சில நிமிடங்கள் அமைதியில் கழிய, அவள் அமைதியை கலைக்கவென்றே வந்து சேர்ந்தான் வாசன். வந்ததும் வராததுமாக, “தூக்கம் வந்தா ஹாஸ்டல் போய் தூங்க வேண்டியது தானே. ஏண்டி இங்கே உட்கார்ந்துட்டே தூங்குறஎன்றவன் பவித்ராவின் முறைப்பை பரிசாக பெறவும் வாயை மூடிக் கொண்டான்.

பவித்ராவின் முகத்தை வைத்தே, என்ன நடந்திருக்கும் என்று ஓரளவு கணித்துவிட்டான் அவன். பின்னே அவளின் ஐந்து வயதில் இருந்து அவளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறானே. அவளை பற்றி அறியாமல் இருப்பானா?

கீர்த்திவாசன். பவித்ராவின் பள்ளிப்பருவத்து நட்பு. அன்று தொடங்கி இன்று வரை அவளின் சுகதுக்கங்கள் அத்தனையும் அறிந்த நட்பு. ஆனால், அவள் கவலையை மறக்க வைக்க தன்னால் ஆனதைச் செய்வானே அன்றி, அதற்குமேல் அவளின் சொந்த விஷயங்களில் தலையிட மாட்டான்

அறிவுரை சொல்வதோ, ஆறுதல் கொடுப்பதோ எதுவும் செய்யமாட்டான். அந்த நிமிடம் அவள் மனநிலையை மாற்ற மட்டுமே முயற்சிப்பான் அவன். அவன் அன்னையிடமும் பவித்ராவை அவன் அறிமுகப்படுத்தி இருக்க, அவளின் நிலையை அறிந்தே இருந்தாலும், மகனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு இன்றுவரை அவரும் பவித்ராவிடம் எதையும் கேட்டுக்கொண்டது இல்லை.

அத்தனையும் இருந்தும் எதுவும் இல்லாதவளாக நிற்கும் அந்த பெண்ணின் மீது அவருக்கும் இயல்பாகவே அன்பு பிறந்தது. தன் மகளாக தான் சீராட்டுவார் எப்போதும். அவள் உயரத்தை நினைத்து கொஞ்சம் அச்சப்பட்டாலும், சில பல அறிவுரைகளை பெற்று இருந்தாலும் கூட, என்னவோ அவளை பிரித்துப் பார்க்க முடியாது அவரால்.

வாசன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்க, யார் பேச்சையும் காதில் வாங்காமல் தன் பிள்ளைகளை நம்புவார் வாசனின் அன்னை ருக்மணி. இன்றும் வீட்டில் அசைவம் சமைத்திருக்க, எப்போதும்போல் பவித்ராவுக்கும் சேர்த்தே மகனிடம் கொடுத்து விட்டிருந்தார்.

வாசனுக்கு வகுப்புகள் முடிய சற்று தாமதமாகி இருக்க, அந்த இடைவெளியில் தான் பவித்ரா உணவை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தது. அதுவும் விடுதி உணவென்றால் எப்போதும் வாசன் முகத்தை சுளித்துக்கொண்டு திட்ட தொடங்கி விடுவதோடு, அவளை உண்ணவும் அனுமதிக்கமாட்டான் என்று தான் அவள் தனியே உண்ண தொடங்கியது.

அதையும் அவள் அன்னை கெடுத்து வைத்துவிட, சரியான நேரத்தில் வந்து சேர்ந்திருந்தான் அவள் நண்பன். அவளது முகத்தில் படிந்திருந்த வருத்தத்தை அப்படியே காற்றில் விட்டு, “அம்மா பிரியாணி கொடுத்திருக்காங்க. சாப்பிடுஎன்று தான் கொண்டு வந்திருந்த எவர்சில்வர் டப்பாவை அவளிடம் நீட்டினான்.

எனக்கு பசிக்கலடா. கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்

சரி உன் சாப்பாடு அவளுக்கு பிடிக்கலன்னு ருக்மணி கிட்ட சொல்லிடறேன்என்றவன் அலைபேசியை கையில் எடுக்க

அமைதியா இரு வாசாஎன்று அலைபேசியை பிடுங்கி கொண்டாள் பவித்ரா.

ஒழுங்கா சாப்பிடு. பசிக்கலையாம்என்று முறைத்தபடியே உணவு டப்பாவை திறந்து அவளிடம் கொடுத்தான்  வாசன்.

சாப்பிடாமல் விடமாட்டான்என்று நன்கு புரிந்திருந்ததால், அவனிடம் வாதிட்டு நேரத்தை வீணடிக்காமல் உணவை உண்ண தொடங்கினாள் பவித்ரா. இடையில் அவனுக்கும் ஊட்டிவிட, மறுக்காமல் வாங்கிக்கொண்டான் கீர்த்திவாசன்.

இருவரும் உண்டு முடிக்கவும், “அம்மா கால் பண்ணாங்கஎன்று பவித்ராவே தொடங்க,

என்ன சொல்றாங்க

மாப்பிள்ளை பார்த்திருக்காங்களாம். லண்டன் டாக்டர்” 

உன் அப்பா சுயநலமாவே யோசிச்சாலும், இந்த விஷயம் உனக்கும் நல்லது தான். ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு கிளம்பிடு.” என்று கீர்த்திவாசன் சட்டென சொல்லி விடவும், அமைதியாக அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்துகொண்டாள் பவித்ரா.

அவனைத் தாண்டி அவள் நடக்கவும், “உட்காரு பவி.” என்று அதட்டினான் கீர்த்தி.

பவித்ரா நின்று அவனை முறைக்க, “சும்மா எல்லாத்துக்கும் முறுக்கிக்க கூடாது. இங்கே இருந்து என்ன செய்யப் போற நீ. காலத்துக்கும் இவங்க ரெண்டு பேரோட போராடிட்டே இருக்க முடியுமா உன்னால. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. இவங்க யாரோட தலையீடும் இல்லாம சுதந்திரமா ஒரு வாழ்க்கை. கண்டிப்பா உன் கல்யாணத்துல மட்டும்தான் அது உனக்கு கிடைக்கும்.”

நீ யாரையாவது லவ் பண்ணி இருந்தா, நானே கட்டி வச்சிடுவேன். அதுக்கும் வாய்ப்பில்ல. அப்போ அவங்க பார்க்கிறவனை பத்தி விசாரிப்போம். நல்லவன்னு தெரிஞ்சா கட்டிக்கிட்டு கம்பி நீட்டிடுஎன்று நீளமாக அறிவுரை வழங்கினான் வாசன்.

இவங்களுக்கு பயந்து ஓடி ஒளிஞ்சு வாழ என்னால முடியாது வாசா. நான் ஏன் ஓடணும். நான் இங்கேதான் இருப்பேன். எல்லோரை போலவும், கல்யாணம், குடும்பம்னு வாழ்வேன். ஆனா, என்னோட வாழ்க்கை நான் முடிவு பண்றதா தான் இருக்கும்.” 

நீ சொல்றபடி நடந்தால் சரிதான். ஆனா, நீ யாரையும் நம்ப தயாரா இல்லையே. கல்யாணம், குடும்பம் இதெல்லாம் எங்கிருந்து வரும்?”

எனக்காக கடவுள் என்ன விதிச்சிருக்காரோ அது நடக்கட்டும் வாசா. ஆனா, கண்டிப்பா இவங்க சொல்றபடி இனி என்னால ஆட முடியாது. எல்லாமே போதும்னு தோணுதுடாஎன்றவள் அவன் அருகில் வந்து அமர்ந்துவிட,

உன் இஷ்டப்படி எல்லாம் நடக்கும். ரொம்ப யோசிக்காதஎன்று அவள் தோளில் தட்டிக் கொடுத்தான் கீர்த்திவாசன்.

ஓகேகிளாஸுக்கு டைம் ஆச்சு. கிளம்புவோம்என்று வாசன் எழுந்துகொள்ள, மறுவார்த்தை பேசாமல் அவனுடன் வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பவித்ரா.

அதே நேரம்சென்னையின் மிக முக்கிய மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வருண் ஆதித்யன் முழுதாக மயக்கம் தெளிந்து கண் விழித்திருந்தான். அருகில் அமர்ந்திருந்த அவன் அன்னை சித்ரா, “வருண்…” என்று கண்ணீருடன் குரல் கொடுக்க

ஆம் ஓகேமா…” என்று லேசாக இதழசைத்து சிரித்தான் மகன்.

அந்த ஒற்றைச் சிரிப்பில் அதுவரை இருந்த மொத்த கவலையும் கரைந்து போனவராக, “டாக்டரை கூப்பிடறேன் இரு.” என்றபடி ஓடினார் சித்ரா.

அடுத்த சில நிமிடங்களில் மருத்துவர் அவனை சோதனை செய்து முடித்து, “எப்படி இருக்க வருண்?” என்று பாசமாக அவன் தலையை தடவிட

நீங்கதான் சொல்லணும் மாமாஎன்று அவரைப் பார்த்து புன்னகைத்தான் வருண்.

உனக்கென்னடாயூ ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட். ஒரு ஒன் வீக் இங்கே ரெஸ்ட் எடு. அதுமட்டும் போதும்.” என்று இலகுவாக சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்.

நீங்க வேற அண்ணா. இன்னும் ரெண்டுநாள் இங்கே படுத்திருக்கானா பாருங்க.” என்று செல்லமாக மகனை சித்ரா சலித்துக் கொள்ள, சட்டென கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் நுழைந்தார் வருணின் தந்தை.

மகனைக் கண்டதும் வார்த்தை வராமல் அவர் கலங்கி நிற்க, “ஒன்னும் இல்லப்பாஎன்று கைநீட்டி அவரை அருகில் அழைத்தான் வருண்.

வருணின் தந்தையை கேலிச்சிரிப்போடு பார்த்த மருத்துவர் தாமோதரன் அருகில் நின்றிருந்த சித்ராவை பார்த்து சிரிக்க, “சும்மா இருங்க அண்ணா. அவரை வம்பு பண்றதே வேலையா போச்சு உங்களுக்கு.” என்று அதட்டினார் சித்ரா.

இருந்தாலும் உன் புருஷன் கொஞ்சம் ஓவரா தான் பண்றாரு சித்து. அடிபட்ட அன்னைக்கு இந்த ரியாக்ஷன் கொடுத்தா ஓகே. அவனே எழுந்து உட்கார்ந்திருக்கான். இன்னைக்கு ஏன் இந்த பெர்பாமன்ஸ்.”

அவருக்கு வருண் மேல பாசம் அதிகம்ண்ணா. அவனுக்கு ஒன்னுன்னா கண்டிப்பா தயங்கமாட்டார். உனக்கு தெரியாதா?”

இருந்தாலும் இன்னைக்கு பெர்பார்மன்ஸ் கொஞ்சம் ஹெவி தான்.” என்று தாமோதரன் சொன்ன தினுசில் சித்ராவும் சிரித்துவிட, மகனிடம் பேசிக் கொண்டிருந்த அன்பரசன் திரும்பி மனைவியை முறைத்தார்.

எனக்கு வேற பேஷண்டை பார்க்கணும்என்று சிரித்தபடியே தாமோதரன் நழுவிட, சித்ரா மாட்டிக் கொண்டவராக முழித்து கொண்டிருக்க, “என்ன சிரிப்பு உனக்கு?” என்று மனைவியிடம் காய்ந்தார் அன்பரசன்.

விடுங்கப்பாஎன்று மகன் தந்தையின் கவனத்தை ஈர்த்துக்கொள்ள, அடுத்த ஒருமணி நேரமும் மகனைத் தவிர வேறெந்த சிந்தனையும் இல்லை அன்பரசுவிற்கு.

அதற்குள் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்க, வருண் தந்தையை வற்புறுத்தி அலுவலகம் அனுப்பி வைத்தான். காலையிலிருந்து அவனுடன் இருந்த சித்ராவையும்வீட்டுக்கு போயிட்டு நைட் வாங்கம்மாஎன்று அவன் வற்புறுத்த, “முடியவே முடியாது” என்று மறுத்து மகனின் அருகில் அமர்ந்து கொண்டார் சித்ரா.

என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது யாரும்மாஏதாவது டீடெயில்ஸ் வாங்கினீங்களாஎன்று திடீரென வருண் கேட்க

அங்கே கேட்டோம் கண்ணாஅவர் யாரு என்னனு அங்கே இருக்கவங்களுக்கு தெரியல. அவரும் திரும்ப ஹாஸ்பிடல் வரலடா.” என்றார் அன்னை.

அவராஎன்று தலையசைத்து யோசனையுடன் ஆட்சேபித்தான் மகன்.

என்னடாஎன்று சித்ரா கவனமாக

நத்திங்ம்மா.” என்றுவிட்டான் சட்டென.

மகனின் மறுப்பை ஏற்காமல், “என்னாச்சு வருண். ஏதாச்சும் மறைக்கறியா.” என்று சித்ரா கேட்க,  

ம்மா.. அதெல்லாம் ஒன்னுமில்ல. அன்னைக்கு மயக்கத்துல இருந்ததால நடந்தது எதுவும் சரியா நியாபகம் இல்லம்மா. அதுதான் யோசிச்சுட்டு இருக்கேன்என்று மழுப்பினான் வருண்.

யார் என்னவென்றே தெரியாமல், அவளைப்பற்றி அன்னையிடம் என்ன சொல்ல முடியும் என்று யோசித்தவனாக அவன் கண்மூட, பரிபூரணமாக அவன் கண்ணுக்குள் நிறைந்தாள் பவித்ரா.