28

ஆத்திசூடி – கெளவை அகற்று

பொருள் – வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

இந்திரசேனா சென்னையில் இருந்து கிளம்பும் போதே அவள் அன்னையிடமும் நாயகியிடமும் கேட்டுத்தான் கிளம்பியிருந்தாள் சிவகாசிக்கு. அப்பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன வாங்க வேண்டும் என்று ஒவ்வொன்றாய் கேட்டு வாங்கியும் இருந்தாள்.

தன் மாமனாரிடமும், அகல்யாவிடமும் கூட கேட்டிருந்தாள் என்னெல்லாம் செய்ய வேண்டும் என்று. அபராஜிதனைத் தவிர மற்ற அனைவரிடமும் அவள் தினமும் பேசிக் கொண்டு தானிருந்தாள்.

மருத்துவமனையில் இருந்து அவளை தாங்கள் அழைத்து செல்வதாக சாதனா சொல்லவும் அபராஜிதனின் முகம் என்னவோ போலானது. சடுதியில் அதை மறைத்துக் கொண்டு தன் மனைவியை பார்க்க அவள் ஒன்றும் சொல்லாதிருக்கவும் சரியென்றுவிட்டான் தன் மாமியாரிடம்.

அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை. வீட்டில் அவனால் அவளுடன் இருந்து கவனித்துக் கொள்ள முடியாது என்று எண்ணித்தான் அவர்கள் அழைத்து செல்கிறார்கள் என்றும் புரிந்தது.

ஏற்கனவே அவளுடன் பேசியே ஒரு வாரம் ஆகியிருந்தது. இதில் அவளின் இருப்பும் இல்லாது போகுமே என்று அவனுக்கு சங்கடமாகவே இருந்தது. அவர்கள் வீட்டிற்கு உடன் சென்று அவளை விட்டுத்தான் வந்தான்.

தினமும் அவ்வளவு தூரம் அவனால் வர முடியாததால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவளை நேரில் வந்து பார்த்துச் சென்றான்.

விஷயம் கேள்விப்பட்டு அகல்யாவும் ஓடித்தான் வந்திருந்தாள் மற்றவளை பார்க்க. “என்ன அண்ணி இதெல்லாம் இப்படி ஆகிப்போச்சே. மயக்கம் போட்டு விழுந்துட்டீங்கன்னு அத்தை சொன்னாங்க”

“ஏன் அண்ணி எதுவும் விசேஷமா??”

“என்ன அகல் எல்லாரும் இதையே கேட்கறீங்க?? அப்படியெல்லாம் ஒரு விசேஷமும் இல்லை. எனக்கு முன்னாடி சீனியர் நீங்கலாம் இருக்கும் போது அதுக்குள்ள என்னை கேட்கறீங்க பார்த்தீங்களா…” என்று விளையாட்டு போலவே பேசினாள் இந்திரசேனா.

“நீ வேற ஏன் இந்து?? ஒவ்வொரு மாசமும் ஒரு நாள் இரண்டு நாள் தள்ளிப்போனா கூட அதுவா இருக்குமான்னு இப்படி இருக்குமான்னு ஆசையோட எதிர்பார்ப்பேன். என்னமோ தள்ளிட்டே போகுது, அதனால எல்லாருக்கும் சங்கடம்”

“சீய் என்ன அகல் இதெல்லாம் இதுக்கெல்லாமா வருத்தப்படுவாங்க. எல்லாமே எல்லாருக்கும் உடனே கிடைக்கறதில்லை. தவிர உனக்கு ஒண்ணும் அப்படி வயசாகிடலை இன்னும் நாளிருக்கு. அதுக்குள்ள மனசை தளரவிடாதே”

“ரொம்பவும் எதிர்பார்த்தா கஷ்டமா தான் இருக்கும். கிடைக்க வேண்டியது தன்னால கிடைக்கும். என்ன அதுக்கான முயற்சியை மட்டும் நீங்க கைவிட்டிற கூடாது அம்புட்டு தான் சொல்லிட்டேன்” என்று சொல்ல “இந்து ரொம்ப மோசம் நீ, இரு உங்க அண்ணன்கிட்ட சொல்றேன்”

“சொல்லிக்கோ சொல்லிக்கோ நாங்கலாம் அதுக்கெல்லாம் அசர மாட்டோம்”

“அண்ணன் வந்துச்சா??” என்று அகல்யா கேட்கவும் இந்திரசேனாவின் முகம் இறுக்கமாகியது.

“ஹ்ம்ம் ரெண்டு நாளைக்கு ஒரு தரம் வந்து போவாங்க”

“என்னாச்சு அண்ணி?? ஏன் டல்லா பேசறே??”

“இங்க பாரு அகல் ஒண்ணு நீ என்னை அண்ணின்னு கூப்பிடு இல்லை இந்துன்னு கூப்பிடு ரெண்டையும் மாத்தி மாத்தி கூப்பிடாதே. நாம பிரண்ட்ஸ்ன்னு சொல்லியாச்சுல ஒழுங்கா பேர் சொல்லியே கூப்பிடு”

“ஓகே ஓகே இனிமே பேர் சொல்லியே கூப்பிடுறேன். நான் கேட்டதுக்கு பதில் சொல்லு”

“என்னைப் பார்த்தா டல்லா இருக்க மாதிரியா இருக்கு”

“இல்லையா பின்னே??”

“இல்லைவே இல்லை”

“உன்கிட்ட கேட்டா சொல்ல மாட்டே நான் அண்ணன்கிட்ட கேட்கறேன்”

“அகல் மாமாக்கெல்லாம் எதுவும் சொல்லிடலையே”

“இனிமே தான் பேசணும் அப்பாகிட்ட உனக்கு இப்படி ஆகிடுச்சுன்னு தெரிஞ்சா ஓடி வந்திருவாங்க”

“ஆமா எனக்கு என்னாச்சு இப்போ ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடிக்கப் போறீங்க சொல்லுங்க. பாவம் அவங்களே இப்போ தான் ஊருக்கு போனாங்க, அட்மிஷன் வேலையெல்லாம் போயிட்டு இருக்கு இப்போ போய் அவங்களை டிஸ்டர்ப் பண்ண வேணாம்”

“நானும் அவரும் இந்த வேலையெல்லாம் முடிஞ்சதும் ஊருக்கு போகத்தானே போறோம். அப்போ பார்த்துக்கறோம்”

“சொல்லலைன்னா என்னைய தான் கேப்பாங்க இந்து”

“நான் சொல்லிக்கறேன் அவங்ககிட்ட”

“ஹ்ம்ம் ஓகே, சரி நீ உடம்பை பார்த்துக்கோ” என்று கிளம்பியிருந்தாள்.

சாதனாவிற்கும், நாயகிக்கும் மகளின் மயக்கம் சாதாரண மயக்கமாகிப் போனதில் சற்றே வருத்தம் தான். அதன் பின் தான் கச்சேரியே தொடங்கியது, அவள் ஏன் சரியாக சாப்பிடவில்லை என்று ஆரம்பித்து கணவன் மனைவி உறவு வரை விசாரிக்க “நான் தெரியாம மயக்கம் போட்டு விழுந்திட்டேன். சாதாரணமா நடந்த ஒரு விஷயத்துக்கு எதுக்கு இப்படி ஆர்ப்பாட்டம் பண்றீங்க”என்று இவள் அவர்களை திரும்பி வறுத்தெடுக்க வாயை மூடிக் கொண்டனர்.

அந்த வீட்டில் அவளை கேள்வி கேட்காத ஒரே நபர் அவளின் சித்தப்பா மட்டுமே. அவர் எதையும் கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் பார்வையால் மகளை துளைத்தார்.

இந்திரசேனாவிற்கு எப்போதடா தங்கள் வீட்டிற்கு செல்வோம் என்றாகிப் போனது. எங்கோ ஒரு மூலையில் அவள் மனம் அபராஜிதனை தேடத்தான் செய்தது.

அவனும் வீட்டிற்கு செல்லலாம் என்று அவளை அழைக்கவில்லை. அவள் வீட்டினரும் அவளை அனுப்புவதாகக் காணோம். ஒரு நாள் அவளாகவே சொல்லிவிட்டாள்.

“நான் நாளைக்கு வீட்டுக்கு போறேன்”

“ஏன் இந்து?? இப்போ என்ன அவசரம் காயம் இப்போ தான் ஆறிட்டு வருது, நீ பாட்டுக்கு கோர்ட்டுக்கு கிளம்புறேன்னு காலையில சாப்பிடாம கூட கிளம்பிருவ. மறுபடியும் எங்காச்சும் நீ மயக்கம் போட்டு விழுகறதுக்கா” என்று பேச்சு வரவும் ‘அடப்போங்கடா டேய்’ என்று கப்சிப்பென்று ஆனாள்.

உமையாள் அவளுக்கு அழைத்த அன்றே முடிவு செய்துவிட்டாள் ஊருக்கு செல்வதென. அவர் போனை வைத்ததுமே கணவனுக்கு அழைத்துவிட்டாள். அங்கிருந்த இத்தனை நாளில் அவளாக அவனுக்கு அழைத்து பேசுவது இதுவே முதல் முறை.

எப்போதும் அவன் தான் போன் செய்து பேசுவான். ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி வைத்துவிடுவான். மனைவி நன்றாக பேசினாலாவது அவனும் பேசியிருப்பான். 

அவள் சரியாக பேசாது போனதில் ரொம்பவுமே உடைந்துவிட்டான். அவளாக அவனுக்கு அழைக்கவும் உண்மை தானா என்று போனை எடுக்காமலே வெறுமே பார்த்திருந்தான்.

முழு அழைப்பும் அடித்து ஓய்ந்துவிட இப்போதும் அந்த போனையே பார்த்திருந்தான். இத்தனை நாட்கள் பிரிவு மனைவியின் அருமையை உணர்த்தியது என்றே தான் சொல்ல வேண்டும். ஆனாலும் அவன் குணம் என்பது மாறியிருக்குமா என்ன?? பார்ப்போம்…

மீண்டும் அழைப்பு வர இம்முறை அவளை காக்க வைக்காது உடனே அழைப்பே ஏற்றிருந்தான். “என்னாச்சு போன் எடுக்க எதுக்கு இவ்வளவு நேரம்??” என்றாள் சிடுசிடுப்பாய்.

திட்டுறதுக்கு கூட பொண்டாட்டி வேணும் என்று சந்தோசப்பட்டுக் கொண்டான் அவன். “ஹலோ… ஹலோ… லைன்ல இருக்கீங்களா இல்லையா…”

“ஹ்ம்ம் இருக்கேன்”

“நான் கேட்டுட்டே இருக்கேன் பதிலே இல்லை”

“சொல்லு”

“என்ன சொல்ல??”

“அதை நீ தான் சொல்லணும் அதுக்கு தானே போன் பண்ணே??”

“என்னைக்கு ஊருக்கு கிளம்ப ஐடியா??”

“போகணுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்”

“என்ன பதில் இது போகணுமான்னு யோசிக்கறீங்களா விளையாடுறீங்களா. நீங்க தானே தாய் மாமா நீங்க தானே முன்னாடி நிக்கணும்”

“உனக்கு இப்படி இருக்கும் போது எனக்கு அங்க போக மனசில்லை”

“என்னை ஒரேடியா படுக்க வைச்சு பேஷன்ட் ஆக்கிடாதீங்க. நான் நல்லாத்தான் இருக்கேன். ஒழுங்கா ஊருக்கு போகறத்துக்கு வழியை பாருங்க”

“ஹ்ம்ம்”

“ஹ்ம்ம்ன்னு சொன்னா ஆச்சா”

“வேறன்ன சொல்லணும்”

“ஒரு சுறுசுறுப்பே இல்லை உங்க பேச்சுல”

“இப்போ என்ன வேணும் உனக்கு”

“எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க” என்று அவள் சொல்லவும் வேகமாய் “நிஜமாவா சொல்றே, உனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே. உன்னால வரமுடியுமா…” என்று ஆர்வமாய் அவன் கேட்கவும் தன்னை தேடுகிறானோ என்று தான் தோன்றியது.

‘இப்படி தேடுறவன் என்னை இங்க இருந்து கூட்டிட்டு போக வேண்டியது தானே, என்று அவனை திட்டவும் மறக்கவில்லை அவள்.

இருவருமாய் சேர்ந்து அந்த விழாவை மிகச்சிறப்பாகவே நடத்தி முடித்திருந்தனர். உமையாளின் வீட்டினருக்கு அவ்வளவு சந்தோசம். அபராஜிதன் தன் மனைவியை ஒட்டியே திரிந்தான் அந்த இரண்டு நாட்களும்.

தன் அக்கா மகளின் சடங்கு விழா முடிந்த அன்று இரவு அவர்கள் அறைக்கு வந்ததும் ஏதோவொரு மோன நிலையிலேயே இருந்தான் அவன். 

“என்னாச்சு வயிறு எதுவும் சரியில்லையா??” என்றாள் அவன் முகம் பார்த்து.

“ச்சே ச்சே அப்படியெல்லாம் எதுவுமில்லை”

“ஹ்ம்ம் அப்போ ஓகே” என்றவள் படுத்துக்கொள்ள போக “அவ்வளவு தானா வேற எதுவும் கேட்க மாட்டியா??” என்றவனை புரியாது பார்த்தாள்.

“எனக்கு என்ன சொல்றேதுன்னே தெரியலை. நம்ம குழந்தையை திடிர்ன்னு வளர்ந்து நம்ம முன்னாடி பெரியவனாகி நிக்கும் போது எப்படி உணர்வோமோ அப்படியொரு பீல்” என்றான் அவன்.

இந்திரசேனாவுக்கு இப்போதும் எதுவும் புரியவில்லை, இருந்தாலும் எழுந்து அமர்ந்தாள், என்ன தான் சொல்கிறான் என்று பார்ப்போமே என்ற எண்ணத்தில்.

“அக்காவுக்கு அப்பா ரொம்ப சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க. அவ கல்யாணம் முடியும் போது நானும் அகலும் இவ்வளவு உயரம் தான் இருப்போம்” என்று அவன் இடுப்பு வரை இருப்பதாக காட்டினான்.

“ஒரே வருஷத்துல அக்காக்கு கல்பனா பிறந்திட்டா. அக்கா எங்க வீட்டில தான் இருந்தா, திடிர்ன்னு நைட் வலிக்குதுன்னு அவ அழ எனக்கும் அகல்யாவுக்கும் அவளை பார்த்து அழுகை வந்திடுச்சு. அப்பா உடனே ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டாங்க, என்னையும் அகல்யாவையும் தனியா வீட்டில விட்டுட்டு”

“நைட் முழுக்க எங்க எனக்கும் அவளுக்கும் தூக்கமே வரலை. எப்படியோ எங்களையே அறியாம கண்ணசந்து தூங்க ஆரம்பிச்சோம். நல்லா விடிஞ்சிருச்சு, அப்பா சந்தோசமா அப்போ தான் வீட்டுக்கு வந்தாங்க. அக்காவுக்கு பாப்பா பிறந்திருக்குன்னு சொன்னாங்க”

“எனக்கும் அகல்யாவுக்கும் சந்தோசம் தாங்கலை. உடனே பாப்பாவை பார்க்கணும்ன்னு அடம் பிடிச்சு கொஞ்ச நேரத்துல பாப்பாவை பார்க்க கிளம்பிட்டோம்”

“நல்லா பார்பி டால் மாதிரி க்யூட்டா இருந்தா. குட்டி கண்ணு, செப்பு வாய்ன்னு பார்க்கவே அவ்வளவு அழகு. அதே பாப்பா இன்னைக்கு வளர்ந்து என் உயரத்துக்கு நிக்கறா. புடவை கட்டினதும் பெரிய மனுஷியாட்டம் இருந்தா இல்ல”

கல்பனாவின் மீதான அவனின் அன்பை சந்தோசமாகவே கேட்டுக் கொண்டிருந்தாள் அவள். இவனுக்குள்ளையும் அன்பு, பாசம்ன்னு எல்லா உணர்வும் இருக்கு என்ற எண்ணம் தான் அவளுக்கு. சீக்கிரமே இவனுக்கு சித்தாவையும் என்னையும் புரியும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்று உறுதியாய் நம்பினாள்.

அபராஜிதன் அவளின் மனநிலை பற்றி எல்லாம் எதுவும் கணிக்கவில்லை. அவன் மனநிலையை தான் அவளுக்கு கடத்திக்கொண்டிருந்தான்.

“நாளைக்கு நமக்கே குழந்தை பிறந்தாலும் கல்பனா தான் என்னோட மூத்த பொண்ணு” என்று அவன் சொல்லவும் இந்திரசேனாவால் அதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவனை குத்திக்காட்ட வேண்டும் என்ற எண்ணமில்லை ஆனால் சொல்லிவிட்டிருந்தாள்.

“அக்கா பொண்ணு மேல அவ்வளவு பாசமா உங்களுக்கு”

“நிச்சயமா இருக்காதா பின்னே. எனக்கும் அகலுக்கும் அவன்னா உயிரு. எங்க கைக்குள்ளவே இருந்த குழந்தையாச்சே”

“அவளுக்கு உங்க மேல அப்பா மாதிரியான பாசம் இருக்கும்ன்னு நினைக்கறீங்க”

“அவளுக்கு என் மேல பாசமுண்டு, மரியாதை உண்டு. அது மாமாங்கற பாசம், அப்பா மாதிரியே பாசம் காட்ட முடியுமா என்ன. அவளுக்கு எப்படிப்பட்ட அன்புன்னு இதுல ஆராய்ச்சி பண்ண என்ன இருக்கு. எனக்கு அவ மக தான்”

“அக்கா பொண்ணு மேல மக மாதிரி உங்களால பாசம் காட்ட முடியும் அப்படிங்கற போது. அண்ணன் பொண்ணை மகளா ஏன் எங்க சித்தப்பா நினைக்கக்கூடாது??” என்று கேட்டுவிட்ட அபராஜிதன் முகம் சுருங்கியது.

சென்னைக்கும் வந்து சேர்ந்திருந்தனர் அவர்கள். இருவருக்கும் இடையில் எல்லாமே நன்றாகிவிட்டது என்று நிச்சயமாக சொல்ல முடியாது போனாலும் ஓகே என்ற அளவில் சென்று கொண்டிருந்தது.