அன்புடன் அதியமான் அண்ணாமலை
அத்தியாயம் 18
மணி ஆறை நெருங்கிக் கொண்டிருக்க, முதல் தளத்தில் உள்ள வேலை பார்க்கும் பெண்கள் நடமாட ஆரம்பித்திருந்தனர். 
கல்லூரிக்கு செல்லும் பெண்களின் ஒரு அறைகூட திறக்கப்படாமல் இருக்க,
ஜானகியம்மா “நமக்குதான் வீடு மாதிரியே இங்கேயும் முழிப்பு வந்திடுது. பேசாம காலேஜ் பிள்ளைங்களாவே இருந்திருக்கலாம். ஏன்டா வளர்ந்தோம்னு இருக்கு!” என்று தன் அறையில் உள்ள பெண்களிடம் பேசிவிட்டு, 
”வெந்நீர் வாங்கிட்டு வர்றேன் என்று கீழே வந்தவர், ”குட்மார்னிங் வார்டனம்மா!” என்று வார்டனின் அறையை எட்டிப் பார்த்தார்.
அவர் கண்மூடி அமர்ந்திருக்க, அன்புவை தரையில் பார்த்தவர் “அய்யோ! என்ன இங்க வந்து தரையில் படுத்துருக்குற?” என்று எழுப்ப,
“வலிக்குதுனு அழுதா. அப்படியே தூங்கிட்டா போல” என்றார் வார்டன்.
அதற்குள் அன்பு கண்களை திறக்க,
“என்ன பொண்ணு நீ? வயசுப்பொண்ணு ஒரு தேள் கடிக்கு இப்படி அழுது முகமெல்லாம் வீங்கி வைச்சிருப்பியா?” என்றவர், 
“ஆமா நீ எப்போ அழுத? உன் சத்தம் கேட்கவே இல்லையே!” என்று கேட்டு வார்டனை பார்க்க,
”சும்மா லைட்டாதான் அழுதா!” என்று தெரிந்தே பொய் சொன்னார். 
ஏனெனில் அவளின் பெரிய அழுகுரலை இதுவரை யாரும் கேட்டதில்லை. அப்படியே அதிகாலையில் யார் காதிலும் விழுந்திருந்தாலும் பக்கத்தில் ஏதோ துக்கவீடு போல என்றுதான் நினைத்திருப்பர். 
எனவே அவர் சமாளிக்க,
வார்டனுக்கென டீயைக் கொண்டு வந்த தங்கம் ”இவங்க எப்போ வந்தாங்க? ஏன் தரையில் இருக்குறாங்க?” என்று அன்புவின் அருகில் அமர்ந்தாள்.
“நாங்கதான் மேல இருக்கோம். நீ இங்கதான இருக்க? உனக்கு தெரியாதா?” என்று கேட்டபடியே ஜானகியம்மா அன்புவின் முடியை பின்னல் போட,
“ம்! கிச்சன் ஒரு மூலைல இருக்கு. இந்த ரூம் இந்த மூலைல இருக்கு. நடுவுல டைனிங் ஹால் வேற. எனக்கு எப்படி தெரியும்?” என்றவள் ”அன்புக்கா! டீ கொண்டு வரவா?” என்றாள்.
“கேட்காத. போய் எடுத்துடு வா!” என்று ஜானகியம்மா சொல்ல,
“இல்ல! அப்புறமா குடிச்சுக்கிறேன்!” என்றாள் அன்பு.
“வேலை பாக்குறதுக்காக எங்களுக்கு போட்ட டீயைச் சொல்லல. உங்களுக்காக எப்பவும் போடுறதையே இன்னைக்கு சீக்கிரமா டைனிங் ஹால்ல எடுத்து வைச்சிட்டேன். அந்த டீயைத்தான் கொண்டு வரவா கேட்டேன். ஆளையும் அவங்களையும் பாருங்க! ஒரு தேள்கடிக்கு எப்படி முகம் வீங்கி இருக்குன்னு” என்று முறைத்த தங்கம்,
 ஜானகியம்மாவிடம் திரும்பி “இவங்க பயங்கரமா ரூல்ஸ் பாலோ பண்ணுவாங்க ம்மா!” என்றும் குறையாய் சொல்லிவிட்டு டீ கொண்டு வந்து தந்தாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு ஜானகியம்மா சென்றிருக்க,
”சேர்ல உட்காரு! யாராவது வருவாங்க. அப்புறம் இது ஒரு கேள்வியாகிடும்” என்று வார்டன் சொல்ல,
எதிரில் வந்து அமர்ந்தாள்.
”இதே ஜானகியம்மாதான் ஒரு நாள் உனக்கு பனீஷ்மெண்ட் குடுத்தாலே ஆச்சுன்னு இந்த ரூம்ல நின்னாங்க. ஆனா நேத்தையிலிருந்து அப்படி துடிக்கிறாங்க. மனுஷங்க எவ்வளவு விசித்திரமானவங்கள்ல?” என்று வார்டன் பேச,
”தேங்க்ஸ்! ஏதோ மனபாரம் ரொம்ப குறைஞ்ச மாதிரி இருக்கு!” என்றாள் அன்பு.
அவர் புன்னகைக்க,
“அசையாம உட்கார்ந்து ஜெபமாலையை உருட்டிருக்கீங்க போல? பல் தேய்ச்சீங்களா?, இல்லையா?” என்று அன்பு கேலி செய்ய,
“உனக்கு அடிதான் கொடுக்கணும். தங்கம் சொன்ன மாதிரிதான் உன்னை சொல்லணும். ஆளையும் அவங்களையும் பாரு! என்று சிரித்தார்.
“சரி! எங்க ரூம்ல ஒருத்தி குப்புறபடுத்து தூங்குறா. நான் போய் எழுப்பி டீயைக் கொடுத்திட்டு, டிபன் சாப்பிட முன்னாடி இங்க வர்றேன்” என்று சொல்லிவிட்டு, வெளியே வந்தவள் டீயோடு மேலே போனாள். 
செல்வி அதே பொசிஷனில் தூங்கிக் கொண்டிருக்க,
”நாட்டுல என்னலாமோ நடக்குது. இந்த சித்த மருத்துவம் எனக்கென்னனு தூங்குது” என்று அவளின் பின்பக்கமாய் ஒரு அடி போட்டாள்.
அவள் துள்ளி எழுந்தவள், பின் பக்கத்தை தேய்த்தபடி ”இன்னைக்கி லீவ்தான!” என்று கேட்டுவிட்டு மறுபடியும் படுக்க முயல, 
“சித்து போன் பண்ணியிருக்கார் போல!” என்று இவள் கேட்டதில், செல்வி வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
 
 தலையணையின் அடியில் இருந்த செல்போனை எடுத்து பார்த்தவள், அவனின் அழைப்பு எதுவும் வரவில்லை என்றதும், இவளை முறைத்தவள் “அவன் என்னடான்னா நைட்ல போன் பண்ணி பேசு! பேசு!னு உயிரை வாங்குறான். நீ என்னடான்னா காலைல எழுந்திரு!, எழுந்திரு!னு உயிரை வாங்குற. வருங்கால சித்தா டாக்டருக்கு வந்த நிலமையை பார்த்தீங்களா?” என்று எழுந்து, அமர்ந்து டம்ளரில் கை வைத்தாள். 
பின் சுதாரித்தவள் ”நல்லவேளை! இந்த சித்தமருத்துவம்தான் சுதாரிச்சிட்டேன்ல!. உன்கிட்ட அடிவாங்காம பல் தேய்ச்சிட்டுதான் குடிப்பாள் டீயை.” என்று எழ,
“அதுசரிதான். ஆனா இப்படியேவா வெளிய போற?” என்றாள் அன்பு.
“ஏன் எனக்கென்ன குறைச்சல் என்று குனிந்து பார்த்தவள்,
 “அய்யோ நல்லவேளை என் மானத்தை காப்பாத்துன! இப்படியே இன்ஸ்கர்ட்டோட வெளிய போக முடியாதே!” என்று நைட்டியை எடுத்து அணிந்தவள், 
“அன்பே! ஏதாவது ஒண்ண மட்டும் போட்டுக்கலாம்னு ரூல் கொண்டு வரச் சொல்லுய்யா இந்த வார்டனம்மாகிட்ட!. எல்லாத்தையும் மாட்டிகிட்டு கச, கசனு!” என்று சொல்லியபடியே முகம் கழுவிவிட்டு வந்தவளை பார்த்து இன்னும் சிரித்தாள் அன்பு. 
“என்ன சிரிப்பு ஓவரா இருக்கு?. என்ன நினைச்ச?” என்று டீ குடித்தபடி கேட்க,
”இல்ல, நேத்து ஜெனிபர் ஒரு காலை சேர்லேயும், ஒரு காலை டைனிங் டேபிள் மேலேயும் வைச்சிக்கிட்டு நின்னானு தங்கம் சொன்னாதானே. அவ என்னை மாதிரி பேண்ட், டீஷர்ட் போடப்போய் சரியாப்போச்சு. ஒருவேளை நீ இன்ஸ்கர்ட் கட்டாம நைட்டியை மடிச்சி கட்டிகிட்டு, அங்க நியாயம் கேட்குறேன்னு ஸ்டெல்லா முன்னாடி நின்னுருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன்” என்று சொல்லி அன்பு இன்னும் பெரிதாக சிரிக்க,
“ச்சீ! ஒரு சீனியர் பொண்ணு நினைக்கிற நினைப்பா இது?” என்றவள், ”அப்படி மட்டும் நடந்திருந்தா ஸ்லெட்டாவை தண்ணி தெளிச்சிதான் எழுப்புற மாதிரி ஆகியிருக்கும்” என்று சேர்ந்து சிரித்தாள்.
சிறிது நேரத்தில் குளிக்கப் போன அன்புவுக்கு, தலை நனைக்கையில் அவனின் நினைவே. தண்ணீர் ஊற்றும் முன் ‘இந்த முடியில் தானே அவன் தலை வைத்திருந்தான்!’ என்று அதை ஆழமாக முகர்ந்து பார்த்தாள். 
எந்த வாசனைகளும் இல்லாத கூந்தலிலிருந்து, அவனின் நினைவு மட்டும் இவளின் மூச்சுக்குழாயில் பயணம் செய்தது. ‘நீ தூங்கின முடினு குளிக்காம இருக்க முடியாதே ஓய்! என்ன செய்ய?’ என்று நினைத்தபடியே, புன்னகையுடன் தண்ணீரை ஊற்றினாள் தலையில்.  
 நேரம் செல்ல, காலை உணவுக்கென கீழே வந்த இருவரும் முடித்துவிட்டு நிற்க, 
செல்வி ”இன்னைக்கு சனிக்கிழமை!” என்று தங்கத்தை வம்பிழுத்து கொண்டிருக்க,
“நீ இரு! நான் வார்டனம்மகிட்ட கொஞ்சம் பேசிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு அவரின் அறைக்கு வந்தாள் அன்பு.
“என்ன அன்பு?” என்று கேட்க,
“வார்டனம்மா! நான் சொல்லுறதை கோபப்படாம கேளுங்க!” என்றாள்.
“நான் உன்மேல என்னைக்கு கோபப்பட்டேன்?” என்றவர், ”சரி சொல்லு!” என்று கேட்க,  
“நான் நாளைக்கு ஹாஸ்டலை காலி பண்ணிட்டு ஊருக்கு போகலாம்னு இருக்கேன்.” என்றாள்.
“ஏன்? அண்ணா வந்துட்டு போனதுக்காக நான் உன்னை வெளியேத்தலைனு நீயா கிளம்புறியா?” என்று சரியாக கேட்க,
“அதுக்கும்தான். இந்த ஹாஸ்டல்ல யாருக்கும் தெரியலைனாலும் எனக்கு அது தெரியுமே. ஒரு பொண்ணை ஹாஸ்டலுக்குள்ள நடுராத்திரியில் குதிச்சு பாக்குறது தப்புதான். அவன் வர நான்தான் காரணம்” என்றாள்.
“நீ சொல்லி அவன் வரலையே! என்றவர், ”சரி! வேற எதுக்காக நீ போற?” என்றார்.
”இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம்ஸ் ஆரம்பிச்சிடும். முன்னாடி எப்படியோ. இனி பக்கத்தில் இருந்தா அடிக்கடி அவன் பக்கதிலேயே இருக்கணும்னு தோணும். நான் ஏதாவது யோசிக்காம செஞ்சு, உங்களுக்கு கெட்ட பெயர் ஆகிடக்கூடாது” என்றவள், 
”இப்போ அவன்கிட்டேயும் கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு. அவன் கடையில் போய் அப்பாக்கு போன் பண்ணி ”நாளைக்கு என்னை கூப்பிடவாங்க!”னு சொல்லிட்டு, அப்படியே அவனோட இன்னைக்கு ஒரு நாள் வெளிய போயிட்டு வரவா வார்டனம்மா?” என்றாள்.
இவர் ”காலி பண்ணி போகணும்னு முடிவே எடுத்திட்ட! ம்!” என்று பார்க்க,
“நாங்க எங்கேயுமே வெளிய போனதே இல்லை. நாளைக்கு நான் காலி பண்ணி போயிட்டா பார்க்கவும் முடியாது. இவ்வளவு நாள் என்ன விஷயம்னு உங்ககிட்ட பெரிசா சொன்னதில்லை. இன்னைக்காவது உண்மையை சொல்லி பெர்மிஷன் வாங்கணும்னு தோணிச்சு” என்று சொல்ல,
இவளின் கன்னத்தை இரு கைகளாலும் அழுத்தியவர் ”பத்திரமா போயிட்டு வா!” என்றார்.