“அண்ணா….” என்ற மகிழனின் எச்சரிக்கை குரலும் ஒருசேர வெளி வந்தது அடுத்த தமிழ்ச்செல்வனின் வார்த்தையில்…
ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட தமிழ்ச்செல்வன், “தப்புதான் நான் அப்படி சொல்லி இருக்க கூடாது…. ஆனா சொன்ன விஷயம் சரி தான்…” என்று தன்நிலையிலேயே நிற்க,
மகிழன், “நீ ஒரு விஷயத்தை மட்டும் வச்சு இப்படி சொல்லுறது சரியா படலை எனக்கு… “
“நான் கண்ணால பார்த்ததை சொல்லுறேன்… ” என்று பேசும் போதே, சௌந்தர்யா,
“நீ எதை பார்த்து இருந்தாலும் உண்மை முழுசா தெரியாம, அந்த பொண்ணே தப்பான பொண்ணுன்னு சொல்லி இருக்க கூடாது… ” என்று கண்டிக்க காரணம்,
மகிழன் தியாவை பற்றி சொன்னதும், தமிழ்செல்வனிடம் சௌந்தர்யா தான் சொன்னது தவறா என்று கேட்டதற்கு, “பர்ஸ்ட் அந்த பொண்ணே தப்பான பொண்ணு…” என்று சொல்லவும் அதிர்ந்தவர்கள், அடுத்து
“அப்பா அம்மா இல்லாம வளர்ந்து இருக்கா… தப்பான தொடர்பு இருக்கு… தப்பான இடத்துல இருக்கா…அப்புறம் எப்படி அவ…” என்று அவன் முடிக்கும் முன் அன்னை தம்பி இருவரும் அவன் வார்த்தையை தடை செய்து இருந்தனர்…
மகிழனுக்கு கோபம் கண்ணை மறைக்கவும், வார்த்தையை விட்டுவிட கூடாதே என்னும் எண்ணத்தில் வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்று விட்டான் கையை முறுக்கியபடி…
போகும் அவனை பார்த்திருந்தவர்கள் மனநிலை இருவேறாக இருந்தது உள்ளுக்குள்…
சில நொடி அமைதிக்கு பின், “ம்மா… நான்…” என ஆரம்பிக்கும் முன்பே, கையுயர்த்தி தடை செய்தவர்,
“எதுவா இருந்தாலும் நீ சொன்னது தப்பு… அதுவும் அவன் முன்னாடி சொன்னது ரொம்ப தப்பு…” என்று கண்டிக்க,
“ஆனா நான் என் கண்ணால பார்த்தேன் ம்மா…” என்று அன்னைக்கு புரிய வைக்க முனைய,
“நீ பார்த்த சரி… ஆனா அது உண்மையான்னு விசாரிச்சியா…?” என்ற கேள்வியில், சற்று தடுமாறி போனான் தமையன்…
“சொல்லு ப்பா… விசாரிச்சியா…?” என்ற கேள்வியில் அழுத்தம் கொடுத்து கேட்குவும்,
“இல்ல ம்மா… அப்ப எனக்கு அது தேவையில்லாத விஷயமா தோணுச்சு… “
“அப்ப அது உண்மைன்னு உன்னால உறுதியா சொல்ல முடியாது… நீ என்ன பார்த்த எங்க பார்த்தன்னு எனக்கு தெரியாது … ” என்று பேசும் போதே ஏதோ சொல்ல வந்தவனை இடைபுகுந்து நிறுத்தியவர்,
“நீ அதை பற்றி எதுவும் எனக்கு சொல்லவும் தேவையில்லை… நான் தெரிஞ்சுக்கவும் விரும்பலை… ஒருவேலை நீ பார்த்தது பொய்யா இருந்தா என்ன பண்ணுவ…? ஒருவேல அந்த பொண்ணு நல்ல பொண்ணா இருந்து நாளபின்ன இந்த வீட்டுக்கு மருமகளா வந்தா என்ன பண்ணுவ…?” என்று கேட்டு முறைத்த அன்னைக்கு தன்னிடம் பதில் இல்லை என்பதை புரிந்து கொண்டான் தாமதமாக…
“சாரி ம்மா…” என்று உள்ளே சென்ற குரலில் அன்னையிடம் மன்னிப்பை வேண்ட,
“இதை நீ மகிழன் கிட்ட சொல்லணும் என்கிட்ட இல்ல… ” என்றதும் தலையை ஆட்டி ஒத்து கொண்டவன், இருக்கையில் இருந்து எழ,
சௌந்தர்யா, “செல்வா…” என்றழைக்க,
“சொல்லுங்க ம்மா…” என்று திரும்பியவனை பார்த்து,
“நீ இப்படி எல்லாம் பேசுறவன் கிடையாதே பா… ம்ம்ம்… இனி வார்த்தையை பார்த்து பேசு… ஒருமுறை கொட்டிட்டா திரும்ப அள்ள முடியாது… உலகத்துலையே ரொம்ப மோசமான ஆயுதம்… நம்ம வாயில இருந்து வர வார்த்தை தான் பா… நல்லதும் சரி கெட்டதும் சரி ரெண்டுத்துக்கும் சக்தி அதிகம்… இனி பார்த்து பேசு…” என்க,
ஒருபெருமூச்சுடன், தலையசைத்து “ம்ம்ம்… புரியுது ம்மா… இனி இப்படி ஆகாது…” என்றதோடு கையை கழுவியவன் மகிழனின் அறைக்கு சென்றான் சங்கடத்துடன்…
செல்லும் மகனை பார்த்திருந்தவருக்கு மனதில் சுருக்கென்று இருந்தது அவனது வார்த்தைகள்… சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தவர் பின் எழுந்து தன் வேலையை பார்க்க தொடங்கினார்…
இங்கு அறைக்குள் நுழைந்தவன் பார்வை தம்பியை தேட அவனோ பால்கனியில் நின்றிருந்தான் வானத்தை வெறித்தபடி…
“மகி….” என்றழைத்தபடி அருகில் சென்று நிற்கவும்,
“நீ தியாவை பப்ல பார்த்த சரி… வேற என்ன தெரியும் அவளை பற்றி…?” என்ற நேரடி கேள்வியில் ஒருசில நொடி முழிந்தவனுக்கு தெரிந்தது அவன் சற்று யோசித்து நிதானித்து உள்ளான் என்று…
“இல்லடா… அது … நான்…” என்று திணறியவனை திரும்பி பார்த்தவன்,
“நீ முதல்ல சொன்னதும் கோபம் வந்துச்சு தான்… ஆனா யோசிச்சு பார்த்தா… நீ அவ்வளவு லேசுல வார்த்தையை விட மாட்ட…ஆனா இப்படி சொல்லி இருக்கன்னா…” என்றபடி தமிழ்ச்செல்வனை ஆழ்ந்து ஓர் பார்வை பார்த்தவன்,
“ஏதோ தெரிஞ்சு இருக்கு…” என்று கேட்டு நிறுத்த,
முதலில் திணறினாலும் பின் இது தம்பியனின் வாழ்க்கை என்பதால் வாயை திறந்தான் தான் பார்த்ததையும் தனக்கு தெரிந்ததையும் சொல்ல…
“ம்ம்ம்… நான் பர்ஸ்ட் தியாவை பார்த்தது பப்ல தான்… நார்மல் பிஸ்னஸ் மீட்டிங் தான்… ஆனா அதோட பெரிய தலைங்களும் அதுல இருந்தாங்க…” என்ற வார்த்தையில் புரியாமல் புருவம் சுருக்கியவனை கண்டு, தமிழ்செல்வனே
“ஐ மீன்… பிக் ஷாட்ஸ்… இவங்க எல்லாம் பெரிய ஆளுங்க… இவங்களுக்கு பினாமி இருப்பாங்க… அந்த பினாமி மூலமா அவங்க வேலையை முடிச்சுப்பாங்க…” என்ற செய்தியில் மகிழனின் மூலை தீவிரமாக வேலை செய்ய தொடக்கியது….
“சரி அதுக்கும் தியாக்கும் என்ன சம்பந்தம்…?” என்ற மகிழனுக்கு,
“அது… நான் தெரியாம அவங்க மீட்டிங் நடக்குற இடத்துக்கு போயிட்டேன் ஃபோன் பேசிட்டே… அப்ப அங்க தான் நான் தியாவை பார்த்தேன்… அதும்…” என்று சொல்ல வந்தவன் சற்று நிதானிக்க,
“பரவாயில்ல சொல்லு…” என்றதும்,
“தியாவோட கம்பெனி எம்.டி கூட நெருக்கமா நின்னுட்டு இருந்ததை பார்த்தேன்…”என்று மென்றுமுழுங்க…
“நெருக்கமானா…?” என்று புருவம் சுருக்க,
“மகி… பிளிஸ்… எனக்கு அங்க என்ன நடந்துச்சுன்னு முழுசா தெரியாது… நான் பார்த்தது அவனை கட்டி புடிச்ச மாதிரி இருந்தது தான்… பார்த்த அடுத்த செகன்டு திரும்பி வந்துட்டேன்… தட்சால்… ஏனோ அந்த இன்சிடன்டு எனக்கு தப்பான எண்ணத்தை குடுத்துருச்சு… அதான் நீ தியா மேல இன்டிரஸ்டு காட்டும் போது நான் வேண்டாம்னு சொன்னது…” என்ற அண்ணனுக்கு பதில் தரும் எண்ணம் இல்லாமல் எதையோ யோசித்தபடி நின்றவனின் தோள் தோட்டு அழைக்க,
“நீ பெரிய தலைன்னு சொன்னியே அவங்க எல்லாம் யாருன்னு தெரியுமா…?” என்று கேட்ட தம்பியை புரியாமல் பார்க்க,
போலீஸ் மூலை சற்று வேலை செய்வதை போல் ஒரு எண்ணம் தமிழ்செல்வனுக்கு…
“எதுக்கு சம்பந்தம் இல்லாம கேட்குற…?”
“இல்ல சும்மா தான்…” என்ற பதிலில்,
“ம்ம்ம்… எனக்கு சரியா தெரியலை… ஒருத்தரை மட்டும் தெரியும் அது அபி ஜூவல்லரி ஓனர்… நாராயண சாவமி…”
“ஓஓஓஓ….” என்ற பதிலோடு நிறுத்திக் கொள்ள, தமிழ்செல்வனுக்கு அடுத்து என்ன சொல்வது செய்வது என்றே புரியவில்லை…
சில நிமிடங்கள் கழிய, “மகி… சாரி டா…” என்றதும்,
“ம்ப்ச்ச்… விடு டா… நீ எப்பவும் இப்படி பேசுறவன் கிடையாது…என்மேல இருக்குற அக்கரைல பேசுன்னு புரியுது… ஃபிரியா விடு…” என்று தோளைதட்ட,
“ம்ம்ம்… தேங்கஸ் டா… ” என்று லேசாக தோளோடு கட்டி அணைத்தவன்,
“போலீஸ்காரனுக்கு நான் எதுவும் சொல்ல தேவையில்ல நீயே பார்த்து முடிவு பண்ணு…” என்றவன் தன் அறைக்கு சென்று விட, மகிழனுக்கு தான் மண்டை உடையும் போல் இருந்தது…
சற்று நேரம் யோசித்தவன் பின் ஒரு முடிவோடு படுக்கைக்கு சென்றான் தியாவின் எண்ணங்களோடு…
“சார்… பிளீஸ் சார்… நான் சொல்லுறது உண்மை சார்…” என்று கெஞ்சியதற்கு மகிழன் சற்றும் அசையவில்லை…
“இன்னும் எவ்வளவு நேரம் நீ இப்படி கெஞ்சினாலும் ஒன்னும் ஆக போறது இல்லை…” என்றபடி சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அரைவட்டம் அடித்து ஆடி கொண்டிருந்தான் மகிழன்…
உடல் மொழியில் அத்தனை இலகு தன்மை இருந்தாலும் கண்களின் தீவிரம் காட்டியது தான் நினைத்தை பெற்றே தீருவேன் என்று…
எதிரில் கையை பிசைந்தபடி நின்றிருந்தவனுக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை…
“சார்… நீங்களே வேண்ணும்னா செக் பண்ணி பாருங்க… மேல் ப்ளோர் புல்லா பிரைவட் ஏரியா… எங்கையும் நீங்க கேமரா பார்க்க முடியாது… கேமரா இருந்தா தானே பூட்டேஜ் தர முடியும்… ” என்று மீண்டும் சொன்னதையே சொன்னவனுக்கு காது கொய்ங் என்று கேட்டது சட்டென்று…
சத்தியமாக அடிப்பான் என்று நினைக்கவில்லை… மகிழனுக்கு அத்தனை கோபம்… நாக்கை மடித்து கைசட்டையை மேலும் மேலேற்றி கொண்டிருந்தவனை பார்த்து பயம் இன்னும் நான்கு படி மேலே ஏறியது…
“சார்… என்ன சார் கையெல்லாம் நீட்டுறீங்க… தெரியாது, கேமரா இல்லைன்னா அதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும்…?” என்று கேட்டவனுக்கு,
“கை மட்டும் நீளாது இப்ப என் கன்(gun)னும் நீளும்… ” என்றபடி தன் துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியில் வைத்து அலுத்தவும்,
“சார்… சார்… பிளீஸ் சார்… புரிஞ்சுக்கோங்க… எனக்கு எதுவும் தெரியாது… விட்டுருங்க சார்….பிளீஸ் சார்…” என்று கெஞ்ச,
“விட்டுறேன்… கேட்டதை கொடுத்துரு விட்டுறேன்…” என்றபடி இன்னும் அழுத்தி பிடிக்கவும்,
எங்கு தன்னை சுட்டுவிடுவானோ என்று முழுவதுமாக பயந்து போனவன், “சார்… சார்…. கொடுத்துறேன் சார்… பிளீஸ் சார்…” என்று அலறவும் தான் மகிழனுக்கு உடலும் துப்பாக்கியும் சற்று இலகுவாக மாறியது…
தன் அண்ணனிடம் பப்பின் பெயரை கேட்டு தெரிந்து கொண்டவன், ஏதாவது விஷயம் தெரிந்து கொள்ள கூடுமோ என்னும் சந்தேகத்தில் தான் இங்கு வந்து விசாரித்தது…
முதலில் சற்றும் மதியாமல் திமிராக பேசியவனை கையால வேண்டிய முறையில் கையாளவும் ஒருகட்டத்தில் உண்மையை பேசினான் உயிர் பயத்தில்…
கணினியின் முன் அமர்ந்திருந்தவனுக்கு புருவம் சுருங்கியது…
“கேமராவே கிடையாதுன்னு சொன்ன…?” என்று எதிரில் வேர்வை சிந்த பயத்தில் நின்றிருந்தவனை பார்த்து கேட்க,
எச்சிலை கூட்டி விழுங்கியவன், “சார்… அந்த பிளோர்ல மட்டும் கேமரா இருக்காது சார்… உண்மையா தான் சார் சொல்லுறேன்…”மகிழன் முறைப்பதை பார்த்து அவசரமாக மொழிந்தவன்,
“ஏன்னா அங்க வர எல்லாருமே ஏதோ ஒருவகைல பெரிய ஆளுங்க… மீட் பண்ணிக்குறது யாருக்கும் தெரிய கூடாதுன்னு இப்படி பிளேஸ் செட் பண்ணுவாங்க… அவங்க சேப்டிக்காக…” என்றதற்கு,
“அப்புறம் இந்த வீடியோ…?” என்று இருக்கையில் சாய்ந்தமர்ந்து கணினியை காட்டி கேட்கவும்,
“அது யாருக்கும் தெரியாத ஹிடன் கேமரா சார்…. ” என்று மெல்லிய குரலில் சொல்லவும்,
“ம்ம்ம்… மொத்தம் எத்தனை கேமரா இப்படி இருக்கு…?”
“ஒன்னு தான் சார்… அதுவும் வெளிய தான் சார்…” என்றதில் மீண்டும் துப்பாக்கியின் மீது கையை வைத்தவனை பார்த்து,
“அய்யோ சார் உண்மையா தான் சொல்லுறேன்… உள்ள வைக்கவும் முடியாது சார்… இது ஒன்னே ஒன்னு தான் சார் அதுவும் ஸ்டெப்ஸ் ஏறுற இடத்துல தான் இருக்கு… ” என்று அலற,
ஏன்னென்று ஓரளவிற்கு யூகித்து இருந்தாலும் எதிரில் இருப்பவனிடம் வார்த்தையாக கேட்க எண்ணினான்…
“ஏன்…?”
“சார்… வரவங்க எல்லாம் தடிதடியா இருப்பாங்க… உள்ள வந்ததுமே எங்கையாச்சும் கேமரா இருக்கான்னு தான் செக் பண்ணுவாங்க… சில நேரம் வரவங்க எல்லாம் படுமோசமான ஆளுங்களா இருப்பாங்க… ஆனா நிறைய பணம் தருவாங்க… அதுனால நாங்க கேமரா வைக்குறது இல்ல இதுல அவங்க சேப்டி எங்களுக்கு காசுன்னு பார்க்குறனால அவங்க விருப்பபடி பண்ணுறது…” என்றவனை பார்த்து முறைத்தவன்,
“அப்ப காசு குடுத்தா என்ன வேண்ணும்னாலும் பண்ணுவீங்க அப்படி தானே…” என்ற கேள்வியில்,
“அப்படியில்ல சார்… அவங்க என்ன பண்ணாலும் நாங்க கண்டுக்குறது இல்ல சார்…” என்க,
“என்ன பண்ணாலும்னா…? கொலை கூடவா…?” என்ற கேள்வியில் பதறியவன்
“அப்புறம் எதை சொல்லுற நீ…?” ஏதோ பெரிதாக இருக்கின்றது என்று உறுத்தியது உள்ளுக்குள்…
“அவங்களுக்குள் சில நேரம் பெருசா சண்டை போட்டுபாங்க… இதுல அரசியல் மீட்டீங்கும் நடக்கும்… சில நேரம் பொண்ணுங்களை கூட்டிட்டு வந்து அப்படி இப்படி இருப்பாங்க… சில நேரம் டிரக்ஸ் யூஸ் பண்ணுவாங்க… இது பொதுவா கொஞ்சம் சின்ன வயசு பசங்க அதாவது ஹைகிளாஸ் பசங்க பண்ணுற வேலை… சம் டைம்ஸ் அது லிமிட் தாண்டும்… அதை கண்டுக்காம இருக்க காசு குடுத்துருவாங்க… ” என்றவனை பார்த்து பல்லை கடித்தவன்,
]
“டிரஸ்க்…?” என்று கண்கள் இடுங்க கேட்டவனை பார்த்து,
“நாங்க அதெல்லாம் புரொவைடு பண்ணுறது இல்ல சார்… ஹை கிளாஸ் பப் தான்… பட் டிரக்ஸ் எல்லாம் கிடையாது சார்… ஆனா யூஸ் பண்ணுறவங்களை நாங்க எதுவும் சொல்ல மாட்டோம்…” என்றிட
“சரி… கேமரா வைக்க மாட்டீங்கன்னா எதுக்கு இந்த ஒரு ஹிடன் கேமரா மட்டும்…?”
“சார்… இந்த கேமரா கூட மேல ஃபோளோர்லையே இல்ல சார்… அதுக்கு ஆப்போஸ்ட் சைடு இருக்குற ஸ்டெப்ஸ்ல இருக்கு சார்… ஒரு சேப்டிகாக வச்சு இருக்கோம்… அவ்வளவுதான்…” என்றதும் ஒருமுறை முறைத்து பார்த்தவன் எதிரில் இருக்கும் கணினியில் தன் பார்வையை பதித்தான்…
அன்றைய தினத்தின் விடியோவை எடுத்தவன் தன் அண்ணன் கூறிய நேரத்தில் இருந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பிருந்து ஓட்ட ஆரம்பித்தான்…
அவனது சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக எதுவும் சிக்கவில்லை… ஆனால் சட்டென அந்த தளத்தில் இருந்த ஓர் அறையில் இருந்து தியா வேகமாக வருவதும் அவனை தொடர்ந்து ஒருவன் வருவதும் படியில் அவள் கால் வைக்கும் முன்பு தியாவின் கையை பிடித்து இழுத்தவன் மேல் தியா பிடிமானம் இன்றி சாய்வதும், அந்நேரம் ஒருவன் அங்கு வரவும் இவர்களை கண்டு திரும்பி போவதும்…
பின் தியா சட்டென விலக முயற்சிப்பதும் அவளை விடாமல் வலுக்கட்டாயமாக இழுத்து கழுத்தில் முகம் பதிய முயல்வதும் பின் போராடி விடுபட்டவள் ஓங்கி அவனை அரைந்துவிட்டு ஏதோ கோபமாக பேசி அவ்விடம் விட்டு நகர்ந்து போனதை கண்கள் இடுங்க பார்த்திருந்தான் மகிழன்…
மூளைக்குள் கேள்விகள் ஓட ஆரம்பித்தாலும் யாரென்று தெரியாதவன் மீது கொலைவெறி உண்டானது மகிழனுக்கு….