ஒரு வாரம் வேகமாக கடந்து போயிருக்க, அன்று மருத்துவர் சுஜாதாவின் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவள் வருண் ஆதித்யனை அனுமதித்த அதே மருத்துவமனை தான். அந்த மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் தான் அன்றைய தினம் பணி ஒதுக்கப்பட்டிருந்தது அவளுக்கு.
கல்லூரி நேரம் போக, மீதி நேரங்கள் பெரும்பாலும் இந்த மருத்துவமனையில் தான் கழியும் பவித்ராவுக்கு. மருத்துவர் சுஜாதா சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக இருக்க, அவரது கணவர் சுகந்தன் தொடங்கியது தான் இந்த நலம் மருத்துவமனை.
அங்கு வரும் நோயாளிகளின் நலம் பேணுவது மட்டுமே அவரது குறிக்கோளாக இருக்க, சிறிய அளவில் தான் என்றாலும், தரமாக இயங்கி வந்தது நலம்.
பவித்ராவின் ஆர்வமும், மருத்துவத் துறையின் மீது அவள் கொண்டிருந்த காதலும் சுஜாதாவிற்கு பிடித்துப் போக, அவளுக்கான வழிகாட்டியாக எப்போதும் உடன் நிற்பார் அவர். இந்த பகுதி நேர மருத்துவப் பணியும் கூட அவர் ஏற்பாடு தான்.
சுகந்தனிடம் பேசி பவித்ராவை அங்கு பணியமர்த்தியது சுஜாதாவாக இருந்தாலும், அவள் வேகமும், நோயாளிகளை அவள் கையாளும் விதமும் இயல்பாகவே அவள் மீது ஒரு மரியாதையை வரவழைத்து விடும் படி தான் இருக்கும். சுகந்தனே பல சமயங்களில் பவித்ராவை பற்றி பாராட்டுதலாக ஓரிரு வார்த்தைகள் சுஜாதாவிடம் கூறி வைப்பார்.
இதோ இன்றும் கல்லூரி விடுமுறை தினமாக இருக்க, காலை முதல் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்தவள் மாலை வேலையில் ஓய்வெடுக்க நினைக்காமல் இங்கு வந்து அமர்ந்திருந்தாள். அதுவும் புரா நோயாளிகள் பிரிவு அன்று வழக்கத்தை விடவும் சற்றே கூட்டமாக காணப்பட சளிக்காமல் அவர்களுடன் பேச்சு கொடுத்தபடியே தன் வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
அவள் கவனித்துக் கொண்டிருந்த கடைசி நோயாளி வெளியேறும் நேரம், அதற்காகவே காத்திருந்தது போல் அவசரமாக அந்த அறைக்குள் ஓடி வந்தார் செவிலி மரியா.
“என்ன சிஸ்டர்… ஏன் இவ்வளவு அவசரம்?” என்று சோர்ந்தவளாக இருக்கையில் சாய்ந்தபடியே பவித்ரா கேட்க,
“ஈவினிங் உன் புருஷன் வந்திருந்தாரே பவி… பார்த்தியா? என்று அவளை அதிர வைத்தார் மரியா.
“என் புருஷனா” என்று அவள் வாயசைக்க,
“ஆமா பொண்ணே… அன்னைக்கு கத்தி குத்தோட தூக்கிட்டு வந்து ராத்திரியெல்லாம் கண்விழிச்சு காப்பாத்தி அனுப்பினியே அவரே தான்.” என்று விளக்கமாக மரியாள் விளக்க,
“போதும் சிஸ்டர். வெளியே எங்கேயும் சொல்லி என் மானத்தை வாங்கிடாதீங்க” என்று பாவமாக சிரித்தாள் பவித்ரா.
“எதுக்காக இங்கே வந்தாங்க? என்ன விஷயம்?” என்று பவித்ரா விசாரிக்க,
“உன்னைத் தேடி தான்”
“என்ன”
“அவரை இங்கே அட்மிட் பண்ணது யாருன்னு விசாரிக்க வந்தாரு”
“என்ன சொன்னிங்க”
“என்ன நடந்ததோ அதையே சொல்லிட்டேன் பொண்ணே” என்று மரியா சிரிப்புடன் கூறவும், ஒரு நொடி மாறிய முகத்தை சட்டென இயல்பாக்கிக் கொண்டாள் பவித்ரா.
“உன்னைப் பார்த்து நன்றி சொல்லணுமாம்” என்று மரியா மேலும் கூற,
“அதெல்லாம் எதுக்கு சிஸ்டர். மறுபடியும் இங்கே வந்தா, நான் இங்கே இல்லன்னு சொல்லிடுங்க.” என்று சாதாரணமாக முடித்துவிட முயன்றாள் பவித்ரா.
“அதெப்படி பொண்ணே உன் புருஷன்கிட்ட பொய் சொல்றது” என்று அவர் கூறும்போதே,
“எக்ஸ்க்யூஸ் மீ…” என்றபடி கதவைத் திறந்தது சாட்சாத் வருண் ஆதித்யன் தான்.
அந்த நேரம் அவனை அங்கே எதிர்பாராமல் இரண்டு பெண்களும் திகைத்து நின்றுவிட, ‘தாங்கள் பேசியது காதில் விழுந்து இருக்குமோ’ என்று குன்றியபடியே நின்றாள் பவித்ரா.
ஆனால், அப்படியெல்லாம் ஏதுமில்லை என்று அறிவிப்பது போல் புன்னகையுடன் நின்றிருந்தான் எதிரில் இருந்தவன்.
அவன் சிரிப்பை இயல்பாக ஏற்க முடியாமல் பவித்ரா நின்றுவிட, மரியா, “யார் உங்களை உள்ளே அனுமதிச்சது. கதவைத் தட்டிட்டு வரணும்னு தெரியாதா?” என்று அதட்டிவிட்டார்.
“சாரி சாரி சிஸ்டர்…” என்று அப்போதும் சிரித்தபடியே மன்னிப்பை வேண்டினான் வருண் ஆதித்யன்.
மரியா இன்னும் ஏதோ பேச முற்பட, “சாரி சிஸ்டர்.” என்று மீண்டும் அவர் வாயை அடைத்தவன், “உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்க இந்த ரூம்க்கு வரவும் நானும் பின்னாடியே வந்துட்டேன். நீங்க கதவை சரியா லாக் பண்ணல போல. சோ பேசியது மொத்தமும்..” என்று நிறுத்தி தன் காதில் கையை வைத்து காண்பித்தான் வருண் ஆதித்யன்.
அவன் பேச்சில்,’போச்சு’ என்று முனகியபடியே தலையில் அடித்துக் கொண்டாள் பவித்ரா.
மரியாவும் அவன் பேச்சில் மேற்கொண்டு என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறி நிற்க, “சோ நான் தேடி வந்தது உங்களைத் தான் இல்லையா?” என்று பவித்ராவிடம் நேரடியாக பேச தொடங்கினான் அவன்.
பவித்ரா அப்போதுதான் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். சிறு சங்கடத்துடன் அவள் நிற்க, “சில்…” என்று ஒரே வார்த்தையில் அவளை குளிர்விக்க முயன்றான் வருண்.
“உங்களைப் பார்த்து ஒரே ஒரு முறை நன்றி சொல்லணும்னு தான் தேடி வந்தேன். ஆனா, அது போதாது போலவே… வருண் ஆதித்யனுக்கு வாழ்வு கொடுத்து இருக்கீங்களே.” என்று அவன் மேலும் பேச,
“ப்ளீஸ்.” என்று கையை உயர்த்தி அவனை தடுத்தாள் பவித்ரா.
“அடிபட்டு சுயநினைவில்லாம இருந்திங்க. ஒரு டாக்டரா அப்படியே விட்டுட்டு போக மனசில்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணேன். அவ்ளோதான்… உங்களை காப்பாத்தியது என்னோட சீப் சுஜாதா மேம். உங்க நன்றியை அவங்களுக்கு தான் சொல்லணும்.” என்று பவித்ரா முடித்துக்கொள்ள, லேசாக தலையசைத்து அவளை மெச்சுவது போல் பார்த்து வைத்தான் வருண்.
“அன்னைக்கு நடந்தது அப்படியே நினைவிருக்கு டாக்டர் மேடம். நீங்க சாதாரணமா சொன்னாலும், பண்ணது பெரிய விஷயம். தேங்க்ஸ்” என்று மீண்டும் வருண் ஆதித்யன் நன்றி கூற, அதற்குமேல் மறுக்காமல் அமைதியாக நின்றுவிட்டாள் பவித்ரா.
அவளுக்கு ‘எப்படியாவது இவன் கிளம்பி விட மாட்டானா’ என்பதுதான் அப்போதைக்கு எண்ணமாக இருந்தது. என்னவோ ஒரு படபடப்பு. அதுவும் மரியாவின் கேலியை அவன் கேட்டு விட்டான் என்பதும் அவளை இயல்பாக இருக்க விடவில்லை.
அவள் படபடப்பை உணராதவனாக, “பேச மாட்டீங்களா” என்று வருண் வேறு படுத்தி வைக்க,
“என்ன பேசணும்?” என்றுவிட்டாள் சட்டென.
“ஏதாவது பேசலாமே. நான் வருண் ஆதித்யன். தினசரி தீ மேனேஜிங் டைரக்டர். தினசரி தீ கண்டிப்பா தெரிஞ்சிருக்குமே” என்றான் புன்னகையுடன்.
பவித்ரா அப்போதும் மௌனம் காக்க, தன் கையை அவளுக்கு முன்பாக நீட்டி, “உங்களைப்பத்தியும் சொல்லலாம். உயிரையே கொடுத்து இருக்கீங்க… கையைக் கொடுக்க மாட்டீங்களா” என்று வருண் ஆதித்யன் கன்னம் குழிய சிரித்துக்கொண்டு நிற்க, ஏனோ ‘தள்ளி நில்’ என்று எச்சரித்துக் கொண்டே இருந்தது கன்னி மனது.
மனதின் வார்த்தைகளை அப்படியே ஏற்பவளாக, “எனக்கு நேரமாச்சு சிஸ்டர். நான் கிளம்புறேன்” என்றபடியே தன் அலைபேசி மற்ற பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு நடக்க தொடங்கினாள் பவித்ரா.
அவளின் அலட்சியம் வருண் ஆதித்யனை தடுமாற வைக்க, தடம் மாறியவனாக அவள் வழியை மறித்து நின்றான் வருண் ஆதித்யன்.
பவித்ரா அதிர்ந்து நிற்க, “இது முறையில்லையே” என்று மீண்டும் கேட்டு நின்றான் வருண்.
“என்ன பண்றிங்க சார் நீங்க.” என்று மரியா வேகமாக இவர்களை நெருங்க,
“என்ன தெரியணும் உங்களுக்கு?” என்று நிமிர்ந்து நின்றாள் பவித்ரா.
வருண் ஆர்வமாக அவளை பார்வையிட, “பவித்ரா… மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடெண்ட். போதுமா… இதைத்தவிர என்னைப்பத்தி சொல்றதுக்கு எதுவும் இல்ல. சோ, இனி இப்படி வந்து நிற்க வேண்டாம். ஏன்டா உதவி பண்ணோம்னு யோசிக்க வைக்காதிங்க” என்றவள் அதற்குமேல் தாமதிக்காமல் அவனைத் தாண்டி நடந்துவிட்டாள்.
“பவித்ரா” என்று தனக்குள் அவள் பெயரை உச்சரித்தபடி, வருண் மெல்ல அவளை தொடர, அந்த மருத்துவமனையின் பார்க்கிங் ஏரியாவில் இருந்த தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள் பவித்ரா.
என்னவோ, அந்த நிமிட உந்துதலில் சட்டென தனது காரில் ஏறி அவளைத் தொடர்ந்தான் வருண் ஆதித்யன். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்திருந்த மாணவர் விடுதிக்குள் அவள் வண்டி நுழையும் வரை காரில் இருந்தபடி கவனித்துக் கொண்டிருந்தவன் சிறு புன்னகையுடன் தனது காரை இயக்கிக்கொண்டு போக்குவரத்தில் கலந்துவிட்டான்.
சென்னை அண்ணா நகரில் அமைந்திருந்த அவனது வீட்டை அடைந்து விட்டாலும், வீட்டிற்குள் நுழைய விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு வெளியே விரிந்திருந்த தோட்டத்தில் கண்ணை மூடி அமர்ந்து கொண்டான் வருண் ஆதித்யன்.
கண்களுக்குள் அன்று போலவே இன்றும் அவள் முகம் காட்சியாக, “உன் புருஷன்” என்ற மரியாவின் வார்த்தைகள் அப்போதும் காதில் கேட்பதுபோல் இருந்தது அவனுக்கு.
“என்னடா பண்ணிட்டு இருக்க நீ” என்று அவனை அவனே கடிந்து கொள்ள, சிறுபிள்ளைத் தனமான தனது செயல்களை குறித்து அவனுக்கே சிரிப்பாக இருந்தது.
“அந்த பொண்ணு ஆல்ரெடி கமிட்டேடா கூட இருக்கலாம்டா.” என்று மனம் இடித்துரைக்க, “இப்போ நான் என்ன லவ் பண்றேன்ன்னா சொன்னேன்” என்று மனதை அடக்க முயன்றான் அவன்.
“வேற என்னதான்டா செய்ய நினைக்கிற” என்று அப்போதும் அறிவு கேள்வி எழுப்ப,
“ஏதாவது செய்வோம்” என்று அப்போதைக்கு அவளை தள்ளி வைக்க மட்டுமே முடிந்தது வருண் ஆதித்யனால்.
அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியாகி நின்றாலும், அவள் முகம் பார்த்துவிடும் ஆர்வத்தில் தான் அனுமதியின்றி அவன் உள்ளே நுழைந்தது. ஆனால், அவன் உள்ளே நுழைந்த அதே கணம் அவனுக்குள் அவள் நுழைந்துவிட்டாளோ என்று அவனை அச்சம் கொள்ள வைத்தாள் பவித்ரா.
அவளைப் பார்த்த இந்த ஒருமணி நேரத்திற்குள் குறைந்தது நூறு முறையாவது உச்சரித்திருப்பான் அவள் பெயரை. காதலில் எல்லாம் இன்றுவரையிலும் பெரிதாக நம்பிக்கை கொண்டவன் கூட கிடையாது. ஆனால், பெண் என்னவோ செய்தாள் அவனை.
இரவு பத்து மணிக்கு வீட்டை அடைந்தவன் பன்னிரண்டு மணி வரையிலும் தோட்டத்தில் கிடந்த ஊஞ்சலில் விழுந்து கிடந்தாலும், பவித்ராவைப் பற்றி ஒரு தெளிவுக்கு வர முடியவில்லை அவனால்.
என்னவோ, தன்னை காப்பாற்றியவரை நேரில் சந்தித்து ஒரு நன்றியுரைத்து விட வேண்டும் என்ற உந்துதலில் தான் அவளை அவன் தேடிச் சென்றது. அதுவும் முதல் முறை அவள் இல்லை என்று செவிலி கூறிவிட, மீண்டும் செல்ல வேண்டுமா என்று அலுத்துக் கொண்டு திரும்பியவன் தான்.
இரவு அந்த மருத்துவமனைக்கு அருகில் ஒரு வேலையிருந்ததால், இப்போது முயற்சித்துப் பார்க்கலாமே என்று தான் மீண்டும் அந்த மருத்துவமனைக்குள் அவன் நுழைந்தது. அந்த நேரம் மரியா அவன் கண்ணில்படவும், அவரைத் தொடர்ந்து சென்றிருந்தான்.
அவர்கள் பேசியதும் எதேச்சையாக காதில் விழுந்து வைக்க, அப்போதிருந்து தான் அவனை இம்சிக்க தொடங்கியிருந்தாள் பவித்ரா.
அவள் குணம் வியக்க வைத்தது அவனை. யாரென்றே அறியாத ஒருவன் உயிரைக் காப்பாற்ற அவள் போராடியதும், உடனிருந்தவருடன் சண்டையிட்டு தன்னை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றதும் இன்னும் நினைவில் இருந்தது அவனுக்கு.
அதற்கும் மேலாக, முன்பின் அறியாத ஒருவனுக்காக கணவன் என்று கையெழுத்திட்டு அவன் உயிரைக் காப்பாற்றியவளை என்ன முயன்றும் மறக்க முடியவில்லை அவனால்.
இரவு ஒருமணி வரை அதே இடத்தில் தவம் இயற்றியவன், அவளைப் பற்றி முழுதாக அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த பின்பே தனது அறைக்குச் சென்றான்.