மகிழனிடம் ஏதோ பேச போனவள் ஆசிப்பின் அழைப்பில் கண்மண் தெரியாத கோபம் வந்தது ஏகத்திற்கும்…
முதலில் சுதாரித்த மகிழன், திவ்யா என்ற அழைப்பையும் அவளது கோபத்தையும் குறித்து கொண்டவன், “தியா என்ன ஆச்சு…? இவன் ஏன் இங்க இருக்கான்… என்ன பிரச்சனை…?” என்று சற்று பொறுமையாக கேட்கவும்,
அவனை ஒரு பார்வை பார்த்தவள், “நீங்க ஏன் இங்க வந்தீங்க…?” என்று திருப்பி கேட்க, ஒருநொடி திணறினான் அந்த கம்பீரமான போலீஸ் அதிகாரி…
அதை சரியாக புரிந்து கொண்டவள், “விசாரணை பண்ண வந்தீங்களோ…?” என்று கேட்டுவிட, இன்னும் திணறினான் மகிழன்…
இதே வேறுமாதிரியான சூழ்நிலையென்றால் சரியாக கையாண்டு இருந்து இருப்பான் தான்… ஆனால் இப்பொழுது தியா இருக்கும் நிலையும் எதிரில் இதோ செத்துவிடுவேன் என்று இருக்கும் ஆசிப் வேற அவனை பதற்றமாக்கினான்…
தியாவின் கேள்விக்கு பதில் கூறாது, தன் அலைபேசியை எடுத்து ஆம்புலன்ஸுக்கு அழைத்தவன்,
“சீக்கிரம் வாங்க…” என்று வைத்துவிட்டு பிரவீணுக்கு அழைத்து,
வீட்டின் முகவரியை கூறி உடனே வரும்படி ஆணையிட்டு திரும்பும்வரை தியாவின் பார்வை மகிழனையே வருடியது காதலாக… இனி தன் வாழ்வில் அனைத்தும் மாற போகிறது என்று தெரிந்து கொண்டாள் போலும்… கடைசி தருணமாக மகிழனை கண்ணில் நிறைத்து கொண்டாள் பெண்ணவள்….
ஆசிப்போ அதிர்ச்சியில் தியாவை பார்த்திருக்க, தியாவோ மகிழனை காதலாக பார்த்திருக்க, மகிழனோ ஒன்றும் புரியாத குழப்பத்தில் தியாவை பார்த்தவனுக்கு அவளது பார்வை அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது…
“தியா…” மெல்லிய குரலில் அழைத்தவனுக்கு அடுத்து என்ன கேட்பது சொல்வது என்றே புரியவில்லை…
இந்த பார்வை இதற்காக எத்தனை நாள் காத்திருந்திருந்து இருப்பான்… ஒருமுறையென்னும் பார்ப்பாளா என்று ஆனால் இந்த சந்தர்ப்பத்தில் அதை மகிழன் எதிர்பார்க்கவில்லை…
“பிளீஸ் மகிழன்… என்னை காப்பாத்த நினைக்காத…” என்று தெளிவாக பேசியவள், திரும்பி ஆசிப்பை பார்த்து,
காதல் இருந்த கண்ணில் மீண்டும் வெறி வந்தமர்ந்து கொள்ள, “இவனை நான் உயிரோட விட போவதில்லை…” என்றதும் ஆசிப் தலையும் தன் பார்வையையும் தாழ்த்தி கொண்டான் குற்றுணுர்வில்…
மகிழன், “தப்பு தியா… எதுவா இருந்தாலும் இனி நான் பார்த்துக்குறேன்… நீ எதுவும் பண்ணாத…” தடுக்க முயன்றான் அவளை…
“இல்ல மகிழன்… இது என் கணக்கு… பல வருஷ கணக்கு… பல வருஷ வெறி… இவனையும் இவன் அப்பனையும் போட்டு தள்ளணும்னு பல வருஷ வெறி… இந்த மாதிரி ஜென்மம் எல்லாம் வாழவே தகுதி இல்லாத மிருகங்கள் மகிழன்…” என்று அவனை அடிக்க போக, மகிழன் அவளை தடுத்து தள்ளி நிறுத்தினான் சட்டென…
ஆசிப்பை தடுத்து அடிக்க முடிந்த தியாவாள் மகிழனிடம் அவ்வாறு நடந்து கொள்ள முடியவில்லை…
அதுவே அவளை கோபம் மூட்டியது மேலும்,”ஏய்ய்ய்…” என்று அவனை பார்த்து கத்தியவள்,
“வந்தது தான் வந்த ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு வந்திருக்க வேண்டியது தானே… இவனை அப்பவே கொன்னு இருப்பேன்… ஆனா நான் யாருன்னு தெரியாம இவன் சாக கூடாதுன்னு நினைச்சு கொஞ்சம் டைம் இழுத்துட்டேன்… சே… இல்லைன்னா அப்பவே செத்து இருப்பான்… ஒழுங்கா ஓரமா போயிரு…” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியவள் ஆசிப்பின் புறம் திரும்ப,
மகிழன், “நீ இன்னொரு தப்பை செய்ய நான் விட மாட்டேன் தியா…” என்றதில் நக்கல் சிரிப்பொன்றை காட்டி அவனை பார்த்தவள்,
“ஓஓஓஓ…. அப்ப அந்த மன்சூரை நான்தான் கொன்னேன்னு கண்டுபிடிச்சுட்டியா…?” என்ற கேள்வியில் அதிர்ந்து பார்த்தான் ஆசிப்…
மகிழனிடம் பதிலில்லை, அவனது பார்வையே சொல்லியது ஆம் என்பது போல்…
தியா, “நீ கண்டுபிடிச்சுருவன்னு தெரியும்… நான் அதுக்காக வருத்தபடபோவதில்லை… ஆனா இவனை கொல்லாம போனாதான் வருத்தபடுவேன்… இதுதான் என் முடிவுன்னு நான் யோசிச்சு பல வருஷம் ஆச்சு… அதை தடை செய்யாத…” என்று பல்லை கடித்து உருமியவளை ஆயாசாமாக பார்த்தவன்,
“புரிஞ்சுக்க தியா… இவனை நான் பார்த்துக்குறேன்… விட்டுரு… மன்சூர் விஷயமே நீ தப்பு பண்ணிட்ட…” என்று முடிக்கும் முன்,
அவன் சட்டை காலரை கொத்தாக பற்றியவள், “தப்பு பண்ணிட்டேனா… என்ன தப்பு பண்ணினேன்… சொல்லு… அப்படி என்ன தப்பு பண்ணினேன்… எனக்கு தெரிஞ்சு நான் பண்ண ஒரே தப்பு பொண்ணா பொறந்ததுதான்… அதுவும் அந்த மன்சூர்க்கு பொண்ணா பொறந்ததும் இந்த மிருகத்துக்கு தங்கச்சியா பொறந்ததும் தான் நான் பண்ண தப்பு…” என்று கத்தியவளை பார்த்து இப்பொழுது முழுவதும் அதிர்வது மகிழனின் முறை ஆயிற்று…
அதே அதிர்ச்சியோடு ஆசிப்பை பார்க்க, அவனோ தந்தையை கொன்றுவிட்டாள் என்னும் அதிர்ச்சி போய், இயலாமையோடு தாம் ஒருவித அசிங்கம் என்னும் மனநிலைக்கு சென்றிருந்தான்…
“எ.. என்ன… சொல்லுற தியா…?”
“ஆமா… அந்த மிருகத்துக்கு தான் பொறந்தேன் நான்…” என்று கத்தியவள் பொத்தென்று நாற்காலியில் அம்ர்ந்தாள் வேகமூச்செடுத்து…
மகிழன் இதை எதிர்பார்க்கவில்லை, தொழிலில் பிரச்சினை வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை என்று மட்டுமே யோசித்தவனுக்கு இப்படியொரு கோணமும் காரணமும் அவனை அதிர்ச்சி ஆக்கியது…
அவள் அருகில் அமர்ந்தவன், திரும்பி ஆசிப்பை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் இவள் புறம் திரும்பியவன், அவள் கரம் பற்றி
அவனது கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவள், ஒருஇகழ்ச்சி புன்னகையோடு
“நான் அன்னைக்கே சொன்னேன் மகிழன்… நீங்க நினைக்குற மாதிரி நான் இல்லைன்னு சொன்னேன்… நீங்கதான் கேட்கல…” என்று கண்களை இறுக மூடி திறந்தவள்,
“நான் சொன்னது எல்லாமே பொய்… என் முதல் இருந்து இப்பவரை எல்லாமே…. எல்லாமே பொய் மட்டும் தான்… என் பெயரு, படிப்பு, வேலை எல்லாமே பொய் மகிழன்… நான் நானா இருந்ததே இல்லை…” என்று கண் கலங்கியவளை பார்க்க உள்ளுக்குள் என்னவோ போல் இருந்தது மகிழனுக்கு…
“தியா…” என்று கைபிடியின் இறுக்கத்தை கூட்ட,
“திவ்யதர்ஷினி….” என்று தன் பெயரை திருத்தினாள்…
“தியா…” என்றான் மீண்டும், நிமிரந்து பார்த்தவள்
“என் அம்மா இருந்தவரை எல்லாம் நல்லாதான் இருந்துச்சு மகிழன்… எல்லாமே நல்லா இருந்துச்சு… என்னை சுத்தி இருந்தவங்க, இருந்த சூழ்நிலை எல்லாமே நல்லா இருந்துச்சு ஆனா அம்மா போன பின்னாடி எல்லாமே போச்சு…” என்றபடி கண்களை மூடியவளுக்கு கடந்தகாலம் காட்சியனது தன்னைபோல்…
…….
“இன்னும் ஒரு சப்பாத்தி போட்டுக்கோ மா…” என்ற அன்னைக்கு,
“போ ம்மா… வயித்துல இடம் இல்ல…” என்று சிணுங்கிய மகளை காண அத்தனை ஆசையாக இருந்தது கங்காவிற்கு…
பதின் வருத்தில் இருந்த திவ்யதர்ஷினிக்கு அப்பொழுது பதிமூன்று வயது… ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் இருந்தனர் மன்சூர் என்னும் ராஜின் குடும்பம்…
ஏழ்மையென்று சொல்லா விட்டாலும் உணவிற்கு பஞ்சம் இன்றி இருந்தனர்… அருகில் இருந்த பள்ளியில் கல்வி பயன்றனர் ஆசிப் என்னும் தியோவரதனும் திவ்யதர்ஷினியும்…
இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம் இருக்க, மூன்றாவதாக கருவுற்றார் கங்கா…
விஷயம் அறிந்த ராஜ், “கங்கா சொன்னா கேளு இந்த குழ்ந்தை நமக்கு வேண்டாம்… புரிஞ்சுக்கோ…” என்க, கங்காவுக்கு கோபமாக வந்தது…
“என்ன புரிஞ்சுக்கணும்… கடவுளா நமக்கு குடுத்த வரம் இது… இதை அழிக்க நமக்கு உரிமையில்லை…” என்றவளை பார்க்க எரிச்சலாக வந்தது ராஜிற்கு…
“கங்கா… நாம வாழுற இந்த வாழ்க்கைக்கு மூணாவது ஒரு குழந்தை வேண்ணுமா…? இருக்குற ரெண்டு பசங்களை ஒழுங்கா வளர்த்தாலே போதும்…” லேசாக கோபம் வந்தது மனைவியின் மேல்,
“ஏன் நாம என்ன இப்ப குறைச்சலா வாழுறோம்…?” என்று கேட்ட மனைவியை பார்த்த ராஜிற்கு கோபமும் எரிச்சலும் மெல்ல அதிகரிக்க தொடங்கியது…
“புரிஞ்சுக்கோ கங்கா… நாமளே கூலி வேலை செஞ்சு தான் வாழுறோம்… வாங்குற காசு சாப்பாட்டுக்கும் படிப்புக்குமே சரியா போகுது… இதுல இன்னொனா…? வேண்டாம் சொன்னா கேளு…” என்று எச்சரிக்க, எதுவுமே கங்காவின் காதில் விழவில்லை…
குழந்தை வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க, ராஜோ வேண்டாம் என்பதில் உறுதியாக நின்றான்…
அவன் கவலை மூன்றாவதும் பெண்பிள்ளையாக போய்விட்டாள் யார் செலவு செய்வது என்னும் பயம்… பெண்கள் என்றால் செலவு வீண் கவலை சுமை என்னும் எண்ணம் அவனிடம் வேரூன்றி நின்றது….
அதன் விளைவு சண்டை பெரிதாக கைநீட்டும் அளவிற்கு சென்றது விதியின் விளையாட்டில்…
கங்கா சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல, கோபம் கண்ணை மறைக்க, கையோங்கி பலமாக ஒரு அரைவிட்டான் ஆத்திரத்தில்…
அடிப்பான் என்று எதிர்பார்க்காத கங்காவிற்கு இது ஒருவித அதிர்ச்சி என்றால், அடித்த வேகத்தில் கீழே விழுந்தவளின் பின்னந்தலை சுவர் திண்டில் இடித்து கொண்டது பலமாக…
“ஆஆஆஆ….” என்னும் அலரல் சத்தம் கேட்கவும் தான் புத்தி தெளிந்தான் ஆடவன்…
“அச்சோ…கங்கா…” என்று பதறி அருகில் சென்றவன் அவள் தலையில் இருந்து ரத்தம் சொட்டுவதை கண்டு நெற்றியில் அரைந்து கொண்டவன், அவசரமாக தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் பயத்தோடு…
தியோவரதனும் திவ்யதர்ஷினியும் பள்ளி சென்றிருந்ததால் அவர்களுக்கு எதுவும் தெரியாமல் போனது மாலை வரை…
“ஏங்க பிள்ளையோடு இருக்குறவங்களை போய் அடிச்சு இருக்கீங்க… அறிவிருக்கா இல்லையா உங்களுக்கு…?” என்று கேட்கவும், தலையை குனிந்து கொண்டவன்,
“சாரி டாக்டர்… ஒரு கோவத்துல….” என்று தயங்கி இழுக்கவும்,
கங்காவோ முகத்தில் மாட்டி இருந்த சுவாச கருவியுடன் கண் மூடி படுத்திருக்க, பார்த்த ராஜிற்கு ஒன்றும் புரியவில்லை…
“என்னாச்சு டாக்டர்… ஏதாச்சும் பெரிய பிரச்சனையா…?” என்று கையை பிசைந்துக்கொண்டு கேட்க,
“பிரச்சினை தான்… மண்டைல அடிப்பட்டதால கோமாக்கு போயிட்டாங்க…அதுவும் பின் மண்டைல வேற அடி பட்டு இருக்கு… இது பெரிய பிரச்சனை… அதுலையும் கங்கா வயிற்றுல வளர குழந்தை…? பிழைக்குறது கஷ்டம்…” என்ற வார்த்தையில் ராஜிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை…
முதலில் அவனுக்கு சந்தோஷம் தான் காரணம் குழந்தை நிலைக்க போவதில்லை என்னும் விஷயம் ஆனால் மனைவி…?
கங்காவின் மீது காதல் என்று சொல்லிவிட முடியாது… ஆனால் கடமை உணர்வு இருந்தது… காங்காவின் அழகு அவனை பெரிதாக ஈர்த்தது, அதில் திருமணமும் முடித்து பிழைப்புக்காக ஆந்திராவும் வந்து சேர்ந்தான்…
முதல் குழந்தை ஆணாக பிறக்க அத்தனை கர்வம் அவனிடம் அடுத்தது பெண்ணாக பிறக்க பிடித்தமின்மையை வெளிபடையாக காட்டாவிட்டாலும் திவ்யதர்ஷினியிடம் அன்பை காட்டாது கடமையை காட்டினான்….
ஆனால் அதற்கும் சேர்த்து கங்கா மகளிடம் அன்பை முழுவதும் கொட்டி வளர்த்தார்… கணவனின் குணம் அறிந்ததால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை…
இப்பொழுது கங்கா கோமாவில் இருப்பதை எப்படி எடுத்து கொள்வது என்னும் தடுமாற்றம் அடுத்து என்ன செய்வது என்னும் குழப்பம் ராஜை பைத்தியம் ஆக்கியது…
“ராஜ்… ஹலோ ராஜ்…” என்ற டாக்டரின் அழைப்பில்,
“ஹான்… டாக்டர்…?” என்று முழித்தவனை பார்த்த டாக்டருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…
“என்ன பண்ண போறீங்க…?” என்ற கேள்விக்கு,
“கங்கா எப்ப முழிப்பா டாக்டர்…?” என்ற கேள்வியில் அவனை உறுத்து பார்த்தவர்,
“அவங்க கோமாக்கு போயிட்டாங்க… எப்ப முழிப்பாங்கன்னு சொல்ல முடியாது… எங்களால எந்த உத்திரவாதமும் தர முடியாது சாரி…” என்றதில் அமைதியாக அமர்ந்து விட்டான் பல சிந்தனைகளோடு…
மருத்துவதுக்கு காசு, வீடு, பிள்ளைகள், வேலை அனைத்தையும் எப்படி சமாளிப்பது என்னும் குழப்பமும் அவனிடம்…
“குழந்தை விஷயம் நல்லா யோசிங்க ராஜ்… வேற எங்கையாச்சும் கூட்டிட்டு போய் வைத்தியம் பார்க்குறதுன்னா தாராளமா கூட்டிட்டு போங்க…” என்றுவிட்டு அவர் சென்று விட, ஆயாசமாக வந்தது ராஜிற்கு…
மனைவி இருக்கும் அறையை ஒருமுறை எட்டி பார்த்தவன் மீண்டும் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டான்… என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை…
மாலை வரை இருந்தவன் அமைதியாக கிளம்பி சென்றுவிட்டான் வீட்டிற்கு… வீட்டிற்கு வந்த தந்தையிடம் திவ்யதர்ஷினி கேள்வி கேட்டு படுத்தி விட்டாள்…
தியோவரதனோ அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தானே தவிர அன்னையை பற்றி எதுவும் கேட்கவில்லை… சற்று தந்தையை கொண்டு பிறந்துவிட்டான் அவன்…
பெண்கள் என்றால் இவ்வளவு தான் இதற்குதான் என்னும் எண்ணம்… பதினைந்து வயதில் இருந்தவனுக்கு மற்றொரு உலகம் இருப்பதை உணர தொடங்கிய நேரம்… தனிமையும், தவறான எண்ணங்களுமாக இருந்தவனுக்கு மற்றது பெரிதாக தோன்றவில்லை…
“ஏய்… சும்மா நொய்நொய்ன்னு… போ… போய் ஏதாச்சும் சமைச்சு வை… உங்க ம்மா வந்துருவா…” என்று திவ்யதர்ஷினியிடம் கத்திவிட்டு எழுந்து குளிக்க சென்றான் எரிச்சலோடு…
அன்று தொடங்கியது அவளது துன்பகாலத்தின் ஆரம்பம்… அழுதபடி தனக்கு அன்னை கற்று கொடுத்ததை செய்தவள், தான் ஏதும் உண்ணாமல் படுத்தும் விட்டாள்…