அவளது கிண்டல் புரிய… முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, “என்ன கைய பிடிச்சு இழுத்தியா?”, என்று கெத்தாக அறிவழகி சொல்ல..
கலகலத்து சிரித்த சுசி, “வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்”, என்று தன் கிண்டலை தொடர..
வேறு சட்டை மாற்றி கீழே வந்தவனைப் பார்த்து, “ஏனுங்க.. உங்க கொழுந்தியா எதோ என்றகிட்ட கேக்கனுமாமாமா”, கிச்சனில் இருந்தபடியே எட்டிப் பார்த்து கத்தினாள் அறிவழகி.
கூடவே எட்டிப் பார்த்த சுசித்ரா, அவனது சட்டை மாற்றத்தை கவனித்து, “அதுக்கும் முதல்ல எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், மாமா சட்டை ஏன் மாறிச்சாம்?”, என்று சுசித்ராவும் அங்கிருந்தே சத்தமாக கேட்க..
சின்ன சிரிப்புடன் கிச்சன் வந்த அன்பரசன்,” ம்ம். உன் வீட்டுகாரன் உங்க வெட்டிங் டே அன்னிக்கு, பசங்க ரெண்டு போரையும் இங்க அனுப்பி பாத்துக்க சொன்னானில்லை, அந்த சட்டைக்கு உன்ன பிடிக்கலையாமா, அதான் மாத்த சொல்லிச்சு. ஆமாவான்னு கண்ணனைக் கேட்றலாமா?”, என்று கைப்பகுதியை மடித்துவிட்டு கொண்டு சொல்ல..
“அடப்பாவி மாமா, மானத்த வாங்கிட்டியே?”, என்று வாய்க்குள் சுசித்ரா முணுமுணுக்க..
“என்ன அங்க லிப் அசையறது?”, கில்லி பட சாஸ்திரிகள் பாணியில் அன்பரசன் கேட்க..
வாசல் வரை சென்றவன், “அழகி, நைட் சுதா ஊருக்கு போறான், அவனை ஏர்போர்ட்ல விட்டுட்டு வர்றேன், போகும்போது போன் பண்றேன்னு சொன்னான்”, என்று அன்பரசன் சொன்னதும்.. மனதுக்குள் சட்டென ஒரு வலி வந்தது அறிவழகிக்கு.
இனி சுதா, தரு, மாமா, மாமி, அக்ஷீஸ் தன் வாழ்வில் கிடையாது என்ற உண்மை உரைக்க, “ம்ம்”, என்று சொல்லி அமைதியானாள். ஒரு நொடி அவள் முகத்தை கவனித்த அன்பரசன், நேரத்தைப் பார்த்து தாமதமாவதை உணர்ந்து கிளம்பி சென்றான். அவளிடம் சொன்னபடி, சுதர்ஷனும் அறிவழகியிடம் பேசி விடை பெற்றே சென்றான்.
வீட்டில் ப்ரவீணாவிடம் “கையை பிடிச்சு இழுத்தியா?” கதையை சொல்லி சுசியின் கிண்டல் தொடர, அறிவழகிக்கு தோழியின் நினைவில் இருந்து சற்றே மீள முடிந்தது. இரவும் கவிழ்ந்தது. ஒருவர் பின் ஒருவராக விநாயகம், கண்ணன் பின் அன்பரசன் வந்து சேர, அனைவரையும் சாப்பிட வரச் சொன்னார் கமலம்மா.
சாப்பிட்டபடி விநாயகம், “அந்த வீடு கட்டினதுக்கப்பறம் இதுவரைக்கும் எந்த பூஜையும் பண்ணினதில்ல, அதனால, கணபதி ஹோமத்துக்கு சொல்லி இருக்கேன். விடிகாலைல சாஸ்திரி வந்துடுவார்”
“ம்ம்”
“தூங்கிடாம வீட்டை திறந்து வை”
“டூப்ளிகேட் சாவி இங்கதான் இருக்கு, அவர் வந்தா நீங்க கூட்டிட்டு வாங்க”, என்று அன்பரசன், கொஞ்சம் முறைப்பாகவே சொன்னான். இதுவரை அவர் அந்த வீட்டுக்கு சென்றது இல்லை. அந்த வீட்டை கட்டும்போது கண்ணன் முன்னால் நின்று அனைத்தையும் மேற்பார்வையிட்டானே தவிர, இவர் திரும்பிக்கூட பார்த்ததில்லை. அந்த கோபம் இன்று வரை அன்பரசனுக்கு உண்டு.
“ம்ம், வர்றேன், நைட் வீடு மெழுகி, சுத்தம் செய்ய ஆள் வர சொல்லி இருக்கேன், அரை மணில வந்துடுவாங்க. அறிவு சுசி ரெண்டு பேரும் வாசல் தெளிச்சு கோலம் போட்டு வச்சிடுங்க, கண்ணனும் நீயுமா ஹோமத்துக்கு செங்கல் அடுக்கி வைங்க, பூஜைல உக்கார புது ட்ரெஸ் எடுத்திருக்கு, சாப்பாட்டுக்கும் அரேன்ஞ் பண்ணியாச்சு”.
“ப்பா. சாப்பாடெல்லாம் நீங்க பாத்துக்கோங்க, பூஜை முடிஞ்சதும் நான் திருப்பதி போறேன்”, என்றான் அன்பரசன்.
“இப்படி திடீர்னு சொன்னா என்னடா அர்த்தம்?”, என்று விநாயகம் குரல் உயர்த்த..
“வேண்டுதல் மாமா”, என்று அறிவழகியும், “வேண்டிகிட்டேன்ப்பா”, என்று அன்பரசனும் ஒருசேர கூற..
வினாடிக்கும் குறைவான நேரத்தில் அங்கு இருவருக்குள்ளும் பார்வைப் பரிமாற்றம் நிகழ, அதைக் கவனித்த விநாயகம், “போறியா? போறீங்களா?”, என்று கேட்டதும்,
“போறோம்”, என்றான்.
மகன் மற்றும் மருமகளின் புரிதலை மனதுக்குள் மெஸிக் கொண்ட விநாயகம், “ம்ச். நைட் அந்த வீட்ல படுக்கணும்டா”
“நம்ம வீடுதான? நீங்க போய்ப் படுங்க, ஹோமத்துலயே உங்களை உக்கார சொல்லலாம்னு இருந்தேன், அம்மாக்கு புகை ஆகாதுன்னு நாங்க உக்காரறோம். மிச்சமெல்லாம் நீங்க பாருங்க.”, என்று சொல்லி சாப்பிட்டு முடித்தவன், “வர்றேன்”, என்றுவிட்டு ஹாலை கடக்க, பின்னோடு வந்த அறிவழகி, “மாமா இதெல்லாம் வீட்டுக்கு எடுத்திட்டு போக சொன்னாங்க”, என்று இரண்டு கட்டைப் பைகளை காண்பித்தாள். ஒன்றில் பூஜைக்கு தேவையான பூக்களும், மற்றொன்றில் பழங்களும் இருந்தது. எடுத்துக் கொண்டு நடக்க, வாசல் கதவை திறக்கும் முன், “இருங்க இருங்க, அத்தை இத எடுத்திட்டு போக சொன்னாங்க”, என்று இன்னும் இரண்டு பைகளை நீட்டினாள். ஒன்றில் தாம்பாளங்கள், மற்றொன்றில் சந்தன, குங்கும, தோரண வகையறாக்கள்.
ம்ம், என்று அடையும் வாங்கி வெளியே நின்றிருந்த காரின் பின் சீட்டில் வைத்து கதவை மூடும்முன், அறிவழகி மூச்சு வாங்க இரண்டு பைகளுடன் நின்றாள். “இது. ல , சாஸ்திரிகளுக்கு வச்சுக் குடுக்கவேண்டிய துணியெல்லாம் இருக்கு’, என்று ஒரு பையை காண்பித்து, “இது. நமக்கான புது ட்ரெஸ்”, என்றாள். அதையும் வாங்கி வைத்தவன், “என்னை கூப்பிடறதுக்கென்ன?”, என்று கேட்டான்.
“இல்ல, எப்படி கூப்பிடன்னு தெரில, அதான்..”
“நாளை காலைல வரைக்கும்தான் உனக்கு டைம், இல்லன்னா, நான் என்ன சொல்றேனோ, அப்படித்தான் நீ கூப்பிடனும்? ஓகே?”, என்றுவிட்டு, “ஆமா, எப்படி அப்பாட்ட டக்குனு வேண்டுதல்-ன்னு சொன்ன?”, கேட்டான்.
“திருப்பதின்ன உடனே வேண்டுதலாதான் இருக்கும்னு நினச்சேன். இல்லையா?”, என அறிவழகி கேட்டாள்.
“வேண்டுதல்தான், நம்ம குடும்பமா சேர்ந்து இருக்கணும்னு..”, அறிவழகியிடம் சொல்லியவன் மனதுக்குள், “முன்னாடி.. நீ கிடைச்சா திருப்பதி வர்றேன்னு வேண்டினேன், எதிர்பாராம அங்கேயே கிடைச்ச. ரெண்டு நாள் முன்ன, சுதா போன் பண்ணி, நீ கையெழுத்து போட வைசாக்-லேர்ந்து கிளம்பிட்ட-ன்னு சொல்லும்போது, நீ எனக்கே எனக்குன்னு கிடைச்சா உடனே திருப்பதி வர்றேன்னு வேண்டிகிட்டேன்”, என்றான் மனதுக்குள்.
“அறிவு, உன்கிட்ட ஒன்னு சொல்லணுமே? சுதா… “, என்று எதையோ சொல்ல வந்தவன், கமலம்மாவைப் பார்த்ததும் நிறுத்தினான். அவரது கையிலும் கனமான சாக்குப் பைகள் இருக்க.. “ஏம்மா, என்ன வீட்டையே காலி பன்றோமா? நா வேணா கொஞ்ச நேரம் இங்க உங்காந்துக்கறேன், நீ எதெல்லாம் கொண்டு போணுமோ எல்லாத்தையும் வை. நா அப்பறமா கிளம்பறேன்”, என்று சடைத்து, அவர் கையிலிருந்ததையும் [ சீர் மற்றும் கலச தேங்காய், சிதறு காய்கள், சுற்றி போட பூசணிக்காய் என்று அனைத்துமே கனமான வஸ்துக்கள்] எடுத்து டிக்கியில் வைத்தவன், “நீயேம்மா வெயிட் தூக்கற? என்னை கூப்பிட்டு இருக்கலாமில்ல?”, என்றான்.
“அட நீ கிளம்பிட்டியோன்னு அவசரமா வந்தேன்டா, முத முதல்ல அந்த வீட்ல நல்லது பண்றோம், ஒரு குறையுமில்லாம இருக்கணும்னுதான்”, என்றார்.
“உங்க வீட்டுக்காரர் வந்தாலே ஒரு குறையுமிருக்காதுன்னு சொல்லிவை, போ போய் படுத்து ரெஸ்ட் எடு”, என்று சொன்னவனைப் பார்த்து, “ஏண்டா அவரை முறைசிட்டே இருக்க? நீயும் சீக்கிரமா படு”, என்று அறிவழகியைப் பார்த்து, “சீக்கிரம் வாம்மா, சாப்பாட்டுக் கடைய முடிப்போம்”, என்று உள்ளே சென்றார்.
அதே நேரம் கண்ணன் வெளியே வந்து நிற்க, “போ போய் சாப்பிடு, அப்பறம் பேசலாம்”, என்று சொல்லிவிட்டு, “போகலாமா?”, என்றான் கண்ணனிடம்.
“என்னடா, கரடியா?”, என்று கண்ணன் சிரிக்க,
“மத்தியானம் உன் பொண்டாட்டி, இப்ப நீ, நல்..லா இருப்பீங்கடா”, என்று இவனும் சிரித்தவாறே காரை செலுத்தினான்.
“ஓ. மேட்னி ஷோ வேற ஓடுச்சா?”
“டே வாரத்துக்கு மூணு நாள் பசங்கள என்கிட்டே பத்த விட்டுட்டு… மேட்னி பத்தி நீ பேசறியா?”, என்று இவர்களின் கிண்டல் பேச்சு தொடர்ந்தது.
பரபரவென அத்தனை வேலைகளும் முடித்து, பெண்கள் இருவரும் உறங்கப் போக, கண்ணனும், அன்பரசனும் ஸ்டோர் வீட்டிலேயே படுக்க.., அதிகாலை நான்கு மணிக்கு உஷத் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஹோமம், மங்களகரமாய் ஆறு மணிக்குள் முடிந்துவிட, மாலையும் கழுத்துமாக அன்பரசனும் அறிவழகியும் அனைவரையும் நமஸ்கரித்தனர்.
கண்ணன் அனைத்தையும் படம் பிடித்ததோடு, மற்ற வேலைகளுக்கான மேற்பார்வையும் செய்தான். ப்ரவீனா, பிரசாத், ஆகாஷ், ஆஷிஷ், கண்ணனின் தந்தை, தாய், சுசித்ரா, கடையில் வேலை பார்க்கும் அனைவரும், மற்றும் அந்த வட்டிப் பெண்மணி உள்ளிட்ட அக்கம் பக்கத்து வீட்டினர் என சிறு கூட்டமே திரண்டிருந்தது.
கமலம்மா, “உங்கம்மா இருந்த வீடும்மா, அவங்கள நினைச்சிட்டு பால் பாயசம் நிவேதனம் வை. செத்து சொர்க்கத்துல இருக்கறவங்க மனசு குளிர ஆசிர்வாதம் பண்ணுவாங்க”, என்றார்.
அறிவழகிக்குமே அன்னையின் நினைவு வந்தது, அன்பரசன் அறிவழகி இருவரும் ஹோமம் செய்ய தம்பதியாக அமர்ந்த இடம், முன்பு மணியம்மையின் வீடாக இருந்தபோது, அவர் படுக்கும் இடமாக இருந்தது. அமைதியாய் கமலமா சொன்னதை உள்வாங்கி, ‘ஆம், அம்மா சொர்க்கத்தில்தான் இருப்பார், ஒரு உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை தந்தார்கள் அல்லவா?’ என்ற எண்ணத்துடன், ‘அம்மா, உனக்கு நமஸ்காரம் பண்ணிக்கறேன்’ மானசீகமாக வணங்கி, கமலம்மா சொன்னது போல செய்தாள். மனதில் சொல்லொண்ணா நிம்மதி ஏற்பட்டது.
கணவன் மனைவி இருவரும் பூஜை முடியும்வரை அனாவசியமாக பேசவே இல்லை, ஸ்ரத்தையுடன் ஒருமனதாக ஹோமம் முடித்து, தட்சிணை தந்து சாஸ்த்ரிகளை வழியனுப்பி நிமிரவும், திருப்பதிக்கு செல்ல ஏற்பாடு செய்திருந்த கார் வரவும் சரியாக இருந்தது.
டிபனை கையில் கட்டித் தருமாறு கமலம்மாவிடம் சொல்லி, பத்தே நிமிடங்களில் இருவரும் கிளம்பிவிட, அடுத்த நான்கரை மணி நேரத்தில் பெருமாளை தரிசிக்க வரிசையில் நின்றிருந்தனர். முன்பு போல, தள்ளு முள்ளுகள் இல்லை, குறைவான பக்த கூட்டமே, தரிசனத்திற்கு நேரமும் எடுக்கவில்லை.
‘எங்கெங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமானே, இன்று இணைத்திருக்கும் நாங்கள் இதே ஒற்றுமையுடன் கடைசிவரை பயணிக்க வேண்டும்’. என்ற பிரார்த்தனையோடு வெளியே வந்தனர். அன்னதான திட்டத்திற்கு இருவரின் நன்கொடையாக ஐந்து லட்சதிற்கான காசோலையைக் கொடுத்தாள், அறிவழகி. காசோலையில் கையெழுத்து இடும்முன் கணவனை ஒரு பார்வை பார்த்து அனுமதி கேட்க, அவன் சிறு தலையசைவுடன் ஆமோதித்தான். தேவஸ்தான அலுவலகத்தில் இருந்து வெளி வந்து, முன்பு செய்தது போல, இன்றும் அன்னதானத்தில் பங்கேற்று நிறைவாக உண்டனர்.
வீட்டிற்க்கு திரும்ப காரில் ஏறியதும், அறிவழகிக்கு உறக்கம் கண்ணைச் சுழற்ற, இருவரும் பின்னிருக்கையில்தானே அமர்ந்திருந்தார்கள்? “நான் முன்னால உக்காந்துக்கறேன், நீ இங்க வசதியா படுத்துக்கோ”, என்று அன்பரசன் சொன்னான். அறிவழகி கண்டனப் பார்வையை தொடுத்து, அவன் மடியில் தலை வைத்து வண்ணமாய் படுத்து உறங்க ஆரம்பித்தாள். சிரமப்படுவாளோ என்று சிறிது நேரம் பார்த்திருந்து, அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும், நிம்மதியாக சாய்ந்து அன்பரசனும் தூங்கினான்.
சொந்த வீடு சேர்ந்த நிம்மதி தூங்கும் இருவர் முகத்திலும் இலங்கியது.
+++++++++++++++++
இன்னும் ஒரு பார்ட் மட்டும்தான். லேட் பண்றேந்தான். ஆனா, இன்னும் முடியலையே…..