இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான்.
ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் ! குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல்.
காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம் “கெங்கா வீட்டுக்கு தானே போறீங்க, நானும் வரேன் ” சந்திராவுடன் கெங்காவின் வீட்டிற்கு சென்றார்.
“கெங்கா கிட்ட பேசனும் ”
“தனியா ” என்ற கூடுதலான வார்த்தையில் பதில் கூறாமல் அந்த அறையை விட்டு வெளியேறினார் சந்திரா.
“என்ன அடுத்த நாடகமா ?” கெங்காவிடம் கேட்ட முதல் கேள்வியிலேயே தீ பொறி பறந்தது.
“நான் ஏன் நாடகம் போடனும் ?” சோர்வு உடலில் மட்டுமில்லை, மனதிலும் தான் என பிரதிபலித்தது அவர் குரல்.
“அதை தான் நானும் கேட்குறேன் எதுக்காக இந்த நாடகம் ? இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரை நல்லா தானே இருந்தே ! திடீர்னு எப்படி நோய் வந்தது ? நோய் அதுவே வந்ததா ? இல்லை நீ வர வழைச்சியா ? நல்லா இருக்கிற யாரும் இப்படி வேணும்னே நோயை இழுத்து வச்சிக்க மாட்டாங்க !”
“இரண்டுக்கும் என்ன வித்யாசம் இருக்க போது ?”
“நம்மை தேடி சாவு வருவதற்கும், சாவ தேடி நாம போறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு கெங்கா !”
பகிரென இருந்தது கெங்காவிற்கு ஒரு வேளை தன்னை கண்டு கொண்டாரோ என.
“சாவை தேடி போறதுக்கு எனக்கு எந்தவொரு காரணமும் இல்லை ”
“சந்திரா ஒருத்தரே போதும், வேற என்ன காரணம் வேணுமாம் ? கட்டின பொண்டாட்டியையே தவிக்க விட்டவர், உன்னை தவிக்க விட எவ்வளவு நாள் ஆகும் ?” கடுப்பாய் பேச
“சந்திரா பண்ணின தப்புக்கு நான் மன்னிப்பு கேட்குறேன் தப்பு செய்ய காரணமே நான் தானே !”
“எல்லா தப்பையும் தன் மேலேயே தூக்கி போட்டுக்குற பொண்ணுங்க இருக்குற வரை எந்த ஆம்பளையும் தன் தப்பை உணர மாட்டான்”
“மத்த ஆம்பளைங்க எப்படியோ ! ஆனால் சந்திரா அப்படி இல்லை ! நான் அப்போவே ரிஜக்ட் பண்ணிருந்தா எந்த பிரச்சனையுமே வந்திருக்காதே !”
“ரொம்ப எல்லாம் வருத்தபடாத, நீ இல்லைன்னா வேற ஒரு பொண்ணுன்னு ஷர்ட்ட மாத்துற மாதரி மாத்திட்டு போய்ட்டே இருப்பார் ஏன்னா அவருக்கு தேவை ஒரு பொண்ணு அந்த பொண்ணு மூலமாக கிடைக்கிற !” முடிக்காமல் நிறுத்த
ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவர் “அப்படி பார்த்தால், பிர்லாவுக்கு ஹெல்த் அபக்ட் ஆனதில் இருந்து வேற ஒரு பொண்ணை தேடிப்போய் இருக்கனுமே ஏன் போகலை ?” அசால்ட்டாய் கெங்கா கேட்க அதிர்ந்து போனார் பார்வதிதேவி அதைவிட நிலநடுக்கம் கண்ட பூமி போல் மனநடுக்கம் கண்டு பிதீயடைந்தது அவர் உள்ளம்.
“என்ன ?” “அப்போ அப்போ…!”
சிறு இதழ்வளைவு கெங்காவிடம். அந்த சின்ன செய்கை கூறியது அது தான் உண்மை என.
கெங்கா அதற்காக எதுவும் விளக்கம் கொடுப்பாளோ. என பார்வதிதேவி நினைக்க
கெங்கா பேசியதென்னவோ ! “சந்திரா விசயத்தில் எனக்கு ரொம்ப உறுத்துது பார்வதிதேவி முதலில் எல்லாம் உறுத்தல் இல்லை ” குரலில் லேசான தடுமாற்றம் கெங்காவிடம் “எ எனக்கு கிடைச்ச வாய்ப்பை சுயநலமா உபயோகப்படுத்திட்டேன்… ஆமா… ரொம்ப சுயநலமா இருந்துட்டேன், உங்களை பத்தி உங்க மகனை பத்தி நான் யோசிக்கவே இல்லை.
என்னோட விசயம் தெரிஞ்ச முதல் நாளே நீங்க போட்ட சண்டையில், பிர்லா உடம்பு சரியில்லாமல் போனப்போ தான்… லே லேசாய் குற்ற உணர்ச்சி ஆரம்பிச்சிடுச்சு, அப்பறம் நிறைய விசயத்தில் அந்த குற்ற உணர்வு ஜாஸ்தி ஆச்சே தவிர குறையவேயில்லை.” தொடர்ந்து பேச பேச குரலில் தடுமாற்றமும் ஜாஸ்தியானது.
“ஆ ஆனால் பிர்லா கல்யாணம் முடிஞ்ச புதிதில் இங்கே வந்தான்.
“ஆசீர்வாதம் வாங்க ” இதை சொன்னவுடன் பார்வதிதேவியின் உடல் தானாய் இறுக ஒரு நிமிடம் தடை பட்ட பேச்சு தொடர
“உங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கவே இல்லைன்னு சந்திரா சொல்லி தான் தெரியும்
எவ்வளவு அவமானப்பட்டு இருப்பீங்க !
சந்திரா உங்களை தவிர்த்து என்னை ஏத்துக்கிட்டதில் கர்வம் இருந்தது. ஆனால் பிர்லா செஞ்சதுல கர்வம் இல்லை வலி தான் மிச்சம் அம்மாகிட்ட இருந்து பிள்ளையை பிரிச்சிட்டோம்னு.
புருஷனையும் பிரிச்சு
பிள்ளையையும் பிரிச்சு…
ஒரு ஒரு குடும்பத்தையே சிதைச்சிட்டேன். உங்க வாழ்க்கையை சிதைச்….ச்…சிட்டேன்
என்னை மன்னிச்சிடுங்க பா பா ர் வதி” என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பலமான மூச்சிழுப்பு கெங்காவிடம் உள் இழுத்த மூச்சு வெளி விடும் முன் சரியாகி இருந்தார் கெங்கா சுவாசத்திற்கு திணறியது கனவோ என எண்ணும் படி இருந்தது கெங்காவின் செயல்.
“சந்திரா…!” ஓங்கி ஒலித்தது பார்வதிதேவியின் குரல்.
“எ…என்ன தேவி!” அறைக்கு வெளியில் இருந்தவர் என்னவோ ஏதோ வென உள் வந்தார்.
ஆத்திரத்துடன் தேவி நிற்க, அமைதியான முகத்துடன் இருந்தார் கெங்கா புரியாத பார்வை இருவர் மீதும் பாய
“இத்தனை முடியாதவளை இப்படி தான் வீட்டில் வச்சு வேடிக்கை பார்ப்பீங்களா !” அடித் தொண்டையில் இருந்து உறும
“என்ன முடியாமல் இருக்கா ! கொஞ்சம் டயர்டா இருக்கா அவ்வளவு தான் ” வழக்கம் போல் ஏறுக்கு மாறாய் சந்திரா பேசினார்.
பதிலுக்கு தேவி பார்த்த பார்வையில்
“பிரஸர் ஜாஸ்தியாய்டுச்சு அதான் டயர்ட்னஸூம் சேர்ந்துகிச்சு மெடிசின்ஸ் எடுத்துட்டு இருக்கேன் இரண்டு மூனு நாளில் சரியாய்டும்னு அவ தான் சொன்னா !”
“அவ சொன்னா வேதவாக்கோ உங்களுக்கு ! சொல் புத்தி தான் வேலை செய்யாது சுய புத்தியும் மழுங்கி போச்சோ”
பார்த்த மாத்திரத்தில் கெங்காவிற்கு ஏதோ பெரிய பிரச்சனை என எனக்கு தெரிந்தது கூடிவே இருக்குற உங்களுக்கு உறைக்கவில்லையா? மனம் விட்டு அகலவில்லை அக்கேள்வி
அதை விட இப்போது. பேசிய பேச்சுக்கள் எதார்த்தமான வார்த்தைகளாய் தெரியவில்லை, எப்போதடா இதை பேசவோம் என காத்திருந்து காத்ததிருந்து பேசிய பேச்சுக்கள்.
“அவளை கூட்டிட்டு வாங்க ஹாஸ்பிடலுக்கு” ஏறிய கோபத்தை கட்டுப்படுத்தியபடி கடுகடு முகத்துடன் முறைக்க
“நான் கூப்பிட்டா வரமாட்றா எத்தனை தடவை நானும் கூப்பிட !”சந்திரா கலக்கமாய் கெங்காவை பார்க்க
இதுங்க சரிபடாதுங்க என , மொபைலை எடுத்து பிர்லாவை அழைத்தார் பார்வதிதேவி.
வெகு நேரமாய் அலறி அடித்த மொபைல் கூட அவன் தூக்கத்தை கலைக்கவில்லை மழையில் நனைந்த அலுப்பு, அதன் பின்னான கூடல் என ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன். மூன்றாம் முறையில் தான் அட்டெண்ட் செய்தான் பிர்லா.
“மாம் சொல்லுங்க ”
“எங்கடா இருக்க !” திடீரென்ற பார்வதிதேவியின் குரலில் கெங்காவும் சந்திராவும் திரும்பி பார்த்தனர்.
“ம் வீட்டில் மாம் ”
“கெங்கா வீட்டுக்கு உடனே கிளம்பி வா !”
“மாம் எங்கே ?” மீண்டும் கேள்வி எழுப்ப
“கெங்கா வீட்டுக்கு வான்னு சொன்னேன் !”
கெங்காம்மா வீட்டில் தன் அன்னையா ? அதிர்ந்தவன் “எதுவும் பிரச்சனையா மாம் !” மனைவியை விட்டு போர்வையை விலக்கி தனியே வந்தான்.
“ம் ஆமாம் ” வெகு அமைதியான குரல் அவரிடம். அதன் பின் “நீ வா நேரில் வா ” பட்டென கட் ஆனது போன். வீட்டிற்கு வரும் போதே தாய் தந்தை இல்லாதது, இப்போதைய அமைதியில்லா பேச்சு என அத்தனையும் ஏதோ பிரச்சனை என உணர்த்த அவசர அவசரமாய் கிளம்பினான். தூங்கி கொண்டிருந்த மனைவியை எழுப்பி “கெங்காம்மா வீட்டுக்கு போய்ட்டு வரேன் !” என சொல்ல மறக்க வில்லை
வேகமாய் வந்து சேர்ந்தான்.
“என்னப்பா என்னாச்சு ” கெங்கா வீட்டிற்கு வந்தவன்,கெங்காவையும் தன் தாயையும் கண்களால் தேடியபடியே கேட்டான்.
“அத நீ உன் அம்மாகிட்டே தான் கேட்கனும் ” ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்த சந்திரா அசட்டையாய் சொல்ல !
தந்தையை ஆழ நோக்கியவன் விறு விறுவென உள்ளே சென்றான்.
கட்டிலில் ஒருகளித்து படுத்திருந்த கெங்காவிடம் தான் பாய்ந்தது அவன் பார்வை பயங்கர சோர்வு கெங்காவிடம் அதை தவிர்த்து வேறு எதையும் பிர்லாவும் உணரவில்லை !
தாயை பார்க்க அதில் அதீத கோபம், அதை தவிர்த்து வேறு ஏதோ ஒரு தவிப்பு, ஆனால் பிர்லாவை கண்டதும் அந்த தவிப்பில் சில பல காணாமல் போனது போல் ஒரு மாய தோற்றம்.
“என்ன மாம் என்னாச்சு…” நெற்றி சுருங்க கேட்டவனிடம்
“கெங்காவை ஹாஸ்பிடலுக்கு கூட்டி வர வேண்டியது உன் பொறுப்பு… சீக்கிரம் ” என பிர்லாவிடம் கூறியபடி பார்வதிதேவி அந்த அறையை விட்டு நகர
போகும் பார்வதிதேவியை தான் பார்த்திருந்தது மற்ற மூவரின் விழிகளும்.
“பிரஸர் கூடிருச்சு பிர்லா இரண்டு நாளில் சரியாய்டும் ” என பேசிக் கொண்டிருந்த கெங்காவை இரு கைகளிலும் ஏந்தினான் பிர்லா.
அத்தோடு கெங்காவின் குரல் தடைபட்டது பிர்லாவின் செயலில்.
“ஹாஸ்பிடல் வாங்க !” என்ற எந்த ஒரு அழைப்பும் இல்லை அவனிடம்.
“ஏன் ? எதற்கு ?” என்ற கேள்வியை பார்வதிதேவியிடமும் கேட்கவில்லை.
கெங்காவிற்கு ஒரு மகனாய் கடமையை செய்ய வேண்டும் என்ற கடமையை மட்டும் செய்ய நினைக்காமல், ஒரு மகனாய் உரிமையை எடுத்து கொண்டான்.
தாயென கருதியவள் இன்று குழந்தையாய் மகனின் கையில்.
சில காலமாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியும் ஆனால் இந்த திடீர் சோர்வு . ஏன் ? எதற்கு ? என்ற எண்ணமே வலுப்பெற விரைவாய் காரை நோக்கி நடந்தான், “இவ ஏன் ஓவரா பண்றா ?” சந்திரா ஒன்றுமே புரியாமல் அவனை பின் தொடர, பார்வதிதேவி அவர்களுக்கு முன்பே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
பார்வதிதேவி கெங்கா வேலை செய்த கிளினிக்கிற்கே அழைத்து வந்தார். “நியூரோ டாக்டர் பார்க்கனும்” என சேர்த்தே சொல்ல முரளியும் வந்து சேர்ந்தார் அங்கே.
மருத்துவமனையில் கெங்காவிற்கு ட்ரீட்மெண்ட் ஆரம்பமானது.
“என்னாச்சு கெங்கா, ஏன் இப்படி இருக்கீங்க !” இத்தனைவருட நட்பு ஆதங்கமாய் கேட்க
“பிட்ஸ் பிராப்ளம் தான்”
“டேப்லெட் எடுத்துகறீங்களா இல்லையா ! நெர்வ் சிஸ்டம் ரொம்ப அபக்ட் ஆன மாதிரி இருக்கு”
பதிலில்லை கெங்காவிடம் ஆழ்ந்த பார்வை மட்டுமே அவரிடம்.
“சிஸ்டர் ஈஈஜி செக் பண்ணுங்க ” என செக்கப் ஆரம்பமானது.
ஈஈஜி ரிப்போர்ட் ஒன்றே போதுமானதாய் இருந்தது அதை வைத்து கண்டுகொண்ட ஒரே பதில் கெங்கா போதிய மருந்துகளைஎடுத்து கொள்ளவில்லை என்பது மட்டுமே !
“டேப்லெட் எடுத்த மாதிரியே தெரியலை.லேப்லெட் சாப்பிடுறதே இந்த பிரச்சனை எல்லாம் வராமல் இருக்க தான்.அதையும் தாண்டி வந்திருக்குன்னா ஒரே ரீசன் டேப்லெட் சாப்பிடாததுனால தான். அப்படி தானே !”
“ஒரு டாக்டர் இப்படி பண்ணலாமா.” எரிச்சலுடன் முரளி கேட்க
“ஆனால் ஒரு பொண்ணா இதை தான் செய்யனும் செஞ்சிருக்கனும் எப்போவோ செஞ்சிருக்கனும்.! ப்ச் ரொம்ப லேட்டா பண்ணிட்டேன் !”
“ஆனால் ஏன் ?”
“ரொம்ப உறுத்துது முரளி , பிர்லா சந்திரா பார்வதிதேவின்னு ஒரு குடும்பத்தையே அழிச்சிட்டேன்”
“அப்போவே பிரிஞ்சிருந்தா இந்த தொல்லையே இருந்திருக்காதுல்ல ” ஒன்றாய் வேலை பார்த்த உரிமை முரளியை பேச வைத்தது.
“பிரிஞ்சிடுவோம்ன்னு நான் நினைச்சப்போ அவர் விடலை இப்போ நானே நினைச்சாலும் பிரிய முடியாது முரளி அதான் இந்த முடிவு.”
“இந்த வயசுல இது தேவையான்னு கேட்குற போல ” முரளியின் முகம் போன போக்கை வைத்து இவர் கேட்க
‘அதெல்லாம் இல்லை ” என முரளி மறுக்க
அவர் மறுத்த விதமே கூறியது அப்படி தான் என.
“என்னை காப்பத்த முடியாதுன்னு எனக்கு தெரியும் முரளி, ப்ளீஸ் என்னை நிம்மதியா அனுப்பி வை ” இறுதியாய் யாரிடமோ கொட்ட வேண்டிய அத்தனையையும் முரளியிடம் கொட்டி கவிழ்க்க அது, முரளியை பார்க்க வந்த பிர்லாவின் காதுகளிலும் அவன் கேட்காமலேயே விழுந்தது.
முப்பது வருடங்களுக்கும் மேல் எடுத்த மாத்திரைகள் உபயோகம் கொடுத்ததோ இல்லையோ ! ஆனால் இந்த மாத்திரைகளை எடுக்காமல் விட்டதால் உபத்திரம் நன்றாகவே செய்துவிட்டிருந்தது. இரண்டு மாதங்களாய் உட்கொள்ளப்படாத மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்ற மனம் ஒத்துழைக்காமல் உடலும் ஏற்க மறுத்தது.
தீராத வலிப்பு நோய் மீண்டும் கெங்காவை தாக்கியது பல முறை, இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிசனுக்கும். மெது மெதுவாய் தடைவிதித்தது.
மருந்துகளால் எந்த ஒரு உபயமும் இல்லாமல் போய் விட,, முரளி கை விரித்துவிட்டார்.
சந்திராவிற்கு உடல் கிடு கிடு வென நடுங்க ஆரம்பித்தது அவளது உடல் நிலை கூட தெரியாமல் தான் இத்தனை நாட்களும் அவளுடன் இருந்தோமா ! சித்தம் கலங்கிப்ப்போனது.
கெங்காவின் கடைசி நிமிடங்கள் அவை
கெங்காவின் பார்வை சுற்றி இருந்த பார்வதிதேவி குடும்பத்தை தன் குடும்பமாய் பார்த்தது ஆதரவு தேடி
“ம்மா ” அடிவயிற்றியில் இருந்து எழுந்த குரலுடன் அவர் தலையை தன் மடியில் தாங்கினான் பிர்லா.