”நீ் எதுக்கு இங்கே வந்த” என மனதில் நினைத்ததை அப்படியே கேட்டான்.

“ ஒரு உதவிக்காக வந்தேன்…”

“என்ன…உதவியா? என்கிட்டையா” என இழுத்த ஷிவா….

“சொல்லு…  அடிச்சவன்கிட்டயே உதவி கேட்டு வந்திருக்க…  என்ன உதவி” என கேட்டவன் “உள்ளே வா!” என அழைத்தான்.

ஏற்கனவே பாதியில் விட்டு போய் இருந்த டீயை கையிலெடுத்தான்.

“டீ “ என இழுக்க

“வேண்டாம்” என மறுத்தான் சத்ரி.

“சாத்வியை , மாமா ஸ்கூல் போக விட மாட்றாங்க.. க்ருத்திகா மாதிரி போய்ட கூடாதுன்னு ரொம்ப ஸ்ரிக்ட்டா பிடிக்கிறாங்க..” என்றவன் தருண் பற்றிய அனைத்தையும் மறைநாது கூறிவிட்டான்.

 “அதுவே அவளை வேற பக்கம் கொண்டு போக சான்ஸ் இருக்கு.. நீங்க சொன்னா கண்டிப்பா அவளை ஸ்கூலுக்கு அனுப்பிடுவாங்க ” என

ஷிவாவிற்கு அப்படி ஒரு அதிர்ச்சி… உதவி என வந்ததே ஆச்சர்யமாய் இருக்க, அதுவும் சாத்விக்காய் உதவி கேட்டு வந்திருக்கிறான் என தெரிந்து அதிர்ச்சியானான்.

 அவன் வார்த்தைகளில் கவனம் வைத்து..

 “நான் சொல்றது இருக்கட்டும் ஆனா, சாத்வி வேறபக்கம் போக சான்ஸ் இருக்குன்னு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்?” என கூர்மையாய் பார்த்தான் ஷிவா….

“ சான்ஸ் இருக்குன்னு தான் சொன்னேன்…  வேற பக்கம் போய்ட்டான்னா சொன்னேன்” என பதிலுக்கு இன்னும் முறைத்தான்  சத்ரி

“அன்னைக்கு ஸ்டேஷன்ல இருந்து போறப்ப கொலை பண்ணிடுவேன்ற ரேஞ்சில் அப்படி பார்த்தே ஆனா இப்போ” என சாத்விக்காக பேச வந்திருப்பதை சுட்டிக்காட்ட

“சாத்வி வீட்டில்  அந்தளவு உங்களுக்கு மரியாதை இருக்கு. அப்பறம் உங்க மேல அந்த கோபம் அப்படியே தான் இருக்கு. ஒரு போலீசா நீங்க   அன்னைக்கு நடந்துகிட்டது ரொம்ப தப்பு  தான் “ என அவன் முன்னே தைரியமாய் பேச, இப்போது சாத்வி பேசுவது பேல் இருந்தது இவனுக்கு.

“சரி நான் ஹல்ப் பண்ணலைன்னா” என திமிராய் ஷிவா பேச….

“வெரி சிம்பிள்….  சாத்வியோட தயவில் இன்னொரு தடவை உங்களுக்கு பூஜை வச்சிடுவேன்” என அதை விட திமிராய் சத்ரி பேச

அவன் குடித்துக் கொண்டிருந்த டீ புரை ஏறி…  மூக்கின் வழியாய் வர, கண்கள் கூட சிவந்துவிட்டது.

அன்று நடந்ததை வீட்டில் இருந்து கூட மறைத்துவிட்டான், அப்படி இருக்கும் போது இவனுக்கு எப்படி தெரியும் என நினைவுகள் பறக்க…. “அப்போ இரண்டு பேரும் சேர்ந்து தான் பளான் பண்ணி அடிவாங்கிவிட்டீங்களா” என கர்ச்சீப்பினால் மூக்கையும் வாயையும் துடைத்தபடி கேட்க…

“ம்ஹூம்…. அது சாத்வியோட பிளான்…. நான் அங்கே தான் இருந்தேன்…  ஆனா தடுக்க தோணலை. எப்படி உங்களை சமாளக்கிறான்னு பார்த்திட்டு இருந்தேன்…. பரவாயில்லை.. நல்லாவே எஸ்கேப் ஆக பழகிட்டா”  என அவளை பெருமையாய் பேச….

“உன் மேல பாசம் பயம் இரண்டுமே இருக்கு…  நீ சொல்லி கண்டிக்கிறதை விட்டுட்டு.. இப்படிபெருமை படறது ரொம்பவும் தப்பு ” என கோபமாய் கூற..

“பிரச்சனையை பேஸ் பண்ணவும் பழகிட்டா, அதிலிருந்து எஸ்கேப் ஆகவும் பழகிட்டா…  இது தான் ஒவ்வொரு பொண்ணுக்கும் வேணும். அந்த வகையில் சாத்வி நல்லாவே தேறிட்டா..” என சிரிப்புடன் சொல்ல….

“தேறிட்டா… இல்லை…  நீ தேத்தி விட்டுட்டன்னு சொல்லு” என அவனுக்கு கொஞ்சம்  சிரிப்பும் வர

“ நீங்க எப்படி வேணா வச்சுக்கங்க..ஆனா”  என சிறிதும் யோசிக்காமல் அவன் முன் வந்து கை கூப்பிய சத்ரி  “சாத்வியை ஸ்கூலுக்கு அனுப்பி வைங்க” என சத்ரி நிற்க…

அவன் கையை படாரென தட்டிவிட்டான் ஷிவா.. சாத்வி சத்ரியின் மேல் கொண்ட அன்பையும், சத்ரி சாத்வி மீது கொண்ட  அன்பிலும் நெகிழ்ந்து தான் போனான்.

“சரி நான் மாமாட்ட பேசுறேன்”  என சத்ரியை பார்த்தான்….பின் “உனக்காகவும் இல்லை…  சாத்விக்காகவும் இல்லை…. உங்க ரெண்டு பேரோட பாசத்துக்காக… கண்டிப்பா பேசறேன்” என ஷிவா லேசாய் புன்னகை புரிய

“இன்னைக்கே பேசுங்க…. அப்போ தான் அவளை நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்புவாங்க மாமா” என கொஞ்சம் அழுத்திச் சொல்ல…

“எதுக்கு இவ்வளவு அக்கறை ஒரு வேளை லவ்வோ..” என கேட்க…

“ஒருத்தர்  நல்லா இருக்கனும்னு நினைக்கறதுக்கு அவங்களை லவ் பண்ணனும்னு அவசியம் இல்லை” என விறு விறுவென சென்றுவிட்டான்.

வயதிற்கு மீறிய பக்குவம் நிறைந்த சத்ரி,…  சாத்வியும் அப்படியே..

அவனுக்காக  சாத்வி தன்னிடம் சண்டையிட்டதில் , அடி வாங்கி விட்டதில் தப்பே இல்லை என தான் தோன்றியது ஷிவாவிற்கு…

அவர்களின் பாசப்பிணைப்பு ஷிவாவின் புருவத்தை உச்சி மேட்டிற்கே கொண்டு சென்றது.. பின் தலையை குலுக்கி ட்யூட்டிக்கு தயாரானான்…

மாலையில் செல்ல வேண்டும் என நினைத்த ஷிவாவிற்கு வேலை இழுக்க…. மறு நாள் காலை தான் செல்ல வேண்டியதாய் போயிற்று.

வீட்டிற்கு வந்தவளை சங்கரின் குரல் நிறுத்தியது “ ஏய், எங்கே போய்ட்டு வர..” என கேட்க

பொய் சொல்ல வாய் வந்தாலும்.. சத்ரியின் பேச்சு அவளின் தலையில் இருக்க “சத்ரிகிட்ட பேசிட்டு இருந்தேன்..” என உண்மையை கூற..

அவளின் அருகே ஆத்தரத்துடன் வந்தவர் “அந்த காவாலிபய கூட பேசாதனு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியா?” என சங்கரன் கோபமாய் கேட்க…

“சத்ரி சொல்றதை கேளு…  அவன் கிட்ட படிச்சுக்க, அவன் கூட விளையாண்டுக்கோ, அவன் சொன்னா கரெக்டா தான் இருக்கும்னு நீங்க சொல்லி சொல்லி…. மூளையில் பதிஞ்சிடுச்சுபா…. இப்போ போய் பேசாதன்னா என்ன அர்த்தம்…   அவனை இல்லை வேற எவனையும் இழுத்துட்டு போற எண்ணம்  எனக்கு இல்லை…  ஆனா நீங்க வர வழைச்சுடாதீங்க” என மனதில் உள்ளதை அப்படியே கொட்டினாள் சாத்வி

“ ஏய், என்னடி வாய் ரொம்ப நீளுது….” என மஹாவும் வர…

“சத்ரி தான் குடும்பத்தோட ஊரை விட்டு போக போறானாமே.. அதான் சார் வந்து எனக்கு அட்வைஸ் மழை பொழிஞ்சிட்டு போறாரு…  கேட்டுட்டு வந்தேன்”

“ஓ…  அவன் அட்வைஸ் பண்ணினா தான் மேடம் நீங்க கேட்பீங்களோ…  நாங்க பண்ணினா கேட்க மாட்டீங்களோ “ என சங்கரன் கிட்ட தட்ட அடிப்பது போல் வர…

“ஆமாம் அவன் சொன்னால் தான் கேட்பேன்…  அவன் சொன்னால் மட்டும் தான் கேட்பேன்.. நான் நாளையில் இருந்து ஸ்கூலுக்கு போக போறேன்.. இதுவும் அவன் தான் சொன்னான்.. ” என அழுத்தமாய் சொல்ல….

“ என்ன?”   என மஹா சீற..

“சொல்ற பேச்சு கேட்கவே கூடாதுன்னு இருக்கியா.. நீ ஸ்கூல் போய் பாரு“ என சங்கரன் மிரட்ட….

“நான் போகத் தான் போறேன் நீங்க பார்க்கத்தான் போறீங்க” என ரூமினுள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள்…

கதவின் மேலேயே சாய்ந்து நின்றவளுக்கு இதயம் பட பட வென மத்தளம் கொட்டுவது தெளிவாய் கேட்டது…

பின்னே தந்தையின் சொல் என்றும் மந்திரமே என கடைபிடித்தவள் ஆயிற்றே…. தந்தை, தாயின் தகாத நடைமுறை அவளை வேறு பாதையில் செலுத்தியது…

சத்ரி இல்லையென்றால்…  கண்டிப்பாய் ஏடாகூடமாய் ஏதாவது செய்திருப்போம்… என்ற எண்ணமே….

மறுநாள் கிளம்பி ஸ்கூல் செல்ல…. தந்தை இந்தமுறை சற்று தடிமனான குச்சயை எடுத்து நிற்க…  உள்ளுக்குள் பயமெடுத்தாலும் வெளியே காட்டவில்லை…

எப்போதும் போல் சாமி கும்பிட்டு திருநீறை எடுத்து நெற்றில் வைத்து ,சாப்பிட சமையலறை சென்றாள்.

எல்லா பாத்திரங்களும் வெறுமையாய் இருக்க,அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள்….

மஹாவோ, வேறு புறம் திரும்பி நின்று கொண்டாள்…  எல்லாம் தந்தையின் வேலை.. சொல்லாமலேயே புரிந்தது..

படிப்பா…  சாப்பாடா என நினைக்க…  படிப்பு கண்களில் தேங்க…. அப்படியே பேக் எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

 கால்களில் விழுந்த அடியில் படாரென துள்ளி நகர்ந்தாள் “ஏய் அடியில் இருந்து தப்பிக்க வேற செய்யிறியா… ” என அவளை இழுத்து வைத்து இன்னும் அடிகளை கொடுக்க

சுள்ளென வலி எடுத்தாலும் ,கண்ணீர் நிறைந்தாலும் கொஞ்சம் கூட அசையாது அடிகளை வாங்கிக் கொண்டிருந்தாள்…  சத்தம் கேட்டு சத்ரி வந்துவிடுவானோ என பயந்து சத்தம் வராமல் வாயை பொத்திக் கொண்டாள்..

அடித்த அவருக்கு கைவலித்தது தான் மிச்சம்….

“சை..” என குச்சியை ஒரு மூலையில் போட்டுவிட்டு  “பெத்து வச்சீருக்கிறா பாரு.. ஒன்னு நம்ப வச்சு கழுத்த அறுத்திச்சு…  இன்னொன்னு  சொல்றதை கேட்காம கழுத்தை அறுக்குது..”

“ கட்டினதும் சரி இல்லை, பெத்ததும் சரி இல்லை “  என திட்டியபடி வெளியேற.. எத்தனிக்க…. ஷிவா வீட்டினுள் நுழைந்தான்….

“சாத்வி ஸ்கூலுக்கு போக விடுங்க மாமா… வீட்டில் அடச்சு வச்சு ,என்னாக போகுது.”

“ க்ருத்திகா மாதரி….” என சங்கரன் ஆரம்பிக்கும் முன்பே “சாத்வி அப்படிலாம் செய்ய மாட்டாள் மாமா…. தைரியமா அனுப்புங்க“ என ஷிவா மேலும் மேலும் பேசியே சங்கரை கரைத்தான்…  பின்…  “ நானும் அப்போ அப்போ கவனிச்சுக்கிறேன் ” என சொன்ன பிறகே பள்ளி செல்ல அனுமதி கிடைத்தது.

“போய் சாப்பிட்டு வா” என சங்கரன் பேருக்காய் கூற.. சாத்வியின் தாய் அவளிடம் நெருங்க…. ஒரு வெற்று பார்வையை செலுத்தியவள்  மீண்டும் அறையினுள் புகுந்து கொண்டாள். சாத்வியை கண்காணிக்கும்படி மேலும் ஷிவாவிடம் பேசிக் கொண்டிருக்க

வலியில் வேதனை அதிகரித்தாலும் அதை அடக்க பெரும்பாடுபட்டு போனாள்.

அக்கா செய்த தவறுக்கு தனக்கு தண்டனையா என கோபம் ஏறினாலும், சத்ரியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் காதில் ஒலித்தபடி இருக்க…

அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தனது நோட்டு புத்தகங்களில் எழுதாத நோட்டு ஒன்றை எடுத்து கட்டிலில் அமர்ந்து..

நோட்டை மடியில் வைத்து ‘ ஸ்ரீ ராம ஜெயம்’ எழுத தொடங்கினாள்.

கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, வலியில் உடல் வேதனை எடுக்க , இவை இரண்டையும் சட்டை செய்யாது  ,கைகள் அதன்போக்கில் எழுதி கொண்டிருந்தது…

ஒரு பக்கம் வரை தான் எழுத முடிந்தது…   அடுத்த பக்கம் புரட்டியவளுக்கு மனதில், ஏதோ பாரம் இறங்கிய உணர்வு எழ…  அப்படியே அலமாரியில் வைத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பிச் வெளியே வந்தாள்.

ஷிவா தனக்காக தந்தையிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தபடி வர.. ஷிவாவே அவளை அழைத்துச் சென்றான்

“திடீர்னு என்ன கரிசனம்….மாமா” என சீரியசாகவே கேட்டாள்….

“நீ என்னோட.. மாமா பொண்ணு தானே… அந்த உரிமையில் வந்த கரிசனமா இருக்க கூடாதா”

“உங்களுக்கு நான் அடி வாங்கி கொடுக்குறதுக்கு முன்னாடி சொல்லி இருந்தா நம்பி இருப்பேன்…ஆனா இப்போ” என இழுத்தவள்…

“சத்ரி உங்ககிட்ட பேசினானா….மாமா!” என கண்களை சுருக்கி கேட்க

சட்டென ப்ரேக் அடித்து வண்டியை நிறுத்தினான் ஷிவா.

கைகளை தலைக்கு மேல் கொண்டு சென்றவன் “நீயும் சத்ரியும் நகமும் சதையும்ன்னு நான் ஒத்துக்கிறேன் தாயி. விட்டுடு.. நீ அவனுக்காக எனக்கு அடி வாங்கிக் கொடுக்கிறது என்ன…. அவன் உனக்காக உதவின்ற பேர்ல ஆர்டர் போட்டுட்டு போறதென்ன.. டெலி பதி நல்லாவே வொர்க் ஆகுதும்மா இரண்டு பேருக்கும் ” என புன்னகை முகம் முழுவதும் தவள…. க்ருத்திகா பிரச்சனையை மறந்தவனாய் அவளை பள்ளிக்கு அழைத்துச் சென்றான்.

சாத்வியோ…. ஷிவாவை கூர்மையாய் பார்த்தபடி வர….

“உன் பார்வையே சரியில்லை…  மறுபடியும் எனக்கு அடி வாங்கி கொடுத்துடாதம்மா…. இங்கேயே இறங்கிக்கோ!”என பள்ளி ஆரம்பிக்கும் ரோட்டின் ஓரமாய் இறக்கி விட்டு சென்றான்.