பகுதி 20…

சத்ரி, சாத்வியை மாடிக்கு அழைத்துச் சென்றதும்…

ஏற்கனவே சாத்வி கேட்ட கேள்வி ஒவ்வொருவரினுள்ளும் பெரிய அதிர்வையே ஏற்படுத்தியிருந்தது.

 மஹா சங்கரன் என இருவரும் மகளின் நலனுக்காக செய்த செயல்களின் வீரியிம் சாத்வியை தவிர யாருக்கும் தெரியாத  ஒன்றாயிற்றே

“ரொம்ப அவசரப்பட்டுட்டோம்” என வெங்க்கட் சொல்லும் போது கூட உறைக்காத விஷயம்.

சாத்வியின் ஒவ்வொரு வார்த்தையிலும் சுழன்று அடிக்க…  யார் முகத்தையும் நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை கிருத்திக்கு.

மஹா.. பெற்ற மகளுக்கு  தான் ஒரு “நல்ல தாயாய்” இல்லையென நினைத்தவருக்கோ… ஒரு “சாதாரண தாயாய்” இருக்க கூட தகுதியில்லை என தான் தோன்றியது…

சங்கருக்கோ…. மிகுந்த அவமானம் தான்…. சாத்வியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காத போதும் அழுத்தமாய் மனதில் பதியும் படியான சாட்டை அடி கொடுத்திருக்க அசையாமல் நின்றிருந்தார்.

வெங்க்கட் தான் அமைதியை உடைத்தான் “சாத்வி பேசினதெல்லாம் உண்மையா மாமா…  அவளுக்கு என்ன தான் ஆச்சு…  இப்போவாவது சொல்லுங்களேன்….” என சங்கரிடம் கேட்க…

“ இதோ பார் வெங்க்கட்…. இன்னைக்கே எல்லாம் பேச முடியாது…  ஆனால் சத்ரியோட படிப்பு நின்னது, திருச்சி வந்தது, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சாத்வி நாக்கை பிடிங்கிக்கிற மாதிரி கேட்டுட்டு போனாளே.. எல்லாத்துக்குமே பிள்ளையார் சுழி போட்டு வச்சது..உங்களோட கல்யாணம் தான்…  இதை மட்டும் தெளிவான சொல்ல முடியும்…. மத்ததை எல்லாம் அப்பறமா பேசலாம்…  நேத்து தான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு, அதுக்குள்ள பிரச்சனையை ஆரம்பிக்கனுமா.. சாத்வி ஏதோ…  கோபத்தில் பேசுறான்னா…. நீயும் பதிலுக்கு கேக்கனுமா…” என சிவஹாமி தான் அங்கிருந்தவர்களை கலைக்கும் படியானது…

தங்களின் அறையில் ஜன்னல்களில் பார்வை பதித்து, அழுகை முட்டிக் கொண்டு வர…  அதை அடக்கியபடி திணறிக் கொண்டிருந்த க்ருத்திகாவை…. தோளில் கை போட்டு தன் புறமாய் திருப்பினான் வெங்க்கட்…

“நீங்களும் நானும் சந்தோஷமா கல்யாணம் செய்துகிட்டாலும், சந்தோஷமா வாழலையே வெங்க்கட்.. சாத்வி நிலைக்கு நாம தான் காரணம்னு சொல்லும் போது.. வலிக்குது வெங்க்கட்…  லவ் தப்பா வெங்க்கட்…  லவ் பண்ணனவனையே கல்யாணம் பண்ணினது தப்பா.. “ என வெங்க்கட்டை பார்க்க…

அழுகை சுமந்த விழிகளை காண சகிக்காதவனாய்…  தன் மேல்  சாய்த்துக் கொண்டான்.. என்ன சொல்லி சமாதானம் செய்வது என அவனுக்கே தெரியாத போது.. வெங்க்கட்டும் என்ன செய்வான்… அழும் மனைவியை சமாதானம் செய்வது மட்டுமே  தெரிய…

“நம்பளோட சுயநலம் தான் எல்லாத்துக்கும் காரணம்…  விடு… நான் சரி பண்றேன்…  சாத்வியே உங்கிட்ட வந்து பேசுவா ” என இப்போதைக்கு வெங்க்கட் அவளை சமாதானம் செய்தான்….

சங்கரின் கண்கள் ஓரிடத்தில் நிலை குத்தியிருக்க, அவரை வருத்தத்துடன் பார்த்தபடி மஹா இருக்க இருவரையும் கவலையுடன் பார்த்தபடி அங்கே வந்தனர், விநாயகமும்,சிவஹாமியும்.

“ சாத்வி கோபத்தை கொட்டிட்டு போய்ட்டா, அடுத்து நீ மலையேற போறியா..” என விநாயகசுந்தரம் கேட்க….

“ நான் மலையேறின காலமெல்லாம் போச்சு மச்சான்…  இனி மலையேறி என்ன பிரயோஜனம்  சாத்வி ஒழுக்கமா இருக்கனும்ன்னு தான் அவளை இறுக்கி பிடிச்சேன்…. ஆனா, அவ்வளவையும் உள்ளேயே வச்சு புழுங்கி இருக்கான்னு நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு”

“ இப்போவாவது நீ புரிஞ்சுகிட்டயே….  சாத்வி பாவம்டா…. எங்க கண்ணு முன்னாடியே அந்த பாடு படுத்துன…  நாங்க இல்லாதப்போ…என்ன செஞ்சயோ..” என சங்கரை நேரம் பார்த்து கேட்க…

“இப்போவும் சொல்றேன் மச்சான்..  ஒரு அப்பாவா…. நான் செஞ்சது சரி தான் மச்சான், ஒரு நாளும் நான் மாத்திக்க மாட்டேன்…  அது திமிர் புடிச்ச கழுதை தான்” என அப்படியே நிற்க….

‘அப்பனும் மகளும் தலையால தண்ணி குடிக்க வைக்குறானுங்களே’ என விநாயகசுந்தரம் தான் ஓய்ந்து போய்.. சிவஹாமியை துணைக்கு அழைக்க…

அங்கே முடிஞ்சதும் இங்கே ஆரம்பிக்கிறாங்களே…. என சிவஹாமி தான் இடையில் நுழைந்தார்.

“அப்பாவாச்சு, மகளாச்சு…. எங்களை விட்டுடுங்க.. இப்போ ஒரு மாப்பள்ளை வீட்டு காரங்களா எங்க பேச்சை கேளுங்க..நம்ப வம்சம் தலைக்கனும்..  நேத்து தான் நம்ப புள்ளைங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டாமா….” என சிவஹாமி கிட்டதட்ட மிரட்டி கிளம்ப வைத்தார்..

இவர்கள் ஆளுக்கெரு புறமாய் இருக்க.. சாத்வி பேசயதை ஜீரணிக்க முடியாதவனாய் அவளை அலேக்காய் தூக்கி சென்ற சத்ரி..

மாடியில் தங்கள் அறையில் அவளை இறக்கி விட்டு “பேச வாய் இருந்தா, என்ன வேணா பேசுவியா…  நீ” என பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க…

அவனிடம் இருந்து பிரிந்து நின்றவள்..

“ஏன் உண்மை தானே…  உன் இடத்தில் வேற ஒருத்தன் இருந்திருந்தா, ‘எனக்கு எதுவும் வேண்டாம் ,உன் நிம்மதி தான் வேணும்ன்னு தள்ளியா இருந்திருப்பான்..’ இல்லையே! அதுவும் மாப்பிள்ளை மாறின  கூத்தையெல்லாம் பார்த்திருந்தான் கண்டிப்பா என் உடம்பு புண்ணாயிருக்கும்” என முகத்தை வேறு புறம் திருப்ப….

“ஏன், நான் மட்டும் புண்ணாக்கமாட்டேன்னு.. என்ன நிச்சயம்..?” என அவளை கூர்மையாய் பார்க்க..

“ ம்ஹூம்…  உன்னால் என்னைக்குமே அது முடியாது சத்ரி..” என அவன் விழிகளோடு, கர்வமாய்.., தன் விழிகளை கலக்க விட்டாள் சாத்வி..

“இவ்வளவு நம்பிக்கை ,என்மேல் வைக்காத சாத்வி… அது பொய்யாகும் போது நீ தான் கஷ்டப்படுவ..”என அப்போதும் முறைத்து நின்றான் அப்படி ஒரு நாளில் எப்படி நடந்து கொள்வோம் என அறிந்தவனாய்…

ஆனால் அப்போதும்…  தன் நம்பிக்கையை விடாமல் “கண்டிப்பா..அது மட்டும் உன்னால் முடியாது சத்ரி, உன் மேல் நம்பிக்கை வைக்காமல் என்னாலும் இருக்க முடியாது. என்னை கஷ்டபட விட உன்னாலும் முடியாது… இப்போ கூட… அம்மா அப்பா, கிருத்தி, வெங்க்கட் மாமான்னு…  எல்லோரையும் நான் காயப்படுத்திடுவேனோன்னு தானே என்னை பேச விடாமல் தூக்கிட்டு வந்த…  என்னால மத்தவங்க காயப்படறதையே விரும்பாத நீ.. என்னை காயப்பட தான் விட்ருவியா..” என சாத்வியின் முகம் கர்வமாய் மாறியது.

தன்னை சரியாய் தெரிந்து வைத்திருக்கும் சாத்வியின் மீது சொல்லில் அடங்கா உணர்வுகள் அவனுள் எழ அதை அடக்கியபடி

“ஆனாலும்  இந்த திமிர் என்னைக்குமே ஆபத்து தான் சாத்வி.. ” என

“ஆனால், இந்த திமிர் எனக்கு பிடிச்சிருக்கே.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே…சின்ன வயசில் இருந்து இதோ இப்போ வரை..என்னை பொத்தி பொத்தி பாதுகாக்குறது அவ்வளவு பிடிச்சிருக்கே” என அவன் விழிகளோடு சங்கமிக்க…

தன் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் இந்த சாத்வி, புதிதாக தான் தெரிந்தாள்…சத்ரிக்கு….மேலும்

அவள் விழிகளோடு  கலக்க முடியாமல் “அதான் பொத்தி பாதுகாக்க தான் , நானிருக்கிறேனே…  இனி அத்தை மாமா, வெங்க்கட், கிருத்தின்னு யார் கிட்டேயும் கேள்வி கேட்டு அவங்களை கஷ்டபடுத்தாத.. உன்னோட லைப் இனிமேல் நான் தான், நான் மட்டும் தான், உன்னோட கோபமோ, பாசமோ…. இனி என் மேல் மட்டும் தான் காட்டனும்.. நடந்து முடிஞ்சதுக்கு…. முடிஞ்சது தான் அனாவசியமா பேசி நிம்மதியை கெடுத்துக்காத   அவங்களோட கஷ்டத்தில் , உன்னோட சந்தோஷத்தை தேடாத.. அப்படி கிடைக்கிற சந்தோஷம்  நிலைக்கவும் செய்யாது..” என கூர்மையாய் அவளை பார்த்தபடியே பேச…

“சரி….சரி… நீ சொல்ற எல்லாமே சரி தான்…. ஒத்துக்கிறேன்..அவங்களை கஷ்டபடுத்தலை…  கண்டபடி பேசலை..ஆனால் தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கொடுக்கலாம் இல்லையா..”

“தண்டனை..…யா.. தண்டனை கொடுக்கிற அளவுக்கு அப்படி என்ன தான் செஞ்சாங்க“

சாத்விக்குரிய அனைத்து கடமைகளும் பொறுப்புகளும் மட்டும் தான் மறுக்கப்பட்டு இருக்கின்றது என நினைத்துக் கொண்டிருந்த சத்ரிக்கு’ என்னை ஒரு வேளை சாப்பிட விட்ருப்பீங்களா, படிக்க விட்ருப்பீங்களா’ என சாத்வியின் ஆக்ரோஷமான பேச்சுக்கள் நியாபகம் வர  மனதில் இருப்பதை அப்படியே கேட்டான்.

“என்ன செஞ்சாங்களா…  என்ன செய்யலைன்னு கேளு” என சாத்வியின் முகம் இறுகிக் போக

 “இதோ…. இதை பார், அப்பவாவது என்னோட கோபத்துக்கான காரணம் புரியும்” என அவளது அறையில் மேல் ஸ்லாப்பில் பல வருடங்களுக்கு முன் கட்டி வைக்க பட்டு இருந்த பெரிய அட்டை பெட்டியை  இறக்கி.. உள்ளிருந்த நோட்புக்குகள்  அனைத்தையும் கட்டிலின் மேல் வைத்தாள்..

அது சாத்வியின் பள்ளி காலத்தில் வாங்கிய நோட் புக்குகள் என தெளிவாய் தெரிய…

சத்ரியோ.. புரியாது அவளை பார்க்க.. “ம், எடுத்து பாரு சத்ரி” என அவனை உந்த.. மெதுவாய் கட்டிலில் அமர்ந்து.. ஒரு நோட்டை எடுத்து..   அதை திறந்து பார்க்க..

முதல் பக்கத்தில் “ ச.சாத்வி.. IX – B” என எழுதியிருக்க…  ‘நையன்த் லயேவா.. அப்போ இருந்தே வா..’ என அடுத்த பக்கம் திருப்பினான்.

ஒவ்வொரு பக்கங்களையும் இரண்டு பத்திகளாய் பிரித்து.. “ ஸ்ரீ ராம ஜெயம்”  ஐ, ஒரு சிறு இடைவெளி கூட இல்லாமல் எழுதியிருந்தாள்.

என்னவோ…. ஏதோ.. என திருப்பியவனுக்கு தெரிந்ததெல்லாம் “ஸ்ரீராம ஜெயம்” மட்டுமே.

 அதை வைத்து விட்டு அடுத்த நோட்டை எடுத்து முழுவதுமாய் பிரட்டி பார்க்க..

எல்லாவற்றிலும் “ஸ்ரீராம ஜெயமே”  மேலும் அடுத்தடுத்து நோட்டுகளை புரட்டி பார்க்க…  அனைத்திலும் “ ஸ்ரீராம ஜெயம்” மட்டுமே…

குழப்பம் மட்டுமே மிஞ்சியது…. ‘அவசரம் வேண்டாம், நிதானமாய் பார்…’ என கட்டளையிட்ட மூளையை பின்பற்றி , பக்கங்களை மெதுவாய் புரட்டி பார்க்க தொடங்கினான்.

அவளின் எழுத்துக்களின் தோரனைகளே நிறைய விஷயங்களை கூறியது சத்ரிக்கு..

சில நேரங்கள் வரை தொடர்ந்து எழுதியிருக்கிறாள்….

சில நேரம் ஒரு பக்கத்திலேயே முடிந்து விடும் அவளின் சீரான எழுத்துக்கள்..

இதோ இங்கே விடாமல் வெகு நேரம் எழுதியிருக்கிறாள்..

 ஒவ்வொரு பக்கங்களிலும் தொடர்ச்சியாகவும், தொடர்ச்சி இல்லாமலும் பதிந்த அவளின் கையெழுத்தும், வேறுபட்ட பேனா மைகளும் வெவ்வேறு எண்ணங்களை தோற்றுவித்தன….

இங்கே எழுதும் போது அழுதுட்டே எழுதியிருக்கா..   ஒரு சில இடங்களில் காட்டிக் கொடுத்த கண்ணீர் தடங்கள்..

“ஸ்ரீஸ்ரீராம ஜெயம்’ எழுதும் போதே சாத்வி  எந்த மனநிலையில் இருந்தாள் என்பதை  அவளின் எழுத்துகளே  அப்படியே எடுத்துகாட்டியது.

“எதுக்கு சாவி.. இவ்ளோ..” என நோட்டை பிரட்டியபடி கேட்டவனுக்கு..  தான் தான் எழுத வைத்ததே என்பது மறந்து போக.. அதை அவனுக்கு நினைவூட்டினாள் சாத்வி…

“ நீ தானே சத்ரி என்னை எழுத வைத்ததே.. தருணோட என்னை பார்தப்போ நீ எனக்கு பண்ணின அட்வைஸ் எல்லாம் மறந்து போச்சா?” என அசால்ட்டாய் சாத்வி கூற

நோட்டை பிரட்டியவனின் கைகள் ஸ்தம்பித்தது.. தன்னிலைக்கு மீண்டும் திரும்ப இரண்டு மூன்று நிமிடங்கள் பிடித்தது..

“ சாவி…  சாவி.. நான்…. உன்னை டைவர்ட் பண்ண தான்..”

” நான்…  எந்த அர்த்தத்தில்”  என வார்த்தைகள் தடுமாற..

அவனுக்கு அந்த தடுமாற்றத்தை கூட தர விரும்பாமல்…

“நீ எதை காரணமாய் வைத்து ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொன்னேன்னு தெரியாது.. சத்ரி.. ‘சாத்வி…. உன்னோட உணர்வுகளுக்கு வடிகால் தேடாதே’ ன்னு சொன்னது நியாபகம் இருக்கா” என நிறுத்தியவள்..

“ஒரு வயசுக்கு மேல தான் சத்ரி உணர்வுகளை அடக்கி அதற்கு வேற வழி தேடாமல் இருக்க முடியும்.. ஆனால் எனக்கு அந்த வயதில் அம்மா அப்பாவுடைய பாசம் கிடைக்காத ஏக்கம், அவங்களோட உதாசீனம் இதையெல்லாம் எப்படி மறைக்க முடியும் மறக்க முடியும்…  எப்படி தாங்குவேன் சத்ரி.“

“ப்ரண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணிக்க கூட முடியாது.. ரொம்ப அவமானமா இருக்கும்” என

பள்ளி செல்ல தடை விதைத்ததில் இருந்து வேலைக்கு செல்ல மறுத்தது வரை ஒன்றுவிடாமல் கூற.. கண் இமைக்க கூட மறந்து போய்.. கண்கள் வெறிக்க சாத்வியையே பார்த்திருந்தான் சத்ரி.

சொல்லி முடித்தவளுக்கு பாரம் இறங்கியதென்றால், கேட்டவனுக்கோ அதை விட அதிக வேகத்தில் பாரம் ஏறிக் கொண்டது

“இவ்வளவு கஷ்டத்தையும்.. எப்படி எனக்குள்ளேயே வச்சுக்க முடியும்?   எப்படி அடக்க முடியும்.. அதை அடக்கும் வழி!  இதற்கு மட்டும் தான்  இருந்தது” என அவளின் பார்வை கட்டிலை நிறைத்திருத்த நோட் புக்குகளை பார்க்க..

சத்ரிக்குள் எழும் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்த என தெரியாமல் தலையை கைளில் தாங்கியபடி அசையாமல் இருந்தான்.

 “நீ இல்லாமல் நான் சந்தோஷமா இல்லை சத்ரி,.. உன்னோடவே என் சந்தோஷச்தையும் எடுத்துட்டு போய்ட்ட” என குனிந்திருந்த அவன் தலையில் ஒவ்வொரு இடியாய் இறக்கினாள்..

“நீ மட்டும் ஊரை விட்டு போகமால் இருந்திருந்தால்?” என நிறுத்த சட்டென தலையை தூக்கி பார்த்த சத்ரியனிடம்.. கட்டிலில் கை காட்டி..

 “இதற்கெல்லாம்  வேலையே இல்லாமல் போய் இருக்கும் சத்ரி…” என அடுத்த இடியை இறக்க சத்ரியின் இதயமே ஒரு முறை  துடிப்பை நிறுத்தியது..

“ என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதில், பர்ஸ்ட் ரேங்க் உனக்கு தான் சத்ரி.. அப்பா, அம்மா…. ஏன் கிருத்தி கூட உனக்கு பிறகு தான்” என அவள் உணர்வுகள் வெடிக்க ஆரம்பிக்க..

“ சாவி..” என அதிர்ச்சியை காட்டனான் சத்ரி

“எல்லோரை மாதிரியும் என்னை என்னோட அம்மாகிட்டேயே வளர விட்டிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது சத்ரி.. காலையில் உன் முகத்தை பார்த்து விடியிற நாள், உன் முகம் பார்க்காமல்.. அடையவே அடையாது…  இதை எனக்கு பழக்கமாக்கி விட்டதே நீ தான்”

“என்னை என் அம்மாகிட்டயே விட்டு இருக்கலாம் சத்ரி..  அவங்களோட பொண்ணாவே உன் பாசத்தை தெரிஞ்சுக்காமலேயே வளர்ந்திருப்பேன்” என அடுத்தடுத்து வார்த்தைகளாலேய அவனை சுட்டெரிக்க அவள் பேச பேச

சத்ரியின் கூர் விழிகள் அதன் கூர்மையை இழக்க..

இதழ்கள் அதன் பாஷையை மறக்க…

செவிகள் அதன் தனித்தன்மையை வெறுக்க….

இதயம் ஒரீரு நொடிகள் அதன் இயக்கத்தையே நிறுத்த…

கண்கள் மட்டும் உயிர்பெற்று…. கையில் விரித்து இருந்த பக்கங்களில் நிலைக்க.. கண்களோ…  கண்ணீரை நிறைத்தது..

 ஒரு சொட்டு கண்ணீர் அவன் கன்னங்களில் உருண்டோடி… தாடையில் சரிந்து…   அவள் எழுத்துக்களின் மேலேயே விழ..

இன்க் பேனாவினால் எழுதிய எழுத்துக்கள், அவன் கண்ணீரை.. தனக்கு கிடைத்த மருந்தாய் எண்ணி  தனக்குள் இழுத்துக் கொண்டது.

அடுத்த சொட்டு கண்ணீர் விழும் முன்  சாத்வியின் கைகள் அதை ஏந்தியிருக்க..

நீர்திரையிட்ட விழிகளோடு, அவளை நிமிர்ந்து பார்க்க…  “உன் கண்ணீர்  என்னோட எழுத்துக்களை கரைச்ச மாதிரி.. உன்னோட பாசத்திற்கு என்னையவே கரைக்கிற அளவுக்கு சக்தி இருக்கு.. அழாதே  கரைஞ்சிடுவேன்.. உனக்குள்ளயே கரைஞ்சிடுவேன்..” என்றவள்

“இங்கேயே இந்த நிமிஷமே கரைஞ்சு காணாமலே போய்டனும்னு தோணுது” என அவனின் இதயமிருக்கும் பக்கத்தை தொட்டு காட்டி.. “இங்கேயே கரைஞ்சு காணாமல் போய்டனும் தோணுது”  என விழிகள் நான்கும் உறவாட

சத்ரியோ உணர்வுகளின் கொந்தளிப்பில் சிக்கி… அதனை தாக்குபிடிக்கமுடியாமல்..

கையில் இருந்த நோட்புக்கை ஒரு புறமாய் வீசி எறிந்து விட்டு  தடுமாறிய கால்களை, நிதானப்படுத்தி போகும் அவனையே பார்த்திருந்தவள்…

“இதே, இடத்தில் வேற ஒருத்தன் இருந்திருந்தா.. சமாதானம் செய்றேன்னு.. அட்வான்ட்டேஜ் எடுத்திருப்பான்… ஆனால் நீ..”

“இதாண்டா…. இது தாண்டா…  நீ…. என்னோட சத்ரி..” என அவன் வெளியேறும் முன் வார்த்தைகளை அவனிடம் வீச..

மீண்டும் ஒரு முறை வேலை நிறுத்தம் செய்தது அவனின் இதயம்…

“ உணர்வுகளுக்கு வடிகால் வேண்டாம்..

ஆனால் மரணம் தேடும் உணர்வுகளுக்கு..

 நீ தான் வடிகால் என அறிவாயா…

மரணித்த உணர்வுகளுக்கு என் எழுத்துக்கள் சமர்பணம்…

ஒரே எழுத்துக்கள் தானே என எண்ணாதே…

ஒவ்வொரு எழுத்தின் பின்னும் என் உணர்வுகளின் மரணம்….

எழுத்துகளை கரைத்த உன் கண்ணீர்…

உயிர்தெழ வைக்குமா என் உணர்வுகளை”

 என அவளின் உணர்வுகள் தன்னுடனேயே தன் பின்னேயே வருவது போல் ஓர் உணர்வு..மாடிப்படியில் நின்றவனுக்கு மூச்சும் அடைத்தது..

அதிலிருந்து வெளி வரமுடியாமல் தவித்து  நின்றிருந்தான்