Advertisement

எல்லையற்ற பேரழகே!!

அத்தியாயம் 3 :

 

அந்தி சாய்ந்த வேளையில் வீட்டுக்குள் காலடி வைத்த கண்மதிக்கு வரவேற்பாய் இருந்தது  அவளது தாயின் வேதனை குரல்…

 

நாம என்ன பாவம் பண்ணோமோ, இவளுக்கு எதுவுமே அமைய மாட்டுது,  வயசு 23  ஆக போது….இன்னும் ஒருத்தனும் இவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கல.…அப்படியே ஒருத்தர் ரெண்டு பேரு வந்தாலும் இவளை பாத்துட்டு வேணாம்னு போய்டுறாங்க……ஹ்ம் எல்லாம் என் தலையெழுத்து இவளுக்கு கல்யாணம் பண்ணி வெக்குறதுக்குள்ள நான் கண்ணை மூடிடுவேன் போல…..”

என்று பாதி ஆதங்கமுமாய், தவிப்புமாய் கணவனிடம் பேசியவர், உள்ளே நுழைந்த கண்மதியை பார்த்து அடங்கினார்.

 

நீ எதுவும் கவலைப்படாத மதி எல்லாம் சீக்கிரம் சரி ஆயிடும், உங்க அம்மாவை பத்தி உனக்கு தெரியாதா?  ” என்று  அருள் பேச்சை முடிக்க

 

ஏன் பாதியிலேயே நிறுத்துடீங்க   சொல்லுங்க மாப்பிள்ளை வீடு அப்படி என்ன தப்பா கேட்டுட்டாங்க….உங்க பொண்ணு முகத்துல இருக்குற தழும்புக்கு ஒரு ஆபரேஷன் பண்ண சொல்லி கேட்டாங்க…..அது என்ன ஒரு குத்தமா?…..அதுக்கு என்னமோ இவ அவன் கிட்டயே மரியாதை இல்லமா பேசிட்டு வந்துருக்கா….இதெல்லாம் பாத்துட்டு நான் சும்மா இருக்கணும் அப்டி தான….என்று கோபமாய் கேட்க

 

அவரிடம் பதில் சொல்ல தோன்றாமல் அமைதியாய் தன் அறைக்குள் நுழைந்தாள் கண்மதி  

 

அவளுக்கு இப்போது தனிமை தேவைப்பட்டது…..

கூடவே காலையில் தன் அன்னையின் பேச்சை கேட்டு அங்கு சென்றிருக்க கூடாதென்பதும் இப்போது தெளிவாய் தெரிந்தது.

 

அவள் மனமோ காலையில் நடந்த நிகழ்வையே நினைத்துக் கொண்டிருந்தது…..

 

ஏம்மா, எத்தனை தடவ சொல்லிட்டேன் இன்னிக்காச்சு போய் அந்த மாப்பிளையை பாத்து பேசிட்டு வாம்மா…. நல்ல குடும்பமா தெரியுது பையனும் நல்லா படிச்சிருக்கான்,  நல்ல வேலைல இருக்கான்….  இதுக்கு மேல என்னமா வேணும்  ஒரு தடவ போய் பேசிட்டு வந்துருமா……இந்த சம்மந்தம் மட்டும்…..என்றவரை இடைமறித்தது கண்மதியின் குரல்.

 

எத்தனை தடவ மா சொல்றது  எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னு ஒவ்வொரு முறையும் வரவன் போறவன் முன்னாடி சந்தைல விக்குற மாடு மாறி நின்னுட்டு அவன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு எனக்கு அவன் விலை பேசுவான் அதையும் பொறுத்துட்டு கடைசியா புடிக்கலைனு சொல்லிட்டு போவான்….. போதுமா இதோட இதை நிறுத்திக்கோங்க,  என்னால முடியல

 

என்று தவிப்பாய் பேச அவள் அன்னையோ அதை ஏற்காமல்

 

வேற வழி இல்ல டி கொஞ்சம் பொறுத்துகிட்டு தன் ஆகணும் இந்த காலத்துல அழகா இருக்குற பொண்ணுங்களையே அது நொட்டை இது நொட்டை ன்னு சொல்லிட்டு தட்டி கழிக்கிறானுங்க……..இதுல உனக்கு வேற இந்த தழும்பு இருக்கேஎன்று மேலும் பேச வர

 

அவர் சொல்வதை கேட்க பிடிக்காதவளோ அவரிடம் பேசி பயன் இல்லை என்று அறிந்து அந்த பையனிடமே தன்னுடைய விருப்பமின்மையை சொல்லிவிடலாம் என்ற முடிவுடன் சென்றாள்.

 

————————

ஹலோ, ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கீங்களா?…. ” என்றவாறு அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தான் அவன் கதிர்

 

இல்லங்க இப்போ தான் வந்தேன், என்றவாறு அவனுக்கு கைகொடுத்தவள் அவனிடம் தன் விருப்பத்தைக் கூற வர அவனோ அவள் பேசும் முன்னே

 

அம்மா சொன்னாங்க உங்களுக்கு தீக்காயம் இருக்கும்னு….. ஆனா இந்த அளவுக்குனு நான் எதிர்பார்க்கள…என்றவாறு அவளிடம் தன் அனுதாப பார்வையை செலுத்த

அந்த பார்வையை ஏற்க மனமில்லாமல்

 

வந்த விஷயத்தை பத்தி பேசலாமா?” என்று தன் கோபத்தை கட்டு படுத்தி அமைதியாய் கேட்டாள்.

 

ஹ்ம்ம் கண்டிப்பாங்க….அதுக்கு முன்னாடி உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னிங்கன்னா? ” என்றவாறு வைட்டரை பார்க்க அவன் வந்தான்

 

இருவரும் தனக்கு தேவையானதை சொன்ன பின்,

 

ஹ்ம்ம் வேற ஒன்னும் இல்லங்க, எனக்கு சின்ன வயசுல இருந்தே ஒரு ஆசை  அது வாழ்க்கைல பாதிக்கப்படற யாரையாவது கல்யாணம் பண்ணனும்னு தான்…..

முதல்ல வீட்ல சொல்லும் போது எதிர்த்தாங்க ஆனா என்னோடநல்ல மனச புரிஞ்சிகிட்டு அவங்களே அதுக்கு அப்புறம் என் முடிவுக்கு சம்மதிச்சிட்டாங்க…..என்றவாறு அவளை பார்க்க அவளோ எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவளின் பார்வையை புரிந்துக் கொள்ளாதவன் மேலும்

 

எனக்கு சின்ன வயசுலயே மத்தவங்க கஷ்ட்டத்தை பார்க்க முடியாம அழுது இருக்கேன்। அந்த மாதிரி கஷ்டத்தை பாக்கும் போது தான் உங்கள மாறி யாருக்காவது ஒருத்தருக்கு வாழ்க்கை குடுக்கணும் னு முடிவு பண்ணேன்என்று பெருமையாய் பேச  

 

அவன் பேச பேச வெறிக்க கொண்டவள் எதுவும் பேசாமல் எழுந்து போக முயல

 

என்னங்க இன்னும் நான் முடிக்கவே இல்ல, அதுக்குள்ள எங்க போறீங்க? எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு ஆனா  “

என்று ஒரு நிமிடம் யோசித்தவன்

 

உங்க வெயிட் கூட ஒரு பிரச்னை இல்லங்க, இப்போ இருக்குற உலகத்துல எத்தனையோ ஜிம் இருக்கு, வெயிட் கொறைக்குறது பிரச்சனை இல்ல, அதே மாதிரி என்ன விட கலர் கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் அதையும் உங்களுக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன், எனக்கு உங்க கார், பணம், வரதட்சணை எதுவும் வேண்டாம், ஆனா இந்த தழும்பு தான்என்றவன்  அவள் கண்களில் தோன்றிய பாவனையை பார்த்து

 

எனக்கே கொஞ்சம் பயமா தாங்க இருக்கு, இருந்தாலும் உங்க வாழக்கையை மனசுல வெச்சிட்டு ஒரு முடிவு எடுத்திருக்கேன், அது நீங்க பிளாஸ்டிக் சர்ஜெரி மட்டும் பண்ணிட்டு வாங்க அதுக்கு அப்புறம் நாம நம்ம கல்யாணத்த வெச்சுக்கலாம்என்று எதிரில் இருக்கும் ஒருத்தியின் உள்ளம் கொதிப்பதை உணராமல் பேசிக் கொண்டிருந்தவன் அவள் அடுத்து பேசிய பேச்சில் அதிர்ந்து போனான்

 

என்னடா நெனச்சிட்டு இருக்க, என்னமோ நான் வந்து உங்கிட்ட எனக்கு வாழ்க்கை குடுன்னு கெஞ்சுனா மாதிரி சீன் போடற, என்ன சொன்ன? என்ன பாத்தா பயமா இருக்கா?  உன்ன யாருடா என்ன பாக்க சொன்னது…..மனசுல என்னமோ தியாகின்னு நெனப்பு இதுல வேற உனக்காக நான் ஆபரேஷன் பண்ணனுமா?….. ” என்று கோபமாய் பேசியவள் அவன் அதிர்ந்து விழிப்பதை கூட உணராது செல்ல முயன்றவள் திரும்பி அவனை பார்த்து நன்றாக முறைத்தவள் ……

 

நீ என்னடா எனக்கு வாழ்க்கை தர்றது, நான் சொல்றேன் நீ எனக்கு வேண்டாம்….என்று கம்பீரமாய் சொல்லி சென்றாள்.

 

அவள் மனமோ உலைக்களமாய் கொதித்தது…….

 

இந்த தழும்பு அவள் காதலின் சின்னமல்லவா!!! அவள் காதலுக்காக அவளுக்கு கிடைத்த பரிசல்லவா!!! அவள் கண்ணனின் உயிரை காப்பாற்ற அவள் எடுத்த முயற்சியில் கிடைத்த வெற்றி அல்லவா!!!

யார் என்ன சொன்னாலும் இதை அவள் எப்போதும் பெருமையாய் தான் நினைப்பாள்  யாருக்காகவும் அவளின் காதல் சின்னத்தை அவள் விட்டு தர தயாராய் இல்லை!!!!

 

இதை எல்லாம் நினைத்து பார்த்தவள் கன்னங்களில் கண்ணீர் கோடாய் வழிய

 

உனக்கு நான் பொருத்தம் இல்லாதவ கண்ணா!!!… ஆனா என்ன பண்றது மானம் கெட்ட மனசு உன்ன தானே நெனச்சிட்டு இருக்கு….என்று வலியுடன் நினைத்தவள் அவனுக்காக எப்போதும் போல் எழுத ஆரம்பித்தாள்

 

என் வலி கூட சுகமானது!!

 

அந்த வலி உனக்காக என்றால்!!

 

கண்ணம்மா

 

இங்கோ அவனுக்காக ஒரு உயிர் காத்திருப்பதை அறியாதவனோ தன் திருமணத்திற்கான வேலைகளில் மும்முரமாய் இருந்தான்

 

கண்ணன் வருவான்

Advertisement