இதுநாள் வரை அவளுக்காய் பொறுமையைக் கடைபிடித்து வந்தவனுக்கு, அவளின் இந்த வார்த்தைகள் பெரும் கோபத்தை வரவழைக்க, பட்டென்று அடிக்கவே கையோங்கிவிட்டான்.
ஆனால் அவளின் மருண்ட மான்விழிகளைக் கண்டவன், சட்டென அதனுள் தொலைந்து போக, முயன்று தன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, கையைப் பின்னுக்கு இழுத்து,
“இன்னொரு முறை இப்படிப் பேசின, கொன்னுடுவேன்டி!” என்று எச்சரித்துவிட்டு கோபமாய் வெளியேறிவிட, மையுவிற்கு இதுநாள் வரை அவள் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும் டி போட்டு அழைக்காதவன் இன்று அவளை அப்படிச் சொல்லிவிட்டுப் போவதிலேயே தான் அவனை எவ்வளவு காயப் படுத்தி இருக்கிறோம் என்று புரிந்தது.
பிள்ளையை இழந்த அன்று அவள் அவனைக் கோபத்தில் கண்டபடி கத்தியபோதும் கூட ஒருவார்த்தை பதில் பேசாமல் அமைதி காத்தவன், ஏன் இத்தனை நாட்களாக தான் பேசாமல் மௌனம் காத்த போதும் கூட மனம் நோக அவன் அமைதியாகத்தானே இருந்தான். ஆனால் இன்று தன்னைத தானே தாழ்த்தி ஒரு வார்த்தைச் சொன்னதும் எவ்வளவு கோபம் வருகிறது அவனுக்கு என்று உணர்ந்ததுமே அவன்பால் மனம் உருகிக் கரைந்தது.
‘பிள்ளையின் இழப்பு தனக்கு மட்டுமா வேதனை அளிக்கிறது, அவனுக்கும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்குமே அது பெரும் வேதனைதானே! இதை ஏன் இத்தனை நாள் புரிந்து கொள்ள மறுத்தோம்?!’ என்ற எண்ணமும் உடன் எழ, இத்தனை நாட்களாய் அவனை அருகே கூட நெருங்கவிடமால், அவனிடம் பேசாமல், அவனை வாட்டி எடுத்ததை எல்லாம் நினைக்கையில், நெஞ்சம் நெகிழ்ந்தது.
இத்தனை நாட்களாய் அவனின் அன்பும் அக்கறையும் செய்யாத ஒன்று இன்று அவனின் கோபம் செய்திருந்தது.
எண்ணங்களில் மூழ்கியபடி அவன் சென்ற திசையையே சில நிமிடம் வெறித்திருந்தவள், ஓய்ந்து போய் அப்படியே அருகே இருந்த கட்டிலில் அமர, அவனும், அவளும் பிள்ளையைப் பற்றி ஆசை ஆசையாய் பேசிக் கொண்டிருந்த நொடிகள் எல்லாம் மீண்டும் நினைவில் எழுந்தது.
பொங்கி வந்த அழுகையை வெகுவாய்க் கட்டுப் படுத்தியவள், டிரேசிங் டேபிளின் மேல் இருந்த போட்டோ பிரேமில் வைக்கட்டிருந்த தங்களின் அழகிய திருமணப் புகைப்படத்தைக் கையில் எடுத்தாள்.
அவன் அவளது கழுத்தில் மாங்கல்யம் சூட்டும் அந்த தருணத்தில் அவனது கண்களில் நிரம்பி வழிந்த காதலைக் கண்டவளுக்குள் சொல்லொணா வலி.
‘வேணாம் வேணாம்னு விலகிப் போன உங்களை வேணும் வேணும்னு அடம்பிடிச்சுப் அடம் பிடிச்சே இன்னிக்கு இந்த நிலைமையில தவிக்க வச்சுட்டேன் இல்லைங்க?!’ என்று அவனது புகைப்படத்தை நெஞ்சோடுத் தழுவிக் கொண்டவள்,
‘ந நான் இனி, இனி நம்ம குழந்தை, இல்லை இனி உங்களை நம்ம குழந்தையைப் பத்தி பேசிக் கஷ்டப் படுத்த மாட்டேன். ந நமக்கு எனக்கு பாப்பா பிறந்தாத்தானே குறையோட பிறக்கும்! நி நீங்க சொன்ன மாதிரியே, ந நாம வேற பாப்பாவைத் தத்தெடுத்து வளர்த்தா? எத்தனைக் குழந்தைங்க அம்மா, அப்பாவோட அன்பு கிடைக்காம வாழுறாங்க! அ அப்படி ஒரு பாப்பாவை நாம எடுத்து வளர்க்கலாம்! அ அவங்களை நம்ம நினைச்ச மாதிரியெல்லாம் பாசத்தைக் கொட்டி வளர்க்கலாம்!’ என்று தனக்குத் தானே ஏதேதோ ஆறுதல் சொல்லித் தேற்றிக் கொண்டவள், ஒருவாராய் நீண்ட நாட்களுக்குப் பின் சற்றே அமைதியான மனநிலைக்குத் திரும்பினாள்.
ஆனால் அவள் பேசிய வார்த்தைகளால் அவன்தான் அங்கு கோபம் வருத்தமும் எல்லை மீற தனது காரை வேகமாய்ச் செலுத்திக் கொண்டிருந்தான் போகும் பாதை கூட உணராமல். ஆரம்பத்தில் என்னதான் அவள் அவன் மீது முதலில் காதல் கொண்டிருந்தாலும், என்று அவள்தான் தனக்கு எல்லாம் என்று முடிவெடுத்து அவளைத் தன் வாழ்வில் ஏற்றானோ அன்று முதல் அவள் மேல் அளப்பறியா காதல் கொண்டிருந்தவனால் அவளது இந்த வார்த்தைகளை ஜீரணிக்கவே முடியவில்லை!
‘யாரோ ஒருவர் அப்படிச் சொன்னதற்காக தன்னை, தான் அவள் மீது கொண்டிருக்கும் நேசத்தை மறந்து அவள் இப்படி ஒரு வார்த்தையைத் தன்னைப் பார்த்துக் கேட்கலாமா?!’ என்று மனம் கொதித்தது.
அதிலும் அவளை இப்படி எல்லாம் நினைக்க வைத்தது அவள் அம்மா சொன்ன வார்த்தைகள்தான் எனும்போது, மேலும் அவள் தாயின் மீதிருந்த வெறுப்புப் பன்மடங்குக் கூடியது.
‘யாரோ சொன்னங்கன்னா இவளுக்கு எங்க போச்சு அறிவு! இவ, இவ என்னைப் புரிஞ்சு வச்சிருக்கிறது அவ்ளோதான?!’ என்று கோபத்தில் உழன்றபடி காரைச் செலுத்திக் கொண்டிருந்தவன், எதிரே வந்த வாகனத்தைக் கவனிக்கவில்லை. வெகு நெருக்கத்தில் ஹாரன் சத்தம் பலமாய்க் கேட்க, கணநேரத்தில் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்த, பின்னே வந்து கொண்டிருந்த கார் இவன் வண்டி மீது மோதியது.
“ஹெலோ அறிவில்லை! டிரைவ் பண்ணும்போது மனசை எங்க வச்சுக்கிட்டு ஓட்டுற?!” என்று முன்னிருந்தவன் கத்த, பின்னே அவன் காரில் மோதியவனோ, இறங்கி வந்து மேலும் கண்டபடி கத்த ஆரம்பித்துவிட்டான்.
தவறு தன் மீது இருந்ததால் எதுவும் பேசாமல் அமைதி காத்தவன்,
“சாரி சாரி! நான் ஏதோ?” என்று திணற, அவன் ஏதோ பெரிய மனக் குழப்பத்தில் இருக்கிறான் போல என்று எண்ணிய அந்த வண்டிக்காரன், சற்றே மனமிரங்கி,
“சார், உங்களைப் பார்த்தா ஏதோ பெரிய மனக்குழப்பத்துல இருக்க மாதிரி தெரியுது, கொஞ்ச நேரம் வண்டியை ஓரமா நிறத்திட்டு அப்புறம் கிளம்புங்க! ஏதோ நல்ல நேரம் யாருக்கும் அடிபடாம வண்டியோடு போச்சு! கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வண்டியை ஓட்டுங்க சார்!” என்று அறிவுரை கூற,
“சாரி, நான் வந்து, தப்பா எடுத்துக்காம, உங்க வண்டிக்கு எவ்ளோ செலவாகும்னு சொல்லுங்க நான் கொடுத்திடறேன்.” என்றான் தயக்கமாய்.
“இல்லை பரவாயில்லை விடுங்க! நான் பார்த்துக்கறேன்” என்று அவன் சொல்ல, தன் பர்சில் இருந்து, இரண்டாயிரம் ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து நீட்டியவன்,
“பார்த்து கவனாமா போங்க! எதுவா இருந்தாலும் சரியாகிடும்” என்றுவிட்டுக் கிளம்ப, அவன் சொன்னது போலவே வண்டியைச் சில நொடிகள் ஓரம்கட்டிவிட்டு, மனதை ஒருநிலைப் படுத்தியவன் மீண்டும் வீட்டிற்கே வண்டியைத் திருப்பினான்.
அப்போது வெகு நாட்களுக்குப் பின் அவளின் கைபேசியிலிருந்து அழைப்பு வர,
“எதுக்காம் இப்போ கால் பண்றா?!” என்று வாய்விட்டு முணுமுணுத்தவன், வேண்டுமென்றே அழைப்பை ஏற்கவில்லை!
‘ம் மித்து பையன் ரொம்ப கோபமா இருக்கான் போல!’ என்று எண்ணிக் கொண்டவள்,
‘சரி நேர்ல வரட்டும் சாரை சமாதானப் படுத்திடலாம்!’ என்று சொல்லிக் கொண்டு எழுந்து சென்று முகம் கழுவி வந்தவள், அவன் வாங்கிக் கொடுத்ததில் தான் கட்டாமல் புதியதாய் வைத்திருந்த அந்தச் சேலையை எடுத்து உடுத்திக் கொண்டு தயாரானாள்.
சிறிது நேரத்தில் அவன் வீட்டிற்கு வர, சோர்வும் கோபமும் ஒருசேர தங்கள் அறைக்குள் நுழைந்தவனைப் பார்த்து ஆர்வமாய் எழுந்து நின்றவளைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், அவன் நேராய் குளியலறைக்குள் செல்ல,
‘அம்மாடியோ! ஏன்னாக் கோபம்?!’ என்று எண்ணி மெலிதாய்ப் புன்னகைத்துக் கொண்டவள்,
அவன் வரும் வரை ஆவலாய்க் காத்திருக்க, அவன் வெளியே வந்ததும் முகம் துடைத்துக் கொண்டு மீண்டும் வெளியே செல்லப் போக, அவன் கைபிடித்து இழுத்தவள்,
“சாரிப்பா!” என்றாள் கெஞ்சலாய்.
முறைப்பாய் ஒரு பார்வை பார்த்தவன் கையை உதறிக் கொள்ள மனமின்றி,
‘கையை விடுடி!’ என்பது போல் பார்க்க,
“அதான் சாரி சொல்றேன்ல!” என்றாள் இப்போது கெஞ்சலோடு கொஞ்சலும் சேர்த்து.
ஆனால் அவன் அப்போதும், அவள் கையை மெல்ல எடுத்துவிட முனைய, பட்டென அவனைக் கட்டிக் கொண்டவள்,
“முடிஞ்சா போய்க்கோங்க!” என்றாள் முரண்டு பிடித்து.
“வேணாம்டி! விட்டுடு! செம கோபத்துல இருக்கேன்! ஏதாவது திட்டிடப் போறேன்!” என்று அவன் தன்னைச் சுற்றி வளைத்திருக்கும் அவளது கைகளை எடுத்துவிட முயல,
“ப்ச்! சாரி! சாரி! சாரி! இனிமே உங்க மானும்மா அப்படிப் பேச மாட்டா! எப்பவும் அப்படிப் பேச மாட்டா!” என்று வாக்குக் கொடுத்தாள் நல்ல மனைவியாய்.
“இப்படித்தான் எப்போவோ என்ன நடந்தாலும் நான் அழவே மாட்டேன்னும் வாக்கு கொடுத்திருந்தா!” என்றான் அவன் எங்கோ பார்த்தபடி.
அப்போதே அவன் திருமணத்திற்கு முன் மருத்துவமனையில் அவளிடம் இப்படிக் கேட்டதும் அவள் சத்தியம் செய்து கொடுத்ததும் நினைவிற்கு வர,
“ப்ச் சாரிப்பா!” என்று சிறுப்பிள்ளையாய்க் காதில் தோப்புக் கரணம் போதுவது போல் கை வைத்து அவள் மன்னிப்புக் கேட்க, கொஞ்சமே இளகத் துடித்த அவன் மனம்,
‘ம்ஹும்! அதுக்குள்ள கோபத்தை விட்டுட்டா மறுபடியும் ஏமாத்துவா!’ என்று எண்ணி,
“அவ எப்போ அப்படி எல்லாம் சரியா நடந்துக்கறாளோ, அப்போ அவளை மன்னிக்கறேன்!” என்று பிடிவாதமாய் கோபத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
“அவ இப்போ இந்த செகண்ட்ல இருந்தே நல்ல பொண்ணா இருப்பா!” என்று அவளும் விடாமல் கெஞ்ச,
நீண்ட நாட்களுக்குப் பின் மையு தன் கூட்டிற்குள் இருந்து வெளியே வந்ததோடு அல்லாமல் சமயலறைக்குச் சென்று தன் அத்தைக்கு உதவுகிறேன், பிரியா அக்காவிற்காய் இனிப்பு செய்ய போகிறேன் சமையலறையை அமர்க்களப்படுத்த, மலருக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
மையு பேசாத காரணத்தால் மகளின் வளைக்காப்பு சந்தோஷம் கூட அந்த மாமியாருக்கு இனிக்காமல் போனது அன்று மாலை வரை.
இப்போது அவளாய்த் தேடி வந்து அனைவரிடமும் பேச, குழந்தை போன வருத்தம் இருந்தாலும், வீட்டில் இருந்த அனைவருக்குமே மையு அதிலிருந்து மீண்டு வந்ததில் பெரும் நிம்மதி எழுந்தது.
“எப்படிடா என் மருமக மனசை மாத்தின?!” என்று மலர் ஆச்சர்யமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.
“ம்! பாசத்துனால செய்ய முடியாத விஷயத்தை கோபத்துனால செய்து முடிச்சேன்! ஒன்னு வச்சேன் உங்க மருமகளை” என்று மித்ரன் சிரித்தபடி சொல்ல,
“என்ன என் பொண்ணை அடிச்சியா?!” என்று மலர் கோபமாய் எழ,
“நல்லா கேளுங்க அத்தை! எப்படி அடிச்சார் தெரியுமா?! இங்க பாருங்க! என் கன்னமே வீங்கிப் போச்சு!” என்று கையில் ஹல்வாவோடு வந்த மையு எடுத்துக் கொடுக்க,
“எங்க எங்கடாமா?!” என்று மலர் பதறிப் போய் அவளது கன்னத்தை தொட்டுப் பார்த்து,
“டேய் என்ன பழக்கம் இதெல்லாம்?! கோபம் வந்தா கை நீட்டிடுவியா நீ?! இதுதான் என் வளர்ப்புக்கு நீ கொடுக்குற மரியாதையா?!” என்று மலர் அவர்கள் சொல்வதை நிஜம் என்று நம்பி வெகுவாய்க் கோபம் கொள்ள,
“ம்மா! நீங்க வேற? அவ கன்னம் சும்மாவே பன்னு மாதிரிதான் இருக்கும்! நான் உங்க மருமகளை அடிச்சிட்டாலும்! அவ என்னை அடிக்காம இருந்தா சரி!” என்று சட்டென ஜகா வாங்கிவிட்டான் மித்ரன். இதற்கு மேலும் நீடித்தால் எங்கு தாயிடம் தனக்கு இன்னும் அதிகமாய் அர்ச்சனை விழும் என்று உணர்ந்து.
ஆனால் மையுவோ, “பொய் பொய் அத்தை! நீங்க கோபப்பட்டதும் சட்டும்ன்னு பேச்சை மாத்துறார்! நிஜமா என்னை இப்படிக் கோபமா?!” என்று அவன் சொன்னது போலவே,
“இன்னொரு முறை இப்படிப் பேசின கொன்னுடுவேன்டின்னு!?” அப்படியே ஓங்கி அடி” என்று அவள் முடிப்பதற்குள்,
“ம்மா அடிக்கப் போனேன் அவ்ளோதான்! அதுக்குதான் இவ்ளோ பில்ட் அப் பண்றா!” என்றவன்,
“உன்னை அப்போவே ஒண்ணு போட்டிருக்கணும்! விட்டேன் பாரு என் தப்புதான்!” என்றவன்,
“ம்மா நான் அடிக்கிற அளவுக்கு அவ என்ன பேசினான்னு முதல்ல கேளுங்க!” என்று கோர்த்து விட,
“ஹா?! ஹய்யோ அத்தை! ஹல்வா பதம் சரியான்னு கேட்கத்தான் வந்தேன்! இதோ இதோ போய் பார்க்கறேன்” என்றுவிட்டு மையு விறுவிறுவென அங்கிருந்து கிளம்ப முற்பட,
வேகமாய் எழுந்து சென்று அவள் காதைப் பிடித்து திருகி நிறுத்தியவன்,
“நீ சொன்னதை நான் அம்மாகிட்ட சொன்னா அம்மாவே உன்னை ரெண்டு போடுவாங்க” என்றவன்,
“ம்மா!” என்று சொல்லப் போக,
“ம்! வேணாம் வேணாம் ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று கண்களால் கெஞ்சியவள்,
“என்னங்க அங்க பாருங்க வீட்டுக்குள்ள வெள்ளைக் காக்கா!” என்று அவனை ஏமாற்றிவிட்டு விடுவிடுவென சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்.
அவனும் சட்டென எதுவும் புரியாமல் திரும்பிக் பார்க்க, இவர்கள் செய்த அலப்பறையில் ஹாலில் கூடியிருந்த குடும்பமே சிரித்தது.
மலரும் சிரிப்பை அடக்க முடியாமல், “அவளே நமக்கு குழந்தைதான்டா இதுல இன்னொரு குழந்தை வேற நமக்கு வேணுமா?!” என்று சிரித்த தாயை அப்படியே கட்டிக் கொண்டு முத்தமிட்டான் மகன்.
“ரியல்லி வி ஆர் சோ லக்கி டு ஹவ் யு மா!” என்றான் மனம் கொள்ளாச் சந்தோஷத்துடன்.
அவர்கள் பேசிக் கொண்டது மையு காதிலும் விழ அவளின் நெஞ்சமும் நெகிழ்ந்து இளகியது.
இந்த சந்தோஷங்களோடு சேர்ந்து இரவு உணவு மேஜையில் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவுண்ணும் நேரம், மித்ரனிடம் கூட சொல்லாத தன் முடிவை அங்கு அனைவர் முன்னிலையிலும் மையு சொல்லத் துவங்க, மித்ரனுக்கு ஏகப் பட்ட சந்தோஷம்.
“உங்க விருப்பம் அதுதான் ன்னா எங்களுக்கு அதுல எந்த அட்சேபனையும் இல்லம்மா!” என்றார் ராஜசேகர்.
“ஆனா மையும்மா உங்களுக்கு இன்னும் வயசிருக்கே ம்மா! கண்டிப்பா கூடிய சீக்கிரமே நீ எனக்கு ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துக் கொடுப்ப பாரு!” என்று மலர் உறுதியான குரலில் சொல்ல, மையு தயக்கமாய்க் கணவனைப் பார்க்க,
“கண்டிப்பாம்மா! அதுல எந்த சந்தேகமும் வேணாம்! ஆனா இன்னொரு குழந்தையும் எங்களுக்கு இருந்தா அது இன்னும் சந்தோஷம்தானே!” என்றான் மித்ரன்.
சில நொடிகள் அமைதி காத்த மலர், “சரிப்பா உங்க விருப்பம் அதுதான்னா எங்களுக்கும் அது சந்தோஷம்தான்.” என்று சம்மதம் கொடுக்க இருவரின் முகத்திலும் அளவில்லா மகிழ்ச்சி.
“ஆமா ஆமாடா செல்லங்களா நீங்கதானே இந்த வீட்டு மூத்த வாரிசுங்க!” என்று மலர் தன் அருகே அமர்ந்திருந்த பேரப்பிள்ளைகளை வாஞ்சையோடு வருடிக் கொடுக்க, அங்கே சந்தோஷத்திற்குக் குறைவில்லாமல் போனது…