சாத்வியின் ஊடுருவும் பார்வை சத்ரியின் ஆழ்மனம் வரை சென்று அங்கேயே நிலைபெற்றது
அவள் பார்வை சொன்ன செய்தியை இன்னமும் சத்ரியால் நம்ப முடியவில்லை..’ என்னை தேடி வர இத்தனை வருடமானாதா?’ அவள் விழிகள் கேட்ட கேள்வி இது தான்.. இந்த கேள்விக்கும் தான் செய்ய போகும் விபரீதமான செயலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டப் போவதில்லை….
சாத்வியின் மனம் அறிந்தும் வேறு வழி இல்லை…. தன் பெற்றொருக்காக சாத்வியின் பெற்றொருக்காக இவர்களுக்காக இல்லையென்றாலும்… சாத்விக்காக, சாத்வியின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைகாக கட்டாயம் இதை செய்தே ஆக வேண்டும்… என்ற எண்ணம் மனதில் நிலைப்பெற..
அதற்கு மேலும் அந்த பார்வையை எதிர் கொள்ள முடியாமல்… வாய்க்கு வந்ததை சொல்லி விட்டு அப்படியே கிளம்பிப் போனவன் தான்.. இருக்கும் வேலைகளை விரைவில் முடிக்க தன் ‘பைக்கர்ஸ் பாய்ண்ட்’ சென்றான்.. செல்லும் வழியில் காலையில் தன் பெற்றோர் தன்னிடம் பேசியவைகள் நினைவு வந்தது.
காலையில் காபி அருந்த கீழே வந்தவனின் பார்வையில் பட்டது சங்கரின் அழுத்தமான குரலும் மஹாவின் கண்ணீர் தேங்கிய முகமும்..
பார்த்ததுமே கண்டு கொண்டான் “ஏதோ பிளான் போடுறார் போலவே” என நினைத்து அவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் சத்ரி
மகள் நன்றாக இருப்பாள் என்ற உத்திரவாதம் கிடைத்த மகிழ்ச்சியில்
“சிவஹாமி நம்ப சத்ரிகிட்ட சொல்லி சாத்வியை அழைச்சிட்டு வர சொல்லேன்.. பார்க்கனும் போல இருக்கு… சத்ரி நீ சொன்னா கேட்பான் சிவஹாமி.. “ என மஹா கேட்க…
“ நாம சொல்லவில்லைனாலும் சாத்வியை கண்டிப்பா அவனே கூட்டிட்டு வருவான், நீ பார்க்க தானே போற! சாத்வி விஷயத்தில் பெத்தவங்களாக நாம நினைக்கிறதை அவன் அவளை பெத்தவனாகவே இருந்து செஞ்சிட்டு வருவான்.. நீ கவலை படாத அவளை வர வழைக்க வேண்டியது என் பொறுப்பு..” என சிவஹாமி சத்தியமே செய்ய
“ஆமாம் சிவஹாமி… நம்மளை விட அவனுக்கு சாத்வி மேல பாசம் அதிகம் தான்… நாம கூப்பிட்டா வர மாட்டா சத்ரி கூப்பிட்டா கண்டிப்பா வருவா.. சாத்வி கஷ்டபட்ட காலத்தையே நினைக்கிறதுக்கு பதிலா,அவளோட சந்தோஷமா நேரத்தை கழிக்கனும்“ என அந்த சந்தோஷ் தருணத்தை மனதில் வைத்து.. மஹா முகமெல்லாம் பூரிப்பாய் சிவஹாமியுடன் பேசிக்கொண்டிருக்க..
இரவெல்லாம் உறக்கத்தை தொலைத்து வந்த சங்கரன் , மனைவியின் பூரித்த முகத்தில் கடுப்பேற, அங்கே சிவஹாமி இருப்பதையும் சட்டை செய்யாது.
“பெத்த மகளை பத்தி ஒன்னுமே தெரியாமல் நிம்மதியில்லாமல், தூக்கமில்லாமல் இருக்குறேன்… உனக்கு கவலையே இல்லாமல் இங்கே சிரிச்சு பேசிட்டு இருக்க” என இவர் கத்த
அவ்வளவு நேரம் மகிழ்ச்சியாய் இருந்த மஹாவின் முகம் நொடியில் சுண்டிப் போனது
“ அண்ணே, சிரிச்சு பேசிட்டு இருந்தா சாத்வியை பத்தி கவலை படலைன்னு அர்த்தமா… ? சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசாதீங்க! உங்க மேலேயும் தப்பு இருக்கு, எப்போ பாரத்தாலும் மஹாவையே குறை சொல்லாதீங்க” என ஆதங்கமாய் கேட்டார்.
சிவஹாமியின் கேள்வியில் “இல்லை சிவஹாமி… சாத்வி எங்கே இருக்கான்னு தெரியாம ரொம்ப கஷ்டமா இருக்கும்மா! அப்போ செய்த தப்புக்கு இப்போ வருந்துறேன்மா.. அவளை பத்தி தெரியாமல் மனசு கிடந்து தவிக்குதும்மா ” என வருந்த..
‘இவராவது சாத்வியை பத்தி கவலை படுறதாவது.. இவர் நடிக்கிற மாதிரி தெரியுதே..’ என சத்ரி நினைத்துக் கொண்டிருக்கும் போதே..
அவரின் வருத்தத்தை காண சகிக்காமல் சிவஹாமி தான் போட்டு உடைத்தார் “சாத்வி பத்திரமா தான் இருக்கா அண்னே… அவளை பத்தி கவலை படாதீங்க. நாளைக்கே வீட்டிற்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கேன். சத்ரி கூட்டி வருவான்” என சொல்ல ‘சொத்’ என சத்தம் கேட்டு திரும்பி பார்க்க..
சத்ரி தன் தலையிலேயே அடித்துக் கொண்டான் வெளிப்படையாகவே..
’உங்களுக்குப் போய் பாவம் பார்த்து சாத்வியை பற்றி சொன்னேனே’ என வெளிப்படையாகவே முறைக்க..
அப்போது தான் செய்த செயல் உறைக்க ‘ஐய்யய்யோ? உளரிட்டோமோ..” என நினைக்கும் போதே, சிவஹாமியை பிடித்துக்கொண்டார் சங்கரன் “எங கே? எப்படி இருக்கா.. எங்கே தங்கி இருக்கா? சாத்வியை பத்தி சத்ரிக்கு தெரியுமா? எப்படி தெரியும்” என விடாமல் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க..
“சாத்வி பேங்கில் வேலை பார்க்கிறது மட்டும் தான் தெரியுமாம்..வேற எதுவும் தெரியாதாம்..” என சத்ரியை தயக்கமாய் பார்த்துக் கொண்டே சிவஹாமி கூற..
‘இவன் எப்படி கண்டுபுடிச்சான்..’ என்ற ரீதியில் க்ருத்திகாவும் வெங்க்கட்டும் நின்றிருந்தனர்.
விநாயகமோ “இவனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை… அவள் மேல் ரொம்ப ஓவரா தான் பாசம் வச்சுட்டானோ.. என்கிட்ட சொல்லவே இல்லையே சிவஹாமி” என விநாயகசுந்தரம் தன் மனைவின் அருகே வர..
சங்கரன் இது தான் நேரம் என விநாயகத்திடம் திரும்பி.. “மச்சான் நான் இங்கே எதுக்கு வந்தேன்னு உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே, சாத்விக்கு நல்ல வரண் ஒன்னு வந்திருக்கு, அதுவும் நம்ம ஊரிலேயே.. இதை தவிர வேற நல்ல வரண் சாத்விக்கு அமையாது அதுவும் இல்லாமல்..” என தயங்கி.. “போன மரியாதையை சாத்வியோட கல்யாணத்தில் தான் மீட்டு எடுக்கணும்” என அழுத்தமாய் கூற.
இதை தான் வீட்டிற்கு வந்த அன்றே சொன்னானே… என்ற பாவனையுடன்.. “யார் மாப்பிள்ளை..” என பதிலுக்கு விநாயகசுந்தரம் கேட்க…
“நம்ப கோதண்டம் மகன் ரமேஷ் தான்” என்றார் சங்கரன்
“ம்…ஆமாம் சங்கரன்… கோதண்டம் நம்ப ஊரில் பெரிய ஆளு தான்.. ஆனா பையனை பத்தி விசாரிச்சீங்களா” என கேட்க…
“விசாரிச்சுட்டேன் மச்சான்.. சாப்டுவேர் இன்ஜினியரிங் முடிச்சு அமெரிக்காவில் வேலை பார்க்குறானாம்! நல்ல சம்பளம்” என்றவர் கூடவே “ சந்தேகமா இருந்தா நீயும் விசாரிச்சுப் பாரு மச்சான்” என விநாயகத்திடம் சொல்ல.
அதற்கு பதில் பேசாமல் நின்ற விநாயகசுந்தரம் சிவஹாமி… இருவரையும் பார்த்தார் போல் நின்ற சங்கரன் “ என்னைக்கோ ஒரு நாள், நீ என் தங்கச்சியே இல்லைன்னு ரொம்ப அசிங்கமா பேசனேன்… அதை நீ நினைக்கவே இல்லைன்னு உன்னோட.. மச்சானோட நடவடிக்கையில் இருந்தே நான் தெரிஞ்சுகிட்டேன்… என் பொண்ணும் இந்த அளவு வசதியா இருப்பான்னு நான் நினைக்க கூட இல்லை…. இப்போ வரை கிருத்தியை நீங்க உங்க பொண்ணா தான் நடத்துறீங்க.. இதே மாதிரி என் இரண்டாவது பொண்ணும் சந்தோசமா வாழனும்ன்னு நான் நினைக்கிறேன் விநாயகசுந்தரம்… அதற்கு தகுந்த மாதிரி நல்ல வரணா சாத்விக்கு வந்து இருக்கு … எப்படியாவது இந்த சம்பந்தம் முடியனும் விநாயகசுந்தரம்…. இத்தனை நாளாய் ஊருக்குள்ள பெரிய மனுசனாய் சுத்திட்டு இருந்தாலும், முதுகு பின்னாடி பேசாதவங்க யாருமே இல்லை… எனக்கு சாத்வி ரமேஷோட கல்யாணம் நடக்கனும்… நாங்க சொன்னா கேட்க மாட்டா… ஆனா சத்ரி சொன்னா கண்டிப்பா கேட்பா.. நீங்க ரெண்டு பேரும் தான் சத்ரிட்ட பேசி…. இந்த கல்யாணத்தை நடத்தி கொடுக்கனும் விநாயகசுந்தரம்… இது ஒன்றை மட்டும் எனக்காக செஞ்சு கொடு மச்சான்… ” என கொஞ்சமும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழுத்தமாய் தனக்கு வேண்டியதை மட்டும் வேண்டியவர்களிடம் கேட்டார் சங்கரன்.
இதுவரை குழப்பத்தில் இருந்த சத்ரிக்கு மிக தெளிவாய் புரிபட நடப்பதை ஆழ்ந்து பார்த்தபடி இருந்தான்.
மஹாவும் சங்கரின் இந்த பரிணாமத்தை எதிர்பார்க்கவில்லை, என்பது மஹாவின் முகத்தில் அப்படியே தெரிந்தது.
சங்கரின் வார்த்தைகள் அனைத்தும் சாத்வியின் மீதான அன்பை பறை சாற்ற, அது அப்படியே சத்ரியை நோக்கி திரும்பியது விநாயகத்தின் மூலம்.
வருத்தம் கவலை என அனைத்தையும் பிரதிபலித்தபடி அமர்ந்திருந்த சங்கரின் தோள்களில் கையை வைத்து.. “நீ பேசின மாப்பிள்ளைக்கு ,சாத்வியை கட்டி வைக்க வேண்டியது எங்க பொறுப்பு” என சத்தியம் செய்யாத குறையாய் பேசியவர் “இல்லை இல்லை சத்ரியோட பொறுப்பு… சத்ரி பேச்சுக்கு சாத்வி மறு வார்த்தை பேச மாட்டாள்… .அதை பத்தின கவலையை நீ விடு.. எப்போ பேச வர்றாங்க….? எப்போ நிச்சயம்….?” என கேட்க…
விநாயகத்தின் பேச்சில் மனம் குளிர்ந்தது சங்கருக்கு.. அதில் முகம் பூக்க “மச்சான்… மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலை பார்க்கிறாராம்… அடுத்த மாத முதல் தேதி வருவாராம்… மூனு மாச லீவில் வராராம், வந்தவுடனே கல்யாணம் வச்சா தான்… திரும்ப போகும் போது சாத்வியை கூட்டி போக வசதியாய் இருக்கும்..அதனால் முடிஞ்சளவு இன்னும் இரண்டு இல்லை மூணு வாரத்தில் சாத்வியோட சம்மதம் கிடைத்தால் நல்லா இருக்கும்..” என சந்தோசமாய் மகளின் ஒளிமயமான எதிர்காலத்தை கண்களில் தேக்கி பேசினார் சங்கரன்.
“சரி விடு மூணு வாரம் இருக்கு இல்லையா“ என சங்கரிடம் கேட்டவர் “சத்ரி, நீ என்ன செய்வியோ.. ஏது செய்வியோ… தெரியாது… சாத்வியை சம்மதிக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு” அவன் தலையில் கல்லைப் போட, இல்லையில்லை பெரிய கப்பலையே தூக்கி போட அதில் இறுகி போய் அமர்ந்திருந்தான்.
அது போதாது என சிவஹாமி வேறு தலையிட்டு “சாத்வியை இன்னைக்கே நீ அழைச்சிட்டு வர்ற… இது என்னோட கட்டளை செஞ்சே ஆகனும்” என வெறுப்பேற்ற…
பல்லை கடித்து கடித்து வெறுத்தவன் இதற்கு மேல் யாரைக்கடிக்கலாம் என பார்த்து அன்னையின் அருகில் சென்றான்
இது தான் சாக்கென… “இதோ… சத்ரி இருக்கும் போது உங்களுக்கென்ன கவலை” என அவனை பிடித்து முன்னிருத்த
இடையில் புகுந்தார் சங்கரன் “சாத்வி கல்யாணத்தை நல்லபடியா முடிச்சு கொடுத்திடுப்பா.. அது போதும்” என ஆத்மார்த்தமாய் கூறிவிட்டு “சாத்வி கிட்ட சம்மதம் வாங்கிடு சத்ரி… நாள் கம்மியா தான் இருக்கு”என சொல்லிக் கொண்டிருக்கும் போதே
“அவன் பார்த்துப்பான் சங்கரன், நீ வா நாம கோதண்டம்கிட்ட ஆக வேண்டிய வேலையை பார்க்க சொல்வோம்” என இருவரும் நகர
அங்கிருந்த மஹா, சிவஹாமி இருவரையும் அப்படி ஒரு பார்வை பார்த்து.. மஹாவின் மேல் கோபத்தை காட்ட முடியாமல்.. தன் அன்னையிடம் திரும்பி
“ உனக்கென்ன ‘ பாகுபலி – சிவஹாமின்னு ‘ நினைப்போ… சும்மா கட்டளை போட்டுட்டு இருக்க..” என இவன் எகிறி
“நான் கூப்பட்டதும் அவள் வந்திடுவாளா.. எல்லாரும் என்னையவே கோர்த்து விட்டுட்டு இருக்கீங்க” என கோபம் ஏற
அவன் கோபத்தை பார்த்து “கண்டிப்பா நாங்க வந்தா எங்க கிட்ட பேச கூட மாட்டாளே! அது தெரிஞ்சும்” என மஹா இழுக்க
“சத்ரி , சாத்வி வாழ்க்கை நல்லா இருக்கனும்னு நினைச்சா… அவளுக்கு இந்த வரணை முடி… கோதண்டம் பத்தி தெரியாதவங்க நம்ப ஊரில் இல்லை… அவங்க வீட்டில் பொண்ணை கொடுத்தால் கண்டிப்பா சங்கரன் அண்ணனுக்கு போன மரியாதை திரும்ப வரும்… அதை விட சாத்விக்கு நல்ல எதிர்காலமும் இருக்கு… சொன்னதை செய்…. இரண்டு நாள் டைம் எடுத்துக்கோ…. ஆனால் அவ சம்மதம் கண்டிப்பா வேணும் ” என சிவஹாமி அவர் பங்கிற்கு கூறி விட்டு “ நீ வா…. மஹா…. மற்றதை அவன் பார்த்துப்பான்” என மஹாவை இழுத்துச் சென்றாள்.
சத்ரியும் முடிவெடுத்தவனாய் “மாப்பிள்ளை போட்டோ…. போன் நம்பர், அட்ரெஸ் கொடுங்க… சாத்விகிட்ட கல்யாணம் பத்தி பேசும் போது இதெல்லாம் இல்லாமல் முடியாது” என கேட்க
‘சத்ரியை ரொம்ப கட்டாயபடுத்துகிறோமோ.. ‘ என கவலையில் இருந்த மஹாவிற்கு அவனின் இந்த பேச்சு அந்த கவலையை போக்க
அடுத்த பத்து நிமிடங்களில் அவன் கேட்ட அத்தனையும் அவன் கைகளில் இருந்தது… அதையும் விநாயகமே வந்து கொடுக்க…
முதல் முறையாய் அமைதியாய் கேட்டான் சத்ரி “உடனே கல்யாணம் பண்ணனுமா… கொஞ்சம் தள்ளிப் போடலாமே” என
அதற்கு உடனே வந்தது பதில் சங்கரிடமிருந்து.. “ நான் அவளுக்கு கல்யாணம் பேச தான் வந்திருக்கோம்ன்னு தெரிஞ்சா , கண்டிப்பா வேற எங்கயாவது போய்டுவா.. படிச்சு முடிச்ச காலத்திலேயே தனியா போனவ… இப்போ சொல்லவே வேண்டாம்..” என முதன் முதலில் பார்த்த சாத்வியின் தோற்றம், ஆளுமை தந்த நினைப்பில் கூற
“ஓ… கல்யாணத்துக்கு அப்புறமும் ஓடிட்டா?” என நிதானமாய் கேட்க…
பின்னோடு வந்த விநாயகசுந்தரம் சட்டென “சத்ரி….நீ புளியை கரைச்சது போதும்.. சாத்வியை நம்ப ஊரிலேயே… நம்ப சொந்தத்துக்குள்ள கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணியாச்சு …இதை நீ தான் நடத்திக் கொடுக்கனும்” என முடித்துவிட
“இப்போ என்ன பண்ண சொல்றீங்க” என்றான் கடுப்புடன்
“சாத்வியோட கல்யாணம் உன் பொறுப்பு..” என முழு பொறுப்பையும் விநாயகசுந்தரம் அவன் தலையிலேயே கட்ட
“ஒரு வேளை சாத்வி யாரையாவது லவ் பண்ணி இருந்தா..” என விடாமல் கேட்டான் சத்ரி
சங்கரனின் முகம் அஷ்ட கோணல் ஆனதையும், அதை பார்த்தபடியே விநாயகத்தின் முறைப்பு அதிகமாவதையும் கண்ட சத்ரி…
“அவளுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு தெரியாமல் எப்படி முடிவு பண்ணுனீங்க” என அமைதியாகவே கேட்க
“கண்டிப்பா பிடிக்கும்… ஏனா நம்ப கோதண்டம் மகன் அப்படி” என சத்ரியின் கையில் இருந்த கவரை பிரித்து ரமேஷின் போட்டோவை காட்டினான்.
“வாங்கிப் பார்த்த சத்ரிக்கும் அப்படி தான் தோன்றியது… “சாப்ட் வேர் சைட் பசங்க எல்லாம் இப்படி தானே இருப்பீங்க நல்லா நார்த் சைட் ஹீரோ மாதிரி” என மனம் ஓடினாலும்…
சாத்வியின் திருமணத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டான்.
அதன் பின் தான் சாத்வியிடம் வந்தது, பேசியது, போன் நம்பர் பரிமாறியது, மாலை சந்திக்க ஏற்பாடு செய்தது எல்லாம்.
இதோ இப்போது சாத்வியின் அழைப்புக்காக காத்திருந்தான். எப்படி பேச போகிறோம்… எப்படி சமாளிக்க போகிறோம்… என்ற பயமும் தானாகவே வந்து அமர்ந்து கொண்டது..
வேலையிடையே அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்ப்பதும் ,அதில் சாத்வியிடம் அழைப்பு வந்திருக்கிறதா..!!!! என பார்த்து ஒவ்வொரு முறையும் தோல்வியை தழுவி…. சாத்வி கூப்பிடுவாளா? மாட்டாளா….? பெரும் குழப்பமே எழ.. இன்று தன்னுடன் பேசவில்லை எனில் நாளைக்கு அவள் இருக்கிற இடத்திலேயே போய் பேசுவோம்.. என முடிவெடுத்து ..
அதன் பின் தான் தன் வேலையை கவனிக்க சென்றான்..
பின் பிற்பகலில் வாட்ஸ் ஆப்பில் வந்த குறுஞ்செய்தியில் திகைத்துப் போனான். சாத்வி தன்னை சந்திக்க நேரம் இடத்தை குறித்து அனுப்பி இருந்தாள்..
பின் வீட்டிற்கு வந்து மீண்டும் ஒரு குளியல் போட்டு கிட்டதட்ட நான்கைந்து ஜீன், டீசர்ட்டுகளை மாற்றி கடைசியாக திருப்தி தரும்படி ஒரு உடையை அணிந்து கொண்டு சாத்வி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அங்கே கிளம்பி சென்றான்.
சாத்வி தன் கையில் இருந்த மொபைலையே வெறித்துக் கொண்டிருந்தாள்.
சத்ரி தன் நம்பரை சேவ் செய்து சென்றிருக்க , அந்த பெயரை பார்த்தபடி வெகு நேரம் நின்றிருந்தாள். மேனேஜர் அழைத்தது நியாபகம் வர பைலை எடுத்துக் கொண்டு சென்றாள்
பின் மாலையில் நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்து , அவனுக்கு கால் செய்ய போக அதை தவிர்த்து வாட்ஸ் அப் சென்றாள்.
தனக்கு வசதி படும் நேரமாய் பார்த்து , பேங்க் அருகில் இருந்த ரெஸ்டாரண்டின் இடத்தை வாட்ஸ் அப்பில் தட்டிவிட்டு அடுத்த வேலைகளை பார்க்க சென்றாள்…
மாலையில் எப்போதும் போல் வேலை முடித்து நிமிரவும், அவர்களின் சந்திப்பிற்கான நேரமும் நெருங்க.. அவனை காண சென்றாள்.
எந்த ஒரு அலட்டலுமின்றி புக் செய்தருந்த டேபிலில் இருந்தாள் சாத்வி.. சத்ரி வரும் முன்பே
வெகு நேரம் கழித்து வந்த சத்ரியின் புருவங்கள் மேலேறியது, கைகளை திருப்பி வாட்சை பார்க்கவும் மறக்கவில்லை… எப்போதும் ஆண்களை காக்க வைக்கும் பெண்களுக்கு மத்தியில் வேறுபாடாய் இருந்தது அவள் நடவடிக்கை
காலையில் எப்படி இருந்தாளோ.. சிறிதும் மாறாமல் இருந்தாள்… ஆனால் முகம் மட்டும் ‘வேலை பார்த்த களைப்பை ‘ அப்படியே காட்டியது..
நீளமான கூந்தல் அவளுக்கு பிடிக்கவில்லையோ.. இப்படி முதுகு வரை கட் பண்ணிட்டாளே என எண்ண வைத்தது அவளது கட்டை கூந்தல்
சுவாதீனமாய் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, அவளின் புடவை மடிப்புகள் மயில் தோகையென விரிந்து கிடக்க, அடக்கமான கேர்லிங் செய்த கூந்தல் ஒரு பக்க முகத்தை மறைத்து மறுபக்க முகத்தை பாதி நிலவென காட்டிக் கொண்டிருந்தது..
மொபைலில் பதிந்திருந்த பார்வையும், கோல்டு காபியை ரசித்து உறிஞ்சிய உதடுகளும்.. ‘ நான் வந்து வெகு நேரம் ஆகிவிட்டது’ என காட்டிக் கொடுத்தது
அவளை பார்த்தபடியே வந்து அவளெதிரில் அமர்ந்தான். அறவம் உணர்ந்து முகத்தை நிமிர்ந்து பார்த்து ‘வந்தாச்சா’ என்பது போல் பார்வை பார்த்து… தன் கையில் இருந்த கோல்ட் காபியை முடித்து
“சொல்லுங்க என்ன பேசனும்” என்றாள் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி