அவள் “உன்னோட உயிர் வேணும்” என கேட்ட அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்..
“எடுத்துக்கோடி.. உனக்கு தான் இந்த உயிர் எடுத்துக்கோ! அப்போதாவது உன் காயம் ஆறினால் எனக்கு அது போதும்” என அவளை இறுக்கிக் கொண்டு.. தன் உயிரை ஊடுருவிச் செல்லும் குரலில் கூற
அவள் காயங்களுக்கு தன் உயிர் தான் மருந்தாகுமெனில் அதையும் தர தயாராய் நின்றிருந்தான் சத்ரி..
ஆனால் அவனை ஊடுருவும் விழிகளால் துளைத்தெடுத்தவள்..
“நீயா தான் கொடுக்கனும்.. நானா எடுத்துக்க மாட்டேன்” என தீவிரமாய் சொல்லி, அவன் முகத்தில் பரவிய குழப்பத்தை த்ருப்தியாய் பார்த்து சென்றாள் சாத்வி…
சாத்வியின் முகத்தில் தெரிந்த தீவிரம் இது வரை அவளிடம் காணாத ஒன்று..
சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தவனுக்குள்… குழப்பம் குழப்பம் குழப்பம் மட்டுமே.
திருமணமான ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் தன் காதலை தெரியப்படுத்துபவளிடம்… தாபம் கூடிக்கொண்டே சென்றது எனில்… அதை புரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் சாத்வியின் மீது நாளுக்கு நாள் கோபமும் சரிவிகிதமாய் கூடிக்கொண்டே சென்றது..
சாத்வியின் குழப்பம் தலையை குடைந்தது எனில்… சங்கரின் நடவடிக்கைகள் தலையையே வெடிக்க செய்தது..
திருமணத்திற்கு முன் வரை போட்ட ஆட்டமென்ன, இப்போது அடங்கி அமர்ந்திருப்பதென்ன.. இத்தனைக்கும் தாங்கள் இருவரும் அவரின் கண்களில் படும்போதெல்லாம்..ஏதாவதெரு ஆழ்ந்த பார்வை மட்டுமே இருக்கும்…
‘ஏன்…. எப்போதும் கொண்டிருக்கும் முறைப்பு கூட சத்ரியின் மீது காணமால் போய் இருந்தது ’
‘இந்தாளுக்கு தெரியாமல் நாம ஒரு வேலை பார்த்தால்… நமக்கு தெரியாமல் இவரும் ஏதோ வேலை பார்த்திருக்கிறார்ப் போலவே’ என மனதில் முணுக் கென சந்தேகம் எழ..
அடுத்து வந்த நாட்களில் சங்கரை கண்காணிக்க… சத்ரி சாத்வியின் திருமணத்தை கொஞ்சமும் தயங்காமல் ஏற்றுக் கொண்டதைப் போல் சாதாரண தந்தையாய் வலம் வந்து கொண்டிருந்தார் பெருங்குழப்பமே மிஞ்சியது… சத்ரிக்கு..
“ஏன்….? என்ன காரணமிருக்கும்” என யோசிக்க கூட முடியவில்லை சத்ரியால் அந்தளவு அவனை ஆக்கிரமித்திருந்தாள் சாத்வி.
எப்போதும் போல் விநாயகசுந்தரம் சங்கரன் இருவரும் பேசிக் கொண்டிருக்க…
“ஏன் சங்கரன் அங்கே ஊரில் முன்னே மாதிரி இப்போலாம் விவசாயம் ஓடறதில்லைன்னு கேள்வி பட்டேன் ”
“ம்…ரொம்ப மோசம் எல்லாம் இல்லை, உறுதியா நின்னா நடத்திடலாம்
ஆனால் எனக்கு தான் முடியறதில்லை… வயசியாயிடுச்சில்லையா.. அதுவும் தனியா… என்ன பண்ண….! எல்லாத்தையும் விட்டுட்டு இங்கேயே வேற வீடு பார்த்து வந்திடலாம்ன்னு இருக்கேன்“ என சங்கரன் கூற.
“ நிஜமாவா… சொல்ற … சங்கரன்”
“ம் ஆமாம் மச்சான்….எத்தனை நாளைக்கு கோபத்தை புடிச்சு தொங்கிகிட்டு…. நிம்மதியை அடகு வைக்க….அலுப்பு தட்டிடுச்சு மச்சான்.. இனி பேரன் பேத்தியை பார்த்துட்டு போய் சேர வேண்டியது…. தான்…. “ என சிரிக்க….
“அப்பறம் என்ன நம்ப வீட்டிலேயே இருந்திடவேண்டியது தானே” என
“அது சரி வராது மச்சான்“ என இழுத்தாலும்…அவருக்கும் அந்த ஆசை இருப்பதாய் தான் தெரிந்தது விநாயகத்திற்கு…
“ பக்கத்தில் ஒரு வீடு விலைக்கு வருதுன்னு வெங்க்கட் பேசிட்டு இருந்தாப்ல அதை மட்டும் விசாரி மச்சான். ஓரே வீடு சரிபட்டு வராது அதை விட… சங்கடமா இருக்கும்” என இழுக்க….
“ அதுவும் சரி என தான் பட்டது விநாயகத்திற்கு”
அதன்படி அடுத்து இரண்டு வாரங்களில்… சங்கரன் ஊரில் இருந்த எல்லாவற்றையும் விற்று…. சத்ரியின் வீட்டினை ஒட்டினாறப்போல் இருந்த வீட்டினை விலைக்கு வாங்கி குடி பெயர்ந்தார்…. இரண்டு வீட்டுக்கும் சேர்ந்தார் போல்….ஒரு வீட்டில் இருந்து…. மற்றொரு வீட்டிற்கு உள்ளிருந்து செல்லும்படி ஒரு கதவு மட்டும் வைத்துக்கொள்ள ஒரே வீட்டில் இருக்கும் உணர்வு அனைவருக்கும்.
அன்று தான் பால் காய்ச்சி…. முடித்திருக்க… சாவகாசமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.
அங்க இருந்த வீட்டிற்கு நாலு மடங்கு பணம் கொடுத்து வாங்கியிருக்க….
“நீ எப்போ வீடு கட்டின மச்சான் . திருச்சி வந்த புதுசுலேயே… கட்டியாச்சா.. ஆனால் வீடு புதுசா தெரியுதே” என கேட்க…
“ஐய்யோ வீடு கட்டி மூணு வருசம் தான் ஆகுது சங்கரன். திருச்சி வந்ததுமே வீடு கட்ட முடியுமா கட்ட பணம் வேணுமே… சத்ரி இல்லைன்னா இந்த வீடே இல்லை ” என விநாயகசுந்தரம் விரக்தியாய் சிரிக்க…
“சத்ரி தான் வீடு கட்டினானா?” என சங்கரன் ஆச்சர்யாமாய் பார்த்திருக்க…
“ ம்… சத்ரி தான் சங்கரன்… வேற யார் கட்டுவா?”
“ அப்போ வெங்க்கட் ”
“அவன் இப்போ ஒரு இரண்டு மூணு வருஷமாத் தான் கூட இருக்கான். பெங்களூரில் கஷ்டபட்டுட்டு இருந்தவனை அழைச்சுட்டு வந்ததே சத்ரி தான்” என நடந்ததை சாதாரணம் போல் சொல்லி….
“வீட்டுக்கு வந்தவனுக்கு அப்படி ஒரு அழுகை… ‘ என்னை ஏத்துக்க எப்படிப்பா மனசு வந்தது’ ன்னு கேட்டு.. ஆனா பாசத்துக்காக ரொம்ப ஏங்கிப் போய்ட்டான் போல… அவங்க அம்மா மடியிலேயே படுத்து இருப்பான்… நம்ப மருமக… அவளும்ல கூட சேர்ந்து படுத்துக்குவா.. வளர்ந்தும் இரண்டும் சின்ன புள்ளைங்க தான்” என சிரித்து
“எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால இங்கேயே நல்ல வேலையா தேடிக்கிட்டான். சம்பளமும் கூட தான். வீட்டு செலவுக்கு தனியா கொடுத்துடுவான்… எங்களுக்குன்னு வேற தனியா கொடுத்துடுவான்.. நாங்க வாங்கலைன்னதும் அக்கவுண்ட்ல மாசம் மாசம் இவ்வளவுன்னு ஒரு அமௌண்ட் போட்டுடுவான்.
மருமகள் பேருக்கு இரண்டு நகை தான் வச்சு இருக்கா… அவளுக்கு செஞ்சு போடுடான்னா கேட்க மாட்றான்.. க்ருத்திகாவும் வேண்டாம்ன்னு சொல்லுது..
சத்ரி கிட்ட சொன்னா… ‘அது உங்க பாடு… அவன் பாடு… என்னை இழுக்காதீங்கனுட்டான்’
சொல்றேன்னு தப்பா நினைக்காத சங்கரன் உன்னோட கோபத்துக்கு பயந்து தான். அவங்களா வாழ்க்கையை தேடிக்கிட்டாங்க.. அதுக்கேத்த மாதிரி தான் நீயும் நடந்துக்கிட்ட
‘கல்யாணம் ஆயிடுச்சு…. குழந்தை பிறந்திருச்சு… இந்த நிலையில் கண்டிப்பா நம்பளை ஏத்துப்பாங்கன்னு’ அப்போ கூட நம்பளை தேடி வரலை… வரவேயில்லை…
சத்ரி பார்க்கலைன்னா, இன்னும் அங்கேயே தான் இருந்திருப்பாங்க, இன்னும் கஷ்டப்பட்டு இருந்திருப்பாங்க.
எல்லாத்துக்கும் காரணம் நாம தான் சங்கரன்..
உன் மேல் இருந்த பயம்
என் மேல் இல்லாத நம்பிக்கை… இது ரெண்டும் தான் காரணம்… இனியாவது சாத்விகிட்ட முறைச்சிட்டு நிக்காத.. சங்கரன்” என நிறுத்தியவர்….
“இதை முதலிலேயே சொல்லனும்னு நினைச்சேன். ஆனா நீயே பேரன் பேத்தி தான் முக்கியம்னு இங்கேயே வந்துட்ட ஆனாலும் சொல்லனும்ன்னு தோணுச்சு சொல்லிட்டேன்…. தப்பா நினைக்காத” என விநாயகசுந்தரம் ஆழ்ந்த குரலில் பேச
“சே…சே… அப்படியெல்லாம் நினைக்கலை… ஆமாம் மச்சான்… சத்ரி மெக்கானிக் ஷாப் தானே வச்சு இருக்கான்! அப்பறம் எப்படி வீடு” என கேட்க
‘வெங்க்கட் சாப்ட்வேர் இன்ஜினியர் அவனின் அதிகமான சம்பளத்தில் உருவானது தான் இந்த வீடு என நினைத்திருக்க.’ அந்த எண்ணம் அப்படியே தலை கீழாக மாற… சத்ரியை தப்பாக மனதில் வரித்து விட்டோமோ என முதல் முறையாய் வருந்தினார்… சங்கரன்..
“மெக்கானிக் ஷாப்பா.” என வீடே அதிரும் படி சிரித்தவர் “நேரில் பார்த்தால் இப்படியெல்லாம் சொல்ல மாட்ட“ என மகனின் உழைப்பை பெருமையாய் பேசி…
“நாளைக்கு அவனோட கடை லீவ்… திங்கள் கிழமை கூட்டிட்டு போறேன்” என புன்னகைக்க… ‘அப்போ வேலையிலேயும் பய கெட்டிகாரன் தான் போலவே..’ என நினைத்துக் கொண்டார்.
மறுநாள்….
அனைவருக்கும் விடுமுறையாய் இருந்த ஞாயிறன்று ஷிவா வந்தான், புதுமணத் தம்பதிகளை பார்க்கும் பொருட்டு..
“வாங்க மாப்பிள்ளை….” என சங்கரன் மனதார வரவேற்க.. விநாயகசுந்தரம் பேசவா வேண்டாமா… என நின்றிருந்தார்..
“இதோ வந்துட்டேன் மாமா..” என சங்கரிடம் மலர்ந்த சிரிப்பில் கூறி…
“ எப்படி இருக்கீங்க சித்தப்பா” என விநாயகத்தையும் விசாரிக்க…
“நா… நான்…. நல்லா இருக்கேன்… தம்பி…. உட்காருங்க… காயத்ரி எப்படிப்பா இருக்கா, பேரன் இருக்கானமே,கூட்டி வந்திருக்கலாம் இல்லையா” என அவன் மனைவியையும் மகனையும் விசாரித்து
“சிவஹாமி… ஷிவா தம்பி வந்துருக்காப்பல“ என தயக்கத்தை விட்டு அங்கிருந்தே குரல் கொடுக்க
“பஞ்சாயத்து இருக்கும் போது… அவங்களை அழைச்சிட்டு வரது தப்பு சித்தப்பா” என சம்பந்தமில்லாமல் பேச
“என்ன? பஞ்சாயத்தா? மறுபடியுமா?” என மற்ற இருவருமே கோரசாக கேட்க
அந்த குரலில் மற்ற அனைவரும் வெளியே வர.. “வாண்ணே” என அழைத்தபடி சத்ரி அவனருகில் வர
அவனை பார்த்தபடியே “ஆமாம் பஞ்சாயத்து பண்ண தான் வந்தேன்” என சத்ரியை பார்த்தபடி..