பகுதி 8

சாத்வி காரை நிறுத்தி வர, அப்பார்ட்மெண்ட் முன் காரில் இருந்த வாரே “திங்க்ஸ் எல்லாத்தையும் வீட்டுக்கு கொண்டு வர சொன்னாங்க. வீட்டில் எல்லார்கிட்டேயும் காட்டிட்டு, காலையில் கொண்டு வந்து கொடுத்துரேன். ஸ்டிச்சிங் நீ பார்த்துக்கோ, கிளம்பட்டுமா” என இவன் காரை கிளப்ப

 “சத்ரி” என அழைத்தாள் சாத்வி, காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக நகர்ந்தவன் பிரேக்கில் கால் வைத்து அழுத்தி நிறுத்தினான்.

காலையில் இருந்து கேள்வியே கேட்காமல்  சொல்றது எல்லாத்தையும் செய்கிறாளேன்னு சந்தோசப் பட்டேன். இப்போ என்ன குண்டை தூக்கிப் போட பேகிறாளோ..என மனதில் எண்ணங்கள் ஓடினாலும் அதை மறைத்தபடி கார் கண்ணாடி வழியாக   தலையை நீட்டி  “என்ன சாவி?என்னாச்சு?” என கேட்டான்.

“கொஞ்சம் பேசனும், வீட்டுக்கு வரியா” என கேட்டவளின் பார்வையில் “நீ வந்து தான் ஆக வேண்டும்” என்ற தீவிரம் சற்று அதிகமாகே இருந்தது்

அதை கண்டு கொண்ட சத்ரி “போச்சு கேள்வி கேட்டே  சாகடிக்கப் போறா, முருகா காப்பாத்து” என நினைத்தபடிகாரை விட்டு கிழே இறங்கினான் சத்ரி “என்ன சாவி், என்ன பேசனும்” என கேட்டான்.

“வீட்டுக்கு வா, இங்கே எப்படி பேச”  என அப்பார்ட்மெண்டினுள் அழைத்தாள்

அழகான ஐந்து ப்ளோர்கள் கொண்ட அந்த அப்பார்ட்மெண்டை அன்னாந்து பார்த்த சத்ரி.

“என்னன்னு சொல்லு.. சாத்வி, எதுவும் முக்கியமானதா?“ என நின்ற இடத்திலிருந்தே கேட்டான் சத்ரி.

“நான் உள்ளே தான் கூப்பிட்டேன்” என சாத்வி முறைக்க

அவளின் முறைப்பை கண்டுகொண்டவனாய்.. “புரிஞ்சுக்கோ சாத்வி… உன் அப்பார்ட்மெண்டில் நீ மட்டும் தனியா தானே இருக்க,வேண்டாம்” என அவளின் நிலையை கருத்தில் கொண்டு மறுத்தான்…

சத்ரியின் மறுப்பை கண்டுகொள்ளாமல் “அதனால் என்ன? தனியா இருந்தா உனக்கென்ன பிரச்சனை.  நீ இப்போ வர்ற” என

“வேண்டாம்னா வேண்டாம். விடேன். ஏன் வற்புறுத்தர“ என  பிடிவாதத்தை விடாமல் அவனும் நிற்க…

“இப்போ நீ வர முடியுமா….? முடியாதா?“ என கோபத்துடன் சாத்வி கேட்க

“வர வர நீயும் அடங்க மாட்ற… ” என சன்னமாய் சிரித்து, காரில் இருந்து அவளின் கல்யாண பத்திரிக்கைகளை எடுத்துக் கொண்டு.. சாத்வியின் பின்னால் நகர்ந்தபடி மூன்றாம் தளத்தில் இருந்த அவளின் அப்பார்ட்மெண்ட் சென்றான்.

பெரிதாக பொருட்கள் ஏதும் இல்லாத ஒற்றை படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மெண்ட்,இவள் ஒருத்திக்கு இது அதிகம் தான் என எண்ணியபடி அந்த அறையை கண்களால் அளந்தான்.

மூங்கில் ஊஞ்சல் ஒன்று ஹாலின் ஓரமாய் ஜன்னலின் அருகில் தொங்கிக் கொண்டிருக்க…  மற்றொரு மூலையில் டேபிள் சேர்.  கதவை ஒட்டி ஒரு செப்பல் ஸ்டாண்ட் அவனைதையும் சேர்த்து மொத்தம் இரண்டு ஜோடிகள் தான்.   பால்கனியில் பார்வை பதிய.. இரண்டு ரோஜா பூந்தோட்டிகள்.  சமையலறை படுக்கை அறை தவிர்த்து அவன் பார்வையில் விழுந்தவை அவ்வளவே..

‘வேற எதுவுமே இல்லையே’ என சாத்வியை நோக்கி பார்வையை திருப்ப…  அவனையே முறைத்தவண்ணம் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள் சாத்வி.

அதை கண்டுகொள்ளாமல் “இவ்வளோ பெரிய ரூமில் நீ மட்டும் தனியா வா இருக்கே… இருந்துப்பியா” என அவளின் தனிமை பயம் அறிந்தவனாய் கேட்க….

“நானும் என் கோலீக்கும், இரண்டு பேர் சேர்ந்து தான் தங்கி இருந்தோம். இப்போ இரண்னு மாசம் முன்ன தான் டிராண்ஸ்பர் கிடைச்சு போனாள். இப்போ அவளை பத்தி பேச நான் உன்னை கூட்டிட்டு வரலை” என கோபமாய் கூறினாள் சாத்வி

அது புரிந்தவனாய் “சரி சரி கோபப்படாத, சொல்லு என்ன பேசனும்” என தணிந்து போக…

“கல்யாணம் அவசர அவசரமா நடக்கிற மாதிரி தெரியுது.   மெதுவா பண்ணலாமே”

“இதுவே ரொம்ப ரொம்ப ஸ்லோ சாவி.. நான் எப்படியும் ஒரு மாதத்திற்குள்ள  முடிக்கனும்னு நினைச்சேன்..ஆனா இரண்டு மாசம் ஓடிடுச்சு  “

“அதை தான் நானும் கேட்கிறேன்…. ஏன் இவ்வளவு வேகம்… ”

“ உன் கழுத்தில் தாலி கட்டற நிமிஷம் .. அந்த செகண்டில் தெரியும் ‘ஏன் இவ்வளவு அவசர படுறேன்னு… ’ உனக்கு கண்டிப்பா புரியும்”

“நானா தான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணுமா? ஏன் உன் வாயால சொன்னால் எனக்கு காது கேட்காதா?” என கடுப்புடன் கேட்க….

சத்ரியின் இதழ்கள் சிரிப்பில் விரிய “நான் சொல்ல மாட்டேன்…. நீ தான் தெரிஞ்சுக்கணும்.நீயா தான் தெரிஞ்சுக்கணும்” என சத்ரி சொல்ல….

“இந்த கல்யாணமே வேஸ்ட்னு நினைக்கிறேன்…. இதில் நீ சஸ்பெண்ஸ் வேற வைக்கிறியா..”

“என்னது வேஸ்டா… ! ஏய் இந்த கல்யாணம் நடக்கனும்னு நான். எவ்வளவு கஷ்டப்பட்டு உங்கப்பனை சமாளச்சிட்டு இருக்கேன். நீ என்னடான்னா இவ்வளவு ஈசியா சொல்லிட்டே”

“பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டியான்னு என்னை திட்னீங்க…  இப்போ நீங்க மட்டும் ரொம்ப மரியாதை கொடுக்குறதா நினைப்போ” என தன் தந்தையை மரியாதை இல்லாமல் பேசுவதை சுட்டிக்காட்டி

“அம்மா சாவி…  உங்கப்பனை மரியாதை இல்லாமல் பேசினது தப்பு தான்மா…  மன்னச்சிக்க…  இனிமேல் உங்கப்பனை்’யோவ் மாமா’ ன்னு இல்லை ‘டேய் மாமா’ன்னு மரியாதையா கூப்பிடுறேன்” என சிரிப்புடன் கூற

 “என்னை கண்டிக்கனும்னா மட்டும் , வாயில் நல்ல நல்ல அட்வைஸ்ஸா வரும்…. இதே இது…. நான் அட்வைஸ் பண்ணினா.  நல்ல  வார்த்தையெல்லாம் வருதுடா”  என சத்ரியின் தலையில் ‘ நங்’ எனக் கொட்ட

 அதை தூசி தட்டுவது போல் தட்டி “நீயெல்லாம் கொட்டி… எனக்கு வலிக்க போகுதா” என அவளின் மெல்லிய உடலை அழகாய் காட்டிய ஜீன்ஸ் டீசர்ட்டிற்கு நன்றி சொல்லியபடி.. சத்ரியின் கண்கள் அவளை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து கொண்டிருந்தது..

வெகு நேரமாய் சத்ரின் கண்கள் அவளிடம் இருக்க…. சுதாரித்தபடி சாத்வியின் கண்களை சந்திக்க…  அவள் கண்கள் பள பள வென ஜொலித்தபடி சுவற்றை வெறித்துக் கொண்டிருந்தது.

ஒரு பெண்ணின் கண்கள் மகிழ்ச்சியான தருணத்திலும், அழுகையை அடக்கும் போதும் என இரு நேரங்களிலும் ஜொலிக்கும்…

இப்போது சாத்வி இரண்டாம் நிலையில் இருப்பதை தெளிவாக உணர்ந்து கொண்டான்..

அவளையே பார்த்த சத்ரி.. அவள் கவனைத்தை தன்னை நோக்கி திருப்பினான்..

“நீ எதுக்கோ தயங்குற…  என்னன்னு சொல்லு” என அவளை தூண்டிவிட

எதற்கும் அசையாமல் அப்படியே சுவற்றை வெறித்த வண்ணம்  இருந்தாள்…  ஆனால் ‘ நான் உன் பேச்சை கேட்கிறேன்’ என அவள் விழிகள் அங்கும் இங்கும் உருண்டு காட்டிக் கொடுத்தது

அவள் விழிகளில் தன் பார்வையை வைத்து “எதுவும் பிரச்சனையா?” என கேட்டான்.

விழிகளை சுவற்றில் பதித்தபடியே “ நீ சொன்னன்ற ஒரே காரணத்திற்காக தான் கல்யாணத்திற்கே சரின்னு சொன்னேன் ஆனால்”

“ என்ன ஆனால்”

“அப்பாவோட பணத்தில் ஜவுளி , நகை எல்லாம்…  வாங்கி அப்படி கல்யாணம் பண்ணணுமா?” என தயக்கமாக சாத்வி கேட்க

‘ஓ…. இது தான் பிரச்சனையா’ என தனக்குள் சிரித்துக் கொண்டு. “பெத்தா மட்டும் போதுமா…. கடமையை செய்ய வேண்டாமா?” என நடப்பை எடுத்துக் கூற…

“ம்…  அது சரி தான்…  ஆனால் அது பொதுவான பேரண்ட்ஸ்க்கு, தன்னுடைய குழந்தைகளோட பொறுப்பை சுமையா நினைக்காமல் , அவங்களோட எதிர்கால நலனுக்காக செய்யிற பேரண்ட்ஸ்க்கு தான் பொருந்தும்…   இவருக்கு கண்டிப்பா பொருந்தாது.. அப்படிப் பார்த்தா இங்கே கடமைக்கு  வேலையே இல்லையே” என விரக்தியாய் சிரிக்க…

அவளின் விரக்தி மனதை பிசைய.. அவள் சொல்வதும் உண்மை தானே…  என்ற எண்ணமே மேல் எழ…  “அது தான் ஏற்கனவே சொன்னேனே…  கல்யாணம் வேலையில் இந்த ஒன்னு தான் பெண்டிங்..  வேற யாரையும் உன்கூட அனுப்ப எனக்கு இஷ்டம் இல்லை…  அது தான் நானே உனக்கு ஹெல்ப் பண்ண வந்தேன்…  கல்யாணம் முடியும் வரை  மட்டும் பொறுத்துக்கோ…  அடுக்கு பிறகு உங்கப்பாகிட்ட ஒரு பைசா கூட வாங்குற நிலையை உனக்கு வரவிட மாட்டேன்” என சத்ரி ஆதரவாய் பேச….

சத்ரி பேசியதை நினைத்தபடியே…  அவனை சாத்வி ..குறு குறுவென பார்க்க…

அவள் பார்வையில் புரியாமல்..  “என்ன இப்படி பார்க்க…” என நேரடியாக கேட்டு விட்டான் சத்ரி

அவனின் கேள்வியில் சிரித்தபடியே.. “இல்லை நீ தப்பான வழிக்கு போய்டுவியோன்னு பயந்து தான் அம்மாவும் அப்பாவும் உன்னை கண்காணிச்சுகிட்டே இருக்காங்க…  வீணா எந்த பிரச்சனையிலும் சிக்கி உன் அப்பாட்ட மாட்டிக்காத.. நீ படிக்கனும்.. நல்ல வேலைக்கு போகனும்… இனி நீ தான் அம்மா அப்பாவை பார்த்துக்கணும் அப்படி இப்படின்னு இன்னும் நிறைய அட்வைஸ் பண்ணி உன் மாமாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ…  இப்போ..நீ பேசற விதம் அப்படியே ஆப்போசிட்டா இருக்கே.. சத்ரி இது நீ தானா?” என சந்தேகமாய் சிரிப்பை நிறுத்தாமல் கேட்க…

“நீ சொல்றதும் சரி தான்…  உன் அப்பா அம்மா மேல் மரியாதை  இருந்தது. இல்லைன்னு சொல்ல மாட்டேன். எப்போ உன்னை இங்கே விட்டுட்டு பொறுப்பு இல்லாமல் இருந்தாங்களோ,அன்னைக்கே இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு…  நானே வெறுத்துட்டேன்” என சாத்வியை பற்றிய கவலையை கண்களில் அப்பட்டமாய் காட்டிப் பேச

அதை உணர்ந்து கொண்ட சாத்வி.. ‘எனக்காகவா….?’ என நினைத்தாலும் வெளியில் காட்டவில்லை….

அதை மறைத்தபடியே “ அப்பாவை வெறுத்திட்டீங்க… ஆனால் அவர் பார்த்த வரண் மேல் வெறுப்பு வராமல் எப்படி நம்பிக்கை வந்தது..  எனக்கு டவுட்டா இருக்கு..” என மீண்டும் சந்தேகமாய் பார்க்க..

“உன் அப்பா மேலே இப்போவும் எனக்கு நம்பிக்கை இல்லை.. உன்னை கல்யாணம் பண்ணிக்க போற  மாப்பிள்ளை மேல் உள்ள நம்பிக்கையில் தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சேன்…. மத்தபடி வேற யார் மேலையும் நம்பிக்கை வைக்கலை….” என மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்தான், சத்ரி.

அவன் பேச்சில் இன்னமும் சந்தேகம் கூட..“ நீ அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டீயே…. அதையும் மீறி..… எனக்கே பேசற அளவுக்கு நம்பிக்கை இருக்குன்னா…  அப்போ அவனை உனக்கு நல்லா தெரியுமா” என சாத்வி மனதில் உதித்ததை கேட்க….

“எவனை” என சத்ரியின் உதடுகள் ஒரு பக்கமாய் வளைய….

கோபமாய் முறைத்த சாத்வி “அதாண்டா.. ரமேஷை” என சாத்வி கேட்க

மிகப்பெரிய தடுமாற்றம் தான் அவன் முகத்தில்….சட்டென அதை சாத்வியிடமிருந்து உடனடியாக மறைத்து

“ஓ,மாப்பிள்ளையை கேட்குறியா? ம் நல்லா தெரியுமே…  அதனால் தானே உடனே சரின்னு சொன்னேன்..” என எதையோ சொல்லி சமாளித்தான்..

“ஓ…. தெரியுமா” என்றவள் அடுத்து எதுவுமே பேசவில்லை…  அப்படியே அமைதியாய் இருக்க… அவளின் நிலை உணர்ந்து சத்ரி தான் பேச்சை வேறு புறம் திருப்பினான்…

இவளது முகம் போன போக்கில்”ரமேஷை பிடிக்கலையா?  இஷ்டம் இல்லையா” என கண்களில் மின்னலடிக்க கேட்டான் சத்ரி..

இரண்டுக்கும் சேர்த்தே “இல்லை, பிடிக்கவில்லை” என கண்களில் வலியை காட்டியபடி கூறினாள் சாத்வி

“அப்பா, உங்கிட்ட கல்யாணம் பத்தி பேசும் போதே பிடிக்கலைன்னு சொல்ல வேண்டியது தானே…  போட்டோ  பாத்ததும் ‘சரி’ ன்னு சொல்லிட்டு,இப்போ பிடிக்கலைன்னு சொன்னா… என்ன அர்த்தம்” என சாத்வியின் வாயை கிளரினான்.