தினசரி தீ பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்தான் வருண் ஆதித்யன். ஒரு நாளைக்கு ஆயிரம் செய்திகள் கிடைத்தாலும், துப்பறிதலில் தான் ஆர்வம் வருணுக்கு. சந்தேகத்திற்கிடமான மரணங்கள், சமூக அநீதிகள், அரசியல் விளையாட்டுகள், பாலியல் குற்றங்கள், கல்வி, விளையாட்டில் நடக்கும் அரசியல் என்று அத்தனை விஷயங்களையும் அலசும் தினசரி தீ.
மக்களிடையே அவர்கள் நிறுவனத்திற்கென ஒரு பெயர் இருக்க, அதை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வான் வருண் ஆதித்யன். அரசியல் கட்சிகளுக்கோ, சமூக அந்தஸ்த்தில் இருப்பவர்களுக்கோ எந்த விதத்திலும் பணிந்து போகாமல் நடுநிலையாக நிற்பதாலேயே பலரின் வன்மத்திற்கு ஆளாகி இருந்தான் வருண்.
சமீபத்தில் நடந்த கொலை முயற்சி கூட எப்படியாவது அவனை தங்கள் வழியிலிருந்து ஒதுக்கி விட நினைத்து தான். ஆனால், நான் அதற்கெல்லாம் மசிந்து கொடுப்பவன் இல்லை என்று உணர்த்தும் விதமாக இதோ பத்தே நாட்களில் மீண்டும் பத்திரிக்கை அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்தான் அவன்.
பொதுப்பணித்துறை அமைச்சர் வில்வநாதனுக்கு சொந்தமான குவாரியில் அரசு அனுமதித்து இருந்ததைவிட அதிக அளவில் கிரானைட் கற்கள் வெட்டப்படுவதை குறித்து ஆதாரத்துடன் அந்த பகுதியின் நிருபர் செய்தி வழங்கியிருக்க, அதை குறித்த விவாதத்தில் தான் இருந்தான் வருண் ஆதித்யன்.
ஆதாரங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து திருப்தி பட்டுக்கொண்டவன் அந்த நிருபருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அப்போதே உறுதி செய்துவிட்டான். அடுத்தநாள் காலை தலைப்புச் செய்தியாக வெளியிட முடிவு செய்து அதற்கான படங்களையும் தானே தொகுத்து முடித்தவன் நேரம் இரவு ஒன்றை தொடும் நேரம் தான் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டான்.
அவனது பத்திரிக்கை அலுவலகம் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் அமைந்திருக்க, அடுத்த அரைமணி நேரத்தில் அண்ணா நகரில் அமைந்திருந்த அவனது வீட்டிற்கு வந்துவிட்டான் அவன். அவன் அன்னை ஏற்கனவே உறங்கச் சென்றிருக்க, மகனுக்காக ஹாலில் இருந்த சோஃபாவில் காத்திருந்தார் அன்பரசன்.
அவன் குளித்து கீழே வருவதற்குள் பிரட் ஆம்லெட் தயாரித்து ஒரு டம்ளர் பாலையும் காய்ச்சி தயாராக வைத்திருந்தார் அன்பரசன். தந்தையின் அருகில் அமர்ந்தபடியே வருண் ஆதித்யன் உண்டு முடிக்க, அவன் முழுவதுமாக முடித்தபின்பே வாய் திறந்தார் அன்பரசன்.
“அந்த வில்வநாதன் சாக்கடை வருண். தெரிஞ்சே ஏன் அவன் மேல கல்லெறியனும்?”
“எனக்கும் அந்தாளுக்கும் என்னப்பா… என் கைக்கு வந்த நியூஸ் கரெக்டா இருக்கு. நான் என் வேலையை செய்றேன். தட்ஸ்இட்” என்று அழகாக சிரித்தான் வருண் ஆதித்யன்.
அறிவுரை சொல்வது அவனுக்கு பிடிக்காது என்று தெரியும் தான். ஆனாலும், மகனின் நலன் மீது கொண்ட அக்கறையால் அவனிடம் பேச முற்பட்ட தன் மடத்தனத்தை நொந்தபடியே உறங்கச் சென்றார் அன்பரசன்.
தந்தையிடம் பேசிவிட்டு தனது அறைக்கு வந்தவனோ, அறையின் விளக்குகள் அத்தனையும் அணைத்துவிட்டு கட்டிலில் விழுந்துவிட்டான். இந்த இருட்டு மிகவும் பிடித்தமான ஒன்று அவனுக்கு.
தந்தையின் கவலை புரிந்தாலும், தனக்கு தெரியாதா என்ற எண்ணம் எழுவதை தடுக்க முடியவில்லை அவனால். அவனது அலுவலக விஷயங்களில் பிறந்து தலையீடுகளை எப்போதும் ஏற்காதவன் அவன். அது தந்தையாக இருந்தாலும் சரி. ‘நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரியும்’ என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடும் குணம் கொண்டவன் தான்.
தனது குணம் நன்கு புரிந்திருந்தும் தன்னிடம் வந்து பேசிய தந்தையை நினைத்து புன்னகைத்துக் கொண்டாலும், அவர் பயத்திற்கு காரணமான வில்வநாதனை குறித்தும் நன்கு அறிந்திருந்தான் வருண். அன்பரசன் அச்சம் கொள்ள தகுதியானவன் தான் வில்வநாதனும்.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றிக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அரசியலை முழுநேர தொழிலாக்கிக் கொண்டு அமர்ந்துவிட்டிருக்க, ஊருக்காக உத்தமன் வேஷம் பூண்டு கொண்டிருந்தாலும், அவன் எதற்கும் துணிந்தவன் என்பது அவனைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும்.
இப்போது தனது செயலுக்கும் நிச்சயம் அவன் எதிர்வினையாற்றுவான் என்று எதிர்பார்த்தே இருந்தான் வருண் ஆதித்யன். அவன் எண்ணம் சரி என்பதைப்போல் அடுத்தநாள் காலை பத்து மணிக்கெல்லாம் அவனது அலைபேசிக்கு அழைத்துவிட்டான் வில்வநாதன்.
“என்ன தம்பி. உடம்பெல்லாம் சௌக்கியமா? பத்துநாள் படுக்கையில கிடந்த உடம்பு. கவனமா பார்த்துக்கோங்க” என்று எடுத்த எடுப்பில் அறிவுரை வழங்க,
“என்ன சார் மிரட்டலா” என்றான் வருண்.
“சேச்சே… உங்கமேல எனக்கு அக்கறை இருக்கக்கூடாதா தம்பி. சமூகத்துக்கு நல்லதை எடுத்து சொல்ற இடத்துல இருக்கீங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா இழப்பு எங்களுக்கு தானே. அதுக்காக சொன்னேன்”
“அதை சொல்லு” என்று விகாரமாக சிரித்தபடி வில்வநாதன் அவன் பேச்சை ஆதரிக்க, அவருடன் சேர்ந்து அவரது அல்லக்கைகளும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் சென்னை மெரினா கடற்கரையில் அன்று நடக்கவிருந்த மாரத்தான் போட்டிக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவளுடன் அவளது நண்பன் கீர்த்திவாசன், இன்னும் சில நண்பர்களும் இணைந்திருந்தனர். உடலுறுப்புதானம் குறித்த விழிப்புணர்வுக்காக அந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதன் ஒருபகுதியாக மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நலம் மருத்துவமனையும், இன்னும் சில மருத்துவம் சார்ந்த அமைப்புகளும் சேர்ந்து அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்க, அவர்களுடன் தினசரி தீ பத்திரிக்கையும் கை கோர்த்து இருந்தது. பவித்ராவிற்கு அந்த நிகழ்ச்சிக்கான அலைபேசியைப் பார்த்த நிமிடமே அவன் நினைவு வந்தாலும், ‘அவன் எங்கே வரப்போறான்’ என்று அலட்சியமாக நினைத்து தனது போக்கில் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள்.
ஆனால், வரமாட்டான் என்று அவள் நினைத்தவன் சரியாக போட்டி ஆரம்பிக்க ஐந்து நிமிடங்களுக்கு முன் வந்து நின்றுவிட, தூரத்தில் இருந்தே அவனை கவனித்துவிட்டாள் பவித்ரா.
அவன் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தவள் தன் குழுவினருடன் ஒதுங்கி நின்றுகொள்ள, அதற்கெல்லாம் தேவையே இல்லாமல் காரிலிருந்து இறங்கிய கணமே அவளைக் கண்டு கொண்டிருந்தான் வருண் ஆதித்யன்.
கண்ணில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தவன் இயல்பாக பார்வையைச் சுழற்றிட, அழகாக அவன் பார்வை வட்டத்தில் விழுந்து தொலைந்திருந்தாள் பவித்ரா. ஒருநொடி அவளிடம் பார்வையைத் தேக்கியவன் அவளது ஒதுக்கத்தில் அவளை கண்டுகொள்ளாதவன் போல் நகர்ந்துவிட்டான்.
கண்களில் அணிந்திருந்த கண்ணாடியுடனே அங்கிருந்த தற்காலிக மேடையில் அமர்ந்து கொண்டவன் நிகழ்ச்சி முடியும் வரை அவ்வபோது அவளை கவனித்துக் கொண்டே தான் இருந்தான். ஆனால், முதல் நொடி தயங்கி நின்றவளோ, சில நிமிடங்களில் தன்னை சுதாரித்துக் கொண்டு எப்போதும் போல் தனது வேலையை கவனிக்க தொடங்கியிருந்தாள்.
அன்றைய நிகழ்வில் ரத்த தானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, அதன் முக்கியத்துவம் உணர்ந்தவள் என்பதால் மற்றவற்றை ஒதுக்கி முழுதாக பணியில் மூழ்கி போயிருந்தாள் அவள். நிகழ்ச்சிக்கு வந்திருந்த முக்கிய விருந்தினர்களும் ரத்ததானம் செய்ய முன்வர, அவர்களின் உடல்நிலையை பரிசோதித்து அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டிருந்தனர் பவித்ராவின் குழுவினர்.
சுகந்தனும், சுஜாதாவும் மேடையில் இருக்க, அவர்கள் மருத்துவமனையின் சார்பில் பவித்ரா இந்த பணிகளை கவனித்துக் கொண்டிருந்த நேரம் அவள் முன்னே வந்து நின்றான் வருண் ஆதித்யன்.
சட்டென தனக்கு முன்னால் கைநீட்டியவனை பவித்ரா சிறு அதிர்வுடன் பார்த்து வைக்க, “ம்ம்” என்று லேசாக தலையசைத்தபடி அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் வருண் ஆதித்யன்.
“நீங்க பிளட் டொனேட் பண்ண முடியாது.” என்று அமைதியான குரலில் அவள் மறுக்க,
“ஏன்” என்று ஒரே வார்த்தையில் ஏகத்திற்கும் அதிர்ச்சியைக் காட்டினான் வருண் ஆதித்யன்.
“உங்களுக்கு டிரீட்மெண்ட் முடிஞ்சு ஒன் மந்த் கூட கம்ப்ளீட் ஆகல.”
“ஓஹ்… என்ன டாக்டர் மேடம். நானும் என்னால முடிஞ்ச எதையோ செய்ய நினைச்சா, இப்படி முடியாதுன்னு சொல்லி துரத்தி விடறீங்களே.” என்று வருண் மீண்டும் கவலை கொள்ள,
“ஏன் முடியாம… ஆர்கன் டொனேஷன் பண்ணலாமே. அதுக்கு நீங்க பிட் தான்.” என்றபடியே தனது டேபிளில் இருந்த ஒரு விண்ணப்பத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள் பவித்ரா.
“மேடம் சொல்லிட்டிங்க… பொண்டாட்டி பேச்சை மீற முடியுமா?” என்று சிறு குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி உரைத்தவன் அந்த விண்ணப்பத்தை கையில் வாங்க,
“மிஸ்டர்…” என்று அவனுக்கு முன்பாக தன் விரலை நீட்டியிருந்தாள் பவித்ரா.
“என்ன மேடம்…” என்று ஏதுமறியாதவன் போல் அவன் கேட்டதில், தான் தவறாக கேட்டுவிட்டோமோ என்று பவித்ராவுக்கே சந்தேகம் வந்துவிட, அவளை அதே குழப்பத்தில் நிறுத்தியபடி கையில் இருந்த விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கி இருந்தான் வருண் ஆதித்யன்.
பவித்ராவின் முகமாற்றத்தில் கீர்த்திவாசன் அவளை நெருங்கிவர, “எனக்கு தலைவலியா இருக்கு கீர்த்தி. கொஞ்சம் பாரு” என்றபடி அந்த இடத்தை விட்டு எழுந்துவிட்டாள்.
அவளின் தலைவலி தான் தான் என்று புரிந்தவன், அமைதியாக தன்னுள் புன்னகைத்தபடி தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். கீர்த்திவாசன் வருணை ஆராய்ச்சியாக பார்க்க, முகத்தை வெகு சாதாரணமாக மாற்றிக் கொண்டவன் இரண்டே நிமிடத்தில் அந்த இடத்தில இருந்து நகர்ந்து விட்டான்.
அவனது பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து வந்திருந்தவர்களிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தவன் கிளம்பும் நேரம் மீண்டும் அவன் கண்ணில் விழுந்தாள் பவித்ரா. அங்கிருந்த கூட்டத்தை விட்டு சற்று தள்ளி உழைப்பாளர் சிலையின் பின்புறம் இருந்த கல் இருக்கையில் யார் கண்ணிலும் பட்டுவிடாதபடி அமர்ந்திருந்தாள் அவள்.
உண்மைக்கும் தலைவலி வந்துவிட்டதோ என்னவோ. கைகளால் தலையை வேறு தாங்கி கொண்டிருந்தாள். அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், மற்றவர் கவனத்தை கவராமல் அவளை நெருங்கி அவள் அருகில் அமர்ந்தான் வருண் ஆதித்யன்.
யாரோ அருகில் அமரும் அரவத்தில் நிமிர்ந்து பார்த்தவள் நிச்சயம் வருண் ஆதித்யனை அங்கே எதிர்பார்க்கவில்லை. அவனைக் கண்டதும் அவள் எழுந்து கொள்ள நினைக்க, “ப்ளீஸ் எழுந்துடாத.” என்று அவளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கினான் வருண் ஆதித்யன்.
அவன் பேச்சை கேட்கும் எண்ணமில்லாமல் அவள் எழுந்து கொள்ள முற்பட, “நிச்சயமா கையைப் பிடிச்சு உட்கார வைப்பேன் பவித்ரா.” என்று சற்றே அழுத்தத்துடன் வருண் கூற,
“யார் நீங்க? என்ன விளையாடிட்டு இருக்கிங்களா” என்று முறைத்துவிட்டாள் பவித்ரா.
“நிச்சயமா இல்ல. என் பொண்டாட்டிகிட்ட ரெண்டே நிமிஷம் பேசணும் எனக்கு.” என்றவனை,
“ஏய்…” என்று பவித்ரா அதட்ட,
“நோம்மா… இது மரியாதை இல்ல. என்கிட்டே இப்படி பேசக்கூடாது.” என்று புருவம் உயர்த்தி அவன் திருத்த,
“உன்கிட்ட பேச எனக்கு எதுவுமே இல்ல.” என்றபடி பவித்ரா எழுந்துகொள்ள, பட்டென அவள் கையைப் பிடித்துவிட்டான் வருண் ஆதித்யன்.
பவித்ரா வேகமாக தனது இடது கையை அவனை நோக்கி வீச, நொடிப்பொழுதில் இடக்கையும் அவன் வசமாகி இருந்தது.
“நோ வயலன்ஸ்” என்றபடியே அவளை சுலபமாக தனக்கு அருகில் அமர்த்திவிட்டான் வருண்.
அவள் அமர்ந்த கணமே கைகளையும் விலக்கிக் கொண்டு, “சாரி” என்றுவிட, இன்னும் உக்கிரம் குறையவில்லை பவித்ராவுக்கு.
“பவித்ராவுக்கு கோபம் வந்தா பத்ரகாளி தானோ” என்று சிரிப்புடன் வினவியவன், “ஒரு ரெண்டு நிமிஷம் என்ன சொல்றேன்னு கேட்கலாமே. தென் அடிச்சாலும் வாங்கிக்கறேன்” என்றிட, ‘என்ன சொல்லிவிட போகிறாய்’ என்றுதான் பார்த்தாள் பவித்ரா.
அவள் பார்வையை உணர்ந்தவனோ, “சிம்பிள்… நீ வார்த்தைக்காக சொன்னதை நான் வாழ்க்கையா கேட்கறேன். எனக்கு பொண்டாட்டியா நீ வேணும்.” என்றான் அதிராமல் பதறாமல்.
அவன் பேச்சில் மொத்தமாக பதட்டம் கொண்டதென்னவோ பவித்ரா தான்.
“அன்னைக்கு உன் புருஷன்னு அந்த சிஸ்டர் சொன்னதுல இருந்து உன்னைத்தவிர வேற யாரையும் பொண்டாட்டியா நினைக்க முடியல. நான் என்ன செய்யட்டும்? யோசிச்சு சொல்லு.” என்று அவள் தலையில் சிறுபிள்ளைக்கு தட்டுவதைப் போல் தட்டிக் கொடுத்து கிளம்பிவிட்டான் வருண்.