகையான சங்கதிகளே அவளுக்கு ஒரு பலமாகவும் அமைந்தது.
செய்திகள் ஒளிபரப்பிற்கு என்றே, தனியாய் இருக்கும் தொலைக்காட்சி ஒன்று, பைரவி தற்போது வசிக்கும் பகுதியையும், அங்கு வாழும் மக்களின் நிலைகளையும் வந்து காணொளி எடுத்து, அங்கிருக்கும் நிறை குறைகள், தேவைகள் என்று எல்லாம் பேசி, முன்னர் நடந்த அந்த பைனான்ஸ் கம்பனி பிரச்சனைகள் பற்றியும் பேசி, அதற்காக பின்னணி பாடகி கிருஷ்ணா மிகவும் மனம் வருந்தி, பாடுவதையே நிறுத்தி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, என்று பைரவி கொடுத்திருந்த பேட்டிகளின் சாராம்சங்களை எல்லாம் சொல்லி, ஒரு தொகுப்பினை வெளியிட்டது.
அத்தனைக்கும் நல்ல ரீச் இருக்க, பைரவி பக்கம் இருக்கும் நல்ல சங்கதிகள் எல்லாம் மிகவும் பிரபல்யமாக, அவளுக்கான பாதுகாப்பும் அதிகரித்தது.
சின்னதாய் இங்கே ஏதனும் அசம்பாவிதம் நடந்தால் கூட, அது இந்த ஏரியாவாசிகளுக்குத் தான் பாதகமாய் முடியும் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்ல வைக்கப் பட, இந்த அனைத்து சங்கதிகளுக்கும் பின்னே நின்றதும் ஷர்மாவும், சிவாவும் தான்.
சிவாவிடம் ஷர்மா தனியாய் பேசியிருந்தார். அதாவது பைரவி விசயத்தில் சிவாவின் நிலைப்பாடு என்ன என்பதனை கேட்டறியும் பொருட்டு, அவர் பேசிட, அவனோ மிக மிக உறுதியாய் தன் வீட்டினில் என்ன சொன்னானோ அதையே தான் அவரிடமும் பேசினான்.
“இந்த பிரச்சனை எல்லாம் பைரவி இழுத்து வச்சுக்குவான்னு நான் எதிர்பார்க்கல சார். சொல்லப்போனா, இதெல்லாம் என்னால ஆரம்பமான ஒன்னு. அதனால நான் இதுல இருந்து விலகி நிக்கவும் முடியாது. அதுக்காக என்னோட சொந்த விசயத்துல, என் குடும்பத்தைத் தாண்டி நான் வேற எதுவும் யோசிக்க முடியாது…” என்று சொல்லிவிட்டான்.
“ரெண்டு பேருக்கும் நல்ல புரிதலும், அழமான அன்பும் இருக்கு சிவா. வாழ்க்கைல ஒண்ணா நின்னா, நல்லாருக்கும்…” என்று அவரும் சொல்ல,
“இல்ல சார். ஒத்து வராது. இதுக்கு முன்ன எப்படியோ. ஆனா இப்போ, கண்டிப்பா எங்க வீட்ல இதை ஏத்துக்க மாட்டாங்க…” என்று முடித்தவன்,
“நம்ம வந்த விஷயம் பேசலாம்…” என்று சொல்லி “பைரவி ஏற்கனவே மீடியால பெமிலியர். அதை அவளுக்கு பலமா மாத்திக்கணும்…” என்று சில விஷயங்கள் சொல்ல, ஷர்மாவிற்கும் இன்னமும் அவன்மீது இருக்கும் நல்லெண்ணம் உயரவே செய்ய,
“நான் பார்த்துக்கிறேன்…” என்று இத்தனை தூரம் கொண்டு வந்து விட்டார்.
சிலபல திரைத்துறை ஆட்களும், இசைத்துறையில் இருப்பவர்களும் முன் வந்து ‘நாங்களும் இந்த தொண்டு நிறுவனத்தில் இணைய விருப்பம்கொள்கிறோம்…’ என்று சொல்லி,
“அங்கே வசிக்கும் குடும்பங்களில், மிகவும் கீழ் நிலையில் இருக்கும் குடும்பத்து பிள்ளைகளின் படிப்பு செலவினை ஏற்கிறோம்…” என்று முன்வந்து நிற்க,
சிறு புள்ளியாய் ஆரம்பிக்கவேண்டும் என்று எண்ணியிருந்த ‘கிருஷ்ணா ட்ரெஸ்ட்…’ இப்போது ஓரளவில் பெரியதாய் உருவம் பெற்றது.
பைரவி வந்ததுமே, அங்கே
பைரவிக்கு எல்லாம் பார்க்க மூச்சு முட்டுவது போலிருந்தாலும், மனிதர்களுக்கு நல்லது நடந்தால் சரி என்கிற எண்ணத்தில், மகிழ்வாகவே இருந்தாள்.
இதோ நாளை விடிந்தால் ‘கிருஷ்ணா ட்ரஸ்ட்…’ திறப்புவிழா.
அதற்கான அனைத்து லீகல் வேலைகளையும் செய்து கொடுத்திருக்க, சிவாவும், இங்கே யார் யாரை அணுகிட வேண்டும். யாரிடம் எப்படி பேசினால் வேலை நடக்கும் என்றெல்லாம் பின் நின்று எடுத்துச் சொல்ல, எல்லாம் தங்கு தடையின்றி நடந்தேறி இருந்தது.
மீடியாவில் விஷயம் பரவவுமே, இங்கே ஏற்பட்டிருந்த சலசலப்பு சற்றே அடங்கி விட, கலகம் செய்து பணம் பார்க்கலாம் என்று எண்ணியவர்களுக்குத்தான் ஏமாற்றமாய் போனது. என்றோ பலவருடங்கள் முன்னே நடந்த பிரச்சனைகளை விட, இன்றைய சூழலும் அதன் சிரமங்களும் பெரும்பாலானவர்களுக்கு கண் முன்னே நிற்க, மனமுவந்தே, தங்களுக்கு என்ன தேவைகள் என்று வெளிப்படையாகவே சொல்லி இருந்தனர்.
ஒருசிலர் குற்றம் குறை சொல்லிடவேண்டும் என்று பேசிக்கொள்ள, நிறைகுறை இல்லாத இடம் ஏது.
ஆனால் இதில் எந்தவித மாற்றங்களும் இல்லாமல் இருந்தது சிவாவின் குடும்பம் தான்.
‘உன் உதவி எங்களுக்குத் தேவையில்லை…’ என்று ரஞ்சிதம் சொன்னதில் இன்றளவும் எவ்வித மாற்றமும் இல்லை.
மகன் வார்த்தையில் கொஞ்சம் அமைதியாய் இருந்தார் அவ்வளவே. இருந்தும் பைரவிக்காக, சிவா இத்தனை செய்வது எல்லாம் அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை. எப்படியோ இதெல்லாம் சுமுகம் ஆகிவிட்டால், அவளை அனுப்பிவிடுவேன் என்கிறானே. அதற்காகவே சீக்கிரம் எல்லாம் முடியட்டும் என்று அவர் எண்ணியிருக்க, நாளைய திறப்பு விழாவிற்கா பைரவியின் வீடு சிறப்பாய் அலங்காரம் செயப்பாட்டு இருந்தது.
அவளின் அம்மா கிருஷ்ணாவின் ஆளுயர புகைப்படம் கொண்டு வந்து வைத்திருக்க, ஆரம்பநாள் விழாவை தொடங்கி வைக்கவென்று, சென்னையின் மிக பிரபல்யமான சமுக சேவகி ஒருவரையும், இன்றைய இசைத்துறையில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர் ஒருவரையும் அழைத்திருந்தார்கள்.
பைரவிக்கு உறக்கம் என்பதே இல்லை.
என்னவோ ஒருவித படபடப்பு. நாளை தினம் என்பது, நடந்து முடிந்திருந்த பிரச்னைகளுக்கு முடிவு அல்ல. பல மக்களுக்கு வாழ்வை புதிய வகையில் தொடங்கி வைக்கப் போகும் ஆரம்பம். அது நல்லவிதமாய் நடந்தேறிட வேண்டும்.
“ம்மா… எனக்கு பக்கபலமா இருக்க, நல்ல மனுஷங்களை நீங்க எனக்கு அனுப்பியிருக்கீங்க. உங்களோட ஆன்மா இதையெல்லாம் பார்த்துட்டு தான் இருக்கும். எப்பவும் எனக்கு துணையா இருங்கம்மா…” என்று மனதோடு அவளின் அம்மாவிடம் பேச,
ரூப்பாவோ “இன்னும் எத்தனை நேரம் இப்படி நின்னுட்டு இருப்ப பையு…” என்று வந்து நின்றாள்.
“தெரியல ரூப்பா.. மனசு ஒருமாதிரி இருக்கு…” என்று சொல்ல,
“ம்ம் ப்ரீயா விடு.. எல்லாம் நல்லபடியா நடக்கும்.. இங்க பிரச்சனை ஆகும்னு நினைச்சோம். ஆனா பாரு எல்லாரும் அமைதியா இருக்காங்க. ஒரு ஸ்டேஜ்ல ப்ராக்டிகல் சூழ்நிலையை எல்லாம் ஏத்துப்பாங்க பையு…” என்று பேச,
“எஸ் ரூப்ஸ்… ஆனா நாளையோட எல்லாம் முடிஞ்சிடாது. நாளைக்கு நாள் தான் ஆரம்பமே. ட்ரஸ்ட் ஆரம்பிக்கிறது சுலபம். அதை கடைசிவரைக்கும் நல்லவிதமா நடத்தி கொண்டு போகணும். நியாயமா, தேவைகள் இருக்கிறவங்களுக்கு உதவிகள் போய் சேரனும்…” என்று தீவிரமாய் சொல்ல,
அவளது புன்னகை பைரவியையும் தொற்றிக்கொள்ள “சந்தோஷி கல்யாணம் வேற இருக்கு.. அவளுக்கு இன்னும் என்மேல கோபம்…” என்று சொல்ல,
“அது இருக்கட்டும்.. நாளைக்கு சிவா வருவாரா இல்லையா?!“ என்றாள் ரூப்பா.
“ம்ம்…” என்று இழுத்தவள் “இப்போ வரைக்கும் என் கண்ல படல. நிறைய விஷயங்கள் சிவானால தான் இது சாத்தியாமாச்சு. சிவாவை இன்வைட் பண்ணனும்னு நான் தேடிட்டே இருக்கேன் முடியலை…” என்று சொல்ல,
“ரொம்ப பிசியா இருக்கார் போல…” என்றாள் ரூப்பாவும்.
“இருக்கலாம். ஆனா என் கண் முன்னாடி வந்தா, நான் இன்வைட் பண்ணுவேன்னு தெரியும். அதுக்காகவே இந்த சைட் வராமலும் இருக்கலாம்..” என்று சொல்ல
“அதெல்லாம் எனக்கென்ன தெரியும். உனக்குத்தானே புரியும்…” என்று ரூப்பா பேச, சிவாவின் எண்ணமும் அதுவே.
அவள் தன்னை அழைக்கத்தான் பார்த்துக்கொண்டு இருப்பாள் என்பது அவனுக்கு நன்கு தெரியும். பைரவி இங்கே வந்ததில் இருந்து சிவா ஷெட் பக்கம் கூட வருவது இல்லை. மணியையும் சிண்டையும் வைத்தே எல்லாம் பார்த்துக்கொள்கிறான்.
ஏதேனும் முக்கியமான வேலை என்றால் மட்டுமே வருவான். அதுவும் பேச்செல்லாம் ஷர்மாவிடம் தான். இரவு மட்டும் ஷெட்டில் வந்து தங்கிக் கொள்கிறான். எப்போது எழுந்து செல்கிறான் என்பது யாருக்கும் தெரியாது.
அவனுக்கும் பைரவிக்குமான தனிமை பொழுதுகள் எல்லாம் இல்லவே இல்லை. அதற்கான சந்தர்பங்களை எல்லாம் சிவா கொடுக்கவே இல்லை. ஏன் தேவையில்லாமல் பேச்சு பொருளாய் இருக்க வேண்டும் என்று இருக்க, பைரவியோ அவனை அழைக்கவேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்க, நேரம் போனது தான் மிச்சம்.
ரூப்பா மேலும் சில நொடிகள் பேசிவிட்டு, உறங்கச் சென்றுவிட, பைரவிக்கு உறக்கமெல்லாம் பல மைல் தூரம் சென்றுவிட்டது போல. விளக்கை எல்லாம் அமர்தியவள், இரவு விளக்கை மட்டும் எரியவிட்டு, ஒருபக்கம் ஓரமாய் இருந்த திவானில் படுத்து, அவளும் சிவாவும் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
எப்போதும் பைரவி, கதவினை பூட்டிவிட்டு படுப்பவள், இன்றென்னவோ அவனுக்காக காத்திருப்பது போல, கதவினை தாழிடாமல் படுத்திருக்க, சிவா மேலே வீட்டினில் விளக்குகள் அணைத்திருப்பது கண்டு, பைரவி உறங்கி இருப்பாள் என்றெண்ணி, மெல்ல மேலேறி வந்தான்.
அவனிடமும் ஒரு செட் சாவி இருப்பதினால், வீடு பூட்டி இருந்தாலும் திறந்திடலாம் என்று ஒரு தைரியத்தில் வர, வீட்டின் கதவு திறந்திருப்பது கண்டு, நெற்றியை சுறுக்கியவன், யாரேனும் வீடு புகுந்திருக்கிரார்களோ என்று எண்ணியபடி, பார்வையை அந்த இருட்டிலும் கூர்மையாக்கியபடி முன்னேற மெதுவாய் நடந்து வர, வீட்டினுள் அப்படியொரு அமைதி.
‘என்னடா இது?!’ என்று பார்வையை நாளா பக்கமும் கூர்மையாய் செலுத்த, பைரவியின் அலைபேசி திரையில் இருந்து வரும் வெளிச்சம் கண்களுக்குத் தெரிய,
‘இன்னும் தூங்காம என்ன செய்றா இவ?!’ என்று யோசித்து நிற்க, பைரவிக்கு உள்ளுணர்வு சொல்லியதோ என்னவோ, சிவா வந்திருக்கிறான் என்று.
ஆனாலும் சத்தமில்லாமல் அவன் வந்திருக்கமாட்டான் என்பதால், எழுந்தமர்ந்தவள், பக்கத்தில் இருக்கும் ச்விட்சினை போட்டுவிட, சிவா திரும்பிடலாம் என்று நினைக்கும் நேரத்தில், வெளிச்சம் பரவியது.
‘போச்சு டா…’ என்று கண்களை இறுக மூடிக் கொண்டு நின்றவனுக்கு அந்த நொடி நிச்சயமாய் என்ன செய்வது என்று தெரியவில்லை.
எதோ ஒரு உந்துதலில் விளக்கை போட்டவளுக்கு, சிவா நின்றிருப்பது கண்டு வியப்பிலும் வியப்பு. ஒருநொடி குப்பென்று உடல் வியர்த்து, இதயம் வேகமாய் துடித்து, கண்கள் இமைக்க மறந்து, உலர்ந்து போயிருந்த இதழ்கள் ‘சிவா…’ என்று மெதுவாய் உச்சரிக்க,
அவள் அத்தனை மெதுவாய் உச்சரித்தது கூட அவனது செவிகளுக்கு எட்டியது.
பின்னே முதுகு காட்டி நின்றிருந்தாலும், அவனது உணர்வுகள் மொத்தமும் அவளைத்தானே கவனித்துக்கொண்டு இருந்தது.
‘எதுக்கு இப்படி சத்தமில்லாம வரணும்?!’ என்று எண்ணியவள் “சிவா…” என்று சத்தமாகவே அழைக்க,
“ஷ்..!” என்று பல்லைக் கடித்தவன், இயல்பாய் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, முன்னே நடந்து வந்தவன், பைரவி படுத்திருந்த திவானுக்கு பக்கத்தில் இருந்த பீரோவினை திறந்து, உள்ளிருந்த கோப்புகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு, மீண்டும் பூட்டிவிட்டு தான் வந்த வேலை முடிந்தது என்பது போல கிளம்ப,
“சிவா…” என்றாள் சத்தமாய் அழைத்து.
எப்படியும் அவள் அழைப்பாள் என்பது அவனுக்குத் தெரியும் என்பதினால், அழைத்தாலும் நிற்கக் கூடாது என்று முடிவு செய்தே, அவள் அழைப்பையும் சட்டை செய்யாது நடக்க
“நில்லுங்க சிவா…” என்றவள் வேகமாய் வந்து அவனை வழி மறிக்க,
முறைப்பது போல் நின்றவன், என்னவென்பது போல் பார்க்க “ப.. பைல் எடுக்கத்தான் வந்தீங்களா?” என்றாள் குழப்பமாய்.
“ஆமா…” என்று வெற்றுக் குரலில் சொல்ல,
“நான் உங்களோட பேசணும்…” என்றாள் பைரவியும் விடாது.
“எனக்கு வேலை இருக்கு…” என்று நகரப் போக, அவளோ மீண்டும் அவனது வழியை மறைத்தவள்,
“நிக்கணும் நீங்க…” என்று சொல்ல,
“ம்ம்ச்…” என்றான் சலிப்பாக.
“அப்படி என்ன நான் உங்களை செஞ்சிட போறேன்…” என்றவள் “நாளைக்கு நீங்களும் வரணும்…” என்று சொல்ல,
“எனக்கு நாளைக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு பைரவி…” என்றான் இறுகிய குரலில்.
“என்ன வேலையா இருந்தாலும் பரவாயில்லை. நீங்க நாளைக்கு இருக்கணும்…” என்று சொல்ல, அவளை ஆழ்ந்த பார்வை பார்த்தவன்,
“என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பைரவி.. நல்லபடியா செய்.. ஆனா என்னை எதிர்பாக்காத…” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
அவனை தடுக்கவும் இயலவில்லை. அவனது வார்த்தைகளை ஏற்கவும் முடியவில்லை அவளுக்கு.