பகுதி 7

சாத்வியின் திருமணத்திற்காக முன்னேற்பாடுகளை கோதண்டமிடம் பகிர்ந்து, பின் அதை குடும்பத்தினருடன்  பகர்ந்து கொள்ள மீண்டும்  ஹாலுக்கு வந்தார்

அங்கே அவர் பேசிய அனைத்தையும் சங்கரன் சொல்ல, அங்கிருந்த எல்லோரின் பார்வையும் சங்கரன் மீது பாய, ஏக கடுப்பில் இருந்ததை அப்போது தான் உணர்ந்தார் சங்கரன்.

“இங்கே என்ன தான் நடக்குதும்மா… எங்களுக்கு புரியவே இல்லை.  நீங்க என்னன்னா.. சாத்விக்கு ஆசையாய் கல்யாணம் பண்ண வந்திருக்கீங்கன்னு நினைச்சா…  சாத்வியும் சத்ரியும் உங்க ரெண்டு பேரையும் மட்டம் தட்டி பேசுறதும் இல்லாமல்.. எடுத்தெறிஞ்சு வேற பேசுறாங்க. இதில் பெத்தவங்க உங்க பேச்சை கேட்கமாட்டேன் ‘சத்ரி சொன்னா தான் கேட்பேன்’ ன்னு தம்பட்டம் அடிக்காத குறையாய் சொல்லிட்டு போறா…   பத்தாததுக்கு ‘கல்யாணமே பிடிக்கலே, ஆனால் அந்த கல்யாணமே சத்ரிக்காக தான்னு சரி செல்லிட்டு போறாள்’ ஏதோ ஒரு பெரிய விசயத்தை எங்க கிட்ட இருந்து மறைக்கிறீங்க…  அதுவும் முக்கியமாக வெங்க்கட்டுக்கும் எனக்கும் தெரியாமல் ஏதோ மறைக்கிறீங்க.. என்ன தான் நடந்தது.. யாராவது சொல்லுங்களேன்” என குழப்பத்தில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு கேட்க..

ஏற்கனவே கடுப்பில் இருந்த மஹா.. “உங்கிட்ட என்னத்தை மறைச்சாங்க..  நீ தெரிஞ்சிக்கலைன்னு சொல்லு.. இத்தனை வருசமா இந்த குடும்பத்திற்குள்ள தானே இருக்க.. இல்லை வீட்டில் இருக்கும் போது கண்ணு தெரியாமல் போய்டுமா..!” என கோபமாய் நின்றிருந்தார் மஹா..

“திமிரெடுத்து உன் இரண்டாவது பொண்ணு ஆட்டம் போட்டா….அதுக்கு எதுக்கு இவளை பேசற…  தையிரியம் இருந்தால் உன் இரண்டாவது பொண்ணுட்ட உன் வாயைக் காட்டு பார்க்கலாம்” என சங்கரன் பதிலுக்கு பேச..

“சாத்வி திமிரெடுத்தவளா? பேருக்கேத்த மாதிரி என் பிள்ளை சாந்தமா இருந்தா..  நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஆடின ஆட்டத்தில வாழ்க்கையை இழந்துட்டு நிற்கிறா! பாசத்தை இழந்துட்டு நிக்குறா! பண்றதெல்லாம் நீங்க இரண்டு பேரும் பண்ணுவீங்க.. தண்டனை மட்டும் அந்த புள்ளைக்கா?” என சங்கரையும் கிருத்தியையும் சுட்டிக்காட்டி  கண்ணீர் குரலில் மஹா கேட்க..

“என்னம்மா சொல்றீங்க.. சாத்வி வாழ்க்கை என்னால் போச்சா..” என அதிர்ச்சியாய் கேட்க..

“ஆமாண்டி உன்னால் தான் போச்சு..” என முறைத்து நிற்க..

மஹா பேசயதில் ‘ஆ வென வாய் பிளந்து நின்றிருந்த வெங்க்கட்டின் வாயிலேயே ஒன்று போட்டான் சத்ரி.. “உன் மாமியாரை சைட் அடிச்சது போதும்.. அண்ணி அழறாங்க பாரு..” என வெங்க்கட்டை அந்த நிலையிலேயும் கிண்டல் செய்ய

“அடங்கவே மாட்டடா நீ… ” என கோபத்துடன் க்ருத்தியின் அருகில் செல்ல.. இன்னும் மஹா க்ருத்திகாவை திட்டிக் கொண்டிருக்க..

இடையில் புகுந்தான் சத்ரி..

“யாராலையும் யார் வாழ்க்கையும் போகலை…  தயவு செஞ்சு எல்லாரும் வாயை மூடிட்டு.. சாத்வி கல்யாணத்திற்கு ஆக வேண்டிய வேலையை பாருங்க..  இல்லை இப்படியே வீட்டை விட்டு நடையை கட்டுங்க..  இனி சாத்வி விசயத்தில் நான் தலையிடவும் மாட்டேன். நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு..” என மற்றவர்களின் கவனத்தை தன்புறம் திருப்பினான் சத்ரி.

அவன் பேச்சில் அவ்வளவு நேரம் அமைதியாய் இருந்த விநாயகமும் சிவஹாமியும் “சத்ரி… ” என ஒரு சேர ஏலம் போட..

“ஆமா.. பேச வேண்டிய நேரத்தில் எதுவும் பேசாதீங்க.. நான் மிரட்டுனா மட்டும் உடனே எங்க இருந்து தான் சவுண்டு வருமோ” என அவர்களையும் திட்டி தீர்த்தான்.

“என்ன பேசலை நாங்க…. எப்போ பேசலை?” என கேள்வி கேட்டார் சிவஹாமி…

“எத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கா சாத்வி.. அவள் கிட்ட நாலு வார்த்தை பேச வேண்டாம்.. வந்தவளுக்கு ஒரு வாய் டீ காபி கூட தரவில்லை…  இதில் பேச்சை பாரு” என சிவஹாமியை சாட…

உண்மை தானே.. என அங்கிருந்த அனைவரும் வாயை மூடிக்கொள்ள

ஏதோ தங்களிடம் மறைப்பதாய வெங்க்கட்டின் மூளை குடைய…  ‘இது தான் சத்ரியின் வாயைக் கிளறும் தருணம்.’ என அவனிடம் வம்பிழுத்தான் வெங்க்கட்..

அதற்கு தகுந்தாற் போல் விநாயகசுந்தரம்…  “சரிடா ,  செஞ்சது தப்பு தான். அதுக்காக வீட்டை விட்டு நடையை கட்டுங்க, சாத்வி கல்யாணத்தில் தலையிட மாட்டேன்’ ன்னு சொல்லுவியா” என கேட்க…

“ஏன் சாத்வி கல்யாணம் நீ சொன்னால் தான் நடக்குமா..நீ தலையிட்டால் தான் தடங்கல் வராமல் இருக்குமா? இல்லைனா நடக்காதோ” என அமைதியாய் இருந்த வெங்க்கட் கேட்க…

“ அப்படி கேளுங்க மாப்பிள்ளை..  எப்போ பாரு சாத்வியை இவன் பெத்தவன் மாதிரி ,எல்லாத்திலேயும் உரிமை எடுத்துக்கிறான்” என சங்கரன் தன் மருமகனை ஏவி விட…

அதற்கெல்லாம் அசைவானா நம் சத்ரி..

“ஓ என்னை விட உங்களுக்கு தான் உரிமை அதிகம்ன்னா.. நீங்களே போய் பேச வேண்டியது தானே…. உங்க மகள் கிட்ட, சாத்வி கல்யாணத்தை எதுக்கு என் தலையில் கட்டினீங்க.. சாத்வி கல்யாணம் உன் பொறுப்புன்னு  எதுக்கு சொன்னீங்க.. ஈசியா என் தலையில் கட்டிட்டீங்க.. அவளை சம்மதிக்க வைக்க நான் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பேன்…. உங்க எல்லாருக்கும் அவள் மேல் இருக்கிற உரிமையை விட எனக்கு தான் அதிகம்.. என்ன புரிஞ்சதா” என சத்ரி ஆவேசமாய் கேட்க…

வெங்க்கட் சங்கரன் இருவரும் முதல் நாள் ஹாஸ்டலில் விசாரித்த லட்சனத்தில்  இறுக வாயை மூடிக் கொண்டனர்.

“அவ்வளவு உரிமை இருக்குன்னா…. நீயே சாத்வியை கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே“ என கிருத்தி டைம்மிங்காய் கேட்டாள்…

ஏதோ சாத்விக்கு நல்லது செய்வதாய் நினைத்துக் கொண்டு..

‘இவ வேற நேரம் காலம் தெரியாமல் ஏவி விடுறாளே…  சத்ரி சும்மாவே சாமி ஆடுவான்…  இவ சலங்கையை வேற கட்டி விடுறாளே’ என க்ருத்திகாவை சங்கரன் வசைபாட

“ ஆமாப்பா…. நீயே சாத்வியை பண்ணிக்கலாமே.. “ அதை பிடித்துக் கொண்ட சிவஹாமியும் கேட்க..

“ எனக்கும் இந்த எண்ணம் இருந்தது சங்கரன்…   ஆனா நீ ஒத்துப்பியோ மாட்டியோன்னு தான் கேட்கலை…  இப்போ சொல்லு…   சத்ரிக்கு சாத்வியை தருவியா… ” என ஆசை பொங்க விநாயகசுந்தரம் கேட்டார்…

“இதெல்லாம் சரிப்படாது மச்சான்….” என சங்கரன் தயங்க….

“ஏன் சரிபடாது.. ஓ நல்லா பார்த்துப்பமா மாட்டோமான்னு சந்தேகமா… !  உன் மூத்த பொண்ணு இங்கே தானே இருக்கா…. அவகிட்டேயே கேட்டு பாரு சங்கரன்.. எம்மா…. மருமவளே நீ சொல்லும்மா.“ என விநாயகசுந்தரம் மருமகளை சப்போர்ட்டிற்கு இழுக்க..

“மருமகளா என்னைக்கு மாமா நீங்களும் அத்தையும் என்னை  நடத்திருக்கீங்க.. இங்கே நான் மகளா இருக்கப் போய் தான் தைரியமா சத்ரிட்டயே நேரா கேட்டேன்….” என கிருத்தி பேச…

“அப்பறம் என்ன சங்கரன்.. கோதண்டம் கிட்ட நான் பேசிக்கிறேன்….  அந்த கல்யாணத்தை நிறுத்து…   குறித்த தேதியில் சத்ரியோட..” என பேசிக் கொண்டிருக்கும் போதே..

“இல்லை மச்சான். வேண்டாம்… சரி வராது” என சங்கரன் முகத்தை சுருக்கி நிற்க..

“ அதான் ஏன் சங்கரன்….” என விநாயகசுந்தரம் குடைய…

“ இனி ஒரு முறை அசிங்கப்பட முடியாது மச்சான்“ என அழுத்தமாய் விநாயகத்தை பார்க்க…

 அவர்களுக்கு நன்றாகவே புரிய   “கோதண்டம் ஊரிலேயே பெரிய ஆளுங்க… ப…ப…பணக்காரவங்க..அங்கே தான் என் பொண்ணு வாழனும்ன்னு முடிவு பண்ணியாச்சு..” என ஸ்தீரமாய் பேச

அதற்கு மேல் யாரும் வற்புறுத்தவில்லை.. இதையெல்லாம் கோபமாய் பார்த்திருந்த சத்ரி.

தன் அறைக்குள் நுழைந்து , ஜார்ஜ் ஏறிக் கொண்டிருந்த மொபைலை வேகமாய் எடுத்தான்…  அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்காத ஜார்ஜர் ஒரு புறமாய் பறந்தது..

காலர் லிஸ்ட்டில் இருந்த சாத்வியின் எண்ணுக்கு அழைக்க.. முதல் ரிங்கிலேயே எடுத்தாள் சாத்வி

எடுத்தவள் “எங்கே வரணும் ” என கேட்க..

“ என்ன….!” என்றான் குழம்பிப்போய்

“டோஸ் விடத் தானே கூப்பிட்ட.. எப்படியும் போனில் திட்டமாட்ட.. அப்போ நேரில் தானே  வர சொல்லுவ, அதுக்கு தானே இப்போ கால் பண்ணின! சொல்லு எங்கே வரனும்?” என கேட்க..

இதழ்களில் சிரிப்பு தானாகவே வந்து அமர்ந்து கொண்டது சத்ரியனுக்கு.

அதே சிரிப்புடன்.. போனை காதுக்கும் கழுத்துக்கும் இடையில் வைத்தபடி பைக் சாவியை ஒவ்வொரு இடமாய் தேடியபடி சாத்வியிடம் பேசிக் கொண்டிருந்தான்..

“ம்…  கரெக்டா கெஸ் பண்ணிட்ட.. பரவாயில்லை…  மூளை கொஞ்சமே கொஞ்சம் வேலை செய்யுது போல..” என கிண்டல் பேச

“அது கொஞ்சம் இல்லடா கண்ணா…. நிறையவே வேலை செய்யுது“ என இவளும் சிரித்தபடி பேச

 அவளின் ‘ கண்ணா ‘ என்ற அழைப்பில் பைக் சாவியை தேடிக் கொண்டிருந்தவனின் கைகள் அப்படியே ஓர் இடத்தில் நிலைத்தது..  பின் தலை உலுக்கி…

“ம்…. இதில் என்ன சிரிப்பு இருக்குதுன்னு இப்படி சிரிக்கிற” என அவனுமே சிரிப்புடன் கேட்க…

“ இல்லை , என் மூளையில் என்ன ஓடுதுன்னு நீங்க அப்ப அப்ப  கரெக்ட்டா கண்டுபிடிச்சுடுவீங்க..  இப்போ நானும் உங்களை மாதிரி கெஸ் பண்ணிட்டேன்ல.. அதான்,  சிரிப்பு” என கூற…

“ம்….” என இழுத்தவன் “பேங்க் போய்டியா” என கேட்டான்.