அன்புள்ள தவறே 06

அந்தநிமிடம் வருண் ஆதித்யனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை பவித்ரா. அவனைக் கண்டு முதலில் அதிர்ந்து போனாலும், அழகாக அதை மறைத்துக் கொண்டாள் பெண். அருகில் அமர்ந்திருந்தவனை கோபத்துடன் ஒரு பார்வை பார்க்க, “ஹப்பா… ரொம்ப பயமாயிருக்கு” என்று சிரித்தான் வருண்.

“என்ன பாலோவ் பண்றிங்களா?” என்று சற்றே காரமாக பவித்ரா கேட்டுவிட,

“நான் உன்னை பார்க்க மட்டும்தான் வந்தேன். நீ ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பிட்ட. சோ, உன் பின்னாடி வந்துட்டேன்” என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் கூறினான் வருண்.

“நீங்க யாரு? எதுக்காக என்னைப் பார்க்கணும்?”

“என்ன பவி. உன் புருஷன் நான்…” என்று வருண் முடிப்பதற்குள்,

“அவ்ளோதான் உங்களுக்கு…” என்று ஒருவிரல் நீட்டி ஆத்திரத்துடன் அவனை குறுக்கிட்டாள் பவித்ரா.

“என்ன அமைதியா பதில் சொல்லிட்டு இருக்கேன்னு நினைக்கறீங்களா… கத்தி சத்தம் போட்டு அசிங்கப்படுத்தவும் தெரியும். வீணா அவமானப்பட வேண்டாம்” என்று ஆத்திரமிகுதியில் அவள் அலட்சியமாக வார்த்தைகளைவிட, சற்றே முகம் சுருங்கினான் வருண் ஆதித்யன்.

“நடுராத்திரில ரோட்ல உங்களை கொலை பண்ண பார்த்தாங்க. அப்படி உடம்பு முழுக்க ரத்தத்தோட பார்த்தும், எனக்கென்னன்னு கடந்து போக முடியல. அதோட, கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல தான் இருந்திங்க. உங்களை காப்பாத்த என்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சேன்.”

“ஒரு உயிரோட மதிப்பு என்னன்னு தெரியுமா உங்களுக்கு? என்னை பொறுத்தவரைக்கும் உங்க உயிர் தான் பெருசா தெரிஞ்சுது. அதற்காக மட்டும் தான் கையெழுத்து போட்டேன். ஆனா, அந்த ஒரு காரணத்துக்காக உங்க முட்டாள்தனங்களை எல்லாம் பொறுத்துப் போவேன்னு அர்த்தம் கிடையாது” என்றவள் கோபத்தில் சற்றே மூச்சு வாங்க,

“டாக்டர் அவங்களை சரியா கவனிக்கிறது இல்லையோ… ரெண்டு நிமிஷம் கோபத்துக்கே மூச்சு வாங்குதே.” என்றவனை என்ன செய்ய முடியும் அவளால்.

“உங்களை” என்று பவித்ரா மீண்டும் எதுவோ பேச வர,

“வெயிட்… நீ சொல்ற எல்லாமே எனக்கு புரியுது. ஓகே… ஆனா, இதையெல்லாம் விட எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு… அதை உன்கிட்ட எப்படி நான் கன்வே பண்ணட்டும். நீயே சொல்லு” என்றான் வருண்.

“என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு. எதை வச்சு பிடிச்சுருக்கு என்னை. உங்க முன்னாடி நிற்கிற இந்த ஐந்தடி உருவத்தை தவிர்த்து உங்களுக்கு என்ன தெரியும்? இதை காதல்னு சொல்றிங்களா?” என்று பவித்ரா பாடம் எடுக்க,

“உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சு, உன் வரலாறு மொத்தத்தையும் அலசி, அதுக்குப்பிறகு வர்றதுதான் காதலா? நான் இன்டெர்வியூக்கு ஆள் எடுக்கிறேனா?” என்றான் அவன்.

“உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது தெரியல எனக்கு?”

“ஏன் புரிய வைக்கணும்? என்னை பிடிச்சிருக்கா… இல்லையா… அதை மட்டும் யோசி”

“பிடிக்கல… போதுமா கிளம்புங்க”

“இந்த நிமிஷம் நீ தப்பிக்க எதையோ சொல்லி என்னை துரத்திவிட பார்க்காத பவித்ரா. யோசி…” என்று மீண்டும் அவன் வலியுறுத்த,

“எதையும் யோசிக்கிற நிலையில நான் இல்ல. எனக்கு உங்கமேல எந்த எண்ணமும் வரல. சொல்லப்போனா, இப்படி விடாம என்னை தொந்தரவு பண்றது எரிச்சலை தான் தருது. விட்டுடுங்களேன் என்னை”

“அன்னைக்கு அப்படியே சாகட்டும்னு நீயும் விட்டு இருக்க வேண்டியது தானே”

“தப்பு பண்ணிட்டேன். வேணும்னா இப்போ கொன்னுடவா”

“இந்த நிமிஷமே நான் தயார் தான். ஆனா, சாகறதுக்கு முன்னாடி கடைசி நிமிஷத்துல ஒரு ஐ லவ் யூ சொல்லிடேன்.” என்றான் வருண்.

“பைத்தியமா நீங்க?” என்று பவித்ரா சிரித்துவிட,

“இது அழகா இருக்கே” என்றான் மீண்டும். பவித்ரா முழிக்க, “இந்த சிரிச்ச முகம் அழகா இருக்கு. அவ்ளோ இயல்பா பொருந்திப் போகுது உன் முகத்துக்கு. ஆனா, உன்னோட கோபம் உன் முகத்துக்கு பொருந்தல” என்று விளக்கினான் வருண்.

“நல்லா பேசறீங்க.”

“நன்றி”

“ஆனா, இதுக்காக எல்லாம் காதலிக்க முடியாது”

“அதேதான். என்னோட பேசிப்பாரு. நாம டிஸ்கஸ் பண்ணுவோம். கண்டிப்பா நமக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கும். தென் லவ் பண்ணுவோம்.” என்று வருண் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து நின்றுவிட,

“உங்ககிட்ட இப்படி பேசிட்டு இருக்கறதே தப்பு.” என்றுவிட்டாள் பவித்ரா.

“பவி ப்ளீஸ். புரிஞ்சிக்க ட்ரை பண்ணேன். இதுவரைக்கும் எந்த பொண்ணு பின்னாடியும் போனதில்ல. நமக்கு இந்த லவ் சப்ஜெக்ட் சுத்தமா தெரியாது. என்னவோ, உன்னைப் பார்த்த நிமிஷம் ஒரு ஸ்பார்க். இவதான் லைப்னு தோணிடுச்சு. நீயும் என் பொண்டாட்டின்னு சொல்லவும் இந்த மனசை அடக்க முடியல. என் பேச்சை கேட்க மாட்டேன்னு அடம் பிடிக்குதுப்பா” என்று வருண் கூற, கைகளை கட்டிக்கொண்டு அவனைப் பார்த்திருந்தாள் பவித்ரா.

“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தா, என்ன சொல்லி உங்க மனசை அடக்கி இருப்பிங்க”

“என்ன லைப் லாங் நீ சிங்கிள் தான்டா மகனேன்னு சொல்லி இருப்பேன். இப்போ அதுக்கு வாய்ப்பில்லையே” என்று சட்டென வந்தது பதில். வெறும் பேச்சுக்காக அவன் கூறவில்லை என்பது அவன் குரலில் இருந்த உறுதியில் புரிய, இவனை எப்படி சமாளிப்பது என்று புரியவே இல்லை பவித்ராவுக்கு.

“இந்த காதல் எனக்கு வேண்டாம். என்னோட கனவுகள் வேற. நிச்சயமா நமக்குள்ள ஒத்துவராது. இனி இது விஷயமா என்னைத் தேடி வராதீங்க” என்று மிகவும் நிதானமாக அவள் கூறிட,

“அதெப்படி… இங்கே காதல் என்னோடது. ஏன் ஒத்து வராது… உன்னோட கனவுகள் என்ன? இதையெல்லாம் நீ எனக்கு சொல்லியே ஆகணும். உன்னோட காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் படியா இருந்தால், ஒருவேளை நீ சொல்றதை பத்தி நான் யோசிக்கிறேன்” என்றான் வருண்.

பார்த்து சில நாட்களே ஆன இவனிடம் தனது வாழ்க்கையை என்னவென்று விளக்குவது என்று புரியவில்லை பவித்ராவிற்கு. அதுவும் தனது இழிவான பிறப்பையும், இன்றைய தனது நிலையையும் கேட்டால் அவனே ஓடிவிடுவான் என்று நினைத்துக் கொண்டவளுக்கு தொண்டை வரை கசந்து வழிந்தது.

தன்னைப் பற்றிய விஷயங்களை அத்தனை எளிதில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதவள் அவள். அவளைப் பொறுத்தவரை அதை வெளியில் சொல்வதே தனக்கு இழிவுதான் என்று எண்ணியிருக்க, இப்போதும் அதை குறித்து பேச வாய் வரவில்லை.

“வேண்டாம் மனமே” என்று தன்னை அடக்கியபடியே எழுந்து கொண்டவள் அருகில் இருப்பவனை மறந்தவளாக அவள் போக்கிற்கு இரண்டடி எடுத்து வைக்க, அத்தனை நேரம் அவளது பாவனைகளை அமைதியாக உள்வாங்கி கொண்டிருந்தவனுக்கு அவளின் வேதனைக்கான காரணம் புரிபடவில்லை.

என்ன ஏதென்று கேட்பதற்குள் அவள் எழுந்து நடந்துவிட, வேறு வழியில்லாமல் அவள் பின்னே நடந்தான் வருண். “பவித்ரா” என்று அழைத்தபடியே அவன் பின்னால் வர, அவனது அழைப்பைக்கூட உணராமல் வாயிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.

அவள் சரியில்லை என்று உணர்ந்தவன் சற்று வேகமாக அவளை நெருங்கி, அவளது கையை பிடித்து நிறுத்த, சட்டென அதிர்ந்து விழித்தாள் பெண்.

“பவி என்னடா” என்று வருண் அக்கறையுடன் நெருங்க, வேகமாக பின்னால் நகர்ந்து கொண்டாள் பவித்ரா.

அதில் காயப்பட்டவனாக வருண் நிற்க, அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாதவளாக, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் பவித்ரா.

வருண் வேதனையுடன் நின்றதெல்லாம் சில நொடிகள் தான். அவள் இயல்பாக இல்லை என்று மீண்டும் அவன் உள்ளம் இடித்துரைத்ததில், வேகமாக தனது காரை எடுத்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான் வருண் ஆதித்யன்.

அவள் அவளது கல்லூரி விடுதிக்குள் நுழையும் வரை அவளைத் தொடர்ந்தவன் அதன்பின்பும் கிளம்ப மனமில்லாமல் சில நிமிடங்கள் அங்கேயே காரை நிறுத்தி அமர்ந்துவிட்டான்.

எதையோ மனதில் வைத்திருக்கிறாள் என்று புரிந்தாலும், என்னவென்று தெரியவில்லை அவனுக்கு. துப்பறிதலை தொழிலாகவே கொண்டவனுக்கு அவளது முகமாற்றமா பிடிபடாமல் போகும். அவளுக்குள் பெருத்த ஒரு சோகமும், வேதனையும் ஒளிந்திருப்பதை அவள் முகம் மாறிய கணமே உணர்ந்து கொண்டான் அவன்.

என்னவென்று அவன் பாணியில் விசாரிக்க மூளை துருதுருத்தாலும், அவளே அதை தன்னிடம் கூற வேண்டும் என்று எதிர்பார்த்தது மனது. மனதின் போக்கிற்கு தலையசைத்து, மேலும் சிறிது நேரம் எதற்கென்றே தெரியாமல் அங்கே காத்திருந்து அதன் பின்னர் வீட்டிற்கு கிளம்பினான்.

அவன் வீடு வந்த நேரம் அவனது சித்தப்பா ராஜன் ஹால் சோபாவில் அமர்ந்திருக்க, அவரை கண்டுகொள்ளாதவனாக படியேறினான் வருண். அவனைப்பற்றி நன்கு தெரிந்தவர் என்பதால் ராஜன் அமைதியாக இருக்க, அதை உணராமல் வாயைத் திறந்தார் அவனது சித்தி பூர்ணிமா.

“வந்தவங்களை வான்னு கூட கூப்பிட முடியாதா வருண். அந்தளவுக்கு வேண்டாதவங்களா ஆகிட்டோமா நாங்க.” என்று அவர் தொடங்கவுமே, வருணை பாவமாக பார்த்து வைத்தார் அவனது அன்னை சித்ரா.

ஆனால், அவரது பார்வையை சட்டையே செய்யாமல், “வேண்டியவங்க, வேண்டாதவங்க எல்லாம் என்ன சித்தி. அவங்கவங்க வேலையை பொறுத்துதானே எல்லாம். இப்போ நீங்க மட்டும் என்ன? வேலையில்லாமலா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிங்க.” என்றுவிட்டான் வருண் ஆதித்யன்.

“ஏன் வருண் நாங்க காசுக்காக தான் வந்து உட்கார்ந்து இருக்கோம்ன்னு சொல்றியா?”

“உங்க மனசு உண்மையை சொன்னா, நான் என்ன செய்ய முடியும் சித்தி”

“நீ ஒன்னும் சும்மா கொடுக்கல. என் புருஷனுக்கு உரிமையானதை தான் நாங்க வாங்கிக்கறோம்.”

“உங்க புருஷனுக்கு உரிமையானது தான் சித்தி. ஆனா, உழைக்காம வர்றது அதையும் சேர்த்து சொல்லுங்க”

“அதுக்காக தானே மொத்தத்தையும் நீ எடுத்துட்டு, அவருக்கு அளந்து கொடுக்கிற”

“என்ன பண்றது சித்தி… என் தாத்தா சொத்து ஆச்சே. யார் யாரோ வந்து இங்கே அதிகாரம் பண்றது போல நான் பண்ண முடியுமா? எனக்கு சொந்தமானது. நான் தானே கவனிக்கணும்.”

“என்னையா யாரோன்னு சொல்ற”

“இந்த வீட்டை பொறுத்தவரைக்கும் நீங்க யாரோ தான். என் உழைப்புல நான் என் அம்மாவுக்கு வாங்கி கொடுத்த வீடு இது. இங்கே அவங்களைத் தவிர யாரும் அதிகாரம் பண்ணக்கூடாது. உங்களுக்கு வர வேண்டிய ஷேர் நாளைக்கு எவனிங் உங்க அக்கவுண்டுக்கு வந்து சேரும். இனி காசுக்காக கூட இங்கே வரக்கூடாது நீங்க” என்று முடித்தான் வருண்.

“இல்ல வருண்… காசுக்காக எல்லாம் இல்லப்பா… உனக்கு ஆக்சிடென்ட் நடந்தது லேட்டாதான் தெரிஞ்சுது எனக்கு. உன்னைப் பார்த்துட்டு போகலாம்ன்னு தான் வந்தோம்.” என்று அவன் சித்தப்பா வாயைத் திறக்க,

“ரொம்ப சீக்கிரம் வந்துட்டிங்க சித்தப்பா. முன்னமே சொல்லி இருந்தா, ஹாஸ்பிடல்ல படுத்துட்டே இருந்திருப்பேன்.” என்று முகத்தில் அறைவது போலத்தான் பதில் வந்தது.

முகம் சுருங்கியவராக, ராஜன் தன் அண்ணியைப் பார்க்க, “வருண்” என்று சித்ரா குரல் கொடுக்கவும், “பசிக்குது மாம் எனக்கு. சாப்பிட என்ன இருக்கு பாருங்க” என்று அர்த்தமாக அவரைப் பார்த்தான் மகன்.

அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற அவன் கட்டளையை உணர்ந்தவராக, அமைதியாக உள்ளே சென்றுவிட்டார் சித்ரா. அவர் செயலில் கொதித்தவராக பூர்ணிமா காலை உதைத்தபடியே வெளியேற, “இனி அவங்க இந்த வீட்டுக்குள்ள நுழைய கூடாது” என்று தன் சித்தப்பாவிடம் எச்சரிக்கை செய்தான் வருண்.

அவரும் தலையைக் குனிந்தபடி வெளியேற, அதைக் கண்டு மனம் லேசாக வருத்தம் கொண்டாலும், அனுபவிக்க வேண்டியவர் தான் என்று அலட்சியமாக அவர்களை கடந்துவிட்டான் வருண்.

அன்னையிடம் சொன்னது போலவே அடுத்த சில நிமிடங்களில் அவன் குளித்து வந்துவிட, அவனுக்கான உணவை எடுத்து வைத்தார் சித்ரா.

அன்னையை முறைத்தபடி அவன் உண்ண தொடங்க, “வீட்டுக்கு வந்தவங்களை வராதேன்னு எப்படி சொல்ல முடியும் வருண்.” என்று பாவமாகப் பார்த்தார் சித்ரா.

“என்கிட்டே மட்டும் வாய் பேசறீங்க இல்ல. இதை அங்கே பேசணும். காலத்துக்கும் என் அப்பாவை மட்டுமே பேச வேண்டியது.”

“டேய்… உன் அப்பா நான் பேசினா கேட்டுட்டு போற ஆளாடா. ஒரு நியாயம் வேணாமாடா”

“நியாயம் தானே… அப்பா வரட்டும் கேட்டு சொல்றேன்.”

“உன்னை பெத்ததுக்கு எனக்கு இதெல்லாம் தேவைதான்.” என்று அவன் தலையிலேயே தட்டினார் சித்ரா.

வாயிலிருந்த உணவை விழுங்க முடியாமல் வருண் இருமத் தொடங்க, “ஐயோ என் பிள்ளை…” என்று மீண்டும் அவன் தலையில் தட்டியவர் தண்ணீர் டம்ளரை எடுத்து அவன் வாய்க்கருகே வைக்க, அவரை முறைத்தபடியே குடித்தான் வருண்.

அவன் உண்டு முடிக்கவும், “அவங்க வந்ததை உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டாம் வருண்.” என்றார் சித்ரா.

வருண் முறைக்க, “உன் அப்பா தேவையில்லாம கோபப்பட்டு உடம்பை கெடுத்து வைப்பார் வருண். யாருக்காகவோ அவர் ஏன் கஷ்டப்படணும்? சொல்லாத.” என்று முடித்துவிட்டார் சித்ரா.

அவரை அயர்ச்சியாக பார்த்தபடியே மகன் அமர்ந்திருக்க, “போய் தூங்குடா” என்றுவிட்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டார் சித்ரா.

அதுவரை முறைத்து கொண்டிருந்தவனுக்கு தாயை நினைத்து இதமான ஒரு புன்னகை தோன்ற அந்த புன்னகையுடனே உறங்கச் சென்றான் வருண்.