“ஐ அந்தப் பாப்பா எவ்ளோ அழகா அவங்க அம்மாவுக்கு ஊட்டி விடுது பாருங்களேன்” என்று மையு ஆசையுடன் சொல்ல,
“ஆமாம்! உன் பையனும் பொண்ணும் கூட உனக்கு இப்படி ஊட்டிவிடுவாங்க” என்றான் மித்ரன் ஆசையாய்.
ஒரு நொடி அதைக் கேட்டு மகிழ்ந்தவளுக்கு ஏனோ திடிரென மனதுள் ஏதோ பயம் சூழ,
“ஏ என்னங்க ஏ எனக்கு, நான் நான் ஒண்ணு கேட்பேன். அதுக்கு நீங்க மறைக்காம உண்மையச் சொல்லணும்!” என,
“என்னடா கேளு!” என்று அவன் மனைவியின் முகத்தையே பார்க்க,
“இ இந்த இந்த நோயால, நாளுக்கு நாள் என் வயது ஏற ஏற ஒரு கட்டத்துல என் தசைகள் மோசமான நிலையை அடையும் போது, அது என்னோட இதயம், நுரையீரல், கல்லீரல்னு எல்லாத்தையும் செயலிக்கச் செய்திடும்தானே?!” என்று கலக்கத்தோடு கேட்க, அவன் எப்படிச் சொல்லுவான் ஆம் என்று?!
“மானும்மா!” என்று அப்படியே அவளை ஆறுதலாய்த் தழுவிக் கொண்டவன்,
“இல்லை இல்லைடா! ஒருநாளும் உன்னை அந்த நிலைக்கு போக விடமாட்டேன். என் காதலால என் அன்பால என் மானும்மாவோட தசைகளை எப்போவும் உயிர்ப்போட வச்சுக்குவேன் என் உயிர் இருக்க வரைக்கும்!”
“அதே சமயம் நீயும் இனி எப்பவும் எந்தக் காரணத்தைக் கொண்டும் உன்னோட பயிற்சியை நிறுத்தவே கூடாது! இதோ இப்போ கிட்டத்தட்ட ஒரு மாசமா நீ பயிற்சி பண்ணாம விட்டதே ரொம்ப பெரியத் தப்பு. இனி எக்காரணத்தைக் கொண்டும் என்ன நேர்ந்தாலும் நீ உன்னோட பயிற்சியை நிறுத்தவே கூடாது. நானும் நிறுத்த விட மாட்டேன்.” என்று அவன் உறுதியான குரலில் சொல்ல,
அவனது அன்பில் கரைந்து போனவள், “அ அப்போ பயிற்சி பண்ணிட்டே இருந்தா நான் நல்லா இருப்பேனா?! ரொம்ப நாள் வாழ்வேனா?!” என்றாள் கேள்வியோடு.
“கண்டிப்பா என் மானும்மா நூறு வயசுக்கும் மேல என்னோடவும் நம்ம குழந்தைங்களோடவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா வாழ்வா!” என்று அவன் மனதாரச் சொல்ல,
“இருந்தாலும் உங்களுக்கு ரொம்பப் பேராசைதான்!” என்று சிரித்தவள்,
“ஆனா இந்த நிமிஷம் உங்களுக்கு நான் ஒரு வாக்கு கொடுக்கறேங்க! என்னோட தசைகள் இறக்கும் போதெல்லாம் என் சங்கமித்ரனுக்காக இந்த மைத்ரேயி அவளோட இடைவிடாத பயிற்சி மூலமா அதை மறுபடியும் மறுபடியும் உயிர்பிப்பா” என்றாள் வாக்குறுதியாய்.
அவளின் வார்த்தைகளில் புத்துயிர் பெற்றவன், “ம் இதுதான் என் மானும்மாகிட்ட நான் எதிர்பார்த்தது.” என்று அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட,
“இங்க!” என்று அவள் தன் கண்களின் மேல் விரல் வைக்க, அவளின் இரண்டு கண்களிலும் அவன் முத்திரைப் பதிக்க,
“இங்க” என்றுமீண்டும் தனது கன்னங்களை அவள் காண்பிக்க, அவள் கன்னங்களிலும் தன் அன்பு முத்தங்களைப் பரிசளித்தவன்,
“அப்போ முத்தம் மட்டுமே போதும்னு முடிவு பண்ணிட்டா என் மானும்மா. சரி சரி அப்போ நீ தூங்குடா” என்று அவன் அவளை உறங்கச் சொல்ல,
“ம் தீரா!!!” என்று ஆசைச் சிணுங்கலோடு அவனை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டவள், தங்களின் அடுத்த வாரிசிற்கான அச்சாரத்தை அவன் போடுவதற்கு சம்மதம் தெரிவிக்க, அங்கே பல நாட்களுக்குப் பிறகு, அவர்களுள் இருந்த ஊடல் நீங்கி புரிதலோடு இனிய கூடல் நிகழத் துவங்கியது…
ரோஜா… ம்ஹும்! புது ரோஜா மலர்தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ…
பாசம் கொண்டாடும்
கண்கள் பாடாத வண்டுகளோ…
இனி வானோடும் காணாத ஆனந்தமே…
*****
அவள் துணிகளை மடித்து ஒவ்வொன்றாய் பேகினுள் அடுக்கிக் கொண்டிருக்க, அவளின் இரண்டு வயது மகன் மலர் வேந்தனோ, அதில் ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்துப் பார்த்துக் கலைத்துப் போட்ட படியே,
“ம்மா ம்மா… அப்பா எங்கயோ போதோம்னு சொன்னா, எங்கம்மா போதோம் எல்லோரும்?!” என்று தன் அழகு மழலையில் கேட்க,
“அதான் சொன்னேனேடா தங்கம், மூணாறு போறோம்னு!” என்று இருபது முறைக்கும் மேல் சொல்லிவிட்டாள் பொறுமையைக் கடைபிடித்து.
“மேல உயதமா மலை மேல போனோமே அன்னிக்கு ஜேஜே பார்க்க, அங்கயா?!” என்று அவன் கேட்க,
“ம்! ஆமா அது மாதிரிதான்” என அவள் சொல்ல,
“அது மாதினா?!” என்றான் புரியாமல்.
“அடேய் மலை மேல போறோம்னு உன் அப்பா சொன்னா உனக்குப் புரியுது! அது மாதிரின்னு சொன்ன உனக்குப் புரியலையா?!” என்று மகனை முறைத்தாள் அம்மா.
“மா! தொல்லும்மா?!” என்று அவன் மீண்டும் அவள் கையில் இருக்கும் துணியைப் பிடுங்கி கலைக்க,
“டேய் வேந்தா அம்மாவோட பொறுமையா ரொம்ப சோதிக்கிற நீ! ஒழுங்கா உன் அப்பாகிட்ட போய் விளையாடு போ!” என்று அவள் மிரட்ட,
“அம்மா, பாப்பா, அப்பா, பாத்தி, தாத்தா, பெரிப்பா, பெரிம்மா அத்தை, அண்ணா, அக்கா, எல்லாயும் ஜேஜே பாக்க போவோமோ?!” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க,
“என்னங்க?!!” என்று அவள் கத்த, இதையெல்லாம் கூடத்தில் அமர்ந்தபடி சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த அவளின் கணவனோ,
“இதோ வந்துட்டேன்ம்மா” என்றபடி ஓடோடி வந்தான்.
“எங்க உங்க பிள்ளை கேட்குற கேள்விக்கு பதில் சொல்லியே நான் டயர்ட் ஆகிடுவேங்க! தயவு செஞ்சு ஒண்ணு இவனைப் பார்த்துக்கோங்க இல்லை திங்க்சை எல்லாம் நீங்க எடுத்து வைங்க” என்று மையு முடிவாய்ச் சொல்லிவிட,
“என்னடி என் பிள்ளைக்கு பதில் சொல்றதை விட அப்படி என்ன சந்தோஷம் எனக்கு இருக்கு?! நான் என் பிள்ளையை பார்த்துக்கறேன். நீ உன் வேலையைப் பாரு” என்று விட்டு மகனைத் தூக்கிக் கொண்டு அவன் வெளியே செல்ல, மகன் மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வியில் முதலில் ஆசையோடு பதில் சொன்னவன், பின் மனைவி பட்ட பாட்டை எண்ணி சந்தோஷத்தில் சிரித்தபடி பதில் சொல்ல ஆரம்பிக்க, அவனது தாத்தா அவர்கள் அறையில் இருந்து வருவதைப் பார்த்ததும், தந்தையிடம் இருந்து இறங்கி ஓடி,
“தாத்தா” என்று ராஜசேகரின் கால்களைக் கட்டிக் கொண்டவன்,
“தாத்தா நாம அன்னிக்கு மாதி உயதமா போய் ஜேஜே கும்பிட போதோம்” என, அவனை ஆசையாய்த் தூக்கிக் கொண்டவர்,
“ஓ! அப்படியாடா பட்டு! சரி சரி அதுக்கு வேந்தன் குட்டி புது ட்ரெஸ் போட்டு ரெடியாகலையா இன்னும்?!” என,
“ஹான் ஆமா!” என்று ஏதோ நினைவு வந்தவன் போல், அவரிடம் இருந்து துள்ளிக் கொண்டு இறங்கி மீண்டும் தாயிடம் ஓடினான் புது உடை அணிவதற்கு.
“ம்மா! தாத்தா புது திரேஸ் போத சொன்னா” என்று தாயிடம் வந்து நிற்க,
“என்னங்க வந்து குழந்தையைக் குளிப்பாட்டி விடுங்க” என்று கணவனிடம் சொல்ல,
“ம் வரேம்மா” என்ற தகப்பன் பொறுப்பாய் பிள்ளையைக் குளிப்பாட்டி அழைத்து வர, பிள்ளைக்கு புது உடைகளை அணிவித்து அலங்கரித்த தாய்,
“ம் இப்போ போய் பாப்பா, அண்ணா அக்கா கூட டிரசை அழுக்கு பண்ணாம விளையாடுவீங்களாம். அம்மாவும் சீக்கிரம் குளிச்சிட்டு புது ட்ரெஸ் போட்டுட்டு வந்துடுவேணாம்” என்று பிள்ளையை அனுப்பி வைக்க,
“பாப்பாவைக் குளிப்பாட்டி விட்ட மாதிரி, அம்மாவையும் குளிப்பாட்டி ட்ரெஸ் பண்ணிவிடவா?!” என்று மித்ரன் அவளைத் தூக்க,
“செல்பி பையித்தியம்டி நீ” என்றபடியே அவன் அவள் சொன்னதைச் செய்ய, கைபேசியைக் கையில் எடுத்தவள்,
“இதெல்லாம் எவ்ளோ அழகான மெமொரீஸ் தெரியுமா! என் பொண்ணு பிறக்கும் போது இதெல்லாம் காட்ட வேணா” என, கணவனும், மகனும் அழகாய்ச் சிரிக்க, தானும் சிரித்தபடியே இருக்கும் அந்த நொடியை கைபேசிக்குள் பதிவு செய்தாள் காதலி.
“மையும்மா ரெடியாகிட்டீங்களா எவ்ளோ நேரம்?” என்று தங்கமலர் குரல் கொடுக்கவும்தான்,
“அய்யய்யோ நேரமாகிடுச்சு போல! இறக்கி விடுங்க இறக்கி விடுங்க?!” என்று மையு கத்த, அவன் இறக்காமல் சதி செய்ய,
“அத்தை கொஞ்சம் இங்க வாங்களேன்” என்று குரல்கொடுத்தவளை அப்படியே தூக்கிச் சென்று குளியலறைக்குள் விட்டுவிட்டு வந்துவிட்டான் நல்ல பிள்ளை போல்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறையேனும் இப்படி மனைவியை அழைத்துக் கொண்டு அவள் விரும்பும் இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக்கி இருந்தான் மித்ரன். அனைவருக்கும் நேரம் இருக்கும் சமயங்களில் குடும்பச் சுற்றுலாவாகவும், அப்படி இல்லாத சமயங்களில் அவர்கள் மூவர் மட்டும் எங்கேனும் சென்று வருவர்.
மையுவின் யோசனைப்படி, மித்ரன் வாங்கிய அந்தச் சொகுசுப் பேருந்தைத் தங்களுக்குத் தேவையான நாட்கள் போக, மற்ற நாட்களில் தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ட்ராவல்சில் வாடகைக்கு விட்டிருக்க, அதில் வரும் தொகையை வைத்தே அந்தப் பேருந்தின் கடன் தொகையை சுலபமாகவும் கட்ட முடிந்தது அவனால்.