பகுதி 13

“ சட்ரி…. சட்ரி.. “ என தளிர் நடையால் சத்ரியையே சுற்றிக் கொண்டிருப்பாள் சாத்வி…

‘ சத்ரி’ என்ற பெயர் சாத்வியின் வாயினில் வராது…  சட்ரி என தான் அழைப்பாள். அதைக் கண்டு சத்ரியினுள் அப்படி ஒரு  மகிழ்ச்சி எழும்…  முதல் முறையாய் அவனின் பெயர் சொன்னது போது அப்படி ஒரு ஆட்டம் சத்ரிக்கு.. வீடே அவனின் ஆட்டத்தில் திக்கு முக்காடிப் போனது

‘ சட்ரி…. பப்பு ஏணும்..’

‘ சட்ரி பால் ஏணும்.’

‘ சட்ரி வெளாட வா….’

‘ சட்ரி டூங்க… வா..’ என சகலமும் சத்ரி என ஆனான்…  சில நாட்களில் சத்ரியிடம் தான் தூங்குவேன் என அவனின் மீது கை கால்களை பரப்பியபடி வாயில்  எச்சில் ஒழுக…  அந்த பிஞ்சு உதடுகள் சிறிதாய் பிளந்தபடி…  சத்ரியின் அருகிலேயே உறங்கி விடுவாள் சாத்வி.

“இவளுக்கு சத்ரி பைத்தியம் தான் பிடிச்சுருக்கு “ என் மஹாவே ஒதுங்கிக் கொள்ளும் அளவு இருந்தது அவர்களின் பாசப் பிணைப்பு..

சிறு ப்ராக்கும், முழங்கால் வரையில்  நர்த்தனம் ஆடிக் கொண்டிருக்கும் உடைகளும்…  அணிந்து கொண்டு ஓடி வரும் சாத்வியை பார்க்க பார்க்க யாருக்கும்  சற்றும் தெவிட்டாது..

சாத்வி நடக்கின்றாளா இல்லை பறக்கிறாளா  என தெரியாத அளவு சத்ரியை கண்டாலே  மின்மினியாய் பறந்து வரும் சாத்வி என்றும் சத்ரிக்கு பிடித்தம் தான்…

மூன்றரை வயதில் பள்ளி செல்ல தயாராய் இருந்தாள் சாத்வி

“சத்ரி நானும் ஸ்கூல் வாரேன்…  வுட்டுட்டு போய்டாத” என செப்பு இதழ்களால்  பள்ளி செல்ல இருந்தவனை நிறுத்தினாள் சாத்வி…

“என் கூட வர்ரி்ய்யா நீ..” என கிண்டல் போல கேட்டாலும்.. தன் அத்தையை பார்க்க..

“சத்ரி…  உன்னோட ஸ்கூலில் தான் சாத்வியையும் சேர்த்திருக்கோம்  இன்ட்ரவல், லன்ஜ் டைம் பார்த்துக்கோடா..” என சாத்விக்கு யூனிபார்ம் போடுவதில்  கவனமாய் இருந்த மஹா…. சத்ரியிடம் கூறிக் கொண்டிருந்தாள்…

அதற்கு எட்டு வயதில் இருந்த சத்ரியோ…  “அத்தை ஸ்கூலில் பாய்ஸ் அன்ட் கேர்ல்ஸ் பேசக் கூடாது அத்தை” என அவன் பள்ளியின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனில் முக்கியமான ஒன்றை கூற..

“உங்க ஸ்கூலுக்கு இந்த கண்டிசனெல்லாம் ஒவர்டா..…ரொம்ப பண்றானுங்கடா.. நீ இருக்கேன்றதுனால தான் சாத்வி அழாமல்  ஸ்கூல் கிளம்பிட்டு இருக்கா…  நீ மட்டும் அவளை இடையில்  பார்க்க போகலை…  அவ்வளவு தான்டா…  உன் கிளாஸ்ல உன் பக்கத்தில் வந்து உட்காந்துக்க போறா.. பார்த்துக்கோ..” என சங்கரும் கிண்டல் செய்ய..

“ அய்யோ…  மாமா மிஸ் அடிக்க போறாங்க”  என  பள்ளி வயது பாலகனாய் ஆசிரிரயருக்கு பயந்து பின்..  “நீங்க அவ மிஸ் கிட்ட சொல்லுங்க மாமா…  மிஸ் பெர்மிஷன் கொடுத்தா…. பார்க்கலாம் மாமா… அப்பறம் நான் சாத்வியை பார்த்துக்கிறேன்..” என பெரிய மனிதன் போல் சிக்கலை தீர்த்தவனாய் சாத்வியை பார்க்க…

“சரிடா பெரிய மனுஷா…  அவங்க மிஸ் கிட்ட நான் பேசிக்கிறேன்.. இப்போ நீயும் கூட வா.. சாத்வியோட மிஸ் கிட்ட உன்னை அடையாளம் காட்டனும்ல..” என சாத்வி சத்ரி என இருவரையும் மஹாவும் சங்கருமே அழைத்துச் சென்றனர்..

மஹாவின் கையினுள் சிக்குன்டிருந்த தன் பிஞ்சு விரல்களை வலுக்கட்டாயமாய்…. பிரித்துக் கொண்டு, சத்ரியின் கைகளுக்குள் புதைத்துக் கொண்டு.. மான்குட்டியாய் குதித்து குதித்து நடந்து வந்தாள்.

தனக்குள் இருந்த சாத்வியின் விரல்களை அழுத்தமாய் பிடித்தபடியே சத்ரியும் நடக்க தொடங்கினான்.

சத்ரியை பற்றி சாத்வியின் மிஸ்ஸிடம் அறிமுகம் செய்து…  சிறிது நாட்களுக்கு மட்டும் அனுமதி கேட்டார் மஹா..

“குழந்தைங்க புதுசா ஒரு இடத்திற்கு வரும் போது.. பிடிச்சவங்களை தேடுறது இயல்பு தான்.. என்ன…  எல்லா குழந்தைகளும் அப்பா இல்லை அம்மாவை தேடுவாங்க…  உங்க பொண்ணு இந்த பையனை தேடுறாளா.. “ என மஹாவிடமும் சங்கரிடமும் கூறி..

“லன்ச்ஜில் மட்டும் பார்த்துக்கோ சத்ரியன்,  இன்பிட்வின்ல வரக்கூடாது” என சத்ரியிடம் சாத்வியின் மிஸ் கூற…

“ஓகே மிஸ்..” முகமெல்லாம் புன்னகை பூக்க..” லன்ச்ஜில் வரேன் சாத்வி… ” என சாத்வியிடம் சொல்லிக் கொண்டு நகர்ந்தான்…

நகர்ந்தவனை தன் பிஞ்சு விரல்களால் பிடித்து கீழே இழுத்தாள் சாத்வி…  கீழே குனிந்து…  “என்ன சாத்வி ” என கேட்க

அவன் கன்னத்தில் முத்தமிட்டு “ கண்டிப்பா வரனும்” என்ற கட்டளையையும் இட

“ சத்வி…  பசங்களுக்கு இப்படி எல்லாம் முத்தம் கொடுக்க கூடாது… ” என சாத்வியின் மிஸ் கண்டிக்க..

சற்று நெளிந்த சத்ரி…  “இனிமேல் குடுக்க மாட்டா மிஸ்.” என நெளிந்து நிற்க

அதற்கு எதிர் மாறாய்.. மறுபடியும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு..”அப்பிடித்தான்.   குடுப்பேன்..” என கிளு கிளுத்து சிரித்தபடியே தன் கிளாஸிற்குள் சென்றாள் சாத்வி…

“சாத்வி கொஞ்சம் வாலு  மிஸ்…  சின்ன குழந்தை தானே…  நான் சொல்றேன் மிஸ்.. இரண்டும் அப்படி தான்…  நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.. ” என மஹா பேச…

“ பரவால்ல…  பரவால்ல… ” என அவளின் ஆசிரியையும் நகர்ந்து விட..

“பார்த்துக்கோடா..” என மஹா சங்கரன் இருவரும் கிளம்பினர்.

அன்றே லன்ச்ஜ் டைமில் சாத்வியை வந்து பார்த்து, அவளுக்கு வழக்கம் போல் ஊட்டிவிட்டு…. சிறிது நேரம் அவளை சிரிக்க வைத்த பின்னரே  சென்றான்.

மாலை அவனே பள்ளியில் இருந்து சாத்வியை அழைத்து வந்து விட…  மஹாவிற்கு பெருத்த நிம்மதி ‘இனி கிருத்தியையும் கவனிக்கலாம்’ என நிம்மதியாய் இருந்தார்.

அன்றிலிருந்து சாத்வியை தன் பொறுப்பில் வைத்துக் கொண்டான்… சத்ரி…  காலம் முழுமைக்கும் அது தொடர போகிறது என தெரியாமலேயே எடுத்துக் கொண்டான் பொறுப்பை.

சாத்வியை தன்னில் ஒருத்தியாய் நினைக்க தொடங்கினான்.. சத்ரி. அந்தளவிற்கு சாத்வி என்றால் அத்தனை பிடித்தம்..சத்ரிக்கு..

அதுவும் ஒரு வகை காதல் தான்,

பாசத்தின் போர்வையில் மறைந்த காதல்

காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழைய முடியாத காதல்.

இனக்கவர்ச்சியின் இனம் கான முடியாத காதல்.

பால்ய நாட்களின் அரும்புக் காதல்.

மொத்தத்தில் அன்பின் புனிதம் அது..

அரியாத வயதிலேயே சாத்வியினுள் தன் தடத்தை அழுத்தமாய் பதித்திருந்தான் அவனுக்கு தெரியாமலேயே…

சாத்வியின் ஒவ்வொரு நாளும்.. காலை, சத்ரியின் முகத்தில் தான் விடியும், இரவில் அவன் முகத்தில் தான் முடியும்…  அந்தளவு சாத்வியை தன்னுள் அலையாய் சுருட்டி இருந்தான் சத்ரி.

காலை மாலை இரவு என சாத்விக்கும், கிருத்திக்கும் சரிவிகிதமாய் நேரம் ஒதுக்கினாலும்…  க்ருத்திகா இத்தனை நாள் கிடைக்காத  பாசத்தை நினைத்து ஏங்கி…  எப்போதும் போல் தள்ளி நிற்க தொடங்கினாள்..

தினமும் பள்ளிக்கு செல்லும் போது சத்ரியும் சாத்வியும் முதலில் செல்ல…

அவர்களை முறைத்தபடியே  க்ருத்திகாவும், வெங்க்கட்டும் பின் தொடர்ந்து சென்றனர்…

வெங்க்கட் க்ருத்திகா, இருவருமே….சற்று பெரிய குழந்தைகள் என்பதால் ஒன்றாகவே பள்ளி சென்று வந்தனர்.. சத்ரி சாத்விக்கு பாச பிணைப்பு என்றால், இவர்களுக்கு யாரும் பாசம் அளிக்காததால் வந்த பிணைப்பு….

இருவரின் பெற்றோர்களும் பாசம் காட்டினாலும் அது அவர்களுக்கு போதவில்லை, சத்ரியை ஒப்பிடும் வெங்க்கட், சாத்வியை ஒப்பிடும் க்ருத்திகா…  என இருவருமே, தத்தமது பெற்றோர்களின் அன்பை முக மூடியிட்டு மறைத்துக் கொண்டனர்..

காலப் போக்கில் அதுவே அவர்களுக்கு பழகிப் போக…  வெங்க்கட்டும் க்ருத்திகாவிற்கு வெகு நெருக்கமாய் பழக்கமானான்.

சத்ரி வெளிப்படையாய் காட்டும் அன்பை, வெங்க்கட் க்ருத்திகாவிற்கு மறைவாய் காட்ட தொடங்கினான்.

க்ருத்திகா அமைதியாய் இருந்து சாதித்துக் கொள்ளும் ரகமாய் மாற.. வெங்க்கட் ஏதாவது பிரச்சனையை இழுத்துக் கொண்டு வர தொடங்கினான்…. பத்து நாட்களுக்கொருமுறை ஏதாவது பஞ்சாயத்து அவனை தேடி வந்து கொண்டே இருக்கும்..

சத்ரியின் பாசமும், சாத்வியின் அன்பும் இருவரையும் இன்னும் இறுக்கமாய் பிணைத்தபடியும்.

வெங்க்கட், க்ருத்திகா இருவரும் கிடைத்த அன்பில் குளிர் காய்ந்தபடியும் காலம் உருண்டோடியது..

சத்ரியன் கல்லூரி இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த சமயம்.

மாலையில் கல்லூரி முடிந்து வீடு வந்தவன், வீட்டில் தன் தந்தையும் மாமனும் சண்டையிட்டுக் கொள்வதை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

இதுவரை மாமா, மச்சான் என சொந்தங்களாய் பழகிய விநாயகமும், சங்கரனும் அப்படி சத்தமிட்டு கொண்டு இருந்தனர்.

வாசலிலேயே அதிர்ந்து நின்றுவிட்டான் சத்ரியன், இவர்களா சண்டையிடுவது என.

இருவரும் வாய் சண்டை தான் போட்டுக்கொண்டிருந்தனர் என்றாலும், இதுவரை இருவரது வீட்டிலும் நடக்காத ஒன்று.

அம்மா, அத்தை எங்கே போனாங்க? யோசனையினுடே வீட்டை அளந்தது இவன் பார்வைகள்.

ஒரு ஓரமாய் சிவஹாமி,  மஹாலட்சுமி இருவரும் இவர்களது சண்டையை நிறுத்த முடியாமல் கண்களை துடைத்தபடி இருக்க..

இருவரின் நடுவிலும் சாத்வி, புரிந்தும் புரியாத முக பாவனை வேறு..

கூடவே கண்கள் எல்லாம் கலங்கி போய் அழவா வேண்டாமா என்ற ரீதியில் முகத்தில் பயத்தை காட்டியபடி அமர்ந்திருந்தாள்.