பள்ளி்செல்லும் காலங்களிலும் இது போல் சின்ன சின்ன சச்சரவுகள் நடந்தாலும் எளிதாய் விலகி வருபவள்.. இதை அவ்வளவு எளிதாக தள்ளவிட முடியவில்லை…. உள்ளே இருந்து அரிக்க தொடங்கியது….
காலேஜில் பார்ம் கொடுக்க சென்றாள்… பள்ளியை விட்டு சிறகுகள் முளைத்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களிடம் இருக்கும் பரபரப்பு ,ஆர்வம், எதுவும் அவள் கண்ணில் இல்லை .. , அங்கே தன் வயதை ஒத்த அனைவரிடமும் பார்வை சுழன்றது… அனைவருடனும், தாய் தந்தை அண்ணன், அக்கா என யாரவது ஒருவர் துணையுடன் வந்திருந்ததோடு…. ஆங்காங்கே நின்று கொண்டு மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டோ… வம்பிழுத்துக் கொண்டோ இருந்தது மட்டுமே கண்களில் விழ…அதை பார்த்து இகழ்ச்சியாய் தனக்கு தானே சிரித்துக் கொண்டாள்..தான் தனித்து வந்தருப்பதை உணர்ந்து விரக்தி தான் வந்தது…
அதன் பின் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.. ஆபிஸ் ரூமில் கொடுத்துவிட்டு பின் தனக்கு தேவையானவற்றை மட்டும் கேட்டுக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றுவிட்டாள்.
இரண்டு வாரம் கழித்து அட்மிஷன் நடக்க, பெற்றோர்கள் கண்டிப்பாய் வரவேண்டும் என்ற நிபந்தனையில் தந்தையின் முன் நின்றாள்.
அவரோ “உனக்கு தேவையானது பணம் தானே… நான் எதுக்கு“ என எகிறினார்.
தன் வாழ்க்கை பற்றிய அனைத்தும் கனவுகளாகவே முடிந்து விடுமா..ஏக்கம் தான் மிஞ்சியது..சாத்விக்கு.
முன்னொருதடவை கல்லூரியில் சிலர் அடித்த கொட்டங்களும் அவர்களை ஆரவாரமாய் ரசித்த அவர்களின் பெற்றோர்களும்.. என பாசத்திற்காய் ஏங்கிக் கொண்டிருக்கும் அவள் நிலையை அவள் பெற்றோர்கள் உணரவில்லையா… இல்லை உணராதது போல் நடிக்கின்றனரா.. ஏக்கங்களையும் தகர்த்துக் கொண்டு வந்தது அவளின் திமிர்… முதல் முறையாய்.
சங்கரின் மேல் அழுத்தமான பார்வை மட்டுமே தேங்க.. “நீங்க தான் வரனும்.”
“ஏன் உன் அம்மா இருக்கா இல்லையா… அவளை கூட்டிட்டு போ..”
“ நீங்க பர்மிஷன் தராம அம்மா என்கூட வர மாட்டாங்க”
“பரவாயில்லையே.. கட்டினதாவது எனக்கு மரியாதை கொடுக்குதே..அதுவரை சந்தோசம் தான்..”
“ இப்போ நீங்க வர முடியுமா….முடியாதா..”
“முடியாது.. நான் தேவையில்லைன்னு தானே என்னோட எந்த பேச்சையும் கேட்கலை.. ஸ்கூல் போகதேன்னு சொன்னேன்… கேட்டியா… ? வீட்டிலேயே அடங்கி இருன்னு சொன்னேன் கேட்டியா..? இதோ இப்போ கூட காலேஜ் வேணாம்னு சொன்னேன் கேட்கலையே! பின்ன ஏன் நான் உன் பேச்சை கேட்கணும்..?” பேசிக் கொண்டிருக்கும் போதே
வேகமாய் தன் அறையினுள் நுழைந்தவள்… கண்கள் செவ செவ என சிவந்திருக்க… அழுகை ஒரு சொட்டு கூட வர மறுத்தது…. கண்களை அழுந்த மூடி திறக்க… அலமாரியும் அதில் குவிந்து கிடந்த நோட்புக்குகளும், டைரிகளும் கண்ணில் பட.. இன்னும் அழுத்தமாய் மூடிக் கொண்டாள்… பின் மனதை சமன்படுத்த வேறு வழியில்லை என மூளை கூற.. விட்ட பக்கத்தில் இருந்து தொடர்ந்தாள் ஸ்ரீ ராம ஜெயத்தை..
ஆம் இன்னமும் அவள் அதை நிறுத்தவில்லை.பெற்றோர்களிடம் படும் துன்பம் குறைந்தால் அல்லவா, அவள் எழுதுவதும் குறைவதற்கு.
எப்போதும் அதிகமாய் போனால் பத்து பக்கங்கள் வரை மட்டுமே எட்டும் அவள் மந்திரம் இந்த முறை நேரங்காலம் தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தாள்.
பேனாவை பிடித்து இருந்த இரு விரல்களும் வலிக்க ஆரம்பிக்க.. பேனாவை அப்படியே போட்டுவிட்டு விரல்களை பார்க்க… பேனாவின் தடம் அப்படியே கூறியது அவளின் மன அழுத்தத்தை…
இன்னுமும் குறையாத மன அழுத்தம்..
தன்னுடன் பயிலும் தோழிகள் பலருக்கு , அதிலும் கயலுக்கும் சரண்யாவிற்கும் அந்த கல்லூரியிலேயே இடம் கிடைக்க…. மனம் வேதனையில் சுருங்கியது..கயல் சரண்யா செந்தில் என. எல்லோரும் வீட்டிற்கே வந்து அவளது தந்தையிடம் கூறி… “சாத்விக்கு ரெகுலர் லயே கிடைச்சிருக்குப்பா.. இன்றைக்கு அவட்மிஷனுக்கு வரலைனா. அவ சீட் வேற யாருக்காவது போய்டும்பா” என சங்கரை வற்புறுத்தி அழைத்து வந்தனர் கல்லூரிக்கு..
கடு கடு முகத்துடன் சென்று அட்மிஷன் போட்டு சொல்லாமல் கொல்லாமல் வெளியேறி சென்றுவிட.. உதடுகள் ஏளனமாய் வளைய….அவளும் பின்னேயே சென்றாள்.. உடன் வந்த நண்பர்களை மறந்து.. தந்தை முன்னே செல்ல…. மகள் பின்னே சென்றார்.. மகளை வழி நடத்தும் தந்தை… என நக்கலாய் இபழ்ந்தது சாத்வியின் இதழ்கள்.. ஆனால்… நடத்தும் வழி வேறல்லவா.
கல்லூரி தொடங்க இன்னும் இரண்டு நாட்கள்… ஆனால் தேவையான ஒரு பொருள் கூட வாங்கவில்லை… வாங்கி கொடுக்கபடவில்லை. கவலையை விட அவமானமாய் இருந்தது..
சொல்லி வைத்தார் போல் ஷிவா வந்தான் இரண்டு மூன்று பைகளுடன் “ மாமா… மாமா ” என அழைத்து கொண்டும்.
“வாங்க மாப்பிள்ளை…. வாங்க” சங்கரன் உள்ளிருந்து வர, மஹா சத்தம் கேட்டு வெளியே வந்தார்
“சாத்விக்கு இன்னும் இரண்டு நாளில் காலேஜ் ஆரம்பிக்குதாம், கஸ்தூரி எல்லாமே பார்த்து பார்த்து வாங்கி கொடுத்துவிட்டிருக்கா” என கைகளில் இருந்த பையை எடுத்துக் காட்ட..
“ உள்ளே தான் இருக்கா…. நீங்களே கொடுத்திடுங்க… ” என சங்கரன் விலகிக் கொள்ள… மஹா ஷிவாவின் கையில் இருந்த பைகளை பார்த்து கூனி குறுகி போனார்..
மகளுக்கு பார்த்து பார்த்து செய்ய வேண்டிய தருணத்தில் யாரோ ஒருவர் வாங்கி தரும் நிலையில் இருக்கிறாள்… என மஹாவும் உள்ளே சென்றுவிட… தோள்களை குலுக்கியபடி சாத்வியை அழைத்து அவள் கைகளில் திணிக்க…
பிரித்து பார்த்தவள் “சத்ரி வாங்கிக் கொடுத்தானா மாமா” என கேட்க
ஒரு நிமிடம் அதிர்ச்சியானான் ஷிவா. அவன் ஊரை விட்டு சென்று மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும்… சத்ரியை தேடும் அவளை கண்டு ஷிவாவின் மனதில் பரிதாபமே ஏழ “கஸ்தூரி வாங்கிக் கொடுத்தா மா” என கூறி “ அவளுக்கு நிறை மாசம் இல்லையா… அதான் நான் வந்தேன்” என அவளின் தலையை வருடி…
“நல்லா படி… படிச்சு நல்ல வேலைக்கு போ” என இலேசாய் ஆறுதல் கொடுக்க, சரி என்ற தலையசைப்பு தான் வந்தது..
கல்லூரி செல்ல தேவையான அனைத்தும் கூடவே சில ரூபாய் தாள்களும் இருந்தது..
எப்படியோ கல்லூரி செல்ல தொடங்கினாள்… கல்லூரி பேருந்து என்பதால் அதற்குரிய கட்டணமும் சேர்ந்தே அட்மிசனில் செலுத்தி இருக்க.. கவலை இல்லாமல் செல்ல தொடங்கினாள்.
ஆனால் அடுத்த மாத மாதத்தலிருந்து மஹாவே அவளிடம் சில ரூபாய் தாள்களை கொடுக்க மறுத்துவிட்டாள் சாத்வி.. வலுக்கட்டாயமாய் அவளின் பேக்கினுள் வைத்துவிட்டாள்..
அதிலிருந்து மஹாவே அவளின் செலவுக்கு உதவி செய்தாலும் கணக்கு வைத்துக் கொண்டிருந்தாள் சாத்வி மஹாவிற்கு தெரியாமலேயே….
கயல் மட்டுமே அவளுடன் மேத்ஸ் எடுத்திருக்க சரண்யா கெமிஸ்டரி டிபார்ட்மெண்டில் இருக்க, செந்தில் வேறு கல்லூரியில் இருந்தான் .
நால்வரும் சந்திப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. கல்லூரியில் பேங்க் கோச்சிங் வகுப்புகள் வாரத்தில் இரு தினங்கள் மட்டும் இலவசமாய் நடத்த ,அதில் சேர்ந்து கொண்டாள். அதற்கு காலேஜ் லைப்ரேரியை உபயோகப்படுத்திக் கொண்டாள்.
கல்லூரி பேருந்தில் ஒன்றாக வரும் சரண்யா சில நாட்களாக அசெண்ட்மெண்ட் என்ற பெயரில்.. கம்யூட்டர் சென்டர் சென்று வர துணைக்கு சாத்வியும் கயலும் செல்ல தொடங்கினர். ஒரு வாரம் என்றிருந்த அசைண்ட்மெண்ட் இரு வாரங்கள் கடந்த நிலையில்.. தினமும் அதுவே பழக்கமாக.
“ வர வர ரொம்ப லேட் ஆகுது…. சரண்யா…. அப்படி என்ன தான் அசைண்ட் மெண்ட் பண்றியோ” என சாத்வி காத்திருந்த கடுப்பில் கேட்க….
“டெய்லியுமா அசெண்ட் மெண்ட் குடுக்குறாங்க… அது அன்னைக்கே முடிஞ்சது… சும்மா பேஸ்புக் பாத்திட்டு இருந்தோம்… உன்னையும் சேர்த்து விடறோம்….” என மறுநாள் அவளையும் கம்யூட்டர் சென்டர் உள்ளே அழைத்து செல்ல… கயலும் சேர்ந்து கொண்டாள்.
“ ஓ… இது தான் பேஸ்புக்கா” என தோழியிடம் கேட்க…
அவளுக்கும் அக்கவுண்ட் ஆரம்பித்து, அவர்களது ப்ரண்ட்ஸ் க்ரூப்பில் சேர்த்து விட்டாள்.
ஏனோ தானோ என தினமும் நோண்டிக் கொண்டிருப்பவள். இதில். என்ன கர்மம் இருக்குன்னு… டெய்லி பார்க்குறாங்களோ? என நாடியில் முட்டுக் கொடுத்த படி கம்யூட்டர் ஸ்கீரினை வெறித்து பார்த்தபடி மௌசை ஸ்க்ரோல் செய்தபடி வெறுப்பாய் அமர்ந்திருந்தாள்… அவளை அழைத்த சரண்யா.
“ஏய் சாத்வி… செந்திலுக்கு ஒரு ப்ரண்ட் ரெக்வெஸ்ட் போடுடி… இரண்டு வாரமா கேட்டுட்டு இருக்கான்” என கூற
“இது ஒன்னு தான் அவனுக்கு குறையா இருக்கா..” என சலித்தபடி,
“ நீயே பண்ணு தாயி, எனக்கு ஒன்றும் தெரியலை” என சாத்வி ஒதுங்கி கொண்டாள்.
“ஏய், இந்த செர்ச் பாக்ஸில் செந்தில் பேரை டைப் பண்ணுடி… அந்த மொகரையோட போட்டோ இருக்கும். பார்த்து ரெக்வஸ்ட் சென்ட் பண்ணு” என கயல் கவனமாய் சொல்லிக் கொடுக்க
அவள் செய்தபடியே செய்தாள் இவள். செந்தில் என்ற பெயரில் இருக்கும் அனைவரும் லிஸ்டில் வர, அதில் நமது செந்திலின் போட்டோவுடன் இருக்க ரிக்வெஸ்ட் அனுப்பாமல்
‘சர்ச் ப்ரண்ட்ஸ் ‘ என்றருந்த பாக்ஸை வெகு நேரமாய் பார்த்துக் கொண்டிருந்தவள் கைகள் தானகவே… ”செந்தில் “ என்ற பெயரை டெலிட் செய்து “சத்ரியன்” என்ற பெயரை அடிக்க வந்து குவிந்தன… நிறைய சத்ரியன்கள்.
காட்டிய அத்தனை பெயர்களிலும் சத்ரியை தேடினாள் சாத்வி… சிறு வயதில் பார்த்தது ஒவ்வொருவரையும் உற்று உற்று பார்த்தாள் சாத்வி. இவனா இல்லை இவனா.. இல்லையே? சத்ரி லட்சனமா இருப்பான்….
இந்த பக்கிக்கு மூக்கு சப்பையா இருக்கு
இவனுக்கு வாயே சப்பையா இருக்கு.
இந்த முகறைக்கு சத்ரியன்னு பேரா..
என பார்த்த ஒவ்வொருவரையும் நக்கல் செய்து கொண்டே வந்தவள்… ’சி மோர் ரிசல்ட்ஸ் ‘ என்ற பட்டனை பல முறை தட்டிய பின்… அவளின் சத்ரி அவள் கண்களுக்கு விருந்தாய் கிடைத்தான்.
சிறுவயதில் அவள் இருந்தாலும், ஊரை விட்டு செல்லும் போது கல்லூரி இரண்டாம் ஆண்டில் இருந்ததால், அவன் முகத்தை தற்போது அவளால் அடையாளம் காண முடிந்தது.
அலையாயாய் பறந்த கேசம்
அதை ஒரு கையில் அடக்கியபடி,
பற்கள் பளீரிட சிரித்த அவன் முகம்,
மிக மிக கூர்மையாய் இரச்சிக்கும் படியான கண்கள்,
நீட்டாக ட்ரிம் செய்த லேசான தாடி
பளீரிட்ட அவனது புன்னகை.. என ஆண்மையின் உருவாய் இவளுக்கு தரிசனம் கொடுத்தது சாட்சாத் இவளது சத்ரியை தான்.. சத்ரியன் தான்.