அப்படீன்னா என் காதுல விடாம ஒலிச்ச இளா இளாங்குற சத்தம் என்னோட கற்பனையோ இல்ல மனசுக்குள்ள அடிச்ச எக்கோவோ இல்லை… சக்தி என் சக்தி வந்துட்டா…
இதுக்கு மேல நான் எதுக்காக காத்திருக்கணும் இதோ இப்பவே நான் எழுந்திரிக்கணும் அவள பாக்கணும் பேசணும் அவ மடியில் விழுந்து என் மனசுல இருந்த பாரத்தை பூரா இறக்கணும், சந்தோஷம் தாங்காம பேசமுடியாம கண்ணுல வரும் பாருங்க அந்த ரெண்டு சொட்டு கண்ணீர் அதுக்காகவே வாழணும்…
”யாருமா உங்கள உள்ள விட்டது, என்ன பண்ணித் தொலைச்சீங்க, அவருக்கு தலையில அடிபட்டு நினைவில்லாம இருக்குறார். உயிர காப்பாத்துறதே பெரிய விசயமா போயிடுச்சு, இன்னும் கண்ணு முழிக்காம இருக்க பேஸண்ட் கிட்ட போய் இப்படி கத்துறீங்க, போங்கம்மா வெளியில”
அவ வந்தா தான் நான் பிழைப்பேன்னு மெடிக்கல் யுனிவர்சிட்டில சொல்லி குடுத்திருக்க மாட்டாங்களே, சோ சிஸ்டர் மேல தப்பில்ல, இன்னும் எழுந்திரிக்கலைன்னா அது தான் பெரிய தப்பு…
”சிஸ்டர் சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க, தலையில போட்டிருந்த கட்டுல இருந்து இரத்தம் வருது பாருங்க…” ஒரு இன்னொரு நர்ஸ விட்டு டாக்டரை கூப்பிட சொல்லிகிட்டு இருந்தாங்க…
“எனக்கு ஒண்ணுமில்லை என்ன விடுங்கன்னு கத்தணும் போல இருந்துச்சு… ஆனா கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி கண்ணத் திறக்க வந்த என்னை,
“ஒண்ணு ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேங்குறான் இல்லைன்னா, ஓவரா ஸ்ட்ரெஸ் எடுத்து அடிபட்ட இடத்துல இருந்து இரத்தம் வர்ற அளவுக்கு பண்றான் இவன என்ன தான் பண்றது… ” டாக்டர் ஒவ்வொரு தரம் பாக்க வரும் போதும் என்னைய பாத்து புலம்பீட்டு தான் போறாரு…
“சிஸ்டர் இவருக்கு ஸ்லீப்பிங் டோஸ் போடுங்க, தூங்கட்டும்”
என்னோட நினைவுகளுக்கு தூக்க மருந்து உங்களால குடுக்க முடியாது டாக்டர்…
அவளே வந்ததுக்கு அப்புறம் எனக்கென்ன வந்திடப்போகுது… அவளோட மனச பூராத்தையும் அந்த டைரியில கொட்டியிருந்தா அதை படிச்சதுக்கு அப்புறமும் என்னால அவள புரிஞ்சுக்க முடியாம போனா என்னைய விட முட்டாள் வேற யாரும் இல்லை…
கண்ணீரோடு முடிஞ்சிருந்த அந்த பக்கங்களைத் தாண்டி வர எனக்கு ரொம்ப நேரமானுச்சு, அவளுக்கோ அடுத்த முறை டைரிய தொடவே மூணு வருசமாயிருக்கு…
நாம என்ன செய்யுறோமோ அதோட விளைவுகள் கண்டிப்பா நம்மளைத் தொடரும் அப்படீங்கிறது, எழுதப்படாத பிரபஞ்சவிதி… அதுல அவளும் நானும் மட்டும் என்ன விதிவிலக்கா…
“என்னால தான் எல்லாம் என்னால தான், எதை எழுதக்கூடாதுன்னு நெனச்சேனோ அதையே எழுதி வச்சேன், திரும்ப டைரிய எடுக்கணும்னு நெனக்கும் போதெல்லாம், நான் எழுதின அந்த அழுகையும் கூச்சலும் காதுக்குள்ள ஒலிச்சுகிட்டே இருந்துச்சு… இயல்பான வாழ்கையோட பொருந்தியிருக்க மாதிரி மத்தவங்களுக்கு தெரியணும் ஆனா என்னோட உலகமே இந்த டைரிக்குள்ள இருக்குங்குறத யார்கிட்டயும் காட்டக்கூடாது.. எவ்வளவு முரணான வாழ்க்கை எனக்கு…
மனசுல நினைக்குறத அப்படியே செய்ய முடியலை வெளிப்படுத்தக்கூட ம்டியலைன்னா என்ன வாழ்க்கை இது… இப்படியே யோசிச்சு மூணு வருசம் போனது தான் மிச்சம்… ஸ்கூல் வாழ்க்கையோட குழந்தைகள் தினத்துக்கும் சேர்த்து ஒரு முழுக்கு போட்டாச்சு… எவ்வளவு வேகமா ஓடிடுச்சு காலம்… நாம வளரும் போது நம்மளோட எண்ணங்களும் வளரும் இல்லையா, அப்ப தான் என் புத்திக்கு ஒரு விசயம் உரைக்க ஆரம்பிச்சுது…
நான் வளர்ந்த மாதிரி இந்நேரம் இளாவும் வளர்ந்திருப்பான்ல, இப்ப நான் காலேஜ் போறேன்னா கண்டிப்பா அவனும் எனக்கு முன்னாடியே காலேஜில சேர்ந்திருப்பான்… ஆமா கண்டிப்பா அவன் எனக்கு சீனியரா தான் இருப்பான்…
நானும் தான் சேர்ந்து ரெண்டாவது வருசம் போகப்போறேன். ஒரு வேளை நம்மள மாதிரியே அவனும் இன்ஜினியரிங் சேர்ந்திருந்தா… யெஸ் யெஸ், பேப்பர் பிரசண்டேசன், ஸிம்போசியம் இதெல்லாம் எதுக்கு இருக்கு நானும் இளாவும் மீட் பண்ணத்தான்..
இப்பவே கோயம்புத்தூர் ல இருக்க காலேஜில எங்கெங்க சிம்பொசியமோ உடனே ரெஜிஸ்டர் பண்ணிற வேண்டியது தான்…
இளாவை மீட் பண்ணீட்டு தான் இனி உன்னைத் தொடுவேன்…”
“இவ்வளவு சீக்கிரம் இது நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை… மை காட் நான் தான் நானே தான்… இளாவை என் இளமாறனை பாத்துட்டேன்…. ஆனா என்ன ஒரு விசயம்னா நான் நினைச்ச மாதிரி எதுவுமே நடக்கலை, ஆமா நான் அவன் கோயம்புத்தூர் ல இருப்பான்னு ஆங்க இருக்க காலேஜ் எல்லாத்துக்கும் போனேன். டூர், இண்டஸ்ட்ரியல் விசிட், இன்னும் என்னென்ன சொல்லணுமோ அவ்வளவும் சொல்லீட்டு கிளம்புனேன்.
ஆனா ஒரு காலேஜில கூட இளமாறன்னு யாருமே படிக்கலைன்னு சொல்லீட்டாங்க… ஆமா அவங்க ஆபீஸ் ரூம்லயே போயி எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ஸ் லிஸ்ட்லயும் பார்த்துட்டேன்.
என்ன ப்யூனுக்கு தான் கொஞ்சம் செலவாச்சு, ஆனாலும் அந்த மாறன கண்டுபிடிக்க முடியலை..
அப்ப தான் என் ப்ரெண்ட் பைத்தியம் மாதிரி யோசிக்காத டீ, கோயம்புத்தூர்ல இருந்தா அங்கயே படிக்கணும்னு ஏதாவது இருக்கான்னு கேட்டா, பளிச்சுன்னு மண்டைக்குள்ள ஒரு பல்பு, இந்த மூணு வருசத்துக்குள்ள எப்படியும் இளா கிடைச்சிடுவான்னு மனசு சொல்லிகிட்டே இருந்துச்சி
இந்த விசயத்தைப் பத்தி யோசிகிட்டே கேண்டீன்ல இருந்து க்ளாஸுக்கு போயிட்டு போது, டிபார்ட்மெண்ட் நோட்டீஸ் போர்டுல புதுசா, ஒரு பாம்லெட்(நோட்டீஸ்), ”ஜே ஜே காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, திருச்சி”
சரி திருச்சிக்குத் தான் போய் பார்ப்போமே, அப்படீன்னு யோசிச்சா, இந்த மனசாட்சி என்ன சொன்னுச்சு தெரியுமா, கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்…? எதோ நீ சொல்றன்னு போறேன்…
பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமதான் போனேன். ஏன்னா ஓவரா எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம், சோ நோ எக்ஸ்பெக்டேசன்…
கிளம்பியாச்சு, போயாச்சு, காலேஜ் எண்ட்ரென்ஸ்ல நுழையும் போதே, எதோ கோயில் மணி அடிக்குற சத்தம், ஒரு வேளை இங்கதான் இளா இருக்கானான்னு யோசிக்கிறேன் திரும்ப கோயில் மணி , என்னடா இது இந்த புள்ளையார் என்னமோ சொல்றாரே, கிட்ட போய் பார்த்துட்டு வந்திடுவோமான்னு, போனோம், நானும் என் ப்ரெண்ட்ஸும்.
மனசுல எல்லாம் நல்லதாவே நடக்கும்னு ஒரு குரல், கண்ணுமுன்னாடி எழில் வந்து போனான்… எவ்வளவு கண்ட்ரோல் பண்ணியும் என் கண்ணு அவன தேடுறத நிறுத்தவே இல்லை…
உள்ள நடந்து போனோம் ரிசப்ஸன், தேடிட்டுகிட்டு இருந்த மனசு அவன் எப்படி இருப்பான்னு முதல் முறையா கற்பனை பண்ண ஆரம்பிச்சுது… அவன் எப்படி இருப்பான், நல்லா ஹைட்டா இருப்பான், ஏன்னா அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் செம ஹைட்டு, கண்டிப்பா கரு கருன்னு இருக்கமாட்டான், என் கலர் இல்லைன்னாலும் கொஞ்சமாச்சும் கலரா இருப்பான்… அப்புறம் அப்புறம் மீசை தாடிலா வச்சிருப்பனோ,
அடலூசே பெரியவனா வளர்ந்துட்டா இதெல்லாம் வராமயா இருக்கும்…. இவ்வளவு பேர்ல அவன என்னன்னு சொல்லி விசாரிக்குறது… ஒரு ப்யூன் கூட கண்ணுல சிக்கமாட்றானுவலே…
ஆனாலும் திருச்சிக்கார பசங்க ரொம்ப புத்திசாலிங்க தான். “ எதாவது ஹெல்ப் வேணுமா, ஆடீட்டோரியம் போகணும்னா, ஸ்ரெயிட்டா போய் ரைட் சைடு, இல்ல கேண்டீன் போகணும்னா, ஸ்ரெயிட்டா போய் லெஃப்ட்”
“இல்ல ஒருத்தர பாக்கணும்”
“ஓ உங்க ப்ரெண்ட்ஸ் இங்க இருக்காங்களா, கால் பண்ணி பாருங்களேன்”
“இல்லை அவங்க காண்டாட்க்ட் மிஸ் ஆயிடுச்சி”
“ஓ அப்படியா, சரி அவங்க நேம் டிபார்பார்ட்மெண்ட் சொல்லுங்க கண்டுபிடிச்சிடலாம்”
“இளமாறன்”
“… என்னது”
“அவன் பேரு,… அவங்க பேரு இளமாறன்”
“என்ன டிபார்ட்மெண்ட்”
“அது தெரியலை…”
“இயர்”
“மே பி ஃபனல்”
“இந்த காலேஜ் தானா அதாவது தெரியுமா”
அதுவும் தெரியாதுன்னு சொன்னா கேவலமா நெனச்சிடுவானோன்னு அந்த காலேஜ் தான்னு சொல்லீட்டேன்..
அதுக்கப்புறம் அவன் ஒரு லுக் விட்டான் பாக்கணும், மேலயிருந்து கீழ வரைக்கும் பார்த்திட்டு,
“ என்ன விசயமா அவனைப் பாக்கணும்”
“அது அதெல்லாம் உங்ககிட்ட சொல்லமுடியாது”
“இல்லை சொன்னீங்கன்னா போன் பண்ணி வரச்சொல்லுவேன்”
“அதெல்லாம் வேண்டாம் எங்க இருக்காங்கன்னு சொல்லுங்க நானே போய் பார்த்துக்குறேன்…”
“அஹான் அப்படியா, அப்ப சரி, அப்படியே நேரா போயி சடன் ரைட் எடுத்து கொஞ்சம் போயி திரும்ப ரை எடுத்தா அங்க ஒரு வாட்டர் கூலர் இருக்கும் அங்க இருந்து நேரா போயி திரும்ப ரைட்டு எடுங்க அங்கதான் இருப்பான்..”
நான் என்னமோ திருச்சியில இருந்து போடிநாயக்கனூர்க்கே வழி கேட்ட மாதிரி அத்தணை சொல்றானேன்னு போனா, என் கூட வந்தவளுக எல்லாம் செம பாட்டு விட்டாளுங்க,
அவன் கண்ணும் முழியும், பார்வையே சரியில்லை, முதல்ல நல்லாத்தான் பேசீட்டு இருந்தான்… நான் இளமாறன்னு பேர் சொன்னதும் அவன் மூஞ்சி போன போக்க பாக்கணுமே, அதுக்கப்புறம் தான் திமிரா பாக்க ஆரம்பிச்சான்.
ஒரு வேளை இவன் நம்ம இளா கிட்ட ஏதும் பிரச்சனை பண்ணியிருப்பனோ, அவன் வேற பொசுக்கு பொசுக்குன்னு கோவப்படுவான் அடிச்சிருப்பானோ, நம்மள வச்சு பழிவாங்கீருவானோ, படுபாவிப்பய அவன்கிட்ட போய் கேட்டேன் பாரு…சீ இவன திட்டி இளாவ பாக்கப்போற மூட்ட ஸ்பாயில் பண்ணிக்க கூடாது…
என்னைப் பாத்ததும் அவனுக்கு அடையாளம் தெரியுமா… சக்தின்னா யாருன்னு கேட்டுட்டா… ஓ மை காட்… சீ லூஸீ அப்படியெல்லாம் கேக்க மாட்டான். கேக்காமாட்டான்னா என்ன பண்ணுவான்.. அப்ப மாதிரி வம்பிழுப்பானா, ஏன் டி இவ்வளவு நாளா வரலைன்னு கேட்டு அடிப்பானோ, அதே மாதிரி கிள்ளி கடிச்சு வைப்பானோ… நீ இன்னும் வளரவே இல்லை சக்தி…
அப்படியெல்லாம் செய்ய மாட்டான்… என் இளா என்னையப் பார்த்ததும் ஆத்தங்கரை மரமே அரச மர இலையேன்னு பாட்டு பாடுவான்… நீயாடி சக்தி இப்படி வளர்ந்துட்டியேன்னு ஆச்சரியமா பாப்பான்…
கற்பனைக்கு கடிவாளம் கிடையாதுன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி தான், கட்டுக்கடங்கா குதிரையா மனசு அவன பாக்க ஓடுச்சு, அதோட வேகத்துக்கு கால் போக முடியாதே, ஆனாலும் வேகமாத்தான் போனுச்சு…
ஹே நில்லு, அவன் என்ன வழி சொன்னான் நாம திரும்பி அதே இடத்துக்கு வந்து நிக்குறோம்… இந்த காலேஜ் வேற எந்த பக்கம் பாத்தாலும் ஒரே மாதிரி இருக்கு நாம திரும்ப ரிசப்சனுக்கே வந்துருக்கோம்
தேடுனா கிடைக்கவே இல்லை. அதே நேரம் கரெக்டா சீஃப் ஹெஸ்ட் வரவும் வேற வழி இல்லாம ஆடிட்டோரியம் போக வேண்டியதா ஆயிடுச்சு.. கண்ணுல மட்டும் சிக்கட்டு அந்த இடியட், உதை பிச்சுடுறேன் ராஸ்கல்…
அதுக்கப்புறம் அந்த காலேஜில பசங்க கிட்ட விசாரிக்கவே பிடிக்கலை, பொண்ணுங்க யார் கிட்டாயாவது கேக்கலாம்னா, ஒண்ணு கூட ஃப்ரியா இல்லை, எல்லாம் கலர் கலரா பட்டுப்புடவை கட்டிகிட்டு போட்டோ எடுக்குறதுல பிஸியா இருந்துச்சுங்க, நேரா ஆபீஸ் ரூமுக்கு போனேன், அங்க ஒரு லேடி மட்டும் உக்காந்திருந்தாங்க …
”எக்ஸ்கியூஸ் மீ மேம்”
”யெஸ்”
“இங்க இளமாறன்னு ஒரு ஸ்டூடெண்ட் படிக்கிறாங்களா மேம்”
“ஏம்மா இப்படி கேட்டா எப்படி சொல்ல முடியும்… எந்த இயர் என்ன டிபார்ட்மெண்ட் எதாவது சொன்னாதானே சொல்ல முடியும்,…. அதுக்கு முன்னாடி நீங்க யாரு எதுக்காக இந்த டீடெய்ல்ஸ் கேக்குறீங்க”
என்ன சொல்றதுன்னு தெரியாம திரு திருன்னு முழிச்சுகிட்டு நின்னேன். அந்த நேரம் தான் என் ப்ரெண்ட் ஹெல்ப் பண்ணுனா,
“அவங்க ஃபேமிலி ப்ராப்ளம் மேம், எதோ சண்டையில பிரிஞ்சுட்டாங்க, அந்த பையன் இங்க படிக்கிறதா எங்களுக்கு தகவல் கிடைச்சுது. அதான் மேம் கேக்குறோம்… ப்ளீஸ் ஹெல்ப் அஸ்”
“இப்படியெல்லாம் குடுக்க முடியாதும்மா, நீங்க போய் ரெஜிஸ்ட்ரார பாருங்க”
“மேம் ப்ளீஸ் நீங்க நினைச்சா ஹெல்ப் பண்ணலாம், உங்களுக்கே தெரியும் அவங்க கிட்டலா பர்மிஸன் கேட்டு நடக்குற காரியமா மேம் இது… ப்ளீஸ் மேம்”