அந்த மருத்துவக்கல்லுரியின் வளாகத்தில் இருந்த கேன்டீனில் அமர்ந்திருந்தனர் கீர்த்திவாசனும், பவித்ராவும். பேச வேண்டுமென்று கீர்த்தியை இழுத்து வந்திருந்தாள் பவித்ரா. முக்கியமான வகுப்பை கூட புறக்கணித்துவிட்டு பவித்ராவுடன் அவன் வந்திருக்க, அவர்கள் அங்கு வந்து அரைமணி நேரம் கடந்த பின்பும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பவளை என்ன செய்வது என்று புரியாமல் தான் பார்த்திருந்தான் கீர்த்திவாசன்.
அவள் முகமும் தெளிவாக இல்லை என்பது பார்த்தவுடனே புரிந்திருக்க, அவளாக சொல்லட்டும் என்று தான் இத்தனை நேரம் காத்திருந்தான். ஆனால், தற்போது அவனது பொறுமை எல்லை மீறிட, “எதுக்கு பவி என்னை இழுத்துட்டு வந்த?” என்று வாய் திறந்தான் கீர்த்தி.
“பேசணும் கீர்த்தி…” என்று அதற்கு மட்டும் பதில் வந்தது.
“இதை சொல்லிதான் அரைமணி நேரமா உட்கார வச்சிருக்க. சொல்லி தொலைடி” என்று அவள் மண்டையில் ஒரு கொட்டு வைத்தான் கீர்த்தி.
தலையை தடவிக் கொண்டே, “அடிக்காதடா…” என்று அவள் சினுங்க,
“என்னனு சொல்லி தொலை பவி”
“நான் யாரையாவது காதலிக்கிறேன்னு சொன்னா என்ன ஆகும்?”
“சென்னையில சுனாமி வரும். வேண்டாம் சென்னை பாவம் விட்டுடு”
“விளையாடாத கீர்த்தி”
“முதல்ல நீ என்ன விஷயம்னு தெளிவா சொல்லு” என்று கீர்த்திவாசன் முறைக்க,
“உனக்கு வருண் ஆதித்யன் நியாபகம் இருக்கா?”
“நீ ஹாஸ்பிடல்ல சேர்த்த வருணா”
“ம்ம்ம்”
“அவனுக்கு என்ன” என்றவன் பார்வை கூர்மையாக பவித்ராவின் மீது படிந்தது.
“ஹி ப்ரோபோஸ்ட் மீ” என்ற பவித்ராவை கீர்த்தி அசையாமல் பார்த்திருக்க,
“சாரி” என்றாள் பவித்ரா.
“இதெல்லாம் எப்போ நடந்தது?” என்றவனிடம், நடந்த விஷயங்களை மேலோட்டமாக அவள் கூறி முடிக்க,
“உனக்கு என்ன தோணுது?” என்றான் கீர்த்தி.
“எனக்கு பெருசா காதலெல்லாம் இருக்கா தெரியல. ஆனா, அவனோட இருக்க நேரங்கள்ல, என்னை என்னால மறக்க முடியுது கீர்த்தி. அந்த நேரங்கள் பிடிச்சிருக்கு” என்று சிறுபிள்ளையாய் கூறியவளைக் கண்டு எப்போதும்போல் மனம் இரங்கியது கீர்த்திக்கு.
“அப்புறம் என்ன? லவ் பண்றேன்னு சொல்லிட வேண்டியது தானே” என்று அவனும் இலகுவாகவே கேட்க,
“நீதான் வருணை மறந்து பேசிட்டு இருக்க. உன்னையும் வருணையும் மட்டும் யோசி. வருண் உன்னை உண்மையாவே காதலிக்கிறதா இருந்தால், நீ எதைப்பத்தியும் கவலைப்பட வேண்டியது இல்ல. எல்லாத்தையும் அவர் ஹாண்டில் பண்ணுவாரு. அவர் இருக்க இடம் அப்படி”
“ஆனா, வருணோட காதல் உண்மையா… உனக்காக நிற்பாரா? அதை மட்டும் யோசிச்சுக்கோ” என்று கீர்த்தி அறிவுறுத்த,
“நிச்சயமா நான் ஏமாறமாட்டேன் கீர்த்தி. வருணோட கண்கள்ல எனக்கு பொய் தெரியல.”
“வருண் பொய் சொல்லல ஓகே. நீ எல்லா உண்மையையும் சொல்லிட்டியா?” என்று அவன் நினைவூட்ட, லேசான பரிதவிப்புடன் தான் பார்த்தாள் அவள்.
“நீ இப்படி பதறணும்னு நான் சொல்லலடா… ஆனா, நீ சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களும் வருணுக்கு தெரிஞ்சிருக்கணும்னு சொல்றேன். வில்வநாதன் எதுவும் விளையாடி வைக்கிறதுக்கு முன்னாடி நீ பேசிடனும். உன்னைப்பத்தி எல்லாமும் வருணுக்கு தெரிஞ்ச பிறகும், அவரோட காதல் இப்படியே இருந்தால், மேற்கொண்டு யோசிக்கலாம்” என்று கீர்த்தி நிதர்சனம் உரைக்க, அப்போதுதான் யாரோ மண்டையில் அடித்தது போல் உணர்ந்தாள் பவித்ரா.
‘இதை எப்படி மறந்தோம்’ என்று அவள் யோசிக்கையில், மேசையின் மீது இருந்த அவளது வலது கையைப் பிடித்து அழுத்தினான் கீர்த்தி.
பவித்ரா அவன் முகம் பார்க்க, “இப்படி இருக்காத பவி. இது ஒரு விஷயமே இல்ல. இதுல உன்னோட தவறு என்ன இருக்கு? வருண் புரிஞ்சிப்பார்” என்றான் அவன்.
“ம்ம்ம்” என்று தலையாட்டிக் கொண்டாலும், என்னவோ மனது அலைபாய தொடங்கிவிட்டது பவித்ராவுக்கு.
“வருணுக்கு புரியும் இல்ல கீர்த்தி” என்று அவள் ஐயம் கொள்ள,
“கண்டிப்பாடா” என்று அவளை தேற்றினான் கீர்த்திவாசன்.
மனம் தெளிந்தவளாக அவனிடம் விடைபெற்றுக் கொண்டவள் தனது விடுதிக்கு கிளம்பினாள் பவித்ரா. கீர்த்தியிடம் பேசிய பின் மனம் சற்று இயல்பாகி இருக்க, அன்றிரவு வருண் அலைபேசியில் அழைத்தபோதும் தெளிவாகவே பேசினாள்.
“நீங்க காதலிக்கிற பெண்ணை பத்தி பேசணும். கண்டிப்பா பேசணும்.” என்று தனது உறுதியை அவள் குரலில் காண்பிக்க,
“ஓகே பவி. நாளைக்கு நான் வரேன்” என்று முடித்தான் வருண்.
எங்கே, எப்போது சந்திக்கலாம் என்று எதையும் தெளிவாக கூறாமல், “வரேன்” என்று அழைப்பை துண்டித்துவிட்ட அவன்மீது கோபம் வந்தாலும், “நாளை என்ன பேச வேண்டும்” என்று யோசித்ததில் கோபத்தை மறந்து போனாள் பவித்ரா.
மனம் எங்கிலும் அதே சிந்தனையாக இருக்க, அந்த நாள் உறங்கா இரவாகவே கழிந்து போனது அவளுக்கு. அடுத்தநாள் காலையில் கண் எரிச்சலுடன் வகுப்பறைக்கு வந்து அமர்ந்துகொண்டாலும், கவனம் என்னவோ பாடத்தில் பதிவதாக இல்லை.
இதுவரை இப்படி நிகழ்ந்ததே இல்லை அவளுக்கு. அவளது படிப்பை காட்டிலும், வேறெதுவும் அவள் கவனத்தில் முக்கியத்துவம் பெற்றதே இல்லை. இன்று வருண் அவளை எதையும் சிந்திக்கவிடாமல் அலைக்கழிக்க, அதற்குமேல் வகுப்பில் அமர முடியாமல் எழுந்து வெளியே வந்துவிட்டாள்.
மருத்துவக்கல்லூரியின் வளாகத்தில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டவள், வலது கையால் தலையை தாங்கிக்கொள்ள, சரியாக அதே நேரம் அவளுக்கு அழைத்தான் வருண் ஆதித்யன். அவனது அழைப்பை ஏற்றவள், “ஹலோ” என்பதற்கு முன்னமே,
“ம்ம்ம்” என்று பவித்ரா தலையசைக்க, “வா…” என்று அழைப்பைத் துண்டித்தான் அவன். ஆனாலும், பார்வை அசையாமல் அவள்மீதே படிந்திருக்க, பவித்ராவுக்கும் வேறேதும் யோசிக்க முடியாத நிலை. இந்த அலைப்புறுதல்களில் இருந்து விடுபட ஒரேவழி அவனிடம் பேசிவிடுவது தான் என்று புரிய, எழுந்து அவனது காரை நோக்கி நடந்தாள் அவள்.
பவித்ரா காரில் அவன் அருகில் அமரும்வரை பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை வருண். அவன் பார்வையில் தடுமாறியவளாக, “என்ன” என்று பவித்ரா கேட்க, தலையை உதறிக்கொண்டே “நத்திங்” என்று காரை எடுத்தான் அவன்.
கார் சென்னையின் போக்குவரத்தில் தவழ்ந்து கடற்கரைச் சாலையை பிடித்துவிட, அதுவரையும் மௌனம் தான் பேசிக் கொண்டிருந்தது அங்கே.
“எங்கே போறோம் வருண்”
“சொல்லியே ஆகணுமா” என்றவன் வார்த்தைகளில் அதன்பின் வாயைத் திறக்கவே இல்லை அவள்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திறந்தவெளியில் அமைந்திருந்த மத்ஸ்ய நாராயணர் கோவிலுக்கு தான் அழைத்து வந்திருந்தான் வருண். கோபுரம் இல்லாமல், சுற்றுசுவர்கள் இல்லாமல் 108 தூண்களுடன் மிடுக்காக நின்றிருந்தார் மச்ச நாராயணர்.
கடற்கரையின் அருகிலேயே அமைந்திருந்ததால் ஓயாது ஒலித்த அலையின் சத்தமும், பின்மதிய நேர மிதமான வெயிலும் அந்த இடத்தை ரம்யமாக்கியிருக்க, பவித்ராவின் மனநிலைக்கு சற்றே இதமாக இருந்தது சூழல். இருவரும் காரை விட்டு இறங்கி அந்த கோவிலின் ஒரு தூணுக்கு அருகில் சென்று அமர, “இப்போ சொல்லு” என்றான் வருண்.
அவன் கேட்கவும், “ஹான்” என்று பவித்ரா விழிக்க,
“மேடம்… பேசணும்னு சொன்னிங்க” என்று நினைவுபடுத்தினான் வருண்.
“கண்டிப்பா பேசணும் வருண். பேசியே ஆகணும்” என்றவளுக்கு ‘எப்படி சொல்வது’ என்பது புரியவேயில்லை.
‘எப்படி எடுத்துக் கொள்வானோ’ என்பதே அவளை ஆட்டி வைக்க, வாய் திறக்கவே அஞ்சியவளாக தான் அமர்ந்திருந்தாள் பவித்ரா.
ஐந்து நிமிடங்கள் கடந்தபின்னும் அவள் இதையே தொடர, “நான் பேசவா” என்றான் வருண்.
“ஹ்ம்ம்” என்று அவள் புரியாமல் விழிக்க,
“இந்த வருணும் பவித்ராவும்தான் நிதர்சனம் பவி. இந்த நிமிஷம் நமக்கானது. எனக்கு பவித்ராவை பிடிச்சிருக்கு. நீ என்னோட உயிரை காப்பாத்தினது எல்லாம் ஒரு விஷயமே இல்ல பவி. நிச்சயமா அதற்காக எல்லாம் உன் பின்னாடி வரல நான்.”
“யார் என்னன்னே தெரியாத எனக்காக அந்த நடுராத்திரில நீ தவிச்ச தவிப்பும், நீ எடுத்த ரிஸ்க்கும் பிடிச்சிருக்கு. யாரோ ஒருத்தன் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டோம், முடிஞ்சதுன்னு போகாம, வைப்னு சைன் பண்ணி, எனக்கு டிரீட்மென்ட் பண்ணியிருக்க.”
“உன்னோட அந்த மெனக்கெடல், அடுத்த உயிருக்காக துடிக்கிற உன்னோட குணம்… இதெல்லாம் தான் என்னை கட்டி வைக்குது. நான் யார்னு சொன்னதுக்கு பிறகும் கூட, பெருசா அலட்டிக்கவே இல்ல நீ… எனக்கு இந்த பவித்ராவை பிடிச்சிருக்கு. இந்த பவித்ரா மட்டும் போதும்னு சொல்ற அளவுக்கு பிடிச்சுருக்கு. என் வாழ்க்கைக்கு இது மட்டும் போதும்.”
“இந்த பவித்ராவுக்கும் என்னை பிடிச்சிருந்தா…” என்றவன் தனது வலது கையை அவளுக்கு முன்னே நீட்ட, “வருண்…” என்று அப்போதும் தயங்கினாள் பவித்ரா.
“பிடிச்சிருந்தால் நம்பி கையை பிடிச்சுக்கலாம். எதுக்காகவும், எப்பவும் விடமாட்டேன். ஐ ப்ரோமிஸ்.” என்றான் வருண்.
பவித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்க, அவளது மடியில் இருந்த அவளது வலக்கரம் நடுங்கி கொண்டிருந்தது.
“எதைப்பத்தியும் யோசிக்கவேண்டாம் அம்மும்மா. வருண் பிடிச்சிருந்தா பிடிச்சுக்கோ. என்ன வந்தாலும் பார்த்துக்கலாம்” என்று மீண்டும் அவன் பேச, நடுங்கும் தன் கரத்தை மெல்ல உயர்த்தி, வருணின் வலதுகரத்தின் மீது வைத்திருந்தாள் பவித்ரா.
அந்த நொடியில் பவித்ராவின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்ட வருண், அவளது கரத்தை மொத்தமாக தன் கைக்குள் புதைத்துக்கொள்ள, அவன் விரல்களின் அழுத்தத்தில் அவன் முகம் பார்த்தாள் பவித்ரா.
அவள் பார்வை அவன் கண்களை சந்தித்த நொடியில் அவளது கையின் மீது அழுத்தமாக தனது இதழ்களை படித்து எடுத்தவன், “எப்போ வருண்கிட்ட சொல்லலாம்னு தோணுதோ, அப்போ சொல்லலாம். சொல்லியே ஆகணும்னு எந்தவித கட்டாயமும் இல்ல அம்மும்மா. எனக்கு என் பவி போதும்” என்று முடித்துவிட, “வருண்” என்று அவனது தோள் சாய்ந்துவிட்டாள் பவித்ரா.
தனது முகத்திற்கு வெகு அருகில் இருந்த அவளது நெற்றியில் இதழ்பதித்து, “தேங்க்ஸ் பொண்டாட்டி” என்றான் வருண்.
அவனது வார்த்தையில் மெல்ல சிரித்தபடி அவள் அமர்ந்திருக்க, அவளைத் தோளோடு அணைத்துக் கொள்ள முயன்றான் வருண்.
“கோவில்ல இருக்கோம் வருண்” என்று பவி நகர்ந்து அமர,
“எங்கே இருந்தாலும் என் பொண்டாட்டி தான்மா” என்று சிரித்தான் வருண்.
“இதை விடவே மாட்டீங்களா”
“என் பொண்டாட்டியை நான் ஏன் விடணும். இப்போதான் விடமாட்டேன்னு சத்தியம் வேற பண்ணியிருக்கேன் பவி” என்று வெகு தீவிரமாக கூறினான் வருண்.
“நல்லா பேசறீங்க.” என்று அவனை கிண்டலடித்தவள், “கிளம்புவோம்” என்று எழுந்துவிட்டாள்.
“எங்கே மேடம்?”
“ஹாஸ்பிடல் போகணும் வருண். ஈவினிங் டியூட்டி இருக்கு” என்று பாவமாக அவள் கூற, மறுத்து ஏதும் பேசாமல் அவளுடன் நடந்தாலும், வழியில் இருந்த ஒரு உணவகத்தில் அவளை உண்ணவைத்த பின்னரே அவளது மருத்துவமனையில் அவளை விட்டுச் சென்றான் வருண்.
இருவரின் முகத்திலும் புன்னகை மட்டுமே நிறைந்திருக்க, அதன் அளவீடுகள் ஆளுக்கேற்றாற்போல் மாறி இருந்தது. பவித்ரா அன்று பணிநேரம் மொத்தமும் ஒரு மோனநிலையிலேயே இருக்க, சரியாக அவளது வேலை முடியும் நேரம் அந்த மருத்துவமனையின் வாயிலில் காத்திருந்தான் வருண்.
பவித்ரா தன் வழக்கமாக பணி முடிந்து வெளியில் வந்தவள் தனது வண்டியை காணாமல் ஒரு நொடி திணற, அப்போதுதான் மதியம் வருணுடன் வந்து இறங்கியது நினைவுக்கு வந்தது. முகம் மீண்டும் புன்னகைக்கு மாறிவிட, மதியம் நடந்த நிகழ்வுகளை அசைபோட தொடங்கிவிட்டது மனம்.
தன்னில் மூழ்கிப் போனவளாக அவள் நடக்க, திடீரென யாரோ கையைப் பிடித்து இழுத்து நிறுத்தியதில் பதறித் திரும்பினாள் அவள்.
அவளது பதற்றத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் நிறைவான புன்னகையுடன், “என்ன மேடம் கனவா” என்றவன் வருண் ஆதித்யனே தான்.
வழக்கமாக காரில் வருபவன் அன்று அந்த நவீன ரக இருசக்கர வாகனத்தில் வந்து நிற்க, ஒன்றும் புரியவில்லை பவித்ராவிற்கு.
“இந்த நேரத்துல இங்கே எப்படிப்பா” என்று அவள் திக்கி திணற,
“என் பொண்டாட்டியை ஹாஸ்டல்ல விட வந்தேன்மா” என்று சிரித்தான் வருண். பவி இன்னும் தெளியாமல் நிற்க, “ம்ம்ம்ம்” என்று வண்டியில் ஏறும்படி தலையசைத்தான் அவன்.
சிரிப்புடன் அவள் பின்னால் அமர்ந்துகொள்ள, அன்று இரவு உணவும் வெளியிலேயே முடிந்திருந்தது. சரியாக பத்து மணிக்கு அவளது விடுதியின் வாயிலில் அவளை இறக்கிவிட்டவன் அதன்பிறகே கிளம்பினான்.
பவித்ராவுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தாலும், அடுத்து என்னவென்று யோசிக்க தேவையில்லாத இந்த நிலை கொஞ்சமே கொஞ்சம் பிடித்திருந்தது. விடுதி அறைக்கு வந்தபின்னும் வருணின் நியாபங்களே நிறைந்திருக்க, இப்போதெல்லாம் இதுவே வாடிக்கையாகி விட்டது என்று தன்னையே கடிந்து கொண்டாள் அவள்.
அன்று இரவிலும் வருண் அலைபேசியில் அழைக்க, இருவரும் உறங்கச் செல்லும் போது நேரம் நடுநிசியைத் தாண்டி இருந்தது. இதேநிலை அடுத்தடுத்த நாட்களும் தொடர, ஓரளவு தெளிவாக இருந்தாள் பவித்ரா.
அவளது கல்லூரி, மருத்துவமனை பணி, வருணின் காதல் என்று அவள் நாட்கள் சற்று இனிமையாக நகர தொடங்கி இருந்த நேரம் அவளை சந்திக்கவென்று வந்து நின்றான் பரணிச்செல்வன். அவளது மூத்தவன். வில்வநாதன் – வத்சலாவின் வாரிசு.
வந்தவனுக்கு எப்போதும் பவித்ராவின் மீது பெரிதாக பாசமோ, அக்கறையோ எதுவுமே இருந்தது கிடையாது. ஆனால், இன்று அவன் வந்தது அவளை எச்சரிக்கை செய்ய. அதுவும், ‘வருணை நம்ப வேண்டாம்’ என்று கூறிச் செல்லவே வந்திருந்தான் பரணிச்செல்வன்.