சங்கரிடம்…

“என்ன மாமா…. ரமேஷ் மூலமாக.. இவ்வளவு குழப்பம் நடந்திருக்கு…  ஒரு வார்த்தை கூட சொல்லலை..” என்றவன்

“போயும் போயும்..  இந்த பயலை போய்…  நம்ப சாத்விக்கு முடிச்சு இருக்கீங்க”  என மீண்டும் சத்ரியை பார்க்க

‘ஏதோ… முடிவு பண்ணிட்ட நடத்துண்ணே ’ என்ற ரீதியில் சத்ரி நின்றிருக்க, அதை புரிந்து கொண்ட ஷிவா மர்மமாய் புன்னகைத்து..

“நீயும் இது தான் சாக்குன்னு தாலி கட்டிட்ட.. அம்புட்டு தைரியமா..ல உனக்கு“ என அவன் தோளில் கை போட்டு தன் அருகில் இழுத்தவன்…  “என்னலே…. வாங்குன அடி மறந்திருச்சா” உரிமையாய் புன்சிரிப்புடன் சத்ரியை வம்பிழுக்க..

மற்ற அனைவரும் ‘இவனுங்க எப்போ ஒன்னு சேர்ந்தானுங்க’ என்ற ரீதியில் பார்த்திருக்க..

வெங்க்கட் மட்டும் ‘இவன் எதுக்கு சத்ரியை அடிச்சான்…எப்போ அடிச்சான்’ என்ற ரீதியில் யோசித்துக் கொண்டிருக்க..

அனைவரையும் கலைத்தது சாத்வியின் குரல்…

“நீங்களும் மறந்துட்டீங்க போல.. ஷிவா.. மாமா.. நியாபகப்படுத்தனுமோ” என இதழ்களில் புன்னகையுடன் அங்கே சாத்வியும் வர..

சத்ரியோ…  பளீரென சிரித்துவிட்டான்… சாத்வியின் கேள்வியில்…

“இது உனக்கு தேவையா.. வாலண்டியரா…. வாயை கொடுத்து மாட்டனுமா.. அதுவும் இந்த ராணி மங்கம்மாகிட்ட” என ஆள் காட்டி விரலை தன் முன் நீட்டியபடி தனக்கு தானே பேசினான் ஷிவா.

வெங்க்கட், சங்கரன், விநாயகசுந்தரம், சிவஹாமி… மஹா  என அனைவரும் ‘பே’ வென விழித்தபடி பார்த்திருக்க…

அவன் புறமாய் நீட்டியிருந்த விரல்களை விரித்து.. உரிமையாய் அவன் கைகளில் தண்ணீரை கொடுத்து, அதை குடித்த பின் காபி கொடுத்தாள்.

“இதில் எதுவும்  கலந்திருக்கியா.. இப்போவே சொல்லிடுமா” என ஷிவா பயத்துடன் அவன் கொடுத்த காபி கப்பை பார்க்க

அவனின் ஆராய்ச்சி பார்வையை பார்த்த சாத்வி…

“எம்மேல இவ்வளவு பயம் இருக்கா.. இந்த பயமே சொல்லுது…. நீங்க மறக்கவே இல்லைன்னு”     என அவளும் சிரிக்க..

அவள் சிரிப்பை குடும்பமே வாய் பிளந்து பார்த்திருக்க..

“ட்யூட்டி முடிஞ்சு அப்படியே வந்துட்டீங்க போல…  சாப்பிட என்ன செய்யட்டும் மாமா” என சகஜமாய் சாத்வி கேட்க

சத்ரியை  ஓரக்கண்ணால் பார்த்த ஷிவா… “என்ன கேட்டாலும் ரெடி பண்ணுவியா?” என கேட்க…

“நாட்டு கோழியை அடிச்சு, ஒரு பௌலில் சூப்…  ஒரு பௌலில் கோழி குழம்பு இது போதுமா”என சாத்வி சிரிக்காமல் கேட்க…

“சாத்வி” என வாய் பிறந்த ஷிவா…  இரண்டு கட்டைவிரலையும் மேல் நோக்கி காட்டி.. “சாத்வி சாத்வி தான்…” என ஆச்சர்யம் காட்ட..

கோழி…. சூப்…. குழம்பு…  இதெல்லாம் ஷிவாவுடன் சம்பந்தபடுத்தி பார்த்தாற். தவிர பள்ளி வாசலின் முன்பு வைத்து ஷிவா விற்கு குவிந்த தர்ம அடிகளும் நியாபகம் வந்தது . ஆனால் அந்த அடி எதற்கு என அப்போது புரியவில்லை.

ஆனால் இப்போது சத்ரிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது..அதுவும் தங்கள் ஊரில்…  கோழி ஆடு…  என்று ஒரு பெருங்கூட்டத்தையை வைத்திருக்கும் ஷிவாவின் பாட்டியும் சேர்ந்து நியாபகம் வந்தார்.

‘அடிப்பாவி…  என்னை தேத்துறதுக்கு…. கோழியை திருடினீயா.. ‘ என மனம் மலர்ந்து விகசிக்க..

“நீ போய் சமைச்சு வை..” என சாத்வியை அனுப்பி விட்டு “நீ வாடா… புது மாப்பிள்ளை” என அவன் தோள் மேல் கை போட்டு இழுத்துக் கொண்டு “எப்படி போகுது கல்யாண வாழ்க்கை..” என அவன் விலாவில் இடிக்க..

அதற்குள்… சங்கரன் “ஏன் மாப்பிள்ளை நீ அடிச்ச அடிக்கு.. எப்படி இரண்டு பேரும்” ‘எப்போ ஒன்னா சேர்ந்தீங்க… ’ என முழுவதும் முடிக்காமல்..  அரை குறையாய் பேச்சை நிறுத்த

“இவன் கூட கள்ள தொடர்பு வச்சு பல வருசம் ஆச்சு…  மாமா” என சிரித்தபடி சங்கரிடம் கூற

மற்ற அனைவரும் வாய் பிளந்து தான் நின்றிருந்தனர்.

வெங்க்கட் மட்டும் “சத்ரியை எதுக்கு அடிக்கனும்.. எதுக்கு அடிச்சீங்க” என சீற

“அய்யோ…. விடு வெங்க்கட் அதெல்லாம் ஒன்னுமில்லை” என சத்ரி மழுப்ப..

“ நீ எதுவும் சொல்லலையா…. இல்லை அவங்க எதுவும் கேட்கவேயில்லையா” சத்ரியிடமே ஷிவா கேள்வி கேட்க…

சத்ரியை சற்று நகர்த்தி “யாரும் சொல்ல மாட்றாங்க…  நீங்களாவது சொல்லுங்க” என ஷிவா முன் வந்து நின்றான் வெங்க்கட்

“உனக்கு தானே முதலில் தெரியனும்” என வெங்க்கட்டை பார்த்து கூறி

”ஏண்டா சொல்லலை… கூடப்பிறந்தவன்னு பாசமா?” என சத்ரியிடம் காய்ந்தவன்…

 “நீயும் க்ருத்திகாவும் சொல்லாமல் கொள்ளாமல் போயாச்சு. உங்களை தேடி அலைஞ்சு, கடைசியில் சத்ரிக்கு தெரிஞ்சிருக்கோமோன்னு சந்தேகபட்டு ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போய்ட்டேன். நீ பண்ணினதுக்கு சத்ரி எங்கிட்ட அப்படி அடி வாங்கினான், உடம்பை பிரிச்சுட்டேன். எப்ஐ ஆர் போட முன்னாடியே இவனை வெளியே எடுக்க…. பணமில்லை…. கடனுக்கு வாங்கி…  இந்த சாரை வெளியே கொண்டு வந்தாங்க.. கடன் தொல்லை தாங்காமல்.. இருந்த வீடு நிலமெல்லாம் வித்து கொடுத்துட்டு ஊரை காலி பண்ணியாச்சு”

“அன்னைக்கு அந்த அடி வாங்குனவன், என்னை தேடி உதவி கேட்டு வந்தான். எதுக்கு வந்தான் தெரியுமா..?  இதோ இங்க நிக்கிறாங்களே இந்த மேடம் இந்த மேடம்க்காக என்கிட்ட பேச வந்தான்”

“சாத்விக்கு படிப்பு முக்கியம்.. ஸ்கூலுக்கு அனுப்பி வைங்கன்னு” வந்து நின்னான்.

 “அதெல்லாம் பார்த்துக்கிறேன், ஊரை விட்டு போறியே எதுவும் ஹெல்ப் பண்ணவான்னு’ கேட்டேன்…

‘ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க.. சாத்வியை மட்டும் பார்த்துக்கோங்கன்னு ‘சொல்லிட்டுப் போய்ட்டான்.

அடுத்து மூணு வருசமா ஆளையே காணும்.  இவ… காலேஜ் போக ஆரம்பிச்சதும் எங்க இருந்து தான் வந்து குதிச்சானோ தெரியலை கை நிறைய பையோட வந்து, இதை சாத்வி கிட்ட கொடுத்துடுங்கன்னு போய்ட்டான்….

அதுக்கப்பறம் ஒரு நாலு மாசம் கழிச்சு வந்தான். சாத்விக்கு இனி நான் தான் பீஸ் கட்டுவேன்னு அவளுக்கு தேவையான பீஸ் எல்லாத்தையும் அவன் தான் என் மூலமாக கட்டினான்”

ஷிவா சொன்னதில் நிறைய அவளுக்கு தெரிந்த விஷயங்கள் தான் எனினும்

“சத்ரி வாங்கிக் கொடுத்தனா” என தான் ஷிவாவிடம் கேட்டதும்.. “இல்லை, காயத்ரி வாங்கி கொடுத்தாள் “ என ஷிவா மறுத்ததும்..  நியாபகம் வர….

ஷிவாவை தீ பார்வை பார்க்க…

“என்னை முறைக்காத, உன் புருஷன் தான் மறைக்க சொன்னான்” என சாத்வியின் முறைப்பிற்கு தக்கதாய் பதில் கொடுக்க..

சத்ரி இத்தனை வேலை பார்த்திருக்கிறானா….? என எல்லோரும் மூக்கின் மீது விரல் வைக்காத குறை தான்… சாத்வியோ..இதயத்திற்குள் இரண்டு மடங்கு இரத்தம் பாய்ந்தார்ப்போல் நின்றிருந்தாள்.

கண்டிப்பு காட்டி காட்டி தன் மகளின் வாழ்விற்கு இன்னொருவன் உதவும் நிலைக்கு தானே காரணம் ஆகி விட்டோமே..என சங்கரன் முகம் கன்ற நின்றிருக்க…

காதல் திருமணம் என்ற ஒரு வார்த்தை , அதை ஏற்றுக் கொள்ளாவிடினும், அதன் கோப தாபங்களை அடுத்தவரின் மீதாவது புகுத்தாமல் இருந்திருக்கலாம்…  என சாத்வியின் வாழ்க்கையில் நடந்தவைகள் , நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் அனைத்தும் சங்கருக்கு மிகத் தாமதமாய் புரிய வைத்துக் கொண்டிருந்தன.

விளையாட்டாய் ஆரம்பித்த விசயம் பாறங்கல்லாய் கனக்கும் படி செய்தது ஷிவாவின் பேச்சு.

திருமணத் தம்பதிகளை பார்க்கவே வந்த ஷிவா. யாரையும் காயப்படுத்தும் எண்ணத்தோடு வரவில்லை.

ஆனால் தாங்கள் செய்த தவறால் என்ன நிகழ்ந்தது எனக் கூட தெரியாமல்…. இருக்கும் வெங்க்கட்டின் மீது கோபம் எழ அனைத்தையும் சொல்லி விட்டான்.

“பழசை எல்லாம் எதுக்கு கிளறனும்… மாமா…  வேண்டாம்… அவங்க அவங்க வாழ்க்கையில் நடக்குறதுக்கு அவங்க மட்டுமே காரணம்…  இதில் வெங்க்கட்டை ஏன் கஷ்டப்படுத்தனும்” என  இவன் கூறினாலும், அங்கிருந்தவர்களின் நினைவு முழுவதும் சத்ரி சாத்வியையே சுற்றிக் கொண்டிருந்தது.

படிக்கவில்லையென்றாலும்.. திறமையுடன் அங்கே பலமாய் காலுன்றி நின்ற சத்ரியும் படிப்பிற்கு எத்தனை தடங்கல் வந்தாலும்…  ஒரு பெண்ணிற்கு சுயமாய் காலுன்றும் தைரியம் எப்போதும் வேண்டும் என காட்டிய சாத்வியும்..

சிற்பியின் கைகளில் செதுக்கிய…  சிலையாய் மாறி இருந்தனர்…  தடைகற்களை தகர்த்தபடி…

இது மட்டுமே ஓடிக் கொண்டிருந்தது மற்றவர்களின் மனதில்…

பெரியவர்களால் அமைதியாய் மட்டுமே இருக்க முடிந்தது…  நல்ல வேலை க்ருத்திகாவும் திவ்யாவும்…  வெளியே சென்றிருக்க…  நல்லதாய் போனது…  வெங்க்கட்டிற்கு..

பேச வேண்டிய இடத்தில் அமைதியாய் இருப்பதும்…  அமைதி காக்க வேண்டிய இடத்தில் அதிகமாய் பேசுவதும் தான் நிறைய பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழியே போடுகின்றன..

அதை தான் அந்த பெரியவர்களும் செய்திருந்தனர்…  அப்போதும் இப்போதும்…

இதே மனதார உணர்ந்தார் சங்கரன்…

ஆளுக்கொருபுறமாய் அமைதியாய் இருப்பதை பார்த்து…. ஷிவாவை தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றான் சத்ரி… கூடவே சாத்வியையும்.

“மத்தங்களை கஷ்டப்படுத்த கூடாதுன்னு இப்போவும் நினைக்கிறீயேடா” என சோபாவில் அமர்ந்து

“அப்போ கல்யாணத்தை நிறுத்தினது நீ தான் இல்லையா” என ஷிவா அவனின் கூர் புத்தியை காட்ட

“ம்…ஆமா.. இப்போ அதுக்கென்ன” என சத்ரியும் சாத்வியும் அருகில் கிடந்த பெரிய சோபாவில் அமர. சாத்வி  கண்களை விரித்தபடி பார்த்திருந்தாள்..