ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால்
‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’ இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது.
ஆனால் இது அத்தனையையும் கண்டுகொள்ளாமல் “பேரர் பில் ” அசாதாரண குரலில் பில்லை கொடுத்துவிட்டு சற்று அதிகமான டிப்ஸையும் வைத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு ப்ருந்தா அங்கிருந்து அகன்றாள்.
பிர்லா முதன் முதலாய் தடம் புரண்டான் அந்த ப்ருந்தா வனத்தினுள்
“ஏய்… நில்லு ” என அவளை தன் குரலினால் நிறுத்தியபடி,அவள் பின்னே இவன் வர
“என்ன…!” அவள் கேட்ட தோனியே , தன்னுடைய தள்ளாட்டத்தை கட்டுபடுத்துகிறாள் என தெளிவாய் தெரிய
“யார் கூட வந்த ? எப்படி போவ ? நான் எதுவும் ஹெல்ப் பண்ணவா ?” என ப்ருந்தாவின் நிலையறிந்தோ இல்லை பிர்லாவின் மனமறிந்தோ கேட்க
ஏகப்பட்ட ‘ஜொள்ளர்களை’ சமாளித்த இந்த ஏகலைவியோ அவனது அக்கறையை புரிந்து கொள்ளாமல்
“வந்த எனக்கு போக தெரியும் மைண்ட் யுவர் பிஸ்னஸ் கொஞ்சம் ப்ரியா பேசினா வந்துருவீங்களே அட்வாண்டேஜ் எடுத்துக்க…” என ஓரேயடியாய் முகம் சுருக்க
அந்த வார்த்தையில் பிர்லாவிற்கு சுறு சுறுவென கோபம் ஏற
“ஏய் என்ன திமிரா பார்த்த பொண்ணுங்களில் நீ கொஞ்சம் வித்யாசமா தெரியறனு ஹெல்ப் பண்ண வந்தா ஓவரா பேசற நீ ” என எகிற
“நான் பேசலை… நீங்க தான் பேச வைக்குறீங்க பாஸ் ” மேலும் அவனது கோபத்திற்கு எண்ணெய் ஊற்ற
“என்ன நானா ? நானா பேச வைக்கிறேன் !” என பல்லை கடித்தவன்
“சும்மா இருந்தவனை பாட்டிலை ஓபன் பண்ணி குடுக்க சொல்லிட்டு பேச்சை பாரு ” என முகம் திருப்பினான் பிர்லா
“நான் ஓபன் தான் பண்ணி குடுக்க சொன்னேன், இப்படி ஓவரா அட்வான்டேஜ் எடுத்துட்டு என் பின்னாடியே வர சொல்லல !” என ஒரு புருவம் மட்டும் ஏற்றி இறக்க
சொக்கியே போனான் பிர்லா அவளது மேனரிசத்தில் ஆனால் அதை கவனமாய் காட்டாமல்
“குடிச்சா எல்லாரும் உளறி தான் நான் பார்த்து இருக்கேன் ஆனா நீ ரொம்பத்… தெளிவான பேசற ?” என சத்தமாய் கூறியவன் “இதுல ஒன்னுக்கு இரண்டு பாட்டில் வேற ” என வாய்க்குள் முனுமுனுத்து பேச்சை திசை திருப்பினான்
“நான் இரண்டு பாட்டில் அடிச்சதை நீ பார்த்தியா… நான் அடிச்சது ஜஸ்ட் ஹன்ரட் மில்லி தான் ”
ஏற்கனவே பாட்டிலை ஓபன் செய்து பழகுவோம் என அவ்வளவையும் கொட்டி கவித்து இரண்டவதாய் ஒன்று வாங்கி அதிலும் பாதியை பருகவிடாமல் செய்த ‘அவனின்’ மேல் இருந்த கடுப்பில் இவனிடம் எகிறினாள் ப்ருந்தா
“ஹன்ட்ரடோ, டூ ஹண்டரடோ எப்படியும் குடிச்ச தானே… “ என அவள் பார்வையை துளைத்தபடி “குடிகாரி ” என நக்கலாய் கூறினான் பிர்லா
ஆனால் இதெல்லாம் பாதித்ததாய் தெரியவில்லை ப்ருந்தாவிற்கு… ஆனால் அவனை நடனமாட அழைக்கும் போது, ‘பிர்லா’ என பேர் சொல்லி அழைத்த நியாபகம் அந்த நேரத்தில் வர
“பேரு தான் பிர்ர்ர்ர்லா ஒரு பீர் அடிக்க கூட லாயக்கில்லை நீயெல்லாம் குடியை பத்தி பேசற தகுதியும் கிடையாது, எனக்கு குடிகாரினு பட்டம் கொடுக்கவும் ரைட்ஸ் கிடையாது ” என கீழ் உதட்டை பிதுக்கியபடி வாயினுள் இருந்த காற்றை வெளியே தள்ள அதில் அவளது முன்னுச்சி முடிகள் பறந்து அவள் பார்வைக்கு வழிவிட்டு ஒதுங்கியது
இந்தமுறையும் பிர்லாவின் பார்வை ஒரு மார்க்கமாய் மாறிப்போக…
“எங்கே போனாலும் பொண்ணுங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லடா சாமி ” என வாய்விட்டு புலம்ப
“ஓய் இது கோவிலோ, உன் வீடோ இல்ல பப் இங்கே பாதிக்கு மேல பொறுக்கிங்க தான் இங்க வந்தா பாதுகாப்பெல்லாம் எதிர்பார்க்கவே கூடாது !” என பிர்லாவின் வாய் அது பாட்டிற்கு பதில் சொல்ல
“அப்போ பப்க்கு வர எல்லாருமே பொறுக்கின்னு சொல்ற?” சந்தேகமாய் கேட்க
“ஆமா! பொறுக்கி தான்” யோசிக்காமல் இவனும் சொல்ல
“அப்போ நீ பொறுக்கினு நீயே ஒத்துகிட்ட “ என அவன் காலை சரியாய் வாரிவிட
‘அம்மாடி’ என வாய் பிளந்தான் பிர்லா
“ஓகே பொறுக்கி எனக்கு டைம் ஆச்சு. நான் கிளம்பனும் பாய், அப்புறமா மீட் பண்ணலாம்” என மீண்டும் சீண்ட
“போடி” என விட்டான் பிர்லா
அதில் இரண்டடி சென்றவள் நின்ற வாக்கிலேயே திரும்பி “ம்… மரியாதையெல்லாம் தூள் பறக்குது!”
“போதும் உனக்கு இந்த மரியாதை நீ மட்டும் எனக்கு மரியாதை கொடுத்தியா என்ன? நீ வா போ தானே! இத்தனைக்கும் உன்னை பார்த்தால் என்னை விட சின்ன பொண்ணா தான் தெரியற!” என அவளை பார்வையாலேயே அளவெடுக்க
“நான் உன்ன விட சின்ன பொண்ணா?” என கல கலவென சிரித்தவள் “உன் வயசென்ன ?” என அவனிடமே கேட்க
“இருபத்தேழு…” என பிர்லா பதில் கொடுக்க
“ஆனால் எனக்கு இருபத்து ஒன்பது வயசாகுது !” என சீரியசாய் சொல்ல
“என்ன !” என அதிர்ந்தவன் ‘இல்லை இவள் பொய் சொல்கிறாள்’ என மனம் இடித்துறைக்க
“உனக்கு மிஞ்சி போனால் இருபத்தி அஞ்சுக்குள்ள தான் இருக்கும் ” என பிர்லாவின் கண்கள் அவளை எடை போட
“ஓ முகத்தை வச்சு சொல்றியா ? எல்லாம் மேக்கப்போட மகிமை பாஸ்… இருபதையும் அறுபதாக்கலாம், அறுபதையும் இருபதாக்கலாம் ” என கண்ணடிக்க
“அப்போ க்ரூப் ஸ்டடினு சொன்னது பொய்யா ? நீ காலேஜ் ஸ்டூடண்ட் இல்லையா ? “
“நான் காலேஜ் ஸ்டூன்ட் தான் யாரு இல்லைனு சொன்னா ? ஆனால் பிஹச்டீ பண்ணிட்டு இருக்கேன் நெக்ஸ்ட் மத்ன்த் தீசீஸ் சப்மிட் பண்ணினா என் பிஹச்டீ ஓவர்…” என சொல்ல பிர்லாவிற்கு முகம் அஷ்டகோணலானாது நிஜமாவே இவ இருபத்தொன்பதா ? என
பிர்லாவின் இந்த அதிர்ந்த முகத்தை பார்த்தபடி “பாய் பிர்லா ” என கையசைத்து அங்கிருந்து சென்றாள்.
இவர்களின் பேச்சை ஆரம்பத்தில் இருந்து இதோ அவள் கையசைத்து சென்றது வரை கேட்ட ஸ்ரீநாத் மூக்கின் மேல் விரல் வைக்காத குறையாய் நின்றிருந்தான்
ஏனென்றால் பிர்லாவின் மிக நீண்ட பேச்சு இது தான் அவனுக்கு தெரிந்தவரை பிர்லா ஒரு மௌனவாதி ஆனால் இப்போதோ ! ‘ஆ ’ வென வாய் பிளந்தான் ஸ்ரீநாத், பிர்லா ப்ருந்தா உரையாடல்களில்
மறுநாள்
“ப்ருந்தா ப்ருந்தா எழுந்திரு காலேஜ் போக வேண்டாமா !” என அவள் அன்னை செண்பகரத்தினம் எழுப்பிவிட்டு செல்ல
எழ மனமில்லாத அந்த தாரகை உருண்டு பிரண்டு தன் தூக்கத்தை கலைத்து எழுந்தாள் அதற்கே ஒரு பதினைந்து நிமடங்கள் பிடித்தது.
எழுந்தவள் கண்களை தேய்த்து பெரிதான ஒரு கொட்டாவியை வெளியேற்றியபடி விழிக்க, அவள் கண்கள் கண்ட காட்சியில் “டேய் என் ரூமில் என்னடா பண்ணிட்டு இருக்க ” என தன் பெரிதான குரலை அந்த அறையில் அலற விடும் போதே
ஏழாம் வகுப்பு படிக்கும் ப்ருந்தாவின் தம்பி விமலேஷ் அவள் கல்லூரி பேக்கில் இருந்து எதையோ எடுத்துக்கொண்டு ஓட
‘என்னவோ ஏதோ வென ’ தூக்கத்தை விரட்டிவிட்டு அவன் பின்னேயே இவளும் சென்றாள். ஸ்லீவ்லெஸ், த்ரிபோர்த்துடன்
விமலேஷ், ஹால் சோபாவில் அமர்ந்திருந்த அவனது தந்தையை நெருங்கும் முன் அவனை பிடித்து வாயை அடைத்து இழுத்து வந்து ஓரமாய் நிறுத்தியிருந்தாள்
“டேய் என்னடா எடுத்துட்டு வந்த ?” என அவன் கையில் இருந்த கவரை பிடுங்க
“சொல்ல மாட்டேன் போ…” அவனோ தருவேனா என இழுத்து பிடித்தான்
“ஏய் மரியாதையை என்னனு சொல்லுடா ” என
ஒருபுறம் இவள் மறுபுறம் இவன் என மாறி மாறி இழுக்க கடிதம் இரண்டாய் கிழிந்து ‘பொத்’ என்ற சத்தத்துடன் ஆளுக்கொரு புறமாய் விழுந்தனர்
“ஆ ” என அலறிக்கொண்டு ப்ருந்தா எழமுடியாமல் இடுப்பை பிடித்துகொண்டு அப்படியே படுத்திருக்க
“நேத்து என் ஹோம் ஒர்க் நோட்டில் தண்ணிய ஊத்தி எங்க மிஸ் கிட்ட அடி வாங்க வச்சேலே இன்னைக்கு அப்பாகிட்ட உனக்கு அடி வாங்கி விடறேன் ” என கீழே விழுந்ததை பெரிதாய் காட்டிக்கொள்ளாமல் தூசி போல் தட்டி விட்டு சிங்கமாய் சிலிர்த்து ஓடினான் தன் தந்தையை நோக்கி
‘அய்யோ இவன் என்னத்தை எடுத்துட்டு ஓடறான் அதுவும் அப்பாகிட்ட ’ என இவளும் எங்கோ சுளுக்கியது போல் வலித்த இடுப்பை தடவியபடியே எழுந்து கையில் இருந்த பாதி பேப்பரை பிரிக்க
‘ஐய்யய்யோ….’ என அலறிக்கொண்டு வலியை பின் தள்ளி மீண்டும் எழுந்து ஓடினாள் கமலேஷை தேடி
அங்கே தந்தை யாருடனோ போனில் பேசியபடி இருக்க
“டாடி டாடி… “ என சங்கீதத்தின் மத்தியில் சங்காய் கத்திக்கொண்டிருந்தான் விமலேஷ்.
தந்தை போன் எடுத்தால் வைக்க குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என ப்ருந்தா தன் கையில் இருந்த பாதி பேப்பரை அப்படியே சோபாவில் போட்டு விட்டு, வேக வேகமாய் கிச்சன் சென்றாள்.
பிரிட்ஜில் இருந்த பேமிலி பேக் ஐஸ்கீரிமை தாய்க்கு தெரியாமல் சுட்டு வந்தாள்
“விமலேஷ்…” என சத்தமாய் அழைக்க… அந்த சத்தத்திற்கு தந்தை திரும்பவில்லை ஆனால் இவன் திரும்பினான்
தந்தை கவனிக்கவில்லை என்றதும் தன் முதுகின் பின் இருந்த பேமிலி பேக் ஜஸ்கீரிமை எடுத்து முப்பத்தி இரண்டு பற்களையும் காட்டி அவன் புறமாய் நீட்டினாள்.
உர் என இருந்த அவன் முகம் சீரியல் பல்பில் பளிச்சென தெரியும் ஊராய் மாறிப்போனது…
ஆனாலும் நேற்று அவன் மிஸ்ஸிடம் வாங்கிய அடி இவன் உறுதியை ஏற்றி விரைப்பாய் நிற்க வைக்க
“ம்ஹூம் ” என பலமாய் தலையசைத்து தந்தை புறம் எட்டப்பனாய் திரும்பி நின்றான்
“அட கிராதகா ” என வாய் விட்டு புலம்பியவள் தன் அறைக்கு ஓடினாள்
முதலில் மொபைலை எடுத்தவள் ம்ஹூம் வேண்டாம் என வைத்துவிட்டு தன் டேப்லெட்டை தூக்கி கொண்டு ஓடினாள்