சத்ரிய வேந்தன் – 29 – திருமண ஏற்பாடுகள்
உன் மதிமுகம் பார்த்தால்,
எனது இமைகள்
வேலைநிறுத்தம் செய்வதன்
காரணம் அறிவாயோ?
ரூபனரின் விழிகள் சமுத்திராவை எதிர்நோக்கி காத்திருந்தது. அவரின் மனம் தீட்சண்யரும் அவரது தாயாரும் பேசிக் கொண்டிருப்பதையே கவனித்துக் கொண்டிருந்தது.
‘ஏன் இன்று விரைவாக வந்துவிட்டாள்? வழக்கத்தை விடவும் அமைதியாகவும், பொலிவாகவும் இருப்பதற்கான காரணம் என்ன? கடந்த சில நாட்களாக முகமலர்ச்சி குறைவாக இருப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? அவளுக்கு என்ன கவலை? ஏன் இந்த பணிகளை எல்லாம் செய்கிறாள், வீணாக அனைத்தையும் செய்து தேவையற்ற கவலைகள் வேறு’ ரூபனரின் மனம் அவளுக்காக வருந்தியது.
அவளுடைய வருத்தமே ரூபனரை காண முடியாத ஏக்கம் என்று புரியாமல், அவள் ஏதோ தமது பணிகளினால் கவலையாக இருக்கிறாள் போலும் என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார் ரூபன சத்ரியர்.
அவருடைய எண்ணத்தின் நாயகியே அவர்கள் இருந்த அறைக்கு வந்தாள். அவள் மீது நிலைக்கவிட்ட விழிகளை இமைக்க கூட சிரமமாக இருந்தது ரூபனருக்கு. சமுத்திரா பேரழகி, அதிலும் இன்று மருத இளவரசிக்கே உரித்தான அலங்காரத்தில் இருந்தாள்.
ரூபனர் முதன்முறை பார்த்த பொழுது, குளிப்பதற்காக நகைகளை களைந்து, சாதாரணமான ஆடையில் இருந்தாள். அடுத்த தினம் தீட்சண்யரோடு புறப்படும் தருணமும் சாதாரணமான அலங்காரம் தான். இன்று காலையில் கரடுமலையில் சந்தித்த பொழுதும் சாதாரணமான குடிமகள் போன்ற அலங்காரம் தான்.
முதன்முறை இப்பொழுதுதான் இத்தனை அலங்காரத்தில் பார்க்கிறார். தாமரை வண்ணத்தில் அதிக ஜரிகைகள் நிறைந்த பட்டாடையும், பச்சை நிறத்தில் முழுவதும் ஜரிகையினால் ஆன மேலாடையும், அழகான அணிகலன்களும், மிதமான ஒப்பனையும் அவளை பேரழகியாக காட்டியது.
ரூபனர்தான் அவளை இமைக்க மறந்து பார்த்திருந்தார். ஆனால், சமுத்திரா மறந்தும் ரூபனரின் புறம் திரும்பவே இல்லை.
அத்தனை நேரமும் அவளது திராட்சை விழிகளையும், கூரான நாசியையும், மென்மையான சிவந்த அதரங்களையும், பால் வண்ண கண்ணங்களையும் ரசித்துக் கொண்டிருந்தவர், அவள் தன்னை பாராததை அப்பொழுதுதான் உணர்ந்து, மனம் வாடிய பிறகே சுயநினைவு பெற்று, தாம் இருக்கும் இடத்தை நினைவு கூர்ந்தார்.
அவசரமாக தமது பார்வையை சுழல விட்டவர், தீட்சண்யரும் அவரது தாயார் லலிதாம்பிகை அம்மையாரும் சமுத்திராவிடம் கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதால், தன்புறம் திரும்பாததை நிம்மதியாக உணர்ந்தார்.
தன்னையே கடிந்து கொண்டவர், அவர்களது உரையாடல்களை கவனிக்கலானார்.
“என்ன சமுத்திரா வழக்கத்தை விடவும் உன்னிடம் நிறைய மாறுதல், என்னவென்று கூறினால்தானே ஆகும்”
“ஒன்றும் இல்லை அண்ணா. ஏன் இத்தனை தூரம் கேட்கிறீர்கள்?”
“உன் பொறுப்பினில் சில துறைகளை ஒப்படைத்துவிட்டதால், அதனை முழுவதும் நீயே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. எங்களிடமும் ஆலோசனை பெறலாம். என்னவென்று கூறு சமுத்திரா?”
“அண்ணா நீங்கள் எண்ணுவதைப் போன்று பெரிதாக எதுவும் இல்லை. தீர்க்க முடியாத பிரச்சனைகள் எதுவும் இல்லை. என்ன உதவி வேண்டுமானாலும் உங்களிடம் கேட்பேன். என்னை நம்புங்கள்” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறும் ரகம் இல்லை சமுத்திரா. ஆகையால்தான் தீட்சண்யர் திரும்ப திரும்ப சமுத்திராவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சமுத்திராவிற்கு ரூபனரைப் பார்த்துவிட்ட மகிழ்ச்சி ஒருபுறம் என்றாலும், இரகசிய வைத்தியசாலையில் தம்மால் தாமரை என பெயர் சூட்டப்பட்ட பெண்ணினைப் பற்றிய கவலை மறுபுறம். ஆனால், தாமரையைப் பற்றி யாரிடமும் ஆலோசனையைப் பெற அவளுக்கு விருப்பம் இல்லை. ஏற்கனவே தந்தையாருக்கும், தமையன் தீட்சண்யருக்கும் இரகசிய வைத்தியசாலையில் ஒரு பெண் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதை தெரிவித்திருந்தாள். அதுபோக வேறு எதையும் தெரிவிக்கவில்லை.
இன்று விரைவாக அரண்மனைக்கு திரும்பியது ரூபன சத்ரியரைக் காண்பதற்காகத்தான். சந்திர நாட்டின் நிலவரத்திற்கு, அவர் விரைவில் நாடு திரும்பி விடுவார் என்பதை ஊகித்திருந்தாள். ஆகையால் அவர் செல்லும் வரையிலும் இயன்றவரை நேரம் அமையும் பொழுதெல்லாம் அவர் அருகில் நேரத்தைக் கழிக்கலாம் என்று எண்ணியிருந்தாள்.
தன்னைக் கண்டதும் நேசப் பார்வை வீசும் தன்னவனை எண்ணி அகம் மகிழ்ந்தாள். இருப்பினும், சிறு குறிப்பைக் கூட அண்ணன் அறிந்து விடுவார் என்பதால், ‘இவர் ஏன் இப்படி பார்க்கிறார்?’ என மனம் ஒருபுறம் பதறத்தான் செய்தது.
ஏனோ இதுவரை எதற்கும் தயங்கியதாய் நினைவில் இல்லை. ரூபனரின் பார்வை வீச்சினால் அவர் முன் அமர முடியாமல் முதன்முறை தயக்கம் சூழ்ந்தது. தாயாரும், தமையனும் எதை எதையோ கேட்க, தயக்கத்திலும், வெட்கத்திலும் வார்த்தைகள் வெளிவர பெரும் பாடாய் இருந்தது.
இவளிடம் கேட்பதே வீண் என்பது போல, எல்லோரும் உணவருந்த அமர்ந்தனர். தீட்சண்யரின் திருமணம் குறித்தும், சந்திர நாட்டின் நிலவரம் பற்றியும் பேசியபடி உணவருந்திக் கொண்டிருந்தனர். சமுத்திரா உரையாடல்களில் கலந்து கொள்ளவில்லை, ஆனால், அவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டபடியே உணவருந்திக் கொண்டிருந்தாள்.
“அம்மா இன்று என்ன கிழமை?” என்று தீட்சண்யர் கேட்க,
“ஏன் தீட்சண்யா? நாட்டின் யுவராஜர் நீ. உனக்கு கிழமை கூட தெரியவில்லையா” என்றார் தீட்சண்யரை தீர்க்கமாக பார்த்து.
“அம்மா கூறுங்களேன்” என்றான் சற்று கேலிக்குரலில்.
“செவ்வாய் கிழமை போதுமா”
“ஏதேனும் விசேஷ தினமா?”
‘என்னவாயிற்று இவனுக்கு’ என மனதிற்குள் எண்ணியவர், “அவ்வாறெல்லாம் இல்லை தீட்சண்யா” என்றார்.
“ஏனம்மா மௌன விரதம் இருப்பது போல, குறைவாக பேசுவதற்கும் ஏதேனும் விரதம் இருக்கிறதா?”
“எதையும் புரியும்படி பேச மாட்டாயா தீட்சண்யா?” என கடிந்து கொண்டார் லலிதாம்பிகை தேவியார்.
ஆனால் இவர்கள் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சமுத்திராவிற்கு தெளிவாக புரிந்துவிட்டது, அவள் அமைதியாக இருப்பதினால் அண்ணன் கேலி செய்கிறார் என்று.
இத்தனை நேரம் இருந்த கூச்சம் ஓடி விலக, “ஆம் அண்ணா அது போல ஒரு விரதம் இருக்கிறது. அந்த விரதம் மேற்கொண்டால், மனம் விரும்புபவரையே மணக்கலாம் என்று வேங்கை நாடு சென்றபொழுது இளவரசி தோகையினி கூறினார்” என்றாள் கேலியாக.
கேலிகளுக்கெல்லாம் தீட்சண்யர் வளைந்து கொடுப்பாரா. “அது வேறு இருக்கிறதா சமுத்திரா. ஆனால், உன் கண்ணசைவு போதும் நீ விரும்பியதை நிறைவேற்ற உன் தமையன் இருக்கிறேன்” என்றார் தீட்சண்யர் மீண்டும் கேலிக்குரலில்.
வெக்கத்தில் முகம் சிவக்க, அதை மறைக்க பெரும் பாடாக இருந்தது சமுத்திராவிற்கு.
பிறகு நால்வரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். ரூபனரும் சமுத்திராவும் நேரடியாக பேசிக்கொள்ளாவிட்டாலும், பார்வை பரிமாற்றங்கள் நடந்து கொண்டேதான் இருந்தது.
** மாலையில் தீட்சண்யருடன் ரூபனர் மருத கோட்டையில் இருந்த சிவன் ஆலயத்திற்கு சென்றனர்.
“ரூபனா நீ வைகாசி திருவிழாவைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாய் அல்லவா?”
“என்ன தீட்சண்யா நான் வாழ்ந்த குறிஞ்சி நகரமும் மருத தேசத்தின் கீழ் தான் இருந்தது. வைகாசி திருவிழாவைப் பற்றி தெரியாமல் இருக்குமா? என்ன இதுவரை வந்ததுதான் இல்லை”
“இந்த முறை கண்டிப்பாக நீ வர வேண்டும்”
“உறுதியாக கூற முடியாது நண்பா. ஆனால், கண்டிப்பாக ஒரு முறை வருவேன்.”
“ஒரு முறையா. நீ எல்லா திருவிழாவிற்கும் வருகை தரப் போகிறாய். உன் வருங்காலம் அத்தனை சிறப்பாக அமையும் நண்பா” என்றார் கேலியாக.
‘தீட்சண்யர் பேசுவதில் உள் அர்த்தம் இருப்பது போலவே ஏன் தோன்றுகிறது?’ என எண்ணிய ரூபனருக்கு, தீட்சண்யர் அவரிடமும், சமுத்திராவிடமும் உள்ளர்த்தத்தோடு தான் பேசுகிறார் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
தீட்சண்யர் தமது பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, “உன் வாக்கு பலிக்கட்டும் தீட்சண்யா” என்றார் மென்னகையுடன்.
அதன்பிறகு தீட்சண்யர் வில்வித்தை நிகழ்ச்சியையும், அந்த நிகழ்ச்சியின் போது இந்த கோயில் கோபுரத்தில் மாலை எய்துவது பற்றியும், மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும் சிறிது கூறிக்கொண்டிருந்தார்.
அதனை மிகவும் ரசித்த ரூபனர் அந்த பேச்சு முடிந்தவுடன், சிவாலயத்தை சுற்றிப் பார்த்தபடியே, “சரி தீட்சண்யா இந்த ஆலயத்தில் தானே உன் திருமணம்?” என தீட்சண்யரிடம் கேட்டார்.
“ஆம் ரூபனா ஏன் கேட்கிறாய்?”
“தீட்சண்யா நான் திருமண ஏற்பாடுகளில் மலர் அலங்காரத்திற்கு குறிஞ்சி நகரில் இருக்கும் ஆட்களிடம் கூறியிருக்கிறேன். அங்கே விதவிதமான மலர்களை வளர்க்கின்றனர். ஜீவசுடர் நதியின் பாக்கியத்தால், அங்கு அனைத்து வகையான செடிகளும் செழிப்பாக வளரும். ஆகையால் மலர்களும் செழிப்புடன் இருக்கும். இதில் உனக்கு சம்மதம் தானே?”
தீட்சண்யர் ரூபனரின் செய்கையில் சிறிதாய் அதிர்ந்தார், அதன்பிறகு ரூபனரிடம், “உண்மையைக் கூறு ரூபனா, நீ இங்கு இரண்டு தினங்கள் தங்கப்போவது திருமண ஏற்பாடுகளுக்காகத் தானே?”
“அதில் உனக்கென்ன சந்தேகம் தீட்சண்யா? அன்று நான் வாய் வார்த்தையாக கூறினேன் என்று நினைத்தாயோ?”
“அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை ரூபனா. உனக்கு உன் நாட்டில் ஏற்கனவே பணிகள் அதிகம். இதில் இதையும் இழுத்துக் கொள்வானேன்?”
“எனக்கு எந்த சிரமமும் இல்லை தீட்சண்யா. இன்னும் கூறப்போனால், உனக்காக செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மட்டுமே. உன்னுடைய நண்பர்கள் வட்டாரம் பெரிதாக இருக்கலாம். ஏனோ எனக்கு அப்படி யாரும் நெருங்கிய நண்பர்கள் கிடைத்ததில்லை. கிடைத்த உனக்கு செய்வதை நான் பாக்கியமாக கருதுகிறேன்.”
“உன் விருப்பம் ரூபனா.”
“நான் மேள தாளங்கள் முதல், மலர் அலங்காரங்கள் வரை சுற்று வட்டாரத்தில் சிறப்பானவற்றை தேர்வு செய்திருக்கிறேன். இந்த திருமண ஏற்பாடுகளை கவனிப்பவர்கள் யார் என்று கூறினாயானால், நான் பார்த்த ஆட்களை வந்து சந்திக்கும்படி கூறிவிடுகிறேன். உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருப்பவற்றை உங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளுங்கள்.
ஏனென்றால் இது மருத யுவராஜரின் திருமண வைபவம். இதில் எந்த குறையும் வரக்கூடாது” என்று கூறிய நண்பனை இறுக அனைத்துக் கொண்டார் தீட்சண்யர்.
“நண்பா உனக்கு எத்தனை வேலைகள் இருக்கும் என்பதை அறிவேன். அதனோடு எனக்காகவும் நேரம் ஒதுக்கி இருக்கிறாய். உன்னைப் போன்ற நண்பனைப் பெற்றதே பெரும் பாக்கியம்” என உள்ளம் மகிழ்ந்தார் தீட்சண்யர்.
** சந்திரன் வான வீதியில் உலாவிக் கொண்டிருந்தது. இரவு உணவினை முடித்துவிட்டு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் ரூபனர். செவ்வாய் கிழமை மருத தேசம் வந்ததிலிருந்து தொடர்ந்து இரண்டு தினங்களும் திருமண ஏற்பாடுகளை கவனித்த வண்ணமே இருந்தார். இரவு உணவருந்தும் பொழுது சமுத்திராவைக் காண்பதோடு சரி. அவளிடம் தனிமையில் பேசும் வாய்ப்பு அமையவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அதற்கான முயற்சியை ரூபனர் எடுக்கவும் இல்லை.
நாளை வெள்ளிக்கிழமை, அதிகாலையில் சந்திர நாடு நோக்கி பிரயாணம் செய்ய தீர்மானித்திருந்தார். இன்றும் சமுத்திராவைக் கண்டு பேசாமல் சென்றால், இனி திருமணத்திற்குத்தான் வருகை தர முடியும் என எண்ணி பெருமூச்சினை விட்டார்.
‘எப்படி சமுத்திராவை சந்திப்பது?’ என்ற யோசனையில் உழன்றவருக்கு, தூக்கம் தூர போனது. அந்த அறையில் இருக்கவே பிடிக்காமல் தோட்டத்திற்கு வந்து அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருந்தார்.
திடீரென கொலுசொலி கேட்கவும், அது பிரம்மையோ என்றுதான் தோன்றியது. கொலுசொலி நெருங்கவும் ஆர்வமாக திரும்பி பார்த்தார். வழக்கம் போல முகத்தினை மூடியபடி சாதாரணமான உடையில் சமுத்திரா வந்து கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டதுமே அகம் மகிழ்ந்து போனவருக்கு, தன் கை வளைவில் அவளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனம் விரும்பியது. அவருடைய பரவசம் அவர் முகத்திலும் தெரிய, அதற்கு நேர் எதிராய் சமுத்திராவின் முகம் கோபத்தில் ஜொலித்தது.
“என்ன சமுத்திரா இந்த பக்கம்?” என கேட்டு அவள் கோபத்தை மேலும் தூண்டி விட்டார் சந்திர நாட்டின் வேந்தர் ரூபன சத்ரியர்.
அவள் பதில் பேசாது முறைத்தபடி நிற்கவும், “இல்லை இரவு நெருங்கி விட்டது. அதனால் கேட்டேன்” என்று கூற, எதுவும் பதில் கூறாமல் திரும்பி நடக்க தொடங்கிவிட்டாள்.
வேகமாக அவளுக்கு முன் சென்றவன், “ஏன் என்னவாயிற்று? எதுவுமே பேசாமல் செல்கிறாய்? காற்று வாங்க நடந்து வந்தாயோ? நான் இருப்பது இடையூறாக இருக்கிறதா?” என்று கேட்கவும்,
‘இவரை என்ன செய்தால் தகும்’ என்று பார்த்தாள் சமுத்திரா. அவள் முகத்தினை மூடியபடி இருப்பதால், ரூபனரால் அவளின் கோபத்தை கவனிக்க இயலவில்லை.
ஆனால், அவள் வந்ததின் காரணமும் அறிவார். இப்பொழுது கோபமாகத்தான் இருக்கிறாள் என்றும் மனதால் உணர்ந்தார்.
அவளின் பார்வையில் தெரிந்த கோபத்தினைப் பார்த்தவர், மெல்ல அருகினில் வந்து அவளுடைய முகத்திரையை விளக்கினார். அதனை தடுக்க முயன்றவளின் முயற்சிகளை முறியடித்தார்.
அவள் முகத்தினை கைகளால் ஏந்தியவர், “இந்த முகத்தினைக் காணும் உரிமை இருக்கிறதல்லவா?” என மென்குரலில் கேட்கவும், ரூபனரின் அருகாமையில் எந்த பதிலும் கூற இயலவில்லை. சமுத்திராவின் இதழ்கள் பிரிய மறுக்க, அவள் உடலில் மெல்லிய நடுக்கம்.
அதை உணர்ந்த ரூபனரும் அவளை மேலும் சீண்டாமல் அவளை விட்டு விலகி, அவளுடைய பதிலுக்காக காத்திருந்தார்.
தமது நடுக்கத்தையும், தடுமாற்றத்தையும் முயன்று ஒதுக்கி, “ஆமாம் ஆமாம் உரிமை கொட்டி கிடக்கிறது. என்னவோ என்னைக் காண வந்தவர் போல கேட்கிறீர்கள்? உங்கள் நண்பரின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க தானே வந்தீர்கள்” என்றாள் கோபமாக.
“திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை நான் சந்திர நாட்டில் இருந்த வண்ணமே முடித்து விட்டேன். தீட்சண்யரிடம் கூற வேண்டும் என்றால், ஒரு ஓலை போதும். இங்கு வரவேண்டிய அவசியமே இல்லை. நான் வந்தது உன்னைக் காணாமல் இருக்க முடியவில்லை என்பதால் மட்டும்தான் தேவி.”
“நீங்கள் கூறுவது நம்பும்படியாகவா இருக்கிறது. நாளை சந்திர நாடு திரும்புகிறீர்கள், இன்றுவரை என்னை காண வேண்டும் என்றோ, என்னிடம் பேச வேண்டும் என்றோ முயற்சிக்கவில்லை” என்றாள் தனது முகத்திற்கு மீண்டும் திரையிட்டபடி.
“இதற்காகத்தான் வரவில்லை” என அவள் முகத்தை மூடியிருப்பதை சுட்டிக்காட்டி, “உன்னை யாரேனும் தவறாக எண்ணிவிட்டால்? இப்பொழுது கூட, யார் பார்த்து விடுவார்களோ என உன் முகத்தை மறைக்கிறாய் அல்லவா? அதற்காகத்தான்.
அதோடு உன்னை பலர் முன்னிலையில் பார்க்கும் பொழுதே என்னால் விழிகளை அசைக்க முடியவில்லை. உன்னை என்னுடனேயே அழைத்து செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. இதில் இப்படி தனிமையிலும் சந்தித்தால், என் எல்லைகளை என்னால் வரையறுக்க இயலும் என்று தோன்றவில்லை” என்றார் பெருமூச்சுடன்.
‘இவர் இப்படி பேசினால், என் கோபம் கற்பூரமாய் கரைந்து விடுமே’ என எண்ணியவள், “திருமணத்திற்கு இரண்டு தினங்கள் முன்பே வந்துவிடுங்கள்” என்று மட்டும் கூறிவிட்டு பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.
“சமுத்திரா…” என்றவரின் குரலை அசட்டை செய்துவிட்டு சமுத்திரா வேகமாக செல்ல, அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்த்துக் கொண்டிருந்தார் ரூபன சத்ரியர்.