Advertisement

Kidnap 1.A:

             

     அடர்ந்த காட்டில்…மார்கழி மாத பனி கொட்டும் நட்டநடு இரவில்…முந்திரி பருப்பு உருவம் தாங்கிய நிலவு மகள் மெல்லிய ஒளி பரப்ப…எங்கோ தூரத்தில் நாய் ஒலிக்கும் குரல்…

 

கட்..கட்…

 

அட ச்சை நாம என்ன பல்லானா  கதையா எழுதுறோம்…மார்கழி மாசம்…பனி…முந்திரி…நாய் குரல்னு…சாரி கைஸ்….

 

backto the story

 

          விலங்குகள் கூட தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வர தயங்கும் அந்த அர்த்த ராத்திரியில் மனிதர்கள் என்று பெயர்சூட்டப்பெற்ற மூன்று தடி மாடுகள் மூச்சுவாங்க  ஓடிக்கொண்டிருந்தனர்…

           ஓடும் மூன்று பேர் மனதிலும் ஒரே கேள்வி தான்….”என்ன…***** எங்களை தொறத்துறீங்க…”

            “என்ன  வண்டி வைச்சுருக்க…இப்படி நட்டநடு ராத்திரில…நட்டநடு பேய் காட்டுக்குள்ள பஞ்சர் ஆகி நின்னு இப்படி ஏகப்பட்ட பேய் பயலுக தொரத்த இப்டி பேய் மாதிரி ஓடிக்கிட்டு இருக்க வைச்சுருச்சு….”என்றுஓடியபடி மூச்சுவாங்க நிறுத்தி நிறுத்தி தன்னுடைய கனத்த  குரலால் கேட்டாள் தமிழரசி…

             அவள் கேள்வி யாரிடம் கேட்டாளோ அவனோ ஓடி கொண்டே சுற்றி சுற்றி பார்த்தவாறு “நீ எங்க இருக்க கழுவாத மூஞ்சி…உனையெல்லாம் பட்ட பகலுள்ள பார்த்தாலே தெரியமாட்டே…இந்த இருட்டுக்குள்ள நீ எங்குட்டு ஓடி வரேனே தெரிலை….”என்று அசால்ட்டாக அந்த காந்த நிற அழகியை கலாய்த்தான் பாஸ்கர்…

காந்தம் என்ன நிறம் என்று தெரியும் இல்லையா அதே நிறம் தான் தமிழரசியும்….

        தமிழரசி ஏதோ பதில் பேச வருவதற்குள் அவர்கள் வாக்குவாதத்தில் இடையிட்ட இன்னொரு தடிமாடு “இப்படி நமக்குள்ளே ஒற்றுமை இல்லையென்றால் வர்றவன் போறவன் தான் ஆட்சியை பிடிப்பான்…உயிர் போகும் இந்த தருணத்தில் கூட தமிழர்கள் ஆகிய நீங்கள் இப்படி சண்டை பிடித்தால் ….”என்று ஆளன் என்றவன் இதை ஏதோ கட்சி மேடையாக பாவித்து கொண்டு உட்சதாதியில் கத்தும் போதே அவனின் வாயை தன் கையால் அடைத்து ஒரு மரத்தின் பின் பதுங்கினான் பாஸ்கர்…அவர்களுடனே நம் காந்த நிறத்தழகி தமிழரசியும் ஒளிந்தாள்…

      அவர்கள் ஒழிந்த இடத்திற்கு எதிர்புறத்தில் இருந்து ஓடி வந்த ஐந்து தடி தாண்டவராயன்கள் தங்களுக்குள் பேசி ஆரம்பித்தனர்…

           “ஏன் டா **** மவனே கோவாலு…எங்க டா அந்த சனியன்களை காணோம்…”என்று அரிவாளை பக்கவாட்டில் திருப்பி கன்னத்தில் வைத்து தேய்த்தவாறு கேட்டான் அப்பளம் ரவி …அவன் பெயரை கேட்டாலே மதுரை மாநகரமே அடங்கி நிற்கும்…

      அவனின் அடியாட்கள் இவனுக்கு பயந்து நின்றனர்…அதிலும் அந்த கோவாலு சர்வமும் அடங்க ஒடுங்கி நின்றான்…ஏனென்றால் இவர்கள் துரத்தும் நபர்கள் ஓடும் பாதையின் பக்கவாட்டு பாதையில் ஓடி இரு பாதையும் சந்திக்கும் இடத்தில அவர்களை வளைத்து பிடிக்கலாம் என்ற ஆகச்சிறந்த ஐடியாவை குடுத்தது அவன்தானே…

           “மீனாட்சி ஆத்தா…அந்த வீணா போனவன் வந்து எங்க தலயை கலாய்க்க கூடாது…இல்லாட்டி இவன் என்னை அடிச்சே கொன்றுவான்…அடிச்சாலும் பரவாயில்லை மண்டை முடி கூட தீயிர அளவுக்கு அசிங்கம் அசிங்கமா என் பரம்பரையே கிழிப்பானே கிரகம் பிடிச்சவன்….”என்று மனதிற்குள் புலம்பியவாறு சுற்றி சுற்றி பார்த்தான்…

                    அவர்களுக்கு நேர் எதிராக பின் இருக்கும் மரத்திற்கு பின் தான் ஒளித்திருந்தனர் மூவரும்…

          “ஹா ஹா ஹா…குரலை கேட்டியா…அந்த அருவாளை திருப்பி சொரியுறது…கன்னம் பேந்திருக்கும்…ரவுடி பயலுக கூட விவரமா தான் இருக்காங்க…”என்று பாஸ்கர் மிக மிக மெதுவாக கூறினான்…

           “வாயை மூடு டா குரங்கு…”என்று அவனை பார்த்து மெதுவாக தான் கூறினாள் தமிழரசி….

            “யாரை பார்த்து குரங்குனு சொல்லற…அடிச்சா தாரம் வாந்துருவ பார்த்துக்கோ…எழவு…”என்று குரங்கு மாதிரி இருக்கும் மனித பிறவி தன்னை குரங்கு என்று சொல்லியவுடன் பொங்கி எழுந்தவன் அவ்வளவு நேரம் தன் கைக்குள் வைத்திருந்த ஐந்தரை அடி உருவத்தை நொடி பொழுதில் கீழே விட்டிருந்தான்…

           இவ்வளவு நேரம் பாஸ்கர் தன்னை வாயை முடி அழுத்தி பிடித்திருந்தால் எந்த பிடிமானமும் இன்றி அவனை மட்டும் நம்பி நின்றிருந்த ஆளன் அவன் பிடி விலகவும் பிடிப்பின்றி பொத்தென்று கீழே விழுந்தான்…

  அந்த சத்தத்தில் தான் சுதாரித்த இருவரும் தங்கள் சண்டையை நிற்பாட்டி விட்டு அவனை தூக்கி விட்டனர்…விழுந்த சத்தம் இவர்களை மட்டும் சுதாரிக்க விடவில்லை…இவர்களுக்கு முன்னின்று இவ்வளவு நேரம் இவர்களை காணாது தேடிக்கொண்டிருந்த தடி தாண்டவராயன்களும் சுதாரித்திருந்தனர்…

        கோவாலு சத்தம் வந்த மரத்தை நோக்கி வந்த சமயம் சரியாக அவன் யார் தன் தலயை கலாய்க்க கூடாது என்று நினைத்தானோ அந்த குரூப் அடக்க முடியா சிரிப்புடன் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர்…

           “**** ரௌடினா ஸ்கெட்ச் போட தெரியணும் டா என் சிப்ஸு…இப்படி போய் மொக்கை வாங்க கூடாது…”என்று கோவாலின் பின் மண்டையில் அடித்தான் ஆட்டோ சுரேஷ்…

               

             “சுரேஷ் இதெல்லாம் நல்லதுக்கு இல்லை…அம்புட்டு தான் சொல்லிப்புட்டேன்…”என்று தொண்டை வெடிக்க கத்தினான் அப்பளம் ரவி…

       ஆனால் என்ன எல்லாருக்கும் பயம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது…ஏனென்றால் அவனின் குரல் அப்படி…கிச் கிச் என்று பெண்களின் குரலை ஒத்திருக்கும்…காண்டாமிருக உடல் அமைப்பை குடுத்த இறைவன் பாவம் கிளியின் கொஞ்சும் குரலை வைத்து படைத்தது விட்டான்….

           “ஹா ஹா ஹா …”என்று அந்த காடே அதிர சிரித்த  ஆட்டோ சுரேஷ் குழுவினர் மாத்தி மாத்தி மேலே கீழே விழுந்து சிரித்தனர்…

       அப்பளம் ரவி குழுவினருக்கும் சிரிப்பு வரும் போல் இருந்தது…இத்தனை வருட அனுபவத்தில் சிரிப்பை அடக்கி கொண்டவர்கள் அமைதியாக நின்றனர்…

          அப்பளம் ரவி பின்னால் திரும்பி பார்க்கவும் அவனின் குழுவினர் அதிரடியாக களத்தில் இறங்கி எப்பொழுதும் அடியாட்கள் செய்யும் வேலையான “ஏய்…ஏய்…”என்று இவர்கள் கத்த மறுபுறம் இருந்து ஆட்டோ சுரேஷ் அடியாட்கள் “ஒய் ஒய்…”என்று கத்த அந்த இடைவேளையில் மரத்துக்கு பின் ஒளிந்திருந்த மூவரும் கரணம் தப்பினால் மரணம் என்று எஸ்ஸாகி இருந்தனர்…

            புடணிக்கு பின்னாடி இருந்தவர்களை தப்பிக்க விட்டுவிட்டு ஒரு வழியாக சண்டையை முடித்து விட்டு மீண்டும் அவர்களை தேடி அனைவரும் சென்றனர்…

                “போதும் ஓடாதிங்க…என்னால முடியலை….”என்று ஓடி வந்துகொண்டிருந்தவள் இருமுழங்கால்களையும் கைகளால் பற்றியவாறு மூச்சுவாங்க கூறினாள் தமிழரசி…

                 “குண்டு பூசணிக்காய் மாதிரி இருந்தா எப்படி ஓட முடியும்…அவனுக பார்த்தா அவ்வளவு தான்…உனக்கு என்ன வசதியா அவனுக கண்ணு முன்னாடி நின்ன கூட அவங்களுக்கு தெரியாது…உன் நிறம் அப்படி…ஆனால் பாரு நாங்க அப்டியா…”

என்று மீண்டும் கலாய்த்தான் பாஸ்கர்…

       அதற்கெல்லாம் அசருப்பவளா தமிழரசி “நாய் நக்குனா மாதிரி இருந்துகிட்டு என்னை கருவாச்சினு சொல்றியா…”என்று கேட்டாள்….

         இவர்கள் சண்டையில் மீண்டும் சிங்க் இல்லாமல் இடையில் நுழைந்த ஆளன் “கருமை நம் திராவிடத்தின் நிறம்…தமிழின் நிறம்…நம் முப்பாட்டனின் நிறம்…”என்று பேச ஆரம்பித்தவுடன் அவ்வளவு நேரம் நீயா நானா என்று சண்டை போட்டு கொண்டிருந்த இருவரும் அவனுக்கு முன்னே ஓடிக்கொண்டிருந்தனர்…

 “இது இதனால் தான்…தமிழ் நாடு உருப்படல…”என்று பெங்களூரின் வயநாட்டு காட்டில் இரவு ஒருமணிக்கு கூறி கொண்டிருந்தான் ஆளன்…

       அவனும் அவர்களுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்தான்…மீண்டும் ஒரு பெரிய மரத்தருகில் மூவரும் ஒதுங்கினர்…மூவருமாலே இதற்கு மேல் ஓடமுடியும்  என்று தோன்றவில்லை…காலை சாப்பிட்டது அதற்கு பின் சாப்பிடவே இல்லை…ஓட்டம் ஓட்டம் தான்…உயிர் முக்கியமா சோறு முக்கியமா என்பதில் உயிர் அதிக வாக்குகளை பெற பேய் ஓட்டம் ஓடினர்…

               மூவரும் மரத்தை சுற்றி கால் நீட்டி அமர்ந்தனர்…

              “யாரு இவனுங்க…எதுக்கு நம்மள தொரத்துறாங்க…”என்று தலையை சொரித்தவாறு கேட்டான் பாஸ்கர்…அவன் மனதிற்குள்ளும் ஒரு விடை இருந்தது…என்னை தான் கொலை பண்ண தொரத்துறாங்களோ….

                ஆளன் மனதிலும் அதே எண்ணம் தான் செய்ய போகும் காரணத்தினால் தான் கொலை செய்ய துரத்துகிறார்களோ…

                  தமிழரசி மனதிலும் ஒரு விடை இருந்தது…தன்னால் தான் துரத்துகிறார்களோ என்று…அட பாவிகளா மூணு பேருமே ஏதோ பண்ணிட்டு தான் வந்திருக்கீங்களோ….

               ஆனால் மூவருமே பதில் பேசவில்லை…

       அந்த நேரம் சரியாக மதியத்திலிருந்து நெட்ஒர்க் இல்லாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஆளனின் கைபேசி ரிங்கியது…

 

இவர்கள் மூவரும் யார்…எந்த விதத்தில் மூவரும் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தம் பட்டிருக்கின்றனர்…யார் அந்த தடி தாண்டவராயன்கள்…யாரை காவு வாங்க துரத்துகின்றனர்….

 

விடை தெரியாத கேள்விகள்…

விடையுடன் மீண்டும் சந்திப்போம்….

 

   Kidnap 1.B

 

ஒத்தையடிப் பாதையில…

ஒத்தையில போறவளே…..

கரடி வந்து வழி மறிச்சா

காட்டுக்குள்ள என்ன செய்வ….

 

சிக்கி முக்கி கல்லெடுத்து

சீக்கிரமா பத்த வச்சு

நெறுப்பேத்தி வெறுப்பேத்தி…

கரடிய சுட்டுத் தப்பி போவேன்….

 

அடர்ந்த காட்டுக்குள் அந்த மூன்றாம் பிறையவள் மட்டும் கண் சிமிட்டிக் கொண்டிருக்க…பெயர் தெரியா பறவைகள் வித்யாசமான சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தது.

 

ராக்ஷசதனைப் போல மரங்கள் வளர்ந்து நிற்க…அந்தக் குளிரிலும் வேர்வை பிசுபிசுத்தது அவளுக்கு…

அந்த நெடு மரங்கள் அந்த மூன்றாம் பிறை நிலவையும் பாதி மறைத்திருக்க…அந்தக் காடே கருமையைப் பூசிக்கொண்டார்ப்போல் காட்சியளித்தது…

 

ஆந்தையின் அலறலுடன் சேர்த்து அங்கே சருகுகள் மிதிபடும் சத்தமும்…

 

உடலிலும் பாதங்களிலும் அங்கங்கே அந்தக் காட்டுச் செடிகளும் மரக்கிளைகளும் தன்னால் இயன்ற காயங்களை அவள் உடலில் ஏற்படுத்தியிருக்க…அதுவேறு அவளுக்கு ஒருபக்க எரிச்சலை கொடுத்தது…அவள் துவண்டு விழப் போக

 

“ஏ என்னாச்சு…?”

 

“இல்ல…ஒன்னுமில்ல…”

 

“இப்ப சொல்லப்போறியா இல்லையா…?” என்றவன் தனது அதிகாரக்குரலில் அதட்ட.

 

“ஷ்ஷ்ஷ்….” என்ற பாஸ்கர் தனது கவனத்தை மறுபடியும் அங்கே திருப்ப…இம்முறை சில சருகுகள் மிதிபட அதில் அதிர்ந்த மூவறும்

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க

 

“அவங்க வந்துட்டாங்க…”என்றது ஆளன்.

 

“இப்ப என்ன பண்ணப்போறோம்…?” என்று பதறியது தமிழரசி.

 

மூவறும் ஒருவர் முகத்தை ஒருவர் பாரத்துக்கொண்டே நிற்க…சத்தம் இன்னும் அருகில் கேட்டது.

 

மூவரின் முகமும் ஒருவித பய உணர்வை பிரதிபலிக்க…அடுத்து என்ன…? என்றே மூவரின் மனதிலும்.

 

எப்படியாவது தப்பிவிட வேண்டும் என்றிருக்க கிடைத்தது ஒரு மார்க்கம்!…

 

கொஞ்ச தூரத்தில் தெரிந்த அந்த பாறை போன்ற வடிவமைப்பைக் கொண்ட ஒன்று!….

 

அந்த நிலவொளியில் அது என்னவென்று தெரியாவிட்டாலும்…தப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையை அது கொடுக்க…

 

மறுபடியும் அதே காலடிச் சத்தங்கள்…!

 

இம்முறை மிக அருகாமையில்…

 

நெருங்க நெருங்க பேச்சுக் குரல்களும்…!

 

வேகமாக செயல்பட வேண்டிய நேரமிது…!

 

உயிர் தப்பினால் போதும்…! ஆனால்…அது முடியுமா…?

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில்….

 

பாஸ்கரன் இவர்களை நோக்கி கண்ணசைக்க அதுக்காகவே காத்திருந்தவர்கள் போல் அதைப் புரிந்துக் கொண்டு மற்ற இருவரும் தயாராக…

 

பூனை பாதங்கள்தான் வைத்தாக வேண்டும் ஆனால் வேகமும் வேண்டும்…

தமிழரசி சற்று தடுமாற…இம்முறை சருகுகள் வேகமாக மிதிப்பட்டன…

 

ஆனால் அதுவும் ஓர் கட்டத்தில் நின்றுவிட அதுவே சொல்லியது அவர்கள் கவனிக்கிறார்கள் என்று…

 

அவர்கள் கண்டுக்கொண்டதை உணர்ந்தவர்கள் ஓட்டமெடுக்க…

 

அந்தக் காலடிச் சத்தங்களும் பின் தொடர்ந்தன…

 

எப்படியோ அந்த பாறை வடிவத்திலிருந்த எதோ ஒன்றிர்க்கு மறுபக்கத்தை இம்மூவறும் அடைந்திருக்க…

 

அதனுள் சென்றவர்கள் மறைந்துக்கொள்ள…கைகளைக்கொண்டு வாயை மூடிக்கொண்டாள் தமிழரசி.

 

அப்படியிருந்தும் கால்களில் ஏதோ பட்டுவிட அதில் துடித்தவள் வலி தாங்காது “ஸ்ஸ்ஸ்…” என்றுவிட அவளது வாயை இறுக மூடியிருந்தான் ஆளன். கண்களிலிருந்து இரு துளி கண்ணீர் அனுமதியின்றி விடை பெற்றுக் கொள்ள அது அவன் கையை நெருங்கும் முன்பே துடைத்திருந்தாள்.

 

“இங்கத்தாண்ண சத்தம் வந்தது…”

 

“நீ அந்தப் பக்கம் போய் பார்ரா!!!… எங்க போயிரு….” என்றவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்க இங்கோ இவர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு காத்திருந்தனர்.

 

இவர்கள் இந்தப் பக்கமிருந்ததால் இவர்களுக்கு அவர்கள் பேசிக் கொள்வது கேட்டது…ஆனால் அந்தப் பக்கத்தில் இருந்தவர்களுக்கு

மறு பக்கத்தில் இப்படியொரு வழி இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

 

சிறிது சிறிதாகக் குறைந்து ஒரு கட்டத்தில் எங்கோ தொலைவில் கேட்ட அவர்களது குரலும் காலடிச்சத்தமும் நின்றேப் போனது….அவர்கள் அங்கிருந்து போய் விட்டார்கள்….!

 

அந்த ஒரு விஷயமே சற்று நிம்மதியளிக்க அங்கேயே அமர்ந்துக் கொண்டவர்களுக்கோ…ஒன்றும் விளங்கவில்லை.

 

தலையும் புரியாத…வாலும் புரியாத நிலை…!

 

மூவர் மனதிலும் கேள்வி…கேள்வி…கேள்வி மட்டுமே…!

 

ஏன்…? எதற்காக….? யாருக்காக….? இன்னும் பல…ஆனால் விடைத்தானில்லை.

 

ஃபோனிலும் சிக்னல் மட்டுமின்றி உயிரற்றிருந்தது.

 

கையறு நிலைதான் மூவறுக்குமே…!

 

பாஸ்கரனோ சாய்ந்த வாக்கில் அமர்ந்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டான்.

 

ஆளன்…பல கேள்விகள் அவனுள் வரிசைக்கட்டி நிற்க…அப்படியே அந்த இருளடர்ந்த விட்டத்தைப் பார்த்தபடி இருந்தான்…

 

இருள்…இருள் மட்டுமே அவன் கண்ணுக்கு தெரிந்தது…கேள்வியென்ற இருள்…! அவனை சுற்றியிருந்தது…ஆனால் விடையென்னும் வெளிச்சப்பூவின் மொட்டு ஒன்றுக்கூட அங்கில்லை….

 

“கொஞ்சம்கூட அறிவ உபயோகிக்கவே மாட்டியா தமிழ்…?”

 

“இல்லங்கறீங்களா…?”

 

“பின்ன…? அறிவிருக்க எவளாவது இப்படியொரு காரியத்த பண்ணத் துணிவாளா…?”

 

“எனக்குத் தெரியும் நான் என்ன பண்றேன்னு”.

 

உண்மையிலேயே எனக்கு தெரியுமா….? என்றுதான் எண்ணத் தோன்றியது தமிழரசிக்கு.

 

கால்களில் முட்களின் முத்தத்தால் ஏற்பட்ட கீறலில் இருந்து லேசாக இரத்தம் கசிந்துக் கொண்டிருக்க…ஒரு பக்கம் கைகளில் ஏற்பட்ட காயம் வேறு காந்த…அவள் எண்ணங்களோ வேறெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது.

 

எல்லாம் ஓர் நிமிடத்தில் நடந்துவிட்ட உணர்வு…!

 

ஆனால் இன்னும் இதயம் தடதடத்துக்கொண்டிருந்தது…

 

யாரவர்கள்…? தெரியாது…!

 

ஏன் துரத்துகிறார்கள்…? அதுவும் தெரியாது…!

 

சரி மூவரில் யாரைத் துரத்துகிறார்கள்…? அதுவும் கேள்விக் குறியே…

 

தெரிந்ததெல்லாம் ஒன்றே…!

 

அவர்களுக்கு வேண்டியது உயிர்…!

 

ஆனால் அது யாருடையது…?

 

பாஸ்கரா…? ஆளனா…? இல்லை….தமிழரசியா…?

 

முதலில் இவர்கள் மூவறும் யார்…? இதில் ஒருவரைக் கொள்ளத் துடிக்கும் அவர்கள் யாரகயிருக்கும்…?

 

ஒருவரென்றால் மற்ற இருவரும் ஏன் ஓட வேண்டும்…?

 

அவர்களிடமும் அதற்கான காரணங்களிருந்தது…எல்லோரும் சாதாரண மனிதப் பிறவிகள்தானல்லவா…!

 

ஏனோ யோசிக்க யோசிக்க அவளது தலை பாரமானதுப் போலொரு உணர்வு…!

 

பாஸ்கரன்…உறங்கிவிட்டானா…? இந்தச் சூழலில்கூட அவனுக்கு உறக்கம் வருமா…? இல்லை அவன் கண்களை மூடிக்கொண்டிருந்தானே தவிர உறங்கிவிடவில்லை என்பது அவனை உற்று கவனித்தவளுக்குப் புரிந்தது.

 

ஆளன்…ஏதோ யோசனையிலிருந்தவன்…திடீரென்று விழித்துக் கொண்டு…

 

“உங்க இரண்டு பேரோட ஃபோனையும் குடுங்க.” அதிலும் ஒருவித அதிகாரமே…

 

அவளோ அவளது ஃபோனை எங்கோ தவற விட்டிருந்தாள்…அவளிடமிருந்திருந்தாலும் அவன் கேட்ட விதத்தில் கொடுத்திருப்பாளா என்பது சந்தேகமே…!

 

ஏதோ ஒரு சிந்தனையிலிருந்த பாஸ்கரனோ அவனது பேசியை எடுத்துக் கொடுத்திருந்தான்.

 

கொடுத்துவிட்டு மறுபடியும் அவனது சிந்தனைக் கடலில் மூழ்கிவிட்டான்.

 

தமிழரசியோ இதையெல்லாம் ஏதோ ஒர் வேடிக்கைப் போல் பார்த்துவிட்டு…திரும்பிக்கொண்டாள்.

 

தூரத்தில் அந்த இரு மரங்களுக்கு நடுவே தெரிந்த நிலவையே நம்பி வாழ்பவள் போல அதையே பார்த்துக் கொண்டு…அவளது கலக்கங்களை  அந்த நிலவிடம் பகிர்ந்துக்கொண்டும்…!

 

எதையோ ஆராய்ந்துக் கொண்டிருந்தவனின் முகத்தில் திடீர் பிரகாசம்…!

 

அவனது பேசி செயல்பட ஆரம்பித்திருந்தது.

 

அது உயிர்த்தெழுந்த அடுத்த நொடியே அவனுக்கோர் அழைப்பு…!

 

            

              

              

         

 

          

                          

Advertisement