அம்மா – 1

அறையில் காலை நேரத்திற்கு உரிய சத்தங்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தவனின் மூளையில் எதுவும் பதியவில்லை. கண்கள் இரண்டும் இறுக மூடியிருந்தாலும் அவன் உறங்கவில்லை என்று அங்கே இருந்த அனைவர்க்கும் தெரிந்திருந்தாலும் யாரும் அவன் அருகே செல்லவில்லை. அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. அவர்கள் உழைப்பை உறிஞ்சிக் கொள்ளும் பாலைவன நாடு அவனது கண்ணீரையும் உறிஞ்சிக் கொண்டு விட்டது.

அவனருகே வந்தமர்ந்த சலீம்,”தனா, தனா” என்று அழைக்க, மெதுவாக கண்களைத் திறந்து எழுந்தமர்ந்தான் தனசேகர்.

“பணம் அனுப்பி வைச்சிட்டேயா?” என்று கேட்டான் சீலம்.

‘ஆமாம்.’ என்று தலையசைத்தான் தனசேகர். எப்படி ஏற்பாடு செய்திருப்பான் என்று தெரிந்திருந்ததால் அதைப் பற்றி கேட்காமல், அவனது கரத்தை அழுத்தமாகப் பற்றி ஆறுதல் அளித்தவன்,

“சோறு ஆக்கிட்டோம் டா..உன்னோட டிஃபன் பாக்ஸ்லே போட்டு வைச்சிட்டேன்.” என்றான்.

அதற்கும் தலையசைவில் சரி என்று பதில் அளித்தான் தனசேகர்.

“டியுட்டிக்குப் போகலையா?” என்று கேட்டான் சலீம்.

பெரும் முயற்சி செய்து,”போய் தானே ஆகணும்.” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வேதனை.

ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாததால் மீண்டுமொருமுறை கரத்தை அழுந்தப் பற்றி ஆறுதல் அளித்து விட்டு சலீம் கிளம்பிச் சென்று விட அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் வேலைக்குப் புறப்பட்டு சென்றார்கள். ஆறு பேர் அறையில் தன்னந் தனியாக அமர்ந்திருந்தான் தனசேகர். அந்த அறை வெகு அமைதியாக இருந்ததால் அவனது இதயத்தின் டப்டப் ஒலி பேரோலியாக மாறி அவனது செவிகளில் எதிரோலித்துக் கொண்டிருந்தது.

வலதுக் கையால் லேசாக, மிக லேசாக நெஞ்சுப் பகுதியைத் தடவிக் கொடுத்தவன் மெல்லியக் குரலில் “அம்மா” என்றான். கடந்த இரு வாரங்களாக இப்படித் தான் அடிக்கடி அவரை அழைத்துக் கொண்டிருந்தான். அறந்தாங்கியின் தனியார் மருத்துவமனையின் ஐசியுவில் இருந்த ஈஸ்வரியிக்கு எந்த அழைப்பு போய்ச் சேரவில்லை. நேற்று காலையில் அவனை நிரந்தரமாகத் தவிக்க விட்டுச் சென்று விட்டார்.

எதையும் உணராத நிலையில் இருந்த ஈஸ்வரியை உணர வைக்கும் முயற்சியில் கணக்கு வழக்கில்லாமல் பணம் செலவாகியிருந்தது. மருத்துவமனையில் சேர்ந்து சில நாள்கள் ஆகியிருக்க, மனைவி கண் விழிக்க காத்திருந்த அன்பரசிடம்  ஒரு சீட்டைக் கொடுத்து,”டாக்டர் ஒரு மணி நேர்த்திலே வந்திடுவாங்க..அதுக்குள்ளே இதை வாங்கிட்டு வந்திடுங்க.” என்று சொல்வது வழக்கமாகியிருந்தது.

ஒரு நாள் அதுபோன்றொரு சீட்டை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு எதிரே இருந்த மருந்தகத்திற்கு சென்றார் அன்பரசு. முற்பகல் வேளை என்பதால் கடையின் முதலாளி இல்லை. கடையை நிர்வகித்த இளம் பெண் அவரைப் பார்த்ததும்.”கொடுங்க சர்.” என்று கையை நீட்டினாள்.

அவளிடம் மருந்துச்சீட்டை அன்பரசு கொடுக்க, கல்லா அருகே இருந்த கணினியில் அந்த மருந்தின் பெயரை டைப் அடித்தாள். சில நொடிகள் கழித்து,”பதினெட்டு ஆயிரம்.” என்றாள்.

“பதினெட்டா?” என்று அதிர்ந்து போனார் அன்பரசு.

“செட்டா தான் கிடைக்கும் ஸர்..சில பேருக்கு ஒரு ஊசி போட்டதுமே சரியாகிடும்..சில பேருக்கு இரண்டாவது டோஸ் தேவைப்படும்..அதனால் தான் அப்படி விக்கறாங்க..தனி தனியா வாங்கினா விலை இதை விட அதிகமா இருக்கும்..இந்த மாதிரி மருந்தை நாங்க வைச்சுக்கறதில்லை புதுக்கோட்டைலேர்ந்து வரவழைக்கணும்..அங்கே கிடைக்கலைன்னா காரைக்குடிக்கு இல்லை திருச்சிக்கு ஆள் அணுப்பனும்.” என்றாள்.

மனைவி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது மருந்தின் விலையைப் பற்றி யோசிப்பது பெரும் குற்றமாக தோன்ற,”எப்போ கிடைக்கும் ம்மா..ஒரு மணி நேர்த்திலே டாக்டர் வந்திடுவாங்கண்ணு நர்ஸ் சொல்றாங்க.” என்றார் அன்பரசு

“அவங்க அப்படித் தான் சொல்லுவாங்க ஸர்..பக்கத்திலே இருந்து பார்க்கறீங்க தானே..இன்னுமா அவங்க எண்ணம் உங்களுக்குப் புரியலை.” என்று கேட்டாள் அந்தப் பெண்.

ஏன் புரியாமல் நன்றாகவே புரிந்தது அன்பரசுவிற்கு. ஏதாவது மாயாஜாலம் நடந்து படுக்கையிலிருந்து எழுந்து விடமாட்டாளா அவருடைய மனைவி என்ற எதிர்பார்ப்பு  திரையாக மாறி உண்மையை உணரத் தடையாக மாறியிருந்தது. இந்த நிகழ்விற்கு முன்பு வரை கூட அவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு குடி தண்ணீர் முதல் சாப்பாடு வரை வந்து சேர்ந்து விடும். மூத்தமகன் கட்டிய வீட்டில் ஒரு நாள் கூட கால் நீட்டி உட்கார்ந்து இளைப்பாறி இருக்க மாட்டார் பரமேஸ்வரி. வாசலுக்கும் புழக்கடைக்கும் நடையாய் நடந்து, இண்டுஇடுக்குகளையும் பெருக்கி துடைத்து, சுத்தமாய் வீட்டைப் பராமரித்து, கணவன், சின்ன மகன், மகள், மருமகன், பேரன், பேத்தி என அனைவரின் ஆசைப்படி வித விதமாக சமைத்து போட்டு அவரது அன்பை அயராத உழைப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கார். மூத்த மகன் ஒருவன் தான் அதை அங்கீகரித்து அவன் விடுமுறைக்கு வரும் போது ஒரு நாளைக்கு அவருக்கு ஓய்வு கொடுத்து விடுவான்.

மகளை லோக்கல் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் மனைவியை மருத்துவமனையில் சேர்த்ததிலிருந்து அவரும் சின்ன மகன் வாசுவும் தான் மாறி மாறி பார்த்துக் கொள்கிறார்கள். ‘வீட்லே லேடீஸ் யாரும் இல்லையா?’ என்று கேட்ட நர்ஸ்ஸிடம் ‘இல்லைங்க’ என்று சொல்லி விட்டார் அன்பரசு.  ஈஸ்வரி உடல் நலத்தோடு இருந்த போது வாரா வாரம் பிறந்த வீட்டிற்கு சீராட வந்த மகள் அம்மாவின் நிலையைப் பற்றி தெரிந்த பின்னும் ஆஸ்பத்திரி பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மனது கேட்காமல் மகளுக்கு ஃபோன் செய்து கேட்க,’அதான் என்னோட மாமியார், மாமனார் வந்து பார்த்தாங்களே ப்பா..அவங்களும் வயசானவங்க..எப்படித் தனியா விட்டிட்டு நான் வர்றது? அவங்க சமாளிச்சுக்கிட்டாலும் பிள்ளைங்களாலே முடியுமா ப்பா? ’ என்று அவரிடம் கேட்ட மகள் தான் ஒரு விடுமுறை நாளைக் கூட விட்டு வைக்காமல் பிள்ளைகளோடு அம்மா வீட்டிற்கு வந்து விடுவாள். அப்போதெல்லாம் அவளது மாமனார், மாமியாரை யார் பார்த்துக் கொண்டார்கள்?’ என்ற கேள்வி அன்பரசுவின் மனத்தில் வர, அதைக் கேட்கப் பிடிக்காமல் மகளுக்கு ஃபோன் செய்வதை நிறுத்திக் கொண்டு விட்டார். மகளும் தொல்லை விட்டுப் போனது என்று ஒதுங்கிக் கொண்டு விட்டாள்.

பக்கத்து வீட்டு பெண்மணியின் தயவில் தான் அவருக்கும் சின்ன மகனுக்கும் உணவு கிடைக்கிறது. அதுவும் எத்தனை நாள்களுக்கு என்று தெரியவில்லை. மனைவி படுத்த பின் தான் ஒரு நாளாவது இல்லையில்லை ஒரு வேளையாவது அவளை உட்கார்த்தி வைத்து சேவை செய்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. இத்தனை வருடங்களில் அவளுக்குக் குடிக்க தண்ணீர் கூட கொண்டு வந்து கொடுத்ததில்லை. விடுமுறையில் வரும் மூத்தமகன் தான் அவனுடைய அம்மாவை அமர வைத்து சுவையாக சமைத்துப் போட்டிருக்கிறான். கொட்டும் மழையில் அவளோடு சேர்ந்து ஆட்டம் போட்டு விட்டு இருவருக்கும் சேர்த்து சூடாக தேநீர் கலந்து எடுத்து வருவான். மழையை ரசித்தபடி அம்மா, மகன் இருவரும் தேநீர் அருந்துவார்கள்.

“என்ன டா நீ மழையைப் புதுசா பார்க்கற மாதிரி பார்க்கற..இப்ப்டிச் சொட்ட சொட்ட நனைஞ்சிட்டு இவளையும் நனைய வைச்சு ஆட்டம் போடற? உடம்பு வந்திடப் போகுது” என்று அவர் கோப்படும் போது,

“அங்கே மழையே கிடையாது ப்பா..மனசுலேர்ந்து மழை மறந்து போயிடுமோன்னு பயந்து தான் மழைக்காலத்திலே லீவ் எடுத்திட்டு வரேன்..அம்மாவை வேற எங்கேயும் வெளியே அழைச்சிட்டுப் போக முடியாம தான் வீட்லேயே அவங்களோட என் ஜாய் செய்யறேன்.” என்பான் தனசேகர்.

“அவ கையாலே சமைச்சதை சாப்பிட்டு, அவ போடற டீயை குடிச்சிட்டு, உங்கம்மாவோட கைமணத்தை அனுபவிக்கறது தான் டா என் ஜாய்மெண்ட்.. அவளுக்கு நீ சமைச்சு போடுறதும் டீ போட்டுக் கொடுக்கறதும் என் ஜாய்மெண்ட் இல்லை.” என்று மகனை கடிந்து கொள்வார்.

“ஒரு மாச லீவுலே ஒரு நாள் நான் செய்து கொடுத்தா என்னோட என் ஜாய்மெண்ட் குறைஞ்சிடாது ப்ப..அங்கே வாரம் ஒரு நாள் நான் தான் சமைச்சு ஆகணும்..பாத்திரம் கழுவணும்..கக்கூஸ் கிளீன் பண்ணனும்..முடியாதுன்னு சொல்லவே முடியாது..அங்கே இது போல ஒரு நாள் வரவே வராது.. வானத்தை பொளந்துகிட்டு கொட்டற மழை கிடையவே கிடையாது..இது நம்ம மண்ணோட ஸ்பெஷல் ப்பா..எனக்கும் அம்மாக்கும்மான ஸ்பெஷல் நேரம்.” என்று அவரது வாயை அடைத்து விடுவான் தனசேகர்.

சமையல் கற்றுக் கொண்டதை பற்றி சாதாரணமாக மகன் சொன்ன பொது கூட அவரும் அவனைப் போல் கற்றுக் கொள்ள வேண்டுமென்று தோணவில்லை. அண்ணனைப் போல் அனைத்து வேலைகளும் செய்ய வேண்டுமென்று சின்ன மகன் வாசுவிற்கு அறிவுரை அளிக்கவில்லை. அவருக்கு இப்படியொரு நிலை வருமென்று அவர் நினைக்கவேயில்லை. தலைவலி, காய்ச்சல், உடல் வலி என்று எந்தப் பிரச்சனை இருந்தாலும் அதை அவருடைய கவனத்திற்கு கொண்டு வராமல், வீட்டு வேலைகள் தடை படாமல் கவனமாக நடந்து கொண்ட மனைவியை நினைத்துப் பெருமையில் இருந்தவருக்கு இப்போது அது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று புரிந்தது.

“என்ன ஸர் இப்படிக் கவனக்குறைவா இருந்திருக்கீங்க? ஒரே வீட்லே தானே குடித்தனம் செய்தீங்க..அந்த அம்மா மயங்கி விழுந்த பிறகு தான் தூக்கிட்டு வந்திருக்கீங்க..கை, கால்லே சோர்வு வரும் போது வேலையெல்லாம் மெதுவா செய்திருப்பாங்க..மந்தமா இருந்திருப்பாங்க..கவனிக்கலையா நீங்க?” என்று கேட்ட போது அவரிடம் பதிலில்லை. பத்து நிமிடங்களில் காப்பி கிடைத்தாலும் சரி இருபது நிமிடங்கள் கழித்து கையில் கிடைத்தாலும் சரி காப்பி வந்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்தவர் அந்தத் தாமதத்திற்கு பின்னால் இருந்த காரணத்தை ஆராய்ந்ததில்லை. மூத்த மகனும் அதே கேள்வியை தான் கேட்டான்,

“திடீர்னு எப்படி ப்பா இப்படி ஆகும்?வீடியோல பார்த்த போது சோர்வா இருந்தாங்க.. ஏன் ம்மான்னு என்ன ஆச்சுன்னு நான் கேட்ட போதெல்லாம் ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்லி மழுப்பியிருக்காங்க..பக்கத்திலே இருந்த நீங்க இதைக் கூட கவனிக்கலையாப்பா?” என்ற மகனின் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.

புது வீட்டில் வரவேற்பறை, சமையலறை, மூன்று படுக்கையறை என்று அனைத்தும் பழைய வீட்டை விட அளவில் பெரிதாக இருந்தது. இத்தனை பெரிதாக வேண்டாம் பராமரிப்பது கடினம், தினசரி வேலைகள் அதிகரித்து விடும் என்று மறுப்பு சொன்ன தனசேகரிடம்,”இப்போவே உன் தங்கை அவ குடும்பத்தோட வந்தா தங்கறத்துக்கு இடமில்லாம போகுது..நீ, உன் தம்பி உங்க குடும்பம்னு நம்ம குடும்பம் இன்னும் பெரிசா தானே ஆகப் போகுது டா..அப்போ தேவைக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பெரிசுப்படுத்திட்டு இருக்கறத்துக்குப் பதிலா இப்போவே பெரிசா கட்டிடலாம்..ஒரே செலவா முடிஞ்சிடும்.’ என்றவரின் கூற்றை ஏற்றுக் கொண்டு சேமிப்பு, லோன், கைம்மாத்து என்று சகல விதமாக பணத்தை சேகரித்து அம்மா விரும்பியபடி பெரிய வீடாக கட்டினான் தனசேகர்.

புது வீடு கட்டி ஆறு மாதம் கூட ஆகவில்லை, கடனை அடைக்கக் கூட ஆரம்பிக்கவில்லை அதற்குள் வீட்டுத் தலைவி ஈஸ்வரி இப்போது மருத்துவமனையில். ஏற்கனவே கழுத்து வரை கடன் பட்டிருந்ததால் மருத்துவச் செலவிற்காக நண்பர்களிடம் தான் கையேந்த வேண்டியிருந்தது. அவனைப் போலவே அனைவர்க்கும் பலவிதமான கடன்கள் இருந்தாலும் அவர்களின் சேமிப்பிலிருந்து அவர்களால் முடிந்ததை அவனுக்குக் கொடுத்து உதவி செய்தார்கள். அம்மாவின் நிலையைச் சொல்லி கம்பெனியிலும் கடன் வாங்கியாகி விட்டது. இனி அவனால் புரட்ட முடியாதென்ற நிலை வந்து விட, அப்பாவிடம்,”அம்மாவோட நகையை வித்து செலவை சமாளிச்சுக்கோங்க ப்பா..அம்மாக்கு புதுசா செய்து போட்டிடலாம்.” என்று ஆலோசனை அளித்திருந்தான்.