Advertisement

 

                                                   அரசிளம்பரிதியின்

             மனம் பொய்த்த பொழுதுகள்

                      அத்தியாயம் – 4

                          வருடம் – 1996

“வருது வருது விலகு விலகு”

“அடேய், வந்தால் சட்டுபுட்டுன்னு மேலே பார்க்க ஓடுடா, இங்கிட்டே அசிங்கம் பண்ணிடாதே.”

“நக்கலு”

“இல்லை, விக்கலு”

“மகனே, தண்ணி ஊத்தறேன்னு சொல்லி, இருக்கிறதிலேயே எளிசான வேலையை எடுத்துக்கிட்டு, மற்றவனை நாட்டாமை பண்ணிட்டுத் திரியுற நீயி” என்று முறைத்தான் மணி.

“ஹிஹி, அதுக்குதான் மணி, ராசு அண்ணாவைக் கைக்குள்ளே போட்டுக் கொள்ளணும்ங்கறது. பார், அவர் எனக்கு எப்போதும் கடுமையான வேலை எதுவும் தர மாட்டார்” என்று சொல்லி முறுவலித்தான் குணா.

அந்த விடுதியில், உணவு நேரத்தில், மாணவர்கள், தங்களுக்குள்ளாகவே குழு பிரித்துக் கொண்டு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குழுவாக, உணவு பரிமாறும் வேலைகளை, விடுதியின் பிற சிறு சிறு வேலைகளை கவனித்துக் கொள்ளும் சுய சேவை திட்டமே பின்பற்ற பட்டது. குணாவின் குழுவில் மணியும், வேறு இருவரும் இருந்தார்கள். குணா எப்பொழுதுமே எளிதான வேலைகளை மட்டுமே செய்து தப்பித்துக் கொள்வான்.

“உன் நேரம். நீ எல்லோரையும் காக்காய் பிடித்து வைத்திருக்கிற. எங்களைச் சொல்லு” என்று கீழே வைத்து விட்ட உணவு பாத்திரத்தை ஒரு முறை பார்த்து அலுத்துக் கொண்டவன்,

“ஏய் வருது வருது விலகு விலகு

வேங்கை வெளியே வருது” என்று பாடிக் கொண்டே உணவுப் பாத்திரத்தினைக் கொண்டு வந்து உணவு மேடையில் வைத்தான் மணி.

குணாவின் விழிகளோ, குமரனைத் தேடின. அன்றைய அவர்களது சுயசேவை, இரவில் முடியும் வரையிலும், குமரன் வரவில்லை. எப்படியும் உணவருந்த வந்துதானே ஆக வேண்டுமென்றிருந்த எண்ணம் பொய்த்துப் போனது. விசாரித்த போது, அவர் அன்றைக்கு முத்துலிங்கத்தின் அறைக்கு சென்று விட்டதாகக் கூறப்பட்டது.

அன்று விடுதியில் கூட்டம் முடிந்த பிறகு சந்திப்போம் என கூறிச் சென்ற குமரனை அதன் பிறகு குணா காண முடியவில்லை. குணாவின் பொருட்கள் கூட, இரண்டாமாண்டு மாணவன் ஒருவன்தான் கொண்டு வந்து கொடுத்துச் சென்றான். அத்தோடு, இனி குணா தன்னை சந்திக்காமல் இருப்பதுவே குணாவுக்கு நல்லது என்றும், படிப்பில் கவனம் செலுத்தும்படியும் சொல்லி விட்டிருந்தார்.

ஒரே நாளில், ஏன் இப்படி என்ற கேள்விதான் குணாவினுள். குணாவுக்கு தானாக ஒருவரிடம் பழகிட ஆர்வம் தோன்றுவதே குறைவு. அப்படி மீறி தோன்றினால், அவர்களுடன் பழகுவதற்கு அதி தீவிரமான முனைப்பினை எடுக்காமல் குணா விடுவதில்லை. அப்போதும் ஒரு தளம் தான் குறுக்கே. மேலே ஏறிப் போய், “என்ன அண்ணா, ஏன் இப்படி” என்று கேட்டு விட்டிருக்க முடியாது என்பதில்லை. ஆனால், அங்கே முதல் அறையே விடுதிக் காப்பாளர் அறை. அங்கே மற்ற விரிவுரையாளர்களும் உடனிருந்தனர். அத்தோடு, பிற மாணவர்கள் முன்பும் எதற்கு என்றே விட்டு விட்டான்.

”கேட்டாயா மணி, எனக்கு நல்லதாமே?” என்று அன்றைக்கே சலித்துக் கொண்டான்.

“அடேய், விடுடா. ஏதோ முறைப்பொண்ணு முறுக்கிக்கிட்டாள் பார்த்தியா என்பது போல. அவரே, படிப்பைப் பார் என்றுதானே சொல்லி விட்டிருக்கிறார். சந்திக்க முடியாமலா போய்விடும்? இன்றில்லாவிட்டால் நாளை, அவ்வளவுதானே? பார்த்துவிடலாம் விடு” என்றான் அவன்.

அது சரிதான். இன்றே இல்லாவிட்டால் நாளை, நாளையும் இல்லையென்றால், அதன் மறுநாள், அவ்வளவுதான்.

“அதில்லையடா, இவரைப் போய் இப்படிப் பேசுகிறார்களே இங்கே” என்று மணியிடம் சொன்னவன், அந்த குமரனின் செய்தியைக் கொண்டு சேர்த்த அந்த ராபர்ட்டிடம், “அவரிடம் சொல்லுங்கள், அப்படியெல்லாம் அவரை விட்டுவிட மாட்டான் குணா என்று. இங்கோ, கல்லூரியிலோ இல்லையென்றாலும், வெளியேயாவது சந்திக்கத்தான் வேண்டும். அத்தோடு, இன்று என்னிடம் பிறகு பேசுவோம் என்று சொன்னது அவர்தான். அதைப் பற்றி அவருடன் பேச நான் காத்திருப்பேன் என்றும் சொல்லுங்கள்” என்று திடமாகவே முடித்தான்.

அன்று விடுதியினுள் நுழையும் முன்பு தான் கண்ட காட்சி, குணாவினுள் கனன்று கொண்டிருந்ததோடு, ஒரு வித அருவறுப்பினையும் தோற்றுவித்திருந்தது. அது வேறு எவரும் அறிந்திராத கமுக்கமான ஒன்றல்ல தான். கண்களை விடுதியின் எதிர்புறம் திருப்பினால், எந்த நேரத்திலும் காண வேண்டிய கட்டாயம் அங்கே அனைவருக்குமே உண்டு. மேலும் சமயங்களில், இருக்கும் இடத்திற்கே சங்கடத்தைக் கூட்டும் வகையில் தானாகத் தேடி வந்து சேர்வதும் உண்டு என்கையில், தவிர்ப்பது இயலாததும் கூட. இப்படியுமா இருப்பார்கள் என உள்ளினுள் தினமும் கடுத்துக் கொண்டே இருந்த போதும் கூட, தானாக அந்தப் பேச்சினை குணா வேறு எவரிடமும் எடுக்க விழையவில்லை.

மற்றவர்கள் விளையாட்டாய், வினையாய், சற்றே விகாரமாய் அதுபற்றி பேசிய பொழுதுகளில் கூட, எந்தவித பிரதிபலிப்பையும் குமரனிடம் பேசுவதற்கு முன்பு காட்டிக் கொள்ள விரும்பாமல், அந்த விடுதி வந்த துவக்க நாட்களில், பேச்சு நடக்கும் இடம் விட்டு அவன் நகர்ந்து விடுவதுண்டு.

’ஆனால், இப்படி ஒரு நிலையில் வைத்து இதையெல்லாம் செய்து கொண்டு, எந்த அடிப்படையில் குமரன் அண்ணனிடம் இவர்கள் குறை காண்கிறார்கள்? அதற்கான தகுதி இவர்களுக்கு ஏது?’ என்ற எண்ணம் மட்டும் மனதில் எப்பொழுதும் ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த அளவிற்கு குமரன் அண்ணா தன்னைத் தவிர்ப்பது, அவரை குணாவுக்கு உயர்த்தியே காட்டியது. தோற்றத்தில் முரடாய் இருந்தால், உள்ளமும் முரடாய் இருக்க வேண்டுமென்று யார் எழுதி வைத்தது? விசித்திர உலகம், தோற்றத்தையும், கண் முன் நிகழாத, வெறும் கேள்வியாய் கேட்ட நிகழ்வுகளின் அடிப்படையிலுமே முத்திரைகளை சுமத்தி விடுகிறது.

இதோ இப்போது வரை விழிகளில் அகப்படவில்லை. எந்த ஒன்று அகப்படுவதில்லையோ, அதன் மீதுதான் ஆர்வம் அதிகமாகும். அதனால்தானோ என்னவோ குமரன் அண்ணனை எப்படி அணுகுவது என்ற சிந்தனையாகவே இருந்தது.

மணிதான் அதற்கும் குணாவைக் கேலி செய்தான். “கல்லூரிக்கு வந்தோமா, ஏதோ ஒரு பெண்ணைப் பார்த்தோமா, பழகினோமா என்றில்லாமல், ஒரு ஆண்மகனை வளைத்து வளைத்துத் தேடிக்கொண்டு…” என்று இழுத்தவன், உள்ளூற எதுவோ நினைத்து, குணாவை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை பார்த்து, ”ம்கூம், நீ தேற மாட்டாய், தேறவே மாட்டாய்” என்று சொல்லி விடாது சிரித்தான்.

அப்படிச் சொன்னபொழுது, அந்தக் கல்லூரிக் காலத்தில், பிற்காலத்தில் எழ இருக்கும் சிக்கல், குணாவின் வாழ்வில் இட இருக்கும்  என்றும் அழியாக் கோலங்களைப் பற்றி மணி அறிந்திருக்க நியாயமில்லை.

மணியின் எண்ணப்போக்கினைப் பற்றி தன் மனத்தினில் ஓட்டிப் பார்த்து, துணுக்குற்று உடல் ஒருமுறை குழுக்கிப் போட, ”அடச் சீ, வாயைக் கழுவு, நீயும் உன் எண்ணமும்” என்று அதட்டியவனும், அந்தக் கல்லூரி நாட்கள் எழுதும் கோலங்கள்,  வாழும் காலம் யாவிலும் ஆறா வடுவினைக் கொடுக்கப் போவதை உணர்ந்திருக்கவில்லை.

ஒருவேளை, குமரன் உணர்ந்திருக்க வேண்டும். அதனாலேயே ஒதுங்கிச் சென்றிருக்கவும் கூடுமோ? அதன் பிறகு, குமரனை தனித்து குணா சந்தித்ததே இல்லை. அதனைக் குமரன் அனுமதித்ததே இல்லை. இயன்றவரை, தன்னால் சிக்கல் உருவாகக் கூடாது என்று குமரன் மட்டும் முயன்றால் போதுமா என்ன?

ஒரு படையே காத்திருக்க, எதை யார் தடுத்திருக்க இயலும்?

                  –  – –  – – –  – – – –  – – – – –  – – – – – –  – – –

“ஏய்.. ஏய்..ஏய்” தன் மேலே வந்து விழுந்த குணாவினால் எரிச்சலில் கத்தினான் மணி.

குணாவோ, “அடப்பாவி” என்று திகைத்து சொன்னான்.

அதிகாலை ஐந்து மணிக்கு, தன் மீது வந்து விழுந்த குணாவினால் உறக்கம் கலைந்து விட்ட எரிச்சலோடு, “ஆமடா. நீ வந்து விழுந்ததில், உன் மீது பூமாரி வீசி வாழ்த்துப்பா பாடவில்லைதானே அதனால், நான் பாவிதான்” என்றான் மிகவும் கடுப்போடு.

குணாவும் எரிச்சலில்தான் இருந்தான். அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு ஓடும் சாரதியை என்ன செய்வது? தன்னை எழுப்பி விடும்படி முந்தைய நாள் இரவில், அத்தனை கெஞ்சு கெஞ்சிய சாரதிதான், எழுப்பி விட்டவனை சடாரெனத் தள்ளி விட்டு ஓடி விட்டிருக்கிறான்.

குணாதான் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்த  சில நாட்களில் வழக்கமாக அங்கு முதலாவதாக எழும் நபர் என்றறிந்துதான், அவனிடம் கெஞ்சினான் சாரதி. அதுவும் தான் பல் துலக்கி விட்டு வந்து, குளிப்பதற்கு செல்லத் தயாராகத் துவாலையை எடுத்துத் தோளில் இட்டுக் கொண்டுதான் சாரதியை எழுப்பினான். குணாவின் தோளில் துவாலையைப் பார்த்தானோ, வேக வேகமாகக் கொடியில் இருந்து சாரதி, தன் துண்டினை உருவினான். அருகில் கீழே இருந்த நெகிழி கிண்ணத்தில் (ப்ளாஸ்டிக் மக் / பெட்டி) இருந்து பல் துலக்கியும், பற்பசையையும் எடுத்தான், திரும்பினான்.

இன்னும் விளக்கேற்றாத அறை, கருக்கல் நேரம், இருள் முழுவதும் விலகாத அதிகாலைப் பொழுது, அருகில் தரையில் படுக்கை விரிப்புகளிட்டு உறங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு எந்த விதமான தொந்தரவும் இல்லாது, அவர்களைக் கடந்து செல்ல வழி தேடிக் கொண்டிருந்த குணாவின் தோளில் இருந்த துண்டினை சடாரென உருவிக் கொடியில் இட்டான், அவனைப் பிடித்துப் பின்புறமாய்த் தள்ளி விட்டு, வழியில் படுத்திருந்தவர்களில் சிலரின் கைகளில், கால்களில் மிதித்துக் கொண்டு தடதடவென ஓடி விட்டான்.

அவன் ஓடிய வழியில் ஆங்காங்கே ஆ! ஓ! என்ற சத்தம் கேட்டது. சற்றும் எதிர்பார்த்திராத திடுமெனும் தாக்குதல் என்பதால், குணா அதை சமாளிக்க இயலாது அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த மணியின் மீது சென்று விழுந்தான். இதுதான் நிகழ்ந்தது.

”அடப் போடா, கெஞ்சினானே என்று அந்த சாரதியை எழுப்பி விட்டேன். அதற்குக் கிடைத்த வெகுமதி இது.” என்று அலுப்புடன் கூறினான் குணா. அது மணிக்கும் சில நொடிகளில் விளங்கி விட்டது. அவன் ஓடியதைக் கண்டதோடு, முந்தைய இரவில் சாரதியின் கெஞ்சலை மணியும் கேட்டுக் கொண்டுதானே படுத்திருந்தான்.

“அவனைப் போய் எழுப்பி விட்டாயே. நீ ஒருவன் உன் வேலைகளை முடித்து வரும் வரை கூட துரையால் காத்திருக்க முடியாதோ? இனி நீ அவனை எழுப்பி விடு, பிறகு இருக்கிறது உனக்குக் கச்சேரி”

“விடுடா, விடுடா! அதுதான் அவனது குணம் போல.” குணாவின் குரலில் சலிப்பு எதுவும் இல்லை.

“ம்க்கும், பெரிய தியாகிதான்! தம்பி, நீ வந்து விழுந்தது என் மேலே. வலிப்பது எனக்குத்தானே. விட்டு விடுவதாமே? இப்போ அவனை எழுப்பி விட்டதற்கு என்ன விருதா கொடுக்கப் போகிறாங்க? குணா என்று பெயர் வைத்தால், நான் குணசாலிதான் பார்த்துக்கோங்க என்று காட்டுவதற்காக இதையெல்லாம் செய்கிறாயோ?” என்று எரிச்சலும் கடுப்புமாய்க் கேட்டான் மணி.

சாரதி மிதித்து விட்டு ஓடியவர்களில் ஓரிருவர் எழுந்து மணிக்கும், குணாவுக்குமான உரையாடலைக் கேட்டு, குணாவை ‘உன்னால்தானா இது?’ எனும்படியாகப் பார்வையில் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

அவர்களை நோக்கி, “அமைதி! அமைதி!!” என்ற வகையில் பார்த்து, கைகளால் சைகை செய்தான் குணா.

இதற்கெல்லாம் அடிப்படை காரணம், அந்த விடுதியில், அந்தத் தளத்தில், ஒரே குளியலறையும், கழிவறையும் தான் இருந்தது. அந்த ஒற்றை கழிவறையும், அந்த ஒரே குளியலறையினுள்ளேதான் இருந்தது. காலையில் முதலாவதாக அந்தக் குளியலறையையும், கழிவறையையும் உபயோகிக்கதான் இந்தப் போட்டி. சுமார் இருபத்தைந்து பேருக்கு இந்த வசதி மட்டுமே அப்போதைக்கு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு, அது ஒற்றையறையாக மட்டுமே இருந்து, கட்டில்கள் எதுவும் வழங்கப்பட்டிருக்காத நிலையில், சுவரோரமாய் பெட்டிகள், படுக்கைகள், அதனருகே, பற்பசை, வழலை (குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள்) அடங்கிய சிறு நெகிழி கிண்ணங்கள், அதையொட்டி அடுத்தவரின் பொருட்கள், நேர் மேலே, மாற்றுடைகள் போட்டு வைக்கும் ஒரு நீண்ட கொடி, அந்தப் பெட்டி, படுக்கையை ஒட்டிய பகுதியிலேயே, பகலில் அமர்ந்து படிப்பதும், இரவில், பாய் அல்லது போர்வை விரித்து படுத்து உறங்குவதுமாய் அந்த விடுதி வாசம் அமைந்திருந்தது.

விடுதிக் காப்பாளரான இளவழகனிடம், குறைந்தபட்சம் மேலும் ஓரிரு குளியலறைகளும், கழிவறைகளும் ஏற்படுத்தித் தரும்படியாக எல்லோரும் இணைந்து கடிதம் மூலமாக முறையிட்ட போதும், அதைக் கொடுக்கச் சென்றபோது, இளவழகனிடம் குணாவையே எல்லோரும் முன்னிறுத்த, சொல்ல வந்ததை சொல்லத் தயங்காது பேசிய போதும்,  தினசரி நடைமுறைகளில் அவர்கள், இந்த வசதிக் குறைவுகளுக்காக சலித்துக் கொள்ளவில்லை.

      –  – –  – – –  – – – –  – – – – –  – – – – – –  – – – – – – –  – – –

கையில் காஃபி மணத்தது. அது குணாவுக்கென்றே தனியாகக் கலந்து கொடுத்தது. அந்த விடுதியில் வேறு யாருக்கும் கிடைக்காத அதிகாலை நேர சலுகை. அந்தக் கும்பகோணம் காஃபியின் மணம், ருசி, திடம் எல்லாமே அதிகம் தான். அதன் காரணமாகவே அந்த விடுதியின் புதிய தலைமை சமையல்காரரான ’ராசு’ அண்ணாவை குணாவுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்கு மேலும், அவர் கும்பகோணத்துக் காரராய் இருந்து விட, சமையலில், தஞ்சாவூர் கடப்பாவும், ஊத்தப்பமுமாய் அவர் சேர்த்த பதார்த்தங்கள்!

அட! அட!! அட!!!

குணாவின் நா சுரக்கும் நீரின் சுழற்சிக்குத் தகுந்த நர்த்தனத்தை ராசுவின் சமையல் ஆடிட, அவனுக்கு வேறு என்ன வேண்டும்?

சாரதியைப் போன்ற சிலரை எழுப்பி விடுவதோடு, ராசுவுக்கும், காலை நேர சேவல் குணாதான். ’பொறுப்பான பிள்ளை’, இது அவர், குணாவுக்குக் கொடுத்திருந்த அடைமொழி. காலையில், முதலில் தான் எழுந்து குளிக்கச் செல்கையில், பலசரக்கு அறை முன்பு படுத்திருக்கும் ராசுவை எழுப்பி விட்டு, காலைக் கடன்களை முடித்துக் கொண்டு குணா வரும்பொழுதே, மணக்க மணக்க அவனுக்காகவே காத்திருக்கும் அருமையான காஃபி.

அந்த காஃபிக்குப் பிறகுதான், குணாவின் தினசரி பொழுது துவங்கும். அதன் பிறகே காலை நேரத்தில் உறங்குபவர்களுக்குத் தொல்லையின்றி, தன் புத்தகங்கள், குறிப்பேடுகளை எடுத்துக் கொண்டு, சாப்பாட்டு அறையாக இயங்கிக் கொண்டிருக்கும் கீழ்த்தளத்திற்கு படிப்பதற்காகச் செல்வான் குணா.  

முதல் நாளில், கல்லூரித் தாளாளர் எச்சரித்த மாணவன் என்ற நோக்கத்தில் குணாவின் மீது சில பார்வைகள் விழத்தான் செய்தது. ஆனால், அதன் பிறகு வெளிப்பட்ட குணாவின் செயல்பாடுகள், ராசுவின் வெளிப்படையான புகழ்ச்சி, வகுப்புகளில் பாடங்களை எளிதாகப் புரிந்து கொண்டு வைக்கப்படும் கேள்விகளுக்கு, மற்றவர் எவரும் பதில் சொல்லாத போது, பதில் சொல்லும் தன்மை எனத் தன்னைக் குறித்த முதல் எண்ணம் தவறு என இளவழகனுக்கும், அங்கு தங்கியிருந்த பிற விரிவுரையாளர்களுக்கும் தானாக விளக்கம் அளித்தன.

பிறருக்கு உதவும் வாய்ப்புகள் முன்பெல்லாம் குணாவுக்கு அநேகமாகவே இல்லை. இந்த விடுதி வந்த பிறகோ, தினசரி விதம் விதமாக பலருக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சியே.

காலை துயில் கலைத்து எழுப்பி விடுவதில் துவங்கும் உதவி, மாலையில் பாடம் புரியாமல் விழித்துக் கொண்டு சந்தேகம் கேட்பவர்களுக்குப் புரியும்படி விளக்கம் கொடுப்பதில் தொடர்ந்து, இரவில் உறக்கம் வருவதில்லை என சொல்லும் செந்திலுக்குத் தலை கோதி விடக் கேட்கையில், சற்றும் தயங்காது தலை கோதி விடுவதில் முடியும்.

அருகருகே படுத்தபடி, அவரவர் வீட்டில் தங்கள் உடன் பிறப்புகள், அவர்களின் சேட்டைகள் அல்லது பொறுப்புகள், பெற்றோர், நெருங்கிய உறவுகள், பள்ளிக் கால நட்பு என விடுதி விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு மெல்லிய குரல்களில் அந்தந்த நாட்களின் நினைவுகளின்படி ஏதோ சுவையான கதைகள் பேசியபடி உறங்க முற்படும் வேளையில் கேட்கப்படும் சிறு உதவி. அவனைக் கேட்டு, அவனாலும் செய்ய முடிவதுதான் என்பதால், அதில் மறுப்பதற்கோ, தவறாக எடுப்பதற்கோ எதுவும் குணாவுக்குத் தோன்றியதில்லை. முரளியும், மணியும் கேலி செய்தபோதும் கூட, குணா அதை மறுத்ததில்லை.

அன்புக்காக ஏங்கி நின்ற மனம், எதைச் செய்தேனும் அங்கு அனைவரிடமும் நட்பினை வளர்த்துக் கொள்ளவே துடித்தது. வீட்டில் பேசுவதற்குக் கூட ஆளற்று வளர்ந்த நிலையில், இந்த முற்றிலும் மாறுபட்ட, தனிமையென்பதே கிஞ்சித்தும் இல்லாத நிலை குணாவுக்கு அத்தனை பிடித்தமாக இருந்தது.

இருப்பினும் ’விடுதி பிடித்திருக்கிறதா, வேறு எதுவும் தேவையா, நலம்தானே’ எனப் பலவிதமான கேள்விகள் கேட்டு பலருக்கு விடுதி தொலைபேசிக்கு அவர்கள் வீடுகளிலிருந்து அழைப்பு வரும்பொழுது, சில சமயங்களில், அந்த அழைப்புகளை எடுப்பவனே இவனாக இருக்க, மனதுக்குள் எங்கோ ஆழமாய் நெருடும்.

அப்படியான ஏதோ ஒரு நாளில், தன் குறிப்பேட்டில் கிறுக்கினான் குணா.

“பூமி உருண்டைதான்

ஊரை விட்டு வந்தேன் – தொடரும்

என் துயரங்கள்” என்று.

போதாததற்கு, மணிக்கு நலம் விசாரித்து, அந்த சில நாட்களின் வீட்டு நடப்புகளை விவரித்துக் கடிதம் வந்து விடும். அவன் அதை சிரமப்பட்டு மடித்துப் பிடித்து, குணா காண வேண்டிய பகுதியைக் காட்டுவதும், இவன் மணியின் சிரமத்தினை கேலியுடன் பார்ப்பதும், சில சமயங்களில் அவன் விரல்களை அவன் எதிர்பார்க்கா சமயத்தில் தள்ளிவிடப் போவது போல நடிப்பதுமாய் தொடரும்.

வழக்கமான மாணவப் பருவத்திற்கே உரிய கேலிகள், சர்ச்சைகள் சக மாணவர்களிடையே எழுந்த போதும், குணாவை அந்த விடுதி ஏதோ ஒரு விதத்தினில் கொண்டாடத்தான் செய்தது. குணாவோ எந்த விதத்திலும் தன் இயல்பினை மாற்றிக் கொள்ளவில்லை. நண்பர்களுடன் இருக்கும்போதெல்லாம் அவர்களை ஒட்டியே அவனது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. தன்னைத் தனியனாக அவன் தன்னை எப்போதும் தள்ளி நிறுத்திக் கொண்டதில்லை. நண்பர்கள் ஏதேனும் சேட்டை செய்வதென்று முடிவு செய்தால், ஈடுபாடு உண்டோ இல்லையோ, அதை அவனும் செய்வானோ இல்லையோ, அங்கு அவனும் இருப்பான்.

சில முறைகள், விடுதியில் வழங்கும் ’கணக்குப்படியான’ இட்டிலிகள், தோசைகள் போதாது, எதிர்ப்புறத்தில் சாலையோர இரவு நேர உணவகத்தில் உணவருந்துகையில், வீராச்சாமியிடமே அவர்கள் மாட்டியதுண்டு. போடுகிற உணவு போதும்படி போட வேண்டும்தானே என்பதே அவர்களின் எண்ணம். அதை அவரிடமே கூறவும் செய்வார்கள். மறுத்து சொல்வதற்கு இயலாமல், அப்படியே விடவும் இயலாது தடுமாறுவார் அவர்.

நள்ளிரவில், முதல் தளத்தின் முன்னறை (பால்கனி) உயரம் வரை நீண்டிருக்கும் பக்கவாட்டுத் தோட்டப் பகுதியின் இரும்புக் கதவின் வழி கீழே குதித்து சென்று, அருகே புதிய இருப்புப் பாதைக்காகத் தோண்டப்பட்டிருக்கும் குழியில் இறங்கி, செந்தில் குழாம் புகைக்க, செந்தில், ஒரு குறிப்பிட்ட திரை நட்சத்திரம் போலவே, மூக்கிலா, வாயிலா, வளையம் வளையமாகவா, நேர்க்கோடாகவா எனக் கேட்டு விதம் விதமாக உள்ளிழுத்து வெளியிடும் புகை வளையங்களை வாய் பிளந்து வேடிக்கை பார்த்து நிற்பதும் உண்டு.

அவ்வாறு சென்று வருகையிலும் ஒரு முறை வீராச்சாமியிடமே மாட்டிக் கொள்ள, “இந்த ஆள் பிள்ளை பிடிக்கும் கும்பலில் இருந்திருப்பாரோ, நாம் எப்போது எங்கே போனாலும், இந்த ஆளுக்கு மூக்கு வியர்த்து விடுகிறதே, சரியாக வந்து பிடித்து விடுகிறாரே” என்று முணுமுணுத்தான் மணி.

உண்மைதான். அவரது வீடு, மேலும் சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கிறது. திடுமென அந்தக் கால மன்னர் நகர்வலம் வருவது போல சென்று பார்க்கலாம் எனத் தோன்றுமோ? அல்லது, இப்படி ஒரு விடுதியை ஏற்படுத்திக் கொடுத்தோமே என குற்ற நெஞ்சுதான் குறுகுறுக்குமோ? எது காரணமாகவோ, அவ்வப்பொழுது அவரது பவனியும், அதில் சில தருணங்களில் விடுதி விதிமீறல்களில் இவர்கள் ஈடுபட்டிருந்து மாட்டிட, எச்சரித்து விடுவதுமாக இருந்து வந்தது.

அப்படியான ஒரு முறை, எல்லோரையும் வாய் ஊதச் செய்து பார்த்து விட்டு, என்ன நினைத்தாரோ, குணாவினைப் பார்த்து, “இவர்களெல்லாம் போகிறார்கள் சரி, நீ எதற்கு இவர்களோடே..” என்று விட்டு ஒரு மாதிரி பார்த்துப் போய் விட,

“ராசா, எப்படிடா?” என்று வெகுவாக அதிசயித்தான் மணி.

”அதுதானே, குணா, அந்த பார்வைக்கு என்ன அர்த்தம்? அதென்ன உன்னை மட்டும் அப்பாவிப் பிள்ளையைப் போலப் பார்த்துச் செல்வது. நீ எப்பேர்ப்பட்ட அடப்பாவி என வீராச்சாமிக்குத் தெரியவில்லையே!!! எங்களுக்கு இப்போதே அதன் அர்த்தம் தெரிந்தாக வேண்டும். இல்லையென்றால், நம் குழுவில் இருந்து உன்னை நீக்கி விடுவோம்.” என்று கண்களில் முறுவலுடன் கேட்டான் முரளி.

“அது, அவரைத்தான் கேட்க வேண்டும். ஏன், கேட்டிருக்க வேண்டியதுதானே?” என்று தோள் குலுக்கினான் இவன்.

“அடேங்கப்பா, எப்படியெப்படி. அந்த முகத்தை மீண்டும் ஒருமுறை அவர் முன்பு வைத்திருந்தது போல வைத்துக் காட்டுங்க நண்பா, பார்ப்போம். என்னா நடிப்பு, என்னா பாவனை” என்றான் செந்தில்.

“முதல் நாள் வாங்கிய பெயர் என்ன? என்ன என்ன என்ன??? இப்போது பார், பார்வையிலேயே பாராட்டுதான், புகழுரைதான். இவர்களோடெல்லாம் சேராதே என்று எச்சரிக்கைதான்” என்று இழுத்தான் மணி.

வீராச்சாமி, அன்றைக்குக் குமரனுடன் சேர்த்து சொன்னதைத்தான் இப்போதும் சொல்லிச் சென்றிருக்கிறார். ஆனால், பார்வையில்தான் மாற்றம். இவையெல்லாம் தவறு என்று அறியாதவனல்ல குணா. ஆனால், அவனைப் பொறுத்தவரை, நண்பர்களுடன் உடனிருக்க வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி, வீராச்சாமியின் இந்த மாற்றத்திற்காய் குணா மெனக்கெட்டு எதையும் செய்திருக்கவில்லை. இருந்தும், சில வாரங்களிலேயே இந்த மாற்றம் நிகழத்தான் செய்திருந்தது. வகுப்பில் நடப்பவை, விடுதி நடவடிக்கைகள் என்று அவர் கேட்டறிந்து கொள்வாராக இருக்கலாம். பரவாயில்லையே எனத் தோன்றிது.

உடனே ‘சுவர்க்கம் மதுவிலே’ என உள்ளே குரல் எழும்பியது. அடடே, ’ராணி சுவர்க்கம்’ அதை மறந்தேனே!!

ம்கூம். ஒரு பார்வைக்கே இவர்களை நல்லவர்கள் என்று ஒப்பிவிட முடியாது. இது எல்லாமே வேடம். இங்கிருந்து பட்டம் பெற்று போகும் வரை எச்சரிக்கையாக இருப்பது மிகவுமே அவசியம். மேலும் தன்னை எப்படி நட த்துகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த எண்ணம் தோன்றவும் இல்லையே என எண்ணியவாறே, நடப்புக்கு வந்து மற்றவர்களை நோக்கினால்.. மற்றவர்களின் பார்வையும் இது போலவே குணாவை வேறுபடுத்திப் பார்க்க,

”அடேய்களா. ஒரு பார்வை, ஒரே பார்வை. அதற்கு இத்தனை கேள்விகளும், வியாக்கியானங்களுமாடா? இதற்கெல்லாம் நான் ஆளில்லையடா அப்பா சாமி” என்பதாய் மீண்டும் ஒருமுறை தோளைக் குலுக்கினான் குணா.

இப்படியாகத்தான் அந்த விடுதி வாசம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.  விடுதி வாசத்தின் முதல் நாளிலேயே அறிமுகம் ஆகிவிட்ட, மணி, நுண்ணியிரியல் பயிலும் செந்தில், தன் வகுப்பிலேயே பயின்ற பல்லவன், முதல் நாள் கேலி வதையில் “பச்சைக் கிளிகள் தோளோடு” என்று பாடிய சங்கரன், அடுத்தடுத்த நாட்களில் வந்து சேர்ந்த அருள்மொழி, நபி, ஓரிரு வாரங்கள் கழித்து வந்து சேர்ந்த முரளி, அங்கே இரண்டாம் வருடம் பயின்ற மாணவன் வித்யனின் நெருங்கிய தோழனான, தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக பாதுகாப்பு தொடர்பான பட்டம் பயில வந்த வேதன், அதே பட்டம் பயில வந்த அன்பு என குணாவின் நட்பு வட்டம் விரிந்தது.

  –  – –  – – – – – – – – –  – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –  

ந்த வாரம் முழுவதும் அந்தத் திரைப்படம் பற்றிய பேச்சாகவே இருந்தது. விடுதியிலாகட்டும், கல்லூரியிலாகட்டும், பொருட்கள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்றபோதாக இருக்கட்டும். எங்கு சென்றாலும், அந்தப் படத்தின் பாடல்களும், முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்த இரண்டு நாயகர்களும், நாயகியையும் பற்றியுமாக எங்கு சென்றாலும் அதே பேச்சுதான். எல்லாவற்றையும் விட, இசைப்புயலின் கவர்ந்திழுக்கும் இசை. அந்தப் படத்தின் இயக்குநர் பற்றி அறியாதவரையும் அறியச் செய்திருந்தது படம். இந்தியா முழுவதுமே அத்தனை பரபரப்பினை ஏற்படுத்தியிருந்த திரைப்படம். அது பற்றிய செய்திகளே எல்லோரையும் ஆக்ரமித்துக் கொள்ள, அந்த வார இறுதியில் சென்று பார்த்தே ஆக வேண்டிய படமாக ஏகமனதாக எல்லோராலும் முடிவு செய்து தீர்மானம் இயற்றப்பட்டது.

சனியன்று இரவுதான், அதற்கு சரியான நாள். ஏனென்றால், வாரத்தில் சனியன்று இரவு மட்டும் விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியில் சென்று எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம், வெளியிலேயே தங்கிக் கொள்ள நினைத்தால் அதற்கும் கூட அனுமதி உண்டு. எல்லோரும் பேசுவதைக் கேட்டு, மணி ஊருக்கு செல்வதைக் கூட அந்த வாரம் கைவிட்டு விட்டு, சனிக் கிழமைக்காகக் காத்திருந்தான்.

சனியும் வந்தது. அவர்கள் பாதி வழி போகையிலே மழையும் வந்தது. திடுமென மேகம் கருத்து, படபடவெனப் பிடித்துக் கொண்டது. சரியாக மாட்டிக் கொண்டார்கள் அவர்கள். பாதி வழி கடந்த பிறகு, சுற்றிலும் எங்கும் நின்று செல்ல இடமற்ற நிலையில், திரும்பிச் சென்றாலும் மழையில் நனைந்துதான் ஆக வேண்டும். ஆக, திரையரங்கு நோக்கிய அவர்களின் பயணம் நில்லாது தொடர்ந்தது.

ஆம். அந்தத் திரைப்படம், முந்தைய ஆண்டே வெளியாகியிருந்த படம் தான். இப்போது அவர்களுடைய விடுதி இருக்கும் இட த்தில் இருந்து சுமார் ஆறு முதல் ஏழு கிலோமீட்டர் தள்ளி இருந்த இடத்தில், மறு வெளியீடாக இடப்பட்டிருந்தது.

சிக்கல் என்னவென்றால், அந்த திரையரங்கம் செல்லும் பாதையில், இரவில் பேருந்துகள் இயங்குவதில்லை. அவர்களின் கைகளில் வாகனங்கள் எதுவுமில்லை.  சரிதான் என விடுதியின் அருகில் இருந்த வாடகை மிதிவண்டி நிலையத்தில் வாடகைக்கு வண்டிகள் எடுத்துக் கொள்வோம் என முடிவு செய்தனர். அவர்கள் நேரமோ என்னவோ, சனியன்று இரவில், இவர்கள் கடைக்குச் சென்ற போது, இருந்ததே மூன்று மிதிவண்டிகள் தான்.

அதனாலென்ன, ஒவ்வொரு வண்டியிலும் மூன்று பேராகப் போக வேண்டியதுதான் என்று சொன்னவன், மணியேதான்.

‘ஹ.. ஹா.. ரதம் தயார்’ சொல்லிச் சிரித்தவனும் அவனேதான்.

செந்தில், ஒரு வண்டியை எடுத்துக் கொள்ள, சங்கரன் மற்றொரு வண்டியை எடுக்க, மணி எடுத்த வண்டியில் முன்புறம் அன்புவும், பின்புறம் குணாவும் அமர,  வழி நெடுக அந்தப் படத்தைப் பற்றியே பேச்சு நடந்தது. செந்திலையும், சங்கரனையும் பாதி வழியில் மற்றவர் மாற்றி விட்டு, மிதிவண்டி மிதிக்க, மணியோ, தானே தான் திரையரங்கு வரை மிதிவண்டி அழுத்தி வருவேன் என அடம் பிடித்து தொடர்ந்தான். எல்லோரும் திரைப்படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பேசி வர, மணியும் இசைப்புயலின் அருமை பெருமைகளைப் புகழ்ந்தவாறுதான் மிதிவண்டி மிதித்தான். மழையைப் பொருட்படுத்தாது, திரையரங்கினை அடைந்தது நண்பர்கள் குழாம். அவர்கள் திரையரங்கினை அடைந்த உடனே சொல்லி வைத்தது போல மழை நின்று போனது.

கொட்டும் மழையில், கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டு பேரை வைத்து, சிரமப்பட்டுக் கொண்டு மிதிவண்டியை மிதித்து, திரையரங்கை அடைந்து, அரங்க நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு சிலர் வரிசைக்கு செல்ல, மிதிவண்டிகளை ஓட்டி வந்தவர்கள், அதை நிறுத்துவதற்கு செல்ல, குணாவும் இன்னும் ஓரிருவரும் இடைவழி நிற்க, மிதிவண்டியை நிறுத்தி விட்டு, ஓட்டம் ஓட்டமாக ஓடி வந்த மணி கேட்டானே ஒரு கேள்வி. அருகில் இருந்த பிற கல்லூரி மாணவர்கள் எல்லோரும் கொல்லென்று சிரிக்க, மணி கேட்ட கேள்வியில் இவர்களுக்கும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்த போதும், அவனைப் பார்த்து முறைத்து நின்றனர் தோழர்கள்.

கேட்கப்பட்ட கேள்வி அப்படி!!! 🙂

‘இப்படி எல்லோர் முன்னும் அசிங்கப்படுத்தி விட்டானே’

அந்தக் கல்லூரி மாணவர்களைப் பார்த்தால், அவர்கள், இவர்களை புழு போலப் பார்த்தனர்.

”வந்துடறானுங்க நாங்களும் படத்துக்குப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு” என்று ஒருவன் சத்தமாகவே சொல்ல, பதில் சொல்ல வழியற்று, சங்கடப்பட்டு நிற்க வேண்டிய நிலை, குணாவுக்கும், தோழர்களுக்கும். அன்றைக்கு அந்தப் படம் பார்த்து முடித்துத் திரும்பும் வரை, அந்த அடுத்தக் கல்லூரி மாணவர்களின் பார்வைகளை சந்திக்க நேர்ந்த போதெல்லாம் நெளிய வேண்டி இருக்க, எல்லோரும் மணிக்குக் கொடுத்த மண்டகப்படிக்கு அளவில்லை.

அன்றைய தினத்திற்குப் பிறகு, அந்தப் படத்தின் பெயர் மணியின் பெயரோடு அடைமொழியாக பசை போட்டு ஒட்டிக் கொண்டு விட்டது என்றால், மணியின் கைங்கர்யம் அவ்வாறானதென்றறிக. 🙂 😉 🙂

”என்னைப் பார்த்து ஏண்டா அப்படிக் கேட்டே?” என்று கவுண்டமணியார் கேட்டது போல, “அந்தக் கேள்வியை ஏனடா இப்போது, இங்கே வைத்துக் கேட்டாய்?” என்று கேட்டால், அப்போதுதான், அந்தப் படத்தின் சுவரொட்டிகளை மணியார் பார்த்தாராம். ஆமாம். திரையரங்கு என்றிருந்தால், சுவரொட்டிகளும் இருக்கும் தானே? 😉

அதனால்தான் அப்படியொரு கேள்வி. அவசியம், அது என்ன அப்படி ஒரு படம், என்ன கேள்வி அது என உங்களுக்குத் தெரியத்தான் வேண்டுமா? அடிப்பதாக இருந்தால், மணியைக் கண்டுபிடித்துக் கொடுக்கிறேன். நன்றாக மொத்திக் கொள்ளுங்கள். சூழலை விவரித்தது தவிர்த்து, இதில் எதுவும் என் குற்றமில்லை மக்களே.

 

அதாகப்பட்டது, அந்தத் திரைப்படத்தின் பெயர்……

 

”ரங்கீலா….”

”ரங்கீலா மணி” என்ற பெயரைப் பெற்றுத் தருமளவில் புகழ் பெற்று விட்ட அந்த அரும்பெரும் கேள்வி…..

 அமீர்கானையும், ஊர்மிளாவையும், ராம்கோபால் வர்மாவையும், இசைப்புயலையும், பின்னாட்களில் ”ஆரண்ய காண்டம்” படத்தில் நடித்த மற்ற நாயகனையும் பற்றிய அத்தனை பேச்சுக்களையும் அத்தனை நாட்களாகக் கேட்டுக் கொண்டிருந்த மணி கேட்டது, வேறு எதுவும் இல்லை…. முடிந்தால் கண்டுபிடிங்க என்று சொல்லி வெறி கிளப்பி விடவா? 😉 😉

 

அது… “ஐயயோ, ரங்கீலா இந்திப் படமா?”   

Advertisement