“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு உனக்கு பாப்பா பிடிக்காதா…!” இவனது கோபத்திற்கு காரணம் ‘பாப்பா’ தானா என தெரிய வேண்டி இருக்க, இவளும் விடாமல் கேட்டு கொண்டே இருந்தாள்.
அப்போதும் அவனிடம் பதில் இல்லாது போகவே சிறு பயம் அவளை ஆட்கொள்ள, “பாப்பா வேணாம்னா விடு தம்பி பாப்பா தரேன்!” என பிர்லாவின் மனதை மாற்றும் பொருட்டு இவள் தன் விளையாட்டு குணத்தை காட்ட
“வாயை மூடிட்டு வற்ரியா” என பிர்லா சீறிக்கொண்டு வர
“இப்போ என்ன சொல்லிட்டேனு உனக்கு இத்தனை கோபம்? லவ்க்கு அப்பறம் மேரேஜ் ,மேரேஜ்க்கு அப்பறம் குழந்தை எல்லாம் சர்வ சாதரணம் தானே ஏதோ உலகத்திலேயே நடக்காததை சொன்ன மாதிரி இத்தனை கோபம் வருது”
“பேசாமல் வரமுடியுமா இல்லை பாதியிலேயே இறக்கிவிடவா?” ரோட்டில் பார்வை இருக்க, வார்த்தைகளை அவளிடம் கொட்டினான்.
“உன் கிட்ட கேட்டதுக்கு வேற எவன்டையாவது கேட்டு இருந்தா இந்நேரம் என்னை அம்மாவாவே ஆக்கி இருப்பான் நீயும் இருக்கியே, அம்மாஞ்சி” அவள் பேசி முடிக்கும் முன் ‘கீரிச்’ என்ற சத்தத்துடன் கார் சாலையை உரசியபடி பெருஞ்சத்தத்துடன் நிற்க
“இறங்கு கீழ” உறுமலுடன் குரல் வர
“இல்லை இல்லை இனி நான் பேச மாட்டேன்!” அவனது கோபத்தில் அடுத்து வாயே திறக்கவில்லை ப்ருந்தா.
மீண்டும் காரை கிளப்பியவன் வழியில் தென்பட்ட கால் டாக்சி நிறைந்திருந்த இடத்தில் நிறுத்தியவன், அவளுக்கு முன்பாய் காரை விட்டு இறங்கினான்., ஒரு கால் டாக்சியின் அருகில் சென்றான் பேச வேண்டியதை மட்டும் பேசிவிட்டு மீண்டும் அவளருகில் வந்து
“உன்னை டிராப் பண்ற மூடில் நான் இல்லை, எனக்கு பயங்கரமா தலை வலிக்குது. டாக்சி புக் பண்ணிருக்கேன்” என்றவன் ‘கிளம்பு’ என சொல்லாமல், செயலில்காட்டி “என்னோட பர்ஸ் உன்கிட்ட தானே இருக்கு யூஸ் பண்ணிக்கோ!” என அதிலிருந்த கிரிட் கார்ட் ஒன்றை மட்டும் தனக்காக எடுத்துகொண்டு பர்சை மீண்டும் அவளிடமே கொடுத்தான்.
காரினுள் இருந்தபடி அதை வாங்கினாலும்,அவனை முறைத்தபடியே காரை விட்டு அவள் மட்டும் இறங்க, பிர்லா கொடுத்த ஓட்கா, பொக்கே, பர்ஸ் என அனைத்தையும் அவளது இடத்திலேயே வைத்துவிட்டு தான் இறங்கினாள்.
அவள் இறங்கிய அடுத்த நொடி காருக்குள் ஏறினான் பிர்லா.
“மேடம் எங்கே போகனும்” என்ற சத்தமான குரலில் கால்டாக்சியினுள் உள்ளே அமர்ந்தவளுக்கு
“ஏன், அவர் எதுவும் சொல்லலையா?” என
“நீங்க சொல்ற இடத்தில் உங்களை டிராப் பண்ண சொன்னங்க அட்ரஸ் நீங்க தான் சொல்லனும்” என
அவன் மீண்டும் எதுவும் கேட்கும் முன் அட்ரஸை சொல்லிவிட்டு, பிர்லாவை திரும்பி பார்க்க
பிர்லா அந்த கால் டாக்சியை அதன் ரிஜிஸ்டர் நம்பருடன் தன்னுடைய மொபைலில் போட்டோ எடுப்பதை புன்புற கார் கண்ணாடி காட்டிக்கொடுக்க
“அடப்பாவி” என வாய் பிளந்தாள் ப்ருந்தா ஆனால் அடுத்த நொடி “ஆமாம், இந்த அக்கறைக்கு மட்டும் குறைச்சல் இல்லை” என திறந்த வாய்க்கு பூட்டு போட்டு கொண்டாள்.
அவளது அமைதியான அழகான உருவத்தையும்,அம்சமான முகத்தையும் அதில் தெரிந்த நவரசங்களையும் ஒரு முறை எடை போட்டு விட்டு அதன் பின்பே நகர்ந்தது அந்த கால் டாக்ஸி.
‘என்னை டிராப் பண்ண நேரமிருக்காது
என்னை பிடிச்சிருக்குனு சொல்ல வார்த்தை வராது
காதல் பண்ண இஷ்டம் இருக்காது
இத்தனையும் இருக்காது ஆனால் அக்கறை மட்டும் எங்க இருந்து தான் வருமோ இந்த கால் டாக்சி காரனால என்னை என்ன செய்ய முடியும்! போட்டோ எடுக்குறான் போட்டோ வெட்டி வீரசாமி’ என பிர்லாவை வசைபாடியபடி இவள் வர
அங்கே பிர்லாவின் நிலையோ! ப்ருந்தாவின் “பாப்பா” என்ற வார்த்தைகள் ஏனோ அவனுக்குள் எளிதாய் இறங்க மறுத்தது. இவன் ப்ருந்தாவை விலக்கி வைக்கலாமா என எண்ணும் போதெல்லாம் ‘அவளை விலக்கியே’ வைக்க முடியாதளவு வார்த்தைகளை ப்ருந்தா விட, தவித்து போனான் பிர்லா.
திருமணமே கேள்வி குறியாய் நிற்கிறது என்றால், இதில் குழந்தை என்ற பாக்கியம் விடை அறியா வினானவாய் அவன் மனதில் ஊர்ந்து கொண்டிருந்தது.
கார் ஓட்டுவது கூட கனமாய் இருந்தது அவனுக்கு அவன் நினைவுகள் முழுவதையும் ப்ருந்தாவனமாய் ஆக்ரமித்திருந்தாள் ப்ருந்தா. அந்த நினைவில் இருந்து அவனை மீட்டது மொபைலுக்கு வந்த கால் “ப்ச்” என்றபடி யாரென்றும் பார்க்காமல் அந்த அழைப்பை துண்டித்தான் பிர்லா
மீண்டும் மீண்டும் வந்த தொடர் அழைப்பில் சிறிது நிதானம் தப்பி யாரென பார்க்க, மேல இருந்த அன்நோன் நம்பர் அதன் கீழ் ‘ட்ரூ காலரில்’ ப்ருந்தா என்ற அழைப்பு தெரிந்தது.
“இவளுக்கு எப்படி என் நம்பர் கிடைச்சது” என்ற அதீத கடுப்புடனே அழைப்பை ஏற்றவன்
“என்ன டீ வேணும் உனக்கு? நேரில் தான் உயிரை எடுக்குறன்னா, இப்போ போன்லையுமா! என் போன் நம்பர் எப்படி கிடைச்சது உனக்கு?” என பேசிக்கொண்டிருந்தவனுக்கு தடை கொடுத்தது, ப்ருந்தாவின் ஹஸ்கியான குரல்
கண்கள் இடுங்க பேச்சை கவனித்தான் பிர்லா
“பி.. பிர்.. பிர்லா என்னை யாரோ கடத்திட்டாங்க பிர்லா எனக்கு பயமா இருக்கு, நீ வா எனக்கு பயமா இருக்கு ப்ளிஸ் பிர்லா” என்ற ஹஸ்கி குரலில் அவனது சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட.
“ஹேய்… என்ன சொல்ற நீ…!” “இப்போ எந்த இடத்தில் இருக்க நீ” குரல் பிசிர் தட்டியது பயத்தில்
“எனக்கு தெரியலையே பிர்லா. ஆனால் டாக்ஸியில் தான் போறேன் ஆனால்” அதை தொடர்ந்து அவள் பேசும் வார்த்தைகள் தடைப்பட்டது ‘பளார்’ என்ற அறையிலும் அதன் பின் வந்த அவளது அலறலிலும்.
“ஏய், பொண்ணுங்களை கிட்நாப் பண்ண முன்னாடி மொபைலை முதலில் புடுங்கனும்னு தெரியாதாடா பரதேசி” கணீர் என்ற ஆண் குரலும், அடுத்த சில நொடிகளில் “பீப்” என்ற போனை கட் செய்யும் சப்தமும், ஒடுங்கி கிடந்த பிர்லாவின் உயிர் நாடியில் சுறு சுறுவென இரத்த ஓட்டத்தை பாய்ச்ச ‘கிட்நாப்பா! அதுவும் ப்ருந்தாவையா…?’
மீண்டும் மீண்டும் அந்த எண்ணுக்கு இவன் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க, ஸ்விட்ச் ஆப் என்றே பதில் வந்தது.
‘ப்ருந்தா
நீ எங்கே இருக்கே .
எப்படி இருக்கே ‘கிடந்து புலம்பியது அவன் மனம் மனதிடம் கேட்டது பத்தாது என வாய் விட்டு புலம்பவும் செய்தான்.
‘இவ எங்க இருக்கா ?
எப்படி இருக்கா ?
யார் இவளை கடத்தினது ?
என்ன மோட்டிவ்க்காக கடத்தனும் ?
சாலையில் ஊடுருவும் ஒளியில் கூட தன்னவளின் வரிவடிவத்தை தேடியது பிர்லாவின் கூர் விழிகள்
‘பலாத்காரம்’ என்ற தலைப்பில் அவ்வப்போது கண்களில் பெரிதாய் தட்டுபடும் செய்திகள் பூதகரமாய் உருமாறி தன் முன் நிற்பது போல் தோன்ற,
உறைந்திருந்த மூளைக்கு உயிர் பெற்றார்ப்போல் உறங்கியிருந்த மொபைலை தன் விரல்களால் தட்டி எழுப்பி கேலரியில் கிடந்த கால்டாக்சியின் போட்டோவை எடுத்து, அதில் இருந்த கஸ்டமர் நம்பருக்கு தொடர்பு கொண்டான்.
கால்டாக்சி ஓனர், டிரைவர், பிர்லா என மூவருக்கும் போனிலேயே ஒரு யுத்தம் நடந்து, அது முடிவுக்கும் வர “நீங்க அங்கேயே இருங்க சார் நான் டிரைவரை வரசொல்றேன் நீங்களே அவனை டீல் பண்ணுங்க. எங்க டிரைவர்ஸ் எல்லாம் பக்கா ஜென்டில் மேன்ஸ். தப்பு டிரைவர் பேரில் இருந்தால் என்ன ஆக்ஷனாலும் நீங்க எடுத்துக்கோங்க ” என கால் டாக்சி ஓனர் முடிவுகட்ட ஐந்து நிமிடங்களில் ந்த கால்டாக்சி டிரைவர் பிர்லா இருந்த இடத்திற்கே வந்துவிட்டான்
‘சைட் அடிச்சது ஒரு குத்தமா? விட்டா கொலை கேஸ்லயே பிடிச்சு கொடுத்துடுவானுங்க போல இனி சைட்டும் அடிக்க கூடாது’
சண்டையிடும் நோக்கோடு வந்த டிரைவருக்கு பிர்லாவின் செவ்வரியோடிய கண்கள், காரில் கூட அமர முடியாமல் குறுக்கும் நெடுக்குமாய் சீறிக்கொண்டிருந்த கால்கள் இறுகிப்போன முகம் என எல்லாவற்றையும் கண்டவனுக்கு அதில் இறுதியாய் இருந்த கலங்கி கசங்கிப்போன கண்கள் மட்டும் சண்டையிடும் அந்த நோக்கத்தை அடியோடு மாற்றியது.
டிரைவர் அவனை அணுகும் முன், இவன் அவன் சட்டையை பிடிக்க “என் மேல தப்பு இருந்தா, நான் இப்படி உங்க முன்னாடி நின்னுட்டு இருக்க மாட்டேன் சார்” என கூறிய நொடி இவன் கைகள் தளர “நான் அந்த பொண்ணை இறக்கி விட்ட இடத்துக்கு முன்னால் போறேன், நீங்க பின்னால் வாங்க சார்” என கூறிவிட்டு டிரைவர் முன்னால் செல்ல, படபடவென துடித்த இதயத்தை கையில் பிடித்தபடி இவன் அவனை பின் தொடர்ந்தான்.
ஒரு பத்து நிமிட பயணத்தின் பின் சிறுவர் பூங்காவின் அருகில் இருக்கும் தெருவில் நிறுத்தி “சார் நான் இங்க தான் இறக்கிவிட்டேன் வீட்டு அட்ரஸ் கேட்டேன். சொன்னதை செய்ங்கன்ணா னு சொல்லிட்டு இங்க தான் இறங்குச்சு அந்த பொண்ணு நான் இறக்கிவிட்ட அப்பறம் கூட வேற யாராவது கடத்தி இருக்கலாம் இல்லையா சார்”
“பொண்ணுங்களை கடத்தற அளவு நான் பெரிய ஆளுலாம் இல்ல என்ன விட்ருங்க சார். எனக்குன்னு குடும்பம் குட்டிலாம் இருக்கு என்னை விட்ருங்க சார்” என்றவன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.