“இவ… எதுக்கு இப்படி பயந்து போய் உக்கார்ந்திருக்கா..”  என நினைத்தபடி பார்க்க அவனை பார்த்ததில் சாத்விக்கு இன்னும் அழுகை கூடியது.

வீட்டு பெண்கள் முகம் சரியில்லை என விநாயகத்திடம் படர்ந்தது இவன் விழிகள்.

 வாய் சண்டை முற்றி, வார்த்தைகள் முற்றி இறுதியில் தன் தந்தையை நோக்கி கை நீட்டியிருந்தார் சங்கரன்.

அதுவரை வேடிக்கை பார்த்திருந்தவன், ‘அப்பா’ என சட்டென சுதாரித்து, இருவருக்கும் நடுவில் வந்து சங்கரை தன் கைகளால் தடுத்தான் சத்ரி

“என்ன மாமா, ஆச்சு ஏன் அப்பா கூட சண்டை போடுறீங்க ஏதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் மாமா”  சத்ரியன் சங்கரை தடுக்க .

“பேசி தீர்த்துக்கலாமா..! அதான் நீ வந்துட்டல.. தீர்த்துருவோம்” என கோபத்துடன் சங்கரன் சத்ரியை நெருங்க.

“காலையில் இருந்து நீ பண்ணின பிரச்சனை பத்தாதா… சத்ரிகிட்டேயும் எதுக்கு பிரச்சனை பண்ற” என  சங்கரிடம் விநாயகம் மன்றாடி

“சத்ரி ,நீ இங்க இருந்து போ” விநாயகசுந்தரம் பதட்டத்துடன் சத்ரியிடம் கூற

அதற்குள்…  சங்கரன்.. “ஏன், உன் மூத்த மகனை காப்பாத்தினது பத்தாதா….இவனையும் போக சொல்ற” என எகிறிக் கொண்டு வர

“சங்கரன் வேண்டாம், வெங்க்கட் பண்ணின தப்புக்கு இவன் என்ன செய்வான்” என சத்ரியை கண் ஜாடையிலேயே போக சொன்னார் விநாயகசுந்தரம்…

தந்தையின் ஜாடையை கவனித்தாலும்.. அந்த இடத்தை விட்டு நகரவில்லை சத்ரி..

“ பசங்க என்ன பண்றாங்கனு நீ வேணும்னா கவனிக்காம இருந்திருக்கலாம்…  ஆனா, அவன் கூடவே தான இவனும் இருக்கான்…இவனுக்கு எப்படி தெரியாமா இருக்கும்.

உன் முன்னாடியே கேட்கிறேன்… எங்கே இல்லைனு சொல்ல சொல்லு.. பார்போம்.” என சத்ரியை பார்த்தவர்…

“வெங்க்கட்டும், க்ருத்திகாவும் பழகுறது உனக்கு தெரியாதுனு சொல்லுடா பாப்போம்”  என சங்கரன் சத்ரியிடம் நேராக கேட்டபடி அதீத கோபத்தை காட்ட…

சட்டென உடல் விரைத்தது சத்ரிக்கு.

“சொல்லுடா….” என்ற ஆங்காரமான குரல் மீண்டும் ஒலிக்க,

“தெரியும்” என ஒப்புக்கொள்ள முடியவில்லை இவனால்.

 தன் காதில் விழுந்த செய்தி உண்மை தானே என பதில் கூறாமல் மௌனத்தை பதில் கொடுத்து, தன் தந்தையை பயத்துடன் பார்த்தான் சத்ரி..

அவனின் விழியே ‘எனக்கு ஏற்கனவே தெரியும்’ என விநாயகத்திற்கு கூற…

‘இவனுக்கு தெரியுமா..!’ என அதிர்ந்தாலும்.. “தெரியாதுனு சொல்லுடா..” என அவனின் தந்தை ,இட வலமாக  தலையை அசைத்து அவனை எச்சரிக்க

இருவரின் ஜாடையையும் கவனித்த சங்கரன் “அப்போ எல்லாத்துக்கும் தெரிஞ்சிருக்கு, என்னையும் மஹாவையும் தவிர்த்து எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு அப்படி தானே ” என

“உங்கப்பனுக்கு தெரியாதுனு இவ்வளவு நேரம் புளிப்பு காட்டிட்டு இருந்தான். ‘நீயும் தெரியாதுன்னு செல்லுடா’ன்னு உன்னையும் எச்சரிக்கிறானா”

தன்னை எதுவும் சொன்னால் தாங்கிக் கொள்ளலாம்.. ஆனால் தன் தந்தையை குற்றம் சொல்வதை தாங்காது என நினைத்தவன்.

 “ஐயோ ,மாமா எனக்கே இந்த விசயம் கொஞ்ச நாள் முன்ன தான் தெரியும், அப்பாக்கு எதுவும் தெரியாது அவரை திட்டாதீங்க….” என தந்தையை பார்க்க…

அதற்குள் சங்கரன்.. “தெரிஞ்சா , வீட்டில் இருக்கிற பெரிய மனுசங்க கிட்ட சொல்லாமல் அவன் கூட சேர்ந்து கிட்டு  எங்களை ஏமாத்துற இல்லையா..” என சத்ரியை கேட்க..

“சொல்லுடா, எங்க இரண்டு பேரும், எங்க போனாங்க” என வேட்டியை மடித்துக் கொண்டு கேட்க….

“எங்கேனா? அவங்க வீட்டில் இல்லையா?” என சத்ரி அதிர்ச்சியாய் கேட்க…

“என்னடா நீயும் நடிக்கிறியா….அவங்க பழகினாது உனக்கு தெரியும், ஓடி போனது மட்டும் தெரியாதா”

“ ஓடி போய்ட்டாங்களா.. ? ஐயோ எப்போ மாமா” என

அவன் கன்னத்தில் பளார் என விட்டார் ஒரு அறை.

“பொய் சொல்லாத….

உனக்கு தெரியும்….

எங்க உன் அண்ணன்”  என சங்கரன் கேட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் கன்னத்தில் மாறி மாறி அடிவிழ…. மஹா சிவஹாமி சாத்வி என மூவரும், “அய்யோ அவனை அடிக்காதீங்க” என அப்படியே அடி வாங்கி கொண்டு நின்றிருந்த சத்ரியை  தங்களுக்குள் இழுத்து கொண்டனர்.

”ஏய், என் பையன் மேல இன்னும் ஒரு அடி விழுந்தது, நான் மனுஷனா்இருக்க மாட்டேன் சங்கரா” என கோபமே வராத விநாயகம் கூட மகனை கை நீட்டிய கோபத்தில் சங்கரனிடம் எகிறினார்.

“உங்களுக்கு என்ன பயித்தியமா புடிச்சிருக்கு. புள்ளையை போட்டு இப்படி அடிக்கிறீங்க” என மறுபக்கம் மஹா எகிற

“அண்ணே ,என் புள்ளைய விட்டுடுங்க அண்ணே..மூத்தவனாவது எதாவது பிரச்சனையை இழுத்திட்டு வருவான். சின்னவன் நல்ல பையன் அண்ணே. வெங்கட்டும் க்ருத்தியும் எங்கே போனாங்களோ? அவனுக்கு எப்படி தெரியும். அவனுக்கு எதுவும் தெரியாது விட்டுடுங்க அண்ணே” என சங்கரை தன் கூட பிறவா சகோதரனாய்  நினைத்து வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என அழைத்தவள், இப்போதும் அப்படியே அழைக்க

“ஏய், நீ எங்கப்பனுக்கு பிறந்தியா…இல்லை உங்கப்பனுகக்கு நான் பிறந்தேனா… இனி என்னை அண்ணன்னு கூப்பிட்ட…கொன்னுடுவேன் கொன்னு, அண்ணனாம் அண்ணே” என அவளுடன் சேர்த்து தன்னையும், தன் பிறப்பையும் அசிங்கப் படுத்தினார் சங்கரன்…

சங்கரின் வார்த்தைகள், தன் மகனை அடித்தது… எல்லாம் சேர சங்கரின் பின்னால் ஓங்கி ஒரு மிதி விட்டார் விநாயகசுந்தரம், கீழே விழாத போதும் நன்றாகவே தடுமாறி நின்றார் சங்கரன்..

“ ஏய், மச்சனாச்சேன்னு மரியாதை கொடுத்து பேசினா…நீ எங்க வீட்டுக்குள்ள வந்து ,என்னை, என் புள்ளைய அடிக்கற… மகளை காணுமேன்ற ஆத்திரத்தில் அடிக்கறன்னு தான் பொறுத்தேன். இப்ப நீ என்  பொண்டாட்டியை அசிங்கபடுத்துற… உன்னை” என மீண்டும் அடிக் வர

இருவரையும் இருவரின் மனைவிமார்கள் பிடித்துக் கொள்ள,பெண்கள் எவ்வளவு நேரம் அடக்கி வைக்க முடியும்…

அங்கே பேச்சு வார்த்தைகளுக்கு மரியாதை இன்றி போக கைகளுக்கும், கால்களுக்கும் மரியாதை கிடைத்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொளகூடிருவுருக்கும் இடையில் புகுந்து விலக்கி விடும் போதெல்லாம் சத்ரிக்கும் அடிவிழ… வீடே ரணகளமானது…சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே கூட, வந்த சில பெரியவர்கள் அவர்களை சத்தமிட்டு விலக்கினர்.

ஊரின் பெரிய தலைகளுக்கும் சொல்லி அனுப்ப பட, சிறிது நேரத்தில் அவர்களும் வந்தனர்.

 “ மாமன், மச்சானுக்குள்ள என்னையா சண்டை வேண்டி கிடக்கு….பேசி தீர்க்க வேண்டியது தான“ பெரியவர் குரல் கொடுக்க

அங்கே வந்தவர்களில் சிலர் பல சந்ததிகளாய் ஊர் பஞ்சாயத்து செய்பவர்கள் அவர்களை பார்த்ததும் சங்கரன்

“நான் இவனுக்கு மச்சானும் இல்லை, இவன் எனக்கு மாமானும் இல்லை..  பிறப்பால வந்தா தான் சொந்தம், இது ஒட்டிகிட்டு வந்த உறவு தானே…  இதில் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்..” என ஆத்திரத்தில் அறிவிழந்து பேசினார் சங்கரன்..

பின் அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் திரும்பி..  “ ஐயா, என் பொண்ணை , இவங்க மூத்த பையன் இழுத்துட்டு ஓடிட்டான், எங்கே இருக்கானு இவங்க குடும்பத்துக்கே தெரியும்… கேட்டால் சொல்ல மாட்ரானுங்க… நீங்களே கேளுங்கையா….” என விநாயகசுந்தரம் குடும்பத்தையே தீப் பார்வை பார்க்க…

“ஏம்பா, எப்போவுமே இரண்டும் ஒன்றாக தானே சுத்திட்டு இருக்குங்க.. அப்பலாம் விட்டுட்டு இப்போ வந்து கேட்கிற.. “ என அந்த பெரியவர் மீசையை முறுக்க..

கூடவே இருந்த மற்றவர்களும் தங்கள் வாயை திறக்க..

“இரண்டையும் கவனிக்காம நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க… ”

“எனக்கு அப்பவே தெரியும்… இங்க தான் போய் முடியும்னு….”

“மாமா, மச்சானு அவ்வளவு பாசமா இருக்கறவங்களா…இப்படி சண்டை போடுறாங்க… ”

“யாரு கண்ணு பட்டுச்சோ… ” இப்படி பல குரல்களும் அந்த வீட்டில் நிசப்தமாய் ஒலிக்க…

அனைத்தையும் தகர்த்தது… சங்கரனின் பேச்சு  ”மாமானா இருந்தாலும் மச்சானா இருந்தாலும், மானம் பெரிசுங்க ஐயா… காலையில் இருந்து தான் என் பொண்ணை  காணும். தேட சொல்லி ஆள் அனுப்பி இருக்கேன், என் புள்ள எப்படி போச்சோ அப்படியே வரனும், இல்லை நான் கொலைகாரணா மாறிடுவேன்.

எனக்கு எங்க ஜாதி ஜனங்க முன்னாடி மானத்தோட வாழனும்… அம்புட்டுத்தான்..… நீங்க தான் இவ்ங்களை கேட்கனும்“ என விநாயகத்தை கை காட்டினார் சங்கரன்.

“ ஏம்பா ‘என் புள்ளைய , விநாயகம் மகனுக்கு தான் கொடுக்க போறேன்னு’  நீ எங்கிட்ட சொன்னேல்ல.“ என பெரியவர் கேட்க…

இல்லை என மறுக்கவில்லை சங்கரன் “ஐயா, நான் சொன்னது உண்மை தான், ஆனா, அவரோட சின்ன மகனுக்கு தான்.. என் சின்ன மகளை பேசலாம்னு இருந்தேன்” சங்கரன் சொல்லிய நொடி சத்ரியும்.. சாத்வியும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்க….

“பெரியவன் தருதலை,அவனை நம்பி எப்படி கொடுக்கிறது…எம்புள்ள வாழ்க்கை என்னாகறது? சின்னவளை ,சத்ரியன்க்கு தான் கொடுக்கனும்னு மஹா சொல்லுச்சுங்கையா. நண்பனா இருந்தாலும்.. நான்  அதுக்கும் மேல பழகுனேன் அதான் சின்னவளை சத்ரிக்கு பேசலாம்ன்னு இருந்தேன்.. என் சொந்தம் விட்டு போக கூடாதேனு  க்ருத்திகாவை என் அக்கா மகனுக்கு பேசி இருத்தேன்.  ஆனால் மூத்தவன் இப்படி எல்லாரோட தலையிலையும் கல்லை தூக்கிப் போட்டுட்டானே” என பொறுமையாய் பதில் சொல்லி.. “எனக்கு என் பொண்ணு வேணும்” என ஸ்தீரமாய் முடிக்க…

அவரின் பேச்சு அனைத்தையும் கேட்ட அனைவரும் சங்கருக்கே சப்போர்ட் செய்து பேச. மூத்த மக்களின் கடமையை சரியாக செய்யாது விட்டு இருவரையும் அன்பை தேடி அலைய வைத்து, இறுதியில் அவர்களே அன்பை தேடிக் கொள்ள வைத்ததும் இதே சங்கரன், விநாயகசுந்தரம் தான்.

அன்பை மட்டுமே உயர்வாய் நினைத்து , பாசத்தை மட்டுமே  பகிர்ந்த இருவரின் மனதில் காதல் தீ அழகாய் பற்றிக்  கொள்ள வைத்ததும் இதே சங்கரன் விநாயகசுந்தரம் தான்..

அங்கே அவர்களின் பார்வை ஒன்றை ஒன்று கவ்வியபடி இருக்க….

“ஓடி போய்டுச்சுங்க..  என்ன செய்ய சொல்ற.. .ஓடிப் போனதுங்க ,கல்யாணம் கட்டிகிட்டா வீட்டுக்கு வராம எங்க போக போகுதுங்க.. விடுய்யா..  இந்த காலத்தில் காதல் கல்யாணம் எல்லாம் சகஜம்யா..  யாரும் பெரிசா எடுத்துக்காட்டாக மாட்டாங்க.. பெத்தவங்களே சேர்த்து வைக்கிறாங்க..நீயும் ஏன் கிடந்து அடிச்சுக்கிற.. விடுயா..” என மீண்டும் அந்த பெரியவர் கூற…

“என் பொண்ணு எங்கே இருக்கான்னு விநாயகம் குடும்பத்துக்கே தெரியும்..ஐயா.. நாளைக்கு என் அக்கா வீட்டில் இருந்து பரிசம் போட வராங்க….அவங்க முன்னாடி அவமான பட்டு நான் நிக்கவா….எனக்கு என் பொண்ணு வேண்டும்” என கடுமையாய்  கத்த

இங்கே இவர்களின் பேச்சு வரே திசையிலேயே இருக்க.. “ நீங்க சொந்தகாரங்க,பேசி தீர்க்கிற வழியைப் பாருங்க அவ்வளவு தான் சொல்வோம், இல்லையா பஞ்சாயத்தை கூட்டுங்க , பார்த்துக்கலாம்…” என முடித்து எல்லோரும் சென்றுவிட்டனர்..

ஆத்திரம் கண்களை  மறைக்க , சத்ரியின் குடும்பத்தை பார்த்து “என் மகள் க்ருத்திகா, இன்றைக்கு சாயந்திரத்திற்குள் வீட்டுக்கு வரலை, அப்பன், மகன் இரண்டு பேரும் அசிங்கப்படுவீங்க” தன் நண்பன் என கூட பார்க்காது…கூறி..

“ஏய் உங்களுக்கு வேற சொல்லனுமா” என வெங்கல குரலில் கத்த…. சாத்வி ,மஹா இருவரும் தங்கள் வீட்டிற்கு விரைந்தனர்

சாத்வி போவதையே பார்த்த சத்ரியை தன் புறம் திருப்பிய விநாயகசுந்தரம்.”டேய், ஏங்கடா இரண்டு பேரும்….” என பொறுமையற்ற குரலில்  கேட்க…

சாத்வியிடமிருந்து தன் கண்களை பிரித்துக் கொண்ட சத்ரி “அப்பா நீங்களும் புரியாம பேசாதீங்க,இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் அவங்க விசயமே எனக்கு தெரியும்….அவன் இப்படி திடு திப்புனு ஓடிப்போவானு கனவா கண்டேன். வாங்க முதலில் அவன் ப்ரண்ட்ஸ் கிட்ட கேட்டு பாப்போம்… போன்ல கேட்டு வேலைக்காகாது”என தன் தோள்களிலும்,கழுத்திலும், கன்னத்திலும் விழுந்த அடிகளை தேய்த்தவாரே கூற

அவனின் முகசுளிப்பை பார்த்து சிவஹாமியும், விநாயகமும்..  அவசரமாய் வந்து “எங்க சண்டையில் நீ எதற்குடா குறுக்கால வர….பாரு அடி எப்படி விழுந்திருக்கு” அவனை இருவரும்   வருடினர்.

“இப்போ இது முக்கியம் இல்லை மா.. வெங்க்கட் தான் முக்கியம் மா.. அப்பா.. வாங்க போகலாம்” என அவரை அழைத்துக் கொண்டு தனக்கு தெரிந்த வெங்க்கட் நண்பர்களை சந்தித்து ,எப்படி எப்படியோ கேட்டும் கிடைத்த ஒரே பதில் “தெரியாது “ என்பது தான்…

ஒரு பதிலும் கிடைக்காமல் போகவே “ நீ வீட்டுக்கு போடா, நான் சங்கரன் வீட்டிற்கு போய்டு வரேன்… ” என விநாயகசுந்தரம் கூற….

“ஆமா.. இரண்டு வீட்டுக்கும் நூறு மைல் தூரம் இருக்கு.. நீங்க வேற ஏம்பா கடுப்ப கிளப்புறீங்க.. வாங்க நானும் வரேன்” என அவருடனேயே சென்றான்.

“உன்னை பார்த்து தாண்டா அவன் ரொம்ப கோவப் படுறான்.. நீ வர வேண்டாம்” என விநாயகசுந்தரம் எவ்வளவு தடுத்தும்.. சத்ரி கேட்கவே இல்லை.. இருவருமே சங்கரின் வீட்டின் முன்னால் நின்றனர்..

“ சங்கரா ”  என்ற ஒரு அழைப்புக்கே வெளியே வத்தார் சங்கரன்

உள்ளே வா… என்ற அழைப்பு கூட இல்லாது  இருவரையும்  வெறித்தபடி நின்றிருந்தார் சங்கரன்..

“எங்களுக்கு தெரிஞ்ச எல்லா இடத்திலையும் தேடிட்டோம், எங்க இருக்காங்கனு கண்டுபிடிக்க முடியலை” என தன் வார்த்தைகள் தயங்கி தயங்கி வர..  வந்த விசயத்தை சொல்லிவிட்டு , சங்கரிடம் ஏதும் பதில் வருமா என பார்க்க….

அவர்களிடம் பார்வை பதித்தவாரே… வீட்டினுள் திரும்பி.. ”மாப்பிள்ளை..” என சத்தம் கொடுக்க…  வந்தவனோ சிவ பாண்டியன்..சங்கரின் அக்கா மகன் க்ருத்திகாவிற்கு பேசியவன்..