“அம்மா … பாப்பா… அழகா இருக்கம்மா..” என அப்போது தான் ஜனித்திருந்த பெண் குழந்தையின் பிஞ்சு விரல்களையும், கால்களையும்.. முகத்தையும் மெதுவாய் வருடியபடி தன் தாயிடம் கூறிக்கொண்டிருந்தான் ஐந்து வயது சத்ரியின்..
“ஆமாண்டா… குட்டிப் பாப்பா அழகா இருக்காடா..” என தன் பங்கிற்கு கூறிய விநாயகசுந்தரம் “சங்கரன் எங்கே சிவஹாமி.. “ என மெதுவாய் கேட்க…
“இரண்டாவது பையன் பிறப்பான்னு ஆசையாய் இருந்தாங்க .. பொண்ணா போச்சுன்னு , வெளியே போய் உக்கார்ந்துகிட்டாங்க..” என சிவஹாமியும் மெதுவான குரலில் கூறினார்.
“நீ குழந்தையை பார்த்துக்கோ.. சங்கரன்ட்ட பேசிட்டு வாரேன்..” என சங்கரிடம் சென்றார் விநாயகம்.
“மாப்ள.. இரண்டாவதா ஒரு மருமகளை கொடுத்துருக்க.. ட்ரிட்லாம் எதுவும் இல்லையா” என சங்கரின் முதுகில் தன் கையை வைத்தபடி அருகில் அமர..
“ம்ப்ச்… இரண்டாவதும் பொண்ணா போச்சேன்னு கவலையில் இருக்கேன்… இதில் ட்ரிட் வேறையா… ” என சங்கரன் சலித்துக் கொள்ள…
“பொம்பள பிள்ளை பிறக்கலாம் ஒரு அதிர்ஷ்டம் வேணும்டா.. இரண்டாவதும் மஹாலட்சுமி பிறந்திருக்கான்னு சந்தோஷபடுடா.. அதை விட்டுட்டு கவலை பட்டுட்டு இருக்க..” என சங்கரிடம்
அதற்கு சங்கரிடம் பதிலில்லாது போகவே.. “வேணும்னா, வெங்க்கட், இல்லை சத்ரி யாரையாவது வச்சிக்க.. இந்த புள்ளையை எங்கிட்ட கொடுத்துடு.. நான் ராணி மாதிரி வளர்க்கிறேன்டா” என மீசையை முறுக்கியபடி . சங்கரின் தன்மானத்தை சீண்டி விட
“ஏன் என்னால் வளர்க்க முடியாதா.. நானும் வளர்ப்பேண்டா ராணி மாதிரி” என விநாயகசுந்தரம் எதிர் பார்த்த பதிலை கொடுக்க..
தனக்குள் சிரித்தபடி… “அப்பறம் ஏன் இங்கே உக்கார்ந்தருக்க… வா… உன் ராணியை வந்து பாரு..” என இப்போதைக்கு சமாதானம் செய்து விட்ட திருப்தியில் மஹாவிடம் அழைத்துச் சென்றார் விநாயகசுந்தரம்..
அழகு குவியலாய் இருந்த இரண்டாவது மகள் சங்கருக்கு நிஜமாய் மஹாலட்சுமியாய் தான் தெரிந்தாள்.. ‘ பையன் பிறக்கலையே… ’ என ஒரு ஓரம் குத்திக் கொண்டு தான் இருந்தது சங்கருக்கு.. ஆண் பிள்ளை ஆசை யாரை விட்டது.. சங்கருக்கும் அது பெரும் கவலையாய் பதிந்தது.
ஆனால் எதையும் ஏற்றுக் கொள்ளும் மஹாவிடம் அது கொஞ்சமும் தெரியவில்லை போலும்… தாய்மையின் பூரிப்பில் ஆசை தீர மகளை கொஞ்சிக் கொண்டிருந்தாள் மஹா..
‘சரி ஆகிடுச்சா’ என்பது போல் விநாயகத்திடம் கண்களாளேயே சிவஹாமி கேட்க..
‘ ம்ம்ம்..’ என தலையசைத்து மனைவிக்கு பதிலளித்தார் விநாயகசுந்தரம்…
—————————–
“ அம்மா , பாப்பாக்கு இந்த டிரஸ் எடுக்கலாம்“ என அதை பிரட்டி பிரட்டி பார்த்து “இல்லை மா…. இது வேணாம்… இதோ… இதெல்லாம் குத்தும்… வேண்டாம்“ என கையிலிருந்த நெட் ப்ராக்கை தூக்கி வைத்து விட்டு , ஏற்கனவே குவிந்திருந்த உடைகளை மீண்டும் ஆராய ஆரம்பித்திருந்தான் சத்ரியன்.
விநாயகமும், சிவஹாமியும் ஓரமாய் ஒதுங்கிக் கொள்ள.. வெகு நேர தேடலுக்கு பின் சத்ரிக்கு பிடித்தமான உடையை தேடி எடுத்து…. அதை தன் தாயிடம் காட்டி… “அம்மா , இது பாப்பாக்கு நல்லா இருக்கும்“ என சத்ரி கூற, அந்த உடையையே எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.
அப்படியே நகைக் கடைக்கும் சென்று , இரண்டு பவுனில் மெலிதாய் ஒரு செயினும் வாங்கிக் கொண்டு வந்தனர்.. அதையும் சத்ரியே அவனுக்கு பிடித்த மாதிரியே வாங்கினான்..
சங்கரின் இரண்டாவது குழந்தைக்கு பெயரிடும் விழாவிற்காக வாங்கினார்கள் அதை மறுநாள் கொண்டு சென்று கொடுத்தனர்.
பெயரிடும் விழா பெயர் சொல்லும் அளவில் சற்று ஆடம்பரமாய் தான் நிகழ்த்தினர்.
கலர் பேப்பர்களாலும், கண்களை பறிக்கும் தோரணங்களாலும், அழகுற சுவற்றோடு ஒட்டபட்டிருந்த பலூன்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது அவர்கள் வீடு.
புண்ணியதானமும், ஆயிள் ஹோமமும் ஒன்றாய் அங்கிருந்த சிறு ஓம் குண்டத்தின் முன் நடந்து முடிந்தது.
அரிசியில் முதலில் பெயர் எழுத சொல்லி அதன் பின், ஐயர் “குழந்தை பெயரை காதில் மூனு தரம் சொல்லிடுங்கோ” என கூற..
“நான் தான் சொல்வேன்… நான் தான் முதலில் சொல்வேன்” என அதற்கும் ஆர்ப்பாட்டம் செய்து.. சத்ரி தான் முதலில்.. “சாத்வி…. சாத்வி… சாத்வி..” என அந்த குட்டி தேவதையின் காதுகளில் அழுத்தமாய் கூறினான்..
————————
ஒரே ஓர் சுவர் மட்டுமே மறைத்திருக்க… இந்த புறம் சங்கரின் வீடு… அந்த புறம் விநாயகத்தின் வீடு… என அருகருகே இருந்தது இருவரின் வீடும்.. சத்ரி இரு வீடுகளுக்கும் கேட்கும் படி கத்திக் கொண்டிருந்தான்.
“வேணாம்மா.. வலிக்கும்ம்ம்மா” முதலில் கெஞ்சலாய் வந்தது.. வார்த்தைகள்..
“அம்மா.. வேண்டாம்மா” இம்முறை கொஞ்சம் அழுத்தமாய் வந்தது…
“வேண்டாம் சொல்றேன்ல” அழுத்தமாய் இன்னும் சற்று அதிகாரமாய் வந்தது.
தான் சொன்ன எதையுமே காதில் வாங்காமல், வீட்டினுள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அன்னையை தன் புறம் திருப்பும் வண்ணம்.. தன் கீச்சு குரலில் கத்திக் கொண்டிருந்தான் ஐந்து வயது சத்ரியன்
அவனின் பேச்சை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் , கட்டிலில் மெத்தையென இருந்த காட்டன் டவலினுள் புதைந்திருந்த சாத்வியை அப்படியே அள்ளிக் கொண்டாள் சத்ரியனின் அன்னை..
ஒரு கையில் குழந்தையை வைத்தபடி மறு கையால் சத்ரியனின் விடாத கத்தலில் தன் காதுகளை அழுத்தமாய் தேய்த்துக் கொண்டு
“நீ கத்தி கத்தியே , என் காது சவ்வு கிழிஞ்சிடுச்சுடா.. ஒழுங்கு மரியாதையா போய்டு.. இல்லை உனக்கும் சேர்த்து ஊசி தான்” என மிரட்டினாள் சத்ரியனின் அன்னை….
‘நான் இதுக்கெல்லாம் பயப்படுவேனாக்கும்‘ என்ற ரேஞ்சில் “பாப்பாக்கு ஊசி வேண்டாம்.. வலிக்கும், அவ அழுவா பாப்பா பாவம்” என சிவஹாமியின் வழியை மறைத்தபடி வதாடிக் கொண்டிருந்தான் சத்ரியன்.
‘இவனை எப்படி தான் சமாதானம் செய்ய’ என மூளையை குடைந்ந சிவஹாமி மிரட்டலை கை விட்டு சத்ரிக்கு புரியும்படி பேசினாள்.
“டேய்… இது தடுப்பூசிடா, இது போட்டாதான் பாப்பாக்கு எந்த நோயும் வராது. பாப்பாக்கு மட்டுமில்லை வெங்கட்டுக்கு, உனக்கு, க்ருத்திக்குன்னு எல்லாருக்குமே எல்லா தடுப்பூசியும் போட்டு இருக்கோம்டா. வலிக்குன்றதுக்காக போடாம இருக்க முடியாது” என சத்ரியனிடம் கெஞ்சினாள் சிவஹாமி..
அன்னையின் கெஞ்சலை கண்டு கொள்ளாமல் “ஊசி வேணாம்னா வேணாம்..” இன்னும் பிடிவாதம் பிடித்தபடி அந்த வயதிலேயும் முறைத்துக் கொண்டிருந்தான் சத்ரியன்.
அவன் முறைப்பை பார்த்தபடி “ஏண்டா கொல்ற.. சொன்னா கேளுடா” என வித விதமாய் வெள்ளைக் கொடி பறக்கவிட..
“ஊசி வேண்டாம்னா வேண்டாம்” என்ற தெளிவான பதில் திரும்ப திரும்ப வந்தது, அந்த ஐந்து வயது சிறுவனிடம்..
சத்ரியனின் பிடிவாதம் ஏறிக் கொண்டே இருந்தது.. தடுப்பூசி போடும் நேரமும் நெருங்க… தன் கணவனை உதவிக்கு அழைத்தாள் சிவஹாமி.. “ஏங்க .. ஏங்க…” என அவள் பங்கிற்கு சத்தமாய் அழைக்க..
‘ம்ஹூம் தன் காதில் விழவில்லை’ என ஐந்தாறு அழைப்பின் பின்னரே வந்தார்…
“எதுக்கு என்னை ஏலம் போடுற… சிவஹாமி” அங்கே வந்தார் சிவஹாமியின் கணவன் விநாயகசுந்தரம்…
“ உங்களை ஏலம் போட்டு எனக்கென்ன ஆகப் போகுது… இவன் தொல்லை தாங்க முடியல… இவனை எங்கையாவது கடத்திட்டுப் போங்க….சாத்விக்கு ஊசி போடனும்… என்கூட வந்தா ஒருவழி ஆக்கிடுவான்” என தன் கணவனிடம் சத்ரியனைப் பற்றி புகார் கூற
அதற்கு சத்ரியன் “அப்பா, ஊசி சாத்விக்கு வேணாம் சாத்வி பாவம், வலிக்கும் அழுவா அப்றம் நானும் அழுவேன்” என தன் சின்ன செப்பு இதழ்களால் , வாயை குவித்தபடி கூறினான் சத்ரி
பிறந்தது முதலே சாத்வியின் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பவன்.. அவளுக்கு வலித்தால் தனக்கே வலித்தது போல் பேயாட்டம் ஆடுபவன்.
சாத்வியின் தாய் மஹாலட்சுமி உடல் உலைச்சலில் சற்று கண்ணயர்ந்திருக்க, சாத்விக்கு தடுப்பூசி போட சிவஹாமியே பொறுப்பெடுத்துக் கொண்டார்
“சாத்விக்கு ஊசி போட்டா தான் , அவ நல்லா பெரிய பொண்ணா வளருவாடா…” என்றார் சிவஹாமி
“அவ வளர வேணாம் அப்படியே குட்டியா இருக்கட்டும்..” பாய் கட் என்ற பெயரில் பின் தலையில் குறைந்த முடியுடனும், முன்னால் அதிகமான முடியுடன் இருந்தவன் அதை சிலுப்பியபடியே கூற…
“வளரவில்லைனா….எப்படி உன் கூட விளையாட வருவா…?” என அவனுக்கு புரியும் படி எடுத்துறைக்க….
“நல்லா சாப்பிட்டா சீக்கரம் வளர்ந்துருவா” என சிவஹாமி அவ்வப்மோது கூறும் வார்த்தைகளை அந்த வயதிலேயே திருப்பி போட்டான் சத்ரி…
அதை புரிந்து கொண்ட சிவஹாமியும் பல்லைக் கடித்த படி.. “சாப்பிட்டால் மட்டும் போதாதுடா.. ஊசியும் போடனும் தம்பு..” என பொறுமையாகவே கூற..
கொஞ்சமும் அவனோ “சாத்விக்கு ஊசி வேண்டாம், நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்… முடியவே…முடியாது….” என ஒற்றைக்காலில் நின்றான்.
என்ன செய்தும் அவனை சமாதானம் செய்யமுடியவில்லை ‘ஏதாவது செய்யுங்களேன்.’ என பார்வையை தன் கணவனை நோக்கி திருப்ப
மனையாளின் பார்வையை உணர்ந்தவரும்.. “தம்பி நாம கடைக்கு போகலாமா, ஐஸ்கரீம் சாப்பிட்டுட்டு அப்படியே அம்மாக்கு, வெங்கட்டுக்கு க்ருத்திக்கு வாங்கிட்டு வரலாம்” விநாயகசுந்தரம் ஆசை காட்ட
“வேணாம் அம்மா சளி புடிக்கும்னு சொல்லி இருக்காங்க… ” என சமர்த்தாய் பதில் சொல்ல
‘ ஙே ‘ என விழித்த தன் கணவனை பார்த்த சிவஹாமிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது .
அவளின் சிரிப்பை பார்த்தவர் தன் மனைவியின் முன் அசிங்கப் படுத்துவதை சகிக்காது ‘இப்போ பார் ‘ என ரொமாண்டிக்காக ஒரு லுக் விட்டு “ சரி வா உனக்கு கார் வாங்கி தரேன்”
“நான் வரலை… மாமா நிறைய வாங்கி கொடுத்திருக்காங்க ” என்றான் சத்ரியன்.. என பாலே இல்லாமல் சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்க…
“டேய் போயேன்டா…” தன் கணவன் ‘இவன் அடங்க மாட்ரானே….’ என்ற போசில் நிற்பதை பொறுக்காமல் சிவஹாமி கடுப்புடன் கூற
“மாட்டேன், நான் சாத்வி கூட தான் இருப்பேன்….இல்லாட்டி அவளுக்கு நீங்க ஊசி போட்டுடுவீங்க….நான் மாட்டேன்…” என உடும்பு பிடியில் இருக்க…
இப்படி சொன்ன எந்த சமாதானங்களும் அவனிடம் எடுபடாமலே போக இறுதியில் இவனிடம் பேசி பயனில்லை என முடிவெடுத்து… இரண்டு நாட்கள் கழித்து, சத்ரி பள்ளிக்கு சென்றபிறகு, அவனுக்கு தெரியாமல் தான் சாத்விக்கு ஊசி போட வேண்டியதாயிற்று…. அன்றிலிருந்து சாத்விக்கு சிறு காய்ச்சல், சளி தொந்தரவு என்றாலும் சத்ரிக்கு தெரயாமல் தான் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் நிலையும் வந்தது.. வரவழைத்திருந்தான் சத்ரி…
குழந்தைகளின் அன்பில் என்றும் கலப்படம் கிடையாது என சிறு சிறு செயல்களாலேயே அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருப்பான் சத்ரியன்.
நான்கு மாதங்களில் குப்புற விழ ஆரம்பித்து இருக்க.. பள்ளி நேரம் தவிர்த்து சாத்வியே கதி என கிடப்பான் சத்ரி… அவளை விட்டு சிறிதும் அகலாமல்..
அன்றும் அப்படித்தான்… சிவஹாமி கொடுத்த பூரியை சாப்பிட்டுவிட்டு அன்னையின் பின்னேயே சுற்றிக் கொண்டிருந்தான் சத்ரி அதுவும் தரையை விட்டு கொஞ்சம் மேலே பறந்து கொண்டிருந்த புடவை முந்தானையை தன் கைகளில் சுற்றியபடி.
அவ்வப்போது அம்மா…அம்மா…. என அழைத்தபடியே சுற்றிக் கொண்டிருந்தான்
தன் வேலைகளுக்கு குறுக்கே நிற்கும் அவனை முறைத்தபடி…
“ என்னடா வேணும்.. ஏன் பின்னாடியே வர்ர? சொன்னால் தானே தெரியும்” கடுப்பாய் கேட்டாள் சிவஹாமி.
தாயின் கோபத்தை அவளின் முகத்தை வைத்தே அறிந்து கொண்டவன் “அம்மா, சாத்வி எப்போ நடப்பா ” என தயக்காமய் கேட்க….
“இப்போ தான் குப்புற விழுந்திருக்கா… அதுக்குள்ள நடக்க சொன்னா என்னடா அர்த்தம்“ என சத்ரியிடம் வாய் கொடுத்தபடி சமையல் வேலையில் இருந்தாள் சிவஹாமி