திரும்பி அறைக்கு வந்தவர் “டேய் ஆனாலும் இப்படி படுத்தாதடா…  பாவம்டா அந்த பொண்ணு” என

“அவ பாவமா….! நான் தான்பா பாவம்…  அவ கையில் சிக்கினேன் நிச்சயம் தோலை உரிச்சிடுவா… அதுக்கு பயந்து தான் நான் உங்களை அனுப்பினேன்…  அவளுக்காக பாவப் படாதீங்க…. நான் தான் பாவம்… ” என கட்டிலில்  சென்று படுத்துவிட்டான்..

சாத்வி இந்நிலையிலும் தன்னை தேடி வருவதாயின் தன் மேல் எவ்வளவு நம்பிக்கை வேண்டும்..என சிலாகித்துப் போனான்..சத்ரி…

எங்கு சென்றாலும் இறுதியில் சத்ரியின் கண் அசைவில் ஆடும் , சாத்வியின் மனம் …. “ நான் சத்ரியை தவிர வேறு யாருக்கும் அடங்கவே மாட்டேன்.” என சண்டித்தனம் செய்ய…

 தான் பேச வருவது தெரிந்தும் தன்னை நெருங்கவிடாமல் தடுக்கும் செயல்கள்  அனைத்தும் சாத்வியை உச்ச கட்ட கோபத்திற்கு அழைத்துச் செல்ல…  அப்படியே உறங்கா இரவாய் சத்ரியின் நினைவுகளிலேயே கழித்தாள்…  மதில் மேல் பூனையாய்…  தன் உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாய் தொலைத்துக் கொண்டிருந்தாள் சாத்வி..

காலையில் திருமண மண்டபமே களை கட்டியிருக்க…   அப்ரஸாய் ஜொலித்துக் கொண்டு இருந்தாள்  சாத்வி…

சிறிது நேரத்தில் சாத்வி மணமேடைக்கு அழைத்துச் செல்லப்பட , அங்கே ஐயர் சொன்ன அனைத்தையும் செய்து முடித்தாள்…

நல்ல நேரம் நெருங்குவதாய் ஐயர் சொல்வதும், பின் தாலியை மாப்பிள்ளையின் கையில் கொடுப்பதும் என வேகமாய் நடக்க..

செயின் ஒன்றில் கோர்க்கப்பட்ட தாலியை அவள் கழுத்தில் உலகை வென்ற உவகையுடன் அணிவித்தன இரு கைகள் கொஞ்சம் நஞ்சமிருந்த உணர்வுகள் மொத்தமாய் ஓர் ஆட்டம் காண.. கண்கள் கலங்கி பெருக்கெடுத்தது… சாத்விக்கு…  யாரிடமும் ஆறுதல் கூட தேட முடியாத நிலை…  அவளுகில் அமர்ந்திருந்த கணவனை கூட ஏறெடுத்து பார்க்க முடியவில்லை. அவள் கண்களுக்கு தெரிந்தது எல்லாம்  தன் மார்பில் தவழ்ந்த தாலி மட்டுமே.. வெகு நேரமாய் வெறித்துக் கொண்டிருந்தது.. சாத்வியின் வலி நிறைந்த கண்கள்…

‘மேடம் .. கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க.. முகம் சரியா தெரிய மாட்டுது’ என  போட்டோ கிராபர் சத்தமாய் கேட்க…

“சாத்வி கொஞ்சம் அங்கே பாரும்மா” என ஒரு சிலர் கூற…

அதுவும் அவள் காதில் விழவே இல்லை…  தலை குனிந்த்து குனிந்தபடியே பார்வை தாலியை வெறித்தது வெறித்தபடியே .. இருந்தாள்..

ஏற்கனவே எல்லோரின் பார்வையும் அவர்கள் மேலேயே நிலைத்தருக்க…  சிலர் அவளை வித்யாசமாய் பார்க்க…  “மாப்பிள்ளை மாறி இருக்கிறார் இல்லையா…  உடனே ஏத்துக்கிறது கஷ்டம் தான்” என சிலர் வாய் விட

அப்போது தான் சாத்வியின் செவிகள் கூர்மையாய் கவனித்தது. இந்த குரல் சத்ரியின் குரல்.. நம்பவே முடியவில்லை அவளால்.

நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து.. “சாத்வி நிமிர்ந்து பார்” என்ற மாப்பிள்ளையின்  குரல் மீண்டும் காதில் ஒலிக்க, ஒரு வேளை தனக்கு தான் அது சத்ரியனின் குரலாய் கேட்கிறதோ! மூளை நம்பமறுக்க, தெளியவே இல்லை அவள் மனம்.

சாத்வியின் பெற்றோர் ‘இவள் என்ன இப்படி பித்து பிடித்தாற்ப்போல் அமர்ந்திருக்கிறாள். இப்போது என்ன செய்வது’ என்பது போல் பார்த்திருக்க.

 குங்குமும் வைத்து நிமிர்ந்தவோ, சாத்வியையே பார்த்திருந்தான்.

அக்னி குண்டத்தை மூணு தரம் சுத்துங்கோ.. என ஐயர் சொல்ல “ம்” என தலையசைத்தவன் “சாத்வி” என அழைக்க அப்போதும் அவள் அப்படியே தான் இருந்தாள்.

 ‘இப்போதைக்கு அவள் எழ மாட்டாள்’ என்று எண்ணியவன், அவள் கை பிடித்தபடி லேசாய் எழுந்து நின்றான்,  அந்த தொடுகை உயிர் வரை சென்று உறைய

 குரல் மட்டுமல்ல, தொடுகையும் சத்ரியை உணர்த்த.. அப்போது, இத்தனை நேரம் தன் அருகில் அமர்ந்திருந்தது சத்ரி தானா? பேசியது அவன் தானா? தாலி அணிவித்தது, குங்குமம் வைத்தது அவன் தானா?

மின்சாரம் உள்ளுக்குள் பாய்ந்தோட, சட்டென தன் கையை பிடித்திருந்தவனை பார்த்தார்.

“நான் இருக்கும் போது எதுக்கிந்த பயம்” எப்போதும் சொல்லும் அதே பாவம் முகத்திலும் பிரதிபலிக்க நின்றிருந்தான்.

 மனதில் இருந்த அழுத்தம், வேதனை, இயலாமை என அனைத்தும் வடிந்தது.

மழை நீரில் அடுத்துச்செல்லப்படும அழுக்காய்.. அவள் மனதில் இருந்த கசடுகள், எதிர்மறை எண்ணங்கள், வாழ்க்கை பற்றிய பயம், ரமேஷூடனான வாழ்க்கை பயம் என அனைத்தும் ஓரேயடியாய் அடித்துச் செல்லப்பட்டது.

தாலி அணிவித்தது  சத்ரி தான், தன்னுடைய சத்ரி தான் என தெரிந்தபின்  மூளை சற்று சமநிலை அடைந்தது.

அதன் பின்பே ‘இங்கே என்ன நடக்கிறது’ என உணர ஆரம்பித்தாள் சாத்வி.

அவன் எழுந்து நிற்க, இவள் கீழே அமர்ந்திருப்பது ஒரு மாதிரி இருந்தது.

பிடித்த கையை இறுக பிடித்து எழுந்து நின்றாள். “மூனு தடவை சுத்தி வரணுமாம்” மெதுவாய் கூற, கைகளை அவன் பிடியிலேயே விட்டுவிட்டாள்.

 அக்னி குண்டம் சுற்றும் போது  சாத்வியின் கைவிரல்கள் சத்ரியின் அழுத்தத்தி்ல் நொறுங்கிக் கொண்டிருந்தது, அவனது மனதினை போல்.

“உன் கழுத்தில் தாலி கட்டுற நிமிஷம் அந்த செகண்டில் தெரியும், நான் ஏன் இந்த கல்யாணம் நடக்கனும்னு  அவசர படுறேன்னு’ உனக்கு கண்டிப்பா புரியும்”

என்றோ ஒரு நாள் சொன்ன சத்ரியின் வார்த்தைகள் சரியான நேரத்தில் அவளுக்கு நியாபகம் வந்தது.

அப்போது அன்றே செய்த முடிவு இது? அப்போது ரமேஷ் என்ன ஆனான்? புரிந்தும் புரிந்திராத நிலை தான் சாத்விக்கு.

சடங்குகள் முடிந்து…  போட்டோ செக்‌ஷன் ஆரம்பமாக, ஒவ்வோரு குடும்பமாய் போட்டோவிற்கு லைன் கட்டி நின்றனர்.

ஒரு போட்டோவிற்கு சதாராணமாய் நிற்பவள்…. சில போட்டோகளின் பின்…  அவனை திரும்பி பார்ப்பதும்.. பின் அதை மறைப்பதுமாய் இருந்தாள்.. அந்த பார்வையில் ஓர் அதிர்ச்சி இருப்பதையும், நடப்பதெல்லாம் நிஜம் தானா? என்பதை அடிக்கடி பிரதிபலித்துக் கொண்டே இருந்தாள்.

சாத்வியின் ஒவ்வொரு உணர்ச்சியையும் பார்க்கும் போதும் அதை புரிந்து கொண்டான் சத்ரி…  ஆனால் மேடையில் என்ன செய்யமுடியும் அவனால் அமைதியாய் இருக்க தான் முடிந்தது..

அதன்பின் மணமக்களுக்கென்று  தயார் செய்த விளையாட்டுக்களையும் மறுத்துவிட்டாள் சாத்வி.

சாப்பிடசென்ற போதும்…   ஒருவருக்கொருவர் ஊட்டி விட சொல்லும் போதும் ‘சிறு தலையசைப்பு ‘ மட்டுமே  முடியாது என்ற செயல் அதில் இருந்தது..

எல்லா செய்கைகளிலும் மறுப்பை நேரடியாகவே காட்ட யாரும் தலையிடவில்லை.. ‘அவள் இஷ்டம்’ என்பது போல் ஒதுங்கிக் கொண்டனர்..

ஆனால் எல்லாவற்றிலும் மறுப்பைக் காட்டினாலும், அது சத்ரி மூலமே மற்றவரை  சென்றடையும். அதுவரையில் சத்ரியை மட்டுமே நெருங்கவிட்டாள் சாத்வி..

அவளின் செயலில் சத்ரி, சாத்வி் என இருவரின் பெற்றொர்களும், சம்பந்திகளாயினும் ஒருவருக்கொருவர் வருத்தம் அடைந்தனரே தவிர சிறிதும் கவலை படவே இல்லை இவர்களை நினைத்து

“இன்னும் அரைமணி நேரத்தில் நல்ல நேரம் முடிய போகுது விநாயகசுந்தரம். அதற்குள்ள வீட்டுக்கு அழைச்சிட்டு போகனும்..  கார் ரெடியா இருக்கு ,இப்போ கிளம்பினா தான் சரியாய் இருக்கும்” என சங்கரன்  சொல்ல

இப்படி மண்டபத்தில் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருப்பதற்கு வீட்டிற்கு செல்வது பரவாயில்லை என தோன்ற “சரி… கிளம்பலாம்” என ஆயத்தமாகினர்.

எல்லொருமே கிராமத்திலிருந்த சங்கரின் வீட்டிற்கு செல்ல தயாராக..

“உங்க வீட்டிற்கு கூட்டிட்டு போ சத்ரி..” என அனைவருக்கும் கேட்கும் விதமாகவே சாத்வி கூற..

“சம்பிரதாயம் எல்லாம் இருக்குலமா..” என மஹா தயங்க

“நீங்க வண்டியை எடுக்க சொல்லுங்க மாமா.  உங்க வீட்டிற்கு போகலாம்” என சத்ரி முடித்துவிட.. சாத்வி அவனை நன்றாகவே முறைத்தாள்.

அவர்களின் வீட்டிற்கு வந்தவுடன் மஹாவிடம் நேராய் சென்று.. “ரமேஷ் என்ன ஆனான்..” என எந்த ஒரு தயக்கமும் இல்லமால் கேட்க..

மஹா தயங்கி நின்றார்  பின் சத்ரியின் பேச்சுக்கள் நினைவு வர.. “ரமேஷ் வேற பொண்ணை காதலிக்கிறாரானாம் அதான்” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே..  கை நீட்டி தடுத்து…  அவ்விடம் விட்டு அகன்று தன் அறைக்கு சென்று மறைந்தாள்.

சொந்தபந்தங்கள் நிறைந்த வீட்டில் யாருடனும் பேசவில்லை சாத்வி.  சாத்வியுடனும் யாரும் பேசவில்லை.. பேசினால் எங்கே பிரச்சனை செய்துவிடுவாளோ என பயந்து யாருமே…. வாயைத் திறக்கவே இல்லை.

இரவு கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கியது “வெங்க்கட் எதையும் மறந்திடாத, வாங்கி வந்ததும் நீயும் கிருத்தியும் சேர்ந்து , சாத்வியோட ரூமை ரெடி பண்ணிடுங்க” என சிவஹாமி கூறிக்கொண்டிருக்க…

அம்மாவின் பேச்சில் முகம் சுருக்கி நகர்ந்த வெங்க்கட்டை பிடித்து நிறுத்தினான்… சத்ரி.

“ரூம் எதுவும் ரெடி பண்ண வேண்டாம்  வெங்க்கட் ” என அவனின் முகம் பார்த்து எந்த ஒரு தயக்கமும் இல்லாமல்  கூறினான் சத்ரி…

“ரூம் எதுக்கு ரெடி பண்ண சொன்னாங்கன்னு  தெரியுமா…தெரியாதா?” என சிரிப்புடன் வெங்க்கட் கேட்க

“அது கூட தெரியாமலா உன்கிட்ட வேண்டாம்ன்னு சொல்றேனா?” என சத்ரியின் குரல் சீரியசாய்  பேச…

“ஏண்டா” என வெங்க்கட்டும் இதற்கு மேல் இவனிடம் என்னவென்று கேட்க….என புரியாமல் பார்த்திருந்தான்.

“ வேண்டாம்…. அம்மாட்ட, நான் பேசிக்கிறேன்” என தன் தந்தையிடம் சென்றான்

“அப்பா, இன்னைக்கு எந்த விசேசமும் வேண்டாம். அம்மாகிட்ட மட்டும் சொல்லிடுங்க…. மாமா, அத்தைக்கு தெரியவேண்டாம்” என அண்ணனின் முன்பு நேராய் பேசியவன்…. தந்தையிடத்தில் சற்று முகம் சிவக்க கூறினான்.

சாத்வியின் மீதான அன்பு எத்தகையது என அந்த நேரத்தில் ஓர் ஆணுக்குரிய இடத்தில் இருந்து பார்த்த விநாயகத்திற்கு ஆச்சர்யம் குறைந்தபாடில்லை…

திருமணத்தில் ஆண்கள் முக்கியமாய் கருதும் ஒன்று, இன்று தன் மகனுக்கு முக்கியமாய் படவில்லை. அதைவிட மனைவியின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பது முக்கியமாய் தோன்றிவிட்டதே…  என மனதினுள் ஓட

பெருமையுடன் “நான் சொல்லிக்கிறேன்டா… நீ போ” என அதை அப்படியே சிவஹாமியிடமும் கூறினார்.

“என்னங்க…. அவன் சொன்னதும் சரின்னு தலையாட்டிட்டு வற்றீங்க… சாந்திமுகூர்த்தம் எல்லாம் அந்த அந்த நேரத்தில் நடக்கனும்ங்க…  அதுக்கு தான் நல்ல நேரம் பார்க்கிறது” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே…

“இப்போ எல்லாத்தையும் நீ ரெடி பண்ணினாலும், அவங்களுக்குள்ள எதுவும் நடக்கலைன்னு, அவங்க சொல்லாமல் உனக்கு தெரியபோறதில்லை…    உன்கிட்ட சொல்லிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை அவனுக்கு. காரணமில்லாமல் அவன் எதுவும் செய்ய போறதில்லை. அவன் போக்கில் விடு” என விநாயகசுந்தரம் கூற…

“மஹா, கிருத்தி இரண்டு பேரும் சாத்வியை ரெடி பண்ணிட்டு இருக்காங்க…  நான் போய் எப்படி சொல்ல?” என கேள்வியாய் கேட்க….

“அவங்க ஆசையை கெடுப்பானேன், ரெடி பண்ணட்டும், சத்ரி வேற எதுவும் தான் வேண்டாம்ன்னு சொன்னான். நீ மற்றதை கவனி” என சொல்ல

“எப்போவும் , என் மகனை குறை சொல்லிட்டே இருப்பீங்க..இப்போ அவனுக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற மாதிரி தெரியுது..” என சந்தேகமாய் பார்க்க

“ஏய், சொன்னதை செய்டி” என அங்கிருந்து அகன்றார், விநாயகசுந்தரம்.

க்ருத்திகாவும், வேறு இரண்டு பெண்களும், சாத்வியை தயார் செய்து கொண்டிருக்க மஹா  பால் ,பழங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.