அன்புள்ள தவறே 08

அதிகாலை மூன்று மணி விமானத்தில் தூத்துக்குடி வந்து சேர்ந்திருந்தான் வருண் ஆதித்யன். அந்த பகுதியைச் சேர்ந்த அவனது பத்திரிக்கை நிருபர் ஒருவர் மருத்துவமனையில் இருக்க, அவருக்காக அந்த நேரத்தில் கிளம்பி வந்திருந்தான் அவன். விமான நிலையத்தில் அவனது நண்பர்கள் சிலர் நிற்க, அவர்கள் எடுத்து வந்திருந்த காரில் ஏறி திருநெல்வேலியில் அமைந்திருந்த அந்த தனியார் மருத்துவமனையை அடைந்தான் வருண்.

அங்கே படுக்கையில் சுயநினைவில்லாமல் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அவனது நெல்லை மாவட்ட நிருபர் மட்டுமல்ல அவனது உயிர்த்தோழன் எபினேசர்.

அவனை அந்த நிலையில் காண முடியாமல் கண்கள் கலங்கியவனாக வருண் அந்த அறையை விட்டு வெளியேறிவிட, அவனது கண்கள் கலங்கி சிவந்து போய் இருந்தது. “எபிக்கு ஆக்சிடென்ட்” என்று எபினேசரின் தந்தை நடுஇரவில் அழைத்திருக்க, பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து நேரே கிளம்பி நெல்லை வந்திருந்தான் வருண்.

எபினேசரின் குடும்பம் அழுது ஓய்ந்தவர்களாக அந்த மருத்துவமனையின் ஒரு ஓரம் முடங்கி அமர்ந்துவிட்டிருக்க, அவர்களுக்கு அருகே சென்று அமர்ந்தான் வருண். எபினேசரின் தாய் “வருண்… அவனை பார்த்தியா? ஒரே நாள்ல என் மகன் இப்படியாகிட்டானே. இதுக்கு என்னை எடுத்துட்டு போயிருக்கலாமே. கர்த்தரே”என்று கதற, அவரை அணைத்தபடி அவர் அருகிலேயே அமர்ந்து கொண்டாலும், அவனது மனம் மெல்ல தெளிய தொடங்கி இருந்தது.

“எப்படி விபத்து நேர்ந்தது? விபத்துதானா?” என்று ஆயிரமாயிரம் கேள்விகள் அவனுள். எதையோ தன்னுள் சிந்தித்தபடி அமர்ந்திருந்தவன், “நீங்க இங்கே இருங்கப்பா. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டான்.

நேரத்தைப் பற்றி கவலைகொள்ளாமல் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தவன் அந்த இடத்தை நிதானமாக அலசி ஆராய்ந்து, அங்கிருந்து நெல்லை மாவட்ட காவல் ஆணையரை சந்தித்து பேசி, சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள, நடந்தது விபத்துதான் என்று நம்பும்படி தான் இருந்தது.

குடிபோதையில் மணல் லாரியை ஓட்டிவந்தவன் சாலையில் சென்று கொண்டிருந்த எபினேசரின் வண்டியைத் தட்டியிருக்க, நிலைதடுமாறி நடுச்சாலையில் விழுந்தவனின் மீது அரசுப்பேருந்து ஏறி இறங்கியிருந்தது. அங்கிருந்தவர்களும், அந்த பேருந்தின் ஓட்டுனரும் சேர்ந்து அவனை மருத்துவமனையில் சேர்த்திருக்க, மருத்துவர்களால் அவனது உயிரை மட்டுமே காப்பாற்றியிருக்க முடிந்தது.

இரண்டு கால்களும் மொத்தமாக நசுங்கியிருக்க, இனி நடக்கவே முடியாது எனும் நிலையில் தான் இருந்தான் எபினேசர். வருண் அன்று முழுவதும் அந்த மருத்துவமனையிலேயே இருக்க, ஒருவழியாக இரவு நேரம் தான் கண்விழித்தான் அவனது நண்பன்.

தனது கால்களை கண்ட நொடி தாள முடியாமல் கதறியவனை உடன் இருந்தவர்கள் ஆறுதல்படுத்த, இறுதியில் தூக்கத்திற்கு மருந்து கொடுத்து மீண்டும் உறங்கவைக்கப்பட்டான் எபினேசர். அன்று மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு நாட்களும் அவர்களுடனே இருந்த வருண் ஆதித்யன் அவர்களுக்கான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தபின் தான் அங்கிருந்து கிளம்பினான்.

கிளம்புவதற்கு முன் எபினேசரிடமும் அவன் வெகுநேரம் பேசியிருக்க, அதன் விளைவாக ஓரளவு தெளிந்திருந்தான் எபினேசர். தங்கையின் திருமணம், தனது பொருளாதார நிலை, எதிர்கொள்ள வேண்டியிருந்த மருத்துவச்செலவுகள் என்று அத்தனையும் தினசரி தீ பொறுப்பேற்றுக் கொள்ளும் என்று வருண் உறுதியளித்திருக்க, அதுவே பெருமளவு எபினேசரை மீண்டுவர செய்திருந்தது.

இரவு பத்துமணி அளவில் நெல்லையில் இருந்து கிளம்பியவன் நள்ளிரவில் சென்னையை வந்தடைய, வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தது தான் நினைவிருந்தது அவனுக்கு. அடுத்தநாள் மதியம் இரண்டுமணி வரை உறங்கி எழுந்தவன் அதன்பிறகே தன் அலைபேசியை கையில் எடுத்தான்.

இரண்டுநாட்களாக தவற விட்டிருந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் என்று ஒவ்வொன்றாக அவன் ஆராய்ந்து கொண்டிருக்க, பவித்ராவின் எண்ணில் இருந்து நான்கைந்து அழைப்புகள் வந்திருந்ததை அப்போதுதான் கவனித்தான் அவன்.

அவன் நெல்லை கிளம்பிய அன்று மாலை அவளை கோவிலுக்கு வர சொன்னது அப்போதுதான் நினைவுவர, தன் தலையிலேயே அடித்துக் கொண்டு வேகமாக குளித்துக் கிளம்பிவிட்டான் வருண்.

அவனது அலுவலகத்தில் நிறுத்தியிருந்த பவித்ராவின் வண்டியை எடுத்தவன் அடுத்த அரைமணி நேரத்தில் அவள் வேலை பார்க்கும் நலம் மருத்துவமனையை அடைந்திருந்தான். வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, பவித்ராவை தேடி அவன் மருத்துவமனைக்குள் நுழைய, அவள் அறுவை சிகிச்சை அரங்கில் இருப்பதாக தெரிவித்தனர் அங்கிருந்தவர்கள்.

அறுவை சிகிச்சை முடிய நேரமெடுக்கும் என்று அறிந்து கொண்டவன் அங்கிருக்க மனமில்லாமல், மருத்துவமனைக்கு வெளியே இருந்த தோட்டத்தில் வந்து அமர்ந்துவிட்டான். அவனை நினைக்கையில் அவனுக்கே சிரிப்பு வரும்போல் இருந்தது.

“டேய் வருண் நீயாடா” என்று அவனை அவனே கிண்டலடித்துக் கொள்ள, அதன் விளைவாக அழகாக ஒரு புன்னகை வந்து அமர்ந்து கொண்டது அவன் இதழில். அந்த பின் மதிய நேரத்தில் மருத்துவமனை வளாகம் பெரிதாக ஆள் அரவமற்று காணப்பட, தன் அலைபேசியை பார்த்தபடி நேரத்தை விரட்டிக் கொண்டிருந்தான் அவன்.

அடுத்த ஒருமணி நேரம் இப்படியே கழிய, மீண்டும் ஒருமுறை பவித்ராவை தேடிச் சென்றான் வருண். இதற்குள் அறுவை  சிகிச்சை முடித்து அவள் அறைக்கு வந்திருக்க, இவனை காத்திருக்க சொல்லி பவித்ராவிடம் அனுமதி கேட்க விரைந்தாள் செவிலி.

அடுத்த ஐந்து நிமிடத்தில் வருண் பவித்ராவின் முன்பு அமர்ந்திருக்க, “சொல்லுங்க வருண்” என்று அன்னியதொனியில் பேசினாள் பவித்ரா.

“கோபமா மேடம்” என்று வருண் மெல்ல சிரித்தபடி வினவ, மௌனமாக மறுத்து தலையசைத்தாள் பவித்ரா.

“என்ன விஷயம்” என்று மீண்டும் அதே குரல்.

“கொஞ்சம் வேலை அதிகமாகிடுச்சு பவி. வேறெதையும் யோசிக்க முடியல. உன்னோட கால்ஸ் பார்க்கவே இல்ல நான்”

“இதெல்லாம் எனக்கு தேவையே இல்ல வருண். என்ன விஷயம் சொல்லிட்டு கிளம்புங்க”

“புரிஞ்சிக்கோ பவிம்மா. ரொம்ப டயர்டா இருக்கேன். உன்கிட்ட மறைக்க என்ன இருக்கு. என் பிரெண்ட்க்கு ஆக்சிடென்ட்.” என்று பாவமாக வருண் கூற, அது சற்று வேலை செய்தது.

தன் கோபம் மறந்தவளாக, “என்ன ஆச்சு” என்றுவிட்டாள் பவித்ரா.

“இப்போ ஓகே தான். பட், மீண்டுவர கொஞ்சம் டைம் எடுக்கும்”

“சரியாகிடும். கவலைப்படாதீங்க”

“ம்ம்ம்ம். மேடம்க்கு கோபம் போய்டுச்சா”

“கோபப்பட என்ன இருக்கு. உங்ககிட்ட நான் ஏன் கோபப்படணும்?”

“வாய் ஒன்னு சொல்லுது. முகம் ஒன்னு சொல்லுது பவி மேடம். ஆனா, உங்களுக்கு பொய் சொல்ல வரல”

“என்ன வேணும் உங்களுக்கு?”

“என்னை தேடினாயா பவி”

“இல்ல”

“பொய்”

“நான் ஏன் பொய் சொல்லணும்”

“சரி என்னை தேடாம எதுக்காக எனக்கு கால் பண்ண. அதுவும் 5 டைம்ஸ்.”

“என் வண்டி எங்கே. என் வண்டிக்காக தான் கால் பண்ணேன்”

“ஓஹ். அப்போ என்னை தேடல”

“உங்களை ஏன் நான் தேடணும்?’

“ஐ லவ் யூ சொல்ல.” என்று வெகு சாதாரணமாக கூறியவனைக் கண்டு புன்னகை பூத்தது பவித்ராவிற்கு.

“உங்கமேல அதீத நம்பிக்கை போல உங்களுக்கு”

“நம்பிக்கை தான் என் அம்மும்மா மேல”

“இந்த கதையெல்லாம் வேண்டாம் வருண். வண்டி எங்கே? நிஜமாவே கிடைச்சுதா, இல்ல பொய் எதுவும் சொன்னிங்களா” என்று பவித்ரா முகத்தை இயல்பாக்கிக்கொள்ள, அவளது வண்டியின் சாவியை அவள் முன்னே வைத்தான் வருண்.

தனது வண்டியின் சாவியை கையில் எடுத்துக் கொண்டவள் கண்கள் நிம்மதியாக அதன்மீது படிந்து மீள, “என்னைப் பார்த்து இப்படி ஒரு லுக் கொடுக்கலாம்ல” என்று மனம் ஏங்கியது வருணுக்கு.

அவன் பார்வையை உணர்ந்தவளுக்கு கூச்சமாக இருக்க, “வண்டி கொஞ்சம் செண்டிமெண்ட். என்னோட முதல் சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா நானே சேர்த்து வாங்கினது” என்று அவன் கேட்காமலே விவரம் கூறினாள் அவள்.

“சூப்பர்மா… வண்டி கிடைச்சுடுச்சே. ஒரு ட்ரீட் வைக்கலாம்ல”

“என்ன ட்ரீட்”

“ரொம்ப பசிக்குது. ஒரு காபி… கூடவே ஒரு சமோசா இல்ல, எக் பப்ஸ்” என்றான் வருண்.

அவன் பேச்சில் சிரித்தபடி எழுந்தவள், “வாங்க” என்று அவனுடன் நடந்தாள்.

மருத்துவமனை வளாகத்தில் இருந்த கேன்டீனுக்கு அவள் அழைத்துச் செல்ல, “ஹேய் பவி. இங்கே வேண்டாம். வெளியே போவோம்.” என்றான் மீண்டும்.

“வருண் இது என்னோட ட்யூட்டி டைம்.”

“ப்ளீஸ் பவிம்மா. இதைவிட்டா எனக்கு வாய்ப்பே கிடைக்காம கூட போகலாம்” என்று பாவம் போல் சொன்னவனை மறுக்கும் எண்ணம் வராததால், அலைபேசியில் இருந்து யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பி விட்டவள் அவனுடன் கிளம்பினாள்.

பவித்ரா அவளது வண்டியை எடுக்க, அவள் அருகில் நின்றபடி அவளையே பார்த்திருந்தான் வருண்.

“என்ன” என்று பவித்ரா தலையசைக்க,

“மேடம் நான் காரெடுத்து வரல.” என்று வருண் சிரிக்க,

“ரொம்ப நல்லபிள்ளையா நடிக்க வேண்டாம். ஏறுங்க.” என்றாள் பவி.

விரிந்த சிரிப்புடன் அவள் பின்னே ஏறிக் கொண்டவன் சிரிப்பு மாறாமல் வண்டியின் பக்கவாட்டு கண்ணாடியை எட்டிப் பார்க்க, அவனை கண்டுகொள்ளாதது போல் வண்டியை எடுத்தாள் பவித்ரா.

மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு சைவ உணவகத்தில் வண்டியை நிறுத்தியவள், “பசிக்குது தானே சொன்னிங்க. சாப்பிடுவோம்” என, “ஓஹ்” என்று சிரித்தபடியே வண்டியை விட்டு இறங்கி அவளுடன் நடந்தான் வருண்.

அடுத்த அரைமணி நேரமும் பவித்ராவை பொறுத்தவரை நிறைவானவை தான். எத்தனையோ ஆண்டுகளாக அவள் ஏங்கி நின்ற சில தருணங்கள். வருண் அந்த உணவகத்தில் நுழைந்தது முதல் அத்தனை அழகாக தனது சிறுசிறு செயல்கள் மூலம் கொள்ளை கொண்டான் பவித்ராவை.

அவளுக்கு இருக்கையை நகர்த்தி கொடுத்தது முதல், அவளுக்கு எதிரே அமர்ந்துகொண்டு அவளது விருப்பத்தை கேட்டறிந்து உணவு வரவழைத்தது, அவளுக்காக உணவு பரிமாறியது, தண்ணீர் எடுத்துக் கொடுத்தது, அவனது இந்த அன்பை நினைத்து அவள் கலங்கி புரையேறுகையில் தலையில் தட்டி கொடுத்தது என்று அத்தனையும் ஆகர்ஷித்தது அவளை. செயலுக்குரியவனை சேர்த்துக் கொள்ளும்படி தான் மனதும்  உரக்க கத்தியது.

ஆனால், இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதுபோல் வெகு இயல்பாக காணப்பட்டான் வருண் ஆதித்யன். உணவை முடித்துக்கொண்டு மீண்டும் அவளுடன் மருத்துவமனைக்கு வந்தவன், தனது ஓட்டுனருக்கு அழைத்து தனது காரை எடுத்துவர சொல்லி காத்திருக்க, அவன் நின்றிருப்பதால் அவனுடன் நின்றாள் பவித்ரா.

“சொல்லுங்க மேடம் ஏதாச்சும் சொல்லனுமா” என்று அவன் சிரிக்க,

“தேங்க்ஸ்”

“பாருடா. என் பொண்டாட்டி தேங்க்ஸ் சொல்றா” என்று மீண்டும் சிரித்தான் வருண்.

“வருண் இதை விடவே மாட்டிங்களா”

“ஏன் விடணும். இனி விட எல்லாம் முடியாது. எனக்கான பதிலை என் அம்மும்மா எப்பவோ சொல்லிட்டா. நான் உன்னோட வாய் வார்த்தைக்காக வேணும்ன்னா காத்திருக்கேன். அதுகூட எவ்ளோ நாள்ன்னு என்னால உறுதி கொடுக்க முடியாது.”

“என்ன பதில். நான் என்ன சொன்னேன்”

“உன் கண்ணுக்கு பொய் சொல்ல தெரியல பவி. உன் பேரை போலவே ரொம்ப பவித்ரமானது உன்னோட கண்கள்.” என்றவன் வார்த்தைகளில் வேகமாக கண்கள் கலங்கியது அவளுக்கு.

“ம்ச்… பவிம்மா எடுத்ததுக்கெல்லாம் அழற பழக்கத்தை விட்டுடு” என்று உரிமையாக அவள் கண்களை துடைத்துவிட்டவன், “இனி அழுதா கிஸ் பண்ணி வச்சாலும் வைப்பேன். யோசிச்சுக்கோ” என்றான் சிரிப்புடன்.

“வருண் இல்ல நான்…” என்றவள் முடிக்கும்முன் வருணின் அலைபேசி அதிர, “வெய்ட்” என்றவன் அலைபேசியில் பேசி முடிப்பதற்கும், அவனது கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

பவித்ரா அவனிடம் பேச வேண்டி நின்றிருக்க, “கிளம்புறேன் அம்மும்மா. நிறைய வேலை இருக்கு” என்றபடி நிற்காமல் ஓடிவிட்டான் வருண்.

வருணுக்கு அவளது குழம்பிய முகம் சற்று வருத்தத்தை கொடுத்தாலும், இப்போது இறங்கினால் மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடுவாள் என்று புரிந்ததால், அவளை குழம்ப விடவே முடிவெடுத்தான் அவன்.

அவன் காரில் ஏறி கிளம்பிய பின்னும் வெகுநேரம் அவன் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள் பவித்ரா. அவன் தன்னை கண்டுகொண்டது அதிர்ச்சி தான் அவளுக்கு.

இனி என்ன செய்ய போகிறானோ என்று அவள் அச்சம் கொள்ள, தூரத்தில் தனது காரில் அமர்ந்தபடி அவளைப் பார்த்திருந்தான் பரணி. வெகுநேரமாக அங்குதான் இருக்கிறான் அவன். அவன் காதிற்கு சில செய்திகள் வந்திருக்க, அது உண்மையா என்று அறிந்து கொள்ள வந்திருந்தான் அவன்.

கண்ணெதிரே காட்சிகள் நடப்பை உறுதி செய்துவிட, அமைதியாக காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் பரணிச்செல்வன்.