பகுதி 18

சத்ரியை இப்படி நிலையில், பார்ப்போம் என ஒரு நொடி கூட நினைத்ததில்லை சாத்வி அப்படி ஒரு பரவசம்.

சிறு வயதில் தனக்கு தாயாய் தந்தையாய் தோழனாய் இருந்தவன் இடையில் விட்டு சென்றபின் அந்த வயது பிரிவை எண்ணி வருத்தம் கொண்டது என்னவோ உண்மை.. ஆனால்… ’எப்போதும் தன்னுடன் வரும் உறவல்ல அவன்.. அப்படி ஓர் உறவு அமைந்தாலும் அதை தொடரும் நிலை இருவருக்கும் அமையவில்லை‘ என்ற நிதர்சனம் உரைக்க.. ‘அவ்வளவு தான் இனிமேல்  சத்ரி வரவே மாட்டான்’ என நினைத்துக் கொண்டாள் சாத்வி…. அவனுடனான, தோழமையான காலங்களை, அவள் செல்லும் ஒவ்வொரு இடமும் கூறினாலும், அது ஓர் அழியாத நினைவாய் பதிந்து போனது அவளின் மனதில்..

 ஆனால் மீண்டும் அவன் வேண்டும் என்ற ஏக்கம் வர விடாமல் தடுத்ததும் சத்ரியின் வார்த்தைகளே “உன்னோட உணர்வுகளுக்கு எந்த ஒரு வடிகாலும் தேடாதே” என்ற வார்த்தைகள் அழுத்தமாய் மனிதல்  பதிந்திருக்க…   அவனை தன் கடந்த கால நினைவடுக்கில் அமர்த்திக் கொண்டு  நிகழ் காலத்தை அவன் நினைவுகளுடனே கழித்தாள்.

ஆனால் இவ்வளவு அழுத்தமாய் தன் மனிதில் அமர்ந்திருக்கிறான் என அவனது ஒற்றை நகல் காட்டிக் கொடுக்க.. ஆட்டம் கண்டது அவள் இதயம்…. தோழனாய் இருந்தவனை இத்தனை வருடங்கள் கழித்து காதலனாய் தன் மனதில் உருக்கி வைத்துக் கொண்டது அவள் மனம்..

சிறு வயது முதல் தன்னை நீங்கிய நாட்கள் வரை மீண்டும் ஓர் நினைவலையில் , சாத்வியை அடித்து சென்றான் சத்ரி…

அவனை பார்க்க வேண்டும் போல் ஓர் ஆவல், பேராவல்..

“என்னை தனியா விட்டுட்டு போய்ட்டேலே..”

“ஏண்டா போன”

“எதுக்குடா போன” என அவனிடம் இருக்கும் கோபத்தை அவனிடமே காட்டும் வெறி

சத்ரியின் மீதான அன்பு அதிகமா, இல்லை கோபம் அதிகமா என இரண்டையும் பிரித்தறிய முடியா நிலை..

 சத்ரியையே வெகு நேரமாய் பார்த்திருந்தாள் சாத்வி.., புதிதாய் ஓர் உணர்வு

‘சத்ரியின் கண்களின் ஈர்ப்பினாலா… பளிறிட சிரித்த சிரிப்பினாலா.. இல்லை எப்போதும் அவன் முகத்தினை சந்திக்கும் போது கிடைக்கும் அமைதியா இல்லை.. என நிறைய “இல்லை“ இல்லாமலே போனதலா? என ஸ்கீரினில் தெரிந்த அவன் முகத்தை வெறித்து பார்த்தபடி இருந்தாள்.

சிறிய ஸ்னாப்பாக பார்த்தது போதாது என அதை பெரிதாக்கி பார்க்க…. இன்னும் ஆணழகனாய் இருந்தான்..

வேறு போட்டோகள் இருகின்றனவா? என சாத்வியின் கைகள் தேட.. ‘ஆல்பம்’ ‘ப்ரபைல் பிக்ச்ர்ஸ்’ ‘போட்டோஸ்’ என ஒவ்வொன்றாய் எடுத்து தேடினாள்.  எக்கசக்கமான போட்டோக்கள்..  ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு…  அழகான உடைகளிலும் அழகு, அழுக்குச்சட்டையிலும் பேரழகு..

பைக் ஒன்றில் ரிப்போர் பார்ப்பது போன்றதொரு போஸ்..  காக்கி உடை, அது ஆங்காங்கே கீரிஸ் கரையுடன்.. இருந்தது..

“அழுக்குச்சட்டை போட்டாலும் அழகாய் தெரியும் ஆணழகன் இவனோ” என்ற பாடல் வரிகளை தாமகவே அவள் இதழ்கள் ஹம் செய்ய..

சாத்வியின் பார்வை பளபளத்தது..  தொடர்ந்து வேறு வேறு ஸ்னாப்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அள்ள அள்ள குறையாமல் கிடைத்த பொக்கிசத்தை கண்களில் நிரப்பிக் கொண்டாள்.. சாத்வி.

வெகு நேரம் அமர்ந்திருந்தாள் சத்ரியை பார்த்தபடி.. “ ஏய் நேரமாச்சுடி ” என சரண்யாவும் கயலும் அழைத்த பின்…  ‘இவளுங்க பார்த்தா அவ்ளே தான்’ என சட்டென லாக்அவுட் செய்து கிளம்பினாள்.

வீட்டிற்கு வந்தவளுக்கு சத்ரியின் ஞாபகங்களே..

எப்போதும் துன்பங்களை குறைக்க “ஸ்ரீராம ஜெயம் எழுதுபவள்.. அன்றும் அதையே கடைபிடித்தாள்.

துன்பத்திற்கும், மகிழ்வுக்கும் அது தான் வடிகால்.

எழுத எழுத ஏனோ மகிழ்ச்சி கூடி கொண்டே சென்றது.

ஸ்ரீராமஜெயம் எழுதம் போதெல்லாம் தின்பது குறைவது போல், மகிழ்ச்சி குறையவில்லை, மாறாக கூடிக்கொணரடே சென்றது.

புதிதாய் ஓர் உலகத்தினுள் அடி எடுத்து வைத்தார்ப்போல் உணர்ந்தாள்.

உணவுண்ணும் தட்டில் இருந்து வானில் இருக்கும் நிலா வரை பார்க்கும் அத்தனையிலும் அவனது பிம்பங்களே! அனைத்தும் அவனை போல் வசீகரித்தது.

 ஒவ்வொரு நொடியும் சத்ரியின் பரிணாமங்கள் அவளுக்குள் பிரவாகமாய் எழுந்தது.

 மனம் நிறைய மகிழ்ச்சி சந்தோஷம் மட்டுமே முழுதாய் நிறைய…  முகம் அதை அப்படியே காட்டிக் கொடுத்தது. புன்னகை தானாகவே உதடுகளில் தவழ.. எழுதி முடித்து மீண்டும் அதை புரட்டி பார்த்தாள்.

  மகிழ்ச்சியை எழுத்துக்கள் கூட பிரதிபலிக்குமா..?  இத்தனை அழகாக கூட எனக்கு எழுத்து வருமா? என தனக்கு தானே கேட்டுக் கொண்டாள்…  அவ்வளவு அழகாய் நிதானமாய் குண்டு குண்டு எழுத்துக்களால் நிரப்பி இருந்தாள்.

  பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் இருக்க…  டைரியை பட்டென மூடி இரு கைகளாலும் அதை மேல் நோக்கி எறிந்து அதே மகிழ்ச்சியுடன் பிடித்து, கட்டிலில் பொத் என விழுந்து  டைரியை இறுக்கமாய் கட்டி கொண்டாள்..

கண்களை மூடிக் கொண்டவளுக்கோ…  உலக சாதனையே புரிந்தார் போல் அப்படி ஓர் உணர்வு சொல்லில் அடங்கா உணர்வுகள். தனக்குள்ளா..? என தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.. ‘வேண்டாம் என விலக்க முடியாமல்’ இந்த உணர்வுகள் பிடித்திருக்கிறது..’ என  தனக்குள்ளே புதைத்துக் கொண்டாள் தன் உணர்வுகளை..

மறுநாளில் இருந்து துள்ளி குதித்தோடும் மான்குட்டியாய் எதிலும் ஓர் புத்துணர்வை காட்ட…  அவளின் தாய் மஹாவில் இருந்து, செந்தில் வரை அவளை வித்யாசமாய் பார்க்க…  அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படிப்பில் முழு வேகத்தில் இறங்கினாள்…  அது வரை ஏனோ தானோ வென படித்து வந்தவளுக்கு ஓர் உத்வேகம் பிறக்க.. எதிலும் வேகம்…. விவேகம் தான்…

அதை பார்த்து சரண்யாவும் கயலும் கூட…  “ஏய், பேய், கீய் எதுவும் பிடிச்சுடுச்சாடி.. ஒரு மார்க்கமா இருக்க” என கிண்டல் கூட செய்ய…

அவர்களிடம். அழகாய் நழுவி… ”சத்ரி டெய்லி உன் போட்டோவை பார்க்குறதுக்கே இந்த எஃபக்டா.“

“உனக்கு சத்ரியன்னு பேர் வைக்கிறதுக்கு, பூஸ்ட், ஹார்லிக்ஸ்ன்னு பேர்  வச்சிருக்கலாம்.. என்ன எனர்ஜி… என்ன எனர்ஜி” என தனக்குள்ளே அவனை கிண்டலும் செய்து கொள்ள.. பிடிப்பில்லாமல் கழிந்த பள்ளி வாழ்க்கையை ஈடு செய்யும் அளவு இருந்தது கல்லூரி வாழ்க்கை..

அன்று முதல் அவன் நகலுடன் தினமும் பேச்சு வார்த்தை நடத்தாமல் , சாத்விக்கு  முடியாது அந்த நாள்.

சில நேரம் பேச்சு வார்த்தை, கெஞ்சலாக, கொஞ்சலாக, கோபமாக, சண்டையாக கூட மாறும். அன்றைய மனநிலையை பொறுத்து மாறிவிடும்.

அவனது்போட்டோவை பார்ப்பதற்கென்றே தினமும் சென்டர் செல்வாள். போட்டோவோடு மட்டும் நிற்கவில்லை இவள் தேடல், அதையும் தாண்டி அவனது ப்ரபைலில் சத்ரியை பற்றிய அனைத்து தகவல்களையும் தேட துவங்கினாள்

அவன் இருக்கும் ஊர், தங்கிருக்கும் இடம், பார்க்கும் வேலை, அவன் வேலை செய்யும் இடம் என அனைத்தையும் பேஸ்புக்கே காட்டியது.

 பேஸ்புக்கை இத்தனை நாள் கழுவி கழுவி ஊற்றியவள், இன்று அதற்கு கோவில் கட்டினாலும் தப்பில்லை என்ற நிலைக்கு வந்திருந்தாள்.

அவனுக்கு ரெக்வஸ்ட் அனுப்பி அவனுடன் உரையாட வேண்டும், போன் நம்பர் வாங்கி அவனுடன் பேச வேண்டும்! என மனது அடம்பிடிக்க ஒரு நாள் “ஆட் ப்ரண்ட்” என்ற பட்டனை தட்ட போன கைகள் அப்படியே, நின்றது மூளை இட்ட கட்டளையில்.

‘எக்கேடும் கெட்டு போன்னு, உன்னை அம்போன்னு அப்படியே விட்டுட்டு போனவன் தானே, அவன். ஆனால் நீ என்ன செய்திட்டு இருக்க? நீ எப்படி இருக்க, என்ற செஞ்சிட்டு இருக்கிறன்னு தெரிஞ்சுக்க கூட இந்த ஊர்ப்பக்கம் வரவே இல்லை அந்த தடிமாடு. இவனெல்லாம் உனக்கு பி்ரண்டா? என ஸ்கீரினில் தெரிந்த சத்ரியின் மூக்கை குறி வைத்து லேசாய் குத்தி.. “போடா நான் உனக்கு ரெக்வஸ்ட் கொடுக்க மாட்டேன் போடா” என அவனின் நிழலுடன் பேசிக் கொண்டிருந்தாள்  சாத்வி.

அவனுடனான பேச்சுக்கள் அனைத்தும் இப்படி தான் இருக்கும், இது அனுதினமும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

பேச்சு பேச்சாக இருந்தாலும், அவனது ப்ரபைலில் இருக்கும் படங்கள் அத்தனையையும் சலிக்காமல் நேரம் காலம் தெரியாமல் பார்த்து கொண்டே இருப்பாள்.

புதிதாய் ஆறு படங்களை ஏற்றி இருந்தான்.

விதவிதமான பல மாடல் பைக்குகள் அங்கே அணி வகுத்து நின்றிருக்க,  அவனுடன் வேலை செய்பவர்களோடு பல விதமான தோரனைகளுடன் பதிவிட்டிருந்தான். போட்டோவில் எத்தனை பேர் இருந்தாலும் இவள் பார்வை அவன் மீது மட்டும் தான். அத்தனை போட்டோகளிலும்  கம்பீரமாய் இருந்தான் சத்ரி.