அதை அவர் செயல்படுத்தும் முன், சம்மந்தியம்மாவைப் பார்க்க வந்திருந்த மாப்பிள்ளையின் தாயார்,”மூச்சு பேச்சிலாம இப்படிக் கிடக்கறாங்களே..முக்கியமானவங்களுக்கு சொல்லியாச்சில்லே..உங்க உறவுக்காரங்களைச் சாட்சியா வைச்சு நகை நட்டு, பட்டுப்புடவை, பாத்திரப் பண்டத்தை மூணு பாகமா பிரிச்சு என் மருமகளோட பங்கை கொடுத்திடுங்க..நாளை பின்னே உரிமைப்பட்ட இரண்டு பேர் வந்து தர மாட்டோம்னு சொல்லிட்டா என் மருமகளுக்கு அநியாயம் நடந்து போயிடும்…அவங்க வந்து கேட்கும் போது நியாயமா நடந்திச்சுன்னு சொல்லத் தான் உறவுக்காரங்களைக் கூப்பிடச் சொல்றேன்..அப்படிச் செய்யலைன்னா பெத்த அம்மா போன பிறகு என் மருமகதான் எல்லாத்தையும் சுருட்டிக் கிட்டு போயிட்டான்னு பேச்சு வரும்.’ என்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஈஸ்வரிக்கு இறுதிச் சடங்கு செய்து அவரின் பொருள்களைப் பங்கும் போட்டு விட்டார்.
அந்த விஷயத்தை மூத்த மகனிடம் சொல்லவில்லை அன்பரசு. அவரால் சொல்ல முடியவில்லை. கடல் தாண்டி, இரவு பகல் பாராது அவர்களுக்காக கடுமையாக உழைக்கும் மகனின் மனத்தைக் காயப்படுத்த அவர் விரும்பவில்லை. வீடு கட்டும் போது பணமில்லாமல் சில வாரங்களுக்கு வேலை நின்று போன போது,’என்னோட நகையை அடமானம் வைச்சு வேலையை ஆரம்பிங்க.’ என்று ஈஸ்வரி சொல்ல, தனசேகரும் அன்பரசும் மறுத்து விட்டனர். ‘மகளைக் கட்டிக் கொடுத்து, பேரன், பேத்தி பார்த்து அவளுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடிச்சாச்சு..என்னோடதெல்லாம் என்னோட இரண்டு மகன்களுக்கு தான்..வீட்டு செலவுலேர்ந்து வாசு படிப்பு வரை பெரியவன் தான் பார்த்துக்கறான்..அவனுக்கு அதிகமாக கொடுத்திட்டு சின்னவனுக்கு மீதியைக் கொடுத்திடுவேன்.’ என்று அவரது விருப்பத்தை வெளிப்படுத்திய ஈஸ்வரி இப்போது அதற்கு நேர்மாறாக நடப்பதை தடுத்து நிறுத்தும் நிலையில் இல்லை. ஆரோக்கியமான உடல், மனம் இரண்டும் இருந்தாலும் மனைவி என்ற மந்திரி இல்லாததால் மகளின் புகுந்த வீட்டினரை எதிர்க்க அன்பரசுவிற்கு வழி தெரியவில்லை.
அடுத்த சில நாள்களில் அவளுடையை பிள்ளைகளை மாமியாரின் பொறுப்பில் விட்டுவிட்டு அம்மாவைப் பார்க்க தனியாக வந்த மகள், இரண்டு நாள்கள் பிறந்த வீட்டில் தங்கினாள். இரண்டாம் நாள் மதியம் போல் உணவருந்த அன்பரசு வீட்டிற்கு வர ஈஸ்வரியின் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க உறவினர்கள் சிலர் வீட்டிற்கு வந்தனர். ‘ஆஸ்பத்திரிக்கு வந்தாலும் ஈஸ்வரியைப் பார்க்க விட மாட்டாங்கண்ணு பாப்பா தான் சொல்லிச்சு..அதான் வீட்டுக்கு வந்திருக்கோம்..நீயும் வாசுவும் மாறி மாறி வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலைஞ்சிட்டு இருந்ததாலே வீடு பூட்டி கிடந்திச்சில்லே அதான் வரலை..’இன்னைக்கு சாயங்காலம் வரை நான் இங்கே இருப்பேன் நீங்க வாங்கண்ணு’ பாப்பா சொன்னதாலே தான் இப்போ வந்திருக்கோம்.’ என்றார் உறவுக்காரப் பெண்மணி ஒருவர்.
அன்று வாசு வீட்டிலில்லை. பரீட்சை எழுத கல்லூரிக்கு சென்றிருந்ததான். உறவினர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்தவள், அன்பரசுவைத் தனியாக அழைத்துச் சென்று அம்மாவின் உடைமைகளைப் பாகம்பிரிக்க அதுதான் சரியான சந்தர்ப்பமென்று சொல்ல, மகளை மறுத்துப் பேச முடியவில்லை. சிறிது நேரத்தில், கூடத்தில், ஈஸ்வரியின் பொருள்களைக் கடைப் பரப்பி, கண்ணீர் விட்டபடி‘இதை என் மகளுக்குன்னு அம்மா சொன்னாங்க ப்பா..இதை அண்ணன் கல்யாணம் போது எனக்கு கொடுக்கறதா சொன்னாங்க ப்பா.’ என்று காத்திரமான நகைகளைக் அபேஸ் செய்தாள் அந்த வீட்டின் ஒரே பெண்பிள்ளை.
‘உனக்கு வேண்டியதை நீ எடுத்துக்க பாப்பா..அப்போ தான் ஈஸ்வரி மனசு சாந்தி அடையும்.’ என்று உறவுக்காரர்கள் தூபம் போட, தனசேகரின் உழைப்பில் உருவான நகைகளையும் எடுத்துக் கொண்டாள் மகள். ‘உங்கம்மா அப்படிச் சொல்லவேயில்லை..நீ கைலே வைச்சிருக்கறதெல்லாம் உன் அண்ணன் அவளுக்கு செய்து போட்டது’ என்று மனத்திற்குள் மறுகினாலும் அதை வெளிப்படுத்த வழி தெரியவில்லை அன்பரசுவிற்கு. சிக்கலான வீட்டு விவகாரங்களைச் சமாளிக்க ஈஸ்வரி ஆலோசனை வழங்கிய போதெல்லாம்,’எல்லாம் எனக்குத் தெரியும்.. நான் பார்த்துக்கறேன்..நீ வாயை மூடிட்டு சும்மா இரு.’ என்று மனைவியை அடக்கியவர் இன்று மகள் செய்யும் அநியாயத்தை நிறுத்த முடியாமல் வாய் அடைத்துப் போய் நின்றார்.
ஈஸ்வரி ஒரு சாராசி பெண்மணி. திருமணம் வரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்தவர் திருமணத்திற்கு பின் கணவரின் பாதுகாப்பிற்கு மாறினார். கடைசி காலத்தில் மகன்களில் பாதுகாப்பிற்கு மாறியிருப்பார். அன்பரசும் ஒரு சராசரி ஆண்மகன். பெற்றோரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து அவருடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர். காலம் செய்யும் மாற்றங்களுக்கு அவருடைய வீட்டில் இடமிருக்கவில்லை. காலம் கடந்து, மனைவி மருத்துவமனைக்கு சென்ற பின், வீடு அன்னியமாகத் தெரிந்த போது தான் அவரது வாழ்க்கைமுறை தவறு என்று தெரிந்தது. மனைவி மரித்த பின் தான் அவளுடைய பாதுகாப்பில் அவர் இருந்திருக்கிறார் என்ற பெரிய உண்மை புரிந்தது.
பில் தொகையை செட்டில் செய்து மனைவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஒருநாள் ஆகி விடுமென்று கற்பனை கூட செய்யவில்லை அன்பரசு. உடல் நிலையில் முன்னேற்றம் இருக்க, ஐசியு விலிருந்து நார்மல் வார்ட்டிற்கு ஈஸ்வரியை மாற்றிய சிறிது நேர்த்திலேயே ஈஸ்வரியின் உடல் நிலை கவலைக்கிடமாக,”நாங்க முயற்சி செய்திட்டு இருக்கும்..கடவுளோட இஷ்டம்னு ஒண்ணு இருக்குயில்லே.” என்று பெரிய டாக்டர் கூறியவுடனே அன்பரசினுள் அனைத்தும் அடங்கிப் போனது. மரணச் செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தவுடன் அதை மூத்த மகனுக்குத் தெரியப்படுத்தி விட்டார். அப்படியே மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மீதியைப் புகைப்படமாக அவனுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு பின் எத்தனை முறை அழைத்தும் அவரின் அழைப்பை அவன் மகன் ஏற்கவில்லை.
ஈஸ்வரி தவறிய தகவல் தெரிந்ததும் வீட்டிற்குச் சென்ற உறவினர்கள் அனைவரும் நேரமாக ஆக நேரே ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டனர். ’இதுக்கு தான் பிரைவெட்லே பார்க்கக் கூடாதுன்னு சொல்றது..பணப் பிசாசுங்க..மனுஷன் போன பிறகும் பிணத்தை வைச்சு சம்பாதிக்கப் பார்ப்பாங்க.’ என்று மருத்துவமனையின் செய்கையை சிலர் விமர்சிக்க,’ராஜா மாதிரி இரண்டு பசங்க இருந்தும் ஒருத்தன் கல்யாணத்தைக் கூட பார்க்க ஈஸ்வரி அக்காக்கு கொடுத்து வைக்கலை..நல்லவேளை மகளையாவது கட்டிக் கொடுத்தாலே மகராசி..’ என்று சிலரும்,’புது வீட்லே நல்ல விசேஷம் நடக்கும்னு நினைச்சா இப்படி அவளோட காரியம் நடக்கப் போகுதே.’ என்று சிலரும் துக்கம் விசாரிக்கும் சாக்கில் அவர்களின் கருத்தை வெளியிட்டு மனைவியின் மறைவில் நடைபிணமாகியிருந்த அனபரசுவை உயிரோடு கொன்று கொண்டிருந்தனர். இதற்கிடையே அம்மாவிற்காக வீட்டில் காத்திருந்த மகளும் சின்ன மகனும் மாறி மாறி அழைக்க,’பணம் கட்டினா தான் கொடுப்பாங்க.’ என்று கத்திப் போட, அந்தப்புறம் மயான அமைதி.
நள்ளிரவு போல் அவரது வங்கிக் கணக்கில் பணம் வந்த தகவல் கைப்பேசிக்கு வர, உடனே மூத்த மகனுக்கு அழைத்து விட்டார் அன்பரசு. இந்தமுறை அவரது அழைப்பை ஏற்றவனிடம்,”தம்பி, நாளை சூர்ய அஸ்தமனம் வரை தாமதிக்க முடியும்..உங்கம்மாவை பார்க்க நீ எப்போ வர்ற ப்பா?” என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல தனசேகருக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. அவனது மனத்தை ஒருநிலைக்குக் கொண்டு வந்து,”நான் வரமுடியாது ப்பா..நீங்களும் வாசுவும் அம்மாக்கு செய்ய வேண்டியதை செய்திடுங்க.” என்றான்.
“என்ன டா இப்படிச் சொல்ற..நாளைக்கு அவளைப் பார்க்கலைன்னா உன்னாலே அவளைப் பார்க்கவே முடியாது டா..பணம் இல்லையா உன்கிட்டே..உன் தங்கச்சி எடுத்துக்கிட்ட மீதி நகை இருக்குது டா..ஓர் அவசரத்துக்கு வைச்சிருந்தேன்..அதை அடமானம் வைச்சு டிக்கெட் புக் செய்திடறேன்..வந்து சேர்ந்திடு.” என்றார்.
அந்தப் புறத்திலிருந்து அதற்கு பதில் வரவில்லை. சில நொடிகள் கழித்து,”உன்னைப் பார்க்காம உங்கம்மா இந்த உலகத்தை விட்டு போக மாட்டா டா..இங்கேயே தான் சுத்திட்டு இருப்பா டா.” என்றார்.
அதில் உடைந்து போனவன்,“எனக்குத் தெரியும் ப்பா..என்னைப் பார்க்காம போக மாட்டாங்கண்ணு..ஆனாலும் எனக்கு வேற வழி தெரியலை ப்பா..கடவுச்சீட்டைப் பணயமா வைச்சு பணம் வாங்கியிருக்கேன்..அதைத் தான் உங்க கணக்கிலே போட்டு விட்டிருக்கேன்..எந்தக் குறையும் இல்லாம அம்மாவை நல்ல மாதிரியா அனுப்பி வைங்க.” என்று அழுகையோடு அந்த அழைப்பை முடித்தான் தனசேகர்.
அது நேற்றிரவு. இப்போது அழுகையெல்லாம் வற்றிப் போய் விட்டது. விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருந்தவனின் கண்களில் மானாவாரியான காட்சிகள் வந்து போயின. அனைத்திலும் அவனும் அம்மாவும். இத்தனை நினைவுகளா என்று அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. வேலைக்குப் போகும் நேரம் நெருங்கி விட, ஒருவாறு அவனது மனத்தையும் உடலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அலுவலகத்திற்குக் கிளம்பினான். அறையை விட்டு வெளியே வந்ததும் தான் வானிலை மாற்றத்தை உணர்ந்தான். இந்த ஊரில் வெயிலைத் தவிர வேறு வானிலையை அவன் அனுபவித்ததில்லை.
வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது. அவனுடைய அம்மாவின் காரியம் முடிந்து விட்டதென்ற தகவல் தான் அது என்று அவன் உணர்ந்த நொடி வானம் இருண்டது. பளீரென்று வெட்டிய மின்னலைத் தொடர்ந்து படபடவென்று இடி இடிக்க, தூறல் ஆரம்பமானது. அடுத்த சில நொடிகளில் துளிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எதிரிப் படை போல் தடதடவென பூமியைத் தாக்கியது.
தாரை தாரையாக பொழிந்த மழை பெரும் ஆற்றலோடு தனசேகர் மேல் விழ, கூரையைத் தேடி ஓடாமல், ஆடாமல் அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டான். மக்கள் எழுப்பிய கூச்சலும் வாகனங்களிருந்து எழும்பிய ஒலியும் அவனைப் போய் சேரவில்லை. மழை அவனைச் சிலை ஆக்கியிருந்தது. உச்சி முதல் பாதம் வரை ஓர் இடம் கூட பாக்கியில்லாமல் பரிபூரணமாக நனைந்து போயிருந்தவனுக்கு ஒரு க்ஷணத்திற்கு மூச்சு முட்டிப் போனது. இத்தனை தண்ணீரைப் பார்த்திராத பாலைவனப் பகுதி அதைக் கையாள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. பரிதவித்துக் கொண்டிருந்த தனசேகரின் மனது மகிழ்ச்சிக்கு மாறி,’அம்மா’ என்று ஆசையோடு மழையை அழைத்தது.
சில மணி நேரங்களுக்கு கொட்டித் தீர்த்த மழைக்குக் காரணம் காலநிலை மாற்றம், காடழிப்பு, நகரமயமாக்கல் என்று உலகெங்கும் அறிஞர்கள் பலர் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்தனர். பாலைவனப் பகுதியில் திடீரென சடசடவென பெய்த பெரும் மழையை ஓர் அதிசயம் என்று வகைப்படுத்தினர் பொதுமக்கள். அந்த அதிசயத்தின் பெயர் ‘அம்மா’ என்று அந்தப் பெரும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த மகனுக்கு மட்டும் தான் தெரியும்.