Anbulla Thavarae 2 1 3415 அன்புள்ள தவறே 02 சென்னை பாரிமுனைக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையில் இருந்த ஒரு தெருவோர குடியிருப்பு பகுதியில் தான் அன்றைய தினம் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் முகாமிற்கு ஏற்பாடு செய்திருக்க, பவித்ராவையும் சேர்த்து ஏழு மருத்துவர்கள் அந்த குழுவில் இருந்தனர். சென்னையின் முக்கியமான அடையாளமாக விளங்கும் பாரிமுனைப் பகுதியில் இப்படியும் சில மனிதர்கள் வசிக்கிறார்களா என்று ஐயம் கொள்ளும்படி தான் இருந்தது சூழல். போதுமான கழிவறை வசதியோ, மற்ற அடிப்படை வசதிகளோ இல்லாமல் பெட்டி போன்ற தகர வீடுகளில் குடியிருக்கும் அவர்களை நினைத்து மனம் கணத்துப் போனது பவித்ராவுக்கு. அதுவும் அங்கிருந்த பலருக்கு உடல்நிலையிலும் பெரிதாக சிக்கல்கள் இருக்க, அதைப் பற்றிய தெளிவே இல்லாமல் தான் இருந்தனர் அவர்கள். மருத்துவ முகாம் என்று அச்சிட்ட பதாகையைப் பார்க்கவும், கைவலி, தலைவலி, கால் வலி என்று கூறிக்கொண்டு வரிசையில் வந்து நின்றிருந்தனர். பவித்ராவுடன் இருந்த மருத்துவர்களில் சிலரும், அந்த நேரத்திற்கு தேவையான வலி நிவாரணிகளை மட்டுமே வழங்கி தங்கள் வேலையை சுலபமாக்கிக் கொள்ள, பவித்ரா மற்றும் வாசனால் அப்படி அவர்களை கடந்து விட முடியவில்லை. இருவரும் சற்றே சிரத்தையாக தங்களிடம் வரும் நோயாளிகளை கவனித்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி கொண்டிருக்க, அவர்களை ஏளனமாக பார்த்தபடியே தங்கள் வேலையை தொடர்ந்தனர் மற்றவர்கள். மதிய உணவு நேரம் வரை சற்று கூட்டமாக இருந்தாலும், அதன்பின்பு கூட்டம் குறைந்துவிட, வாசனுக்கு வேலை முடிந்து விடவும் சற்றே இலகுவாக பவித்ராவின் அருகில் வந்து அமர்ந்தான் வாசன். பவித்ரா ஒரு சிறுவனை சோதித்துக் கொண்டிருக்க, எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமாக தான் இருந்தான் அவன். “என்ன செய்யுது உனக்கு?” என்று அவனிடம் பேச்சு கொடுத்தபடியே பவித்ரா அவனை சோதிக்க, “வயிறு நோவுது டாக்டர்” என்று வயிற்றைப் பிடித்து காட்டினான் அவன். “காலையில என்ன சாப்பிட்டீங்க சார்?” என்று அவன் வயிற்றில் கையை வைத்து அழுத்தியபடியே அவள் விசாரிக்க, “பரோட்டா சாப்பிட்டேன் டாக்டர்” என்றான் அவன். “பரோட்டா சாப்பிட்டா வயிறு வலிக்காம என்ன செய்யும்? மைதா உடம்புக்கு கெடுதல் இல்லையா?” என்றவளை வேற்று கிரகவாசியைப் போல் தான் பார்த்தான் அவன். “நான் தினமும் சாப்பிடுறேனே… இன்னிக்கு தான் வலிக்குது. ஏதாச்சும் மாத்திரை குடுங்க” என்றவனை சற்றே பரிதாபத்துடன் பவித்ரா பார்த்திருக்க, அவளுக்காக காத்திருக்காமல் ஒரு வலி நிவாரணியை அந்த சிறுவனின் கையில் திணித்து அவனை அனுப்பி வைத்தான் வாசன். “என்ன செய்யுற வாசா நீ. சின்ன பையன் அவனுக்கு புரிய வைக்காம…” “நீ சொல்றது எதுவும் அவனுக்கு புரியாது பவி. அவனைப் பொறுத்தவரைக்கும் மூணுவேளை சாப்பாடே பெரிய விஷயம். நீ சொல்ற டயர்ட் சார்ட் எல்லாம் அவனால முடியாது. ஏன் வீணா அவனை பதட்டப்பட வைக்கணும்?” “டாக்டர் மாதிரி பேசுடா“ “ரியாலிட்டிமா“ “சின்னப்பையன் வாசா“ “அதேதான் சொல்றேன். சின்னப்பையன் சாப்பிட்டது சேராம தான் ஸ்டொமக் பெயின். எப்படியும் அதுவே சரியாகிடும்.” என்றவனை பதில் இல்லாமல் பவித்ரா பார்த்திருக்க, “நீயும், நானும் தான் இன்னும் சாப்பிடல. வா” என்று அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் அவன். அவனுடன் எழுந்து கொண்டாலும், இயல்பாக அவன் பிடித்த கையை விலக்கி கொண்டாள் பவித்ரா. அவளைப் பற்றி நன்கு அறிந்தவனும் அதற்குமேல் அவளை நெருங்காமல் உடன் நடந்தான். இருவரும் உணவை முடித்துக் கொண்டு மாலை ஐந்து மணிவரை அங்கேயே பொழுதைக் கழிக்க, ஐந்து மணிக்கு மேல் தன்னுடைய விடுதிக்கு வந்து சேர்ந்தாள் பவித்ரா. குளித்து முடித்து உடையை மாற்றிக் கொண்டவள் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். சென்னை பாரிமுனையின் நெரிசல் மிகுந்த நைனியப்பன் சாலையில் அழகாக அமர்ந்துவிட்டிருந்த கந்தகோட்டம் முருகன் எல்லோரையும் போலவே அவளையும் கவர்ந்து கொள்ள, வாரம் தவறாமல் செவ்வாய் கிழமைகளில் அங்கு செல்வது வழக்கமாகிப் போயிருந்தது பவித்ராவுக்கு. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தான் யாரென்ற அடையாளமும் இல்லாமல் வெகு நிதானமாக கோவிலை வலம் வந்து முடித்து, குளத்தின் அருகில் இருந்த பழனியாண்டவர் சன்னதி அருகில் கண்களை மூடி அமர்ந்து கொண்டாள் பவித்ரா. என்னவோ அப்படி ஒரு லயிப்பு அந்த ஆண்டியிடம். அவளின் ஒரே ஆறுதல் என்று கூட சொல்லலாம். பெற்றவர்கள், மற்றவர்கள் என்று யாரையும் தன்னை நெருங்க அனுமதிக்காமல் தனித்து நின்றே பழகிப் போனவள் தானாக சரணடைந்தது அந்த முத்துக்குமாரசுவாமியிடம் தான். கண்களை மூடி அமர்ந்திருக்கும் நொடிகளில் அவளது கவலைகளும், ஏக்கங்களும் அப்படியே காற்றோடு கரைவதுபோல் ஒரு ஆறுதல் உணர்வு தானாகவே எழுவதை எப்போதுமே அவளால் தடுக்க முடிந்ததில்லை. தான் ஒரு மருத்துவர் என்பதையும் மீறி, அவரை நம்பி நிற்பாள் அவள். அந்த நம்பிக்கை அவளுக்கு பிடித்தமான ஒன்றாகவும் இருக்க, அவளது பதினேழு வயதில் இருந்தே தனது மன எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருந்தாள் பவித்ரா. அன்றும் கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக கண்களை மூடி அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தவள் அதன்பின்னரே அங்கிருந்து கிளம்பிச் சென்றாள். விடுதிக்கு செல்ல இன்னும் நேரமிருந்ததால், நேரே நேற்று வருண் ஆதித்யனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் அவள். வரவேற்பில் இருந்த பெண்ணிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருக்கையில், நேற்று அவளிடம் கையெழுத்து வாங்கிய செவிலி, “என்ன பொண்ணே… உன் புருஷனை யாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்களே” என்றார் விளையாட்டாக. வரவேற்பில் இருந்த பெண் பவித்ராவை வியப்பாக நோக்க, கண்களால் மறுத்தபடியே, “என்னை கேட்காம எப்படி அவரை அனுப்பி வைக்கலாம் நீங்க. உங்களை நம்பி தானே விட்டுட்டு போனேன்” என்று அவரிடம் அவள் பேச்சை வளர்க்க, “உன் புருஷன் மேல அத்தனை அக்கறை இருந்தா நீ கூடவே இருந்து அவனை கவனிச்சு இருக்கணும். நீ இந்தப்பக்கம் போனதும், அந்த பக்கம் அவன் அம்மா வந்து அவனை தூக்கிட்டுப் போயிட்டாங்க.” என்று அவரும் தொடர்ந்தார். “அவரோட ஹெல்த் ஓகே இல்லையா.” “உன் புருஷனுக்கு எந்த குறையும் இல்லம்மா. மார்னிங் லேசா நினைவு இருந்தது. அவங்க பெரிய இடம் போல. சோ, அவங்க வசதிக்கு வேற ஹாஸ்பிடல்ல பார்த்துக்கறதா சொல்லி டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்க.” “எப்படியோ… சரியாகிட்டா போதும்.” என்று தோள்களை குலுக்கிக்கொண்டு அவனை மறந்து போனாள் பவித்ரா. அவளுக்கே பல தலைவலிகள் இருக்க, அதில் இவனை வேறு நினைவில் வைத்துக்கொண்டு அலைய முடியாதே அவளால். எனவே, சட்டென கடந்துவிட்டாள் அவனை. அவளது படிப்பும், அவளாக ஒப்புக்கொண்டிருந்த சில சமூக நல பணிகளும் அவளை வேகமாக சுழற்றிக் கொண்டிருக்க, அதற்கேற்றபடி சுழன்று கொண்டிருந்தாள் பவித்ரா. இடையில், அவள் அன்னை வேறு இந்த நான்கு நாட்களில் ஐந்து முறை அவளுக்கு அழைத்துவிட, ஒரு அழைப்பைக்கூட ஏற்கவில்லை அவள். இது வழக்கமாக நடப்பது தான். அவள் அன்னை மீது பெற்றவர் என்று பாசம் இருக்கிறது தான். அதற்காக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்ள முடியாது என்ற எண்ணம் தான் பவித்ராவுக்கு. தன்னுடைய இந்த நிலைக்கு முழுமுதற் காரணமும் அவர்தான் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்து போயிருக்க, அதன் வெளிப்பாடு தான் அவள் தாயின் மீது அவள் கொண்ட வெறுப்பும், கசப்பும். ஆனால், அதையும் தாண்டி ஏதோ ஒரு ஓரத்தில் கொஞ்சம் பாசமும் மீதமிருக்க, அதில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது தாய்க்கும் மகளுக்குமான உறவு. அவளைப் பொறுத்தவரை தாயைத் தாண்டி உறவென்று வேறு யார் மீதும் பெரிதாக அபிமானம் எல்லாம் கிடையாது. உயிர் கொடுத்ததால் மட்டும் தந்தையாகி விட முடியுமா என்ன? உணவு இடைவெளியில் விடுதியில் இருந்து கொண்டு வந்திருந்த உணவை மென்று கொண்டே, அவள் தன் அலைபேசியில் மருத்துவம் சார்ந்த ஏதோ ஒரு காணொளியில் மூழ்கி போயிருக்க, அந்த நேரம் மீண்டும் ஒருமுறை அழைத்துவிட்டார் அவள் அன்னை மயூரி. அதற்குமேல் அவரை தவிர்க்க முடியாமல் பவித்ரா அழைப்பை ஏற்க, “பவிம்மா…” என்று ஏக்கத்துடன் ஒலித்தது தாயின் குரல். “சொல்லுங்க” என்றவள் அவரை ‘அம்மா‘ என்று அழைக்கக்கூட தயாராக இல்லை. “பவிம்மா எப்படி இருக்கடா?” என்ற மயூரியின் குரலில் லேசான அழுகை வெளிப்பட, அதற்கெல்லாம் இறங்கவில்லை மகள். “என்ன விஷயம்” என்றாள் கறாராக. “நான் உன்னோட அம்மாடி“ “ஞாபகம் இருக்கு எனக்கு“ “என்னை ஏன் இப்படி சித்ரவதை பண்ற பவி.” “நான் சொல்ல வேண்டியதை நீங்க சொல்லிட்டு இருக்கீங்க. நான் அமைதியா இருக்கறதால, நீங்க பேசறீங்களா?” “என்னடி சித்ரவதை பண்ணேன் உன்னை. நீதான்டி என்னை வதைச்சுட்டு இருக்க“ “அப்படியா? சரி அப்படியே இருக்கட்டும். போனை வைங்க“ “இப்படி பண்ணாத பவி“ “வேற என்னதான் செய்ய சொல்றிங்க என்னை? எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உங்களோட வந்து நானும் அந்த ஜெயில்ல இருக்கணுமா. இல்ல, வேற ஏதாவது செய்யணுமா? இல்ல, அதுவும் இல்லாம இன்னும் ஏதாவது செய்ய சொல்லி உத்தரவு வந்திருக்கா? “அவர் உன்னோட அப்பா பவி“ “அந்தாள் எனக்கு யாருமே கிடையாது. அவர் உறவை உங்களோட நிறுத்திக்கோங்க. நீங்க சொல்றது அத்தனையும் நான் கேட்கிறது கூட உங்களுக்கு மகளா பிறந்துட்ட ஒரே காரணத்துக்காகத் தான். நீங்க வேண்டாம்னு நான் முடிவெடுத்துட்டா யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது. மறந்திடாதீங்க.” “ஏண்டி இப்படியெல்லாம் பேசற.” “இன்னும் நிறைய பேசுவேன். வேண்டாம்னு தான் ஒதுங்கி போறேன். என்னை இப்படியே விட்டு நீங்க தள்ளி நில்லுங்க. அதுதான் எல்லாருக்கும் நல்லது“ “உன்னை பெத்தவ பவி நான். உன்மேல எனக்கு அக்கறை இருக்காதா?” “அப்படி அக்கறை இருந்திருந்தா, நீங்க என்னை பெத்திருக்கவே கூடாது. அட்லீஸ்ட் எனக்கு இந்த நிலை வராம போயிருக்கும்” என்று பவித்ரா முகத்தில் அடித்ததைப் போல் பேசி வைக்க, “என்ன குறைச்சல் உன்னோட நிலைக்கு. உன்கிட்ட எல்லாமே இருக்கு பவி. நீதான் எதுவும் வேண்டாம்னு விலகி நிற்கிற. உன் அப்பா உனக்காக என்ன வேணாலும் செய்ய தயாரா இருக்கார்“ “அவர் என்னோட அப்பா கிடையாது. அதோட நீங்க சொல்ற சில்லறை சந்தோஷங்களுக்காக முழுநேர அடிமையா இருக்க என்னால முடியாது. இதை சொல்றதுக்கு இனி எனக்கு கூப்பிடாதீங்க” என்றவள் அழைப்பை துண்டிக்க நினைக்க, “ஒரு நிமிஷம் பவி” என்று அவளை நிறுத்தினார் அன்னை. “சொல்லுங்க“ “உனக்கு ஒரு வரன் வந்திருக்கு பவி. மாப்பிள்ளை லண்டன்ல டாக்டரா இருக்கார். கல்யாணத்துக்கு பிறகு நீயும் அவரோடவே அங்கே செட்டில் ஆகிடலாம். அவரும் டாக்டரா இருக்கறதால, உனக்கும் பிடிக்க வாய்ப்பிருக்கு. நான் அப்பாவை பேச சொல்லவா.” என்ற மயூரியின் வார்த்தைகளில் தனது கோபத்தை அடக்க முடியாமல் திணறிப் போனாள் பவித்ரா. “எனக்கு மாப்பிள்ளை பார்க்க அந்தாள் யாரு? அதோட நான் யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு நீங்க எப்படி முடிவு பண்ணுவீங்க. நான் எப்போ அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தேன். என் கல்யாண விஷயமா பேசறதா இருந்தா, இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று வெகுவாக மயூரியை எச்சரித்தவள் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் அழைப்பைத் துண்டித்துவிட்டாள். அழைப்பைத் துண்டித்த பின்னும் கோபம் வடியாமல் போக, பாதியில் நின்றிருந்த உணவை அப்படியே மூடி வைத்தவள் தலையில் கைவைத்தபடி கண்களை மூடி அமர்ந்துவிட்டாள்.