அன்புள்ள தவறே 07

அன்று காலையில் எழுந்தது முதலே லேசான தலைவலியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. இரவு முழுவதும் வருண் ஆதித்யனின் பேச்சும், தனது பிறப்பும், தற்போதைய தனது நிலையும் நினைத்து தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தவள்அதிகாலை நான்கு மணி அளவில் தான் உறங்க தொடங்கி இருந்தாள்.

காலை ஏழு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட, கூடவே தலைவலியும் சேர்ந்து வந்திருந்தது. கண்களை திறக்க முடியாதபடி எரிச்சல் வேறு இருக்க, கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கண்களை மூடி படுத்துவிட்டாள் அவள்.

அவளுடைய விடுதி தோழி விஷயத்தை கீர்த்திவாஸனிடம் தெரிவித்து இருக்க, கல்லூரி இடைவெளியில் பவித்ராவுக்கு அழைத்துவிட்டான் கீர்த்தி. நல்ல உறக்கத்தில் இருந்தவளோ, “தூங்குறேன்டா… நல்லா இருக்கேன். அப்புறம் பண்றேன்” என்று அழைப்பை துண்டித்துவிட, அவள் பேச்சில் சிரித்தபடி தன் வேலையை கவனிக்க தொடங்கிவிட்டான் கீர்த்தி.

மாலை வரை நன்கு உறங்கி எழுந்தவளுக்கு சற்று புத்துணர்ச்சியாக இருக்க, “யாரோ ஒருவனை நினைத்து ஏன் இத்தனை யோசிக்கிறேன் நான்?” என்று சுய அலசலில் இறங்கிவிட்டாள். முடிவில் மீண்டும் தலைவலி தொடங்கிவிடும் போல் இருக்க, நேற்று போலவே மன அமைதி வேண்டி அதே முருகன் கோவிலுக்கு கிளம்பிவிட்டாள்.

அவள் கிளம்பும் நேரம் லேசாக இருட்டியிருந்த வானம், அவள் பிராட்வே பேருந்து நிலையத்தை கடக்கையில் பெரிய மழையை பொழிய துவங்கி இருந்தது. எங்கும் ஒதுங்கி நிற்க மனமில்லாமல் சற்று வேகமாக வண்டியை முறுக்கியவள் ஐந்து நிமிடங்களில் கோவிலை அடைந்துவிட்டாலும், இந்த இடைவெளியில் லேசாக நனைந்து போயிருந்தாள்.

கோவில் வாசலில் வண்டியை நிறுத்தி வேகமாக உள்ளே நுழைந்தவள் கவனக்குறைவாக சாவியை வண்டியிலேயே விட்டுச் சென்றிருக்க, அவள் மீண்டும் வெளியே வந்தநேரம் அவள் வண்டியை நிறுத்தியிருந்த இடம் காலியாக இருந்தது.

சட்டென பதட்டம் தொற்றிக் கொண்டவளாக அங்கும் இங்கும் அருகில் இருந்த தெருக்களில் தேடியவள், ஓய்ந்து போனவளாக கீர்த்திவாசனுக்கு அழைக்க, ம்ஹூம்… அழைப்பை ஏற்கவில்லை அவன்.

மாலை ஆறரை மணி அளவில் அவள் கோவிலுக்கு வந்திருக்க, இப்போது நேரம் எட்டை தாண்டியிருந்தது. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. வண்டி தொலைந்து போனது பெரிய விஷயம் இல்லை என்றாலும், இதை வைத்து எத்தனை பேச்சு வாங்க வேண்டி வருமோ என்பதே பெரிய கவலையாக இருந்தது.

அவள் தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய வண்டி தான். ஆனாலும், வில்வநாதனின் பேச்சுக்களை யாரால் தடுத்துவிட முடியும். அதிலும் அந்த இருசக்கர வாகனத்தை அவள் வாங்கியதே ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகுதான்.

“ஹாஸ்டல்ல இருக்க பொண்ணுக்கு வண்டி எதுக்கு” என்பதுதான் அமைச்சரின் முதல் வாதமாக இருந்தது. “வண்டி எடுத்துட்டு உங்க வீட்டுக்கு வரமாட்டேன்” என்று தைரியமாகவே பதில் கூறியவள், ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து தான் அந்த வாகனத்தை வாங்கியிருந்தாள்.

இப்போது வண்டியை காணவில்லை எனவும், அத்தனைப் போராட்டங்களும் கண்முன் வந்துபோக, லேசாக கண்கள்கூட கலங்கும்போல் இருந்தது. என்ன செய்வது என்று புரியாமல் அவள் நின்றிருந்த நேரம் தான் அவள் அருகில் காரை நிறுத்தினான் வருண்.

நிச்சயம் அந்தநேரம் பவித்ரா அவனை எதிர்பார்க்கவில்லை. காரை நிறுத்தி வேகமாக இறங்கியவன், “என்ன பவி… ஏன் இப்படியிருக்க?” என்று உரிமையாக கேள்வி கேட்க, அவனுக்கு பதில் கூறவும் தோன்றாமல் விழித்தபடி தான் நின்றிருந்தாள் பவித்ரா.

“பவி” என்று மீண்டும் அவன் அழைக்க, “ஹான்… இல்ல… வண்டி மிஸ்ஸிங்… காணும்” என்று புரியாத குழந்தைபோல் அவள் பேச,

“என்னம்மா”

“வண்டியை காணும்… இங்கேதான் நிறுத்தியிருந்தேன்” என்று கலங்கிய குரலில் மீண்டும் அவள் கூறிட,

“சரி அழாத. அடுத்து என்ன செய்றது யோசி. போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுப்போம் வா” என்று வருண் அழைக்க, அதற்கும் வழியில்லையே என்று மீண்டும் கலங்கினாள் பவித்ரா.

காவல்துறை, புகார் என்று தொடங்கினால், நிச்சயம் விஷயம் வில்வநாதனின் காதுகளுக்கு சென்றுவிடும் என்பதும் அவளை தடை செய்ய, சில நிமிடங்கள் அப்படியே தேங்கி நின்றுவிட்டாள் அவள்.

“என்ன பவி” என்று வருண் லேசாக அவளது கையைத் தொட,

“இல்ல வேண்டாம்” என்று பட்டென பதில் கொடுத்தவள் மெல்ல கண்களைத் துடைத்துக் கொண்டாள். அதோடு அங்கிருந்து விலகிச் செல்லவும் முற்பட, “பவி” என்று அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் வருண்.

ஏற்கனவே மன உளைச்சலில் இருந்தவள், “கையை விடுங்க வருண்” என்று லேசாக கத்திவிட்டாள் அவனிடம்.

“ஓகே ஓகே… கையை பிடிக்கல. டென்ஷன் ஆகாத” என்று வருண் சட்டென தள்ளி நிற்க, உதவி செய்ய வந்தவனை நோகடிக்கிறோமே என்று அவளுக்கே பாவமாகி விட,

“சாரி… சாரி வருண்” என்றாள் சட்டென.

“இதை விடு. நீ என்ன செய்ய போற. இப்படி அழுதுட்டே இருந்தா எதுவும் நடக்காது” என்று நடப்பை அவன் எடுத்துரைக்க,

“இல்ல. போலிஸ்கெல்லாம் போக வேண்டாம். நான் ஹாஸ்டலுக்கு போறேன்” என்றவள் கண்களை துடைத்து கொள்ள,

“பைத்தியம் பிடிச்சிருக்கா உனக்கு. வண்டியை காணும். கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டாம்னு சொல்ற. அப்படியே விட்டுடுவியா”

“என்னால போலீசுக்கு போக முடியாது வருண். புரிஞ்சிக்கோங்க”

“அதுதான் ஏன்? அப்போ வண்டியை அப்படியே விட்டுடலாமா”

“போகட்டும்” என்றவள் அவனைக் கடந்து செல்ல முற்பட,

“அப்படி என்ன பிடிவாதம் பவித்ரா” என்று அவளுக்கு முன்னே கையை நீட்டி அவளை தடுத்து நிறுத்தப் பார்த்தான் வருண்.

“பிடிவாதம் தான். என்னால எங்கேயும் வர முடியாது. நான் ஹாஸ்டலுக்கு போகணும்”

“சரி… நான் ட்ரோப் பண்றேன் வா” என்று அவன் அழைக்க,

“இல்ல வேண்டாம்… நானே…” என்றவள் முடிக்கும்முன்,

“இந்த நேரத்துக்கு மேல தனியா விடுவேனா உன்னை. சும்மா எல்லாத்துக்கும் காரணம் தேடாத பவி. என்னோட வந்தால் என்ன ஆகிடும் வா” என்று அவள் கைப்பிடித்து காரில் ஏற்றியவன் அடுத்த சில நிமிடங்களில் அவளது கல்லூரி விடுதியில் அவளை இறக்கிவிட்டான்.

எண்ணி சில நிமிட பயணம் தான். அவள் கல்லூரியும், கோவிலும் பக்கம் தானே. மிஞ்சிப்போனால் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் எடுத்திருக்கும். பவித்ரா அருகில் இருப்பவனை மொத்தமாக மறந்தவளாக தன்னில் திளைத்திருக்க, வருண் அப்படியில்லையே.

அவனது கவனம் மொத்தமும் பவித்ராவிடம் தான். கலங்கி சிவந்திருந்த அவள் விழிகள் அவனுக்கு பல கதைகள் கூறிட, நிச்சயம் அவளிடம் கள்ளமில்லை என்பதில் உறுதியாக இருந்தான் அவன். ஆனால், அதையும் தாண்டி ஏதோ ஒரு ரகசியத்தை தன்னுள் அவள் புதைத்து வைத்திருக்கிறாள் என்ற எண்ணம் மாறவே இல்லை.

“சீக்கிரமே இந்த விடுகதைக்கான பதிலை அறிந்துகொள்ள வேண்டும் என்று அவன் மனம் பரபரக்க, “பொறு மனமே” என்று தட்டிவைத்தான் அவன்.

அவன் கேள்விகளுக்கு விடை காணும்வரை பயணம் நீளுமா என்ன… விடுதியின் வாயிலில் கார் நிற்கவும், வேகமாக இறங்கி கொண்டவள் வாயைத் திறக்காமல் மௌனமாக தலையசைக்க, தானும் தலையசைத்து விடைகொடுத்து விட்டான் வருண் ஆதித்யன்.

பவித்ரா விடுதிக்குள் செல்லவும், காரை எடுத்துக்கொண்டு அவன் கிளம்பிவிட, ஐந்து நிமிடங்களுக்கு மேல் பயணத்தை தொடர முடியாமல் சாலையோரம் காரை நிறுத்திவிட்டான்.

மீண்டும் மீண்டும் அவளது கலங்கிய முகம் கண்ணில் நிழலாட, அதை பொறுக்க முடியாதவனாக மீண்டும் அவள் வண்டியை தொலைத்த அதே கந்தகோட்டம் கோவிலுக்கருகே வந்து நின்றுவிட்டான். அந்த பகுதியைச் சேர்ந்த அவனது அடிமட்ட நண்பன் ஒருவனை வருண் அலைபேசியில் அழைக்க, “சொல்லு தல” என்றவன் பதினைந்து நிமிடங்களில் வருணின் காரில் இருந்தான்.

அவனிடம் விவரத்தை கூறிய வருண், அருகிலிருந்த ஒரு கடையின் கண்காணிப்பு கேமராவையும் சுட்டிக்காட்ட, “சப்ப மேட்டர் தல” என்றவன் அந்த கடையின் உரிமையாளரிடம் சென்று பேச, அவனை நன்கு அறிந்தவரும் உடனே அவன் கேட்டதை செய்து கொடுக்க, பத்து நிமிடத்திற்கெல்லாம் பவித்ராவின் வண்டியை திருடியவனை அடையாளம் கண்டு கொண்டனர் இருவரும்.

“நாய்… ஆள் தெரியாம கை வச்சிருக்கு தல. நீ இரு. நான் பசங்களை வச்சு தட்றேன்” என்று அவன் யாருக்கோ அழைத்து பேச, அடுத்த ஒருமணி நேரத்தில் பவித்ராவின் வண்டி அந்த கோவில் வாசலை வந்து அடைந்திருந்தது.

வருணின் நண்பன் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அங்கிருந்து கிளம்பிவிட, “வண்டியை எடு காசி” என்றவன் கார்ச்சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, பவித்ராவின் வண்டியை தானே எடுத்தான்.

“ஓஓ” என்று லேசாக கத்திய காசி, “தல ரொம்ப வேண்டியவங்க வண்டியா” என,

“வேலையைப் பாருடா” என்று சிரித்தபடி கிளம்பினான் வருண்.

பவித்ராவின் வண்டியை அவனது பத்திரிக்கை அலுவலகத்தில் நிறுத்தி, உள்ளே சென்று வந்தவன் கையில் ஒரு வெள்ளைநிற கவரை எடுத்துவர, “தல… எதுவும் வேணாம். இது உனக்கு என் கிப்ட். போ” என்றான் காசி.

“பசங்ககிட்ட கொடுடா” என்று அவனை அதட்டி அவன் கையில் அந்த கவரை திணித்து, அவனை அனுப்பி வைத்தான் வருண் ஆதித்யன்.

அந்த நேரத்திற்கு மேல் அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல், பத்திரிக்கை அலுவலகத்திலேயே படுத்துவிட்டான் வருண். அவனது அறையின் சோஃபாவில் படுத்திருந்தவனுக்கு உறக்கம் வரும் என தோன்றாததால் தனது அலைபேசியில் இருந்து பவித்ராவை அழைத்தான்.

எப்படியும் உறங்கியிருக்கமாட்டாள் என்பது நிச்சயம் தான் அவனுக்கு. அவன் எண்ணம் சரியே என்பதுபோல் உறங்காமல் தான் அமர்ந்திருந்தாள் பவித்ராவும். ஆனால், அலைபேசி அதிர்வதைக் கூட கவனியாமல் ஜன்னலில் தெரிந்த சாலையை வெறித்து கொண்டிருந்தாள்.

வருண் விடாமல் இரண்டாம் முறையும் அழைக்க, ம்ஹூம் பதிலில்லை. ஆனால், விட்டுவிட மனம் வராமல் அவன் மீண்டும் மீண்டும் அழைக்க, எதற்கோ எதேச்சையாக திரும்பியவள் அலைபேசியை கவனித்துவிட்டாள். புது எண்ணாக இருப்பதைக் கண்டு தயங்கினாலும், விடாமல் அலைபேசி இம்சித்ததில் அழைப்பை ஏற்று, “ஹலோ” என,

“தேங்க் காட்” என்றான் வருண்.

“வருண்” என்று பவித்ரா அதிர,

“எஸ்… இட்ஸ் மீ” என்று மென்மையாக சிரித்தான் வருண்.

“என்ன வருண். எதுக்காக கூப்பிட்டீங்க” என்று அவள் கத்தரிக்க,

“என் அழுமூஞ்சி பொண்டாட்டி அழுது முடிச்சுட்டாளான்னு தெரிஞ்சிக்க தான் கூப்பிட்டேன் அம்மும்மா” என்றான் வருண்.

“வருண் ப்ளீஸ்” என்று பவித்ரா தடை விதிக்க,

“என்ன பண்ற” என்றான் மீண்டும்.

“இதை கேட்கத்தான் கூப்பிட்டீங்களா. அதுவும் இந்த நேரத்துல”

“நீ இன்னும் தூங்கலையே. அப்போ நேரத்தை பத்தி என்ன கவலை”

“நான் தூங்கிட்டுதான் இருந்தேன் வருண்.”

“நம்பிட்டேன் பவி” என்று வருண் சிரிக்க,

“என் நம்பர் எப்படி கிடைச்சது?” என்றாள் பவித்ரா.

“பொண்டாட்டி நம்பர் புருஷன்கிட்ட இல்லாம எப்படி”

“உங்ககிட்ட பேசற அளவுக்கு எனக்கு பொறுமை இல்ல. நான் போன் வச்சுடறேன்”

“ஹேய் பவி” என்று அவன் பதற

“வருண் ப்ளீஸ். என்னை கொஞ்சம் நிம்மதியா விடுங்க”

“சில் பவி. சும்மா எல்லாத்துக்கும் டென்க்ஷன் ஆகக்கூடாதுடா அம்மும்மா” என்று அறிவுரை கூறினான் அவன்.

அதில் கடுப்பானவள், “உங்களுக்கு என்னால எதையும் புரியவைக்க முடியாது. அதோட உங்க ப்ரீ அட்வைசும் இப்போ எனக்கு வேண்டாம்” என்று பட்டென முகத்தில் அறையும்படி அவள் பதில் கொடுத்துவிட,

“உன் வண்டியும் வேண்டாமா” என்றான் வருண்.

“என்ன”

“பிளாக் கலர் ஹோண்டா டியோ. நம்பர் TN04.B 7575… உன்னோடது தானே”

“வருண்”

“உன் வண்டி பத்திரமா இருக்கு பவி. நிம்மதியா தூங்கு. நீ வண்டியை எங்கே தொலைச்சியோ, அதே இடத்துக்கு நாளைக்கு வந்து பாரு. அதே நேரம் அதே இடம்”

“வருண் விளையாடாதீங்க ப்ளீஸ்”

“உன் வாட்சப் பாரு” என்றவன் உடனடியாக அவள் வண்டியை ஒரு போட்டு எடுத்து அனுப்பிவைக்க,

“எப்படி கிடைச்சது?”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு?”

“இல்ல எனக்கு தெரிஞ்சே ஆகணும். எப்படி கிடைச்சது… இல்ல, மொத்தமும் உங்க பிளானா?” என்று பவி பட்டென கேட்டுவிட,

“நல்லா சொல்ற அம்மும்மா நீ. என்னைப் பார்த்தா பைக் திருடுறவன் போலவா இருக்கு” என்றான் வருண்.

“சாரி” என்று பவி உடனே மன்னிப்பை வேண்ட,

“உன் சாரி வேண்டாம் எனக்கு. அழாம நிம்மதியா இரு. அதுவே போதும்” என்றான் வருண்.

“எப்படி கிடைச்சது?” என்று மீண்டும் பவித்ரா கேட்க,

“விடவே மாட்டியா?”

“சொல்லுங்க”

“அங்கே லோக்கல்ல இருக்க என்னோட பிரெண்ட் ஹெல்ப் பண்ணான். அவனை வச்சுதான் வண்டியை கண்டுபிடிச்சோம்”

“தேங்க்ஸ் வருண்”

“எனக்கு தேங்க்ஸ் சொல்வியா?” என்று வருண் கேட்க, ஒரு முழுநிமிடம் பதிலில்லை பவித்ராவிடம்.

“சொல்லு பவி” என்று மீண்டும் வருண் நெருக்க,

“நிச்சயமா எதுவுமில்லை வருண். என்கிட்டே எதையும் எதிர்பார்க்காதீங்க ப்ளீஸ்”

“ஆனா, என் அம்மும்மா அழுதா எனக்கு வலிக்குதே பவி. உன்னை பார்த்த இந்த சில நாட்கள்ல எல்லாமே நீதான்னு நினைக்கிற அளவுக்கு உன்னை பிடிக்குதே. நான் என்ன செய்யட்டும்?”

“நீங்க சொல்ற இந்த கதை எதுவும் வாழ்க்கைக்கு ஒத்து வராது வருண்”

“வாழ்க்கையே நீதான்னு சொல்றேன் அம்மும்மா”

“என்னை இப்படி கூப்பிடாதிங்க.”

“சரி பொண்டாட்டி”

“வருண்”

“ஒரே ஒரு ஐ லவ் யூ சொல்லு. உனக்கு எல்லாமுமா இந்த வருண் உன்கூடவே இருப்பான். நீ எனக்கு வாழ்க்கையா இரு” என்று அவன் மீண்டும் வற்புறுத்த, எதிர்முனையில் இருந்தவளுக்கு கண்கள் கலங்கியது. அன்பிற்கு ஏங்கிய நெஞ்சம் தானே அவளுடையதும்.

ஆனால், நடைமுறை சிக்கல்கள் அவளை ஏளனமாக பார்த்து நகைக்க, “குட் நைட் வருண்” என்று அலைபேசியை அணைத்துவிட்டாள் பவித்ர.