சாத்வியின்    இந்த நிலைக்கு தானும் ஓர் காரணமல்லவா..என மனம் ரணம் கொள்ள…  சாத்வியிடம் சாதாரணமாக பேசமுடியாமலும்,  அவளை சமாதானம் செய்ய முடியாமலும் ,இப்படி எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கும் இவளை எப்படி கையாள எனத் தெரியாமல் திண்டாடிப் போனான் சத்ரி..

உடைகள் நகைகள் வாங்கிய அன்றே திருமண வேலைகள காரணம் காட்டி மஹாவை இழுத்துச் சென்றுவிட்டார் சங்கரன்.. சாத்வியை நீங்கள் அழைத்து வாருங்கள் என…

திருமணம் அவர்களது சொந்த கிராமத்திலேயே வைக்கப்பட்டு இருக்க, திருமணத்திற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் வேளையில் சத்ரியின் குடும்பத்தினர் கிளம்புவதாய் இருக்க…

சிவஹாமி தான் சாத்வியை அழைத்து வர சொன்னார்…

சத்ரியும் சென்று சாத்வியை தங்களுடன் அழைத்துவர கிளம்பினான்…

அங்கே சென்று காரணம் கூறி சாத்வியை அழைக்க…

“கல்யாணத்திற்கு முதல் நாள் வந்திடுவேன்….சத்ரி மற்றதை நீ பார்த்துக்கோ” என அசால்ட்டாய் சாத்வி கூற…

“என்ன விளையாடுறியா…  எல்லாரும் இன்னைக்கு தான் கிளம்புறோம்…. நீ கல்யாணத்திற்கு முந்தின நாள் வருவன்னா என்ன அர்த்தம்“ என கோபமாய் கேட்க…

“ஊரில் இருக்குறவங்க என்ன நினைப்பாங்களோன்னு உனக்கும் பயமா?”ஆத்திரத்தில் அவளும் கத்த….

“ஊர்காரனுங்களுக்கு நான் ஏன் பயப்படனும்…  உங்கப்பனை நினைச்சா தான் பயமா இருக்கு…  அந்தாளுக்கிட்ட என்னால் திட்டு வாங்க முடியாது…. கேள்வி கேட்டு கேட்டே என் உயிரை எடுத்துடுவார்… நீ முதலில் கிளம்பு” என சாத்வியை  கிளப்ப கட்டாயப் படுத்தினான்….

சாத்வியோ “பேங்கில் முக்கியமான பிராஜக்ட் லான்ஜ் ஓடிட்டு இருக்கு நாளைக்கு முடிஞ்சிடும்…  நாளை மறுநாள் ரிப்போர்ட் , பிராஜக்ட் எல்லாத்தையும் ஃபைல் பண்ணிட்டு, கல்யாணத்திற்கு முந்தின நாள் வந்துடுவேன்…  “ என நிதானமாய் கூற

சத்ரிக்கு பிபி எகிறியது “உங்கப்பாவை என்னால் நிச்சயமாய் சமாளிக்க முடியாது சாத்வி“ என சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

அவனருகில் வந்த சாத்வி…  சத்ரியின் சட்டைபையில் புதைந்திருந்த மொபைலை சுவாதீனமாய் எடுத்து சங்கரின் நம்பருக்கு கால் செய்தாள்.

அவ்வளவு நெருக்கத்தில் சத்ரிக்கு மூச்சே நின்றது…   அதை தடுக்கும் வண்ணம் மொபைலை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நின்று ஸ்பீக்கர் போட்டு அழைத்தாள் சாத்வி

இரண்டு மூன்று முறை முயன்ற பின்பே சங்கரன் எடுக்க “கல்யாணத்திற்கு முந்தின நாள் தான் நான் வருவேன்…   சத்ரிகிட்ட சொன்னால் அவன் உங்ககிட்ட சொல்ல சொன்னான்…  சொல்லிட்டேன்” என பதில் எதிர்பாராமல்  காலை கட் செய்து மொபைலை எடுத்த இடத்திலேயே வைத்தவள்

“கல்யாணம் பிடிக்கலகன்றதுக்காக ஓடி போய்ட மாட்டேன்…  நீ தைரியமா கிளம்பு…. நான் வந்திடுவேன்.” என அதே நெருக்கத்தில் சாத்வி சொல்ல

இரு உடல்களும் உரச, அந்த உரசல் சத்ரிக்கு மட்டும் தீ வைக்க…  அவசரமாய் அதே போனை எடுத்து தன் காதுக்கு கொடுத்து தன் தாய்க்கு அழைத்தான்.

“அம்மா சாத்வி இரண்டு நாள் கழிச்சுதான் வருவா..   அவளை தனியா விட முடியாது நீங்க கிருத்தி இரண்டு பேரும் சாத்வி கூட  இருங்க…  கிளம்பும் போது செல்லுங்க கார் அனுப்புறேன்..” என அன்னைக்கும் அண்ணிக்குமான கட்டளைகளை பிறப்பித்து சாத்விக்கு ஒரு பாதுகாப்பை ஏற்பாடு செய்த பின்னரே “டேக் கேர் சாவி…  நிறைய வேலை இருக்கு, பத்திரமா இருந்துக்கோ…  எதுனாலும் கால் பண்ணு” என சொல்லிச் சென்றவனை நிறுத்தினாள் சாத்வி.” ஒரு நிமிசம் நில்லு சத்ரி” என

தன் அறைக்குள் சென்று திரும்பியவள் கையில் ஒரு பேக் இருந்தது. “கல்யாணத்திற்காக உனக்கு நான் எடுத்தேன் ” என அவன் கைகளில் திணித்தாள்.

ஆச்சர்யமாய் வாங்கியவன் அதை பிரித்து பார்க்க.. சாக்லேட் நிறத்தில் முழுக்கை சட்டையும், அடர்ந்த கருப்பில் ஃபேண்டும் என உயர் ரக உடையுடன் டைட்டன் வாட்சும் அழகாக பேக் செய்ததை பார்த்து உதடுகள் ரகசிய சிரிப்பில் மலர்ந்தது சத்ரிக்கு…

அதே சிரிப்புடன் அந்த பையை கைகளில் ஏந்திக் கொண்டு “வரேன் சாவி்” என அங்கிருந்து கிளம்பி தங்கள் கிராமத்திற்குச் சென்றான்..

  சத்ரி கிளம்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் சாத்வியின் வீட்டில் இருந்தனர் கிருத்தியும் சிவஹாமியும்.

அவர்கள் வந்த உடன்  இருவருக்கும் தேவையானவைகளை ரெடி செய்து கொடுத்தபின் பேங்கிற்கு கிளம்பினாள் சாத்வி… கோபம் க்ருத்திகாவிடம் தலை விரித்து ஆடியது. ஒரு மலர்ந்த சிரிப்பை கூட உதிர்க்காமல்  கிருத்தியிடம் விலக, ஏனென்று தெரிந்து கொள்ள க்ருத்திகா பரபரத்தாலும் சிவஹாமி இருப்பதால் அவளும் சற்றே அடக்கி வாசித்தாள்.

சிவஹாமியிடம் கோபம் இல்லாத போதும் ஒதுங்கி தான் இருந்தாள் சாத்வி. அன்று வீட்டிற்கு வந்த போது சற்றும் மரியாதையில்லாமல் மரியாதை கொடுக்காமல் பேசிவிட்டு வந்தது இப்போது உரைக்க அமைதியாகவே இருந்தாள்..

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்த சிவஹாமி, ‘இவ்ளோ நல்ல பெண்ணை இந்த சத்ரி பையலுக்கே முடிச்சிருக்கலாம், பாலா போன பணத்தை காரணம் காட்டி சத்ரியை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களே இந்த அண்ணன்..’ என மனம் நினைக்க, அது நிறைவேறாது என தெரிந்து மூட்டை கட்டிவிட்டார் சிவஹாமி…

இரண்டு நாட்களும் பேங்கில் இருந்து அதிக தாமதமாகத் தான் வந்தாள். காலையில் சீக்கிரம் சென்றுவிடுவாள்… ஆக மொத்தம் இருவருடன் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டாள்.

திருமணத்திற்கு முந்தைய நாள் சரியான நேரத்திற்கு வெங்க்கட் வந்து மூவரையும் அழைத்துச் சென்றான்…

நேரடியாக மண்டபத்திற்கே அழைத்து வந்திருக்க…  மணப்பெண்ணுக்குரிய அலங்காரம் இல்லாத போதும்…  கழுத்தில் நிறைந்த நகைகளும், ஆடம்பரமான பட்டுபுடவையும் தலைநிறைந்த பூவுமாய் சிவஹாமியும் க்ருத்திகாவும் அவளை எளிதாய் தயார் செய்திருக்க ஆரத்தி எடுத்து வரவேற்றனர்

 மண்டபத்தின் வாயிலிலே.. பூக்களால் அலங்காரம் செய்த பலகை வரவெற்றது…. பார்தவளுக்கு வெறுப்பு தான் ரமேஷ் வெட்ஸ் சாத்வி  மனதில் அத்தனை வெறுப்பு..

பின்னே சாத்விக்கு திருமணம்.. அவளுடைய முழு சம்மதமின்றியே…

‘கல்யாணமே வேண்டாம்’ என கூக்குரல் இட்ட மனதினை அங்கிருக்கும் அனைவருக்கும் உரக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணம்.

கண்களை சுழற்றி பார்க்க அங்கிருந்த அனைவரும் அவள் சொந்தபந்தங்கள்  அவளை கண்டதும் சிலர் அவளை அங்கேயே சூழ்ந்து கொண்டனர்

“ஏண்டீமா, கல்யாண பொண்ணே இப்படி லேட்டா வந்தா.. நாங்க எவ்ளோ நேரம் காத்திருக்க”

“ சாத்வி….எப்படிடி இருக்க.. முன்னைக்கு இப்போ ரொம்ப அழகா இருக்கடி” என தன் அருகில் கேட்ட குரலில் விழுக்கென நிமிர்தாள் சாத்வி…   எதிரில் தன் தோழிகள் கயல் மற்றும் சரண்யா கூடவே செந்தில்…

 அத்தனை ரண கணத்திலும், அவர்களை பார்த்த சாத்விக்கு முகம் பூவாய் தான் மலர்ந்தது. அனைத்து மனஸ்தாபங்களும் பறந்தோட, இருக்கும் இடம் மறந்து அவர்களுடன் பேச, மூவரும் பதிலுக்கு பேச கலைகட்டியது அவர்கள் இடம்.

 சிறு வயதில் செய்த சேட்டைகள் எல்லாம் சொல்லில் அடங்காதவை.. பேசும் பேச்சுக்களும் அப்படி தான்.

“ ஏற்கனவே லேட்…  சீக்கிரம் ரெடி ஆகும்மா.. ” என மஹா இடையில் புகுந்து சொல்ல

“கயல் சரண்யா இரண்டு பேரும் பார்த்துக்கோங்க, நான் சத்ரி அண்ணா கிட்ட போறேன்” என செந்திலும் நகர்ந்தான்.

 செந்தில் சத்ரியை தேடி போக, இவளது விழிகளும் அவனை தேடி ஓடியது. அங்குமிங்கும் சுற்றியபடி, ஏதாவது ஒரு வேலையை செய்தவண்ணம் தேனீ போல் சுறுசுறுப்பாய் இருந்தான் சத்ரியன்.

சாக்லேட் நிற சட்டையும் அடர்ந்த கருப்பில் பேண்டுமாய் சாத்வி பரிசளிப்பாய் கொடுத்த உடையுடன் அங்கும் இங்கும் சுழன்றபடி ஓடிக் கொண்டே இருந்தவனின் முன் செந்தில் போய் நிற்க, “ஹேய்.. நீ எப்போடா வந்தே.. நீ மட்டும் தானா? இல்லை உன் ப்ரண்ஸூம் வந்திருக்காங்களா?” என இவன் கேட்க

“ம்.. வந்திருக்காங்க சத்ரிண்ணா”  என இவன் பேச்சை ஆரம்பிக்க,

இவள் பார்வை முழுதும் சத்ரியின் மேல் தான்.

ஏனோ இதயம் அடைத்தது.. தான் இவ்வளவு வெளிப்படையாய் பேசியும் சத்ரியிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லையே.  இல்லை இருந்தும் தன்னிடம் இவன் காட்டிக்கொள்ளவில்லையா.. என மனம் அலைபாய சத்ரியை மறக்க சொல்லி நிதர்சனம் அறைந்தாலும்.. அதையும் மீறி ஏதோ ஓர் எதிர்பார்ப்பு.. தோன்ற தான் செய்தது…  இவன் எதுவும் செய்ய மாட்டானா.. செய்து தன்னை இங்கிருந்து அழைத்துச் செல்ல மாட்டானா? என மனம் கூக்குரலிட..

‘சத்ரி என்ன சினிமா ஹீரோ வா….!’ அலேக்கா உன்னை தூக்கி போவதற்கு என சாத்வியின் மனம் கவுண்டர் கொடுக்க…

‘ஆமாம்,  வெளியே கொட்ட எழுத்தில் ரமேஷ் வெட்ஸ் சாத்வி.. உள்ளே இவ்வளவு உறவுகள், சொந்தங்கள்.. அதையும் மீறி அவளின் தந்தை  வில்லனாய் தான் தெரிந்தார் சாத்வியின் கண்களுக்கு.. இரண்டு வாரங்களாய் டைரியில் கலைந்த உணர்வுகள் இன்று பிரவாகமாய் போங்கி வர…  அதை அடக்க , கண்கள் உடைப்பெடுத்தது…  இரண்டு சொட்டுகள் தரையில் விழ குனிந்து கொண்டாள்.

அவளை வித்யாசமாய் பார்த்த கயலுக்கும், சரண்யாவிற்கும் ‘உங்க ப்ரண்ட் அழுதா கண்டுக்காதீங்க.. கண்டுகாத மாதிரியே இருங்க.. மத்ததை நான் பார்த்துக்கிறேன்‘  மண்டபத்திற்குள் நுழைந்ததுமே தங்களிடம் சத்ரி பேசிய வார்த்தைகள் நியாபகம் வர  ஒருவரையொருவர் பார்த்து இருந்தனர்.

“இவளை ரூம்க்கு அழைச்சிட்டு போய், அப்புறமா பேசுங்க” என மஹா மீண்டும் இவர்களை கண்டிக்க,

“வா சாத்வி போகலாம்” என கயலும் சரண்யாவும் இவளை அழைத்து செல்ல, பதுமையாய் பின் தொடர்ந்தாள்.

வந்ததிலிருந்து அங்கும் இங்கும் அலைவதாய் பேர் பண்ணிக்கொண்டு, செந்திலிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தாலும் சாத்வியையே   ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் சத்ரியன்.

தவிப்பை வெளிக்காட்டிய அவள் முகத்தை காணும் போதெல்லாம் நெஞ்சம் அடைத்தது இவனுக்கு.  சாத்வியின் உணர்வுகளை பார்க்காமலேயே சரியாய் கணிப்பவன், அவளின் கண்ணீருக்கான அர்த்தம் புரியாமல் இருக்குமா என்ன?

ஏனோ அவளிடம் இரு வார்த்தைகள் பேசிட, அவளின் தவிப்பை போக்கிட ஆவல் கொண்டது மனது.

செந்திலிடம் ஒரு வேலையை கொடுத்துவிட்டு, சாத்வியை தேடிக்கொண்டு அவளது அறைக்கு வந்தான்.

ஒரு பக்கமாய் திறந்திருந்த கதவின் வழியே இவள் முகம் தெரிய,

 ‘மன்னிச்சிடு சாத்வி, உன்னை ரொம்ப கஷ்டபடுத்துறேன்..கொஞ்சம் பொறுத்துக்கோ’ என மனதினுள் பேசியபடி, கதவை லேசாய் தள்ள,

அவளை சுற்றி இருந்த திருமணமான இளவயது பெண்கள் அவளை கிண்டல் செய்தபடியும், தங்களது அனுபவங்களை பூடகமாக பேசியபடியும், இடையிடையில் இவளையும் ரமேஷையும் இழுத்து வைத்து    கிண்டல் செய்தபடி இருக்க.. இறுகி கொண்டே சென்ற சாத்வியின்  முகத்தை பார்க்கவே முடியவில்லை இவனுக்கு.

“கல்யாணம் ஆக போற பொண்ணுன்னாலும் இப்படியா பேசி வப்பாங்க” பல்லை நரநரவென கடித்தவன்,

  ப்யூட்டிஷியனுக்கு கால் செய்தான் “எங்க இருக்கீங்க,உங்களை எத்தனை மணிக்கு வர சொன்னேன். பொண்ணு வந்தாச்சு.. உங்களை இன்னும் காணோம்” என பற்களை கடித்து துப்ப

அவனின் கோபத்தை உணர்ந்த அந்த பெண் “நான் அப்பவே வந்துட்டேன், உங்க அம்மா தான் சாப்பிட்டுட்டு அப்புறமா மேக்கப் பண்ண சொன்னாங்க” என மெல்லிய குரலில்  பேச

“எவ்வளவு நேரம் ஆகும்” என

“முடிஞ்சது, இதோ வந்துட்டேன்” என அடுத்த ஐந்து நிமிடத்தில் இவளும் அங்கே வர

ப்யூட்டிஷன் என நொடியில் கண்டு கொண்டவன்

“சாத்வி உள்ளே இருக்கா, அவளை தவிர மத்தவங்க எல்லாரையும் வெளியே பத்தி விட்டுடுங்க” என மெதுவாய் அவனும் பேச, இவளும் தலையசைத்தாள்.

உள்ளே சென்றவள் “சாத்வி, நான் உங்களுக்கு புக் பண்ணிருக்க ப்யூட்டீசன்’ என அவளை அழைக்க அவளுக்கும் ஏதோ ஓர் விடுதலை கிடைத்தார் போல் உணர்ந்து சாத்வியும் அந்த பெண்ணை உள்ளே அழைக்க, “அவங்களுக்கு மேக்கப் போடனும், நீங்க எல்லாரும்” என இவள் இழுக்க,கயல் சரண்யா தவிர்த்து மற்றவர்கள் அப்படியே வெளியே வந்தனர்.

அதன் பின்பே சத்ரி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

இவர்கள் வெளியே சென்றதே போதும், என நிம்மதி அடைந்த சாத்வி ‘என்னவோ செய்து கொள்ளுங்கள்’ என ப்யூட்டிசியனிடம் தன் முகத்தை கொடுத்துவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

முகம், தலை என அலங்காரமெல்லாம் முடிய நாற்பது நிமிடங்களுக்கும் மேலானது.

அழகுப்பதுமையாய் அலங்காரத்தில் ஜொலித்தாலும்.. கண்களில் ஒளியின்றி…  உயிரற்ற பொம்மை போலவே இருந்தாள்.

எத்தனை நேரம் ஓடியதோ, நலங்கு வைப்பதற்காக மேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.

சிந்தைகள் அனைத்தும் தறி கொட்டு செல்ல.. நடைப்பவை எதையும் உள் வாங்கிக்கொள்ளாமல் அவளுக்கென பிரத்யேகமாய் அலங்காரம் செய்யப்பட்ட சேரில் ராணியின் தோரனையுடன் இருந்தாலும்…  சிரிப்பென்பது சிறிதளவும் இல்லை சாத்வியிடம்.

நிச்சயதார்த்த விழா சிறு ஆரவாரத்தோடு துவங்கி, சடங்கு சம்ரதாயங்கள் ஒவ்வொன்றாய் நடந்தேறியது.

குனிந்த தலை நிமிராமல், அங்கு நடக்கும் எதையும் காதில் வாங்காமல் அமர்ந்திருந்தாள் சாத்வி.

சாத்வியின் பெற்றோர்கள், சத்ரியின் பெற்றோர்கள், க்ருத்தி வெங்க்கட்.. நானும் நானும் என தவ்விக் கொண்டிருந்த திவ்யா என அனைவரும் சந்தனம் நிறைந்த கைகளுடன் அவளுக்கு நலங்கு வைக்க…  பின் ரமேஷின் பெற்றோர்.. அதன் பின்.. நெருங்கிய சொந்தங்கள் அனைவரும் முடித்திருக்க..  “வா…சத்ரி நீயும் வைடா ” என சிவஹாமி அழைத்தார்.

அழுக பதுமையாய் மேடை ஏறிய நொடி முதல் இந்த நொடிவரை சாத்வியை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தவன், சிவஹாமின் அழைப்பில் திரு திருவென விழித்தான்.

“என்ன.. முழிச்சிட்டு இருக்க வா சத்ரியா” என மஹாவும் சங்கரும் கூட அழைக்க…  பின் சற்றும் யோசிக்காமல் தன் வேக நடையால் அந்த ராணிக்கேற்க ராஜாவாக…   சிறிதும் கம்பீரம் குறையாமல் சாத்வியிடம் வந்தவன்,  சந்தனத்தை அள்ளி இரு கன்னத்திலும் பூசியபடி தாடையில் நிறுத்தி அப்படியே நிமிர்த்தினான் அவளின் குனிந்திருந்த முகத்தை.

கண்களில் கலவரம் அப்பட்டமாய் தெரிய…  அடி வாங்கிய குழந்தையாய்  கண்ணீர் தேங்க இருந்தவளை.. கண்களுக்குள் ஊடுருவி..  கைகளின் அழுத்தத்தை கூட்டி “நான் இருக்கும் போது அழாதேன்னு எத்தனை தடவைடீ சொல்றது” சிறு கோபத்துடனே இவன் கூற

விழிகளை எவ்வளவு விரிக்க முடியுமோ, அவ்வளவு விரித்து பார்த்தாள் சாத்வி

 ‘சிரிடி அழகி’ என்றவன் கன்னத்தை ஒரு முறை அழுத்தமாய் நிமட்டி விட்டான்   யாரும் அறியா வண்ணம்.