யாருமிங்கு அனாதையில்லை--1

Advertisement

pon kousalya

Active Member
“யாருமிங்கு அனாதையில்லை!”
(நாவல்)

எழுதியவர் :
பொன்.கௌசல்யா

அத்தியாயம் 1
மதிய நேரம்.

சூரியனின் உஷ்ணக்கதிர்கள் பூமியையும், பூமியில் வாழும் உயிரினங்களையும் உபத்திரவம் செய்து கொண்டிருக்க,

விஸிலடித்தபடியே தனது மோட்டார் பைக்கில் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் திவாகர். முப்பது வயதான திவாகர் கருப்பு சரத்குமார். ஆறடி ஆஜானுபாகு. கடமையுணர்வில் சிங்கம். ஒழுக்கத்தையும், நேர்மையையும் இறுகப் பற்றிக் கொண்டு வாழ்வதினால் எப்போதும் யாருக்கும் பயப்படாத ஒரு போக்கு. லஞ்சப் பேய்க்கு இவர் பிசாசு. ஊழல்வாதிகளுக்கு இவர் பரம வைரி.

அவரது பைக் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பாதையில் சென்று கொண்டிருந்த போதுதான், அவரது கூலிங் கிளாஸ் பார்வையில் அது பட்டது.

தண்டவாளத்தின் மீது ஒரு பெண் தலைவிரி கோலத்துடன் ஓடிக் கொண்டிருந்தாள். சற்று தூரத்தில் ரயில் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

“ஓ..காட்!” என்று அவரையுமறியாமல் வாய் விட்டுச் சொன்னவர், சட்டென்று பைக்கை நிறுத்தி, ஸ்டாண்ட் கூடப் போட அவகாசமில்லாமல், அப்படியே தரையில் தள்ளி விட்டு, தண்டவாளத்தை நோக்கி ஓடினார்.

“அந்தப் பெண்ணைக் காப்பாற்றியே தீர வேண்டும்!” என்கிற கடுமையான கட்டளையை அவரது மூளை உடம்பின் எல்லா அவயங்களுக்கும் தந்து விட, கால்களிரண்டும் சீறிப் பாய்ந்து தண்டவாளத்தில் ஏறிப் பறந்தன. கண்களிரண்டும் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கும் அந்த ரயிலையும், அந்தப் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தன.

கிட்டத்தட்ட அந்தப் பெண்ணை அவர் நெருங்கி விட்ட நேரத்தில், தன்னை யாரோ துரத்தி வருவதை உணர்ந்த அப்பெண், திரும்பி இவரைப் பார்த்து விட்டு, தன் வேகத்தைக் கூட்டினாள்.

“ஏய்...ஏய் பெண்ணே!...நில்லும்மா!...நில்லும்மா!” தொண்டை கிழியக் கத்திக் கொண்டே ஓடினார்.

“எனக்கு யாரைப் பற்றியும் கவலையே இல்லை!...என்னோட வழில குறுக்கே வந்தால்...நான் பாட்டுக்கு இடிச்சுத் தள்ளிட்டுப் போய்க்கிட்டேயிருப்பேன்!” என்கிற பாணியில் அந்த ரெயில் “கூ....ஊஊஊஊ” என்று கூவியபடியே வந்து கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் வெகு நம்பிக்கையுடன் களமிறங்கிய இன்ஸ்பெக்டர் திவாகர் கொஞ்சம் கொஞ்சமாய் நம்பிக்கையை இழந்து கொண்டிருந்தார், “ம்ஹூம்!...ரெயில் ரொம்பப் பக்கத்துல வந்திடுச்சு!,,,இனியும் இப்படி ஓடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்!...இவளைக் காப்பாத்தப் போய் நம் உயிர் போய்விடும்!”

அப்போது அவர் மூளைக்குள்ளிருந்து குரல் ஒலித்தது, “அடேய் முட்டாள்!...வாழ்க்கைல பத்து சதவீத நடவடிக்கைகள் மட்டும்தான் நம்மோட கட்டுப்பாட்டிற்குள் இல்லை!...மீதி தொண்ணூறு சதவீத நடவடிக்கைகள் நம்மோட கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றன!...இது அந்த தொண்ணூறு சதவீதத்துல ஒண்ணு!...அதாவது இது உன்னோட கட்டுப்பாட்டுல இருக்கற விஷயம்தான்!..அதனால ஓடு...ஓடு...நல்லா வேகமா ஓடு..!”

கல்லூரிக் காலங்களில், ஓட்டப் பந்தயங்களில் ஓடும் போது வெற்றிக் கோட்டை நெருங்குகையில், அது வரை ஓடி வந்த வேகத்தை விட இன்னும் அதிக வேகமாய் ஓடி...வெற்றிக் கோட்டைத் தொடுவர்களே?...அது போல் அப்பெண்ணை வெற்றிக் கோடாக எண்ணித் தன் வேகத்தைக் கூட்டினார் இன்ஸ்பெக்டர் திவாகர்.

இதோ...இதோ...நெருங்கி விட்டார்.

அவர் நெருங்கி விட்டதை அறிந்த அப்பெண், தானும் தன் வேகத்தைக் கூட்டிக் கொண்டு ஓட, ஒரே தாவலில் அவள் இரு தோள்களையும் தொட்டு, அதே வேகத்தில் அவளைத் தண்டவாளத்திற்கு வெளியே தள்ளி, கூடவே தானும் வெளியே விழுந்தார்.

விழுந்தவர்கள் இருவரும் ரயில்வே டிராக்கிற்கு பக்கவாட்டில் இருந்த சரிவில் உருண்டு, சமதளத்தில் கிடந்தனர்.

“விர்ர்ர்ர்”ரென்று வெறிப் பாய்ச்சலில் கடந்து சென்றது அந்த எக்ஸ்பிரஸ் ரெயில்.

அதன் வேகப் பாய்ச்சலில் பூமியே அதிர்ந்தது.

சூழ்நிலை புரியாமல் சில பெட்டிகளிலிருந்து சில கைகள் விழுந்து கிடக்கும் அவர்களிருவருக்கும் “டாடா” சொல்லிச் சென்றன.

கடைசிப் பெட்டியும் கடந்தவுடன், முதலில் இன்ஸ்பெக்டர் திவாகர்தான் எழுந்தார். எழுந்தவர் தன் பேண்ட் சட்டையில் ஒட்டியிருந்த முட்களையும், புற்களையும் அகற்றி விட்டு, லேசாய் அடிபட்டிருந்த முழங்காலை ஆராய்ந்தார்.

அப்போது மெல்ல முனகியபடி எழுந்த அப்பெண், தரையில் அமர்ந்தபடியே இன்ஸ்பெக்டர் திவாகரை எரித்து விடுபவள் போல் பார்த்தாள்.

அவளுடைய அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், “என்னம்மா...இப்படி முறைக்கறே?..நீ முறைக்கறதைப் பார்த்தா என்னமோ நான் செய்யக் கூடாததைச் செஞ்சிட்ட மாதிரியல்ல இருக்கு!...உன்னோட உசுரைத்தானே காப்பாற்றினேன்?...அது தப்பா என்னா?” என்று கேட்க,
“கண்டிப்பாத் தப்புத்தான்!...எதுக்காக என்னைக் காப்பாத்தினீங்க?...நீங்க யாரு என் உயிரைக் காப்பாத்த?...உங்களுக்கென்ன தெரியும் என்னோட வாழ்க்கைக் கதையைப் பத்தி?...ஹூம்...உங்களுக்கு ஹீரோயிஸம் காட்டணும்னு ஆசையிருந்தா போங்க...போயி ஏதாவது மாடி மேல ஏறிக் கீழே குதிங்க!...இல்லை உயரமான கட்டிடத்தின் மீது ஏறிக் குதிங்க!...அதை விட்டுட்டு வந்திட்டாரு காப்பாத்த!..ச்சை...சந்தோஷமா சாகக்கூட வழியில்லை இந்த உலகத்துல?” கடு..கடு...வெனப் பேசினாள்.

“த பாரும்மா!...நீ யாரு?...உன் பேரென்ன?...ஊரென்ன?...தற்கொலை செஞ்சுக்கற அளவுக்கு உனக்கு என்ன பிரச்சனை?...என் கிட்ட சொல்லு என்னால முடிஞ்ச உதவியைச் செய்யறேன்!” அவள் மனதில் தன்னைப் பற்றி ஒரு நம்பகத்தன்மை உண்டாக வேண்டும் என்கிற எண்ணத்தில் மிகவும் பவ்யமாகக் கேட்டார்.

“அய்யா...சாமி!...நீங்க எனக்கு உண்மையிலேயே உதவணும்னு நெனச்சா....என்னைய நிமதியாச் சாக விடுங்கள்!..அது போதும் எனக்கு!”

“ஹா...ஹா...ஹா..!...”என்று வாய் விட்டுச் சிரித்த இன்ஸ்பெக்டர், “ஹலோ...மேடம்...நீங்க பேசிட்டிருக்கறது ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட....அதனால...கொஞ்சம் பார்த்துப் பேசுங்க!...ஏன்னா...சட்டப்படி தற்கொலை முயற்சியே குற்றம்!...நான் நெனச்சா இப்பக் கூட உங்களை அரெஸ்ட் பண்ணலாம்!...பட்...பண்ண மாட்டேன்!..ஏன்னா...அதுதான் மனிதாபிமானம்!...அது இருந்ததினாலதான் உங்ககிட்ட...உங்க பிரச்சனை என்ன?ன்னு கேட்டேன்!”

“என்னது அரெஸ்ட் பண்ணுவீங்களா?...என்னையா?...ஹூம்...ஏற்கனவே ஒரு தடவை சந்தேகத்தின் பேரில் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்ததினாலதான் நான் இப்ப இந்தத் தண்டவாளத்துல் சாவைத் தேடி ஓடிட்டிருக்கேன்!...இதுல அரெஸ்ட் வேறயா?”

“விருட்”டென்று தலையைத் தூக்கிப் பார்த்த இன்ஸ்பெக்டர் திவாகர், “என்னம்மா?...என்ன சொல்றே?...கொஞ்சம் விவரமாச் சொல்லு!” என்றார்.

“நான் தற்கொலை முயற்சில ஈடுபடக் காரணமே உங்க போலீஸ்காரங்கதான்!”ன்னு சொல்றேன்!”

காவல்துறை உத்தியோகத்தின் மீது மாளாக் காதல் கொண்டு, சிறு வயது முதற் கொண்டே அதற்காக முயற்சி செய்து, இன்று ஒரு இன்ஸ்பெக்டர் லெவலுக்கு உயர்ந்திருக்கும் திவாகரால், தன் டிபார்ட்மெண்ட் மீது அந்தப் பெண் குற்றம் சுமத்தியதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“த பாரும்மா!...சும்மா பொத்தாம் பொதுவா மொத்த டிபார்ட்மெண்ட்டையும் குற்றம் சொல்லாதே!...உனக்கு எங்கே...என்ன நேர்ந்தது?...அதைச் சொல்லு!” தன் கோபத்தை தன் வார்த்தைகளில் காட்டினார் திவாகர்.

அவரது கோபத்தைக் கண்டு லேசாய் அஞ்சிய அப்பெண் பதிலேதும் பேசாது நிற்க,

“சரி...வாம்மா...மொதல்ல இந்தப் பள்ளத்திலிருந்து வெளியேறி, என் பைக்கிற்குப் போவோம்!...அங்க போயி மத்ததைப் பேசிக்குவோம்!”

சொல்லி வீட்டு இன்ஸ்பெக்டர் திவாகர் முன் நடக்க, அவருடன் செல்ல இஷ்டமில்லாதவளாய் அவள் அங்கேயே அப்படியே நின்றாள்.

திரும்பிப் பார்த்து, “என்னம்மா...வரலையா?” என்று அவர் கேட்க,

“நான் எதுக்கு உங்க கூட வரணும்?” கேட்டு விட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் அவள்.

கடுப்பாகிப் போன இன்ஸ்பெக்டர், “ம்ஹூம்!...நியாயமா சொன்னா நீ கேட்க மாட்டே...என்னோட போலீஸ் வேலைய நான் காட்ட வேண்டியதுதான்!” என்று முணுமுணுத்தபடி தன் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து ஏதோ எண்ணை அழுத்தினார் திவாகர்.

நெற்றியைச் சுருக்கியபடி அதைப் பார்த்தவள் சன்னக் குரலில் கேட்டாள், “என்ன..என்ன பண்ணப் போறீங்க?”. கேட்கும் போதே அவள் முகம் பயத்தில் வெளிறிப் போயிருந்தது.

“ஒண்ணுமில்லை...பக்கத்து ஸ்டேஷனுக்குப் போன் பண்ணி...இங்க தண்டவாளத்துல ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கறதுக்காக முயற்சி பண்ணிட்டிருக்கு...வந்து அரெஸ்ட் பண்ணி...அள்ளிட்டுப் போங்க!..ன்னு சொல்லப் போறேன்!...அவ்வளவுதான்!”

இன்னொரு முறை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைய விருப்பமில்லாத அவள், ஓடி வந்து இன்ஸ்பெக்டரின் கால்களைப் பற்றிக் கொண்டு, “அய்யோ!...வேண்டாம்...வேண்டாம்!...என்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மட்டும் அனுப்பிடாதீங்க!” என்று கெஞ்சினாள்.

“அப்பப் பேசாம என் கூட வ!”

அவள் பார்வையில் ஒரு நம்பிக்கையின்மை தெரிய,

குறுஞ்சிரிப்பு சிரித்த திவாகர், “அம்மா...நீ யாரு?...எவரு?...ன்னே எனக்குத் தெரியாது!...நான் பாட்டுக்கு என் வழில போய்க்கிட்டிருந்தேன்!...நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டிருந்ததைப் பார்த்தேன்...காப்பாத்தினேன்!...அவ்வளவுதான்!...உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தா என் கூட வா!...இல்லேன்னா...போலீஸ் ஸ்டேஷனுக்குப் போ..!...இந்த ரெண்டுல ஒண்ணுதான் நடக்கணும்!..ஏன்னா....உன்னைய இங்கியே..இப்படியே விட்டுட்டுப் போனா...நீ அடுத்து வர்ற ரெயிலுக்குள்ளார பாய்ஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்!...ஸோ...சீக்கிரம் ஏதோ ஒண்ணை முடிவு பண்ணு!” சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் திவாகர், வேக வேகமாக மேட்டின் மீதேறி, தண்டவாளத்தைத் தாண்டி, சற்றுத் தொலைவில், தரையில் கிடக்கும் தன் பைக்கை நோக்கி “விடு...விடு”வென்று நடக்கலானார்.

அவர் தன் பைக்கை நெருங்கி, அதைத் தூக்கி நிறுத்திய போது, அப்பெண் அவரருகே நின்றிருந்தாள்.

மெல்ல முறுவலித்தவர், “என்னம்மா...நம்பிக்கை வந்திடுச்சா?” கேட்டார்.

அவள் “ஆம்”என்று தலையை ஆட்ட,
பைக்கை ஸ்டார்ட் செய்து, அவளை அமரச் சொன்னார்.

இதற்கு முன், இது போல் இரு சக்கர வாகனங்களில் பயணித்துப் பழக்கமேயில்லாத அவள், தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்தாள்.

அவளின் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட திவாகர், நிதானமாக வண்டியைக் கிளப்பி, மிதமான வேகத்தில் செலுத்தினார்.

சிறிது தூரம் சென்றதும் கேட்டார், “உன் பேர் என்னன்னு சொல்லவே இல்லையே?”

“ஜோதி!” என்றாள்.

(தொடரும்…)​
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "யாருமிங்கு
அனாதையில்லை"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
Dr.பொன் கௌசல்யா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
வாழ்த்துக்கள் சிஸ்..... அருமையான தொடக்கம்....போலீசார் மீதி ஏற்பட்ட அதிருப்தியால் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காவல்துறையை சேர்ந்த காவலரே காப்பாறுகிறார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top