Advertisement

                                                அரசிளம்பரிதியின்

                   மனம் பொய்த்த பொழுதுகள்

                                                  அத்தியாயம் – 3

                                 ஒரே அறை

                       வருடம் – 1996

கோவிலில் இருந்து திரும்பியபொழுதும், குமரன் தான் பேசிக் கொண்டிருந்தார். புதியவன், அமைதியாகவே குமரன் பேசுவதையெல்லாம் செவி மடுத்தவாறுதான் வந்தான். பதில் சொல்ல நேர்ந்தபோதெல்லாம் கூட, “ஆம்” “இல்லை” என்பதுடன் முடித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் விடுதியை நெருங்குகையில் தான், “நானே பேசிக் கொண்டிருக்கிறேனே. உன் வீட்டில் மொத்தம் எத்தனை பேர்..” என்று குமரன், புதியவனைக் கேட்டுக் கொண்டிருக்கையிலேயே,

“ச்சே.. ச்சே..என்ன அண்ணா இது?” என்று குறுக்கிட்டு வேகமாகக் கேட்டான் புதியவன்.

அவனது பார்வையைப் பின் தொடர்ந்து பார்த்த குமரனுக்கு சிரிப்பு பொங்கியது. அவன் எதைக் குறிப்பிடுகிறான் எனறு குமரனுக்கு மிகத் தெளிவாக விளங்கியிருந்தது. ஆனாலும்..,

“என்னது!! ச்சே..ச்சேவா?” குமரனின் குரலில் நம்ப முடியாத வியப்பு. அத்தனை நல்லவனாடா நீ என்பதாக குமரனின் பார்வை புதியவனை அலசியது. இருவரும் நடப்பதை நிறுத்தி நின்றுவிட்டிருந்தார்கள். புதியவனின் குடும்பம் பற்றி மீண்டும் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை. அதைப் பேசும் சந்தர்ப்பம் அவர்களிடையே அதன் பிறகு எழவும் இல்லை.

“இது.. இது..” எதையோ வெறித்துப் பார்த்த வண்ணமாக நின்றிருந்தான் புதியவன்.

“அது.. அது, அதேதான்!!” மீண்டும் தன் அட்டகாசமான அதிர்வெடி சிரிப்பினை எடுத்து விட்டார் குமரன். குமரனுக்கு அத்தனை வேடிக்கையாக இருந்தது, அவனைப் பார்க்க.

“என்ன அண்ணா, சிரிக்கிறீர்களே?”

“சிரிக்காமல் வேறு என்ன செய்ய?” என்று கேட்டு மேலும் அதிரடியாய் சிரித்தார் குமரன்.

“அண்ணா..” என்று சற்று அதட்டலோடு அழைத்து, அதற்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தான் புதியவன்.

“ஹ ஹா ஹா. இன்றானால் உனக்கு பதினேழு வயது முடிந்து பதினெட்டு பிறந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்”

“இல்லை அண்ணா. பதினெட்டு முடியப் போகிறது.”

“ஓ! என்றால், பள்ளியில் ஒரு வருடம் கோட் அடித்தாயா?” என்று கேட்டு குமரன் சிரிக்க,

“நான் ஒரு வருடம் என்றால், நீங்கள் என்ன பள்ளியில் ஏழெட்டு வருடம் கோட் அடித்தீர்களா?” என்று மிக நக்கலாகக் கேட்டு முறைத்தான் புதியவன்.

“ஹ ஹா ஹா. பார்ரா, போட்டுத் தாக்குவதை. என்றால், என்னைப் போலவே உனக்கும் அந்தப் பக்கம் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது என்று அர்த்தம், சரிதானே? இப்போது நீ அலுத்துக் கொண்டதைப் பார்த்தால்..” என்று புதியவனை மேலும் கீழுமாக ஏதோ எடைபோட்டு விட்டு, “நாம் இதுபற்றி” என்று நிறுத்தி, புதியவனின் பார்வை முன்பு சென்ற திசை நோக்கி விழிகளால் சுட்டிக் காட்டி, ”பிறகு பொறுமையாகப் பேசுவோம்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் நடையைத் தொடர, மேலும் சில எட்டுக்களிலேயே, அவர்கள் விடுதியின் முன்பு ஒரு வாகனம் நிற்பதைப் பார்த்தனர்.

“சரிதான் தம்பி, வீராச்சாமி வந்திருக்கிறார் போல இருக்கிறது” என்றார் குமரன். மீண்டும் அவர்களது நடை தடைபட்டது. வீராச்சாமி யார் என்பதை புதியவனும் அறிவானே.

”அவரா? அவர் எதற்கு அண்ணா இப்போது இங்கே?” என்று தயக்கத்துடன் கேட்டான் புதியவன்.

“ம்ம்ம். எதற்காக இருக்கும்?” என்று தீவிரமான யோசனை பாவம் காட்டிவிட்டு, ”இன்று கல்லூரியின் முதல் நாள். முதல் வருட மாணவர்கள் எல்லோரும் வந்திருக்கிறீர்களில்லையா? விடுதியின் நடைமுறைகள், முதல் வருட மாணவர்களுக்கு கல்லூரியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றிய போதனைகள் எல்லாம் செய்ய வேண்டாமோ?” என்று நக்கலாகக் கூறினார் குமரன்.

“ஒழுக்கமா……???” என்று விளக்கெண்ணெயைக் குடித்தது போலப் போனது புதியவனின் முகம்.

“ஹஹாஹா.. நல்ல தம்பியடா நீ. ஒழுக்கம் என்றவுடன் வேப்பெண்ணெயைக் குடித்தது போல இருக்கு போலயே. நீ அவ்வளவு பெரிய ஆளா? நம்ப முடியலையே” என்று ராகம் போட்டார் குமரன்.

“அதைக் குடித்தால் இப்படியா இருக்கும்?” என்று நொடித்தான் இளையவன்.

“இப்போது அது ரொம்ப முக்கியம்” என மீண்டும் சிரிப்பு அதிகமாக வர, பொங்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைக்க, குமரனின் விழிகள், தன் முன் நிற்கும் புதியவனை ஒரு வியப்போடும், மலர்ச்சியோடும் பார்த்துக் கொண்டிருந்தது.

“அண்ணா, நான் எதனால் அப்படி நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். ஒழுக்கத்தைப் பற்றி இவர்கள் பேசுவது என்றால், அதைத்தான் நம்ப முடியவில்லை.” என்று குழப்பம், கடுகடுப்பு, ஆதங்கம் என ஒரு கலவையாகப் பேசினான் புதியவன். புதியவனின் பார்வையும், அவன் எண்ணமும் குமரனுக்கு நன்கு புரிந்தது.

“ம்கூம். வீராசாமி நல்லவரா, கெட்டவரா என்று ஆராயும் உரிமை நமக்கு இல்லை. இந்தப் பேச்சுக்களை நீ இங்கேயே விட்டு விட்டு விடுதிக்குள் வருவது நல்லது தம்பி. நிறுத்திய பிறகுதான் நாம் உள்ளே செல்லப் போகிறோம். என்ன சொல்கிறாய்?” என்று சற்று கண்டிப்புடன் பேசினார் குமரன்.

”ம்ம்.. ம்ம்” என்று அசுவாரசியமாய் பதிலளித்த போதும், ’என்ன இருந்தாலும் எப்படி இப்படி..’ என்று அந்தக் கல்லூரி நிர்வாகத்தின் தன்மையைக் குறித்து சிந்தித்தபடிதான் இருந்தது புதியவன் மனது.

குமரனை அந்தக் கல்லூரியில் சேர்த்திருந்ததற்காக, சற்று முன்புதான் பெருமிதமாக எண்ணம் கொண்டிருந்தான். அதை அப்படியே மாற்றி விட இது ஒன்றே போதுமானதாக இருந்தது.

“ரொம்ப அலுத்துக் கொள்ளாமல் வா தம்பி” என்று கூறியவாறே குமரன் விடுதியின் சில படிக்கட்டுக்களைக் கடந்து விடுதிக்குள் நுழைய, குமரனைத் தொடர்ந்து புதியவனும் சென்றான்.

விடுதியின் கீழ்த்தளம் முழுவதும் வெறிச்சோடி இருந்தது. முன்பு பார்த்த, வரவேற்பு மேசையிலும் ஒருவரும் இல்லை. மேலிருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. யாரோ ஒருவர், அநேகமாக வீராசாமி பேசுகிறார் போலும் என்று எண்ணியவாறே, குமரன் மேல் தளம் நோக்கி படிகளில் செல்லக் கண்டு, குமரனைத் தொடர்ந்தான் புதியவன்.

பத்து படிகளைப் போலக் கடந்தவுடன், திசைமாறி அமைக்கப்பட்டிருந்தன படிகள். இடையே திருப்பத்திற்கான சமதளத்தில் கால்வைத்து மீண்டும் படியேறிடக் கால் வைக்கையிலேயே, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த குமரன் அப்படியே தேங்கி நின்று விட, தானும் இரண்டு படிகளை மேலேறி அப்போதுதான் அந்தத் தளத்தினை முதன் முதலாகப் பார்வையிட்டான் புதியவன்.

அந்தத் தளம் அவனது எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக இருந்தது. அங்கே சிலர், மாணவர்களாகத்தான் இருக்க வேண்டும், அவர்கள் நின்றிருக்க, சற்று உள் தள்ளி, ஒரு சிறிய மேசை, மேசை விரிப்பு விரிக்கப்பட்டு, மூன்று, நான்கு நாற்காலிகள் இடப்பட்டு, அதில் ஒன்று மட்டும் வெறுமையாக யாரும் அமராமல் இருக்க மற்றவற்றில், இளவழகனும் இன்னும் சிலரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பினைப் போலவே அந்தக் கல்லூரியின் தாளாளரும், முதல்வருமான வீராச்சாமிதான் நின்றவாறு பேசிக் கொண்டிருந்தார். மீறிப்போனால், ஐம்பதில் இருந்து அதிகபட்சமாக எழுபது பேர் வரை நாற்காலிகளிட்டு அமரக் கூடிய அளவிலான ஒரு சிறு கூட்டங்கள் நடைபெற கூடிய அளவிலான ஒரு அறை. இது எப்படி விடுதியாக செயல்பட முடியும் என்றொரு மிகப் பெரிய கேள்வி புதியவனின் உள்ளே எழுந்திருந்தது. அதிலும் படிக்கட்டுகள் முடிவடையும் இடத்தில் இருந்து, அந்த சற்று நீண்ட அறையினைப் பிரிக்க எந்தத் தடுப்போ, கதவுகளோ இல்லை. படிகளில் ஏறி வருபவர்களுக்கு அங்குள்ள அனைத்தும் அப்படியே தெரியும். படிகளின் மறுபுறம் சுவர் வைத்து, கதவிட்டு அடைத்திருந்த போதும் கூட, அதன் வெளியே வீதியைப் பார்த்தவாறு இரண்டு அல்லது மூன்று அடி அளவிலான இடம் விட்ட முன்னறை (பால்கனி என்று சொல்கிறார்களே, அதுவே), இரும்பு கம்பிகளிட்ட கைப்பிடிச் சுவரோடு தெரிந்தது. அந்தக் கதவு தவிர்த்து படிகளின் பக்கவாட்டில், அந்த அறையை விட்டு வெளிச் செல்லும் வகையில் மேலும் இரண்டு கதவுகள் இருந்தன. அத்தனையையும், பாதிப் படிக்கட்டுகளில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்ததால், இவ்வாறாக புதியவனின் அந்த அறையைப் பற்றிய எடைபோடல்கள் வெகு சில கணங்களில் நிகழ்ந்திருந்தது.  

அதுவரையில் விடுதியில் தங்கியிருந்ததில்லை என்றாலும், சில விடுதிகளை நேரில் கண்டிருக்கிறான் புதியவன். இப்போது தான் இருப்பது, விடுதிக்கான எந்தவிதமான அம்சமும் இல்லாத ஒரு விடுதியில் என்பதை புதியவனால் எளிதாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதை படிக்கட்டுகளுக்கு நேரெதிரே, ஒரே இடத்தில் சுவரோரமாய் ஒன்றுசேர்த்து வைக்கப்பட்டிருந்த சில பெட்டி, படுக்கைகள் உறுதி செய்தன.

வெளியில் இருந்து பார்த்தபோது, அந்தக் கட்டிடத்திற்கு இன்னுமொரு மேல்தளம் உண்டு என்று என்பது தெரிந்திருந்ததோடு, சற்று திரும்பியபடி மேலோடிய படிக்கட்டுகளும் அதை உறுதி செய்யவே, ஒருவேளை, மேல் தளத்தில் அறைகள் இருக்கலாம் என்றெண்ணிக் கொண்டான் புதியவன்.

முன்பு சென்றிருந்த குமரன், பேசிக் கொண்டிருப்பது வீராச்சாமிதான் என்பதை உறுதி செய்து கொண்டு, தயக்கத்தினை உதறி, படிகளைக் கடந்து, தளத்தினில் காலெடுத்து வைத்து நின்றிருக்க, புதியவனும் படிகளைக் கடந்து தளத்தினில் கால்கள் வைத்தான்.

புதியவனைத் திரும்பிப் பார்த்த குமரன், வீராச்சாமியை ஒருமுறை பார்த்து விட்டு, புதியவனைப் பாதுகாப்பவன் போல, புதியவனுக்கு முன்பாக அவனை மறைத்தவாறு தன்னை முன்னிட்டுக் கொண்டான். புதியவனுக்கு அது தேவையென்று தோன்றாதபோதும் கூட, குமரனின் எண்ணம் புரிந்து, குமரனைக் குறித்து மேலும் நல்லவிதமாகவே எண்ணிக் கொண்டான்.

அப்போதுதான், வீராச்சாமி, “நம் கல்லூரியில் எல்லாவற்றையும் விட ஒழுக்கம்தான் மிகவும் முக்கியம். ஒழுக்கம் இல்லாது போனால்…” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்டவுடன் இப்போது சிரிப்பது புதியவனின் முறையானது. அவனால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. இப்போதுதானே, குமரனும், புதியவனும் அதுபற்றி பேசினார்கள். அதிலும், புதியவனுக்கு, தான் கண்ட காட்சி நினைவு வர, தனக்கு வரும் அளவில்லாத சிரிப்பினை எப்படிக் கட்டுப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் விழிக்க, புதியவனின் நிலை உணர்ந்து, புதியவனின் புறம் திரும்பி.. “ஷ்ஷ்ஷ்!!! சிரிக்காதே” என மெல்லக் கூறி, விழிகளால் எச்சரித்தார் குமரன். எச்சரித்தாரே தவிர, அவரது விழிகளிலும் தன் எண்ணத்தினைப் புரிந்து, ஒரு மென்னகை ஓடுவதையும், சிரித்து விடாமல் அவரும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது புதியவனுக்கு.

குமரனின் எச்சரிப்புக்கு புதியவனிடம் பலனிருந்தது என்றாலும், வீராச்சாமியின் விழிகளில் இவர்கள் இருவரும் தன்னை நோக்கி உள்ளினுள் நகைக்கிறார்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. அதோடு, புதியவனின் விழிகள் தன்னை நோக்கி ஏளனமாய் நகைத்து, தன் சொற்களை அவன் நம்பவில்லை என்று கூறுவதை உணர்ந்திட, “ஒழுக்கம் இல்லாது போனால்..” என்ற வார்த்தைகளின் பிறகு உதிர்க்க வேண்டிய வார்த்தைகளை நிறுத்தி விட்டு, “சேர்க்கையைப் பார்த்தீர்களா?” என்று, இளவழகன் உள்ளிட்ட நாற்காலிகளில் அமர்ந்திருந்த அந்தக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் நிர்வாகிகளைப் பார்த்து கூறினார்.

இது என்னடா முதல் நாளே இப்படி என்று தோன்றிய போதும், ’என்ன சேர்க்கை, குமரன் அண்ணனைப் போல நபருடன் சேர்ந்திருப்பது அவ்வளவு தவறா என்ன? அவரானால் என்னையல்லவா சிரிக்கக் கூட வேண்டாமென்று எச்சரித்துக் கொண்டிருக்கிறார். அதிலேயே முடிந்த அளவில் பிரச்சனைகளைத் தவிர்க்கும் நபரென்று புரிகிறதே. எந்த அடிப்படையில் இவர்கள் இவரை கல்லூரியில் சேர்த்துக் கொண்டார்கள்? பிறகு இந்த நாள் வரை, ஏதோ ஒரு பொறுக்கியைப் போல நடத்துகிறார்கள் போல’ என்று துணுக்குற்றான் புதியவன்.

அதற்குள் குமரனைப் பார்த்து, “இன்று வந்தவனை மறைப்பது போல நின்று கொண்டால் என்ன அர்த்தம்? யாரிடமிருந்து அப்படிப் பாதுகாப்பு கொடுக்கிறீர்களாம்? நீங்கள் மிகப் பெரிய அரண்தான். ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்” என்று வேண்டுமென்றே சற்றுப் பணிவைக் காட்டுவது போலப் பேசிவிட்டு, தொடர்ந்து, ”இந்தக் கூட்டம் உன்னைப் போன்றவர்களுக்கு இல்லை. சொல் பேச்சு கேட்டு நடப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ள மாணவர்களுக்குதான். அந்தப் பையனை இங்கே விட்டு விட்டு நீ மேலே உன் இடத்திற்குப் போகலாம். புதியவர்களுடன் பழகி அவர்களைக் கெடுப்பதெல்லாம் வேண்டாம். தண்ணீர் தெளித்து விடப்பட்டவர்கள், எதிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது, தெரிகிறதா?” என்று சற்று கடுமை நிறைந்த குரலில் குமரனை நோக்கி அறிவுறுத்த, குமரன், அவரின் புறம் பார்க்காமல், புதியவனை நோக்கித் திரும்பி, “இங்கே பெரிதாக எதுவும் ஆகாது. பயப்படாது இரு. இவர் சென்ற பிறகு பார்ப்போம்” என்று மிக மெதுவான குரலில் முணுமுணுத்துவிட்டு, வேகமாக, அடுத்த தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகளில் இரண்டிரண்டு படிக்கற்களாக தாவிச் சென்றுவிட, புதியவனைப் பார்த்து,

“வந்தவுடன் நல்ல ஆள் பிடித்தாகிறது. வீட்டுக் கொல்லையிலேயே கல்லூரி ஒன்றிருந்தும் அங்கு சேர்க்காமல், இத்தனைத் தொலைவு கடந்து இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் என்றால், இது போலக் கூட்டு சேர்ந்து திரிவதற்காக இல்லை. ஒழுங்காகப் படித்து முன்னேறுவதற்காகதான். இங்கிருந்து வெளியில் செல்ல வேண்டுமானால், விடுதிக் காப்பாளரின் அனுமதி பெற்று சென்று வர வேண்டும். இப்படி சொல்லாமல் வெளியில் சென்று கூட்டு சேர்ந்து திரிந்துவிட்டு வரக் கூடாது. இரவு எட்டு மணிக்குள் விடுதிக்குத் திரும்பியே ஆக வேண்டும். மற்றதெல்லாம் ஏற்கனவே நாங்கள் பேசியாகி விட்டது. மற்றவர்களைக் கேட்டுக் கொண்டு அதன்படி இருந்து கொள்ள வேண்டும். என்ன சரியா?” என அவர் கேட்க,

‘அடப் பாவிகளா. நாங்கள் என்னவோ ஊர் சுற்றி விட்டு வந்ததாகவே முடிவு கட்டிப் பேசுகிறார்களே? திரிந்தோமாமே?? இதோ, இந்த ஊரின் பிரசித்தி பெற்ற கோவிலுக்குத்தானே போய் வந்தோம்? மணி இப்போது ஏழரைதானே ஆகிறது’ எனத் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே மனதினுள் நினைத்தாலும், புதியவனின் தலை சம்மதமாகவே ஆடியது.

இது வழமையாகவே ஒரு கல்லூரி நிர்வாகம், தன் மாணவர்களை நடத்தும் நடைமுறைதான் என்றாலும், இங்கே இன்னும் புதிது புதிய்தாய் பல பிரச்சனைகள், அந்தக் கல்லூரி நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் காத்திருந்தது.

“அவ்வளவுதான். இரண்டாம் வருட மாணவர்கள், புதியவர்களை நாங்கள் என்ன சொன்னாலும் கேலி செய்வதை விடப் போவதில்லை என்று தெரியும். அதனால் பெரிதாக நான் எதுவும் சொல்லப் போவதில்லை. பெரிதாக பிரச்சனை எதுவும் வராத அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இதோடு சொல்ல வேண்டியவை முடிந்தது. கவனமாக இருந்து கொள்ளுங்கள்” என்று கூறி கூட்டத்தைக் கலைத்தார் வீராச்சாமி.

ஒருவேளை, அந்த வருடத்தின் பிற்பகுதியில் நடக்க இருந்த பெரும் வேதனை தரும் நிகழ்வு பற்றி முன்கூட்டி அறிந்திருந்தால், இவ்விதமாக ஒரு கல்லூரி நிர்வாகி பேசியிருக்கக் கூடுமா? எந்த எச்சரிக்கையும் விளைவுகளைத் தடுத்திருக்கவும் முடியுமா? காலம் தன் சதுரங்கத்தினை தான் நினைத்தபடி, நினைத்த விதத்தில், நினைத்த வேகத்தில் தான் நடத்திக் கொள்கிறது. இன்று நிகழ்பவை மறுநாள் வரை காத்திருப்பதில்லை; நாளை நிகழ இருப்பவை இன்றே நடப்பதுமில்லை. அதற்கான அறிகுறியினைக் கூட சமயங்களில் காலம் ஒரு எச்சரிக்கையாய் அளிப்பதும் இல்லை.

 

“இந்த விடுதி இப்படி இருக்கும் என்று தெரியாமல், நாம் ஒரே அறை கேட்டுப் பெறலாம் என்று பேசிக் கொண்டோமே. கேட்காமலே நமக்கு ஒரே அறைதான் என்று தந்து விட்டார்கள் பார்த்தீர்களா?” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான் மணி.

“ஓ! அப்படியானால், இதுவேதான் நாம் தங்கியிருக்கப் போகும் அறையா?” பதிலுக்கு வியந்தான் குணா.

“ஆமாம். இங்கே வேறு அறை ஏது?”

“மேலே, அடுத்தத் தளத்தில்…”

“ம்ம்ம்.. அடுத்தத் தளத்தில்தான் இதோ, நம்மை வாட்டிக் கொண்டிருக்கும் குரங்குகளும், முன்பு அங்கு நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்களே அவர்களும் இருக்கிறார்களே.”

மணி சொன்ன குரங்குகள், அந்த ஆண்டின் இரண்டாமாண்டு மாணவர்களே. வீராச்சாமியின் அனுமதியுடனேயே முதலாமாண்டு மாணவர்களை, அறிமுகப் படலம் என்ற பெயரில் கேலி செய்வதற்குத் திரட்டியிருந்தார்கள் அவர்கள்.

“ஹஹா.. அப்படியானால், நாம் பேசியது போலவே ஒரே அறைதான். எவ்வளவு பெரிய அறை? என்ன வித்தியாசம் என்றால், நம் கூடவே எப்பொழுதும் மேலும் பலர் இருப்பார்கள் போல” என்று கூறிச் சிரித்தான் குணா.

“ம்ம். ஆமாம். இதற்கு முன்பு இந்த இடம் ஒரு உணவகமாக இருந்ததாம்” என்றான் மணி.

“ஓ” என்றவனுக்கு, அந்த இடத்தைப் பற்றி ஓரளவிற்குப் பிடிபட்டுப் போயிற்று. அந்த அறை, உணவகமாக அந்தக் கட்டிடம் இயங்கிய போது, வரிசையாக உணவு மேசைகளும், நாற்காலிகளும் மட்டும் போடப்பட்டிருந்த இடமாக இருக்கலாம்.

வீராச்சாமி கூட்டியிருந்த கூட்டத்தைக் கலைத்து விட்டுச் சென்றவுடன், இளவழகன் உள்ளிட்டவர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பிறகான மாணவர்களின் முதல் கலந்துரையாடலின் சிறு பகுதியே இது.

முன்பே அறிமுகம் ஆகியிருந்ததினால், அந்தக் கூட்டத்தில் மணியைக் கண்டு புன்னகைத்து, அவனருகே சென்று நின்றான் புதியவனாகிய குணா. ஆம். சனியன்று வீடு வர வேண்டும் அல்லது உன் கடிதம் வர வேண்டும் என்று சொல்லிச் சென்ற தந்தையின் மகனே மணி.

———————————————————————————————-

அந்த வருடத்தின் முதலாமாண்டு மாணவர்கள், இரண்டாமாண்டு மாணவர்கள் சிலர் முன்பு, அந்த மாணவர்களின் கட்டளைப்படி நிற்க வைக்கப்பட்டிருந்தனர். ஆறடி உயரமோ, அரையடி உருவமோ, அதுவெல்லாம் அங்கே ஒரு பொருட்டே இல்லை. இங்கே இரண்டாம் வருடம், முதல் வருடம் என்பதே கணக்கு.

மூன்றாம் வருட மாணவர்கள் அந்த விடுதியில் இருவர்தான். அதிலொருவர் குமரன். மற்றவரும், இதிலெல்லாம் ஆர்வம் காட்டும் நபரில்லை. குமரன், மற்றவர்களிடம் இயல்பாகப் பழகுவதே வெகு அரிது. குமரனோடு, குணாவைப் பார்த்ததே இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வியப்பு.

இருந்தாலும், வீராச்சாமியே, அனுமதி கொடுத்துவிட்ட பிறகு, முதலாண்டு மாணவர்களைக் கேலியுடன் அறிமுகம் செய்து கொள்வது தவறென்று படவில்லை. ஆகவே, குணாவையும் அவர்கள் அதிலிருந்து விலக்கி வைக்கவும் இல்லை. அவன் வயதினளவில், தங்களையொத்தவன் என்று அறிந்தும் கூட, இங்கே கணக்கு, புதியவனா, பழைய மாணவனா என்பது மட்டுமே என்று விட்டார்கள்.

ஒருவரை ஆடவும், ஒருவரை நடிக்கவும், மற்றொருவரைப் பாடவும், குரல் மாற்றி பேசவும், திடுமென ஒரு தலைப்பைக் கூறி, 2 நிமிடங்கள் அதைப் பற்றி ஏதாவது பேசு என்றுமாக செய்யக் கேட்டு, அவர்கள் செய்வதை வேடிக்கை செய்து கொண்டிருந்தனர். குணாவும், மணியும் பின்வரிசையில் நின்றிருந்தனர்.

இவர்களுக்குள்ளாகவே அந்த விடுதியைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே, மணியின் முறை வர, மணியை ’முக்காலா முக்காபுலா’ ஆடச் சொன்னார்கள்.

அதைக் கேட்டதுமே, முன்வரிசையில் நின்றிருந்த சில முதல் வருட மாணவர்களும் மணியைத் திரும்பிப் பார்க்க, குணாவும் மணியின் இடையை முதல் முறையாக நோட்டமிட, எல்லோருக்குமே குபீர் சிரிப்பு.

மணி, மிகவும் பருத்த உடலமைப்பு இல்லைதான். ஆனால், கழுத்து முதல் இடுப்பு வரை, வேறுபாடு எதுவுமற்ற ஒரு உருவம். அதை அப்போதுதான் எல்லோருமே கவனத்தில் எடுக்க, “ஆ! சரியான ஆப்புதான் வைத்திருக்காங்க போல” என்று விழித்த மணி,

“அய்யய்யோ, அண்ணே, வேண்டாம்னே. நீங்கள்லாம் பயந்துருவீங்கண்ணே. ஏற்கனவே பாடினவங்க குரலில் அரண்டு போயிருக்கீங்கதானே? வேற ஏதாவது செய்ய சொல்லுங்கண்ணே, செய்திடுறேன். ஆட்டம் கூட, இந்தப் பாட்டு வேண்டாம்ண்ணே” என்று கெஞ்சினான்.

அருகில் நின்ற குணாவுக்கோ அப்படி ஒரு சிரிப்பு. இன்று எல்லோரும் குணாவை சிரிக்க வைப்பது என்றே கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் போலயே. அதைக் கண்ட மணி, “அடேய்.. அடுத்து உன் முறைதான்லே. படவா, சிரிக்கவா செய்கிறே. ரொம்ப சிரிக்காதே. பல் சுளுக்கிக்கும்” என்று முதல் முறையாக ‘ங்க’ விகுதியைக் கைவிட்டுப் பேசினான்.

”என்னை இவங்க என்ன செய்யச் சொன்னாலும் நான் இப்படியெல்லாம் கெஞ்ச மாட்டேன், பார்ப்போம்” என்று குணாவும் மணியின் காதைக் கடிக்க..

“பார்ப்போம்.. பார்ப்போம்” என்று பல்லை நறநறத்தான் மணி.

“தம்பி, ஆடுப்பா. உன் ஆட்டத்தைக் காண ஓடோடி வந்து நிற்கும் எங்களைத் தவிக்க விடாதே. ஆடு மணி, ஆடு, நீ ஆட முடியும் வரை ஆடு. தேவாவாய் வேண்டாம், ஒரு பிரபுவாய் ஆடு தம்பி” என்று ஒருவன் குரல் கொடுக்க, எல்லோரும் மீண்டும் ஒருமுறை நக்கலாய் சிரித்து வைத்தனர்.

மணி, தன் விதியை நொந்தபடி, முக்கி முக்கி தான் ஆடிய ஆட்டத்திற்கு முக்காலா முக்காப்புலா எனப் பெயர் கொடுத்து ஆட, முகமொரு புறம் போக, அவன் இடுப்பொரு புறம் ஆட, குணாவோடு எல்லோருக்குமே சிரித்து சிரித்து புரையேறியது.

ஒரு கட்டத்தில், “ஐயகோ போதும் மணி, போதும்! நீ துப்பாக்கி எடுத்து சுடாமலே நாங்களே கீழே விழுந்துடுறோம் மணி. எங்களை விட்டு விடு மணி” என்று இரண்டாமாண்டு மாணவனொருவன் கதற.., அந்த இடமே வெகு கலகலப்பாக ஆனது.

அடுத்து, குணாவை ஒருவன் பாடச் சொல்லி விட, அப்போதுதான் ஆடி முடித்திருந்தபோதும், குணாவைப் பார்த்தால், பாட்டு பாடக் கூடியவனாகத் தோன்றாததால் மணிதான் நொந்து போனான்.

‘கேட்கிறவர்களுக்கே சங்கடம் இல்லை என்றால், எனக்கென்ன வந்ததாம்? நீங்கக் குட்டிச் சுவரைத் தேடி ஓடல..’ என்று கருவறுத்தபடி நினைத்தவாறே திரும்பினால், மணியோ “ஐயோ ராசா.. தயவுசெய்து பாடிடாதே” என கண்களால் கெஞ்சினான்.

‘அதெல்லாம் முடியாது, கேட்டார்களில்லையா.., நன்றாக அனுபவிக்கட்டும். ச்சோ.. ச்சோ.. அவங்களோட சேர்ந்து நீங்களும் இந்தத் துயர் பட வேண்டியிருக்கேன்னு நினைத்தால்தான், மனது கொஞ்சம் பதறுது.. இருந்தாலும்.. அவர்களை ஓட வைக்காமல் விடறதில்லைன்னு தீர்மானிச்சாச்சே’ என்று நினைத்தபடி,

“நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே

என்னைக் கேட்டா நான் சொல்ல வழியில்லையே

என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி

யாரைத்தான் கேட்டாரோ” என்று பாட,

குணா, பாலசுப்ரமணியமோ, யேசுதாசோ இல்லை என்றாலும், கேட்குமளவில் அவன் குரல் இருக்கும். அந்த நாட்களில் அவனுக்குக் குரல் பிசிறும் தட்டுவதில்லை. அதற்கும் மேலே பொதுவில் பாடிப் பழக்கம் இல்லையென்றாலும், மேடையேறி போட்டிகளில் கலந்து கொள்வதெல்லாம் குணாவுக்கு வழக்கமே என்பதால், சிறு துளியும் அவனில் கூச்சம் என்பது இராது. தான் கர்ண கடூரமாய்ப் பாடினாலும், கேட்க வேண்டியது கேட்டவர்களின் தலைவிதி என்பதே குணாவின் எண்ணம். ஆகவே அவன் உருகிப் போய்ப் பாட, வேடிக்கையாய் கேட்க நினைத்தவர்களும், பாடலில் ஆழ்ந்து விட,

”ஓ.. எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு

என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு

என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு

இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசைக் பாக்கலே

உன்னைப் போலப் பாசமாக எங்கதையக் கேக்கல்லே

கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லையே

என்னைக் கேட்டா நான் சொல்ல வழியில்லையே”

என்ற வரிகளை அவன் பாடியபோது அதைப் பாடிய விதம், அந்த வரிகளில் இவன் வாழ்க்கையிலும் ஏதோ செய்தி உள்ளதோ என எண்ணும்படி மிகவும் ஒன்றிதான் பாடினான்.

அவன் பாடலை முடிக்கவும், அத்தனைக் கைத்தட்டல்கள்.

”ரொம்ப அனுபவித்து பாடின தம்பி. கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனாலும் இதுவே ஒரு காதல் பாடலாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்” என இரண்டாமாண்டு மாணவன் ஒருவன் கூற, மணி மட்டும் விரோதமாகவே பார்த்திருந்தான்.

“இனிமே நீ வாழ்க்கையில் என்றைக்காவது பாடுவ…” என குணாவின் செவியினில் வந்து குரல் தழைத்து அழுத்தமாக சொல்லி முறைக்க, இல்லை என்பது போல இவன் விழிகளால் சைகை காட்ட, ‘அது..!” என்று கூறி அவன் ஆறுதல் மூச்சு விடும் முன்பே, ”ஆமாம் தம்பி. அவன் சொன்னது போல, நீ இன்னொரு பாட்டு காதல் பாட்டாக பாடு தம்பி” என ஒரு குரல் கேட்க,

மணியின் அரண்ட பார்வை, “சாமி.., டேய். மறுபடியும் முதலில் இருந்தா? என்னை விடுங்கடா ஐயா. எங்கேயாவது ஓடிடுறேன். இவன் கொஞ்சம் கூடக் கலங்காமல் பாடித் தொலைக்கிறான், இப்போதும் பாடி விடுவானோ?” என்று அவன் தான் கலங்கினான்.

அப்போதும் மீண்டும் பாடிய போதும், முழுமையான காதல் பாடலை ஏனோ குணா பாடவில்லை. குரலில் வளமை உண்டோ இல்லையோ, அவனில் கூச்சம் மட்டும் அறவே இல்லை என்பது அங்கே எல்லோருக்கும் அப்பொழுது தெளிவானது.

“அகரம் இப்போ சிகரம் ஆச்சு

தகரம் இப்போ தங்கம் ஆச்சு

காட்டு மூங்கில் பாட்டு பாடும்

புல்லாங் குழல் ஆச்சு” என்ற பாடலை மீண்டும் உருகித்தான் பாடினான்.

“பசியாற பார்வை போதும்

பரிமாற வார்த்தை போதும்

கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலை சாய்க்க இடமா இல்லை

தலை கோத விரலா இல்லை

இளங்காற்று வரவா இல்லை

இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது

எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது”

என்று அவன் பாடிய வரிகளில், அவனது இரசனை, அவனது உருக்கம் அங்கே எல்லோரையும் மிகவும் அமைதியாக்கியது, மணியையும் உள்ளிட்டு.                   

Advertisement