AVAV 12 1
cross talk :
இந்நிகழ்வில் அங்கு அந்த மேல் உலகமே ஆட்டம் கண்டிருந்தது. ஆம் அவ்வுலகில் இருந்த ஒருவர் பாக்கி இன்றி, பூலோகத்தில்  நங்கை விக்ரகங்களையும் படங்களையும்  தூக்கி எறிந்த வினாடியில்..அனைவரும் ஒருமுறை சுழன்று…  குலுங்கி… பிறகு நின்றனர். ” சுவாமி என்ன இது?”, என்று பார்வதி வினவ..
“ஒரு பெண்ணின் ஆக்ரோஷமான கோபத்தின் விளைவு இது”, என்று ஈசன் புன்னகை புரிய….
தன் ஞான திருஷ்டியால் பூவுலகில் நடந்ததை அறிந்த பார்வதி, “சர்வேசா…. அப்பெண்ணின் கோபத்தில் நியாயம் இருப்பதாகவே நான் கருதுகிறேன். உங்கள் ப்ரதிமைகளை தூக்கி எறிந்தது தவறென்றாலும் ஏன் இவ்வாறான மனிதர்களைப் படைக்கிறீர்?”, என்றார் வேதனையுடன்.
ஈசன் பதிலுரைத்தார்::
“தேவி தற்போதுதான் மாயை அகலப் பெற்றீர்போலும்?, தங்களது பொறுப்புகளை எமக்குத்தந்து, பூலோகவாசியைப் போல், இல்லம் நடத்த தலைப்பட்ட, உங்கள் நாடகம் முற்றுப் பெற்றதா? “
“ருத்ரா… பொழுது போக்குக்காக நாங்கள் செய்ததை குற்றம் கூறாது, கேட்ட கேள்விக்கு பதில் அளியுங்கள்…”
“உமையே சொல்கிறேன் கேள்,  இறையாகிக யாம் அனைத்து உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளோம், தேவி. மானுடர்கள் எண்ணுவதுபோல திருக்கோவில்கள் , மசூதிகள், தேவாலயங்கள் எம்முடைய வசிப்பிடங்கள் இல்லை. அனுவிற்கு அணுவாய், அப்பாலுக்கு அப்பாலாய் அனைத்திலும் வியாபித்துள்ளோம் சகல ஜீவராசிகளிலும் யாம் உள்ளோம் .”
“இதை அறிய மானிடர்களுக்கு ஆறாம் அறிவாய் பகுத்துணரும் அறிவையும் தந்தோம். என்ன செய்தார்கள் இவர்கள்? எமை அறிய கொடுத்த அறிவைக் கொண்டு, எத்தனை தூரம் எமை விட்டு விலக முடியுமோ அத்தனை தூரம் விலகி செல்ல என்னென்ன கண்டுபிடிப்புகள்? வானொலி கண்டான், பாடலில் பழியாய்க் கிடந்தான், தொலைக்காட்சி, அலைபேசி, கணினி என அனைத்திலும் சிற்றின்பமே.”
“எப்போதாவது எவராவது விழித்தெழுந்து ஆபாச விரலிகளை தடை செய்தால், ஆண் பெண் அடங்கலாய் அனைவரும்  போர்க்கொடி தூக்கினர், இச்சமூகத்தில்”.
“கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத இந்த சமூகம், கண்டதென்ன? எங்கும் காமம், எதிலும் காமம், இங்கே புத்தனா வளர்வான்?”
“கேள் தேவி… இதுபோன்ற காமுகர்களை நான் படைக்கவில்லை. இவர்களை இந்த சமூகம் செதுக்கியது. பிள்ளைகளை ஏனென்று கேள்வி கேட்காது, கேட்டதை வாங்கித் தந்து பணத்தை அள்ளி இறைக்கும் பெற்றோர், பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனோபாவத்திற்கு சென்று விட்ட இந்த சமூகம், நிச்சயம்  நான் படைத்ததல்ல. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரைத்தவிர.. உலகமே போகம் போகம் என கடமையை மறந்து போகத்தில், மயக்கத்தில் திளைக்கிறது.”
“ருத்ராணீ …  இன்னும் கேள். யாம் வகுத்த நாட்ய சாஸ்திரத்தில்…
                  யதோ ஹஸ்த, ததோ த்ருஷ்ட்டி; 
                  யதோ த்ருஷ்ட்டி, ததோ மனஸ்;
                  யதோ மனஸ் , ததோ பாவ [ bhaava] ;
                  யதோ பாவ , ததோ ரஸா;
Where the hands (physical actions) are, there go the sight ;
where the sight is, there lies the mind;
Where the mind fixes, there the feelings come
and in accordance with feelings the enjoyment( rasa) takes place.]
“என்று ரஸம் குறித்து வரும் வாக்கியங்களை நீ அறிவாய். இது நாட்டியத்துக்கானது மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்குமானது. மனிதனின் செயல்களே அவன் தலைவிதியை எழுதுகின்ற எழுத்தாணி.”
“வீணையில் லயித்து வாசிப்பவன், வித்வத்துவம் அடைகிறான்,  வீணே சிற்றின்பத்தில் உழல்பவன், இவனைப்போல்  ஒன்றுமில்லாமல் போகிறான்.”
“ஸர்வேசா நீங்கள் கூறுவதை எல்லாம் ஒப்புக் கொள்கிறேன், ஆயினும் இச் சிசுக்கள் இவ்வாறு வதைபடத்தான் வேண்டும் என்கிறீரா?”
“கலி முற்றுகிறது தேவீ… என் செய்ய?”
“கலி குறித்து மானுடன் பேசலாம், வேதநாயகன் பேசுவது விந்தையினும் விந்தை”.
“ஸக்தி, அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரு விதியின் கீழ் இயங்குபவை, மாற்ற எம்மால் ஆகாது.”
“பத்து அகவை வரை பிள்ளைகள், அவர்களை எந்த நாளும் கோளும் ஒன்றும் செய்யாதென்ற ஓர் விதி உண்டே, அது காற்றில் போனதோ? அன்றி கங்கையில் போனதோ?”
“உமையே.. நாவடக்கமின்றி பேசுகிறாய்…”
“உண்மை பேசுகிறேன்..”
“இல்லை.. எம்மை குறை கூறுகிறாய்.. “
“குற்றமெனில் கூறத்தான் செய்வேன், ஈசனே… உம்மையும் எம்மையும் படைத்த ஆதிபராசக்தியின் அம்சம் நான். பயமில்லை எனக்கு, கூறுங்கள் இச்சிசுக்களின் வாதைகளை என்ன சொல்லி இட்டுக்கட்டப் போகிறீர்?”
நீண்ட நெடிய பெருமூச்சொன்றை விட்ட மகாதேவன், “ஈஸ்வரி கேள், துர்மரணமோ/ துர்நிகழ்வோ எதிர்கொள்ளும்  அச்சிசுக்களை மயக்கமெனும் மாயையில் தள்ளி, வலிகளை யாம் ஏற்கின்றோம்.”, என மிகுந்த மன வருத்தத்துடன் மொழிந்தார் பரமசிவன்.
அவர் வருத்தம் உணர்ந்த ஸக்தி, “ப்ரபோ … இது ஒன்றுதான் மார்க்கமா? இவர்கள் மாற வழியே இல்லையா?”
“இல்லாமல் என்ன? ஒழுக்கம் என்ற ஒன்றை பற்றினால் போதும், ஆனால்….”
“ஆனால் என்ன ம்ருத்துஞ்சயா?”
“ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது ஸர்வாணீ  “
“புரிகிறது.. சிறு வயதில் ஒழுக்கத்தை விதைக்கவேண்டும் என்கிறீர்.”
“ஆம்.. தேவி, விவசாயியை தேர்ந்தெடுத்தாயிற்று. இனி, விதைகளை அவள் தூவுவாள். காலத்தே, நல்ல தேர்ந்த பயிர்கள் அறுவடையாகும். அவை விளையும் வரை…  வலி தாங்குவோம்”என்றவர் …. தொடர்ந்து…
“எங்கே இருளோ… அங்கிருந்தே ஒளி., எங்கே கூச்சலோ.. அங்கிருந்தே அமைதி, எங்கே பிரச்சனையோ? அங்கிருந்தே தெளிவு.. “
“நாம் வந்த வேலை முடிந்தது, கயிலை செல்வோமா ஸகி?”
கிராஸ்டாக் நிறைவு….