இரண்டு நாட்களாக எதையோ யோசித்தபடியே வலம் வரும் பவித்ராவை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தான் கீர்த்திவாசன். என்னவென்று அவன் கேட்டதற்கும் சரியான பதில் கூறவில்லை அவள். “ஒன்றுமில்லை” என்று அவள் மழுப்பிய விதத்திலேயே பெரிதாக எதையோ உள்ளுக்குள் வைத்து குழப்பிக் கொண்டிருக்கிறாள் என்று வாசனுக்கு.
ஆனால், அவளாக வாய் திறக்காமல் அவளிடம் இருந்து ஒரு வார்த்தைகூட வாங்க முடியாது எனும் நிதர்சனம் புரிந்தவன் என்பதால், அமைதியாக அவளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான் அவன். இதோ இன்றும் கல்லூரி நேரம் முடிந்து போயிருக்க, அவனிடம் சொல்லிக்கொண்டு நலம் மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தாள்.
அவளது வேலைகள் தங்கு தடையின்றி நடந்தாலும், முகத்தில் களையில்லை என்பது உடனிருந்தவனுக்கு புரிந்தே இருக்க, அவளைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான் வாசன்.
வாசனின் கவலைகளை குறித்தோ, தனது எண்ணங்கள் குறித்தோ எந்த சிந்தனையும் இல்லாமல் முழுதாக தன்னை வேலையில் தொலைத்துவிட முயன்று கொண்டிருந்தாள் பவித்ரா.என்னவோ, வருண் ஆதித்யனின் பேச்சு காதுகளில் ஒலித்துக் கொண்டே இருப்பதை போல் ஒரு மாயை அவளைத் துரத்திக் கொண்டே இருக்கிறது இந்த நிமிடம் வரை.
“அவனை காதலிக்க முடியுமா? பிடித்திருக்கிறதா?” என்பதெல்லாம் அவள் குழப்பமில்லை. அவன் தன்னிடம் பேசுவது யாருக்கும் தெரிந்தால் தனது நிலை என்னாகும் என்ற பயம் தான் அவளை அரித்துக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் கண்ணுக்கு மறைத்து தன்னால் எதையும் செய்ய முடியாது அவளறிந்த நிதர்சனம்.
அப்படியிருக்க, உதவி செய்யப்போய் இப்படி தேவையற்ற தலைவலியை இழுத்துவிட்டுக் கொண்ட தனது நிலையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை அவளுக்கு. கைகள் தன் போக்கில் எதிரில் இருந்த நோயாளியை கவனித்துக் கொண்டிருக்க, மனம் வருண் குறித்த யோசனையிலேயே இருந்தது.
வருணின் பின்புலமும் சேர்ந்து கொண்டு அவளை மிரட்ட, என்னவோ இனம்புரியாத ஒரு பயம் நெஞ்சை பிசைய தொடங்கிவிட்டது.
செய்யும் வேலையிலும் இடையில் இரண்டுமுறை கவனம் தவறிப்போக, அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சட்டென எழுந்து கொண்டாள் அவள். வேறொரு மருத்துவரை தனது இடத்தில் அமர்த்திவிட்டு, மருத்துவமனையை விட்டு வெளியேறினாள் அப்போதைக்கு.
மனம் அதன்போக்கில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்க, அதற்குமேல் தாள முடியாமல் தனது வண்டியை எடுத்துக்கொண்டு தனது மானசீக தந்தையான குமரனைக் காண கிளம்பிட்டாள்.
அன்று பெரிதாக விசேஷம் என்று ஏதுமில்லாததால் கோவில் அமைதியாக இருக்க, அவள் போக்கில் தனது கவலைகளை அவரிடம் கொட்டித் தீர்த்தவள் எப்போதும்போல் குளத்தின் அருகே வந்து அமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
கண்மூடிய நொடி தொட்டு அவளின் வாழ்வே ஏதோ திகில்படம் போல அவள் கண்களுக்குள் காட்சியாக தொடங்கியது. சிறு வயதில் இருந்தே எதற்கும் ஆசைப்பட விரும்பாத தனது மனநிலையை எண்ணி கண்களில் கண்ணீர் வரும்போல் இருந்தது பவித்ராவுக்கு.
அவளின் பிறப்பே அவளை பொறுத்தவரை விபத்து தான். இன்று பாசம் என்று உருகி வழியும் மயூரி அப்படியொன்றும் ஆசையும், நேசமுமாக பெற்றுக் கொள்ளவில்லை அவளை. அவரது இடத்தை தக்க வைத்துக்கொள்ள அவளை ஒரு கருவியாக்கிக் கொண்டார் அவ்வளவே.
அதுவும் மயூரியின் காதலரான வில்வநாதனுக்கு சரியான நேரத்தில் விஷயம் தெரிந்திருந்தால், கருவிலேயே அவள் கதையை முடித்து விட்டிருப்பார் என்பதும் திண்ணம் தான். அவரது தேவை மயூரி மட்டும் தான். மயூரி மட்டுமே போதும், மயூரியால் வரும் வேறு எந்த சொந்தமோ, சிக்கலோ எதுவும் தேவையில்லை என்ற மனநிலையில் தான் இருந்தார் அவர்.
வில்வநாதன் மயூரியின் மீது கொண்ட முறையற்ற காதலுக்கான விளைவுதான் பவித்ரா. ஏற்கனவே திருமணமான வில்வநாதன் மயூரியின் மீது மோகம் கொண்டதுதான் இத்தனை சிக்கலுக்கும் காரணம். தந்தையின் காலத்தில் இருந்தே அடிதடி, பஞ்சாயத்துகள் என்று அதிலேயே ஊறிப் போயிருந்தவர்கள் வில்வநாதன் குடும்பம்.
அவரது தந்தை மகனையும் தன்னைப் போலவே வளர்த்து வைக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே அரசியலை தனக்கு கவசமாக்கிக் கொண்டார் வில்வநாதன். பணத்திற்காகவும், பதவிக்காகவும் என்று சொந்தக்கட்சியை சேர்ந்த பெரும்புள்ளி ஒருவரின் மகளை திருமணம் வேறு செய்துகொள்ள, அவர் நினைத்தது போல் பணம், பதவி என்று அத்தனையும் கிடைத்தாலும், ஏனோ நிம்மதி கிட்டவில்லை மனிதருக்கு.
அவரது மனைவி வத்சலா அவருக்கும் மேலாக இருக்க, நித்தமும் சண்டையும், சச்சரவுமாக குடும்பம் ஓடிக் கொண்டிருக்க, வீட்டிற்கு வருவதையே பெரும்பாலும் வில்வநாதன் தவிர்த்துக் கொண்டிருந்த நேரம் அவரது கண்ணில் பட்டவர் தான் மயூரி.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மயூரியின் தந்தை வில்வநாதனின் கட்சியைச் சேர்ந்தவராக இருக்க, மகளின் வேலைக்காக அவளை வில்வநாதனிடம் அழைத்து வந்திருந்தார் மயூரியின் தந்தை ஆனந்தன்.
முதல் பார்வையிலேயே மயூரியை மொத்தமாக வளைத்துவிடத் தான் தோன்றியது வில்வநாதனுக்கு. மனைவியின் ஆர்பாட்டத்தையும், ஆடம்பரங்களையும் பார்த்து சோர்ந்து போயிருந்தவருக்கு மயூரியின் அடக்கமான அழகு போதை கொடுத்தது.
அவருக்காக இல்லாத ஒரு வேலையை தனது கட்சியின் அலுவலகத்தில் உருவாக்கி, மயூரியை அங்கேயே அமரவைத்துக் கொண்டார் வில்வநாதன். ஆரம்பத்தில் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருந்தவர் தான் மயூரியும்.
ஆனால், நாளடைவில் அவரை அழகாக தனது வலையில் விழ வைத்திருந்தார் வில்வநாதன். மயூரியின் ஏழ்மையும் அதற்கு உதவியாக இருக்க, எப்படியோ மயூரியின் குடும்பத்தையும் சரிக்கட்டி இருந்தார். அவரது அன்பும், அக்கறையுமான பேச்சும், அளவில்லாமல் அவர் இறைத்த பணமும் அவர் நினைத்ததை சாதிக்க வைத்திருந்தது.
மயூரியின் தந்தையிடம் பேசி, மயூரியை அவர் வீட்டில் இருந்து வெளியேற்றியவர் தனக்கு சொந்தமான வீடு ஒன்றில் அவரை குடிவைத்து வைத்துவிட, அங்கே யாருமறியாமல் குடும்பம் நடத்த தொடங்கி இருந்தனர் இருவரும். ஆனால், ஆறே மாதத்தில் அவரின் ரகசியம் வெளிப்பட்டுவிட, வத்சலா ஆடித் தீர்த்துவிட்டார்.
அவர் விஷயத்தை தனது தந்தையிடம் கொண்டு செல்ல, அவரின் பேச்சையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை வில்வநாதன். அதுவும் அமைச்சர் பதவி வேறு கையில் இருக்க, அத்தனையும் அவர் விருப்பப்படி நடத்திக் கொண்டார் என்றே சொல்லலாம்.
வத்சலாவின் தந்தை கட்சி மேலிடத்தில் வில்வநாதனின் மீது புகாரளிக்க, தனது சொந்த விஷயம் என்று கழன்று கொள்ளவே பார்த்தார் வில்வநாதன். ஆனால், வத்சலாவின் தந்தை கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருக்க, கட்சி மேலிடம் அவருக்காக எதையாவது செய்துவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
வில்வநாதனையும், வத்சலாவின் தந்தையையும் அமர்த்தி கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் சமரசம் செய்ததின் விளைவாக, சென்னைக்கு வெளியே குடியமர்த்தப்பட்டார் மயூரி. வில்வநாதன் அவர் வீட்டிற்கு வந்து செல்லும் நேரங்களும் குறைந்து போக, தனது இருப்பை பலப்படுத்திக் கொள்ள நினைத்து தான் மயூரி வில்வநாதனின் வாரிசை சுமக்க தொடங்கினார்.
ஏற்கனவே வத்சலாவிற்கு ஒரு மகன் வேறு இருக்க, அவன்மீது வில்வநாதன் கொண்ட பாசமும் அறிந்தவர் மயூரி. இப்போது வில்வநாதனின் வருகை குறைய தொடங்கவுமே சுதாரித்துக் கொண்டார். வில்வநாதனை பிடித்து வைப்பதாக எண்ணி அவர் பவித்ராவை சுமக்க, கருவிலேயே குழந்தையை அழித்துவிடும்படி ஆட தொடங்கிவிட்டார் வில்வநாதன்.
‘முடியவே முடியாது’ என்று ஒரேடியாக மயூரி மறுத்துவிட, அவரிடம் போராடி தோற்றுப்போன வில்வநாதன் மிரட்டலில் இறங்க, தற்கொலை செய்து கொள்வதாக பதிலுக்கு அவரை மிரட்ட தொடங்கினார் மயூரி. அதுவரை அமைதியின் உருவமாக இருந்த மயூரி முதல்முறையாக வில்வநாதனை எதிர்த்து நிற்க, முதலில் கோபம் கொண்டாலும் சதா கண்ணீர்விடும் மயூரியின் நிலையை பொறுக்கமுடியாமல் அவருக்கு வேண்டியதை பார்த்து பார்த்து கவனிக்க தொடங்கினார் வில்வநாதன்.
மயூரிக்கு தேவையானது அத்தனையும் செய்து கொடுத்தாலும், கணவர் என்று எங்கும் தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை வில்வநாதன். முட்டாள் மயூரிக்கும் அவரின் இருப்பே பெரிதாக தோன்ற, அவரது கவனிப்பில் பூரித்துப் போயிருந்தார் மயூரி.
அவரின் கர்ப்பகாலம் தொட்டு பிரசவ நேரம் வரை மயூரியுடன் இருந்தாலும் கூட, தந்தை என்று தன் பெயரை வெளிப்படுத்த தயங்கித் தான் நின்றார் வில்வநாதன். அவரது செல்வாக்கை கொண்டு அவருக்கு நானு தெரிந்த ஒரு மருத்துவமனையில் மயூரியின் பிரசவமும் முடிந்து போக, பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் குறித்துகூட கவலை கொண்டதில்லை மயூரி.
அவருக்கு வில்வநாதனின் இருப்பும், தனது மகளின் சிரித்த முகமும் மட்டுமே போதுமாக இருக்க, பவித்ராவை பள்ளியில் சேர்க்கவேண்டும் என்ற பேச்சு ஆரம்பித்தபோது தான் மீண்டும் சச்சரவு தொடங்கியது. பிள்ளையின் பிறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என்று அத்தனையும் தேவையாக இருக்க, எப்படியாவது மயூரியை சரிக்கட்டி விடவே முயன்றார் வில்வநாதன்.
ஆனால், மயூரி மீண்டும் ஒருமுறை போராடி மகளை ஒரு பெரிய பள்ளியில் சேர்த்துவிட, அதற்கு பிறகும் கூட பெரிதாக எதிலும் தலையிடமாட்டார் வில்வநாதன். பவித்ரா என்று ஒரு மகள் இருப்பதை எப்போதும் அவர் வெளிக்காட்ட விரும்பியதே இல்லை.
அவரின் உத்தமன் வேடம் கலைந்து விடக்கூடாது என்பதில் அத்தனை தெளிவாக இருந்தார் வில்வநாதன். பவித்ரா மெல்ல வளர்ந்துவர, அவளின் ஏக்கங்கள் அந்த வயதிலேயே தொடங்கிவிட்டது எனலாம். சிறு குழந்தை தானே அவளும்.
என்னதான் மயூரி தாங்கி கொண்டாலும், தந்தையின் அரவணைப்பும், பாசமும் தனி தானே. தினமும் பள்ளிக்கு செல்கையில் தந்தையுடன் வந்து இறங்கும் மற்ற சிறுவர்களை பார்க்கையில் தானாகவே தந்தையை தேடி நிற்பாள் அவள்.
அந்த வயதில் தனது தாய்-தந்தையின் உறவு புரியாது போனாலும், பின்வந்த நாட்களில் தங்கள் வீட்டிற்கு எப்போதாவது வந்து செல்லும் தந்தையின் வரவும், எதற்கும் தந்தையை தேடாத தாயின் நிலையும் அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்திவிட, தனது எட்டு வயதிலேயே மெல்ல மெல்ல தனது கூட்டுக்குள் அடைந்து கொள்ள தொடங்கிவிட்டாள் அவள்.
தந்தை மட்டுமல்லாமல் தாயிடம் இருந்தும் அவளே விலகி நிற்க தொடங்கிவிட, அவளின் இந்த போக்கு ஆரம்பத்தில் பெற்றவளுக்கு புரியவில்லை. மகள் வெகுதூரம் சென்றுவிட்ட பின்னரே அவளது விலகலை புரிந்து கொண்டார் மயூரி.
ஆனால், வில்வநாதனின் நிலை அப்படியில்லை. விலகி நிற்கும் மகளின் குணம் அவருக்கு திமிராக தெரிய, மகள் மீது எப்போதும் பெரிதாக பாசம் கொண்டவர் இல்லை என்பதால் அவளை அடக்கி வைக்கவே நினைத்தார் வில்வநாதன்.
அவளின் நட்புவட்டம், படிப்பு, பள்ளி, ஆசிரியர்கள் என்று அத்தனையும் அவரது கண்காணிப்பில் கொண்டுவந்துவிட, மயூரிக்கு கணவரின் செயல் அக்கறையாக தெரிந்தாலும், அவர்களிடம் இருந்து விலகி நிற்க துடிக்கும் பவித்ராவுக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது.
ஆனால், அந்த வயதில் அவர்களை எதிர்த்து நிற்க முடியாத தன் நிலையை நொந்தபடியே அவள் பொறுமை காக்க, வில்வநாதனின் ஆதிக்கம் கீர்த்திவாஸனிடம் வந்து நின்றது. அவளின் பருவ வயதில் கீர்த்திவாஸனின் நட்பையும் வில்வநாதன் ஒதுக்கிவிட முற்பட, இப்போது மகள் தந்தையை எதிர்த்து நின்றாள்.
கீர்த்திவாஸனின் நட்பு கூடவே கூடாது என்று வில்வநாதன் மிரட்ட, மயூரியைப் போல் அழுது கரையாமல் துணிவுடன் நிமிர்ந்து நின்றாள் பவித்ரா.
“ஏன் பேசக்கூடாது” என்று ஒரே கேள்வியை கேட்டு நிற்க,
“சொன்னா கேட்டு பழகு. நீ அவன்கிட்ட பேசக்கூடாது.” என்று இன்னும் கடினத்துடன் வில்வநாதன் கூறிட,
“ஏன் பயமா இருக்கா?” என்று கேட்டுவிட்டாள் மகள்.
“எனக்கு என்ன பயம்?” என்று வில்வநாதன் மகளை முறைக்க,
“கவலைப்படாதீங்க. நிச்சயம் நான் மயூரி கிடையாது. எவனையும் நம்பி ஏமாறமாட்டேன்” என்ற மயூரியின் வார்த்தையில் முதல்முறையாக அவளை அறைந்துவிட்டார் வில்வநாதன்.
மயூரி பதறிக்கொண்டு ஓடிவர, “தள்ளிப் போடி” என்று அவருக்கும் அடி விழுந்தது.
“பாரு உன் வளர்ப்பை. இப்பவே இந்த பேச்சு பேசறா. கண்டிப்பா எவனையாவது இழுத்துட்டு வந்து நிற்பா பாரு” என்று மயூரியை வசைபாட தொடங்கிவிட்டார் வில்வநாதன்.
அவரது பேச்சை காதிலேயே வாங்காமல் நின்றவள், கீர்த்தியின் நட்பை விட்டுவிட தயாராகவே இல்லை. அவர் கத்தி முடித்து கிளம்பும் நேரம், “கீர்த்தி விஷயத்துல நீங்க எதுவும் செய்யக்கூடாது. என்னை விட்டுட்டு அவனை ஏதும் செய்ய நினைச்சீங்க…” என்று நிறுத்த,
“நானே உன்னை கொன்னுடறேன்” என்று வில்வநாதன் ஆத்திரத்துடன் மகளை நெருங்க, மயூரி கண்ணீருடன் கணவரின் முன்னே நின்றுவிட, இருவரையும் ஒருசேர முறைத்தபடியே அங்கிருந்து கிளம்பினார் வில்வநாதன்.
அடுத்ததாக மயூரி அவள் தந்தையை எதிர்த்து நின்றது அவளின் கல்லூரிப் படிப்பிற்காக. அவள் மருத்துவம் படித்துவிடக்கூடாது என்பதில் வில்வநாதன் உறுதியாக இருக்க, ‘படித்தால் அதை மட்டும் தான் படிப்பேன்’ என்று ஒற்றைக்காலில் நின்றுவிட்டாள் மகள்.
அவளின் பிடிவாதம் வில்வநாதனுக்கு மேல் இருக்க, அவளை வெளிநாட்டிற்கு அனுப்ப முயன்றபோதும், ‘எங்கும் செல்லமாட்டேன்’ என்று பிடிவாதத்துடன் நின்றாள் மயூரி. வில்வநாதன் அவளை கல்லூரியில் சேர்க்காமல் நாட்களை கடத்திக் கொண்டே இருக்க, ஒருநாள் யாரும் எதிர்பாரா விதமாக கையின் மணிக்கட்டை கத்தியால் கீறிவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டாள்.
மயூரி அலறி துடித்ததை எல்லாம் பொருட்டாகவே கொள்ளவில்லை அவள். அவர் பலமுறை அழைத்தும் மருத்துவமனைக்கு வராமல் அமர்ந்திருந்தவளை கண்டு அச்சம் கொண்ட மயூரி வில்வநாதனை வரவழைக்க, “என்னதாண்டி வேணும் உனக்கு. என் உயிரை குடிச்சுட்டு போகவே எனக்கு பொண்ணா பொறந்தியா” என்று அப்போதும் அடிக்க பாய்ந்தார் வில்வநாதன்.
தனது படுக்கையின் ஒரு ஓரம் வைத்திருந்த கல்லூரி சேர்க்கை படிவத்தை அவரிடம் நீட்டியவள் அழுத்தமாக அமர்ந்திருக்க, ‘அவளை அவ போக்குல விட்டுடுங்க” என்று வில்வநாதனின் காலிலேயே விழுந்துவிட்டார் மயூரி.
“எப்படியோ போய் தொலைங்க” என்று கத்திய வில்வநாதன் திருச்சி மருத்துவக்கல்லூரியில் அவளை சேர்த்துவிட நினைக்க, அவளோ சென்னையின் மத்தியில் அமைந்திருந்த சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருந்தாள்.
மயூரியை சுலபமாக தன் விருப்பப்படி எல்லாம் ஆட்டி வைத்தவர் தான் வில்வநாதன். ஆனால், மகளிடம் தனது மிரட்டல்களும், உருட்டல்களும் எடுபடாமல் போனதில் பெருத்த வருத்தம் மனிதருக்கு. அத்தனையும் பவித்ரா அவள் நினைத்தபடி சாதித்துக்கொள்ள, “அப்படியே என்னை மாதிரியே பொறந்து தொலைச்சிருக்கா பாரு” என்று தன்னையே திட்டிக் கொள்வார் வில்வநாதன்.
மருத்துவப்படிப்பில் சேர்ந்த நாள்தொட்டு அவள் வீட்டில் இருந்த நாட்களை விறல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு வீட்டிலிருந்து தன்னை பிரித்துக் கொண்டாள் பவித்ரா. கல்லூரி விடுதியில் தங்கி கொண்டவள் பெரும்பாலும் எதற்காகவும் விடுதியை விட்டு வெளியே வரமாட்டாள்.
தனது பெற்றவர்கள், மற்றவர்கள் குறித்து யாரிடமும் எதையும் அவள் பகிர்ந்து கொண்டதுமில்லை. நட்பு வட்டமும் கீர்த்திவாசனோடு சுருங்கிப்போக, பழக்கமெல்லாம் கல்லூரியிலும், மருத்துவமனையிலும் மட்டுமே. அந்த வாயிலை தாண்டி விட்டால் பெரும்பாலும் தனித்திருப்பதையே விரும்புவாள் அவளும்.
இப்போது இந்த நிமிடம் வரை அவள் வாழ்வு அவள் நினைத்தபடி சென்று கொண்டிருக்க, இடையில் இவன் எங்கிருந்து வந்து தொலைத்தான் என்று கடவுளை நிந்தித்தபடி அவள் அமர்ந்திருந்த நேரம் அமைதியாக அவள் அருகில் வந்து அமர்ந்திருந்தான் வருண் ஆதித்யன்.
அவள் கண்களை மூடி அமர்ந்திருக்க, மூடிய விழிகளின் முடிவில் முத்தாக ஒருதுளி நீர் கரை தட்ட காத்துக் கொண்டிருக்க, “ஓய் பொண்டாட்டி” என்ற அவனது விளிப்பில் பட்டென அதிர்ந்து கண்களைத் திறந்தவள் கண்களில் கண்ணீரின் நடுவே அலையாடியது அவன் பிம்பம்.