அன்புள்ள தவறே 12

“நம்ம கல்யாணத்துக்கு நம்மோட காதல் மட்டும்தான் காரணம். உன்மேல சத்தியம் இது” என்று சத்தியம் செய்தவனை நம்பாத பார்வைதான் பார்த்திருந்தாள் பவித்ரா.

“இப்படி என்னை பார்க்காத பவி” என்று என்று வருண் அவளது கைகளைப் பிடித்துக் கொள்ள,

“ஏன் இந்த கல்யாணம் வருண்?” என்று கண்ணீருடன் தான் கேட்டாள் பவித்ரா.

“ஏன்னா நான் உன்னை விரும்புறேன்டா. என்னால உன்னை எப்பவும் எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாது”

“நீங்க சொல்ற எதுவும் புரியல எனக்கு. இப்படியே இருந்தா பைத்தியமாகிடுவேன் போல” என்று பவித்ரா கலங்க,

“நான் சொல்றேன் பவி. நீ என்ன கேட்டாலும் சொல்றேன். கொஞ்சம் அமைதியா இரேன். ப்ளீஸ்டா” என்றவன் அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளை எழுப்பி அருகில் இருந்த சோஃபாவில் அமர்த்தினான்.

அவள் அருகில் தானும் அமர்ந்தபடி, “என்ன தெரியணும் உனக்கு?” என்று வருண் அவள் கண்களை பார்க்க,

“ஏன் இந்த கல்யாணம் வருண்?” என்று பாவமாக கேட்டவளை பார்க்கவே வலித்தது அவனுக்கு.

“நான் உன்னை ஏமாத்தி இருப்பேன்னு நினைக்கறியா நீ”

“நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வி கேட்காதீங்க” என்று அவள் இரைய,

“நான் சொல்றேன் அம்மும்மா. உனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் தான் நான்.” என்று நெடிய மூச்சை வெளியேற்றியவன்,

“நீ என் உயிரை காப்பாத்தின நிமிஷம் நீ யார் என்னனு எதுவும் தெரியாது எனக்கு. அதற்குப்பிறகு உன்னை திரும்பவும் பார்க்கிற வரைக்கும் அதே நிலைமை தான். ஆனா, உன்னைப் பார்த்த நிமிஷம் நீ தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன். என்னவோ, உன்னை அப்படி சாதாரணமா கடந்து போக முடியல பவி.”

“உன்னை பிடிச்சிருந்தது. நீ என் வாழ்க்கை முழுக்க வேணும்னு நினைச்சேன். நீ என்கிட்ட எதையோ சொல்ல வந்து முடியாம தடுமாறின, அப்பவும் உன்னால சொல்ல முடியாத விஷயம் எனக்கு தெரிய வேண்டாம்னு தான்டா நினைச்சேன்.”

“என் மேல எப்போ நம்பிக்கை வருதோ, அப்போ நீ உன்னைப்பத்தி வெளிப்படையா என்கிட்டே சொல்லிடுவன்னு நினைச்சேன். அதற்காக காத்திருக்கவும் நான் தயாரா தான் இருந்தேன். இடையில, உன்னோட வண்டி மிஸ் ஆனப்போ, ஊருக்கு போயிருந்தேன் இல்லையா” என்று அவன் நிறுத்த, சலனமே இல்லை பவித்ராவிடம்.

“அங்கே அடிபட்டு கிடந்தது என்னோட பிரெண்ட் எபினேசர். ஆக்சிடெண்ட்னு செட்டப் பண்ணி அவனை அடிச்சு போட்டது உன்னோட அப்பா வில்வநாதன். அவனுக்கு அடிபட்டு நான் சென்னை வந்தபிறகு தான் எனக்கு இதெல்லாம் தெரிய வந்தது.

உன் அப்பா பண்ண வேலைக்கு அவரை ஏதாவது செஞ்சாகணும்னு ஒரு வெறி. அந்தாளை பத்தி அத்தனை விஷயத்தையும் தோண்டி எடுத்தேன். அப்போதான் பவித்ரா யார்னு தெரிய வந்தது… ஆனா, தெரிஞ்ச விஷயம் என்னை நிம்மதியா இருக்க விடல.

இன்னுமின்னும் என்னோட கோபமும், வெறியும் அதிகமானது தான் மிச்சம். நீயும் என்னை ஏமாத்திட்டியோன்னு கண்மண் தெரியாத கோபம் . ஆனா, பொறுமையா யோசிச்சு பார்த்தப்போ, உன் கண்கள்ல இருந்த காதல் பொய்யில்லைனு தெளிஞ்சுட்டேன். உன்கிட்ட எல்லா விஷயங்களையும் பேசி தீர்த்திடணும்னு தான் நினைச்சேன்.”

“ஆனா, வில்வநாதன் விடறதா இல்லை. உன் அப்பா அவரை காப்பாத்திக்க என்ன செய்யணுமோ அத்தனையும் செய்ய தொடங்கிட்டார் பவி. எபியோட குடும்பத்தையே இல்லாம பண்ண முடியும் அவரால. நான் என்ன நியூஸ் போட்டாலும், அது எதற்கும் ஆதாரம் இல்லாம பண்ண முடியும் வில்வநாதனால.”

“எபியோட குடும்பத்தை காப்பாத்துறதுக்கும், உன் அப்பாவை ஒன்னுமில்லாம பண்றதுக்கும்  ஒரே  கல்யாணம் தான். அதை  எனக்கு வேற வழி தெரியல. உன் அப்பாவோட ஆட்டத்தை அடக்கி வைக்க இந்த கல்யாணம் தேவையா இருந்தது பவி.”

“உன் அப்பாவும் லேசுப்பட்டவர் இல்ல. என்னோட கெஸ்சிங் சரியா இருந்தா, அவர் நம்மை மோப்பம் பிடிச்சுட்டார். அவர் நேரடியா இன்வோல்வ் ஆக வேண்டாம்னு தான் பரணியை உன்கிட்ட பேச அனுப்பியது.”

“நான் உன் அப்பாவுக்கு எந்த வாய்ப்பும் இனி கொடுக்கறதா இல்ல பவி. நான் முந்திக்கணும்னு நினைச்சேன்.” என்று முடித்து வருண் ஆதித்யன் பவித்ராவின் முகத்தைப் பார்க்க, அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள். ஆனால், பார்வையில் நிறைந்திருந்தது மொத்தமும் நிராசை தான்.

“இப்படி பார்க்காத பவி. நான் தப்பானவன் இல்ல” என்று வருண் மன்றாட,

“பரணி என்னை பார்க்க வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்?”  என்றாள் பவித்ரா.

“உன்னோட அசைவுகள் அத்தனையும் எனக்கு தெரியும் பவி”

“வேவு பார்த்தீங்களா?” என்று சூடாக அவள் கேட்டுவிட,

“என் பொண்டாட்டி எப்படி இருக்கிறான்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். உன்னோட பாதுகாப்பு உன்னைவிட எனக்கு முக்கியம் இல்லையா?”

“பொண்டாட்டியா. வில்வநாதனை பழிவாங்க உங்க கைக்கு கிடைச்சிருக்க பகடைக்காய். அப்படி சொல்லுங்க. அதுதானே பொருத்தமா இருக்கும்”

“வில்வநாதனை பழிவாங்குற அளவுக்கு எனக்கும் அவருக்கும் சொந்த பகை எதுவும் இல்ல பவி. அவர் பண்ண தப்புக்கு தண்டனை கிடைக்கணும். அவர் தப்பிக்க கூடாதுன்னு நினைக்கிறேன். உன்னை வச்சு அவரை பழிவாங்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்ல. எனக்கு நீ வேணும். உன்னை என்னால விட முடியாது. அதுமட்டும்தான் நம்மோட கல்யாணத்துக்கு காரணம்”

“இதை நம்ப முடிஞ்சா நல்லா இருக்கும்”

“என்ன நம்ப முடியல உன்னால? வில்வநாதனை பத்தி உனக்கு நான் சொல்லனுமா?”

“விஷயம் வில்வநாதனை பத்தி இல்ல வருண். என்னைப்பத்தி… எனக்கும் உங்களுக்குமான உறவைப்பத்தி. நம்மோட இந்த கல்யாணத்தை பத்தி”

“பவி நான் நடந்தது அத்தனையும் உங்கிட்ட சொல்லிட்டேன்.”

“உங்க காரியங்கள் அத்தனையும் முடிஞ்சபிறகு சொல்லி இருக்கீங்க. நான் மொத்தமா உங்க கைகளுக்குள் வந்தபிறகு சொல்லி இருக்கீங்க”

“உன்னை அப்படியெல்லாம் பிடிச்சு வைக்க முடியாதுன்னு எனக்கு தெரியாதா பவி”

“அப்போ எதுக்காக இந்த அவசரகல்யாணம்”

“என்னைப்பத்தி உனக்கு தெரிய வரும்போது நீ என்னையும் யோசிக்கணும்னு நினைச்சேன். மொத்தமா சுயநலம் தான். ஆனா, நீ நினைக்கிற மாதிரி இல்ல. என் அம்மும்மாவை பிரியக்கூடாதுன்னு மட்டும் தான் நினைச்சேன்” என்று வருண் விளக்க,

“என்னை உயிரோட கொன்னுட்டு இருக்கீங்க வருண் நீங்க”

“பவிம்மா”

“என்னை ஏன் இப்படி ஏமாத்தினீங்க.” என்று அவள் கத்த,

“பவி நான் சொல்றதை புரிஞ்சிக்கோடா”

“நான் ஏன் புரிஞ்சிக்கணும் உன்னை. எத்தனை முறை கேட்டு இருப்பேன். எதுக்காக இப்படி அவசரப்படறீங்கன்னு. ஒரே ஒரு முறை என்கிட்ட உண்மையை சொல்லி இருக்கலாம்ல. என்னைப்பத்தி எல்லாமே விசாரிச்சு இருப்பீங்க. என்னோட வலியும், வேதனையும் எப்படி உங்களுக்கு புரியாம போச்சு”

“பவிம்மா எதுவுமே தப்பா போகலைடா”

“எல்லாமே தப்புதான் வருண். உங்களை நான் பார்த்ததே தப்பு. உங்களை பிடிக்கவே இல்ல எனக்கு.” என்றவளுக்கு பதில் சொல்ல முடியாமல் நின்றான் வருண்.

“நான் கிளம்புறேன். என்னால இனி ஒருநிமிஷம் கூட இங்கே இருக்க முடியாது. இனி எக்காரணம் கொண்டும் என்னை தேடி வராதீங்க.” என்றவள் எழுந்துகொள்ள,

“நான் இவ்ளோ சொல்றேனே. கொஞ்சமாவது புரிஞ்சிக்க ட்ரை பண்ணேன் பவி. நம்ம நல்லதுக்காக தான் இதை செஞ்சேன்டா”

“உங்களோட நல்லதுன்னு சொல்லுங்க வருண். பொருத்தமா இருக்கும்”

“நீ இல்லாம எனக்கு எந்த நல்லதும் இல்ல பவி.”

“இப்படியெல்லாம் பேசி இனியும் என்னை ஏமாத்த வேண்டாம். இதுக்குமேல எதுவும் இல்ல என்கிட்ட.”

“நான் சொல்றது மொத்தமும் நீ தப்பாவே பார்க்கிற பவிம்மா. நான் உன்னோட வருண் தானே. கொஞ்சம் யோசியேன். நான் உன்னை ஏமாத்த நினைப்பேனா?”

“சரி என்னை ஏமாத்த நினைக்கல. ஆனா, என்ன செய்ய நினைச்சிங்க. நிச்சயமா உங்களோட பிளான் இது மட்டும் இல்ல வருண். முழுசா சொல்லி முடிங்க” என்றவளை மெச்சுதலாக பார்த்தான் வருண்.

“என் பொண்டாட்டிக்கு அங்கீகாரம் கிடைக்கணும்னு நினைச்சேன். உன்னை வச்சு வில்வநாதனோட முகத்திரையை கிழிக்கணும்னு நினைச்சேன். எபியை இந்த விஷயத்துக்குள்ள கொண்டு வராம உன்னை வச்சே வில்வநாதனையும், அவன் பதவியையும் காலி பண்ண முடிவு பண்ணேன்” என்று உறுதியாக வருண் கூறி முடித்திட,

“இதுதான் உங்களுக்கு பொருத்தமா இருக்கு. இப்போதான் உண்மையை பேசறீங்க நீங்க. ஆனா, ஒரு விஷயம் மறந்துட்டீங்க. எனக்கான அங்கீகாரத்தை எவனும்… ஏன் நீங்ககூட கொடுக்க வேண்டாம். வில்வநாதனை முடிக்க நினைச்சதெல்லாம் உங்களோட தனிப்பட்ட விஷயம். என்னை உங்க ஆட்டத்துக்கு உபயோகப்படுத்த நினைச்சது தப்பு.”

“உங்க வேலைக்கு நான் சரியா வரமாட்டேன்.”

“உன் அப்பா அவ்வளவு நல்லவரா பவி. அந்தாள் மேல இவ்ளோ பாசமா உனக்கு”

“நல்லவங்கன்னு நினைக்கிற எல்லாரும் நல்லவங்களா இருக்கிறது இல்லையே.”

“நீ என்மேல இருக்க கோபத்துல கண்ணை மூடிட்டு பேசிட்டு இருக்க பவி”

“உங்கமேல கோபப்பட இனி எதுவும் இல்ல. இனி என்னை பார்க்க வராதீங்க.” என்றவள் வாசலை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க,

“அதற்கெல்லாம் வாய்ப்பே இல்ல பவி. என் பொண்டாட்டி நீ. இனி உன்னை அப்படியெல்லாம் விட முடியாது.”

“வேற என்ன பண்ணுவீங்க. உங்களால என்னை பிடிச்சு வைக்க முடியாது வருண்”

“நானும் உன்னை பிடிச்சு வைக்க நினைக்கல. ஆனா, இனி என்ன நடந்தாலும் நீ என்னோட மனைவி மட்டும் தான். அது மாறாது. மனசுல வச்சுக்கோ” என்றவனை பார்த்து பவி நக்கலாக சிரிக்க,

“நீ என்ன பிளான் பண்ணாலும், என்னை மீறி எதுவும் செய்ய முடியாது பவி. அதிகமா யோசிக்காத” என்று வருண் எச்சரிக்கை செய்ய,

“இனி நீ என்னை தேடி வரக்கூடாது. என்மேல சத்தியம் இது” என்று அழுத்தம் திருத்தமாக கைவிரல் நீட்டி எச்சரித்து பவித்ரா வெளியேற,

“பவி” என்று அவளை அதட்டியபடியே அவள் பின்னால் நடந்தான் வருண்.

வாசலுக்கருகில் பவியின் கையை அவன் பிடித்துவிட, “இதோட விட்டா அட்லீஸ்ட் உயிரோட மட்டுமாவது இருப்பேன்.” என்று வலித்த குரலில் பவித்ரா கூறிவிட, அதற்குமேல் அவளை வாட்ட மனம் வராமல், அவள் கையை விட்டுவிட்டான் வருண்.

கையில் பணமும் இல்லாமல், அலைபேசியும் இல்லாமல் கோபத்தில் அவள் விறுவிறுவென வெளியே வந்துவிட, அதன்பிறகே சூழல் உரைத்தது. ததும்பிய கண்ணீருடன் அவள் தடுமாறிய நேரம், அவள் அருகே காரை நிறுத்தி இருந்தான் வருண்.

“உன்னை உன் ஹாஸ்டல்ல இருந்து நான் தானே கூட்டிட்டு வந்தேன். அங்கே விடறேன் வா” என்றவன் மீது கோபம் வந்தாலும், வேறு வழியில்லாமல் மீண்டும் அவன் காரில் ஏறி இருந்தாள் பவித்ரா.

விடுதியின் வாசலில் அவளை இறக்கி விட்டவனை திரும்பியும் பாராமல் அவள் நடக்க, பெருமூச்சொன்றை வெளியேற்றியபடி மெதுவாக காரை நகர்த்தினான் வருண் ஆதித்யன்.

தெரியாமல் செய்ததெல்லாம் இல்லை. அத்தனையும் அவன் தெரிந்தே செய்தவை தான். அதன் விளைவுகளையும் அவன் அனுபவித்து தானே ஆக வேண்டும்.

இது அத்தனையும் அவன் எதிர்பார்த்தது தான் என்றாலும், இந்த நிமிடம் பவித்ராவின் கண்ணீர் அவன் எதிர்பார்த்திருந்ததை விட அதிக வலி கொடுத்தது அவனுக்கு. ஆனால், இதற்கெல்லாம் யோசித்து கொண்டிருந்தால், அவன் காரியம் நடந்தேறாது என்று தன்னை தேற்றிக் கொண்டபடியே வீடு வந்து சேர்ந்தான் அவன்.

அதே நேரம்… அத்தனையும் கடந்த ஒரு விரக்தி நிலையில் தனது அறையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா. வருணைப் பற்றி அவள் அறிந்தவை அவளது நிம்மதியை மொத்தமாக குலைத்துப்போட்டிருக்க, கண்ணீர் கூட மறந்து போயிருந்தது.

இருவருமே ஏதோ ஒருவகையில் அடுத்தவரைக் குறித்து சிந்தித்தபடி அமர்ந்திருக்க, இருவரும் பொதுவாக மறந்திருந்த நபர் வில்வநாதன். ஆட நினைத்தவனும் அவரை எளிதாக எடை போட்டிருக்க, இவர்களின் கணிப்பிற்கு எல்லாம் அப்பாற்பட்டவர் அவர் என்பதை நிரூபிக்க நேரம் பார்த்து கொண்டிருந்தார் வில்வநாதன்.